About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, August 12, 2020

356. பிறவா வரம் வேண்டும்!

காட்டில் அமர்ந்திருந்த அந்த முனிவரின் முன்பு சிலர் அமர்ந்திருந்தனர். முனிவர் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

அன்று காலை,  அங்கே அந்த முனிவர் கண்களை மூடி அமர்ந்திருப்பதைப் பார்த்த ஒருவன், முனிவர் கண் திறந்ததும் அவர் கூறுவதைக் கேட்டு அறிவு பெறலாம் என்று எண்ணி அவர் முன் அமர்ந்தான். அதற்குப் பிறகு அங்கே வந்த மேலும் சிலரும் அங்கே அமர்ந்து கொண்டனர்.

ஆயினும், பல மணி நேரங்கள் ஆகியும் முனிவர் தன் கண்களைத் திறக்கவில்லை. 

மேலும் காத்திருக்க விரும்பாமல் ஒவ்வொருவராக எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.

மாலையில் முனிவர் தன் கண்களைத் திறந்தபோது, அங்கே நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். 

அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த முனிவர், "காலையிலிருந்து காத்திருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார்.

"முனிவரே! நான் தவம் செய்ய வேண்டும் என்று இந்தக் காட்டுக்கு வந்தேன். தாங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்" என்றான் ஒருவன்.

முனிவர் மற்ற மூவரையும் பார்க்க, அவர்கள் தாங்களும் அதே நோக்கத்துடன்தான் இருப்பதாகச் சொல்வது போல் தலையாட்டினர்.

"எதற்காகத் தவம் செய்யப் போகிறீர்கள்?" என்றார் முனிவர். 

"மீண்டும் பிறவி ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான்" என்றான் இன்னொருவன்.

"மீண்டும் பிறவி வேண்டாம் என்றால், அதற்கு நீங்கள் மெய்ப்பொருளை உணர வேண்டும். கற்க வேண்டியவற்றைக் கற்றால்தான் மெய்ப்பொருளை உணர முடியும்" என்றார் முனிவர்.

"அப்படியானால், நான் உடனேபோய் கற்க வேண்டியவற்றைக் கற்கிறேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி, முனிவரே!" என்று சொல்லி விட்டு ஒருவன் எழுந்து, முனிவரின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு, அவரிடம் விடை பெற்றுச் சென்றான்.

அவனைத் தொடர்ந்து, இன்னும் இருவரும் அவ்வாறே அவரை வணங்கி விட்டுக் கிளம்பினர்.

ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தான்.

"ஏனப்பா? நீ கிளம்பவில்லையா?" என்றார் முனிவர்.

அவன் எழுந்து நின்று, "முனிவரே! கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப்பொருளை உணர்ந்தால்தான் பிறவியிலிருந்து விடுதலை பெற முடியும் என்று கூறினீர்கள். கற்க வேண்டியவற்றைக் கற்பிக்க, முற்றும் உணர்ந்த முனிவராக வாழும் தங்களை விடப்  பொருத்தமானவர்கள் வேறு யார் இருக்க முடியும்? தங்களுக்குப் பணிவிடை செய்து, தங்களிடமே கல்வி பெற்று, மெய்ப்பொருளை உணரும் நிலையை அடைய விரும்புகிறேன். தாங்கள் என்னைச் சீடனாக ஏற்று எனக்கு அருள் புரிய வேண்டும்!' என்று கூறி முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினான் அவன். 

அவனை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, முனிவர் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

பொருள்:
கற்க வேண்டியவற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Thursday, August 6, 2020

355. அனுபவம் தந்த பாடம்

"ஏம்ப்பா ரெண்டு நாளா என் பின்னாலேயே வந்துக்கிட்டிருக்க?" என்றார், கசங்கிய ஆடையும், பரட்டைத் தலையும், புதர் போல் தாடி மீசை படர்ந்திருந்த முகமும் கொண்ட அந்த மனிதர்.

"சாமி! உங்களைப் பாத்தா ஒரு யோகி மாதிரி தெரியுது" என்றான் பரமு.

"நீ புத்திசாலிதான்! என்றார் அவர்.

"அப்படின்னா, நான் நினைச்ச மாதிரி நீங்க ஒரு யோகிதானா?"

"யோகின்னு சொல்லாம, யோகி மாதிரி தெரியுதுன்னு சொன்னியே, அதுக்குத்தான் உன்னை புத்திசாலின்னு சொன்னேன்!" என்றார் அவர், சிரித்தபடி.

"மன்னிச்சுக்கங்க, சாமி. உங்க மேல நம்பிக்கை இல்லாம நான் அப்படிச் சொல்லல."

"நீ சொன்னதுதாம்ப்பா சரி. வெளித் தோற்றத்தை வச்சு எதையும், யாரையும் எடை போடக் கூடாது."

"நீங்க சொல்றது சரிதான், சாமி! எனக்கு ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உண்டு. ஒரு சாமியாரோட பேச்சால கவரப்பட்டு, அவர் மடத்தில சேர்ந்து சேவை செய்யலாம்னு போனேன். ஆனா அங்கே சேந்தப்பறம்தான், அவரைப் பத்திப் புரிஞ்சுது. புலன்களை அடக்கறதைப் பத்தியும், எளிமையான வாழ்க்கை வாழறதைப் பத்தியும் வெளியில அற்புதமாப் பேசற அவர், தன் ஆசிரமத்துக்குள்ள ஒரு அரசர் மாதிரி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காரு! அறுசுவை உணவு என்ன, ஆடம்பரமான ஓய்வறைகள் என்ன! ஒரு நிமிஷம் கூட ஏசி இல்லாம இருக்கக் கூடாதுங்கறதுக்காக மின்சாரம் நின்னு போனா, உடனே இயங்கற வசதியோட ஜெனரேட்டர் என்ன! மதுபானமும், அந்தப்புரப் பெண்களும்தான் இல்லேன்னு நினைக்கறேன். அதெல்லாம் கூட எனக்குத் தெரியாம இருந்திருக்கலாம்! கொஞ்ச நாளைக்கப்புறம், சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டேன். ஆன்மீகத்தின் மேலேயே வெறுப்பு வந்துடுச்சு."

