திருக்குறள்
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 30
வாய்மை
291. புலிவேட்டை!

"அப்புறம், தாத்தா! புதுசா வேற ஏதாவது கதை சொல்லுங்க" என்றான் குழுமி இருந்த சிறுவர்களில் ஒருவன்.
"அதான் நிறையக் கதை சொல்லிட்டேனே - ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணர் கதை, முருகன் கதை, விநாயகர் கதைன்னு! இனிமே சொல்லணும்னா, நானா இட்டுக்கட்டித்தான் சொல்லணும்!" என்றார் செல்லமுத்து.
"தாத்தா, உங்க கதையைச் சொல்லுங்க. நீங்க வேட்டையாடுவீங்களா?" என்றான் இன்னொரு சிறுவன்.
"ஏன் அப்படிக் கேக்கற?"
"இல்ல, அங்கே ஒரு மான் தலை மாட்டி இருக்கே! அதான் கேட்டேன்."
"ரொம்ப நாள் முன்னே அஸ்ஸாம் காட்டில இருந்தப்ப வேட்டையாடி இருக்கேன்!"
"அப்படியா? அங்கே மாட்டி இருக்கற மான் தலை நீங்க வேட்டையாடின மானோடதா?"
"சேச்சே! அது மரத்தில செஞ்சது. மானையெல்லாம் நான் வேட்டையாட மாட்டேன். சிங்கம், புலி மாதிரி கொடிய மிருகங்களைத்தான் வேட்டையாடுவேன்."
"சிங்கம், புலி, தலையெல்லாம் சேத்து வச்சிருக்கீங்களா?" என்றான் இன்னொரு சிறுவன்.
"சேச்சே! அதெல்லாம் அழுகிப் போயிடும்டா, எப்படி வச்சிருக்க முடியும்?" என்றான் இன்னொருவன்.
"அதையெல்லாம் பாடம் பண்ணி வைப்பாங்கடா! உனக்குத் தெரியாது" என்றான் முதலில் பேசிய சிறுவன். "சொல்லுங்க, தாத்தா! தலைகள் எல்லாம் சேத்து வச்சிருக்கீங்களா?"
"சேத்து வச்சிருந்தேன். ஆனா அஸ்ஸாமை விட்டு வரச்சே, அங்கே இருந்த மியூசியத்துக்குக் கொடுத்துட்டேன்."
"ஏன் தாத்தா அப்படிப் பண்ணினீங்க?"
"அதையெல்லாம் ரயில்ல எடுத்துக்கிட்டு வர அனுமதிக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க!" என்றார் செல்லமுத்து.
"வேட்டையாடின துப்பாக்கியையாவது வச்சிருக்கீங்களா?"
"அதையும் மியூசியத்துக்கே கொடுத்துட்டேன்."
"ஏன் தாத்தா?"
"வேட்டையாடறதுக்கு நம்ப ஊர்ல காடே இல்லையே! துப்பாக்கியை வச்சுக்கிட்டு என்ன செய்யறது?"
"நீங்க வேட்டையாடினதுக்கு அடையாளமா எதுவுமே இல்லையா?'" என்றான் ஒரு சிறுவன், ஏமாற்றத்துடன்.
"ஏன் இல்லை? நான் வேட்டையாடின ஒரு புலியோட தோலைப் பாடம் பண்ணி வச்சிருக்கேன்."
"அதைக் காட்டுங்க, தாத்தா! நாங்க அதைப் பாக்கணும்" என்றனர் சிறுவர்கள் பலர், ஒன்று சேர்ந்த குரலில்.
"இருங்க" என்று உள்ளே போன செல்லமுத்து, கையில் ஒரு 'புலித்தோலுடன்' வந்தார். "இதான். பாருங்க!" என்று அதை அவர்களிடம் காட்டினார்.
சிறுவர்கள் அதைத் தொட்டுப் பார்த்து விட்டு "வழவழன்னு இருக்கே! ஏன் தாத்தா புலியோட தோல் வழவழன்னா இருக்கும்?" என்றனர்.
"சொரசொரப்பாத்தான் இருந்தது. அதை கெமிக்கல் எல்லாம் போட்டு சுத்தம் செஞ்சு, பாடம் பண்ணி, பாலிஷ் பண்ணி, வழவழன்னு ஆக்கிட்டாங்க" என்றார் செல்லமுத்து.
"இந்தப் புலித்தோலை வச்சுக்கிட்டு என்ன செய்வீங்க தாத்தா?"
"அதில உக்காந்து தவம் பண்ணுவேன்!"
"நீங்க தவம் பண்ணி இருக்கீங்களா? கடவுள் உங்க முன்னால வந்தாரா?" என்றான் ஒரு சிறுவன், உற்சாகத்துடன்.
"அந்தக் கதையை இன்னொரு நாளைக்குச் சொல்றேன். இன்னிக்கு நேரம் ஆச்சு, வீட்டுக்குப் போய் ஸ்கூல் பாடம்லாம் படிங்க" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் செல்லமுத்து.
சிறுவர்கள் போனதும், உள்ளிருந்து சிரித்துக் கொண்டே வந்த அவர் மனைவி, "ஏங்க, நீங்க எப்ப அஸ்ஸாம்ல இருந்தீங்க? எப்ப புலி வேட்டை ஆடினீங்க? தவம் வேற பண்ணினீங்களாம்! கடையில வாங்கின பிளாஸ்டிக் புலித்தோலைக் காட்டிப் பசங்களை நல்லா ஏமாத்தறீங்க! உள்ளே இருந்து கேட்டப்ப எனக்கு சிரிப்புத் தாங்கல. எதுக்குங்க இவ்வளவு பொய்?" என்றாள்.
"பையன்களை சந்தோஷப்படுத்தறதுக்காக அப்படிச் சொன்னேன். அவங்க சுவாரசியமாக் கேட்டுட்டு சந்தோஷமாப் போறாங்க பாரு. அவங்க இதை உண்மைன்னு நம்பறதால ஒண்ணும் கெட்டுப் போயிடப் போறதில்லையே!!" என்றார் செல்லமுத்து.
குறள் 291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
பொருள்:
உண்மை என்பது என்னவென்றால், அது யாருக்கும் எந்தத் தீங்கையும் விளைவிக்காத ஒரு சொல் ஆகும்.
292. ருக்மிணியின் சாட்சியம்
அரவிந்தனின் பெற்றோர்கள் இருவரும் ஒரு கார் விபத்தில் ஒரே நேரத்தில் இறந்து விட்டனர்.
அப்போதுதான் படிப்பை முடித்து விட்டு, வேலையில் சேர்ந்திருந்த அரவிந்தனுக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவன் பெற்றோரின் காரியங்கள் முடிந்து ஒரு வாரம் கழித்து, அவன் அப்பாவின் நண்பர் சாமிநாதன் அரவிந்தனைப் பார்க்க வந்தார்.
"அரவிந்தா! உன் அப்பா அம்மா எதிர்பாராத விதத்தில திடீர்னு போயிட்டாங்க. உன் அப்பா கிருஷ்ணசாமி பேர்ல இருக்கற வீடு, வேறு சில சொத்துக்கள், பாங்க்ல இருக்கற பணம், லாக்கர்ல இருக்கற உன் அம்மாவோட நகைகள் இதையெல்லாம் உன் பேருக்கு மாத்திக்கணும். நீ உன் பெற்றோருக்கு ஒரே பையன்தான்னாலும், உன் அப்பா உயில் எதுவும் எழுதி வைக்காததால, நீ வாரிசுத் சான்றிதழ் வாங்கணும். அப்பதான் எல்லாத்தையும் உன் பேருக்கு மாத்திக்க முடியும்" என்றார் அவர்.
அவருடைய யோசனைப்படி வாரிசுத் சான்றிதழுக்கு விண்ணப்பித்தான் அரவிந்தன். சில நாட்களில் வாரிசுச் சான்றிதழ் அளிக்கப்பட்டு விடும் என்று அவன் எதிர்பார்த்திருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில், அரவிந்தனின் அப்பாவின் சகோதரர் மகன் சுந்தர் ஒரு வழக்குப் போட்டான்.
அரவிந்தன் அவன் பெற்றோர்களின் சொந்தப் பிள்ளை இல்லையென்றும், முறையாகாத் தத்தெடுக்கப்படாமல் அவர்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால், காலஞ்சென்ற கிருஷ்ணசாமியின் சொத்தில் சட்டப்படி அவனுக்கு எந்த உரிமையும் கிடையாதென்றும், கிருஷ்ணசாமியின் சகோதரர் மகனான தான் மட்டுமே அவருடைய வாரிசு என்றும் சுந்தர் அந்த வழக்கில் கூறியிருந்தான்.
அரவிந்தன் தரப்பில், அவன் பள்ளிச் சான்றிதழில் அவன் கிருஷ்ணசாமியின் மகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஆதாரமாகக் காட்டப்பட்டது. ஆனால், பிறப்புச் சான்றிதழ் எதுவும் பெறாமலே அரவிந்தனின் பெற்றோர்களின் பெயர்கள் பள்ளிப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறிய சுந்தர், பள்ளியிலிருந்து பழைய பதிவுகளைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தான்.
பள்ளிச் சான்றிதழின் அடிப்படையில், அரவிந்தன்தான் கிருஷ்ணசாமியின் வாரிசு என்று நீதிமன்றம் கூறுமா, அல்லது பள்ளிப் பதிவேடுகளில் அவனைப் பற்றிய விவரங்கள், பிறப்புச் சான்றிதழ் பெறாமலே முறையற்ற விதத்தில் பதியப்பட்டதால், அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுமா என்று தெரியாமல் இருந்த நிலையில், ஒரு வயதான பெண்மணி சாட்சியம் கூற வந்தாள்.
