அரசர் மிகவும் கோபமாக இருக்க, சமையற்காரர் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.
"ஒரு கீரை வாங்க முடியவில்லையா உன்னால்?" என்றார் அரசர்.
"மன்னிக்க வேண்டும், அரசே! நீங்கள் விரும்பி உண்ட அந்த தூதுவளைக் கீரையை ஒருவர் தினமும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவர் வரவில்லை. அது போன்ற கீரை வேறு எங்கும் கிடைக்கவில்லை" என்றார் சமையற்காரர்.
"சரி, போ. அவரைத் தேடிப் பிடிக்க முடியுமா என்று பார்!"
அடுத்த நாள் அரசரிடம் வந்த சமையற்காரர், "அரசே! கீரை கொடுத்து வந்தவர் மீண்டும் வந்திருக்கிறார். ஆனால், அவர் கீரை கொண்டு வரவில்லை. தங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்!" என்றார்.
"கீரை கொடுப்பவர் என்னை ஏன் பாரக்க வேண்டும்?" என்ற அரசர், 'கீரை வேண்டுமே' என்ற எண்ணத்தில் "சரி, வரச் சொல்!" என்றார்.
சமையற்காரர் அழைத்து வந்த வைணவப் பெரியாரைப் பார்த்ததும் தன்னை அறியாமலேயே எழுந்து நின்ற அரசர், சமையற்காரனைப் பார்த்து, "இவரா கீரை கொடுத்தவர்?' என்றார்.
சமையற்காரன் தலையாட்டியதும் அவனை அனுப்பி விட்டு, அந்தப் பெரியவரை அமரச் செய்தார் அரசர்.
"அரசே! என்னை மன்னிக்க வேண்டும். உங்களைச் சந்தித்துப் பேச முயன்றேன். உங்கள் காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அதனால்தான் உங்கள் சமையற்காரரிடம் கீரை கொடுத்து, அந்தக் கீரையின் சுவையை நீங்கள் மிகவும் விரும்பியதை அறிந்து அதை நிறுத்தி, உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை வலிந்து பெற்றேன். என்ன செய்வது, சில சமயம் தலையைச் சுற்றித்தான் மூக்கைத் தொட வேண்டி இருக்கிறது!" என்றார் பெரியவர்.
"மன்னிக்க வேண்டும், பெரியவரே! அரசனான பிறகு எனக்கு ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு இல்லை. இது தெரிந்துதான் என் காவலர்கள் உங்களை அனுமதிக்கவில்லை. உங்களுக்கு என் பூர்வீகம் பற்றித் தெரியாது என்று நினைக்கிறேன்..." என்று ஆரம்பித்தார் அரசர்.
"நன்றாகத் தெரியும், யமுனாமுனி!" என்று இடைமறித்தார் பெரியவர். "நான் உன்னைச் சந்திக்க வந்ததே, உன் பூர்வீகம் பற்றி உனக்கு நினைவூட்டத்தான்!"
அந்தப் பெரியவர் தன் பழைய பெயரைச் சொல்லி அழைத்ததுடன், திடீரென்று தன்னை ஒருமையில் அழைக்கவும் துவங்கியதைக் கேட்டுச் சற்றே அதிர்ச்சி அடைந்த அரசர், "சுவாமி, தாங்கள் யார்?" என்றார்.
"சொல்கிறேன். அதற்கு முன் நீ யார் என்பதை உனக்கு நினைவுபடுத்தி விடுகிறேன். உன் தாத்தா நாதமுனி, குடும்பத்துடன் வடநாட்டில் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்தபோது, அங்கே யமுனை நதிக் கரையில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாகக் கண்ணனே அவருக்குக் காட்சி தந்து, அவரை உடனே தன் சொந்த ஊரான காட்டுமன்னார் கோவிலுக்குத் திரும்பும்படி பணித்தார்.
"அப்படி அவர் திரும்பிய பிறகுதான், அவருடைய குமாரர் ஈஸ்வர முனிக்கு நீ பிறந்தாய். உன் குடும்பம் யமுனை தீரத்துக்குச் சென்று திரும்பிய பின் நீ பிறந்ததால், உனக்கு யமுனாமுனி என்று பெயரிட்டனர்.
