About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, December 12, 2017

114. இறப்புக்குப் பின்...

"இவ்வளவு வருஷம் வேலை செஞ்சு என்ன பிரயோசனம்? பிள்ளைகளுக்கு ஒண்ணும் சொத்து சேத்து வைக்க முடியலியே!" என்றான் ராகவன், தன் மனைவியிடம்.

அவன் மனைவி சரளா எதுவும் சொல்லவில்லை. 

"இத்தனை வருஷமா நான் சொல்லிக்கிட்டிருந்ததை நீங்க இன்னிக்கு சொல்றீங்களாக்கும்!" என்று மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனால் அந்த சமயத்தில் அப்படிச் சொல்லித் தன் கணவனை அவள் புண்படுத்த விரும்பவில்லை.

ராகவன் வேலையிலிருந்து ஒய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.

ஒய்வு பெற்ற பின் கடந்த இரண்டு வருடங்களாக அவன் வயதை ஒத்தவர்களைப் பார்த்த பிறகுதான், 30 வருடங்கள் வேலை செய்த பிறகும் தான் பெரிதாக ஒன்றும் சேமித்து வைக்கவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது.

30 ஆண்டுகளில் ஐந்தாறு நிறுவனங்களில் பணியாற்றிப் பல ஊர்களில் வாழ்ந்து ஒய்வு பெற்ற பிறகு அவனுக்கு மிஞ்சியது ஒரு சிறிய வீடும், பி எஃப், கிராச்சுவிட்டி என்று வந்த பணமும்தான். அந்தப் பணத்திலும் பெரும்பகுதி பெண்ணின் கல்யாணத்துக்குச் செலவழிந்து விட்டது.

மீதமிருந்த பணத்திலிருந்து வந்த வட்டி ஒன்றுதான் அவர்கள் வருமானம். அந்தப் பணம் அவர்களுக்குப் போதுமானதுதான். அதுவும் அவர்கள் மகன், மருமகள், பேரன் என்று ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதால் அவர்களுக்கென்று தனிச் செலவு கூட இல்லை. ஆயினும்...

அவன் நண்பர்களில் பலர் குறைந்தது இரண்டு வீடுகளாவது வைத்திருக்கிறார்கள். அது தவிர வருடத்தில் ஒரு வாரம் விடுமுறையைக் கழிக்க ரிசார்ட்டில் முதலீடு, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், வங்கி வைப்புகள் போன்ற சொத்துக்கள் வேறு.

சிலர் தங்கள் மகன், மகள் ஆகியோர் வீடு வாங்கப் பல லட்ச ரூபாய்கள் கொடுத்து உதவி இருக்கிறார்கள். ராகவனால் அது முடியாது. அவன் பிள்ளை சதீஷ் கடனில் வீடு வாங்கியபோது, ஒரு லட்ச ரூபாய் கூட அவனால் கொடுத்து உதவ முடியவில்லை. சதீஷ் அதை ஒரு குறையாக நினைத்தானோ என்னவோ ராகவனுக்குத் தெரியாது. ஒருவேளை மருமகளோ, சம்பந்தியோ நினைத்திருக்கலாம்!

எல்லோரும் தங்கள் பெண், பிள்ளைகளுக்கென்று எவ்வளவோ சேமித்து வைத்திருக்கும்போது, தான் மட்டும் தன் மகனுக்கு பாரமாக அவன் வீட்டில் இருந்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்தான்.

இதை அவன் மனைவியிடம் சொன்னபோது, "இப்ப வருத்தப்பட்டு என்ன செய்யறது? சம்பாதிக்கும்போதே நாலு காசு சேத்து வைய்யுங்கன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். எங்கிட்ட பணத்தைக் கொடுத்திருந்தா நானாவது கொஞ்சம் சேத்து வச்சிருப்பேன்!" என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அவள்.

சம்பாதித்த பணமெல்லாம் எங்கே போயிற்று? அவன் ஒன்றும் ஊதாரி இல்லை. குடி, சூதாட்டம் போன்ற பழக்கங்கள் அவனுக்கு இல்லை. குடும்பத்துக்காகச் செலவழித்ததைத் தவிர, அவன் தனக்கென்று எதுவும் செய்து கொண்டதில்லை. திட்டமிட்டுச் சேமிக்காமல் வருமானத்தைச் செலவழித்ததுதான் அவன் செய்த தவறு. இன்ஷ்யூரன்ஸ் கூடப் பெரிய அளவுக்கு எடுக்கவில்லை.

