About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, December 18, 2017

115. சங்கம்

தன் சொந்த ஊரிலிருந்து வந்தவர்களை வரவேற்று அமர வைத்தார் ராஜசேகரன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின் ஊர் நிலவரங்களைப் பற்றி விசாரித்தார்.

"நீங்கள்ளாம் ஊரை விட்டு வந்து டவுன்ல வேலை பாக்கறீங்க. அப்புறம் ஊரை யார் பாத்துப்பாங்க?" என்றான் மணி என்ற இளைஞன்.

"அதான் உன்னை மாதிரி இளைஞர்கள் எல்லாம் இருக்கீங்களே! நீங்க பாத்துக்க மாட்டீங்க ஊரை?" என்றார் ராஜசேகரன் சிரித்துக்கொண்டே.

"நாங்க இப்ப ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தோம்!" என்றார் இன்னொருவர்.

"சங்கமா? என்ன சங்கம்?"

"தமிழ்நாட்டிலே நம்ம ஜாதிக்காரங்க கணிசமா இருக்காங்க. ஆனா நாம சிதறி இருக்கறதால நம்மளை யாரும் ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. நாம ஒரு சங்கமா செயல்பட்டா அரசியல் கட்சிங்க நம்மளை மதிச்சு நம்ம கிட்ட வருவாங்க. நாம கேக்கறதைச் செஞ்சு கொடுப்பாங்க" என்றார் மற்றொருவர். 

"நம்ம ஊருக்கு ஏதாவது தேவைன்னா ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கலாமே! எனக்கு ஊர்ல நிலபுலன் எதுவும் இல்லாட்டாலும் ஊர்க்காரியம்னா நானும் உங்களோட வந்து கலெக்டரையோ, மந்திரியையோ, எம் எல் ஏயையோ பாக்கணும்னா பாக்கறேன்" என்றார் ராஜசேகரன்.

"இது ஊர் விஷயம் இல்லீங்க. இது நம்ம ஜாதி விஷயம். நம்ம ஆளுங்களுக்கு நன்மை கிடைக்கணும்கறதுக்காகத்தான் நம்ம ஜாதிக்குன்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். ஊர் ஊராப் போய் நம்ம ஜாதி ஜனங்களையெல்லாம் உறுப்பினரா சேத்துக்கிட்டு வரோம். அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தோம்" என்றான் மணி.

"இங்க பாருங்க. ஏதோ ஒரு ஜாதியில் பொறந்துட்டோம்ங்கறதுக்காக நம்ம ஜாதிப் பழக்கங்களை பின்பத்திக்கிட்டிருக்கேன். வசதிக்காக ஜாதிக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிறோம். மத்தபடி மனுஷங்க எல்லோரும் ஒண்ணுதானே? ஜாதிச்சங்கம் எல்லாம் ஆரம்பிச்சு மனுஷங்களைப் பிரிக்கிறதில எனக்கு சம்மதமில்லை. எல்லோருக்கும் நியாயம் கிடைக்கணும்னு நெனைக்கறதுதானே மனுஷத்தனம்? நம்ம ஜாதிக்கு மட்டும் சில நன்மைகள் வேணும்னு கேக்கறது எப்படி நியாயமா இருக்கும்?"

வந்தவர்கள் சற்று நேரம் அவருடன் விவாதித்து விட்டுக் கோபமாகக் கிளம்பிப் போய் விட்டனர்.

அதற்குப் பிறகு அந்த ஜாதிச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது அவர் காதில் விழும். சில சமயம் பத்திரிகைகளிலும் ஏதாவது செய்தி வரும். ராஜசேகரன் அவை பற்றிப் பட்டுக் கொள்ளாமல் இருந்தார்.

"ப்ப உங்களுக்கு உடம்புல தெம்பு இருந்தது. நல்ல வேலையில இருந்தீங்க. ஓரளவுக்கு வசதியா இருந்தோம். அதனால தைரியமா ஜாதிச்சங்கத்தில சேர மாட்டேன்னு உறுதியா இருந்தீங்க. இப்ப அப்படி இருக்க முடியுமா?" என்றாள் அவர் மனைவி பர்வதம்.

"ஏன் இப்ப மட்டும் யாரு ஜாதிச்சங்கத்தில சேரணும்னு நம்மளை வற்புறுத்தறாங்க?" என்றார் ராஜசேகரன்.

"ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுங்க! இப்ப நீங்க ரிட்டையர் ஆயிட்டிங்க. நீங்க வேற வேலைக்குப் போனாத்தான் நம்மளால காலத்தை ஓட்ட முடியும். உங்களுக்கு வேற வேலை கிடைக்கறது சுலபமா இல்ல, அப்படி இருக்கறப்ப..."

ராஜசேகரன் மௌனமாக இருந்தார்.

அவர் வேலை தேடுவது தெரிந்து அவர் நண்பர் அவரிடம் ஒரு செய்தி சொன்னார். அவருக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் அவருக்கு ஏற்ற வேலை இருக்கிறதாம். ஆனால் அந்த நிறுவன அதிபர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வேலை கொடுப்பாராம். அதுவும் அவர்கள் ஜாதிச்சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டுமாம்!

"நான் அங்க வேலைக்கு முயற்சி பண்ணினேன். அப்ப எனக்குக் கிடைச்ச தகவல் இது. நான் வேற ஜாதிங்கறதால எனக்கு அங்க வேலை கிடைக்காது. ஆனா அந்த நிறுவனத்தோட அதிபர் உங்க ஜாதிக்காரர்தானாம். நீங்க முயற்சி பண்ணினா கிடைக்கும்" என்று அவரிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார்.

அதைத்தான் அவர் மனைவி சொல்லிக் காட்டுகிறாள்!

"யோசிச்சு நல்ல முடிவா எடுங்க. நம்ம நிலைமை சரியில்லாதபோது நாம கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகணும்" என்றாள் பர்வதம்.

"என்ன சொல்றே பர்வதம்? ஒரு விஷயம் தப்புன்னா எப்பவுமே தப்புதான். நாம சரி தப்புன்னு நெனைக்கற விஷயங்களை நம்ம நிலைமைக்கு ஏத்தபடி மாத்திக்க முடியாது" என்றார் ராஜசேகரன்.

"என்னவோ போங்க! உங்களுக்கு யாரு புத்தி சொல்ல முடியும்?" என்று சலித்துக் கொண்டாள் பர்வதம்.
அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள்:  
வாழ்வில் உயர்வும் தாழ்வும் வருவது இயற்கைதான். ஆனால் எந்த நிலையிலும் தன் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதே சான்றோர்க்கு அழகு.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 114
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்























Tuesday, December 12, 2017

114. இறப்புக்குப் பின்...

"இவ்வளவு வருஷம் வேலை செஞ்சு என்ன பிரயோசனம்? பிள்ளைகளுக்கு ஒண்ணும் சொத்து சேத்து வைக்க முடியலியே!" என்றான் ராகவன் தன் மனைவியிடம்.

