About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, March 30, 2020

319. பாலியல் புகார்

கங்காதரனின் அந்தரங்க உதவியாளர் ரேணுகா அவர் மீது கொடுத்திருந்த பாலியல் புகார் மீது முதல் கட்ட விசாரணை நிறுவனத்தின் 
சி இ ஓ வின் அறையில் நடைபெற்றது. 

வழிகாட்டல் முறைப்படி சி இ ஓ, நிறுவனத்தின் ஒரு பெண் அதிகாரி இவர்களைத் தவிர, ஒருவெளி நபராக ஒரு தன்னார்வ நிறுவனத்தின் அதிகாரி ஆகிய மூவர் கொண்ட குழு விசாரணை  நடத்தியது.

புகார் கொடுத்த ரேணுகாவும், அவர் சார்பாக வாதாட பெண் உரிமை ஆக்டிவிஸ்ட் என்று அழைக்கப்பட்ட லதா என்ற பெண்மணியும் வந்திருந்தனர். கங்காதரன் தன் சார்பாக வாதிட யாரையும் வைத்துக் கொள்ளவில்லை.

லதா புகாரின் விவரங்களை சுருக்கமாகத் தெரிவித்தார்.

"மிஸ்டர் கங்காதரனுக்கு ஆரம்பத்திலேந்தே ரேணுகா மேல ஒரு கண் இருந்திருக்கு. அவருக்கு மானேஜரா பதவி உயர்வு கிடைச்சதும், அலுவலகத்திலிருந்த நாலு பெண் ஸ்டெனோக்கள்ள ரேணுகாவைத் தன்னோட அந்தரங்கச் செயலாளரா நியமிச்சுக்கிட்டிருக்கார். 

"அடிக்கடி அவங்க கிட்ட விஷமத்தனமா பேசறது, தெரியாம மேல கை படற மாதிரி தொடுவது மாதிரி பல சில்மிஷங்கள் செஞ்சிருக்கார். 

"ஒரு நாள் முக்கியமான கடிதம் டிக்டேட் செய்யறதாச் சொல்லி, அவங்களை அறைக் கதவை சாத்தித் தாளிடச் சொல்லி இருக்காரு. அவங்களும் அப்பாவித்தனமா கதவைச் சாத்தி இருக்காங்க. 

அப்பத்தான் அவர் ரேணுகாவைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செஞ்சிருக்காரு. ரேணுகா தன்னை விடுவிச்சுக்கிட்டு கதவைத் திறந்துக்கிட்டு அழுது கிட்டே வெளியே ஓடியிருக்காங்க. இதை அலுவலகத்தில எல்லாரும் பாத்திருக்காங்க." 

"நீங்க என்ன சொல்றீங்க, கங்காதரன்?" என்றார் சி ஈ ஓ.

"சார்! ரேணுகா கிட்ட நான் எப்பவும் தப்பாப்  பேசினது இல்ல. அவளைத் தொட்டதும் இல்லை..." என்று ஆரம்பித்தான் கங்காதரன்.

"சார்! ஒரு பெண் ஊழியரை அவள் இவள்ன்னு பேசறதே தப்பு. இதுவே ஒருவித வன்முறைதான்!" என்றார் லதா.

"ஐ ஆம் சாரி! என்னை விட வயசில சின்னவங்கறதால அவளை - சாரி அவங்களை -  நான் வா, போ ன்னுதான் பேசுவேன். அதனால்தான் அவன்னு சொல்லிட்டேன். மறுபடியும் சாரி!" என்றான் கங்காதரன். 

தானும் தனக்காக வாதாட ஒருவரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது என்று அப்போது அவனுக்குத் தோன்றியது.

"நாலு ஸ்டெனோக்கள்ள ரேணுகாவை நான் தேர்ந்தெடுத்தது ரேண்டமாத்தான். நாலு பேர்ல யாரைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் ஏன் குறிப்பிட்ட ஒருத்தரைத் தேர்ந்தெடுத்தேன்னு கேட்க முடியும்! இதுக்கு என் கிட்ட பதில் இல்ல. 