"சரி. இப்ப என்ன?"

"உங்களைப் பாத்தப்ப முதல்ல ஒரு சாதாரண..." என்று தயங்கினான் பரமு
.
"பண்டாரம்னு நினைச்சிருப்ப!" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

"உண்மையைச் சொல்லணும்னா, அப்படித்தான், சாமி. ஆனா உங்க கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதால, ரெண்டு நாளா உங்களை கவனிச்சுக்கிட்டிருக்கேன்."

"இப்ப என்ன நினைக்கறே?"

"நீங்க பாக்கறதுக்கு சாதாரணமானவரா இருந்தாலும், மனசை அடக்கி வாழற துறவின்னு நினைக்கறேன். உங்ககிட்ட ஆசிரமம் இல்லை, சிஷ்யர்கள் இல்லை. ஆனாலும், நீங்க ஒரு பெரிய யோகின்னு நான் நம்பறேன். உங்களோட இருந்து உங்களுக்கு சேவை செஞ்சுக்கிட்டிருந்தா, எனக்கும் துறவு மனப்பான்மை வரும்னு நினைக்கறேன்."

"எதையுமே வெளித் தோற்றத்தைப் பாத்து அப்படியே ஏத்துக்கக் கூடாது, அதோட உண்மைத்தன்மையை ஆராய்ஞ்சப்பறம்தான், அதைப் பத்தி முடிவு செய்யணும்னு உன் அனுபவத்திலேந்து நீ புரிஞ்சுக்கிட்டிருக்கிறது நல்ல விஷயம்தான். அதனால என்னோட இருக்கறதைப் பத்தி நீ முடிவு பண்றதுக்கு முன்னால, என்னைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்க. நீ எதிர்பாக்கற மாதிரி நான் இல்லேன்னா, எப்ப வேணும்னாலும் என்னை விட்டுட்டுப் போகலாம். எங்கிட்ட சொல்லிட்டே போகலாம். நான் உன்னைப் பத்தி தப்பா நினைச்சுக்கவும் மாட்டேன், உன்னைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யவும் மாட்டேன்!" என்றார் அவர், சிரித்தபடி.
அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பொருள்:
ஒரு பொருள் வெளித் தோற்றத்துக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதன் உண்மையான தன்மையை அறிந்து கொள்வதுதான் அறிவுடைமை.
குறள் 356 
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, August 5, 2020

354. போட்டியில் பங்கேற்காதவர்

"நம் எல்லோருக்கும் ஐந்து புலன்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் திறமை நம்மிடம் இருக்கிறதா? அதைச் சோதிக்கத்தான் இந்தப் போட்டி. இந்தப் போட்டியில் உங்கள் ஐந்து புலன்களுக்கும் சவால்கள் இருக்கும்.

"ஓரு படத்தைக் காட்டி, அதில் இருக்கும் பொருட்களைக் குறிப்பிடச் சொல்வோம். இது சுலபமானதாத் தோன்றலாம். ஆனால், படத்தில் இருக்கும் சில நுணுக்கமான விஷயங்களைக் கூர்மையான பார்வை இருப்பவர்களால்தான் கவனிக்க முடியும்.

அது போல், ஒவ்வொரு புலனுக்கும் தனித் தனியாகப் போட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும்  ஒருவர் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி, மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் கொடுக்கப்படும்."

நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட போட்டிகள் நிறைவு பெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பரிசு பெற்றவர்களின் பெயர்களை அறிவித்த பின், அறிவிப்பாளர் கூறினார்

"ஒரு முக்கியமான அறிவிப்பு. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு, ஒரு முக்கியமான அறிவிப்பு இருக்கிறது. எல்லோரும் இருந்து அதைக் கேட்டு விட்டுப் போக வேண்டும்."

பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு, அறிவிப்பாளர் கூறினார்:

"இந்தப் போட்டியில் இன்னொருவரும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தன் பெயர் பரிசுக்காகப் பரிசீலிக்கப்பட விரும்பவில்லை. ஆயினும், ஒவ்வொரு புலனுக்கான போட்டியிலும் எல்லோரையும் விட அதிக மதிப்பெண் வாங்கியது அவர்தான். ஒவ்வொரு போட்டியிலுமே அவர் வாங்கிய மதிப்பெண் நூற்றக்கு நூறு! மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறேன்."

எளிமையான தோற்றம் கொண்ட ஒரு மனிதர் மேடைக்கு வந்தார்.

"பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள். பரிசுக்கு என் பெயர் பரிசீலிக்கப்பட வேண்டாம் என்று கூறி விட்டு, நான் ஏன் போட்டியில் கலந்து கொண்டேன் என்ற கேள்வி உங்கள் பலர் மனதிலும் எழலாம். நான் இங்கே வந்தது நான் உணர்ந்து கொண்ட ஒரு உண்மையை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

"தங்கள் ஐந்து புலன்களின் கூர்மையான சக்தியை வெளிப்படுத்திய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் - பரிசு பெற்றவர்கள், பெறாதவர்கள் அனைவருக்கும். புலன்கள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும், அவற்றால் உணரப்படும் விஷயங்கள் இனிமையாக இருந்தால் மட்டுமே அவை நமக்கு இன்பம் அளிக்கும். தொலைதூரத்திலிருந்து ஒலிக்கும் ஒரு நாராசமான ஓசை நம் கூர்மையான செவிப்புலனுக்கு எட்டினாலோ, ஒரு மிக இலேசான துர்நாற்றத்தை துல்லியமான சக்தி கொண்ட நம் நாசி நுகர்ந்தாலோ, அது நமக்கு மகிழ்ச்சி அளிக்குமா?