அவன் மனைவி சரளா எதுவும் சொல்லவில்லை. "இத்தனை வருஷமா நான் சொல்லிக்கிட்டிருந்ததை நீங்க இன்னிக்கு சொல்றீங்களாக்கும்!" என்று மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனால் அந்த சமயத்தில் அப்படிச் சொல்லித் தன் கணவனை அவள் புண்படுத்த விரும்பவில்லை.

ராகவன் வேலையிலிருந்து ஒய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.

ஒய்வு பெற்ற பின் கடந்த இரண்டு வருடங்களாக அவன் வயதை ஒத்தவர்களைப் பார்த்த பிறகுதான், 30 வருடங்கள் வேலை செய்த பிறகும் தான் பெரிதாக ஒன்றும் சேமித்து வைக்கவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது.

30 ஆண்டுகளில் ஐந்தாறு நிறுவனங்களில் பணியாற்றிப் பல ஊர்களில் வாழ்ந்து ஒய்வு பெற்ற பிறகு அவனுக்கு மிஞ்சியது ஒரு சிறிய வீடும், பி எஃப், கிராச்சுவிட்டி என்று வந்த பணமும்தான். அந்தப் பணத்திலும் பெரும்பகுதி பெண்ணின் கல்யாணத்துக்குச் செலவழிந்து விட்டது.

மீதமிருந்த பணத்திலிருந்து வந்த வட்டி ஒன்றுதான் அவர்கள் வருமானம். அந்தப் பணம் அவர்களுக்குப் போதுமானதுதான். அதுவும் அவர்கள் மகன், மருமகள், பேரன் என்று ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதால் அவர்களுக்கென்று தனிச் செலவு கூட இல்லை. ஆயினும்...

அவன் நண்பர்களில் பலர் குறைந்தது இரண்டு வீடுகளாவது வைத்திருக்கிறார்கள். அது தவிர வருடத்தில் ஒரு வாரம் விடுமுறையைக் கழிக்க ரிசார்ட்டில் முதலீடு, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், வங்கி வைப்புகள் போன்ற சொத்துக்கள் வேறு.

சிலர் தங்கள் மகன், மகள் ஆகியோர் வீடு வாங்கப் பல லட்ச ரூபாய்கள் கொடுத்து உதவி இருக்கிறார்கள். ராகவனால் அது முடியாது. அவன் பிள்ளை சதீஷ் கடனில் வீடு வாங்கியபோது, ஒரு லட்ச ரூபாய் கூட அவனால் கொடுத்து உதவ முடியவில்லை. சதீஷ் அதை ஒரு குறையாக நினைத்தானோ என்னவோ ராகவனுக்குத் தெரியாது. ஒருவேளை மருமகளோ, சம்பந்தியோ நினைத்திருக்கலாம்!

எல்லோரும் தங்கள் பெண், பிள்ளைகளுக்கென்று எவ்வளவோ சேமித்து வைத்திருக்கும்போது, தான் மட்டும் தன் மகனுக்கு பாரமாக அவன் வீட்டில் இருந்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்தான்.

இதை அவன் மனைவியிடம் சொன்னபோது, "இப்ப வருத்தப்பட்டு என்ன செய்யறது? சம்பாதிக்கும்போதே நாலு காசு சேத்து வைய்யுங்கன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். எங்கிட்ட பணத்தைக் கொடுத்திருந்தா நானாவது கொஞ்சம் சேத்து வச்சிருப்பேன்!" என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அவள்.

சம்பாதித்த பணமெல்லாம் எங்கே போயிற்று? அவன் ஒன்றும் ஊதாரி இல்லை. குடி, சூதாட்டம் போன்ற பழக்கங்கள் அவனுக்கு இல்லை. குடும்பத்துக்காகச் செலவழித்ததைத் தவிர, அவன் தனக்கென்று எதுவும் செய்து கொண்டதில்லை. திட்டமிட்டுச் சேமிக்காமல் வருமானத்தைச் செலவழித்ததுதான் அவன் செய்த தவறு. இன்ஷ்யூரன்ஸ் கூடப் பெரிய அளவுக்கு எடுக்கவில்லை.

'நான் இறந்த பிறகு என்னைப் பற்றி என் மகனும் மருமகளும் என்ன சொல்வார்கள்? எனக்கு ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை என் அப்பா!' என்று குறைப்பட்டுக் கொள்வானா சதீஷ்? நான் இறந்த பிறகு வரும் சிறிதளவு இன்ஷ்யூரன்ஸ் பணமும், என் சேமிப்பும் மட்டுமே என் மனைவியின் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்குமா?'

ராகவனின் கவலைகள் உண்மையாகுமா என்று தெரியும் காலம் வந்தது. தூங்கப் போனவன் காலையில் எழுந்திருக்கவில்லை. "தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பார்" என்றார் டாக்டர்.

ராகவன் இறந்த விவரம் தெரிந்ததும் பலர் வந்து பார்த்தனர். ராகவனுக்குத் தெரிந்தவர்கள் இத்தனை பேர் இருப்பார்களா என்று சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

"அப்பாவோட ஆபிச்சுவரியை பேப்பர்ல கொடுக்கணும். சென்னை எடிஷன்ல மட்டும் கொடுத்தாப் போதுமா? தமிழ்நாடு எடிஷன்ல கொடுக்கணுமா?" என்று சரளாவைக் கேட்டான் சதீஷ்.

"உங்கப்பா இந்தியா முழுக்கப் பல ஊர்லயும் இருந்திருக்காரு. அதனால ஆல் இந்தியா எடிஷன்லியே கொடுத்துடு" என்றாள் சரளா.

அடுத்த சில நாட்களுக்கு அவர்கள் வீட்டு ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. எங்கெங்கிருந்தோ யார் யாரோ ஃபோன் செய்தார்கள்.

"ராகவன் சார் போயிட்டாரா? ரொம்ப வருத்தமா இருக்கு. அவரை மாதிரி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா? எவ்வளவு நல்லவரு!"

"நான் ஒரு சாதாரண பியூன்தான். எனக்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்து நடத்தினாரு!"

"எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பாரு. யாரையும் ஒரு வார்த்தை கூடத்  தப்பாப் பேசினது கிடையாது."

"ஆஃபீஸ்ல அவருக்குக் குழி பறிச்சவங்க கிட்ட கூட அவரு விரோதம் பாராட்டியது இல்லை. இப்படி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா?"

"எல்லோருக்கும் உதவி செய்வாரு. ஆனா யார்கிட்டயும் ஒரு உதவி கூடக் கேக்க மாட்டாரு. இப்படி ஒரு ஆத்மா!"

இது போன்ற அனுதாபத் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது. ராகவன் ஒரு நல்ல மனிதன் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எல்லோரிடமும் இப்படி ஒரு நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பான் என்று அவளுக்குத் தெரியாது.

