"என்ன, சாப்பாடு தயாரா?"
"அஞ்சு நிமிஷத்தில ரெடி ஆயிடும், சார்."
"சீக்கிரம் ஆகட்டும். நாங்க வெளியில கிளம்பணும்!" என்றது திருமதி சசிசேகரின் அதிகாரமான குரல்.
சதாசிவம் பல்லைக் கடித்துக் கொண்டு, சமையலை முடிப்பதில் கவனம் செலுத்தினான்.
"டேய் ராகவா! வாணலியில எண்ணெய் வச்சு, பத்துப் பதினைஞ்சு அப்பளம் பொறிச்சுடு. பொரியல், கூட்டுன்னு வகை வகையாச் செஞ்சிருஞ்சாலும், அப்பளம் பொரிக்கலியான்னு கேப்பாங்க!" என்றான் சதாசிவம், சமையலில் தனக்கு உதவிக் கொண்டிருந்த தன் தம்பி ராகவனிடம்.
சாப்பிட்டு முடித்ததும், குடும்பத்துடன் வெளியே கிளம்பத் தயாரான சசிசேகர், "நாலு மணிக்கு வந்துடுவோம். ஏதாவது ஸ்வீட், அப்புறம் பஜ்ஜி இல்லேன்னா போண்டா செஞ்சு வச்சுடு. சாப்பிட்டுட்டு மறுபடி சைட் சீயிங்குக்குப் போகணும்!" என்றான்.
'மூணு நாளா இதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கீங்க? சாப்பிடறது, ஊர் சுத்தறது!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சதாசிவம், "சரி சார்!" என்றான்.
மறுநாள், சசிசேகரின் குடும்பம் ஊருக்குக் கிளம்பியது.
அவர்கள் கிளம்பிச் சென்றதும், "அப்பா! ஒழிஞ்சாங்க. நாலு நாளா என்ன பாடு படுத்திட்டாங்க! என்ன ஒரு தீனி, என்ன ஒரு அதிகாரம், ஆர்ப்பாட்டம்!" என்று ராகவனிடம் அலுத்துக் கொண்ட சதாசிவம், "நல்ல வேளை, இந்த சமயத்தில நீ ஊரிலேந்து வந்தது நல்லதாப் போச்சு. இல்லேன்னா, என் பாடு திண்டாட்டமா ஆகி இருக்கும்!" என்றான்.
"ஏண்ணே! நீ இந்த வீட்டுக்கு வாட்ச்மேன்தானே? சமையல் வேலையையும் நீயேதான் பாக்கணுமா? அதுக்கு வேற ஆள் வைக்க மாட்டாங்களா?" என்றான் ராகவன்.
"இங்கே விருந்தாளிகள் யாராவது வரப்ப, சமையல்காரர் ஒத்தர் வந்து அவங்க இருக்கற வரைக்கும் ரெண்டு மூணு நாள் சமையல் வேலை செஞ்சுட்டுப் போவாரு. இந்தத் தடவையும் அவர்கிட்ட சொல்லி இருந்தேன். ஆனா, அவர் திடீர்னு ஊருக்குப் போயிட்டாரு. அதனாலதான், நானே சமையல் பொறுப்பையும் எடுத்துக்கிட்டேன்" என்றான் சதாசிவம்.
"இது நீயா வரவழைச்சுக்கிட்டதுதானே? சமையலுக்கு ஆள் கிடைக்கலேன்னு சொல்லி, ஓட்டல்லேந்து சாப்பாடு வரவழைக்க ஏற்பாடு செஞ்சிருக்கலாமே!"
"செஞ்சிருக்கலாம். 'குழந்தைகள்ளாம் இருக்காங்க, அதனால, ஓட்டல்லேந்து வரவழைக்க வேண்டாம், உன்னால முடிஞ்ச அளவுக்கு நீயே சமையல் செஞ்சுடு'ன்னு முதலாளி ஃபோன்ல சொன்னாரு. நான் நல்லா சமைப்பேன்னு அவருக்குத் தெரியும். அதனால சரின்னு ஒத்துக்கிட்டேன், ஆனா, இவங்க இப்படி ஒரு தீனிப் பண்டாரங்களா இருப்பாங்கன்னு எதிர்பார்க்கல!" என்றான் சதாசிவம், வந்திருந்தவர்கள் கொடுத்த தொல்லைகள் ஏற்படுத்திய எரிச்சல் அடங்காதவனாக.
"முதலாளி ஃபோன் பண்ணிச் சொன்னாரா? அப்படின்னா, வந்தவங்க உன் முதலாளி இல்லையா?"
"அவர் எங்கே இங்க வராரு? ஊட்டியில இந்த வீட்டை வாங்கினப்பறம், முதலாளியும், அம்மாவும் ஒரு தடவை இங்கே வந்தாங்க. அப்புறம் அவங்க வரவே இல்ல. ஆனா, வருஷா வருஷம் சீசன்போது சொந்தக்காரங்க, நண்பர்கள்னு யாராவது வருவாங்க. இப்ப வந்துட்டுப் போனவங்களும் ஏதோ சொந்தம்தான். இது ஒரு விருந்தினர் மாளிகையாவே ஆயிடுச்சு!"
"ஏன், உன் முதலாளியும் அவங்க குடும்பமும் வரதில்ல?"
"என்னத்தைச் சொல்ல? ஊட்டியில சொந்த வீடு இருந்தும், இங்க வந்து கொஞ்சநாள் இருக்க அவங்களுக்குக் கொடுப்பினை இல்ல போலருக்கு. ரெண்டு பேருக்குமே உடம்பு சரியில்ல. அதனால, சென்னையில இருக்கற அவங்க வீட்டை விட்டு அவங்க எங்கேயும் போறதில்ல. நல்ல சாப்பாடு கூடச் சாப்பிட முடியாதுன்னு நினைக்கறேன். அவங்களோட ரெண்டு பிள்ளைங்களும் எங்கேயோ வெளிநாட்டில இருக்காங்க. இங்கே வரதே இல்லையாம். ஃபோன்ல பேசறதோட சரின்னு கேள்விப்பட்டேன்.
"ஐயா, அம்மா ரெண்டு பேரும் தங்கமானவங்க. பணம் காசு நிறைய இருக்கு. ஆனா எதையும் அனுபவிக்க முடியாம, வாய்க்கு ருசியாச் சாப்பிடக் கூட முடியாம, ரெண்டு பேரும் வீட்டோட அடைஞ்சு கிடக்காங்க.
"இங்கே எல்லாம் சரியா இருக்கான்னு பாக்க, வருஷத்துக்கு ஒரு தடவை ஒரு மானேஜர் வருவாரு. அவர் சொல்லித்தான் இதெல்லாம் எனக்குத் தெரியும். யார் யாரோ இங்கே வந்து இந்த வீட்டை அனுபவிச்சுட்டுப் போறாங்க. ஆனா, முதலாளி குடும்பத்தால இந்த சொத்தை அனுபவிக்க முடியல. இது மாதிரி இன்னும் எத்தனை சொத்து இருக்கோ அவங்களுக்கு!" என்றான் சதாசிவம், உண்மையான வருத்தத்துடன்.
குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
No comments:
Post a Comment