"ரேணுகா அடிக்கடி ஃபோன்ல யார்கிட்டயாவது பேசிக்கிட்டிருப்பாங்க. அதை நான் கண்டிச்சிருக்கேன். அவங்களோட டைப்பிங்கில் நிறையத் தப்பு இருக்கும். நிறைய தடவை கடிதங்களை ரீடைப் பண்ணச் சொல்லி இருக்கேன்.

"இதனால எல்லாம் அவங்களுக்கு என் மேல கோபமா இருக்கலாம். ஒரு தடவை அவங்களை வேற செக்‌ஷனுக்கு அனுப்பிட்டு நான் வேற ஒரு ஸ்டெனோவை என் உதவியாளரா வச்சுக்கப் போறதா சொன்னேன். 

"அவங்க தன்னை இப்ரூவ் பண்ணிக்கணுங்கறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். அதில அவங்க அப்செட் ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம்தான் என் மேல ஒரு பொய்யான புகாரைக் கொடுத்திருக்காங்க."

"நீங்க அவங்களை அறைக்கதவை உள்பக்கமா பூட்டச் சொன்னது?" என்றார் தன்னார்வ நிறுவனத்தின் அதிகாரி.

"சார்! நான் அப்படிச் சொல்லல. அவங்களே பூட்டி இருக்காங்க. அது எனக்குத் தெரியாது. திடீர்னு தலை, உடையை எல்லாம் கலைச்சுக்கிட்டு கதவைத் திறந்துகிட்டு வெளியே போனாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. வெளியில போய் அழுது கிட்டே என்னைக் கை காட்டி மத்தவங்க கிட்ட ஏதோ சொன்னாங்க. அப்புறம்தான் அவங்க இப்படி ஒரு டிராமா போடறதே எனக்குப் புரிஞ்சுது!" என்றான் கங்காதரன்.

"பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணோட பதட்டத்தை டிராமான்னு கொச்சைப் படுத்தாதீங்க, மிஸ்டர் கங்காதரன்!" என்றார் லதா.

ங்காதரன் வெளியே வந்ததும் அங்கே நின்றிருந்த சேது அவனிடம் வந்தான்.
"என்ன ஆச்சு, கங்காதரா?" என்றான் பரிவுடன்.

"ஷோ இன்னும் நடந்துக்கிட்டிருக்கு. இப்ப ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக்!" என்றான் கங்காதரன் வெறுப்புடன். "இப்படியா ஒருத்தி போய் சொல்லுவா?"

"கவலைப்படாதே கங்காதரா! உனக்கு ஒண்ணும் ஆகாது!" என்றான் சேது ஆறுதலாக.

கங்காதரன் சேதுவின் முகத்தைப் பார்த்தான்.

அந்த நிறுவனத்தில் கங்காதரனுக்கு முன்பே வேலையில் சேர்ந்தவன் சேது. வேலையில் மிகவும் திறமையானவன். ஆனால் நேர்மையும், பிடிவாத குணமும் உடையவன். தன் மூத்த அதிகாரிகள் சொன்னதெற்கெல்லாம் ஆடாமல், முறைப்படியும், விதிகளின்படியும் எது சரியோ அதையே செய்ய வேண்டும் என்று உறுதியாக இருப்பவன். இதனாலேயே மேலதிகாரிகளுக்கு அவன் மீது கொஞ்சம் அதிருப்தி உண்டு. 

வேலையில் சேர்ந்ததுமே இதைப் புரிந்து கொண்ட கங்காதரன் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டான். மேலதிகாரிகளிடம் சேதுவைப் பற்றிப் பல தவறான செய்திகளைச் சொல்லி சேதுவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் தந்திரமாக ஈடுபட ஆரம்பித்தான். 

தன் மேலதிகாரிகளைப் பற்றி சேது தன் சக ஊழியர்களிடம் அவதூறான கருத்துக்களைப் பரப்புவதாக கங்காதரன் ஜோடித்த கதைகள் சேதுவின் மீது  ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த அவன் மேலதிகாரிகளிடம் அவன் மீது தவறான கருத்து உருவாக வழி செய்தன.