நேரிலும் பலர் வந்து அனுதாபம் தெரிவித்தனர். அவர்களும் இதே போன்ற கருத்துக்களைக் கூறினர். அவை உபசாரத்துக்குச் சொன்ன வார்த்தைகள் இல்லை, ஆழ்மனதிலிருந்து வந்தவை என்று சரளாவுக்குப் புரிந்தது.

"உங்கப்பாவைப் பத்தி நிறைய பேர் ஃபோன்ல கேட்டாங்கடா!" என்றாள் சரளா சதீஷிடம்.

"ஆமாம்மா! எனக்கும் செல்ஃபோன்ல நிறைய கால் வந்தது. அப்பா எவ்வளவு பெரிய மனுஷர்! இப்படிப்பட்ட அப்பா கெடச்சதுக்கு நான் ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கணும்" என்றான் சதீஷ்.

அருகிலிருந்த அவன் மனைவி அதை ஆமோதிப்பது போல் புன்னகை செய்தாள்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

பொருள்:  
ஒருவர் உயர்ந்தவரா இல்லையா என்பது அவர் இறந்த பின் அவர் விட்டுச் சென்ற பெயரிலிருந்து அறிந்து கொள்ளப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 113
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Monday, December 11, 2017

113. பிரேக்கிங் நியூஸ்!

"சொல்லுங்க. எங்கிட்ட தனியாப் பேசணும்னு சொன்னீங்களே!" என்றான் 'தினப்பதிவு' பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் அருண்.

"சார்! தப்பா நெனச்சுக்கலைன்னா ஒண்ணு கேக்கலாமா?" என்றான் ரமணன். சமீபத்தில்தான் பத்திரிகையில் சேர்ந்திருந்த துடிப்பு மிக்க இளைஞன் அவன்.

"தயங்காம கேளுங்க."

"இல்லை, நாம நடுநிலைமை வகிக்கிற பத்திரிகை. ஆனா வரப்போற தேர்தல்ல ஆளுங்கட்சியைத் தோக்கடிக்கணும்னு தலையங்கம் எழுதி இருக்கீங்களே! இது முரண்பாடா இல்லியா?"

"நல்ல கேள்விதான். நீங்க புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கிறதனால உங்களுக்குச் சில விஷயங்களைத் தெளிவு படுத்தணும். நாம நடு நிலை வகிக்கிறோம்னா நாம எந்தக் கட்சிக்கும் ஆதரவான பத்திரிகை இல்லை என்று பொருள். ஒரு செய்தி ஒரு கட்சிக்கு சாதகமா இருக்கலாம், இன்னொரு கட்சிக்கு பாதகமா இருக்கலாம். அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம, நாம செய்தியை அப்படியே கொடுக்கிறோம்.

"ஆனா எடிட்டோரியல் பாலிசி வேற. ஒரு கட்சி அல்லது ஆட்சியோட செயல்கள் நல்லா இருந்தா பாராட்டுவோம், இல்லேன்னா, குறை சொல்லுவோம். அது போல தேர்தல் சமயத்தில இப்ப இருக்கிற ஆட்சி எப்படி இருந்தது, அதை மறுபடியும் தேர்ந்தெடுக்கலாமான்னு நம்ம கருத்தைச் சொல்றோம். இப்ப இருக்கற ஆட்சி ரொம்ப மோசமா இருக்கறதுனால, இதைத் தோக்கடிக்கணும்னு சொல்றோம். இப்படிச் சொல்றதனால மறைமுகமா எதிர்க்கட்சியை நாம ஆதரிக்கிற மாதிரி தெரியலாம். ஆனா அது உண்மை இல்லை.

"போன தேர்தலின் போது, இப்ப எதிர்க்கட்சியா இருக்கறவங்கதான் ஆட்சியில இருந்தாங்க. அப்ப அந்த ஆட்சியைத் தூக்கி எறியணும்னுதான் எழுதினோம். மக்களும் அதே மாதிரி நெனச்சு அவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டு இவங்களைக் கொண்டு வந்தாங்க.

"இப்ப இவங்க தோத்தா மறுபடி அவங்கதான் வருவாங்க. ஜனநாயகத்தில் வேற வழி இல்லை. சில சமயம் புதுசா சில சக்திகள் பதவிக்கு வரலாம், ஆனா அவங்களும் ஒழுங்கா ஆட்சி நடத்துவாங்கன்னு சொல்ல முடியாது. அதனால ஒரு ஆட்சி மோசமா இருக்கும்போது அதைத் தூக்கி எறியணும்னு சொல்றதுதான் நியாயம். கடமை கூட. அதுதான் நடுநிலைமை."

"நீங்க சொல்றது எனக்குப் புரியுது சார். ஆனாலும் இப்ப ஆட்சியில இருக்கிற 'தமிழ் மண்' கட்சியை நாம கடுமையா எதிர்க்கிறதாகவும், எதிர்க்கட்சியா இருக்கிற 'சமூக முன்னேற்றக் கட்சி'யை பலமா ஆதரிக்கிறதாகவும் நிறைய வாசகர்கள் நினைக்கிறாங்களே!"

"இது மாதிரி கருத்துக்கள் இருக்கிறது சகஜம்தான். புதுசா வர ஆட்சியும் மோசமாத்தான் இருக்கப் போகுது. அதை நாம கடுமையா விமர்சிக்கும்போது ஜனங்க நம்மளைப் புரிஞ்சுப்பாங்க.... சொல்ல முடியாது. அடுத்த தேர்தல்ல அவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு எழுதினா, நம்மளை 'தமிழ் மண்'ணுக்கு ஆதரவான பத்திரிகைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க! நாம அதைப் பத்திக் கவலைப்படக் கூடாது. செய்திகளை உண்மையா வெளியிட்டு, நம்ம கருத்துக்களை நேர்மையா சொல்லிக்கிட்டிருந்தா, நாம வேற எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம்."

"சார்! மறுபடியும் இந்தக் கருத்தைச் சொல்றேங்கறதுக்காக நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. சமீபத்தில நடந்த பத்திரிகையாளர் ரகுவோட கொலையில ஆளுங்கட்சிக்குத் தொடர்பு இருக்குன்னு நாம எழுதிக்கிட்டிருக்கோம்."

"ஆமாம். அப்படி நினைக்கறதுக்கு நிறையக் காரணங்கள் இருக்கே. ஆளுங்கட்சிக்காரங்க அவரை மிரட்டி இருக்காங்க. அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டும் அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கல. இதையெல்லாம் வச்சுதான் ஆளுங்கட்சி மேல சந்தேகம் இருக்குன்னு நாம சொன்னோம். நாம மட்டும் இல்ல, வேற பல பத்திரிகைகளும் அப்படித்தானே எழுதிக்கிட்டிருக்காங்க?"

"ஆனா நம்ம பத்திரிகைக்கு நம்பகத்தன்மை அதிகமாச்சே சார்! நாம அப்படி சந்தேகப்பட்டு எழுதினா அது உண்மையா இருக்கும்னு ஜனங்களும் நம்புவாங்களே சார்!"