அரவிந்தனுக்கு ஆதரவாகச் சாட்சி சொன்ன ருக்மிணி என்ற அந்தப் பெண்மணி, தான் கிராமத்தில் பலருக்கும் பிரசவம் பார்த்திருப்பதாகவும், கிருஷ்ணசாமியின் மனைவி மரகதத்துக்கும் தான்தான் பிரசவம் பார்த்ததாகவும், அரவிந்தன் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைதான் என்றும் கூறினாள். அவள் அந்த கிராமத்தில் தான் பிரசவம் பார்த்த சிலரைக் குறிப்பிட்டு, அவர்களிடம் தன்னைப் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்றாள். அவர்களில் ஓரிருவர் தாங்களே முன்வந்து அவளை அடையாளம் காட்டினர்.
கிராமங்களில் சில சமயம் பிறப்புகள் பெற்றோரின் கவனக் குறைவால் பதிவு செய்யப்படாமல் போவது உண்டென்றும், அத்தகைய சந்தர்ப்பங்களில், பிறப்புச் சான்றிதழ் இல்லாமலேயே, பெற்றோர் கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் பள்ளியில் மாணவர்களின் பிறப்பு விவரங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம்தான் என்றும் அவள் கூறினாள்.
ருக்மிணியின் வலுவான சாட்சியத்தால், நீதிமன்றம் அரவிந்தனை அவன் பெற்றோர்களின் ஒரே வாரிசாக அறிவித்தது.
தீர்ப்பு வந்ததும், சாமிநாதன் ருக்மிணியைச் சென்று பார்த்தார்.
"ரொம்ப நன்றிம்மா! உங்களோட சாட்சியத்தால்தான் அரவிந்தனுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சொத்து கிடைச்சது" என்றார் அவர்.
ருக்மிணி மௌனமாகத் தலையாட்டினாள்.
"ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்!" என்றார் சாமிநாதன்.
"சொல்லுங்க."
"கிருஷ்ணசாமியோட மனைவி மரகதத்துக்குப் பிறந்த குழந்தை செத்துப் பிறந்ததுன்னும், அரவிந்தன் அவங்க எடுத்து வளத்த குழந்தைன்னும் கிருஷ்ணசாமியே எங்கிட்ட சொல்லி இருக்கான். ஆனா, இது வேற யாருக்கும் தெரியாது. அரவிந்தனுக்கும் தெரியாது. சுந்தர் மட்டும் யார் மூலமோ இதைக் கேள்விப்பட்டுட்டு வழக்குப் போட்டிருக்கான். ஆனா, நீங்க பிரசவம் பாத்ததா சொல்றீங்களே!" என்றார் சாமிநாதன், தயக்கத்துடன்.
"நான்தான் பிரசவம் பாத்தேன். குழந்தை இறந்துதான் பிறந்தது! அதுக்கப்புறம் அவங்க அரவிந்தனைத் தத்தெடுத்து வளர்த்தாங்கங்கறதும் எனக்குத் தெரியும்" என்றாள் ருக்மிணி.
"ஆனா, அரவிந்தன் அவங்களுக்குப் பிறந்த குழந்தைன்னு நீங்க சொன்னீங்களே!"
"ஆமாம், சொன்னேன். பொய்தான்! ஏன் பொய் சொன்னேன்னு கேக்கறீங்களா? நீங்க சொன்னீங்களே, என் சாட்சியத்தால அந்தப் புள்ளைக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சொத்து கிடைச்சதுன்னு, அந்த நியாயத்துக்காகத்தான்!" என்றாள் ருக்மிணி.
குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
பொருள்:
குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யும் உண்மைக்கு சமமான இடத்தில் இருப்பதாகக் கருதப்படலாம்.
293. ஆறு மாதங்களுக்குப் பிறகு

"ஒரு நல்லவருக்கு எதிரா பொய் சொல்லச் சொல்றீங்களே சார், தப்பு இல்லையா?" என்றான் நவநீத்.
"நீ பொய் சொல்லப் போறதில்லப்பா. நமசிவாயத்துக்கு லஞ்சம் கொடுத்ததா ஒத்தர் சொல்லப் போறாரு. அவர் நமசிவாயம் அறைக்குள்ள போனதையும், அவர் நமசிவாயத்துக்கிட்ட ஒரு கவர் கொடுத்ததையும் கண்ணாடித் தடுப்பு வழியா பாத்ததா நீ சொல்லப் போற. அவ்வளவுதானே?" என்றார் சுந்தரலிங்கம்.
"சார்! நமசிவாயம் அறைக்குள்ள யாரும் போனதையும் நான் பாக்கல, அவர்கிட்ட கவர் கொடுத்ததையும் நான் பாக்கல. ஒரு நல்ல மனுஷனைப் பத்திப் பொய்யான தகவல் சொல்லி, அவரை மாட்ட வைக்கறது தப்பு சார்."
"யாருப்பா நல்ல மனுஷன்? இந்த ஆளு வந்ததிலேந்து நமக்கு வர வருமானம் போயிடுச்சு. அவர் லஞ்சம் வாங்க மாட்டார்ங்கறதுக்காக, நாம எதுக்கு கஷ்டப்படணும்? ஒரு சின்ன செட் அப் பண்ணி அவர் லஞ்சம் வாங்கற மாதிரி காட்டிட்டா, அவரைத் தூக்கிடுவாங்க. அவர் இடத்தில வேற யார் வந்தாலும் நமக்கு பாதிப்பு இருக்காது."
"தப்பு செய்யாத ஒத்தரை வேலையை விட்டுத் தூக்க வைக்கறது எப்படி சார் சரியாகும்?"
"அட நீ யாருப்பா? அவருக்கு வேலையெல்லாம் போகாது. ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்ணிட்டு, என்கொயரின்னு ஒண்ணு நடத்துவாங்க. அதுக்கப்பறம், அவரை வேற இடத்துக்கு மாத்திடுவாங்க. ரெண்டு மாசம் கழிச்சு எல்லாருமே இதை மறந்துடுவாங்க. அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்காததுக்காக அவர் கொடுக்கற சின்ன விலை இது, அவ்வளவுதான். நீ வேலையில சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல. சம்பாதிக்க வேண்டிய வயசு இது. உன் பிழைப்பைக் கெடுக்கற ஆளை அப்புறப்படுத்தற விஷயம் இது. அவ்வளவுதான்!" என்றார் சுந்தரலிங்கம்.
நவநீத் அரை மனதுடன் தலையாட்டினான்.
சுந்தரலிங்கம் ஏற்பாடு செய்தபடி, ஒரு விண்ணப்பதாரர் தன் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க நமசிவாயம் தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், அதன்படி ஒரு கவரில் பத்தாயிரம் ரூபாய் போட்டு அவர் அறைக்குச் சென்று அதை அவரிடம் கொடுத்ததாகவும் சொன்னார். அவர் நமசிவாயத்தின் அறைக்குச் சென்றதையும், அவரிடம் ஒரு கவர் கொடுத்ததையும் தான் பார்த்ததாக நவநீத் கூறினான்.
நமசிவாயத்தின் அறையில் சுந்தரலிங்கம் முன்பே வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் அடங்கிய கவர் எடுக்கப்பட்டது.
நமசிவாயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது விரைவிலேயே விசாரணை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
நவநீத் நமசிவாயத்தின் பார்வையைத் தவிர்த்தான். அவர் அலுவலகத்தில் இருந்தவரை அவர் கண்ணில் படாமல் பார்த்துக் கொண்டான். தான் செய்த செயல் பற்றி அவனுக்கு ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.
இது நடந்து இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே, எதிர்பாராத விதமாக நவநீதுக்கு ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. போபாலில் வேலை. தன் அரசாங்க வேலையை ராஜினாமா செய்தான் நவநீத்.
நமசிவாயத்தின் மீது விசாரணை நடக்கும்போது வந்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவன் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
நவநீத் போபாலுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. இதுவரை விசாரணைக்காக அவன் அழைக்கப்படவில்லை. சுந்தரலிங்கத்தின் தொலைபேசி எண் அவனிடம் இருந்தபோதும், அவன் அவருக்கு ஃபோன் செய்து கேட்கவில்லை.
ஒருவேளை அவன் சாட்சியம் அவசியமில்லை என்று அவர்கள் முடிவு செய்திருக்கலாம். தானே ஏன் வலுவில் போய்த் தகவல் அறிய முற்பட வேண்டும் என்று நினைத்துப் பேசாமல் இருந்து விட்டான்.
நவநீத் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே சற்றுத் தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்தவரின் முகம் பரிச்சயமானது போல் தோன்றியது. நவநீத்தின் வயிற்றுக்குள் இனம் தெரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. ஏன் இப்படி என்று அவன் யோசிக்க ஆரம்பித்தபோதே, அந்த மனிதர் நமசிவாயம் போல் இருக்கிறாரே என்று தோன்றியது. ஆமாம், அவரேதான்!
'இங்கே எப்படி வந்தார் அவர்? ஒருவேளை என்னைப் பார்க்கத்தான் போபாலுக்கு வந்திருக்கிறாரோ?'
அவரைத் தவிர்த்து எதிர்ப் பக்கம் போக நினைத்தான். ஆனால் போக்குவரத்து அதிகம் இருந்ததால், சாலையைக் கடக்க முடியவில்லை. அதற்குள், அவர் அருகில் வந்து, அவன் தோளைத் தொட்டுத் திருப்பினார்.
"ஏண்டா, பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டு இங்க ஓடி வந்துட்டா நான் விட்டுடுவேன்னு நினைச்சியா? நீ எங்கே போனாலும் எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்" என்றார் அவன் தோளை அழுத்தியபடி.
அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வேகமாக ஓடினான் நவநீத்.
வீட்டுக்குப் போனதும், சுந்தரலிங்கத்தைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லி, "அவர் எப்படி இங்கே வந்தார்?" என்றான் நவநீத்.