இதனால் சேதுவை முந்திக் கொண்டு பதவி உயர்வு பெற்று கங்காதரன் நிறுவனத்தின் பதவிப் படிக்கட்டில் மேலே வந்து விட்டான். இதை அறியாத சேது இன்னும் கங்காதரனிடன் நட்புடன் இருந்து வந்தான். 

"நீ நிச்சயம் இதிலேந்து குற்றமில்லாதவனாக வெளியே வருவே. பொய்யான விஷயங்களைச் சொல்லி ஒத்தரைத் தப்பானவரா ஆக்கி விட முடியுமா என்ன?" என்றான் சேது. 

'உன்னை நான் ஆக்கி இருக்கேனே! அதனாலதான் எனக்கு இப்படி நடக்குதோ என்னவோ!' என்று நினைத்துக் கொண்டான் கங்காதரன்.    

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்..

பொருள்:
முதலில் ஒரு சமயம் பிறருக்கு நாம் துன்பம் விளைவித்தால், பிற்காலத்தில் நமக்குத் துன்பம் வந்து சேரும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்














Saturday, March 28, 2020

318. எலித்தொல்லை

அந்தக் குடியிருப்பில் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கழிவு நீர்க் குழாய்கள் அடைத்துக் கொள்வது என்பது ஒரு தொடர்கதையாக இருந்து வந்தது.

ஒவ்வொரு முறை அடைப்பைச் சரி செய்யும்போதும், அடைப்பை நீக்கிய தொழிலாளி, "சார்! எலி வலை தோண்டி கல்லு, சிமெண்ட்டையெல்லாம் அரிச்சுப் போடறதால தண்ணி போற இடங்கள்ள அடைப்பு ஏற்படுது!" என்பார்.

சென்ற முறை அடைப்பைச் சரி செய்தபோது, சரி செய்த தொழிலாளியிடம், "ஏன் இப்படித் திரும்பத் திரும்ப நடக்குது?" என்று கேட்டார் குடியிருப்புக் சங்கச் செயலாளர் துரைசாமி. 

"சார்! ஒவ்வொரு முறையும் கல்லையெல்லாம் எடுத்து சுத்தம் பண்ணிட்டு, உடைஞ்ச இடங்கள்ள சிமெண்ட் போட்டுட்டுத்தான் போறேன். ஆனா மறுபடி எலி வந்து அரிச்சிடுது. தரையெல்லாம் பழசாப் போயிட்டதால எலி சுலபமா தரையை உடைச்சுடுது!" என்றான் அந்த ஆள்.

"அப்படின்னா தரையெல்லாம் புதுசாப் போட்டா இந்த பிரச்னை வராதா?"  என்றார் துரைசாமி.

"இல்ல சார்! நீங்க புதுசாத் தரை போட்டாலும், பக்கத்துல காலி மனை இருக்கறதால எலி சுலபமா வலை போட்டு உள்ளே வந்துடும்" என்றான் அவன்.

துரைசாமி குடியிருப்புச் சங்க உறுப்பினர்களை அழைத்து பிரச்னையைச் சொன்னார்.

"என்னோட சொந்தக்காரங்க இருக்கற இன்னொரு குடியிருப்பில் இது மாதிரி பிரச்னை இருந்தது. அவங்க ஒரு ஆளை வச்சு சரி பண்ணிட்டாங்க. அந்த ஆளை வரச் சொல்றேன். அவன்கிட்ட பேசிப் பாக்கலாம்" என்றார் சபாபதி என்ற உறுப்பினர்.  

இரண்டு நாட்களில் சபாபதி ஒரு ஆளை அழைத்து வந்து  துரைசாமியிடம் அறிமுகப்படுத்தினார். அவன் அடைப்பு ஏற்படும் இடத்தைப் பார்த்து விட்டு, "சார்! இது மாதிரி திரும்பத் திரும்ப நடக்கத்தான் செய்யும். இதுக்கு ஒரே வழி எலியால ஓட்டை போட முடியாம செய்யறதுதான்!" என்றான்.