"உண்மைதான். ஆனா நாம ஆதாரம் இல்லாம அவதூறா எழுதலியே? நாம சில கேள்விகளை எழுப்பி இருக்கோம். அந்தக் கேள்விகளுக்கு அரசாங்கத்திலிருந்து சரியான பதில் இல்லியே!"

"இது தேர்தல்ல ஆளுங்கட்சிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் இல்லியா?"

"நிச்சயமா.. ஏற்கெனவே போட்டி கடுமையா இருக்கும்னுதான் கருத்துக் கணிப்புகள் எல்லாம் சொல்லுது. இந்த விவகாரத்தினால ஆளுங்கட்சிக்கு பெரிய சரிவு ஏற்படலாம்."

"ஒருவேளை இந்தக் கொலையில ஆளும் கட்சிக்கு சம்பந்தம் இல்ல, வேற யாரோ செஞ்சிருக்காங்கன்னு ஒரு ஆதாரம் கிடைச்சா, அதை நம்ம பத்திரிகையிலே வெளியிடுவீங்களா சார்?"

"ஏன், உங்ககிட்ட அப்படி ஏதாவது ஆதாரம் இருக்கா?" என்றான் அருண் சிரித்தபடி.

"இருக்கு சார்!" என்றான் ரமணன்.

"சொல்லுங்க" என்றான் அருண் சற்று வியப்புடன்.

"சார்! இது ஒரு பெரிய ஸ்கூப். ரகுவைக் கொலை பண்ணின ஆளை போலீஸ்ல புடிச்சுட்டாங்க. ஒரு தொழிலதிபர் சொல்லித்தான் இந்தக் கொலையைச் செஞ்சதா அவன் ஒப்புத்துக்கிட்டிருக்கான். ஆனா இந்த அரசாங்கத்துக்கு எதிரா இருக்கற சில போலீஸ் உயர் அதிகாரிங்க இந்தக் கைதை ரகசியமா வச்சுருக்காங்க. இந்த விஷயம் வெளியானா, அது தேர்தல்ல ஆளும் கட்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். அதை அவங்க விரும்பல. அதனால அவனை இன்னும் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சுக்கிட்டிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ள தேர்தல் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் இந்த விஷயத்தை வெளியில சொல்லலாம்னு இருக்காங்க."

"மை காட்! இது மட்டும் உண்மையா இருந்தா தேர்தல் முடிவையே பாதிக்குமே! ஆளுங்கட்சிக்கு எதிரா சதி பண்ணி, எதிர்க்கட்சிங்கதான் இப்படி ஒரு பொய்ப் பிரசாரத்தைப் பண்ணி இருக்காங்கன்னு ஜனங்க நினச்சு ஆளும் கட்சிக்கு ஒட்டுப் போட்டுடுவாங்களே! ஆனா இந்த நியூஸ் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"சார்! போலீஸ் இலாகாவிலேயே நாலஞ்சு பேருக்குத்தான் இது தெரியும். அவனைக் கைது பண்ணின சப் இன்ஸ்பெக்டருக்கு இதை மறைச்சு வைக்கறது பிடிக்கல. அவர்தான் எங்கிட்ட சொன்னாரு."

"அவ்வளவுதானா? அதை வச்சு நாம நியூஸ் போட முடியாது, ரமணன், உங்களுக்குத்தான் நம்ம பாலிசி தெரியுமே! ஒண்ணு யாராவது வெளிப்படையா பேட்டி கொடுத்திருக்கணும். அல்லது வேற ஏதாவது ஆதாரம் இருக்கணும். 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார்'னு நாம நியூஸ் போட முடியாது."

"ஆதாரம் இருக்கு சார்."

"என்ன ஆதாரம்?"

"அந்த சப் இன்ஸ்பெக்டர் ரிஸ்க் எடுத்து அந்தக் கைதியைப் பேட்டி எடுக்க என்னை அனுமதிச்சாரு. பேட்டியில அவன் உண்மையை எங்கிட்ட சொல்லியிருக்கான். பேட்டியை ரிக்கார்ட் பண்ணி இருக்கேன். ஃபோட்டோ எடுக்க மட்டும் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அனுமதிக்கல."

"ரிக்கார்ட் பண்ணினதைப் போட்டுக் காட்டுங்க"

ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேட்டியைப் பத்து நிமிடம் அமைதியாகக் கேட்ட பிறகு, "வெரி குட். பெரிய ஸ்கூப்தான் இது. யூ ஹேவ் டன் எ கிரேட் ஜாப்!" என்று பாராட்டினான் அருண்.

"இந்தச் செய்தியை வெளியிடப் போறீங்களா சார்?" என்றான் ரமணன்.

"நிச்சயமா! ஆனா உங்களோட பாதுகாப்பைக் கருதி, நீங்கதான் பேட்டி எடுத்தீங்கங்கறதை இப்ப சொல்லப் போறதில்ல. போலீஸ் மேல குத்தம் சொல்லாம, அதிக விவரங்கள் கொடுக்காம பேட்டியை மட்டும் அப்படியே வெளியிடுவோம். போலீஸ் தரப்புலேருந்து இது உண்மைதான்னு கன்ஃபர்மேஷன் வந்தப்பறம் உங்க பேரை வெளியிடுவோம். அப்ப நீங்க ஒரு பெரிய ஹீரோவாயிடுவீங்க! கங்கிராசுலேஷன்ஸ்."

"ஆனா இந்தப் பேட்டி வெளியானா அது ஆளும் கட்சிக்கு சாதகமாயிடுமே சார்!"

"உண்மைதான். அதுக்காக நமக்குக் கிடைச்சிருக்கிற செய்தியை நாம வெளியிடாம இருக்க முடியாது."

"ரெண்டு நாள்ள தேர்தல் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் வெளியிடலாம் சார். ஓட்டுப்பதிவு முடிஞ்ச அடுத்த நிமிஷமே நம்ம வெப்சைட்டில் போட்டுடலாம்."

"நோ! இந்த ஆட்சி போக வேண்டியதுதான். நாம பேட்டியை வெளியிடறதனால இந்த நல்லது நடக்காம போகலாம். ஆனா இதை வெளியிடாம இருந்தா நாம இத்தனை நாளாக கடைப்பிடிச்சுக்கிட்டு வந்த நியாயம், நடுநிலைமை இதையெல்லாம் காத்தில விட்டுட்ட மாதிரி ஆகும். ஐ வில் நெவர் டூ தட். பேட்டியை வெளியிட்டுட்டு, 'ஆளும்கட்சி மீது சுமத்தப்பட்ட கொலைப்பழி உண்மை இல்லைங்கறதனால இந்த ஆட்சி போக வேண்டியதுதாங்கறதுக்கான மத்த காரணங்கள் மாறல, இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டியதுதான்'னு ஒரு தலையங்கம் எழுதிடலாம். அதற்குப் பிறகு மக்களோட முடிவு!" என்றான் அருண்.