சுந்தரலிங்கம் பெரிதாகச் சிரித்து விட்டு, "நீ கிளம்பிப் போன கொஞ்ச நாளிலேயே நமசிவாயம் மாரடைப்பால் இறந்து போயிட்டார். உனக்கு ஏதோ மனப்பிரமை. கொஞ்சம் ஒய்வு எடுத்துக்க. சரியாயிடும்" என்றார்.
குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொருள்:
தன் மனத்துக்குத் தெரிந்த ஒன்றைப் பற்றிப் பொய் கூறக் கூடாது. அவ்வாறு கூறினால், நம் நெஞ்சே நம்மைச் சுடும்.
294. ராமன் எத்தனை ராமனடி!
ஒரு வாரப் பத்திரிகையில் அந்தச் செய்தி வந்திருந்தது. அதைச் செய்தி என்று சொல்ல முடியாது, செய்தித் துணுக்கு என்று சொல்லலாம்.
அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவருக்கு ராமன் என்று பெயர் வைப்பார்களாம். ராமன் என்றால் சீதாராமன், ஜானகிராமன், ராஜாராமன் என்றெல்லாம் கூட இருக்கும், ஆனால் பெயரில் ராமன் என்று வரும் என்று அந்தப் பத்திரிகையில் ஒரு துணுக்கு வெளியிட்டிருந்தார்கள்.
ஏன் இப்படி என்று தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக, எனக்கு இது போன்ற சுவையான விஷயங்களின் பின்னணி பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. என் நண்பன் பரசுவுடன் அந்த ஊருக்குச் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
பரசு இதைப் பெரிதாக நினைக்கவில்லை.
"இதில பெரிசா ஒண்ணும் இருக்காது. அந்த ஊர்ல ஒரு ராமர் கோவில் இருக்கும். அதனால, எல்லோரும் ராமர்னு பேரு வச்சுக்கலாம்!" என்று இதை எளிதாக விளக்க முயன்றான் அவன்.
ஆயினும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவருக்கு இந்தப் பெயர் வைப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு விதி அல்லது சம்பிரதாயமாகப் பின்பற்றப்படுத்துவது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றுகிறது என்று நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு, பரசு என்னுடன் வரச் சம்மதித்தான்.
அந்த கிராமத்தில் காலடி வைத்ததுமே, எதிர்ப்பட்ட ஒருவரிடம் பரசு கேட்ட முதல் கேள்வி, "இங்கே ராமர் கோவில் எங்க இருக்கு?" என்பதுதான்.
அவர் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு, "இந்த ஊர்ல ராமர் கோவிலே இல்லியே! ஒரு கிருஷ்ணர் கோவிலும், ஒரு சிவன் கோவிலும்தான் இருக்கு" என்றார்.
நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு, பரசுவைப் பார்த்தேன். "பின்ன ஏன் இந்த ஊர்ல எல்லாரும் ராமன்னு பேர் வச்சுக்கறாங்க?" என்றான் அவன், அசராமல்.
"அது எனக்குத் தெரியாது. அதோ அந்தத் தெருவுக்குள்ள போனீங்கன்னா, இடது பக்கமா இருக்கற மூணாவது வீட்டில ரமணின்னு ஒத்தர் இருக்காரு. அவருக்குத்தான் இந்த விஷயம்லாம் தெரியும்" என்றார் அவர்.
"தாங்க்ஸ். உங்க பேர் என்ன?"
"கோசல்ராம்!" என்றார் அவர்.
ரமணி வீட்டுக்குச் சென்று, நாங்கள் பல ஊர்களுக்கும் பயணம் செல்பவர்கள் என்று எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த ஊரில் எல்லாக் குடும்பத்திலும் ராமன் என்று பெயர் வைப்பதின் பின்னணி பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னோம்.
"அது ஒரு பெரிய கதை" என்று ஆரம்பிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர், "பல வருஷங்களுக்கு முன்னே, இந்த ஊர்ல ராமன்னு ஒத்தர் இருந்தாரு. அவருக்கு மரியாதை செலுத்தறதுக்காக, இந்த ஊர்ல அப்படி ஒரு வழக்கத்தை எல்லாரும் பின்பற்றிக்கிட்டு வராங்க. இந்த ஊர்லேந்து போய் வெவ்வேறு ஊர்ல செட்டில் ஆகி நவீன வாழ்க்கை வாழறவங்க கூட, குழந்தைகளுக்குப் பேர் வைக்கறப்ப, அதில் ராம்ங்கற வார்த்தை இருக்கற மாதிரி பாத்துப்பாங்க" என்றார்.
"அவரைப் பத்திச் சொல்லுங்களேன்" என்றேன்.
"இந்த ஊர்ல ஒரு ஜமீன்தார் இருந்தாரு. அவர் ஒரு குட்டி ராஜா மாதிரி இந்த ஊரை ஆண்டுக்கிட்டிருந்தாரு. இந்த ஊர்ல இருக்கற நிலத்தில பெரும்பகுதி அவரோடதாகத்தான் இருந்தது. மீதி நிலங்களை வச்சுக்கிட்டிருந்தவங்க கூட அவர் கிட்ட அடிபணிஞ்சுதான் நடப்பாங்க.
"அவரோட பெண் முத்துன்னு ஒரு கூலிக்காரனைக் காதலிச்சா. அவன் பயந்தான். ஆனா, அந்தப் பொண்ணு தைரியமா இருந்தா. ஒருநாள், ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிட்டாங்க.
"ஜமீன்தார் அவங்க இருக்கற இடத்தைக் கண்டுபிடிச்சுட்டாரு. ஆனா, அவங்க போய்த் தங்கி இருந்த ஊர் பிரிட்டிஷ் அரசோட கட்டுப்பாட்டில இருந்தது. அதனால, ஜமீன்தாரால எதுவும் செய்ய முடியல.
"அவன் தன் பெண்ணைக் கடத்திக்கிட்டுப் போனதா அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல ஜமீன்தார் புகார் கொடுத்தாரு. அவங்க விசாரிச்சுட்டு, அந்தப் பெண் மேஜர்ங்கறதால அவங்களால சட்டப்படி எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம், தன் வீட்டிலேந்து நகை, பணம் இவற்றையெல்லாம் முத்து திருடிக்கிட்டுப் போயிட்டான்னு இன்னொரு புகார் கொடுத்தாரு.
"போலீஸ்ல முத்துவைக் கைது செஞ்சு விசாரிச்சாங்க. அவங்களுக்கு உண்மை தெரியும். இருந்தாலும் ஜமீன்தாருக்கு சாதகமா அப்படி நடந்துக்கிட்டாங்க. அப்பதான் இந்த ஊரைச் சேர்ந்த ராமன்கற பெரியவர் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், ஜமீன்தார் வீட்டிலேந்து ஒரு காசோ, ஒரு குந்துமணி நகையோ திருட்டுப் போகலேன்னு சொன்னாரு. அதுக்கப்பறம், போலீஸ்காரங்க வேற வழியில்லாம முத்துவை விட்டுட்டாங்க. முத்துவும், ஜமீன்தார் பெண்ணும் வேற எங்கேயோ போய் செட்டில் ஆயிட்டாங்க."
"ராமன்கறவர் யாரு? அவர் சொன்னா போலீஸ்ல ஏன் ஏத்துக்கணும்?" என்றேன் நான்.
"ஏன்னா, அவர்தான் ஜமீனோட கணக்குகளைப் பாத்துக்கிட்ட காரியதரிசி. அவர் சொன்னா சரியாத்தானே இருக்கணும்?"
"அவர் ஏன் ஜமீன்தாரை எதுத்துக்கிட்டு அப்படிச் சொன்னாரு? முத்து அவருக்கு வேண்டியவனா?"
"முத்து யார்னே அவருக்குத் தெரியாது. ஜமீன்ல அவருக்கு நல்ல சம்பளம், மரியாதை எல்லாம் இருந்தது. அப்படியும் அவர் இதைச் செஞ்சார்னா, அதுக்கு ஒரே காரணம், தனக்கு ஒரு விஷயம் பொய்னு தெரிஞ்சப்ப, அதை வெளிப்படுத்தி உண்மையை நிலைநாட்டணும்னு அவர் நினைச்சதுதான்."
"இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றான் பரசு.
நான் குறுக்கிட்டு, "அதுக்கப்பறம் அவருக்கு என்ன ஆச்சு?" என்றேன்.
"என்ன ஆகும்? ஜமீன் வேலை போயிடுச்சு. அவருக்கு இந்த ஊர்ல சொந்த வீடு இருந்தாலும், ஜமீன்தாரோட கோபத்தைச் சம்பாதிச்சுக்கிட்டு அவரால இந்த ஊர்ல இருக்க முடியாம, ஊரை விட்டே போய், வேற ஒரு ஊர்ல ஒரு கடையில கணக்கு எழுதி, ரொம்பக் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தினாரு."
"அப்புறம் அவர் இந்த ஊருக்குத் திரும்ப வரவே இல்லையா?"
"வந்தாரு. 1956-ல அரசாங்கம் ஜமீன்தாரி முறையை ஒழிச்சப்பறம், அவர் குடும்பம் இங்கே திரும்பி வந்தது. அவரோட பழைய வீட்டிலேயே அவர் கொஞ்ச நாள் இருந்துட்டு இறந்து போயிட்டாரு. இதோ இந்த பெஞ்ச்ல படுத்துக்கிட்டுத்தான் அவர் இறந்து போனாரு" என்று பரசு அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பழைய பெஞ்ச்சைக் காட்டினார் அவர்.
பரசு நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தான்.
"அப்ப இதுதான் அவர் வீடா?" என்றேன் நான் வியப்புடன். "அப்ப நீங்க?"
