About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, December 18, 2017

115. சங்கம்

தன் சொந்த ஊரிலிருந்து வந்தவர்களை வரவேற்று அமர வைத்தார் ராஜசேகரன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின் ஊர் நிலவரங்களைப் பற்றி விசாரித்தார்.

"நீங்கள்ளாம் ஊரை விட்டு வந்து டவுன்ல வேலை பாக்கறீங்க. அப்புறம் ஊரை யார் பாத்துப்பாங்க?" என்றான் மணி என்ற இளைஞன்.

"அதான் உன்னை மாதிரி இளைஞர்கள் எல்லாம் இருக்கீங்களே! நீங்க பாத்துக்க மாட்டீங்க ஊரை?" என்றார் ராஜசேகரன், சிரித்துக் கொண்டே.

"நாங்க இப்ப ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தோம்!" என்றார் இன்னொருவர்.

"சங்கமா? என்ன சங்கம்?"

"தமிழ்நாட்டிலே நம்ம ஜாதிக்காரங்க கணிசமா இருக்காங்க. ஆனா நாம சிதறி இருக்கறதால நம்மை யாரும் ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. நாம ஒரு சங்கமா செயல்பட்டா அரசியல் கட்சிங்க நம்மை மதிச்சு நம்மகிட்ட வருவாங்க. நாம கேக்கறதைச் செஞ்சு கொடுப்பாங்க" என்றார் மற்றொருவர். 

"நம்ம ஊருக்கு ஏதாவது தேவைன்னா ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கலாமே! எனக்கு ஊர்ல நிலபுலன் எதுவும் இல்லாட்டாலும் ஊர்க்காரியம்னா நானும் உங்களோட வந்து கலெக்டரையோ, மந்திரியையோ, எம் எல் ஏயையோ பாக்கணும்னா பாக்கறேன்" என்றார் ராஜசேகரன்.

"இது ஊர் விஷயம் இல்லீங்க. இது நம்ம ஜாதி விஷயம். நம்ம ஆளுங்களுக்கு நன்மை கிடைக்கணும்கறதுக்காகத்தான் நம்ம ஜாதிக்குன்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். ஊர் ஊராப் போய் நம்ம ஜாதி ஜனங்களையெல்லாம் உறுப்பினரா சேத்துக்கிட்டு வரோம். அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தோம்" என்றான் மணி.

"இங்க பாருங்க. ஏதோ ஒரு ஜாதியில் பொறந்துட்டோம்ங்கறதுக்காக நம்ம ஜாதிப் பழக்கங்களை பின்பத்திக்கிட்டிருக்கேன். வசதிக்காக ஜாதிக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிறோம். மத்தபடி மனுஷங்க எல்லோரும் ஒண்ணுதானே? ஜாதிச்சங்கம் எல்லாம் ஆரம்பிச்சு மனுஷங்களைப் பிரிக்கிறதில எனக்கு சம்மதமில்லை. எல்லோருக்கும் நியாயம் கிடைக்கணும்னு நெனைக்கறதுதானே மனுஷத்தனம்? நம்ம ஜாதிக்கு மட்டும் சில நன்மைகள் வேணும்னு கேக்கறது எப்படி நியாயமா இருக்கும்?"

வந்தவர்கள் சற்று நேரம் அவருடன் விவாதித்து விட்டுக் கோபமாகக் கிளம்பிப் போய் விட்டனர்.

அதற்குப் பிறகு அந்த ஜாதிச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது அவர் காதில் விழும். சில சமயம் பத்திரிகைகளிலும் ஏதாவது செய்தி வரும். ராஜசேகரன் அவை பற்றிப் பட்டுக் கொள்ளாமல் இருந்தார்.

"ப்ப உங்களுக்கு உடம்புல தெம்பு இருந்தது. நல்ல வேலையில இருந்தீங்க. ஓரளவுக்கு வசதியா இருந்தோம். அதனால தைரியமா ஜாதிச்சங்கத்தில சேர மாட்டேன்னு உறுதியா இருந்தீங்க. இப்ப அப்படி இருக்க முடியுமா?" என்றாள் அவர் மனைவி பர்வதம்.

"ஏன், இப்ப மட்டும் யாரு ஜாதிச்சங்கத்தில சேரணும்னு நம்மை வற்புறுத்தறாங்க?" என்றார் ராஜசேகரன்.

"ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுங்க! இப்ப நீங்க ரிடையர் ஆயிட்டிங்க. நீங்க வேற வேலைக்குப் போனாத்தான் நம்மால காலத்தை ஓட்ட முடியும். உங்களுக்கு வேற வேலை கிடைக்கறது சுலபமா இல்ல, அப்படி இருக்கறப்ப..."

ராஜசேகரன் மௌனமாக இருந்தார்.

அவர் வேலை தேடுவது தெரிந்து அவர் நண்பர் அவரிடம் ஒரு செய்தி சொன்னார். அவருக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் அவருக்கு ஏற்ற வேலை இருக்கிறதாம். ஆனால் அந்த நிறுவன அதிபர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வேலை கொடுப்பாராம். அதுவும் அவர்கள் ஜாதிச்சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டுமாம்!

"நான் அங்கே வேலைக்கு முயற்சி பண்ணினேன். அப்ப எனக்குக் கிடைச்ச தகவல் இது. நான் வேற ஜாதிங்கறதால எனக்கு அங்கே வேலை கிடைக்காது. ஆனா அந்த நிறுவனத்தோட அதிபர் உங்க ஜாதிக்காரர்தானாம். நீங்க முயற்சி பண்ணினா கிடைக்கும்" என்று அவரிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார்.

அதைத்தான் அவர் மனைவி சொல்லிக் காட்டுகிறாள்!

"யோசிச்சு நல்ல முடிவா எடுங்க. நம்ம நிலைமை சரியில்லாதபோது நாம கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகணும்" என்றாள் பர்வதம்.

"என்ன சொல்றே பர்வதம்? ஒரு விஷயம் தப்புன்னா எப்பவுமே தப்புதான். நாம சரி தப்புன்னு நெனைக்கற விஷயங்களை நம்ம நிலைமைக்கு ஏத்தபடி மாத்திக்க முடியாது" என்றார் ராஜசேகரன்.

"என்னவோ போங்க! உங்களுக்கு யாரு புத்தி சொல்ல முடியும்?" என்று சலித்துக் கொண்டாள் பர்வதம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள்:  
வாழ்வில் உயர்வும் தாழ்வும் வருவது இயற்கைதான். ஆனால் எந்த நிலையிலும் தன் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதே சான்றோர்க்கு அழகு.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


குறள் 114
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்























No comments:

Post a Comment