தன் முதன்மை ஆசிரியரைக் கூடுதல் மரியாதையுடன் பார்த்தான் ரமணன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

பொருள்:  
நடுநிலைமை தவறி நடந்து கொள்வதால் நன்மை ஏற்படும் என்ற நிலையிலும், நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 112
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






















Saturday, December 9, 2017

112. சுந்தரலிங்கத்தின் சொத்து

"ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி - தான் போய்
விழுமாம் கழனிப் பானையில் துள்ளி!" என்றாள் தனபாக்கியம்.

தன் அம்மா ஆதங்கத்துடன் இப்படிப் பேசுவதை முருகையன் பலமுறை கேட்டிருக்கிறான்.

அவன் அப்பா சுந்தரலிங்கம் ஊரில் பொருளாதார நிலையில் மிகச் சாதாரணமான மனிதர். சிறிதளவு நிலத்தை வைத்துக்கொண்டு அதில் வரும் குறைந்த வருவாயில் எப்படியோ குடும்பத்தை நடத்தி வந்தவர்.

ஆனால் ஊரார் அவரை ஒரு நீதிமான் என்று மதித்தார்கள். அவருடைய ஊர் மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டத்தில் இருந்த பல ஊர்களிலிருந்தும் பலர் தங்கள் வழக்குகளை அவரிடம் கொண்டு வருவார்கள்.  குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள், கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றத் தவறியது, வரப்புத் தகராறு, தண்ணீர்ப் பங்கீடு என்று பலவிதமான வழக்குகளுக்கும் அவரிடம் நீதி கேட்டு வருவார்கள்.

இரு தரப்பினர் கூறுவதையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களிடம் கேள்விகள் கேட்டு, விளக்கங்கள் பெற்று, நியாயங்களை எடுத்துச் சொல்லி அவர் கொடுக்கும் தீர்ப்பை அநேகமாக எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள். அவருடைய நியாயமான அணுகுமுறையில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவர் தீர்ப்பை ஏற்காமல் நீதிமன்றங்களை நாடியவர்கள் மிகச் சிலரே.

இப்படி ஊருக்கெல்லாம் நியாயம் சொல்பவர், தன் அண்ணன் தன்னை ஏமாற்றித் சொத்தைப் பிடுங்க அனுமதித்து விட்டாரே என்பதுதான் தனபாக்கியத்தின் ஆதங்கம்.

சுந்தரலிங்கம் அவர் பெற்றோருக்கு இரண்டாவது மகன். அவருக்குப் பத்து வயது இருக்கும்போது ஊரில் அவர்களுடைய தூரத்துச் சொந்தக்காரர் ஒருவருக்குக் கொள்ளி போடப் பிள்ளை இல்லை என்பதால் அவர் இறக்கும் தருவாயில் சுந்தரலிங்கத்தை அவருக்குத் தத்துக் கொடுத்தார் அவர் அப்பா.

இது பெயரளவுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். தத்துக்  கொடுத்தபிறகும் சுந்தரலிங்கம் தன் பெற்றோருடன்தான் இருந்தார். அவருடைய சுவீகாரத் தந்தை இறந்ததும் அவருக்குக் கொள்ளி போட்டதுடன் அந்த பந்தம் முடிந்து விட்டது. அவருடைய சுவீகாரத் தந்தைக்கு இருந்த சிறிதளவு நிலமும், ஒரு சிறிய வீடும் அவரது மரணத்துக்குப் பின் சுந்தரலிங்கத்துக்குச் சொந்தம் என்று ஆனது மட்டும்தான் அவருக்குக் கிடைத்த சிறிய நன்மை.

சுந்தரலிங்கத்தின் அண்ணன் குணசேகரன் எஸ் எஸ் எல் சி முடித்த இரண்டு வருடங்களில் அரசாங்க வேலை கிடைத்து தஞ்சாவூருக்குப் போய் விட்டார். சுந்தரலிங்கம் கிராமத்திலேயே இருந்து தன் தந்தையுடன் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டார்.

இருவருக்கும் திருமணம் ஆன சில வருடங்களில் அவர்களுடைய பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட்டனர்.

ஊரில் ஒரு சில பிரச்னைகளை சுந்தரலிங்கம் சுமுகமாகத் தீர்த்து வைத்ததால், பலரும் தங்கள் வழக்குகளை அவரிடம் கொண்டு வர, வழக்குகளை நியாயமாகவும், சமூகமாகவும் தீர்த்து வைக்கக் கூடியவர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. அவரது புகழ் சுற்று வட்டாரங்களிலும் பரவியது.

இதற்காக அவர் பணம் எதுவும் வாங்குவதில்லை. இரு தரப்பினரும் தாங்கள் விரும்பிய தொகையை ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம் என்று அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு கோயில்களுக்கு அவர்கள் கொடுத்த நன்கொடையால் ஊர்க்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள், திருவிழாக்கள் என்று சிறப்பாக இருந்தன..

தஞ்சையிலேயே வாசம் என்று ஆகி விட்ட குணசேகரனுக்கு யாரோ சொல்லிக் கொடுத்த யோசனையின் பேரில் அவர் தன் தம்பிக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். சுந்தரலிங்கம் சுவீகாரம் போய் விட்டதால் அவர்கள் தந்தையின் சொத்துக்களில் அவருக்கு உரிமை கிடையாது என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுந்தரலிங்கம் சிறிது கூடத் தயங்காமல் தன் தந்தையின் சொத்துக்களில் தனக்கு உரிமையில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டார். ஊரில் இருந்த சில விஷயம் அறிந்தவர்கள் "இதெல்லாம் சட்டப்படி செல்லாது. குணசேகரன் கோர்ட்டுக்குப் போனாலும் வழக்கு முடியப் பல வருடங்கள் ஆகும். உங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். ஒருவேளை தீர்ப்பு உங்களுக்கு எதிராக அமைந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்று ஆலோசனை கூறினர்.

ஆனால் சுந்தரலிங்கம் கேட்கவில்லை. "எப்ப என் அண்ணன் இப்படி நினைக்கிறானோ, அதுக்கப்பறம் எனக்கு இந்த சொத்து எதுக்கு?" என்று சொல்லி விட்டார்.

அதற்குப்பிறகு ஊருக்கு வந்த குணசேகரன் சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டபின் நிலங்களை இன்னொருவரிடம் குத்தகைக்கு விட்டு விட்டார்.

சுந்தரலிங்கத்துக்கு அவருடைய சுவீகாரத் தந்தையின் வீடும், சிறிதளவு நிலமும் மட்டுமே சொந்தம் என்று ஆயிற்று. சுந்தரலிங்கம் தன் தந்தையின் பெரிய வீட்டைக் காலி செய்து விட்டுத் தன் சுவீகாரத் தந்தையின் பழைய, சிறிய, உடைந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்தார்.

குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்று ஆகி விட்ட நிலையில், கடன் வாங்கிப் பெண்ணின் திருமணத்தை எப்படியோ நடத்தி விட்டார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் முருகையனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது.

