About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, November 24, 2017

109. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

உமாபதிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனுக்கு இருந்தது இரண்டு உறவுகள்தான். ஒன்று அவன் அம்மா வடிவு. மற்றொன்று அவன் மாமா காசிலிங்கம். மாமனுக்கு ஒரு மகள் இருந்தாள்.

வடிவுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடத்தில் அவள் அப்பா இறந்து விட்டார். அடுத்த வருடம் அவள் கணவன் சுந்தரமும் இறந்து விட்டான். அப்போது உமாபதி ஆறு மாதக் குழந்தை. அதற்குப் பிறகு அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவள் அண்ணன் காசிலிங்கம்தான்.

சுந்தரத்துக்கு ஊரில் ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருந்தது. வடிவு பிறந்த ஊரும், அவள் கணவனின் ஊரும் அருகருகே அமைந்திருந்ததால் அவள் அண்ணன் காசிலிங்கத்தால் அவளை அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ள முடிந்தது. அவர்களுடைய நிலங்களையும் அவன்தான் பார்த்துக் கொண்டான்.

அவளுடைய குடும்பச் செலவுக்கு மாதாமாதம் பணம் கொடுத்ததுடன், உமாபதியின் படிப்புச் செலவுக்கும் அவன்தான் பணம் கொடுத்தான். எப்போதாவது அவள் கூடுதலாகப் பணம் கேட்டாலும் கொடுப்பான். நிலத்திலிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது, அவன் கொடுக்கும் பணம் வருமானத்தை விடக் குறைவா அதிகமா என்று அவள் அவனைக் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

உமாபதி பள்ளிப் படிப்பை முடித்ததும், கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான். காசிலிங்கத்திடம் தன் விருப்பத்தை அவன் தெரிவித்தபோது, "உனக்கு எதுக்குடா படிப்பெல்லாம்? எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவளைக் கட்டிக்கிட்டு, உங்க அப்பா விட்டுட்டுப் போன சொத்து, என்னோட சொத்து ரெண்டையும் பாத்துக்கிட்டு ஹாயா இருக்க வேண்டியதுதானே?" என்றான்.

அப்போதுதான் காசிலிங்கத்துக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பது வடிவுக்கே தெரிந்தது. அவளுக்கு இதில் விருப்பம்தான். ஆனால் உமாபதி பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான். கல்யாணத்தைப் பற்றி அவனுக்கு அப்போது எந்தக் கருத்தும் இல்லை.

உமாபதியின் விருப்பப்படி அவன் பக்கத்து ஊரில் இருந்த கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர காசிலிங்கம் ஒப்புக் கொண்டான். படிப்புக்குத் தேவையான பணமும் கொடுத்தான்.

உமாபதியின் படிப்பு முடியும் சமயம், காஸியாபாத்தில் ஒரு நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த அவன் ஊரைச் சேர்ந்த ஒருவர் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். உமாபதிக்கு அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவனை அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

"படிப்பு முடிஞ்சதும் காஸியாபாத்துக்கு வந்துடு. எங்க கம்பெனியில வேலை வாங்கித் தரேன். தங்க இடமும் ஏற்பாடு பண்ணித் தரேன். நம்மூர் ஆட்கள் புத்திசாலிங்க, நல்லா வேலை செய்வாங்கன்னு வட இந்தியர்களுக்கு நம்ம மேல நல்ல அபிப்பிராயம் உண்டு. நல்லா வேலை செஞ்சா சீக்கிரமே முன்னுக்கு வரலாம். நான் எஸ் எஸ் எல் சி கூடப் படிக்கல. நானே இப்ப எங்க கம்பெனியில நல்ல பதவியில் இருக்கேன். சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கு. நீ படிச்சவன். அதனால சீக்கிரமே முன்னுக்கு வந்துடுவே! ரெண்டு மூணு வருஷத்திலே உங்க அம்மாவையும் அழைச்சுக்கிட்டு வந்து வச்சுக்கலாம். அங்கேயே செட்டில் ஆயிடலாம்" என்றார்.