"நம் ஐம்புலன்களையும் பயன்படுத்தி மெய்ப்பொருளான இறைவனை நாம் உணர்ந்தால், அதுதான் உண்மையான உணர்வாக இருக்கும். இறைவனின் திருவுருவைக் காணும்போதும், இறைவனின் பெருமைகளைக் கேட்கும்போதும், இறைவனின் புகழை நாம் பாடும்போது நம் நாவில் ஊறும் சுவையை உணரும்போதும், இறைவனுக்குச் சூடிய மலர்கள், இறைவனுக்கு அர்ப்பணித்த சந்தனம், கற்பூரம், மலர்கள் போன்றவற்றின் மணத்தை உணரும்போதும், இறைவனின் திருமேனி தொடர்பு பெற்ற மலர்கள், சந்தனம், சடாரி போன்றவை நம் உடலில் படும்போதும் நமக்கு ஏற்படும் உணர்வே உண்மையான உணர்வு என்பது நான் அனுபவித்து உணர்ந்த உண்மை. 

"இந்த உணர்வுகளை நாம் அதிகம் அனுபவிக்கும்போது, நாம் யார் என்பது பற்றியும், நாம் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியுமான உணர்வு நம்மிடம் வளரும். இதுதான் மெய்யுணர்வு. இந்த உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு வந்தேன். நன்றி!" என்று கூறி விட்டு, அவையினருக்கு வணக்கம் செலுத்தி விட்டு மேடையிலிருந்து இறங்கினார் அவர்.


அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

பொருள்:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு, ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வுகளும் முற்றுப் பெற்ற போதிலும் பயன் இல்லை.
குறள் 355 
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Monday, August 3, 2020

353. ஆளவந்தார்

அரசர் மிகவும் கோபமாக இருக்க, சமையற்காரர் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

"ஒரு கீரை வாங்க முடியவில்லையா உன்னால்?" என்றார் அரசர்.

"மன்னிக்க வேண்டும், அரசே! நீங்கள் விரும்பி உண்ட அந்த தூதுவளைக் கீரையை ஒருவர் தினமும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவர் வரவில்லை. அது போன்ற கீரை வேறு எங்கும் கிடைக்கவில்லை" என்றார் சமையற்காரர்.

"சரி, போ. அவரைத் தேடிப் பிடிக்க முடியுமா என்று பார்!"

டுத்த நாள் அரசரிடம் வந்த சமையற்காரர், "அரசே! கீரை கொடுத்து வந்தவர் மீண்டும் வந்திருக்கிறார். ஆனால், அவர் கீரை கொண்டு வரவில்லை. தங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்!" என்றார்.

"கீரை கொடுப்பவர் என்னை ஏன் பாரக்க வேண்டும்?" என்ற அரசர், 'கீரை வேண்டுமே' என்ற எண்ணத்தில் "சரி, வரச் சொல்!" என்றார்.

சமையற்காரர் அழைத்து வந்த வைணவப் பெரியாரைப் பார்த்ததும் தன்னை அறியாமலேயே எழுந்து நின்ற அரசர், சமையற்காரனைப் பார்த்து, "இவரா கீரை கொடுத்தவர்?' என்றார். 

சமையற்காரன் தலையாட்டியதும் அவனை அனுப்பி விட்டு, அந்தப் பெரியவரை அமரச் செய்தார் அரசர்.

"அரசே! என்னை மன்னிக்க வேண்டும். உங்களைச் சந்தித்துப் பேச முயன்றேன். உங்கள் காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அதனால்தான் உங்கள் சமையற்காரரிடம் கீரை கொடுத்து, அந்தக் கீரையின் சுவையை நீங்கள் மிகவும் விரும்பியதை அறிந்து அதை நிறுத்தி, உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை வலிந்து பெற்றேன். என்ன செய்வது, சில சமயம் தலையைச் சுற்றித்தான் மூக்கைத் தொட வேண்டி இருக்கிறது!" என்றார் பெரியவர்.

"மன்னிக்க வேண்டும், பெரியவரே! அரசனான பிறகு எனக்கு ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு இல்லை. இது தெரிந்துதான் என் காவலர்கள் உங்களை அனுமதிக்கவில்லை. உங்களுக்கு என் பூர்வீகம் பற்றித் தெரியாது என்று நினைக்கிறேன்..." என்று ஆரம்பித்தார் அரசர்.

"நன்றாகத் தெரியும், யமுனாமுனி!" என்று இடைமறித்தார் பெரியவர். "நான் உன்னைச் சந்திக்க வந்ததே, உன் பூர்வீகம் பற்றி உனக்கு நினைவூட்டத்தான்!"

அந்தப் பெரியவர் தன் பழைய பெயரைச் சொல்லி அழைத்ததுடன், திடீரென்று தன்னை ஒருமையில் அழைக்கவும் துவங்கியதைக் கேட்டுச் சற்றே அதிர்ச்சி அடைந்த அரசர், "சுவாமி, தாங்கள் யார்?" என்றார்.

"சொல்கிறேன். அதற்கு முன் நீ யார் என்பதை உனக்கு நினைவுபடுத்தி விடுகிறேன். உன் தாத்தா நாதமுனி, குடும்பத்துடன் வடநாட்டில் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்தபோது, அங்கே யமுனை நதிக் கரையில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாகக் கண்ணனே அவருக்குக் காட்சி தந்து, அவரை உடனே தன் சொந்த ஊரான காட்டுமன்னார் கோவிலுக்குத் திரும்பும்படி பணித்தார்.