"அதை எப்படிச் செய்யறது?" என்றார் துரைசாமி.

"இந்த இடத்தில சிமெண்ட்ல கண்ணாடித் தூளைக் கலந்து பூசிட்டா, எலி வாயால ஓட்டை போடறப்ப கண்ணாடித் தூள் அது வாயில குத்தி வாயைப்  புண்ணாக்கிடும். அப்புறம் எலி ஓடிடும்!" என்றான்.

"கடவுளே!" என்றார் துரைசாமி.

"என்ன சார்?" என்றார் சபாபதி.

"கண்ணாடித் தூள் எலியோட வாயில குத்தறப்ப எலிக்கு எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாத்தேன்!"

"அதைப் பத்தி நமக்கென்ன சார்? எலிக்கு வலிக்குமேன்னு நாம பாக்க முடியுமா?" என்றார் சபாபதி. 

"இல்ல. இது ரொம்பக் கொடுமை. கண்ணாடித் தூளை  நாம கடிச்சா எப்படி இருக்கும்! எலி அந்தக் கண்ணாடித் தூளைக் கடிச்சா அது எப்படி வேதனையால் துடிக்கும்னு நினைச்சுப் பாக்கவே பயமா இருக்கு. கண்ணாடித் தூள் எலியோட வயித்துக்குள்ள கூடப் போயிடலாம். நினைக்கவே பயங்கரமா இருக்கு!" என்றார் துரைசாமி.

"எவ்வளவோ வீட்டில இது மாதிரி நான் செஞ்சிருக்கேன் சார்! சில சமயம் எலி வாயில ரத்தம் வழிஞ்சு செத்துக் கூடக் கிடைக்கும். ஆனா இந்த பிரச்னை அப்புறம் வராது!" என்றான் அந்த ஆள்.

துரைசாமி பதில் சொல்லாமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.

"சரி. அப்புறம் சொல்றோம். உன் ஃபோன் நம்பர்தான் எங்கிட்ட இருக்கே!" என்று சொல்லி அந்த ஆளை அனுப்பி வைத்தார் சபாபதி.

அவன் சென்றதும்,"சார்! இது பொது விஷயம். உங்க தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இங்க இடம் இல்லை. நம்ப அபார்ட்மெண்ட்ஸோட நலனுக்காக நாம இதைச் செஞ்சுதான் ஆகணும்" என்றார் சபாபதி சற்றுக் கடுமையான குரலில். 

"என்னால முடியாது. நான் ராஜினாமா பண்ணிடறேன். வேற யாராவது பொறுப்பு எடுத்துக்கிட்டு செஞ்சுக்கங்க. அப்பவும், ஒரு உறுப்பினர்ங்கற முறையில இந்தக் கொடுமையான காரியத்தை நான் எதிர்ப்பேன்! அவன் சொன்னதைக் கேட்டதே என் மனசை என்னவோ செய்யுது. இப்படி ஒரு கொடுமையைச் செய்ய எப்படித்தான் மனசு வருதோ!" என்றார் துரைசாமி.  

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

பொருள்:
தனக்குத் துன்பம் விளைவிக்கக் கூடியவை இவை என்று உணர்ந்தவன் மற்ற உயிர்களுக்கு அந்தத் துன்பத்தை ஏன் செய்ய வேண்டும்?
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்









Sunday, March 15, 2020

317. "குற்றமுள்ள" நெஞ்சம்!

சுவாமி சதானந்தரிடம் தனியே பேச வாய்ப்புக் கிடைத்ததும், கிருஷ்ணன் முதலில் சற்றுத் தயங்கினார்.

"சொல்லுங்கள்!" என்று அவரை ஊக்குவித்தார் சதானந்தர். 

"கிறிஸ்துவ மதத்தில் பாவ மன்னிப்பு என்ற ஒரு விஷயம் இருக்கிறது. ஆனால் நம் மதத்தில் அப்படி இல்லையே!" என்றார் கிருஷ்ணன். 

"ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். நம் மதத்தைப் பொறுத்தவரை பாவத்துக்கான பலனை இந்த ஜன்மத்திலோ அடுத்த ஜன்மத்திலோ அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆயினும் கடவுளிடம் பக்தி செலுத்தினால் நாம் செய்த பாவங்கள் அழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்றார் சுவாமி சதானந்தர்.

கிருஷ்ணன் மௌனமாக இருந்தார்.

"உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் செய்ததாக நினைக்கும் பாவத்தை என்னிடம் சொல்லுங்கள். என்னால் பாவ மன்னிப்பு கொடுக்க முடியாது. ஆனால் என்னிடம் பகிர்ந்து கொள்வதால் உங்களுக்குச் சற்று ஆறுதல் கிடைக்கலாம். என்னிடம்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. உங்கள் நெருங்கிய  நண்பர்கள் யாரிடமாவது சொன்னாலும் சரிதான்!" என்றார் சதானந்தர்.  

"இல்லை சுவாமி. உங்களிடமே சொல்கிறேன்" என்றார் கிருஷ்ணன் 

ப்போது கிருஷ்ணன் ரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். சதீஷ் என்ற ஒரு இளைஞனும் அங்கே பணியாற்றி வந்தான். கிருஷ்ணன் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என்றாலும், சதீஷ் அதிகம் படித்தவன் என்பதால் வயதில் குறைவானவனாக இருந்தாலும் பதவியில் அவருக்குச் சமமான நிலையில் இருந்தான்.

அந்தத் தொழிற்சாலையின் மேலாளராக இருந்தவர் சில மாதங்களில் ஒய்வு பெற இருந்தார். இயல்பாக அவர் இடத்துக்கு கிருஷ்ணன்தான் நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால் வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவனான சதீஷ் அதிகம் படித்தவன் என்பதால் அந்தப் பதவிக்கு அவன் நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் இருந்தது.

நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒய்வு பெறப் போகும் மேலாளர் யாரைப் பரிந்துரைப்பார் என்பதும் புரியவில்லை. 

ஒருவேளை தான் புறக்கணிக்கப்பட்டு, சதீஷ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டால் அது தனக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என்று கிருஷ்ணன் நினைத்தார். 

தான் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சதீஷுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்படுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கிருஷ்ணன் யோசனை செய்து கொண்டிருந்தபோது ஒரு எதிர்பாராத வாய்ப்பு கிருஷ்ணனுக்குக் கிடைத்தது. 

ரு நாள் கிருஷ்ணனுக்கு இரண்டாவது ஷிஃப்ட் இருந்தது. முதல் ஷிஃப்டுக்கு சதீஷ்தான் பொறுப்பு. கிருஷ்ணன் சற்று முன்னதாகவே தொழிற்சாலைக்கு வந்து விட்டார். முதல் ஷிஃப்ட் இன்னும் முடியவில்லை.

கிருஷ்ணன் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது அவர்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ரசாயனப் பொருட்களை ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்புவதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். 

லாரியில் ஏற்றப்பட்டிருந்த மூட்டைகளை யதேச்சையாகப் பார்த்த கிருஷ்ணனுக்கு எதோ தவறாக இருப்பதாகப் பட்டது. லாரிக்கு அருகில் சென்று பார்த்தபோது, முதல் நாள் நடந்த தரக்கட்டுப்பாட்டுச் சோதனையின் போது நிராகரிக்கப்பட்டு, மீண்டும் ப்ராசஸ் செய்யப்படுவதற்காகத் தனியே வைக்கப்பட்டிருந்த ஐந்து மூட்டைகளைத் தவறுதலாக லாரியில் ஏற்றி விட்டார்கள் என்பதை அவர் கவனித்தார். 