"நான் அவரோட பேரன். என் பேரும் ராமன்தான்" என்றார் ரமணி!
"நல்ல வேளை, 'நான்தான் இறந்து போன அந்த ராமன்'னு சொன்னாம போனீங்களே!" என்று பரசு முணுமுணுத்தது எனக்கு மட்டும் கேட்டது!
"உங்க பேர் ரமணின்னு சொன்னாங்களே!" என்றேன் நான்.
"தன் மாமனார் பேரைச் சொல்லி என்னைக் கூப்பிடக் கூடாதுங்கறதுக்காக, என்னை என் அம்மா ரமணின்னு கூப்பிடுவாங்க. அந்தப் பேரே எனக்கு நிலைச்சுடுச்சு. ஆனா, ரிகார்டுல எல்லாம் என் பேர் ராமன்தான். உண்மையைப் பேசின என் தாத்தாவோட நினைவு எப்பவுமே அழியக் கூடாதுங்கறதுக்காக, இந்த ஊர்ல இருக்கற எல்லாக் குடும்பமும் குழந்தைகளுக்கு அவர் பேரை வைக்கறப்ப, எங்க குடும்பத்தில மட்டும் அப்படி வைக்காம இருப்பாங்களா?" என்றார் ரமணி என்கிற ராமன்.
"வைங்க, வைங்க. உங்க பையன் பேர் என்ன, ரகுராமனா?" என்றான் பரசு.
"இல்ல, பலராமன்!"
"பலராமனா? ஏற்கெனவே இந்த ஊர்ல பல ராமர்கள் இருக்காங்க போலருக்கே! இருக்கட்டும். என் பேர் பரசுராமன்!" என்ற பரசு, "வாடா, போகலாம்" என்றான் என்னிடம்.
குறள் 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
பொருள்:
தன் உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் இருப்பவன் உலகத்திலுள்ள மக்களின் உள்ளங்களில் இருப்பான்.
295. வாய்மையே வெல்லும்

"பரதா! அங்கம், வங்கம், மகதம், விதேகம், பாஞ்சாலம் என்ற வரிசையில் வரும் ஐம்பத்தொன்பது நாடுகளையும் வென்று, உன் நாட்டையும் சேர்த்து அறுபது நாடுகளுக்கும் அதிபதியாகி விட்டாய். இந்த அறுபது நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக ஆக்கியும் விட்டாய். இந்த நாடு இனி உன் பெயரிலேயே பாரத வர்ஷம் என்று வழங்கப்படும்" என்றார் முனிவர்.
"தங்கள் ஆசீர்வாதம், குருவே!" என்றான் பரதன், பணிவுடன். "என் நாட்டை விரிவாக்க வேண்டும் என்ற பேராசையால் நான் இதைச் செய்யவில்லை. இந்த நாடுகளின் அரசர்கள் அனைவரும் பெரும்பாலான சமயங்களில் ஒருவருடன் ஒருவர் போர் செய்து கொண்டு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், சாதாரண மக்கள் போரினால் பெரும் இன்னல்களுக்கு ஆளாக வகை செய்து கொண்டும் இருந்தார்கள். அத்துடன், தொலைதேசங்களிலிருந்து யாரும் பெரும் படையுடன் வந்து நம்மைத் தாக்க முயன்றால், அத்தகைய தாக்குதல்களை முறியடித்து, அந்தப் படைகளை அடித்து விரட்ட ஒரு வலுவான நாடு இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான், பல சிறு நாடுகளை ஒன்றிணைத்து, ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினேன். நம் மன்னர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால், இதற்குத் தேவையே ஏற்பட்டிருக்காது."
"உன் நோக்கம் உயர்ந்ததுதான். அதனால்தான், ஒரு துறவியாக இருந்தும், நான் உன் போர் வெற்றியைப் பாராட்டினேன். உன்னுடைய இந்த ஒருங்கிணைப்பு, வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நின்று உனக்குப் புகழைத் தேடித் தரும். பல நூறு அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கூட, இந்த நாட்டின் அமைப்பிலும், எல்லைகளிலும் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டாலும், இந்த நாடு உன் பெயராலேயே அழைக்கப்படும்" என்று வாழ்த்தினார் முனிவர்.
"உங்கள் நல்லாசிகள் எனக்கு என்றும் வேண்டும், முனிவர் பெருமானே!" என்று கூறி, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான் பரதன்.
பிறகு, "முனிவரே! நம் நாட்டின் இலச்சினையில் ஒரு உயர்ந்த கருத்தைப் பொறிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது நம் நாட்டின், நம் மக்களின் அடிப்படைக் கோட்பாடாகவும், நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும். தாங்கள் ஒரு பொருத்தமான கருத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்றான் பரதன்.
முனிவர் சிரித்தபடி, "பரதா! நான் ஒரு முனிவன். என்னைப் பொருத்தவரை, தவம்தான் உயர்ந்தது. தவத்தின் உயர்வை வெளிப்படுத்தும்படியான ஒரு வாசகத்தை அமைத்துக் கொள் என்பதுதான் என் யோசனையாக இருக்கும். ஆனால், இது குறித்து நீ பலரையும் கலந்தாலோசிக்க வேண்டும். என் கருத்துதான் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. முதலில், உன் அமைச்சரைக் கேள்!" என்றபடி, அருகிலிருந்த அமைச்சரைப் பார்த்தார்.
"முனிவர் கருத்துக்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?" என்றார் அமைச்சர்.
"நீங்கள் இப்படிச் சொல்வதே உங்களிடம் வேறொரு கருத்து இருக்கிறது என்பதை வெளிக் காட்டுகிறது! 'சிறந்த எண்ணங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை வந்தடையட்டும்' என்பது உபநிஷத் வாக்கியம். சிறந்த கருத்தைப் பெறுவதுதான் முக்கியம். அது யாரிடமிருந்து வருகிறது என்பது முக்கியமில்லை. சொல்லுங்கள்!" என்று அமைச்சரை ஊக்குவித்தார் முனிவர்.
அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன், "தவம் மிக உயர்ந்ததுதான். ஆனால், அது எல்லோருக்குமே கை கூடுவதில்லை. சாதாரண மனிதர்களைப் பொருத்தவரை மிகவும் உயர்ந்தது தானம்தான் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
"அமைச்சரே! உங்கள் கருத்தும் மிக உயர்ந்ததுதான். தானத்தை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்பதும் ஏற்கக் கூடியதுதான்" என்றார் முனிவர்.
"நீங்கள் இருவர் கூறியவையும் மிக உயர்ந்த கருப்பொருட்கள்தான். ஆயினும், உங்கள் கருத்துக்களைக் கேட்ட பிறகு, எனக்கு வேறொரு எண்ணம் தோன்றியது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான் பரதன்.
"சொல் பரதா!" என்றார் முனிவர்.
"என் தந்தை துஷ்யந்தர், காட்டுக்கு வேட்டையாட வந்தபோது, கண்வ முனிவர் ஆசிரமத்தில் வளர்ந்த என் தாய் சகுந்தலையைச் சந்தித்து, அவரை காந்தர்வ மணம் புரிந்து கொண்டார். பிறகு நான் பிறந்ததும், என் தாய் என்னை எடுத்துக் கொண்டு துஷ்யந்த மன்னரின் அரண்மனைக்குச் சென்றார்."
"ஆமாம். நான் கண்வ முனிவரின் சீடனாக அப்போது அவர் ஆசிரமத்தில் இருந்தேனே! இதெல்லாம் எனக்குத் தெரியும்" என்றார் முனிவர்.
"ஆனால், என் தாய்க்கு துர்வாசர் கொடுத்த சாபத்தால், துஷ்யந்தர் என் தாயை மறந்து விட்டார். அதனால், என் தாயையும், என்னையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். தான் சொல்வது உண்மைதான் என்று என் தாய் என் தந்தையிடம் போராடினார்."
"ஆமாம். அப்புறம் சகுந்தலை சொல்வது உண்மைதான் என்று அசரீரி வாக்கு கூறியது. அதன் பிறகு, உன் தந்தை துஷ்யந்தர் உன் தாயையும் உன்னையும் ஏற்றுக் கொண்டார். அதனால்தானே நீ இளவரசனாகி, உன் தந்தைக்குப் பின் அரசனாகி, இன்று உன் முயற்சியால் ஒரு பேரரரசனாகவும் ஆகி இருக்கிறாய்!"
"ஆமாம். அன்று என் தாய் உண்மைக்காகப் போராடினார். உண்மை வென்றது. நான் தவத்தைப் பற்றிக் குறைத்துச் சொல்வதாக நினைக்காதீர்கள். துர்வாசர் தன் தவ வலிமையால்தானே சாபம் கொடுக்கும் சக்தியைப் பெற்றார்? அவர் என் தாய்க்குக் கொடுத்த சாபத்தை உண்மைதானே வென்றது?" என்றான் பரதன்.
"உண்மைதான்!" என்றார் முனிவர், சிரித்தபடி.
முனிவரின் சிலேடையை பரதனும், அமைச்சரும் புன்முறுவலுடன் ரசித்தனர்.
"அது மட்டுமில்லை, முனிவரே! என் தாத்தா விசுவாமித்திரர் ஒரு பெரிய முனிவர். அரசராக இருந்த அவர், கடும் தவம் செய்து பிரம்மரிஷி ஆனார். அவர் அரசராக இருந்தபோது, தானங்களில் அதிகம் ஈடுபட்டவர். உண்மையில், தன் நாட்டு மக்களுக்குப் பஞ்சமின்றி உணவு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுவை வசிஷ்டரிடம் கேட்டார். வசிஷ்டர் கொடுக்காததால், அவருடன் போரிட்டுத் தோற்றார். பிறகு, வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்து, அவரைப் போலவே பிரம்மரிஷி ஆக விரும்பி, அரச வாழ்க்கையை விட்டு விட்டுத் தவம் செய்து பெரிய முனிவரானார். ஆனால், தானத்திலும், தவத்திலும் உயர்ந்திருந்த விசுவாமித்திரர் ஒருவரிடம் தோற்று விட்டார்!"
