ரவீந்திரன் வேலைக்குச் சேர்ந்தபோது, அவன் அலுவலகத்தின் ஊழியர் பயிற்சிப் பள்ளியில் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்தப் பயிற்சிப் பள்ளியின் தலைமை அதிகாரியாக இருந்த தயாளன், தன் உற்சாகமான அணுகுமுறையாலும், சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்களாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
"திட்டம் போட்டுச் செயல்பட்டா, எல்லாத்திலேயுமே வெற்றி கிடைக்கும்" என்று அவர் ஒரு முறை கூறியது ரவீந்திரனின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது.
அவர் கூறியதை ஒரு கட்டளை போலவே கருதித் தன் வாழ்க்கையின் எல்லாச் செயல்பாடுகளையும் நடத்துவதை ரவீந்திரன் ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொண்டான்.
அலுவலகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்தித்தபோதும், பிரச்னைகளை எதிர்கொண்டபோதும், இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருந்ததை ரவீந்திரன் அனுபவத்தில் கண்டான்.
தயாளனுடன் தனக்கு ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ள விரும்பி, அவருடன் தொடர்பிலேயே இருந்தான் ரவீந்திரன்.
இருவரும் வெவ்வேறு ஊர்களிலும், வெவ்வேறு நிலைகளிலும் பணியாற்றினாலும், தயாளனை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் அவரைச் சந்தித்துப் பேசி, அவரிடம் ஓரளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான் ரவீந்திரன்.
ஆயினும், தயாளன் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, அவருடனான தொடர்பு விட்டுப் போய் விட்டது. ஓய்வு பெற்ற பின், அவர் விஜயவாடாவில் வசிப்பதாக மட்டும் ரவீந்திரன் அறிந்து கொண்டான்.
தயாளன் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும். ரவீந்திரனுக்கு அலுவலக வேலையாக விஜயவாடா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. விஜயவாடா அலுவலகத்தில் தன் வேலைகள் முடிந்ததும், தயாளனைச் சந்திக்கலாம் என்று நினைத்து, அலுவலகத்தின் கிளை மேலாளரிடம் அவரைப் பற்றி விசாரித்தான் அவன்.
"இந்த ஊர்லதான் இருக்காரு. ஆனா நீங்க அவரைப் போய்ப் பாக்கறதை அவர் விரும்புவாரன்னு தெரியல!" என்றார் அவர்.
"ஏன், அவருக்கு உடம்பு சரியில்லையா?"
"அதெல்லாம் எதுவும் இல்ல. அவர் பையன் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சான். தயாளன் சார் தன் சேமிப்பையெல்லாம் கொடுத்து உதவினதோட, தன் வீட்டையும் பாங்க்குக்கு செக்யூரிட்டியாக் கொடுத்தாரு. அவன் பிசினஸ்ல பெரிய நஷ்டம் வந்து, பாங்க்ல நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சாங்க. வேற வழி இல்லாம, தயாளன் சார் தன் வீட்டை வித்து பாங்க் கடனையும் மத்த கடன்களையும் அடைச்சாரு. வீட்டை வித்தப்புறம், சின்னதா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கிட்டு அதில இருக்காரு. இப்ப நீங்க அவரைப் போய்ப் பாத்தா, அவருக்கு மனசு வருத்தமா இருக்கும் இல்ல?"
"அடப் பாவமே! தயாளன் சார் எல்லாத்தையும் திட்டம் போட்டு கவனமாச் செய்யறவராச்சே!" என்றான் ரவீந்திரன், நம்ப முடியாமல்.
"பிள்ளைப் பாசம் அவர் கண்ணை மறைச்சிருக்கும், அல்லது அவர் பையன் அவர் சொன்னதைக் கேக்காம செயல்பட்டிருக்கலாம். ம்... விதி யாரை விட்டது?" என்றார் கிளை மேலாளர்.
குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
ஆஹா... குறளுக்கான கதை விளக்கம் அருமை...
ReplyDeletehttps://www.scientificjudgment.com
மிக்க நன்றி. தாமதாமாக பதிலளித்தமைக்கு வருந்துகிறேன்.
DeleteBest astrologer in Chennai online
ReplyDelete