"அப்படி அவர் திரும்பிய பிறகுதான், அவருடைய குமாரர் ஈஸ்வர முனிக்கு நீ பிறந்தாய். உன்  குடும்பம் யமுனை தீரத்துக்குச் சென்று திரும்பிய பின் நீ பிறந்ததால், உனக்கு யமுனாமுனி என்று பெயரிட்டனர். 

"உன் தாத்தா பூசை செய்து வந்த காட்டுமன்னார் கோவில் ஆலயத்தில் ஒரு சிறுவன் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியின் 10 பாசுரங்களைப் பாடியதைக் கேட்ட உன் தாத்தா நாதமுனி, மற்ற பாசுரங்களையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு, நம்மாழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர  திவ்யப் பிரபந்தங்களையும் மீட்டெடுத்து, அவற்றுக்கு இசை வடிவம் கொடுத்து, இந்த உலகுக்கு வழங்கினார்.

"அவர் வழித்தோன்றலான நீ, மஹாபாஷ்ய பட்டரிடம் பாடம் கற்று வந்தபோது, மன்னரின் அவைப்புலவரான ஆக்கியாழ்வாரின் சவாலை ஏற்று அவரை விவாதத்தில் வென்று, அரசரால் ஆளவந்தார் என்ற பட்டமும், அவருடைய ராஜ்யத்தில் ஒரு பகுதியும் வழங்கப்பட்டு, அரசனாகி இருக்கிறாய். அரசனானதும், பழையவற்றை மறந்து விட்டு, அரசப் பதவியின் சுகங்களிலேயே ஈடுபட்டு வந்திருக்கிறாய்!"

"பழையன கழிதலும், புதியன புகுதலும் இயல்புதானே, சுவாமி? அரச வாழ்க்கை என்ற பொக்கிஷம் எனக்குக் கிடைத்திருக்கும்போது, அதை நான் அனுபவிப்பதில் என்ன தவறு? அது சரி, தாங்கள் யார் என்று இன்னும் கூறவே இல்லையே!"

"உன் தாத்தா நாதமுனியின் சீடர் உய்யக் கொண்டார். அவருடைய சீடன் நான். என் பெயர் ராம மிஸ்ரன். என்னை மணக்கால் நம்பி என்றும் கூறுவார்கள். உன் தந்தை, அவர் சீடரான உய்யக் கொண்டார் மூலம் என்னிடம் கொடுத்துச் சென்றுள்ள ஒரு பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்படைப்பதற்காகவே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்."

"இந்த அரச போகத்தை விட உயர்வான பொக்கிஷமா அது?"

"அந்தப் பொக்கிஷத்தை நான் உனக்குக் காட்டியதும், நீயே ஒப்புக் கொள்வாய்!"

"அப்படியானால், அதை எனக்குக் காட்டுங்கள்" என்றார் ஆளவந்தார்.

"என்னுடன் வா. அது இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்" என்றார் மணக்கால் நம்பி.

உடனே மணக்கால் நம்பியுடன் கிளம்பினார் ஆளவந்தார்.

"பொக்கிஷத்தைக் காட்டுவதாகச் சொல்லி இவ்வளவு தூரம் அழைத்து வந்து விட்டீர்கள். எங்கே அந்தப் பொக்கிஷம்?" என்றார் ஆளவந்தார்.

"இதோ திரை விலகியவுடன் நீயே காண்பாய்!" என்று மணக்கால் நம்பி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அர்ச்சகர் திரையை விலக்கிhf கற்பூர ஆரத்தி காட்ட, கற்பூர ஒளியில் தெரிந்த அரங்கனின் திருவுருவைப் பார்த்து அளவு கடந்த பிரமிப்பிலும், ஆனந்தத்திலும் உறைந்தார் ஆளவந்தார்.

'இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'

என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியபோது அவருக்கு இருந்த உணர்வு ஆளவந்தாருக்கு ஏற்பட்டது.

தற்குப் பிறகு, ஆளவந்தார் அரச பதவியைத் துறந்து, திருவரங்கத்திலேயே இருந்து அரங்கனுக்குச் சேவை செய்தபடி, யமுனாச்சாரியர் என்ற பெயரில் ஒரு வைணவ ஆசானாகி, ராமனுஜரின் ஆசான்களான பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகியோருக்கு ஆசானாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டியதுடன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாறனேரி நம்பியைத் தன் சீடராக ஏற்று அருள் செய்ததும், தன் பூத உடலை நீத்த பிறகும் ராமானுஜருக்கு வழிகாட்டியாக அமைந்ததும் வரலாறு.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

பொருள்:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, அடைந்துள்ள இவ்வுலகை விட, அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, July 29, 2020

352. திடீர் மனமாற்றம்

"இந்த வயசில எதுக்குப் புதுசா ஒரு தொழிலை ஆரம்பிக்கிறீங்க? ஏற்கெனவே இருக்கிற தொழில் போதாதா?" என்றாள் பார்வதி.

"அதைத்தான் நம்ம பையனைப் பாத்துக்கச் சொல்லிட்டேனே! நான் என்ன செய்யறது?"

"அதுக்காக இந்த வயசில 5 கோடி ரூபா முதலீடு பண்ணிப் புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்கணுமா?"

"ஏதாவது செய்யணும்ல? என்னால சும்மா உக்காந்திருக்க முடியாது."

"வேலையிலேந்து ரிடயர் ஆனவங்கள்ளாம் கோவில், குளம் போறது, தங்களுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கிலே ஈடுபடறது மாதிரி ஏதாவது செய்யலியா?"

"எனக்கு ரிடயர்மெண்ட் எல்லாம் கிடையாது. ஒண்ணு ஏதாவது உடம்புக்கு வந்து நான் படுத்துக்கணும், அல்லது இந்த உலகத்தை விட்டே போயிடணும்" என்றார் சபாபதி. 