"உன் தாத்தா பூசை செய்து வந்த காட்டுமன்னார் கோவில் ஆலயத்தில் ஒரு சிறுவன் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியின் 10 பாசுரங்களைப் பாடியதைக் கேட்ட உன் தாத்தா நாதமுனி, மற்ற பாசுரங்களையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு, நம்மாழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தங்களையும் மீட்டெடுத்து, அவற்றுக்கு இசை வடிவம் கொடுத்து, இந்த உலகுக்கு வழங்கினார்.
"அவர் வழித்தோன்றலான நீ, மஹாபாஷ்ய பட்டரிடம் பாடம் கற்று வந்தபோது, மன்னரின் அவைப்புலவரான ஆக்கியாழ்வாரின் சவாலை ஏற்று அவரை விவாதத்தில் வென்று, அரசரால் ஆளவந்தார் என்ற பட்டமும், அவருடைய ராஜ்யத்தில் ஒரு பகுதியும் வழங்கப்பட்டு, அரசனாகி இருக்கிறாய். அரசனானதும், பழையவற்றை மறந்து விட்டு, அரசப் பதவியின் சுகங்களிலேயே ஈடுபட்டு வந்திருக்கிறாய்!"
"பழையன கழிதலும், புதியன புகுதலும் இயல்புதானே, சுவாமி? அரச வாழ்க்கை என்ற பொக்கிஷம் எனக்குக் கிடைத்திருக்கும்போது, அதை நான் அனுபவிப்பதில் என்ன தவறு? அது சரி, தாங்கள் யார் என்று இன்னும் கூறவே இல்லையே!"
"உன் தாத்தா நாதமுனியின் சீடர் உய்யக் கொண்டார். அவருடைய சீடன் நான். என் பெயர் ராம மிஸ்ரன். என்னை மணக்கால் நம்பி என்றும் கூறுவார்கள். உன் தந்தை, அவர் சீடரான உய்யக் கொண்டார் மூலம் என்னிடம் கொடுத்துச் சென்றுள்ள ஒரு பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்படைப்பதற்காகவே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்."
"இந்த அரச போகத்தை விட உயர்வான பொக்கிஷமா அது?"
"அந்தப் பொக்கிஷத்தை நான் உனக்குக் காட்டியதும், நீயே ஒப்புக் கொள்வாய்!"
"அப்படியானால், அதை எனக்குக் காட்டுங்கள்" என்றார் ஆளவந்தார்.
"என்னுடன் வா. அது இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்" என்றார் மணக்கால் நம்பி.
உடனே மணக்கால் நம்பியுடன் கிளம்பினார் ஆளவந்தார்.
"பொக்கிஷத்தைக் காட்டுவதாகச் சொல்லி இவ்வளவு தூரம் அழைத்து வந்து விட்டீர்கள். எங்கே அந்தப் பொக்கிஷம்?" என்றார் ஆளவந்தார்.
"இதோ திரை விலகியவுடன் நீயே காண்பாய்!" என்று மணக்கால் நம்பி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அர்ச்சகர் திரையை விலக்கிhf கற்பூர ஆரத்தி காட்ட, கற்பூர ஒளியில் தெரிந்த அரங்கனின் திருவுருவைப் பார்த்து அளவு கடந்த பிரமிப்பிலும், ஆனந்தத்திலும் உறைந்தார் ஆளவந்தார்.
'இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'
என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியபோது அவருக்கு இருந்த உணர்வு ஆளவந்தாருக்கு ஏற்பட்டது.
அதற்குப் பிறகு, ஆளவந்தார் அரச பதவியைத் துறந்து, திருவரங்கத்திலேயே இருந்து அரங்கனுக்குச் சேவை செய்தபடி, யமுனாச்சாரியர் என்ற பெயரில் ஒரு வைணவ ஆசானாகி, ராமனுஜரின் ஆசான்களான பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகியோருக்கு ஆசானாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டியதுடன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாறனேரி நம்பியைத் தன் சீடராக ஏற்று அருள் செய்ததும், தன் பூத உடலை நீத்த பிறகும் ராமானுஜருக்கு வழிகாட்டியாக அமைந்ததும் வரலாறு.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 36
மெய்யுணர்தல்
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, அடைந்துள்ள இவ்வுலகை விட, அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
No comments:
Post a Comment