உமாபதி தன் மாமாவிடம் கேட்டான். "இதுக்குத்தான் படிப்பெல்லாம் வேணாம்னு அப்பவே சொன்னேன். இங்கியே வசதியா இருக்கறதை விட்டுட்டு எதுக்கு அவ்வளவு தூரம் டில்லிக்குப் பக்கத்தில போயி வேலை செய்யணும்?" என்றான் காசிலிங்கம்.

ஆயினும் உமாபதி திரும்பத் திரும்பக் காசிலிங்கத்திடம் பேசி அவன் அனுமதியைப் பெற்று விட்டான். அவன் அம்மாவுக்கு இதில் எந்த அபிப்பிராயமும் இல்லை. அண்ணன் ஏற்றுக் கொண்டால் அவளுக்கும் சரிதான். பிள்ளையைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற வருத்தம் மட்டும் இருந்தது.

"ரெண்டு வருஷத்திலே உன்னையும் அங்கே கூட்டிக்கிட்டுப் போயிடுறேன். அதுவரையிலும், ஆறு மாசத்துக்கு ஒரு தடவை  லீவுல வந்து போய்க்கிட்டிருப்பேன்" என்று அவளை சமாதானப் படுத்தி விட்டுக் கிளம்பினான் உமாபதி.

ரண்டு வருடங்கள் கழித்து விடுமுறையில் வந்த உமாபதி தன் மாமாவிடம் "மாமா! இன்னும் ரெண்டு மாசத்துல கம்பெனியில எனக்கு குவார்ட்டர்ஸ் கொடுத்துடுவாங்க. குவார்ட்டர்ஸ் கிடைச்சதும், வந்து அம்மாவை என்னோட அழைச்சுக்கிட்டுப் போலாம்னு இருக்கேன்" என்றான்.

"என் பொண்ணைக் கட்டிக்கிட்டு அவளையும் அழைச்சுக்கிட்டுப் போயேன்" என்றான் காசிலிங்கம்.

உமாபதி தயக்கத்துடன் "மன்னிச்சுக்கங்க மாமா! என்னோட வேலை பாக்கற ஒரு பொண்ணை விரும்பறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றான்.

"என்னை நம்ப வச்சுக் கழுத்தை அறுத்துட்டியேடா! வேற யாருக்காவது அவளைக் கட்டி வச்சிருப்பேன் இல்ல?" என்று கோபமாகக் கத்தினான் காசிலிங்கம்.

"மாமா! வள்ளிக்கு 18 வயசுதான் ஆகுது. அவளுக்கும் என்னைக் கட்டிக்கிறதுல விருப்பம் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒரு நல்ல பையனாப் பாத்து அவளுக்குக் கட்டி வையுங்க" என்றான் உமாபதி.

"சரி. நீயும் போயிட்ட, உங்கம்மாவும் போயிட்டான்னா, உங்க வீடு, நிலத்தையெல்லாம் யாரு பாத்துப்பாங்க?"

"அதையெல்லாம் விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க மாமா. நான் அம்மாவை அழைச்சுக்கிட்டுப் போறதுக்குள்ளயே ரிஜிஸ்டிரேஷன் முடிஞ்சா நல்லா இருக்கும்."

"நிலத்தையெல்லாம் அவ்வளவு சுலபமா வித்துட முடியாது. யாராவது வாங்கற மாதிரி இருந்தா கடுதாசி போடறேன். அப்ப, நீயும் உங்கம்மாவும் வந்து பதிவு பண்ணிக் கொடுத்துட்டுப் பணத்தை வாங்கிட்டுப் போங்க" என்றான் காசிலிங்கம்.

ம்மாவை அழைத்துக்கொண்டு காஸியாபாத் போய் ஆறு மாதம் ஆகியும் காசிலிங்கத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. உமாபதி தன் மாமாவுக்குக் கடிதம் எழுதிக் கேட்டான்.