"ஊர்ச்சாமிக்கெல்லாம் சம்பாதிச்சுக் கொடுப்பாரு ஒங்கப்பா. ஆனா ஊர்ச்சாமிக எல்லாம் ஒங்கப்பாவை ஓட்டாண்டியாத்தான் வச்சிருக்காங்க" என்று முருகையனிடம் அங்கலாய்த்துக் கொள்வாள் தனபாக்கியம்.

"அண்ணனுக்கு டி பி வந்து சிங்கிப்பட்டி டி பி ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம். போய்ப் பாக்கணும்" என்றார் சுந்தரலிங்கம்.

"கண்டிப்பாப் போய்ப் பாக்கத்தான் வேணும்! எவ்வளவு நல்லது பண்ணியிருக்காரு ஒங்களுக்கு!" என்றாள் தனபாக்கியம் எகத்தாளமாக.

அடுத்த சில நாட்களுக்கு வெளியூர்களிலிருந்து சிலர் அவரிடம் மத்தியஸ்தத்துக்கு வருவதாக முன்பே சுந்தரலிங்கத்துக்குத் தகவல் தெரிவித்திருந்ததால், அவரால் உடனே தன் அண்ணனைப் போய்ப் பார்க்க முடியவில்லை.

நான்கு நாட்கள் கழித்துப் போகலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் எதிர்பாராமல் அவர் அண்ணன் மகன் சண்முகம் அவரைத் தேடிக்கொண்டு ஊருக்கு வந்து விட்டான்.

முதலில் தன் அண்ணனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று சுந்தரலிங்கம் பயந்தார். ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில்தான் இருப்பதாக சண்முகம் சொன்னான்.

"நான் வந்த விஷயம் வேற..." என்று தயங்கியபடி ஆரம்பித்தான் சண்முகம். "அப்பாதான் என்னை இங்க அனுப்பிச்சாரு... மரணப் படுக்கையில கிடக்கறப்பதான் எங்கப்பாவுக்கு தான் பண்ணின தப்பு புரிஞ்சிருக்கு. ஒங்களுக்குப் பண்ணின துரோகத்தை நினைச்சுப் புலம்பிக்கிட்டே இருக்காரு. ஒங்க சொத்தையெல்லாம் ஒங்க பேரிலே மாத்தி எழுதிக் கொடுக்கறதுக்குத்தான் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து என்னை அனுப்பியிருக்காரு. நான் பத்திரமெல்லாம் எழுதிக் கொண்டு வந்திருக்கேன். நாளைக்கே ரிஜிஸ்தர் ஆஃபீஸ் போய் பத்திரத்தை ரிஜிஸ்தர் பண்ணிடறேன். நீங்க அப்பாவை மன்னிச்சாத்தான் அவரு நிம்மதியா சாவாரு" என்றான்.

"என்னப்பா! இப்படியெல்லாம் சொல்றே! என் அண்ணனை நான் எப்பவுமே தப்பா நினைச்சதில்ல" என்றார் சுந்தரலிங்கம்.

'நல்லவேளை, நாங்களும், எங்க புள்ளைங்களும் வறுமையில விழாம கடவுள்  காப்பாத்திட்டாரு' என்று நினைத்துக் கொண்டாள் தனபாக்கியம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

பொருள்:  
நடு நிலைமையோடு நடந்து கொள்பவனின் செல்வம் அழியாமல் அவன் வாரிசுகளுக்கும் பயனளிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 111
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

























Thursday, December 7, 2017

111. யுதிஷ்டிரனின் வியூகம்

ராஜசூய யாகத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. பல்வேறு வகை மனிதர்களும் யாகத்தைக் காணவும், அதில் பங்கு கொள்ளவும் வந்த வண்ணம் இருந்தனர்.

வியாசர் முதலான முனிவர்களை வரவேற்று அவர்களை யாக மண்டபத்தில் உரிய ஆசனங்களில் அமர வைத்தான் யுதிஷ்டிரன்.

பிறகு, யுதிஷ்டிரன், தன் சகோதரர்களை அழைத்து, "இனி பீஷ்மர், துரோணர், விதுரர், துரியோதனன், அவனது தம்பிகள், பல நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் ஆகியோர் வருவார்கள். அரசர்களை அர்ஜுனன் உபசரித்து அழைத்துப் போய் அவர்களை உணவருந்தச் செய்து அவர்களை யாக மண்டபத்தில் அமர்த்த வேண்டும்" என்றான்.

அர்ஜுனன் சரி என்று தலையை ஆட்டினான்.

"பீமா! துரியோதனனையும் அவன் தம்பிகளையும் நீதான் வரவேற்க வேண்டும்"

"நானா?" என்றான் பீமன் அதிருப்தியுடன்.

"ஆமாம். அவர்களை உணவருந்த வைத்தபின், துரியோதனனிடம் கஜானா பொறுப்பைக் கொடுத்து யாகத்துக்கு வருபவர்களுக்கு தானங்கள் அளிக்கும் பணியை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றான் யுதிஷ்டிரன்.

"நமக்குக் கெடுதல் நினைப்பவன் துரியோதனன். அவனிடம் ஏன் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்?" என்றான் அர்ஜுனன்.

"காரணமாகத்தான்!" என்றான் யுதிஷ்டிரன். "பீஷ்மர், துரோணர், விதுரர், நமது பிற உறவினர்கள் ஆகியோரை நான் வரவேற்று உபசரிக்கிறேன்"

"எனக்கும் சகாதேவனுக்கும் என்ன பணி?" என்றான் நகுலன்.

"நீங்கள் இருவரும் உணவு மண்டபத்தில் இருந்தபடி எல்லோரையும் நன்கு உபசரித்து உணவருந்த வைத்து அவர்கள் திருப்தி அடையும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உணவளிக்கும் விஷயத்தில் எந்தப் பாரபட்சமும் இருக்கக் கூடாது. பந்தியில் அமர்ந்திருக்கும் அனைவருமே அதிதிகளாகக் கருதப்பட்டு சமமாகப் போற்றப்பட வேண்டியவர்கள்."

யாகம் முடிந்து அனைவரும் விடைபெற்ற பின், இரவில் பாண்டவர்கள் ஐவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"யாகம் சிறப்பாக நடந்து முடிந்தது" என்றான் யுதிஷ்டிரன்.

"நீங்கள் செய்த ஏற்பாடுகள்தான் காரணம் அண்ணா!" என்றான் சகாதேவன்.

"உணவு மண்டபத்தில் இருந்தபடி விருந்தினர்களை உபசரித்தது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது" என்றான் நகுலன்.

"மன்னர்களை நான் கவனித்துக் கொண்டதில் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி" என்றான் அர்ஜுனன்.

"பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர் முதலியோரும் நம் உபசாரத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்" என்றான் யுதிஷ்டிரன்.

சற்று நேரம் மௌனம் நிலவியது.

"நீ ஒன்றுமே சொல்லவில்லையே, பீமா?" என்றான் யுதிஷ்டிரன்.