அதற்குப் பிறகு, பார்வதி விவாதத்தைத் தொடர விரும்பவில்லை.

தான் தொடங்கப் போகும் புதிய தொழிலுக்காக நிலம் வாங்குதல், அரசு அங்கீகாரம் பெறுதல் போன்றவற்றுக்காக 2 கோடி ரூபாய் பணமாக வேண்டும் என்பதும், அதற்காகச் சில சொத்துக்களை விற்று 2 கோடி ரூபாய் ஏற்பாடு செய்திருப்பதும் நல்ல வேளை மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டார் சபாபதி. 

ரண்டு நாட்களுக்குப் பிறகு, "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள் பார்வதி.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ சொன்னதைப் பத்தி யோசித்துப் பாத்தேன். இனிமே புது பிசினஸ் எல்லாம் வேண்டாம்னு தீர்மானிச்சுட்டேன். எப்படியும், இருக்கிற பிசினஸை நம்ப பையன் பாத்துக்கறான். நம்மகிட்ட இருக்கற பணம் நம்ம ரெண்டு பேரும் வாழ்க்கை நடத்த தாராளமாப் போதும். இனிமே வீட்டிலேயே ஓய்வா இருக்கப் போறேன். அப்பப்ப உன்னை அழைச்சுக்கிட்டுக் கோவில், குளம், வெளியூர்ப் பயணம்னு போகப் போறேன்!" என்றார் சபாபதி.

"நம்பவே முடியலியே! திடீர்னு இப்படி மனசு மாறிட்டீங்களே! ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றாள் பார்வதி, மகிழ்ச்சியுடன். 

தொடர்ந்து, "நீங்க ராத்திரி முழுக்கத் தூங்காம, புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருந்ததைப் பாத்து, புது பிசினஸ் பத்தி யோசனை பண்ணிக்கிட்டுத்தான் தூக்கம் வராம புரண்டுக்கிட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். இதைப் பத்தித்தான் யோசிச்சீங்களா?" என்றாள்.

சபாபதி மௌனமாக இருந்தார். 

முதல் நாள் இரவு 8 மணிக்கு பிரதமர் வெளியிட்ட பண மதிப்பு இழப்பு அறிவிப்பால், தான் ரொக்கமாக வைத்திருந்த 2 கோடி ரூபாயில் மிகப் பெரும்பாலான பகுதியை வங்கியில் போட முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டதை உணர்ந்த அதிர்ச்சியால்தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதும், நீண்ட நேர யோசனைக்குப் பின், இந்த இழப்பை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இனி பணம் தேடும் முயற்சிகளில் ஈடுபடாமல், மனைவி சொன்னது போல் மன அமைதி தரும் செயல்களில் ஈடுபடுவதென்று முடிவெடுத்ததையும் தன் மனைவியிடம் அவர் சொல்லப் போவதில்லை. 

"என்னங்க, இனிமே 500 ரூபா, 1000 ரூபா நோட்டெல்லாம் செல்லாதாமே! எங்கிட்ட ஏழாயிரம் ரூபாய்க்கு 500 ரூபா, 1000 ரூபா நோட்டு இருக்கு. அதை பாங்க்கில போட்டுடுங்க. நல்ல வேளை! நாம கையில அதிகமாப் பணம் வச்சுக்கல!" என்றாள் பார்வதி.

"ம்..." என்றார் சபாபதி.   

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

பொருள்:
மயக்கம் நீங்கிக் குற்றமற்ற மெய்யுணர்வைப் பெற்றவர்க்கு, அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி, இன்ப நிலையைக் கொடுக்கும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்













Monday, July 27, 2020

351. குருபிரசாதின் கடைசி தினங்கள்

ராமமூர்த்திக்கு அன்றைய பொழுது மகிழ்ச்சியானதாக விடியவில்லை.

அவர் வழக்கம்போல் காலையில் எழுந்து சுறுசுறுப்பாகத் தன் பணிகளைத் துவக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரது கைபேசி ஒலித்தது. 

குருபிரசாத் மாரடைப்பால் இறந்து விட்டாராம்.   

குருபிரசாத் ஒரு வங்கியின் தலைவராக இருந்து ஒய்வு பெற்றவர். அவருடைய வங்கியில் ராமமூர்த்தியின் நிறுவனத்துக்குக் கணக்கு இருந்ததால்தான் அவருடன் ராமமூர்த்திக்கு அறிமுகம் ஏற்பட்டது என்றாலும், இருவருக்கும் இடையே தனிப்பட்ட நெருக்கம் ஏற்பட்டு விட்டது.  

குருபிரசாதை நேர்மையானவர் என்று சொல்ல முடியாது. நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் அவர் தன் வங்கியில் கடன் வழங்குவார் என்று அவரைப் பற்றி ஒரு பிம்பம் உண்டு. 

ராமமூர்த்தியே தன் நிறுவனத்துக்குக் கடன் பெற, குருபிரசாதுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். 'நட்பு வேறு, பிசினஸ் வேறு' என்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தவர் குருபிரசாத்!

ஆயினும் எல்லோரிடமும் நன்கு பழகக் கூடியவர் என்பதால், அவருடன் நிறுவன ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும்  ஒரு நெருக்கம் இருந்தது. எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 

குருபிரசாத் ஒய்வு பெற்றுச் சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், அவர் ராமமூர்த்திக்கு ஃபோன் செய்து, "என்ன ராமமூர்த்தி? நான் ரிடயர் ஆனதும் என்னை மறந்துட்டீங்களா? வீட்டுப் பக்கமே வரலியே?" என்று கேட்டார்.

அவர் சொன்னதற்காக, ராமமூர்த்தி அவர் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

குருபிரசாத் அவரிடம் புலம்பித் தள்ளி விட்டார்.