'நான் இறந்த பிறகு என்னைப் பற்றி என் மகனும் மருமகளும் என்ன சொல்வார்கள்? 'எனக்கு ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை என் அப்பா!' என்று குறைப்பட்டுக் கொள்வானா சதீஷ்? நான் இறந்த பிறகு வரும் சிறிதளவு இன்ஷ்யூரன்ஸ் பணமும், என் சேமிப்பும் மட்டுமே என் மனைவியின் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்குமா?'

ராகவனின் கவலைகள் உண்மையாகுமா என்று தெரியும் காலம் வந்தது. தூங்கப் போனவன் காலையில் எழுந்திருக்கவில்லை. "தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பார்" என்றார் டாக்டர்.

ராகவன் இறந்த விவரம் தெரிந்ததும் பலர் வந்து பார்த்தனர். ராகவனுக்குத் தெரிந்தவர்கள் இத்தனை பேர் இருப்பார்களா என்று சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

"அப்பாவோட ஆபிச்சுவரியை பேப்பர்ல கொடுக்கணும். சென்னை எடிஷன்ல மட்டும் கொடுத்தாப் போதுமா? தமிழ்நாடு எடிஷன்ல கொடுக்கணுமா?" என்று சரளாவைக் கேட்டான் சதீஷ்.

"உங்கப்பா இந்தியா முழுக்கப் பல ஊர்லயும் இருந்திருக்காரு. அதனால ஆல் இந்தியா எடிஷன்லியே கொடுத்துடு" என்றாள் சரளா.

அடுத்த சில நாட்களுக்கு அவர்கள் வீட்டு ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. எங்கெங்கிருந்தோ யார் யாரோ ஃபோன் செய்தார்கள்.

"ராகவன் சார் போயிட்டாரா? ரொம்ப வருத்தமா இருக்கு. அவரை மாதிரி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா? எவ்வளவு நல்லவரு!"

"நான் ஒரு சாதாரண பியூன்தான். எனக்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்து நடத்தினாரு!"

"எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பாரு. யாரையும் ஒரு வார்த்தை கூடத்  தப்பாப் பேசினது கிடையாது."

"ஆஃபீஸ்ல அவருக்குக் குழி பறிச்சவங்ககிட்ட கூட அவரு விரோதம் பாராட்டியது இல்லை. இப்படி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா?"

"எல்லோருக்கும் உதவி செய்வாரு. ஆனா யார்கிட்டயும் ஒரு உதவி கூடக் கேக்க மாட்டாரு. இப்படி ஒரு ஆத்மா!"

இது போன்ற அனுதாபச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது. ராகவன் ஒரு நல்ல மனிதன் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எல்லோரிடமும் இப்படி ஒரு நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பான் என்று அவளுக்குத் தெரியாது.

நேரிலும் பலர் வந்து அனுதாபம் தெரிவித்தனர். அவர்களும் இதே போன்ற கருத்துக்களைக் கூறினர். அவை உபசாரத்துக்குச் சொன்ன வார்த்தைகள் இல்லை, ஆழ்மனதிலிருந்து வந்தவை என்று சரளாவுக்குப் புரிந்தது.

"உங்கப்பாவைப் பத்தி நிறைய பேர் ஃபோன்ல கேட்டாங்கடா!" என்றாள் சரளா, சதீஷிடம்.

"ஆமாம்மா! எனக்கும் செல்ஃபோன்ல நிறைய கால் வந்தது. அப்பா எவ்வளவு பெரிய மனுஷர்! இப்படிப்பட்ட அப்பா கெடச்சதுக்கு நான் ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கணும்" என்றான் சதீஷ்.

அருகிலிருந்த அவன் மனைவி அதை ஆமோதிப்பது போல் புன்னகை செய்தாள்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

பொருள்:  
ஒருவர் உயர்ந்தவரா இல்லையா என்பது அவர் இறந்த பின் அவர் விட்டுச் சென்ற பெயரிலிருந்து அறிந்து கொள்ளப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


குறள் 113
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















5 comments:

  1. நான் அழுதுவிட்டேன், சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  2. விழிக்குளம் நிரம்பித் ததும்பிய கண்ணீர்
    கதைக்கள நுண்மைக்கு சான்று

    ReplyDelete