"சொல்வதற்கு என்ன இருக்கிறது? துரியோதனனுக்கு மிகவும் மகிழ்ச்சிதான். நம் கஜானாவைக் காலி செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் அதைச் சும்மா விடுவானா அவன்? வந்தவர்கள் எல்லோருக்கும் வாரி வாரிக் கொடுத்து நம் கஜானாவையே காலி செய்து விட்டான்" என்றான் பீமன் எரிச்சலுடன்.

"யாகம் செய்வதை விட தானம் செய்வதுதானே சிறந்தது? நம்மில் யாராவது  தானம் செய்திருந்தால் எங்கே கஜானா காலியாகி விடுமோ என்று பயந்து சிறிதளவே தானம் செய்திருப்போம்! துரியோதனன் நம் கஜானாவைக் காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவருக்கும் வாரிக் கொடுத்தான். அவன் தீய நோக்கத்துடன் செய்தாலும் அவன் செய்த தானத்தின் பயன் நமக்குத்தான் கிடைக்கும்! இதை மனதில் கொண்டுதான் துரியோதனனிடம் தானம் கொடுக்கும் பொறுப்பைக் கொடுக்கச் சொன்னேன்" என்றான் யுதிஷ்டிரன்.

"அண்ணா! யுத்தத்தில் வியூகம் வகுப்பது பற்றி துரோணாச்சாரியர் நம் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த யாகத்துக்கே நீங்கள் ஒரு வியூகம் வகுத்துச் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் வியூகத்தை விளக்க முடியுமா?" என்றான் சகாதேவன்.

"சகாதேவா! நீ அறியாதது இல்லை. நம் ஐவரில் நீயே ஞானத்தில் சிறந்தவன். ஆயினும் ஐவரில் வயதில் சிறியவன் என்பதால் அடக்கத்துடன் ஏதும் அறியாதவன் போல் கேட்கிறாய்! சொல்கிறேன். இன்று யாகத்துக்கு வந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நண்பர்கள், பகைவர்கள், நடுநிலையாளர்கள்.

"முதல் வகை நம் உறவினர்கள், ஆச்சாரியர்கள் ஆகியோர். இவர்களை, நம் ஐவரில் மூத்தவனான நானே கவனிப்பதுதானே அவர்களுக்கு உகந்ததாக இருக்கும்?

"இரண்டாவதாக நடுநிலையாளர்களான மன்னர்கள். அவர்களில் பலரை ராஜசூய யாகத்துக்காக நாம் போரில் வென்றிருந்தாலும், இது வழிவழியாக வரும் வழக்கம் என்பதால் அவர்கள் நம் மீது விரோதம் பாராட்டியிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களுக்கு நம்மிடம் நட்பும் இருக்காது. அவர்களை நண்பர்களாக மாற்றிக் கொள்ள நாம் முயல வேண்டும், குறைந்தது அவர்கள் நமக்கு விரோதிகளாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் அவர்களைப் போரில் வென்ற அர்ஜுனனைக் கொண்டே அவர்களை உபசரித்து மரியாதையாக நடத்தி, அவர்களை மனம் குளிரச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

"மூன்றாவது வகை நம் பகைவர்கள். துரியோதனனையும் அவன் தம்பிகளையும் நாம் பகைவராக நினைக்காவிட்டாலும், அவர்கள் நம்மை அப்படித்தானே நினைக்கிறார்கள்? ஆயினும் நம் விருந்தினர்களாக வந்திருப்பவர்களை நாம் மதித்து நடந்து, அவர்களது கௌரவத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்ததன் மூலம் நாம் அவனை கௌரவித்தோம். அத்துடன் அவன் அந்தப் பொறுப்பில் இருந்ததால் நமக்கு என்ன தீங்கு செய்யலாம் என்ற சிந்தனையில் ஈடுபட அவனுக்கு நேரமில்லாமல் போய் விட்டது. அவன் தாராளமாக தானம் செய்ததும் நமக்கு நன்மை பயக்கக் கூடிய செயலாக இருந்தது."

"அண்ணா! நீங்கள் என்னை விட வயதில் மட்டும் பெரியவர் இல்லை, அறிவிலும்தான். அத்துடன் அறம் எது என்பதை உங்களை விடச் சிறப்பாக அறிந்தவர் வேறு யார் இருக்க முடியும்?" என்றான் பீமன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பொருள்:  
பகைவர், அயலார், நண்பர் என்ற மூன்று பிரிவினரிடமும் அவரவர்களுக்கு உரிய முறையில் நடந்து கொள்வதே நடு நிலைமை என்று கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 112

குறள் 110
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















Monday, December 4, 2017

110. இன்டர்வியூ

இன்டர்வியூ அறையிலிருந்து வெளியே வந்தவனை நிறுத்தி வர்மா கேட்டான்: "எப்படி இருந்தது இன்டர்வியூ?"

"ஈஸியாத்தான் இருந்தது. என் அனுபவத்தைப் பத்தித்தான் கேட்டாங்க."

"நீங்க பண்ணின தப்பையெல்லாம் சொன்னீங்களா?"

"அவங்ககிட்ட எதையும் மறைக்க முடியாது. அவங்ககிட்ட நம்மளைப் பத்தின எல்லா விவரங்களும் இருக்கு. என் அம்மா வயத்துல இருந்தபோது எடுத்த ஸ்கேனைக் கூட வச்சிருப்பாங்க போலருக்கு!"

"எப்படி?"

"அங்கே குப்தான்னு ஒத்தரு இருக்காரு. நம்ம டோஸியே முழுசும் அவர் லேப்டாப்பில் இருக்கும் போலருக்கு. நான் சொல்லாம மறைச்ச விஷயத்தையெல்லாம் லேப்டாப்பைப் பாத்துப் புட்டுப் புட்டு வச்சுட்டாரு!"

"அப்படியா?" என்றான் வர்மா ஆச்சரியத்துடன்.

"ஆமாம். 'நீ போலி டிகிரி சர்ட்டிஃபிகேட் கொடுத்துத்தானே வேலையில சேர்ந்தே?'ன்னு கேட்டாங்க! நான் அசந்துட்டேன். அது எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சதுன்னே தெரியல. இதுவரைக்கும் அது யாருக்கும் தெரியாது. என்னோட முப்பது வருஷ கேரியர்ல இதை யாருமே கண்டு பிடிக்கல!"

"உங்களுக்குப் போலி சர்ட்டிஃபிகேட்  தயாரிச்சுக் கொடுத்த ஆளே போட்டுக் கொடுத்திருக்கலாமே!"

"அவன் எத்தனையோ பேருக்குப் போலி சர்ட்டிஃபிகேட் தயாரிச்சுக் கொடுத்திருக்கான். அவனோட ஆயிரம் கஸ்டமர்கள்ள நானும் ஒருத்தன். என்னைப் பத்தி அவன் ஏன் சொல்லணும் - அதுவும் இவங்ககிட்ட? எனக்குப் புரியல."

"சரி. அதுக்கு என்ன சொன்னாங்க? அதுக்காக உங்களை தண்டிக்கப் போறாங்களாமா?"