"சொன்னா நம்ப மாட்டீங்க. நான் ரிடயர் ஆனா அடுத்த நாள்ளேந்து என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு. எப்பவும் என்னைச் சுத்திப் பத்து பேராவது இருந்துக்கிட்டிருப்பாங்க. உங்களுக்கு பிரைவசியே இல்லையேன்னு என் மனைவி கூட சில சமயம் சொல்லி இருக்கா. ஆனா, அது எனக்குப் பிடிச்சிருந்தது.

"ஆனா, இப்ப ஒத்தர் கூட என்னைப் பாக்க வரதில்ல, ஃபோன் பண்றதும் இல்ல. நானா யாருக்காவது ஃபோன் பண்ணிப் பேசினாக் கூட, பட்டும் படாம பேசிட்டு டக்னு கட் பண்ணிடறாங்க. வெளியில எங்கேயாவது பாத்தாக் கூடக் கண்டும் காணாம போறாங்க. நானா வலுவில போய்ப் பேசினாக் கூட, ஒப்புக்கு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசிட்டு விலகிடறாங்க. ஏன், நீங்க கூட என்னை மறந்துட்டீங்களே! நான் ஃபோன் பண்ணினப்புறம்தான் வந்தீங்க. ஆனா, அதுக்கே நான் உங்களுக்கு நான் நன்றி சொல்லணும்"

"அப்படி இல்ல. வேலை அதிகமா இருந்ததால..."

"இல்ல, ராமமூர்த்தி. பணம், பதவி, அதிகாரம் இதையெல்லாம் சம்பாதிக்கறதிலேயே என் வாழ்க்கையைக் கழிச்சுட்டேன். நல்ல நண்பர்களை சம்பாதிக்க நான் முயற்சி செய்யவே இல்ல. என் சொந்தக்காரங்ககிட்ட கூட அலட்சியமாத்தான் நடந்துக்கிட்டேன். இப்ப அவங்களும் என்னை மதிக்கறதில்ல."

"எல்லாம் சரியாயிடும், சார். நான் முடிஞ்சப்பல்லாம் உங்களை வந்து பாக்கறேன். நீங்களும் உங்க மனைவியை அழைச்சுக்கிட்டு என் வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி வீட்டுக் கிளம்பினார் ராமமூர்த்தி.

அதற்குப் பிறகு, இரண்டு மூன்று முறை ராமமூர்த்தி குருபிரசாதின் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்தார். குருபிரசாத் மனதளவில் மிகவும் சோர்வடைந்து, மன வருத்தத்துடனேயே காட்சி அளித்தார். 

வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின், எல்லா வசதிகளுடனும், ஒரு பிரச்னையும் இன்றி நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை அவருக்கு அமைந்திருந்தாலும், அதை அனுபவிக்கும் மனநிலையை அவரால் பெற முடியவில்லை என்று ராமமூர்த்திக்குத் தோன்றியது.

குருபிரசாதின் இறுதித் சடங்கு மாலை 4 மணிக்கு நடக்க இருப்பதை அறிந்து, சுமார் மூன்றரை மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்றார் ராமமூர்த்தி. 

தெரு நிறைய கார்கள் நிற்கும், தன் காரை நிறுத்த இடம் இருக்குமோ என்னவோ என்று நினைத்துக் கொண்டே சென்றார் ராமமூர்த்தி. 

ஆனால், குருபிரசாதின் வீட்டு வாசலில் ஒரே ஒரு காரும், சில இரு சக்கர வாகனங்களும்தான் நின்றிருந்தன. 

ராம்மூர்த்தி உள்ளே சென்றபோது, இறுதிச் சடங்குகள் துவங்கி நடந்து கொண்டிருந்தன. அவர் மனைவி மகன்களைத் தவிர, ஒரு சில உறவினர்களும், இன்னும் நான்கைந்து பேரும்தான் இருந்தனர்.  நிறைய பேர் இனிமேல்தான் வருவார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் ராமமூர்த்தி.

ஆனால், நான்கரை மணிக்கு குருபிரசாதின் சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோது கூட மொத்தம் பதினைந்து பேர்தான் வந்திருந்தனர்.

"தோளில் தூக்கிட்டுப் போக நாலு பேர் வரணும். யார் வரீங்க?" என்றார் சாஸ்திரி.

இரண்டு பேர்தான் முன் வந்தார்கள். வேறு யாரும் வராததைக் கண்டு, ராமமூர்த்தியும் முன் வந்தார்.

"இன்னும் ஒத்தர் வேணுமே!" என்றார் சாஸ்திரி.

அதற்குப் பிறகு, தயக்கத்துடன் இன்னொருவர் முன் வந்தார். 

குருபிரசாதின் இறுதிச் சடங்குகள் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், நீண்ட நேரம் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி. 

எப்போதும் குருபிரசாதைச் சுற்றிப் பல பேர் நின்றிருப்பார்களே, இன்று ஏன் யாருமே வரவில்லை? 

வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வங்கியில் கடன் பெற்றவர்கள், அவருடைய பிற நண்பர்கள் என்று நூற்றுக் கணக்கானோர் இருப்பார்களே, அவர்களில் பத்து பேர் கூட வரவில்லையே! அவருடைய உறவினர்கள் கூட ஐந்தாறு பேர்தான் வந்திருந்தனர். ஏன் இப்படி?

குருபிரசாத் தன்னிடம் சொன்னது ராமமூர்த்திக்கு நினைவு வந்தது. 

குருபிரசாத் தன் வாழ்நாள் முழுவதும் பதவி, அதிகாரம், பணம் போன்றவற்றைச் சம்பாதிப்பதில்தான் கவனம் செலுத்தினார்.

