"ஊருக்குப் போய் உன் பெற்றோரைப் பார்த்து விட்டு ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுப் போனாய். ஆனால், ஆறு மாதங்கள் கழித்து வந்திருக்கிறாயே!" என்றார் ரிஷபமுனி, கோபத்துடன்.
"மன்னிக்க வேண்டும், ஆசானே! சொன்னபடி வர முடியவில்லை" என்றான் ராமதாசன்.
"உன் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லையா?"
"இறைவன் அருளால் என் பெற்றோர்கள் நலமாகத்தான் இருக்கிறார்கள்."
"அப்படியானால், நீ வேறு எந்தக் காரணம் கூறினாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உனக்கு இந்த குருகுலத்தில் இடமில்லை. நீ போகலாம்!" என்றார் குரு.
"ஐயா! நான் கூறுவதைத் தாங்கள் தயவு செய்து கேட்க வேண்டும்."
"இது ஆன்மீகச் சாதனைக்கான குருகுலம். பொதுவான கல்வி அளிக்கும் குருகுலம் என்றால், உன்னை அனுமதித்திருப்பேன். ஆன்மீகச் சாதனையை, விட்டு விட்டுப் பயில முடியாது.
"உன் வயதான பெற்றோர்கள் தனிமையில் இருப்பது பற்றி நீ கவலை கொண்டிருந்ததால், அவர்களைச் சென்று பார்த்து விட்டு அவர்களை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டு வரச் சொல்லி நானேதான் உன்னை அனுப்பி வைத்தேன். ஒரு மாதத்துக்குள் உன்னால் திரும்பி வர முடியாவிட்டால், நீ மீண்டும் வர வேண்டாம் என்றும் உன்னிடம் கூறி இருந்தேன்.
"ஆன்மீகச் சாதனைகளைப் பயிலுவதற்கான மனப்பக்குவம் இன்னும் உனக்கு வரவில்லை என்று தோன்றுகிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்னை வந்து பார். உன்னைப் பயிற்சியில் சேர்த்துக் கொள்வது பற்றி அப்போது முடிவு செய்கிறேன்."
ராமதாசனின் பதிலை எதிர்பார்க்காமல், ரிஷபமுனி உள்ளே போய் விட்டார்.
மாலை தன் ஆசிரமத்திலிருந்து ரிஷபமுனி வெளியே வந்தபோது ராமதாசன் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.
"நீ இன்னும் போகவில்லையா? காலையிலிருந்து இங்கேயேவா நின்று கொண்டிருக்கிறாய்?" என்றார் ரிஷபமுனி, வியப்புடன்.
ராமதாசன் மௌனமாகத் தலையாட்டினான்.
"என்ன சொல்ல விரும்புகிறாயோ, அதைச் சொல்லி விட்டுக் கிளம்பு!" என்றார் ரிஷபமுனி, கடுமை தணியாத குரலில்.
"ஐயா! நான் என் பெற்றோரைப் பார்க்கச் சென்றபோது, எங்கள் ஊரில் ஒரு தொற்றுநோய் பரவி இருந்தது. என்னால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன்.
"மருத்துவரை அழைத்து வந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வைப்பது, அவர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, வசதி படைத்தவர்களிடம் நிதி பெற்று வறுமையான நோயாளிகளுக்கு உதவுவது போன்று சிறிய அளவில் உதவி செய்து வந்தேன்.
"நோயாளிகளுக்கு நான் உதவி செய்வது தெரிந்து, வேறு பலரும் என் உதவியை நாடினார்கள். பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் கூட எனக்கு அழைப்பு வர ஆரம்பித்தது. பிறகு, பலரை ஒருங்கிணைத்து, இன்னும் அதிகமான நபர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன்.
"தொற்றுநோயின் தீவிரம் குறைந்து இயல்பான நிலைக்கு வர இத்தனை காலம் ஆகி விட்டது. அதனால்தான் நான் திரும்பி வர இத்தனை காலம் ஆகி விட்டது. தாங்கள் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது, தங்களிடம் நடந்ததைத் தெரிவிக்க வேண்டும் என்றுதான் தங்களைக் காண்பதற்காகக் காத்திருக்கிறேன்.
"தங்களிடம் என் பிரச்னையை இப்போது தெளிவு படுத்தி விட்டேன். தாங்கள் கூறியபடியே, ஓரிரு ஆண்டுகள் கழித்துத் தங்களை வந்து சந்திக்கிறேன்."
குருவுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ராமதாசன் கிளம்ப யத்தனித்தபோது, "நில், ராமதாசா!" என்றார் ரிஷபமுனி.
"உள்ளே வா!" என்று சொல்லி விட்டு, ரிஷபமுனி தன் ஆசிரமத்துக்குள் செல்ல, ராமதாசன் அவர் பின்னால் சென்றான்.
ஆசிரமத்துக்குள் நுழைந்து, தன் ஆசனத்தில் அமர்ந்தார் ரிஷபமுனி. ராமதாசனைப் பார்த்து, "உட்கார்!" என்றார்.
ராமதாசன் குருவின் எதிரே தரையில் அமர்ந்தான்.
"நான் இங்கே எல்லோருக்கும் ஆன்மீகப் பயிற்சி அளிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், உண்மையான ஆன்மீகச் செயலை நீ ஆர்ப்பாட்டமில்லாமல் செய்து விட்டு வந்திருக்கிறாய். உன்னிடம் விவரம் கேட்காமல் உன்னைத் திருப்பி அனுப்பியது தவறுதான். ஆயினும், உனக்கு ஆன்மீகப் பயிற்சி உகந்ததில்லை என்று நான் கூறியது சரிதான்!" என்றார் ரிஷபமுனி.
"குருவே!"
"மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனைதான் மெய்ப்பொருள் ஞானம். மீண்டும் பிறக்காத நிலையை அடைவதுதான் ஆன்மீகம். மெய்ப்பொருளை உணர்ந்து செயல்பட்ட உனக்கு, இனி மறுபிறவி இல்லை. எனவே, உனக்கு எந்த ஆன்மீகப் பயிற்சியும் தேவையில்லை!"
ரிஷபமுனி ராமதாசனைப் பார்த்தார்.
ராமதாசன் மௌனமாக இருந்தான்.
"ஆயினும் உன்னைப் போல் மெய்ப்பொருளை உணர்ந்த ஒருவன் உடன் இருந்தால், அதனால் ஆன்மீகப் பயிற்சி பெறும் மற்ற மாணவர்கள் பயன் அடைவார்கள். அதனால், நீ பயிற்சியில் தொடரலாம் - மற்றவர்களின் நலனுக்காக!" என்றார் ரிஷபமுனி, சிரித்தபடி.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 36
மெய்யுணர்தல்
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறவி உண்டு என எண்ண வேண்டாம்.
No comments:
Post a Comment