ஒரு வாரத்தில் காசிலிங்கத்திடமிருந்து பதில் வந்தது. "உன் அப்பா காலமான பிறகு, உன்னையும், உன் அம்மாவையும் காப்பாற்றியது, உன் படிப்புக்குச் செலவு செய்தது என்று ஏகமாகச் செலவு செய்திருக்கிறேன். உங்கள் நிலத்திலிருந்து வந்த வருமானம் உங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூடப் போதாது. அதனால் கணக்குப் பார்த்து உங்களுக்குச் செலவழித்த பணத்துக்கு ஈடாக உங்கள் வீட்டையும், நிலங்களையும் எனக்குக் கிரயம் செய்து கொடுத்திருக்கிறாள் உன் அம்மா. பதிவும் செய்தாகி விட்டது. எல்லாம் போக உங்களுக்கு நான் தொள்ளாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. அதை ஆயிரம் ரூபாயாக உன் அம்மாவிடம் அவள் ஊருக்குக்  கிளம்பியபோது கொடுத்திருக்கிறேன்" என்று எழுதியிருந்தான் காசிலிங்கம்.

உமாபதி அதிர்ச்சியுடன் வடிவிடம், "ஏம்மா, மாமாவோட ரிஜிஸ்டர் ஆஃபீசுக்குப் போய் ஏதாவது கையெழுத்துப் போட்டு விட்டு வந்தியா?" என்றான்.

"ஆமாம். நிலத்தையும், வீட்டையும் விக்கணும்னா அதையெல்லாம் என் பேர்ல முறையா எழுதிப் பதிவு பண்ணனும்னு சொன்னார் மாமா. உங்கப்பா காலமானபோது, உன் மாமா ஊர் கணக்குப் பிள்ளை மூலமா பட்டாவை மட்டும் என் மேல மாத்திட்டாராம். ஆனா ரிஜிஸ்டர் பண்ணினாத்தான் அதை விக்க முடியும்னு சொல்லி அழைச்சுக்கிட்டுப் போனார். அதுக்கு என்ன இப்ப?" என்றாள் வடிவு.

"ஒண்ணுமில்லை" என்றான் உமாபதி.

யோசித்துப் பார்த்தபோது அவனுக்கு எல்லாம் புரிந்தது. அவர்கள் நிலத்தில் எவ்வளவு விளையும் என்றெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கா விட்டாலும், எவ்வளவு நிலம் இருக்கிறது (இருந்தது!) அவற்றின் மதிப்பு என்ன என்பதெல்லாம் அவனுக்கு ஓரளவுக்குத் தெரியும்.

தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் மாமா அவனை வஞ்சம் தீர்த்துக் கொண்டிருக்கிறார். இது தன் தங்கைக்கு அவர் செய்த பெரிய துரோகம்தான். கோர்ட்டுக்குப் போனால் ஒருவேளை அவனால் நிலங்களை மீட்க முடியலாம்.

ஆனால் இன்னொரு நினைவு வந்தது. அவன் தந்தை இறந்தபோது, அவன் அம்மா ஒரு விவரம் அறியாத கிராமத்துப் பெண். அவனோ கைக்குழந்தை. தங்கள் இருவரையும் பாதுகாத்து, தன்னைப் படிக்க வைத்து.  தன்  விருப்பங்களையெல்லாம் மாமா நிறைவேற்றியது எவ்வளவு பெரிய விஷயம்!

அவர் செய்த மாபெரும் உதவியை நினைத்து அவருடைய துரோகத்தை மறந்து விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான் உமாபதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள்:  
ஒருவர் நம்மைக் கொலை செய்வதைப் போன்ற கொடுமையான செயலைச் செய்தாலும், அவர் செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்தால், அவர் செய்த தீமையை மறந்து விட  முடியும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Monday, November 13, 2017

108. பதவி உயர்வு கிடைக்கவில்லை!