அவருடைய  இறுதிக் காலத்தில், அவர் மீது அன்பும் அக்கறையும் காட்டி, இறந்த பிறகு அவரை வழியனுப்ப வரும் அளவுக்கு அவர் மீது அன்பு செலுத்தக் கூடியவர்களை அவர் சம்பாதிக்கவில்லை! 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு..

பொருள்:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால், சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்










Friday, July 24, 2020

350. கட்டிட மேஸ்திரி

வீட்டின் மேல் தளத்துக்கு கான்கிரீட் போட்டு முடித்தபோது மாலை 7 மணி ஆகி விட்டது. நல்லவேளை, இருட்ட ஆரம்பித்ததுமே வேலை முடிந்து விட்டது. இல்லாவிட்டால், விளக்குகளுக்கு ஏற்பாடு செய்து, இருட்டிய பின் வேலையைத் தொடர்வது கடினமாக இருந்திருக்கும். கான்கிரீட் போட ஆரம்பித்தால், முழுவதும் போட்டு முடிக்க வேண்டுமே! 

வேலை செய்த ஆட்கள் அனைவரும் கிளம்பிச் சென்ற பின், பொருட்கள் வைத்திருக்கும் அறையைப் பூட்டி விட்டு, வாட்ச்மேனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான் கஜேந்திரன். கான்கிரீட் போட்டு முடிக்கும் வரை படபடப்புதான். இனி சில நாட்களுக்கு அவ்வளவு மன அழுத்தம் இருக்காது.  

ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, வழியில் அம்மன் கோவிலில் ஏதோ சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. 

"வீடு கட்டும்போது கான்கிரீட் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்ததும், ஆர்வத்துடன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு கவனித்தான் கஜேந்திரன். 'நம் வேலையைப் பற்றிப் பேசுகிறாரே!'

சற்று நேரம் அவர் பேச்சைக் கேட்கலாம் என்று நினைத்த கஜேந்திரன், ஸ்கூட்டரை நிறுத்த இடம் தேடினான். அங்கே பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், ஸ்கூட்டரை நிறுத்த இடமில்லை. சற்று தூரம் ஸ்கூட்டரைத் தள்ளிக் கொண்டு போய், ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு வந்தான்.

சொற்பொழிவாளர் பேசியது காதில் விழுந்து கொண்டிருந்தது. ஆனால், ஸ்கூட்டரை நிறுத்த இடம் பார்த்துக் கொண்டிருந்ததில், அவர் பேச்சை அவன் சரியாக கவனிக்கவில்லை.

அவன் உள்ளே போய் உட்கார்ந்தபோது, அவர் இறைவனிடம் பக்தி செலுத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவர் கான்கிரீட் போடுவது பற்றிப் பேசியதைக் கேட்டுத்தான், கஜேந்திரன் அவருடைய சொற்பொழிவைக் கேட்க வந்தான். ஆனால், தான் அதைத்  தவற விட்டு விட்டோம் என்று அவனுக்குத் தோன்றியது.

ஆயினும், அவருடைய பேச்சு சுவாரசியமாக இருந்ததால், ஒரு மணி நேரம் அங்கே அமர்ந்து,  அவர் பேச்சை இறுதிவரை கேட்டுக் கொண்டிருந்தான் கஜேந்திரன்.   

சொற்பொழிவு முடிந்ததும் கஜேந்திரன் எழுந்து வந்தபோது, தன்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பினான்.

அவனுடைய காண்டிராக்டர் முத்தையா!

"நீ எங்கேப்பா இங்கே? நீ இது மாதிரி பக்திப் பேச்சுக்கெல்லாம் வருவியா என்ன?" என்றார் அவர்.

"இல்ல சார், சும்மாதான்!" என்று தயங்கியபடியே சொன்ன கஜேந்திரன், "ஸ்கூட்டரில் வந்துக்கிட்டிருந்தப்ப, ஏதோ கான்கிரீட் போடறதைப் பத்திப் பேசினது காதில விழுந்தது. அதான் வந்தேன். ஆனா, அப்புறம் அவர் வேற விஷயங்களுக்குப் போயிட்டாரு. கான்கிரீட் போடறதைப் பத்தி எதுக்கு சொன்னாருன்னு புரியல. நீங்க முழுக்கக் கேட்டீங்களா?"  என்றான்.

"கேட்டேன். ஆனா, என்னால உனக்கு விளக்க முடியுமான்னு தெரியல. பேச்சாளர் எனக்குத் தெரிஞ்சவர்தான். வா, அவர் கிட்டயே போய்க் கேட்டுடலாம்" என்றார் முத்தையா.

"பரவாயில்ல, சார்!" என்று கஜேந்திரன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, முத்தையா அவன் கையைப் பற்றி, மேடைக்குப் பின்னே இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறையில் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்த சொற்பொழிவாளர், முத்தையாவைப் பார்த்ததும் "வாங்க, முத்தையா!" என்று அழைத்து விட்டு, "இவர்தான் என் வீட்டைக் கட்டிக் கொடுத்த காண்டிராக்டர்" என்று மற்றவரிடம் முத்தையாவை அறிமுகப்படுத்தினார்.

"நீங்க பேசிக்கிட்டிருங்க, நான் இப்ப வரேன்" என்று சொல்லி விட்டு, மற்றவர் எழுந்து வெளியே சென்றார்.

இருவரையும் அமரச் சொன்ன பின், "சொல்லுங்க, முத்தையா! பேச்சைக் கேட்டீங்களா? கூட்டத்தில் நீங்க இருந்ததை  நான் கவனிக்கவே இல்லையே!" என்றார் சொற்பொழிவாளர்.