"நீ சொல்ல வருவது எனக்குப் புரிகிறது" என்றார் முனிவர், சிந்தனையுடன்.
"விசுவாமித்திரர் யாரிடம் தோற்றார், அரசே!"என்றார் அமைச்சர்.
"அரிச்சந்திரனிடம். சரியாகச் சொல்வதானால் அவர் தோற்றது உண்மையிடம்! ஏனெனில், அரிச்சந்திரன் அவரை வெற்றி கொண்டது உண்மையின் மூலம்தானே?"
"அப்படியானால், தாங்கள் சொல்வது..." என்றார் அமைச்சர்.
"தவத்தையும் தானத்தையும் விட வாய்மையே உயர்ந்தது என்று நான் கருதுகிறேன். எனவே, 'வாய்மையே வெல்லும்' என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தாங்கள் என்ன சொல்கிறீர்கள், குருவே!"
"'வாய்மையே வெல்லும்' என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று நீ சொன்னது மிகப் பொருத்தமானது. 'சத்யமேவ ஜயதே' என்று முண்டகோபநிஷத் கூறுகிறது."
"'சத்யமேவ ஜயதே!' அதுவே நம் நாட்டின் தாரக மந்திரமாக இருக்கட்டும்!"
"பரதா! உன் முடிவு மிகப் பொருத்தமானது. உன் பெயர் எப்படி இந்த நாட்டுடன் எப்போதும் இணைந்திருக்குமோ, அது போல், 'சத்யமேவ ஜயதே' என்ற இந்தத் தாரக மந்திரமும் இந்த நாட்டுடன் என்றென்றும் இணைந்திருக்கும்" என்றார் முனிவர்.
குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
பொருள்:
தன் உள்ளம் அறிய உண்மை பேசுபவன் தவம், தானங்கள் செய்பவர்களை விடவும் உயர்ந்தவன்.
296. பேசியது தவறா?

"கம்பெனி நிர்வாகம் விஷயமா ஒரு முக்கியமான முடிவை எடுக்க நினைக்கிறேன். அது விஷயமா உங்களையெல்லாம் கலந்து ஆலோசிக்கத்தான் இந்தக் கூட்டம். நீங்கள்ளாம் இந்த கம்பெனியில பல வருஷமா வேலை செய்யறீங்க. உங்க அனுபவத்தோட அடிப்படையிலேயும், உங்களோட சிந்தனை அடிப்படையிலும், உங்க கருத்துக்களை நீங்க சொல்லலாம்" என்ற பீடிகையுடன் தொடங்கினார் பொது மேலாளர் விஜயராகவன்.
தன் யோசனையை அவர் விவரித்ததும், பலத்த கரகோஷம் எழுந்தது.
"பிரமாதம், சார்!"
"புது விதமான அணுகுமுறை. இது பிரமாதமா செயல்படும்."
"அற்புதம், சார். இது மாதிரி யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க."
இது போன்ற பல பாராட்டுக் கலந்த ஆமோதிப்புகள் வெளிப்பட்டன.
'"அப்ப, நான் இதை உடனே அமல்படுத்தலாமா?" என்றார் விஜயராகவன்.
"நிச்சயமா, சார்!" என்றனர் பலரும்.
சில வினாடிகள் மௌனத்துக்குப் பின், "சார்! நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா, ஒண்ணு சொல்லலாமா?" என்ற ஒரு குரல் பலவீனமாக ஒலித்தது.
எல்லோரும் ஒரு சேரத் திரும்பிக் குரல் வந்த பக்கம் பார்த்தனர்.
உதவி மானேஜர் சதாசிவம்!
"சொல்லுங்க, சதாசிவம்!" என்றார் விஜயராகவன்.
"சார், இதில சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்னு நினைக்கிறேன்" என்று ஆரம்பித்தார் சதாசிவம்.
"சொல்லுங்க!" என்றார் விஜயராகவன். அவருடைய உற்சாகம் சட்டென்று வடிந்து விட்டாற் போல் இருந்தது.
சதாசிவம் தன் கருத்தைச் சொன்னார்.
அவர் பேசி முடித்ததும், ஒரு நிமிடம் அமைதி நிலவியது.
"சார்! இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லைன்னு நான் நினைக்கிறேன்..." என்று ஆரம்பித்த ஒரு மூத்த அதிகாரியைக் கையமர்த்திய விஜயராகவன், "இதைப் பத்தி நாம அப்புறம் பேசலாம். இப்போ இந்த மீட்டிங்கை முடிச்சுக்கலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தார்.
"என்ன சதாசிவம், உங்களுக்கு முன்னேறணும்னு ஆசை இல்லையா?" என்றார் சதாசிவத்தின் மேலதிகாரி கார்த்திகேயன்.
"ஏன் சார்!"
"நம்ம ஜி.எம்முக்கு அவர் கருத்தை யாரும் மறுத்துப் பேசினாலே பிடிக்காது. அவர் ஒரு ஐடியாவை யோசிச்சு, அதைப் பத்தி ரொம்ப உற்சாகமாப் பேசி, நம்மகிட்ட ஆலோசனை கேட்டாரு. மூத்த அதிகாரிகள் எல்லாரும் ஆஹா, பிரமாதம்னு தலையாட்டினாங்க. நீங்களும் சேந்து தலையாட்டாட்டாலும், வாயை மூடிக்கிட்டாவது இருந்திருக்கலாம். அவர் சொன்னதில தப்பு கண்டு பிடிச்சு, பேரைக் கெடுத்துக்கிட்டீங்களே! இப்ப ப்ரமோஷன் வர நேரம். உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும்னு எல்லாரும் எதிர்பாத்துக்கிட்டிருக்காங்க. இந்த நேரம் பாத்து தேவையில்லாம பேசி, வாய்ப்பைக் கெடுத்துக்கிட்டீங்களே!" என்றார் கார்த்திகேயன்.
"சார்! அவர் நம்ம கருத்தைக் கேட்டார். எனக்கு உண்மைன்னு பட்டதைச் சொன்னேன். அதை அவர் தப்பா எடுத்துப்பார்னா, அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார் சதாசிவம்.
"சார்! உங்களை ஜி.எம் கூப்பிடறாரு!" என்றான் பியூன்.
'நேர்ல கூப்பிட்டுத் திட்டப் போறாரா? அது நடந்துதான் கொஞ்ச நாள் ஆயிடுச்சே!' என்று நினைத்துக் கொண்டே, பொது மேலாளரின் அறைக்குச் சென்றார் சதாசிவம்.
பொது மேலாளரின் அறையில், துணைப் பொது மேலாளரும் அமர்ந்திருந்தார்.
"வாங்க சதாசிவம்! உக்காருங்க" என்றார் விஜயராகவன்.
"சார், நான் அன்னிக்குப் பேசினது அதிகப் பிரசங்கித்தனமா இருந்தா..." என்று ஆரம்பித்தார் சதாசிவம்.
"நோ, நோ! நீங்க அன்னிக்குச் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. மத்த சிலருக்கும் அதெல்லாம் தோணியிருக்கலாம். ஆனா, அதையெல்லாம் சொன்னா எனக்குப் பிடிக்கான்னு நினைச்சு அவங்க எதுவும் சொல்லாம இருந்தப்ப, நீங்க தைரியமா உங்க கருத்தைச் சொன்னதை நான் பாராட்டறேன். நீங்க சொன்ன கருத்துக்கள் அடிப்படையில, நாங்க கலந்து பேசி, என்னோட யோசனையில் சில மாறுதல்கள் செஞ்சிருக்கோம். இன்னொரு மீட்டிங் போட்டு அதை விவாதிக்கப் போறோம். நீங்க தைரியமா உண்மையைப் பேசினத்துக்காக உங்களைப் பாராட்டத்தான் உங்களைக் கூப்பிட்டேன்" என்றபடி, தன் கையை நீட்டினார் விஜயராகவன்.
சதாசிவம் நம்ப முடியாத மகிழ்ச்சியுடன், தன் கையை நீட்டினார்.
அவர் கைகளைப் பிடித்துக் குலுக்கிய விஜயராகவன், "பாராட்டுக்கள், சதாசிவம். நீங்க இனிமே அசிஸ்டன்ட் மானேஜர் இல்லை. உங்களை மானேஜரா ப்ரமோட் பண்ணி இருக்கோம்" என்று சொல்லி விட்டு, அருகில் இருந்த துணைப் பொது மேலாளரிடம் திரும்பி, "ப்ரோமோஷன் ஆர்டரை அவர்கிட்ட கொடுங்க " என்றார்.
குறள் 296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
பொருள்:
பொய் இல்லாமல் வாழ்வதை விடப் புகழான நிலை ஒருவனுக்கு வேறு எதுவும் இல்லை. அது அவன் கேட்காமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் தரும்.
297. பயிற்சியின் முதல் நாள்

"இவ்வளவு நேரம் இந்த ஆன்மிகப் பயிற்சி பற்றி விளக்கிச் சொன்னேன். இது மனத்தை அடக்கிச் செய்ய வேண்டிய பயிற்சி. இதற்குக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். நாளைக் காலை ஏழு மணிக்கு இந்தப் பயிற்சி தொடங்கும். இந்தப் பயிற்சிக்கு வரும்போது, நீங்கள் எல்லோரும் குளித்து விட்டு வர வேண்டும். அதோடு, வெறும் வயிற்றுடன் வர வேண்டும். இப்போது நீங்கள் போகலாம்."