அந்த மூட்டைகள் மீது 'தரக் கட்டுப்பாடு சோதனையில் தேறவில்லை' என்ற லேபிள் ஒட்டப்பட்டிருந்தும், யாருடைய கவனக்குறைவாலோ அந்த மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு விட்டன.

அந்தத் தவறுக்கு சதீஷ்தான் பொறுப்பு. வாடிக்கையாளருக்கு மூட்டைகள் சென்றபின், அவை தரக்கட்டுப்பாட்டு சோதனையில் நிராகரிக்கப்பட்டவை என்பது மூட்டையின் லேபிளைப் பார்த்ததுமே வாடிக்கையாளருக்குத் தெரிந்து விடும்.

வாடிக்கையாளர் இது பற்றிப் புகார் செய்ததும், அதற்குப் பொறுப்பு சதீஷ்தான் என்று தெரிந்து விடும். அதற்குப் பிறகு அவன் வேலையில் தொடர்வதே சந்தேகம். பதவி உயர்வு அவனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. 

தானாகவே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றிக் கிருஷ்ணன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.  

கிருஷ்ணன் கூறிய கதையைக் கேட்ட சதானந்தர், "நீங்களாக வலுவில் சென்று அவருக்குத் தீங்கிழைக்காவிட்டாலும் ஒரு தவறு நடந்திருப்பது தெரிந்து, அதைத் தடுக்காமல் விட்டது சதீஷுக்கு மட்டும் இல்லை, உங்கள் நிறுவனத்துக்குக் கூட நீங்கள் செய்த தீங்குதான்!" என்றார்.

"நானும் அப்படித்தான் நினைத்தேன்!" என்றார் கிருஷ்ணன்.

"நீங்கள் செய்தது பாவம் என்றாலும், அதைப் பாவம் என்று உணர்ந்து வருந்துவது உங்களிடம் இருக்கும் நல்ல இயல்பைக் காட்டுகிறது!" என்றார் சதானந்தர்.

"இல்லை சுவாமிஜி. அது ஒரு பாவம் என்று அப்போதே நான் உணர்ந்ததால்தான் அதைச் செய்யவில்லை!" என்றார் கிருஷ்ணன்.

"செய்யவில்லையா?" என்றார் சதானந்தர் வியப்புடன்.

"ஆமாம் சுவாமிஜி. அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது தவறு என்று உடனே உணர்ந்து, சதீஷிடம் விஷயத்தைச் சொன்னேன். அவன் உடனே அந்த ஐந்து மூட்டைகளை லாரியிலிருந்து இறக்கச் செய்து, நல்ல மூட்டைகளை ஏற்ற வைத்து விட்டான். நடக்க இருந்த தவறு தடுக்கப்பட்டது. சதீஷ் எனக்கு மிகவும் நன்றி சொன்னான்."

"பின்னே, பாவம் செய்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு உண்டா என்றும் கேட்டீர்களே?" என்றார் சதானந்தர் குழப்பத்துடன்.

"என்ன சுவாமிஜி  இது? இப்படி ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியதே பாவம் இல்லையா? அப்போது என் மனது கொஞ்சம் வேறு மாதிரி நினைத்திருந்தால் நான் அதைச் செய்திருப்பேனே! இப்படி ஒரு எண்ணம் தோன்றியதே என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது" என்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சதானந்தர், "சந்நியாசிகள் மற்றவர்களை வணங்கக் கூடாது. இல்லாவிட்டால் நான் உங்கள் காலில் விழுந்து வணங்கி இருப்பேன்! மனதில் ஒரு தவறான எண்ணம் தோன்றியதற்கே, தீங்கு செய்து விட்டதாக நினைத்து வருந்தும் நீங்கள் மிகவும் உயர்ந்தவர்!" என்றார்.    

அறத்துப்பால் 
    அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

பொருள்:
எப்போதும், யாருக்கும், மிகச் சிறிய துன்பத்தைக் கூட மனத்தாலும் விளைவிக்காமல் இருப்பது சிறந்தது.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்












Thursday, March 5, 2020

316. அன்று நடந்தது, ஆவி துடித்தது!