"தெரியல. நான் நிறைய சாதனைகள், நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கேனே! அதையும் அவங்க சொன்னாங்க. நான் மறந்து போன சில நல்ல காரியங்களைக் கூட அவங்க லேப்டாப்பிலேருந்து பார்த்துச் சொல்லி என்னைப் பாராட்டினாங்களே!"

"ஓ!" என்றான் வர்மா ஆச்சரியத்துடன்.

அப்போது ஒரு இளம் பெண் அங்கே வந்து "மிஸ்டர் காசி! இப்படி வாங்க!" என்று சொல்லி அவனை அருகிலிருந்த ஒரு அறைக்குள் அழைத்துப் போனாள். அந்த அறைக்கதவு சில வினாடிகள் திறந்து மூடியபோது அந்த அறையின் பளபளப்பான தரையும், பளிச்சென்று துலங்கிய சுவர்களும் அதை ஒரு உயர்தரமான ஹோட்டல் சுவீட் போலத் தோற்றமளிக்கச் செய்தன. அறையிலிருந்து வெளிப்பட்ட குளிர்ந்த காற்றின் அற்புதமான மணமும், குளிர்ச்சியும் பல வினாடிகள் நீடித்தன. அறைக்கு வெளியே பாரடைஸ்-103 என்ற எழுத்துக்கள் வாயில் நிலைமீது எழுதப் பட்டிருந்ததை வர்மா கவனித்தான். 'எங்கே அழைத்துப் போகிறார்கள் இவனை?'

சற்று நேரம் கழித்து வர்மா உள்ளே அழைக்கப்பட்டான்.

ரைமணி நேரத்துக்குப் பிறகும் இன்டர்வியூ முடியவில்லை. வர்மாவின் முகம் வியர்த்திருந்தது. 'இது என்ன இன்டர்வியூவா, போலீஸ் விசாரணையா?' என்று சில சமயம் அவனுக்குத் தோன்றியது.

"மிஸ்டர் வர்மா, ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் மறைத்து விட்டீர்கள்" என்றார் இன்டர்வியூ செய்தவர்.

"எதைச் சொல்கிறீர்கள்?" என்றான் வர்மா. சொல்லும்போதே அவன் வியர்வைப் பெருக்கு அதிகரித்தது.

"ஒரு சமயம் உங்களுக்கு வேலை போய் விட்டது. அதற்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்கள் வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டீர்கள். நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலைமை. அப்போது அர்த்தநாரி என்ற ஒருவர் உங்கள் மீது இரக்கப்பட்டு உங்களுக்கு வேலை கொடுத்தார். குறுகிய காலத்திலேயே உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களிடம் நிறையப் பொறுப்புகளை ஒப்படைத்தார். ஆனால் நீங்கள் அவர் தொழில் ரகசியங்களைத் தெரிந்து கொண்டபின் அவருடைய போட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவருடைய வாடிக்கையாளர்களை உங்கள் புதிய நிறுவனத்துக்கு இழுத்து அவர் தொழிலையே அழித்து விட்டீர்கள். சிறிது காலத்தில் அவர் தன் தொழிலையே மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உங்களுக்கு உதவி செய்ததற்கு அவரிடம் நன்றி காட்ட வேண்டிய நீங்கள் அவருக்கு துரோகம் செய்து விட்டீர்கள்."

"சார்! தொழில், வியாபாரம் இவற்றில் இதெல்லாம் சகஜம்தான்..." என்று இழுத்தான் வர்மா.

"நன்றி மறப்பது மன்னிக்க முடியாத குற்றம். உதவி செய்தவருக்கு துரோகம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்" என்று சொல்லி அவர் பஸ்ஸரை அழுத்தினார். ஒரு ஆள் உள்ளே வந்தான். அவர் தலையசைத்ததும், அவன் வர்மாவின் கையைப் பிடித்து இழுத்தான்.

"சார்! விடுங்க. என்ன இது? நான் உங்கள் பின்னால் வருகிறேன். கையைப் பிடித்து இழுத்துப் போவது என்பது என்ன வழக்கம்?" என்று முரண்டினான் வர்மா.

அவன் வர்மாவை இழுத்த வேகத்தில் வர்மா தரையில் விழ அவனைத் தரையிலேயே இழுத்துக்கொண்டு போனான் அந்த ஆள். வர்மா எழுந்து நிற்பதற்குக் கூட அவன் வாய்ப்புக் கொடுக்கவில்லை.

ஒரு அறையின் கதவைத் திறந்து வர்மாவை உள்ளே தள்ளினான் அவன். வர்மா தடுமாறி எழுந்து நின்றான். அறை வெளிச்சமில்லாமல் அரை இருட்டாக இருந்தது. தரை கரடு முரடாகக் காலில் குத்தியது. தான் இழுத்து வரப்பட்டபோது, தன் ஷூ நழுவி விழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தான் வர்மா. 'இரண்டு காலிலிருந்துமா ஷூ கழன்று விழுந்திருக்கும்?'

அவனை யோசிக்க விடாமல் குப்பென்று ஒரு துர்நாற்றம் வீசியது.

"என்ன அறை இது? என்னை ஏன் இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்?"

"இதுதான் நீ இருக்கப் போகும் இடம்" என்றான் அந்த ஆள்.

"ஏன்?" என்றான் வர்மா கோபத்துடன்.

அப்போது அங்கிருந்த ஒரு ஃபோன் அடித்தது. அந்த ஆள் அதை எடுத்துப் பேசி விட்டு, "சாரிடமே உன் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்" என்றான்.

வர்மா ஃபோனை வாங்கிக்கொண்டு, "சார்! ஏன் என்னை இங்கே அடைத்து வைக்கிறீர்கள்?" என்றான்.

"அதுதான் சொன்னேனே! நீ நன்றி மறந்த குற்றத்துக்கான தண்டனை இது."

"நான் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறேனே, அதற்கெல்லாம் மதிப்பில்லையா?"

"வேறு குற்றமாக இருந்தால் நீ செய்த நல்லவற்றைக் கணக்கில் கொள்ள முடியும். ஆனால் நன்றி மறந்த செயலுக்கு நீ செய்த நல்லவற்றைப் பரிகாரமாகக் கொள்ள முடியாது."

போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவன் ஒரு சொகுசான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது வர்மாவின் நினைவுக்கு வந்தது. அந்த அறையின் வாசலில் பாரடைஸ்-103 என்று எழுதப்பட்டிருந்ததே! அப்படியானால் இது..?

"இது என்ன இடம் சார்?" என்றான் வர்மா கலவரத்துடன்.

"நீ நினைப்பது சரிதான். நரகம்தான் அது!" என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

"என்னை இங்கே தள்ள நீங்கள் யார்? உங்கள் பெயர்?"

"தர்மராஜன்."

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்:  
எந்த அறத்தை மீறினாலும் அதன் விளைவிலிருந்து மீள வழி உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு மீட்சியே இல்லை.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






















.