சுவாமிஜி எழுந்து செல்ல, கூட்டம் கலைந்தது.
மறுநாள் காலை, பயிற்சியில் பங்கேற்பவர்கள் வந்து அமர்ந்திருந்தனர். சரியாக ஏழு மணிக்கு சுவாமிஜி அங்கே வந்தார்.
"இப்போது பயிற்சியைத் தொடங்கப் போகிறோம்!" என்றவர், அனைவரையும் ஒருமுறை பார்த்து விட்டு, "எல்லாரும் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டீங்க இல்ல?" என்றார், சிரித்துக் கொண்டே.
அனைவரும் மௌனமாக இருந்தனர். சிலர் மட்டும் இல்லையென்று தலையாட்டினர்.
"நல்லது. சாப்பிட்டிருக்க மாட்டீங்கன்னு தெரியும். யாராவது காப்பி மட்டுமாவது சாப்பிட்டீங்களா?"
ஒரு சில வினாடிகளுக்குப் பின், ஒருவர் மட்டும் தயக்கத்துடன் கையைத் தூக்கினார்.
"காப்பி சாப்பிட்டீங்களா?" என்றார் சுவாமிஜி.
"எதுவும் சாப்பிடாமத்தான் வீட்டிலேந்து கிளம்பினேன். வழியில ஒரு காஃபி ஷாப் திறந்திருந்தது. காப்பி மட்டும் சாப்பிட்டா பரவாயில்லேன்னு நினைச்சு சாப்பிட்டோம்...சாப்பிட்டேன்!" என்றார் அவர்.
"சாப்பிட்டோம்னு சொல்லிட்டு, உங்களோட சேர்ந்து காப்பி சாப்பிட்ட மத்தவங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்னுட்டு, சாப்பிட்டேன்னு சொல்றீங்க. நல்லது. இவரோட சேர்ந்து காஃபி ஷாப்ல காப்பி சாப்பிட்டவங்க யாரு?" என்றார் சுவாமி, புன்னகை மாறாமல்.
இன்னும் மூன்று பேர் தயக்கத்துடன் எழுந்தனர்.
"நல்லது. எதுவுமே சாப்பிடக் கூடாதுன்னு நேத்திக்கு நான் சொன்னேன். ஆனாலும், காஃபி ஷாப்பைப் பாத்ததும், காப்பி மட்டும் சாப்பிட்டா பரவாயில்லேன்னு நினைச்சு, நாலு பேர் காப்பி சாப்பிட்டுட்டு வந்திருக்கீங்க. நீங்க மூணு பேரும் போயிட்டு நாளைக்கு வாங்க. உங்க பயிற்சியை நாளைக்கு ஆரம்பிக்கலாம்" என்றார் சுவாமிஜி.
மூன்று பேர் அங்கிருந்து நகர முயல, காப்பி குடித்ததாக முதலில் ஒப்புக் கொண்டவர் போவதா, இருப்பதா என்ற குழப்பத்துடன் நின்றார்.
"ஒரு நிமிஷம்" என்றார் சுவாமிஜி, கிளம்பத் தொடங்கிய மூவரையும் பார்த்து. அவர்கள் நின்றனர்.
"இது உங்களை தண்டிக்கறதுக்காக இல்ல. இந்தப் பயிற்சிக்கு உணவுக் கட்டுப்பாடு முக்கியம்தான். ஆனா, மனசைக் கட்டுப்படுத்தறது சுலபம் இல்ல. மனசைக் கட்டுப்படுத்தத் தெரிஞ்சுக்கறதும் இந்தப் பயிற்சியோட நோக்கங்கள்ள ஒண்ணு. அதை நீங்க கொஞ்சம் கொஞ்சமாத்தான் பழக்கிக்க முடியும். ஆனா, யாராவது காப்பி குடிச்சீங்களான்னு நான் கேட்டப்ப, அவர் மட்டும்தான் சாப்பிட்டேன்னு உண்மையைச் சொன்னாரு. நீங்க மூணு பேரும் அப்புறமாத்தான் சொன்னீங்க. எல்லா அறங்கள்ளேயும் முக்கியமான அறம் உண்மை பேசறது. இந்த ஒரு அறத்தைக் கடைப்பிடிக்கறவங்களால மற்ற எல்லா அறங்களையும் கடைப்பிடிக்க முடியும். இந்த அறத்தைக் கடைப் பிடிக்காதவங்களால வேற எந்த அறத்தையும் பின்பற்ற முடியாது. இப்ப இந்த நாலு பேரைத் தவிர, வேற யாராவது காப்பி, டீ மாதிரி பானங்கள் குடிச்சுட்டு வந்திருந்தா, அவங்க எழுந்து நிக்கலாம்."
ஒருவர் எழுந்து நிற்க அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் எழுந்து நின்றனர்.
"நல்லது. இன்னிக்கு பயிற்சி முடிஞ்சு போச்சு! உண்மையைச் சொல்லணும்கறதுதான் இன்றைய பயிற்சி. இதை எல்லோருமே அழுத்தமாப் புரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இனிமே பயிற்சியை நாளைக்குத் தொடரலாம். யாராவது காப்பி குடிச்சுட்டு வந்தீங்களான்னு நாளைக்கு நான் கேட்க மாட்டேன். அதுக்கு அவசியம் இருக்காதுன்னு எனக்குத் தெரியும். ஏன்னா, உண்மை பேசணும்கற அறத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சதுமே, கட்டுப்பாடா இருக்கறதுக்கான முதல் படியை எடுத்து வச்சு, கட்டுப்பாடு என்ற இன்னொரு அறத்தையும் நீங்க எல்லாருமே பின்பற்ற ஆரம்பிச்சிருப்பீங்க!" என்று சொல்லி எழுந்து கொண்டார் சுவாமிஜி.
குறள் 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
பொருள்:
பொய்யாமை என்ற அறத்தை ஒருவன் தவறாமல் கடைப் பிடித்தால், பிற அறங்களை அவன் செய்வதும் நன்மை விளைவிக்கும். (பிற அறங்களைச் செய்யும்போது, உண்மைத் தன்மையுடன் செயல்படாவிட்டால் அத்தகைய அறங்களைச் செய்வது தீமை விளைவிக்கக் கூடும். பொய்யாமையைக் கடைப் பிடிப்பவன் பிற அறங்களைச் செய்யும்போது உண்மையாக நடந்து கொள்வான் என்பதால், அந்த அறங்களை அவன் சரியாகச் செய்து அவற்றின் நற்பலன்களைப் பெறுவான்).
298. அரிசி ஆலை

தன் ஊருக்கு அருகில் உள்ள ஊரில், ஒரு அரிசி ஆலை விலைக்கு வருகிறது என்று அறிந்து அதை வாங்குவதில் ஆர்வம் கொண்ட சண்முகம், தன் நண்பர் ஒருவர் மூலம் அரிசி ஆலை உரிமையாளரின் தரகருடன் தொடர்பு கொண்டார்.
உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு பேசிய பின், அவரிடம் சண்முகத்தை அழைத்துச் சென்றார் தரகர் கன்னையா.
"பார்ட்டி ரொம்ப சுத்தமானவர்!" என்றார் கன்னையா, போகும் வழியில்.
"எப்பவும் குளிச்சுட்டு சுத்தமா இருப்பாரா?" என்றார் சண்முகம், சிரித்தபடி.
"அதுவும்தான்! ஒரு நாளைக்கு ரெண்டு வேளை கண்டிப்பா குளிச்சுடுவாரு. ஆனா, நான் சொன்னது அவரோட தொழில் சுத்தம், வார்த்தை சுத்தம் பத்தி!" என்றார் கன்னையா.
"இந்த ஊர்ல இவ்வளவு தண்ணி கஷ்டம் இருக்கே! எப்படி ரெண்டு வேளை குளிக்கிறாரு?" என்றார் சண்முகம், விடாமல்.
இதற்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று கன்னையா யோசித்துக் கொண்டிருந்தபோதே, சண்முகம், "சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்!" என்றார்.
பார்ட்டி என்று குறிப்பிடப்பட்ட முருகனின் வீட்டுக்கு இருவரும் சென்றபோது, முருகன் குளித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள்.
அப்போது மாலை வேளை. சண்முகம் கன்னையாவைப் பார்த்து, 'நீங்கள் சொன்னது சரிதான்!' என்பது போல் சிரித்தார்.
முருகன் குளித்து விட்டு வந்ததும், அவருடைய அரிசி ஆலையை விலைக்கு வாங்குவது பற்றி அவரிடம் பேசினார் சண்முகம். அரிசி ஆலை பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல் தாளை சண்முகத்திடம் கொடுத்த முருகன், அவரிடம் மேலும் சில விவரங்களைத் தெரிவித்த பிறகு, தான் எதிர்பார்க்கும் விலையையும் குறிப்பிட்டார். வரும் வியாழனன்று சண்முகம் வந்து அரிசி ஆலையை நேரில் பார்த்த பின், விலையை இறுதி செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
புதன்கிழமை இரவு, சண்முகத்துக்குக் கன்னையாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"சார்! நாளைக்கு மில்லைப் பார்க்கணும்னு முடிவு செஞ்சோம் இல்ல?" என்றார் கன்னையா.
"ஆமாம். காலையில 8 மணிக்கு கார்ல கிளம்பி வரேன். வரப்ப உங்க வீட்டுக்கு வந்து உங்களையும் அழைச்சுக்கறேன்" என்றார் சண்முகம்.
"இல்ல சார். அதுக்கு முன்னால, உங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும். நானே உங்க வீட்டுக்கு வரேன்" என்றார் கன்னையா.
"நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் வரணும்? நான் உங்க ஊரைத் தாண்டித்தானே முருகன் ஊருக்குப் போகணும்? போகும்போது, உங்களை காரிலேயே அழைச்சுக்கிட்டுப் போறேன். கார்ல போய்க்கிட்டே பேசலாமே!"