"போன மாசம் எப்படியோ சமாளிச்சுட்டோம். இந்த மாசம் ரொம்ப கஷ்டம்!" என்றார் மணி.

தன் பார்ட்னரைக் கவலையுடன் பார்த்த சாரதி, "இந்த மாசம் புதுசா ஆர்டர் வரும்னு எதிர்பாக்கறோமே!" என்றார்.

"இல்ல சாரதி. நடக்கற மாதிரி தெரியல. மார்க்கெட்ல யாரைப் பாத்தாலும் புலம்பறாங்க. இப்படி ஒரு ரிஸஷன் இதுக்கு முன்னால வந்ததே இல்லைங்கறாங்க. நிறைய பேரு தொழிலையே நிறுத்திட்டாங்க. மீதி இருக்கறவங்களும் தொழிலாளர்கள்ள நிறையப் பேரை வீட்டுக்கு அனுப்பிட்டு ஒரு சில பேரை மட்டும் வச்சிக்கிட்டு சமாளிச்சுக்கிட்டிருக்காங்க. பெரிய நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு செஞ்சிருக்காங்க. நீதான் ஒரு தொழிலாளரைக் கூட வீட்டுக்கு அனுப்பக் கூடாதுன்னு உறுதியா இருக்க!" என்றார் மணி.

சாரதி பதில் சொல்லவில்லை. மணியின் பேச்சு அவர் காதில் விழுந்ததா என்று கூடத் தெரியவில்லை. அவர் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சாரதி ஒரு நிறுவனத்தில் உதவியாளராகப் பணி செய்து கொண்டிருந்த நேரம் அது.

நன்றாக நடந்து கொண்டிருந்த அந்த நிறுவனம் சிறிது சிறிதாகத் தொய்வடைந்து ஒரு கட்டத்தில் ஒரேயடியாக இழுத்து மூடப்படும் நிலை வந்தது. 

சாரதி உட்படப் பல ஊழியர்கள் வேலை இழந்தனர். 

அதற்குப் பிறகு வேறொரு நிலையான வேலை கிடைக்கும் வரை சாரதி பட்ட துன்பங்கள்! 

குடும்பத்துக்கு அடுத்த வேளை உணவுக்கு வழி செய்ய முடியுமா என்று தவித்த நாட்கள் எத்தனை!

எத்தனையோ முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து, அப்படிச் செய்து கொண்டால் தன் குடும்பம் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாகும் என்று உணர்ந்து ஒவ்வொரு முறையும் அந்த எண்ணத்தைக் கை விட்டிருக்கிறார்.

மூன்று வருடங்கள் கழித்து ஒரு நிலையான வேலை கிடைத்து, அவர் வாழ்க்கை மீண்டும் துளிர்த்ததும், சில ஆண்டுகள் கழித்துத் தன் நண்பன் மணியுடன் சேர்ந்து சிறிய அளவில் ஒரு தொழில் தொடங்கி அது ஒரு சில ஆண்டுகளில் நன்கு வளர்ச்சி பெற்றதும் வேறு கதை.

ஆயினும், வேலை இழந்த பின் தான் அனுபவித்த வேதனைகளை அவரால் எப்படி மறக்க முடியும்?.

"இல்லை! எனக்கு வந்த மாதிரி கஷ்டம் வேற யாருக்கும் வரக்கூடாது!" என்று கூவினார் சாரதி.

"சாரதி, என்ன ஆச்சு உனக்கு?" என்றார் மணி.

"இல்லை மணி! தொழிலாளர்கள் கிட்ட சீக்கிரம் வேற வேலை தேடிக்கச் சொல்லி சொல்லுவோம். அவங்களா வேற வேலை கிடைச்சுப் போற வரையிலே நாமா யாரையும் வேலையை விட்டு அனுப்ப வேண்டாம். நாம எப்படியாவது சமாளிப்போம்!" என்றார் சாரதி.

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

பொருள்:
துன்பமானவை என்று தான் கண்டு உணர்ந்தவற்றை ஒருவன் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்