"கேட்டேன் சார். இவரு கஜேந்திரன். நம்ம கிட்ட மேஸ்திரியா இருக்காரு. இவர் எங்கிட்ட வந்து சேர்ந்தப்பறம், நான் கட்டிடம் கட்டறதைப் பார்க்கப் போக வேண்டியதே இல்லை. எல்லாத்தையும் இவரே நல்லாப் பாத்துப்பாரு.  நீங்க பேச ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் கழிச்சுதான் இவர் வந்திருக்காரு. நீங்க கான்கிரீட் போடறதைப் பத்தி ஏதோ சொன்னீங்க இல்ல? அதைப் பத்தி என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க விரும்பறாரு. நீங்க என்ன சொன்னீங்கன்னு நான் சொல்றதை விட. நீங்களே சொன்னா நல்லா இருக்கும்னுதான் உங்ககிட்ட அழைச்சுக்கிட்டு வந்தேன். நீங்க விளக்கறதைக் கேட்டா, எனக்கும் இன்னும் தெளிவாப் புரிஞ்சுக்கிட்ட மாதிரி இருக்கும்" என்றார் முத்தையா.

"அப்படியா? உங்க ஆர்வத்தைப் பாராட்டறேன். நான் பேசினது நமக்கு இருக்கிற பற்றுக்களை விடறதைப் பத்தி. பற்றுக்களை விடறது சுலபம் இல்ல. ஆனா, கடவுள்கிட்ட பற்று வச்சா, மற்ற பற்றுக்கள் விலகிடும்னு சொல்லிட்டு, அதுக்கு உதாரணமா கான்கிரீட் போடறதைச் சொன்னேன்" என்று சொல்லி விட்டு, கஜேந்திரனைப் பார்த்தார் சொற்பொழிவாளர்.

கஜேந்திரன் மௌனமாகத் தலையாட்டினான்.

"கான்கிரீட் எப்படிப் போடுவீங்க?" என்றார் பேச்சாளர், கஜேந்திரனைப் பார்த்து.

கஜேந்திரன் ஒரு நிமிடம் திகைத்து விட்டு, முத்தையாவைப் பார்த்தான். பிறகு தயக்கத்துடன், "முதல்ல கம்பி கட்டுவோம். அப்புறம் கம்பிகளுக்கு அடியில பலகைகளை வச்சு, பலகைகளை மரக் கம்புகளால முட்டுக் கொடுத்து நிக்க வச்சுட்டு, அப்புறம் கம்பிகளுக்கு மேல கான்கிரீட் போடுவோம்" என்றான்.

"கீழே பலகை, அதுக்கு முட்டுக் கொடுக்க மரக்கம்புகள் இதெல்லாம் எதுக்கு?"

"கீழே பலகை இல்லேன்னா கான்கிரீட் எப்படி நிக்கும்?" என்றான் கஜேந்திரன், இவர் என்ன இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டே.

"பலகையோட சப்போர்ட்லதான் கான்கிரீட் நிக்குது. பலகைகளே மரக்கம்புகளோட சப்போர்ட்லதான் நிக்குது! ஆனா, பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சுப் பலகைகளை எடுத்துடுவீங்க இல்ல?"

"ஆமாம்."

"அப்ப கான்கிரீட் எப்படி அந்தரத்தில நிக்குது?"

"அந்தப் பத்து பதினஞ்சு நாள்ள, கான்கிரீட் இறுக்கமானதும், இரும்போட பிடிச்சுக்குமே, அதனாலதான்!" என்று விளக்கினான் கஜேந்திரன்.

"அதனால, அதுக்கு வேற சப்போர்ட் தேவையில்லை, அப்படித்தானே?"

"ஆமாம்."

"நம்ம ஒவ்வொத்தருக்கும் நிறையப் பற்றுக்கள் இருக்கு. நாம இந்தப் பற்றுக்களை விட முடியாம இருக்கோம். நாம இந்தப் பற்றுக்களை விடணும்னா, நமக்கு இன்னொரு வலுவான பற்று வேணும். ஆரம்பத்தில, கான்கிரீட் பலகைகள் மேலதான் நிக்குது. ஆனா, கான்கிரீட் இரும்போட ஒட்டினப்புறம், அதுக்குப் பலகைகளோ, மரக் கம்புகளோ தேவை இல்லை இல்லையா? அதனாலதானே கான்கிரீட் செட் ஆனதும், பலகைகளையும், பலகைகளைத் தாங்கி நிக்கிற மரக்கம்புகளையும் எடுத்துடறோம்? அது மாதிரி, நாம கடவுள்கிட்ட பற்று வச்சோம்னா, அப்புறம் நம்மோட மற்ற பற்றுக்களை நம்மால விட்டுட முடியும். நாம கடவுள்கிட்ட வைக்கற பற்று கான்கிரீட் இரும்போட ஒட்டிக்கற மாதிரி வலுவா இருக்கும். கடவுள்கிட்ட பற்று வைக்கறதன் மூலமாத்தான் மற்ற பற்றுக்களை நாம விட முடியுங்கறதை விளக்கத்தான் இந்த உதாரணத்தைச் சொன்னேன். ஓரளவாவது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!" என்றார் சொற்பொழிவாளர்.

"நல்லாவே புரிஞ்சதுங்க" என்று சொல்லிக் கை கூப்பினான் கஜேந்திரன்.

"சொற்பொழிவில நீங்க சொன்னதை மறுபடியும் விளக்கமாக் கேட்டதில, எனக்கும் இன்னும் நல்லாப்  புரிஞ்சுது. என் மேஸ்திரிக்குத்தான் நான் நன்றி சொல்லணும்" என்று சொல்லி விட்டுச் சொற்பொழிவாளரிடம் விடை பெற்றார் முத்தையா. 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பொருள்:
பற்று எதுவும் இல்லாத கடவுளின் மீது பற்று வைக்க வேண்டும். நம் பற்றுக்களிலிருந்து விடுபட, அந்தப் பற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்