"இல்ல சார். நான் வரேன். நேர்ல பேசலாம்" என்று சொல்லித் தொலைபேசியை வைத்து விட்டார் கன்னையா.
'எதுக்கு இங்கே வரேங்கறாரு? முருகன்கிட்ட எப்படியும் கமிஷன் வாங்கப் போறாரு. என்கிட்டயும் கமிஷன் கேக்கறதுக்காக வராரோ?' என்று யோசித்தார் சண்முகம்.
சொன்னபடி காலையில் வந்து விட்டார் கன்னையா.
"எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு காலையில பஸ்ல வரீங்க? நான்தான் சொன்னேனே..." என்று ஆரம்பித்தார் சண்முகம்.
"சார்! உங்களுக்கு அந்த ரைஸ் மில் வேண்டாம்" என்றார் கன்னையா, குறுக்கிட்டு.
"என்னது? ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் சண்முகம், சற்று அதிர்ச்சியுடன்.
"சார்! நேத்துதான் ஒரு விஷயம் தெரிஞ்சுது. ரைஸ் மில்ல வேலை செஞ்ச பழைய அக்கவுன்டன்ட்டைத் தற்செயலாப் பாத்தேன். அவர் எனக்குத் தெரிஞ்சவரு. பாங்க்ல கடன் வாங்கித்தான் முருகன் ரைஸ் மில் ஆரம்பிச்சாரு. ஆனா, தரக்குறைவான மெஷின்களை வாங்கிட்டு, போலியா பில் தயாரிச்சு பாங்குக்குக் காட்டி, அதிகமா கடன் வாங்கி இருக்காரு. அதிகப்படியா வாங்கின பணத்தை வேற எங்கேயோ முதலீடு செஞ்சிருக்காரு. தரமில்லாத மெஷின்கள்ங்கறதால, அதெல்லாம் அடிக்கடி பழுதாகி, மில்லை சரியா ஓட்ட முடியல. பாங்குக்குக் கட்ட வேண்டிய தவணைத் தொகையை ஒழுங்காக் கட்ட முடியல. அதனாலதான் மில்லை விக்கப் பாக்கறாரு. உங்களுக்கு இது வேண்டாம்னு சொல்லத்தான் நேர்ல வந்தேன்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கன்னையா.
சண்முகம் கன்னையாவை வியப்புடன் பார்த்தார். "நீங்க முருகனுக்குத்தானே தரகர்? எங்கிட்ட ஏன் இதைச் சொல்றீங்க?" என்றார்.
"சார்! எனக்கு முருகனைப் பத்தி இதுக்கு முன்னே தெரியாது. நான் அவரோட ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரன். என்னைப் பத்திக் கேள்விப்பட்டு, என்னைக் கூப்பிட்டு அவர் ரைஸ் மில்லை வித்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாரு. என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினவரு எங்கிட்ட அவரைப் பத்தி நல்லபடியாத்தான் சொன்னாரு. ஆனா, அவர்கிட்ட தப்பு இருக்கறது தெரிஞ்சப்பறம், உங்ககிட்ட உண்மையைச் சொல்லி உங்களை எச்சரிக்கை வேண்டியது என் கடமை. அதான் சொன்னேன். இனிமே வேற யார்கிட்டயும் இந்த ரைஸ் மில்லை விக்க முயற்சி செய்யவும் மாட்டேன், முருகன்கிட்ட வேற வியாபாரத் தொடர்பு வச்சுக்கவும் மாட்டேன்."
சண்முகம் அடங்காத வியப்புடன் கன்னையாவைப் பார்த்தார். அவர் அணிந்திருந்த சற்றே அழுக்கான உடை, அவர் பஸ்ஸில் வந்ததால் கசங்கி இருந்தது. காலையில் சீக்கிரமே வீட்டை வீட்டுக் கிளம்பி விட்டதால் குளித்திருக்க மாட்டார் என்று தோன்றியது.
ஆனால், முருகன் இந்நேரம் குளித்து விட்டு 'சுத்தமாக' இருப்பார் என்று நினைத்துக் கொண்டார் சண்முகம்.
குறள் 298
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
பொருள்:
உடல் நீரினால் தூய்மை அடையும். மனம் தூய்மை பெறுவது உண்மையினால்தான்.
299. அணையா விளக்கு

"எங்க அழைப்பை ஏற்று எங்க ஊருக்கு வந்தது பத்தி ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு" என்றார் கோவிலின் அறங்காவலர் தாமோதரன்.
"ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறது என்னோட பணி. எங்க கூப்பிடறாங்களோ அங்க போறேன். எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லிட்டு வரேன்" என்றார் ஆன்மீகச் சொற்பொழிவாளர் அருட்செல்வம்.
"சாயந்திரம் மண்டபத்திலே உங்க சொற்பொழிவு. அதுக்கு முன்னால, எங்க ஊர்க் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்."
"நான் இந்த ஊருக்கு வந்துட்டேன். சொற்பொழிவு முடிஞ்சு ஊருக்குத் திரும்பற வரையிலே, என் நிகழ்ச்சிகளை நீங்கதான் தீர்மானிக்கணும். ஆங்கிலத்தில சொன்னா, ஐ ஆம் அட் யுவர் டிஸ்போஸல்!" என்றார் அருட்செல்வம், சிரித்தபடி.
மாலை கோவிலுக்குள் நுழையுமுன், "இந்தக் கோவில்ல ஒரு விசேஷம் உண்டு. இங்க அணையா விளக்குன்னு ஒரு தீபம் இருக்கு. பல நூறு வருஷங்களா - இந்தக் கோவில் நிறுவப்பட்டதிலேந்தேன்னு நினைக்கறேன் - இந்த தீபம் எரிஞ்சுக்கிட்டே இருக்கு. எந்த ஒரு புயல் மழை வந்து ஊரே அடங்கிக் கிடந்தாலும், எப்படியோ கோவிலுக்கு வந்து, தீபத்துக்கு எண்ணெய் போட்டு, அதைத் தொடர்ந்து எரிய வச்சுக்கிட்டிருக்காங்க!" என்றார் தாமோதரன்.
"எரிய வச்சுக்கிட்டிருக்காங்கன்னு ஏன் சொல்றீங்க? எரிய வச்சுக்கிட்டிருக்கோம்னு சொல்லுங்க! நீங்களும் இந்த ஊர்க்காரர்தானே! இது பெரிய விஷயம். இது மாதிரி காரியங்களைத் தொடர்ந்து செய்யறதுங்கறது சாதாரண விஷயம் இல்ல. நான் வேற ஊர்கள்ள நிகழ்ச்சிகள்ள பேசறப்ப, இந்தக் கோவிலைப் பத்தி சொல்றேன். வெளியூர்க்காரங்க பல பேர் கூட இந்த அணையா விளக்குக்கு எண்ணெய் வாங்க உதவி செய்ய முன் வருவாங்க" என்றார் அருட்செல்வம்.
தாமோதரன் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கை கூப்பினார்
கோவிலில் வழிபாடு முடிந்து வெளியே வருவதற்கு முன், அருட்செல்வம் கோவில் அர்ச்சகரை அழைத்து, "உங்களை எங்கேயோ பாத்திருக்கேனே!" என்றார்.
"ஆமாம். மலையூர்ப்பட்டிங்கற ஊர்ல இருக்கற கோவில்ல இருந்தேன். அங்கே நீங்க வந்திருக்கேள். நீங்க ஞாபகம் வச்சுண்டிருக்கறது ரொம்பப் பெருமையா இருக்கு!" என்றார் அர்ச்சகர்.
"எங்கே ஞாபகம் வச்சுக்கிட்டேன்? உங்க முகம் நினைவிலே இருந்ததே தவிர, எங்கே பாத்தேன்னு ஞாபகம் வரலியே!" என்று சிரித்துக் கொண்டே கூறிய அருட்செல்வம், "சந்தோஷம், வரேன்" என்று அவரிடம் விடைபெற்றார்.
வெளியில் வந்ததும் தாமோதரனிடம், "மலையூர்ப்பட்டி கோவில் பெரிசு. அங்கே அவருக்கு எல்லாம் வசதியா இருந்திருக்கும். வருமானமும் நிறைய இருக்கும். ஏன் அதை விட்டு விட்டு வந்தார்னு தெரியல" என்ற அருட்செல்வம், "உங்க கோவிலைக் குறைச்சு சொல்றேன்னு நினைக்காதீங்க. அது இன்னும் பெரிய கோவில். அதான் சொன்னேன்" என்றார்.
"நீங்க சொன்னது சரிதான். அது பெரிய கோவில்தான். அதோட ஒப்பிடச்சே, இது சின்னக் கோவில்தான். அந்தக் கோவில்ல அர்ச்சகரா இருக்கறது பெரிய அந்தஸ்துதான். நல்ல சம்பளம், வீடு எல்லாம் உண்டு. அதையெல்லாம் விட்டுட்டுத்தான் அவர் இங்க வந்திருக்காரு."
"ஏன் அப்படி?" என்றார் அருட்செல்வம், வியப்புடன்.
"அந்தக் கோவில் தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானது. அந்தக் கோவிலோட சொந்தக்காரங்க வருமானத்தைக் குறைச்சுக் காட்டச் சொல்லி இவரை வற்புறுத்தி இருக்காங்க. அர்ச்சனை, அபிஷேகம் இதுக்கெல்லாம் முறையா ரசீது கொடுக்காம, பணத்தை வாங்கி அவங்ககிட்ட கொடுக்கணும்னு சொல்லி இருக்காங்க. அவர் அதுக்கு ஒத்துக்கல. அதனால, அவரால அங்கே தொடர்ந்து வேலை பாக்க முடியல. இந்த ஊர்க் கோவில்ல அர்ச்சகர் வேலை காலி இருக்குன்னு தெரிஞ்சு, எங்ககிட்ட வந்து கேட்டாரு. ஒரு உண்மையானவர்தான் எங்களுக்கு வேணும்னு நாங்க அவரை இங்க வச்சுக்கிட்டிருக்கோம்" என்றார் தாமோதரன்.
அருட்செல்வம் மௌனமாக ஏதோ யோசித்தபடி வந்தார்.
அன்று இரவு மண்டபத்தில் சொற்பொழிவாற்றும்போது அருட்செல்வம் சொன்னார். "இந்த ஊர்க் கோவில்ல இருக்கற அணையா விளக்கைப் பத்தி எங்கிட்ட சொன்னாங்க. ரொம்பப் பெரிய விஷயம் இது. இதைப் பத்தி நான் போற இடத்திலெல்லாம் சொல்றேன்னு சொன்னேன். நான் சொல்றதைக் கேட்டு, வேற சில கோவில்ல கூட இது மாதிரி அணையா தீபம் அமைக்கலாமான்னு யோசிப்பாங்க. ஆனா இந்த ஊர்ல, இந்த ஊர்க் கோவிலிலேயே இன்னொரு அணையா தீபம் இருக்கு. உண்மைங்கற விளக்கா இருக்கற கோவில் அர்ச்சகர்தான் அந்த அணையா தீபம். நீங்க ஒவ்வொத்தருமே அந்த அணையா தீபம் மாதிரி ஒரு உண்மை விளக்கா இருக்கணும்கறது என்னோட வேண்டுகோள். அந்த அணையா தீபம் பத்தியும் நான் எல்லா இடங்களிலேயும் சொல்லப் போறேன். அவர் மாதிரி இன்னும் பல அணையா தீபங்கள் ஒளி விட்டால், அது எல்லோருக்குமே நல்லது."
குறள் 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
பொருள்:
வெளியில் உள்ள இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆக மாட்டா. நல்லவர்களுக்கு அவர்கள் மனதில் ஒளிரும் பொய்யாமை என்ற விளக்கே உண்மையான விளக்காகும்.
300. உலகத்தில் சிறந்தது எது?

"எங்கள் நிறுவனத்தில் மானேஜ்மென்ட் டிரெய்னியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் எட்டு பேருக்கும் பாராட்டுக்கள்.
"ஆப்டிட்யூட் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், இன்டர்வியூ என்று பல படிகளை நீங்கள் ஏற்கெனவே தாண்டி வந்திருக்கிறீர்கள். இப்போது உங்களுக்கு இன்னொரு க்ரூப் டிஸ்கஷன் இருக்கிறது.
"பயப்படாதீர்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை இது பாதிக்காது. ஒரு நோக்கத்துக்காக நாங்கள் இதை வைத்திருக்கிறோம். இந்த க்ரூப் டிஸ்கஷனை நீங்கள் உங்களுக்குள் நடத்திக் கொள்வீர்கள். நாங்கள் யாரும் உங்களை கவனித்து மதிப்பெண் கொடுக்கப் போவதில்லை.
"அரை மணி நேரம் கழித்து நான் வருவேன். நீங்கள் என்ன முடிவுக்கு வந்தீர்கள் என்று சொன்னால் மட்டும் போதும். மறுபடியும் சொல்கிறேன். உங்கள் செலக்ஷன் ஃபைனல். அதனால், கவலைப்படாமல் இதைச் செய்யுங்கள். நீங்கள் விவாதிக்க வேண்டிய தலைப்பு 'உலகத்தில் சிறந்தது எது?'" என்றார் பர்சனல் ஆஃபீஸர்.
சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.
வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பேரும் கொஞ்சம் கவலையுடனும், கொஞ்சம் குழப்பத்துடனும் வட்டமாக அமர்ந்தனர்.
"இது நம்ம செலக்ஷனை பாதிக்காதுன்னு சொன்னாலும், கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஏதாவது டிராப் இருக்குமான்னு சந்தேகமா இருக்கு!" என்று ஒருவன் ஆரம்பிக்க, மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
"பர்சனல் ஆஃபீஸர்தான் கவலைப்பட வேண்டாம்னு சொல்லி இருக்காரே! அதனால, நாம கொஞ்சம் ரிலாக்ஸ்டாவே இருப்போம். முதல்ல, இந்த டாபிக்கே கொஞ்சம் விசித்திரமா இருக்கு! நாம பாக்கப் போற மானேஜ்மென்ட் வேலைக்கும், இந்தத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?"
"உலகத்தில் சிறந்தது எதுன்னு ஒரு பழைய சினிமாப் பாட்டு இருக்கு. அதில கதாநாயகி உலகத்தில சிறந்தது காதல்னு சொல்லுவா, கதாநாயகன் தாய்மைன்னு சொல்லுவான். இதிலேந்து நாம ஆரம்பிக்கலாம்."
"அப்படிப் பாத்தா, காதல், தாய்மை இரண்டுக்கும் அடிப்படை அன்புதான். அதனால, உலகத்தில சிறந்தது அன்புன்னு சொல்லலாமா?"
"நாம இப்ப வேலையில சேந்திருக்கறதால, கடமைதான் முக்கியம்னு சொல்லலாமே."
"கடமை, அன்பு, காதல், பாசம்னு சினிமா மாதிரி போய்க்கிட்டிருக்கு! தேசபக்தின்னு சொல்லலாமே!"
"அதுவும் சினிமா சென்டிமென்ட்தான்!"
"தர்மம்?"
"தர்மம்னா? அறமா அல்லது தர்மம் செய்யறதா அதாவது கொடையா?"
"தர்மம், அன்பு, பாசம் இதெல்லாம் பழைமையான விஷயங்கள். நாம இருக்கறது ஒரு விஞ்ஞான யுகத்தில. அதனால உலகத்தில சிறந்தது விஞ்ஞான அறிவு அதாவது, சுருக்கமா அறிவுன்னு சொல்லலாமே!"
"ஆமாம். அறிவுன்னா அது விஞ்ஞான அறிவாகவும் இருக்கலாம், மெய்ஞ்ஞான அறிவாகவும் இருக்கலாம். பழமை, புதுமை இரண்டுக்குமே அறிவுங்கற கருத்து பொதுவா இருக்கு. அதனால, அறிவுதான் உலகத்தில சிறந்த விஷயம்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்."
"என்ன? எல்லாரும் ஒத்துக்கறீங்களா? அறிவுன்னு முடிவு செஞ்சுடலாமா?"
"இருங்க. எனக்கு இன்னொண்ணு தோணுது. அறிவுங்கறது உயர்ந்த விஷயம்தான். ஆனா, அறிவுங்கறது எதைக் குறிக்குது? அதாவது, விஞ்ஞான அறிவுன்னு சொல்றமே, அது என்ன?"
"விஞ்ஞான அறிவுன்னா, விஞ்ஞானத்தால் நாம அறிஞ்ச உண்மை."
"ஆங், அதுதான்! உண்மை! எனவே, உலகத்தில சிறந்தது உண்மைன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்."
மற்றவர்கள் இதை ஒப்புக் கொள்வதா என்ற யோசனையில் இருந்தார்கள்.
"இப்படிப் பாருங்க. உண்மைங்கறது நாம இங்கே விவாதிச்ச எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். பாசம், அன்பு, தேசபக்தின்னு எதை எடுத்துக்கிட்டாலும், அவற்றோட தன்மையைப் பத்தி நாம என்ன சொல்றோம்? உண்மையான அன்பு, உண்மையான பாசம் அப்படியெல்லாம் சொல்றோம் இல்ல? அதனால, உண்மைங்கறது சிறந்தது மட்டும் இல்ல, எல்லா விஷயங்களையும் சிறந்ததாக ஆக்குவது. எனவே, உலகத்தில் எல்லாவற்றையும் விடச் சிறந்தது உண்மைன்னு சொல்லலாம் இல்ல?"
மற்ற ஏழு பேரும் கை தட்டி அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.
"என்ன, உலகத்தில் சிறந்தது எதுன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா?'" என்றார் பர்சனல் ஆஃபீசர்
"வந்துட்டோம் சார்!"
"என்ன அது?"
"உண்மை!"
"பிரமாதம். ஒரு விஷயம் சொல்றேன். ஆச்சரியப்படுவீங்க! நம்ம கம்பெனியோட மோட்டோ என்ன தெரியுமா? 'உண்மை'. இங்க பாருங்க. நம் கம்பெனியோட லோகோ. அதில உண்மைன்னு எழுதி இருக்கா?"
"இல்லையே சார்!"
"அது கண்ணுக்குத் தெரியாது. லோகோவோட நடுவில, ஒரு சின்ன வட்டம் இருக்கா?'
"ஆமாம்."
"அந்த வட்டத்துக்குள்ள இந்தியாவில் இருக்கிற மொழிகள் மற்றும் உலகத்தின் முக்கியமான மொழிகள் உட்பட முப்பத்தாறு மொழிகள்ள உண்மைன்னு ரொம்ப சின்னதா செதுக்கியிருக்கு. லென்ஸ் வச்சுப் பாத்தாத்தான் தெரியும். உண்மையை நாம தேடணும்கற கருத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி இப்படி உருவாக்கி இருக்காரு நம் கம்பெனியோட நிறுவனர்" என்றார் பர்சனல் ஆஃபீஸர்.
குறள் 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
பொருள்:
நான் உண்மையாகக் கற்றறிந்த நூல்கள் எதிலும் வாய்மையை விடச் சிறந்த அறம் வேறு எதுவும் இல்லை.
அதிகாரம் 31 - வெகுளாமை
அதிகாரம் 29 - கள்ளாமை
No comments:
Post a Comment