"என்னப்பா இப்பிடி ஆயிடுச்சு?" என்றான் ராஜ்.

"என்ன செய்யறது? நாம எதிர்பார்த்ததெல்லாம் நடக்குமா என்ன?" என்றான் பிருத்வி.

"உனக்கு இந்த பிரமோஷன் கண்டிப்பாக் கிடைச்சிருக்கணும். ஜி எம்மைப் பார்த்துப் பேசு."

"பேசறதுக்கு என்ன இருக்கு? முடிஞ்சு போன விஷயம்."

"ஜி எம் உன் பேரை சிபாரிசு பண்ணியிருப்பாரு இல்ல?"

"பண்ணாம என்ன? ஆரம்பத்திலிருந்தே இந்தக் கம்பெனியில என்னை சப்போர்ட் பண்ணி இருக்காரு அவரு. இதுவரை என்னோட முன்னேற்றத்துக்கெல்லாம் அவர்தான் முக்கியக் காரணம். இது எம் டியோட முடிவு. அவரோட அபிப்பிராயம் வேற மாதிரி இருந்திருக்கலாம்."

"பொதுவா ஜி எம்மோட சிபாரிசின்படிதானே எம் டி நடந்துப்பாரு?" என்றான் ராஜ்.

பிருத்வி பதில் சொல்லவில்லை.

ன்று பிற்பகல் ஜி எம்மைப் பார்க்கும் சந்தர்ப்பம் பிருத்விக்குக் கிடைத்தது. பதவி உயர்வுப் பட்டியல் பற்றியோ அவன் பெயர் அதில் இல்லாதது பற்றியோ அவர் அவனிடம் எதுவும் பேசவில்லை. அலுவலக வேலையைப்  பற்றி மட்டும் பேசி விட்டு அனுப்பி விட்டார்.

ஜி எம் தன் பெயரை சிபாரிசு செய்ய மாட்டார் என்று ஆரம்பத்திலிருந்தே அவனுக்கிருந்த சந்தேகம் உறுதிப்பட்டு விட்டதாக அவன் நினைத்தான்.

மாலை ராஜ் மீண்டும் கேட்டான். "ஜி எம் ரூமுக்குப் போயிருந்தியே, பிரமோஷன் கிடைக்காததைப் பத்தி ஏதாவது சொன்னாரா?" என்றான் ராஜ்.

"வருத்தப்பட்டார். எனக்கு ஏன் கிடைக்கலேன்னு அவருக்கே தெரியலியாம். அடுத்த தடவை கண்டிப்பா சான்ஸ் கிடைக்கும்னு ஆறுதல் சொன்னார்."

சமீப காலமாக ஜி எம்முடன் அலுவலக வேலைகள் விஷயமாகத் தனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்ததையும், அதன் காரணமாகவே அவர் பதவி உயர்வுக்குத் தன் பெயரை சிபாரிசு செய்ய மாட்டார் என்று தான் முன்பே ஊகித்திருந்ததையும், பதவி உயர்வு தனக்குக் கிடைக்கும் என்ற  எதிர்பார்ப்பில் தான் இல்லை என்பதையும் தன் அலுவலக நண்பன் ராஜிடம் அவன் சொல்லவில்லை.

ஜி எம் தனக்கு முன்பு செய்த உதவிகளை மனதில் கொண்டு அவர் தனக்குச் செய்த அநீதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது என்று அவன் முன்பே தீர்மானித்து விட்டான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்:  
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்கு ஏதாவது தீமை செய்தால், அதை உடனே மறந்து விட வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















Saturday, November 11, 2017

107. திருமண அழைப்பு

தபாலில் வந்திருந்த அந்தத் திருமண அழைப்பிதழின் உறையில் அச்சிடப்பட்டிருந்த மணமக்களின் பெயர்களைப் பார்த்தான் ரங்கராஜன். ஆனந்தி- ரமேஷ்.

உறையைப் பிரிக்குமுன் யாராக இருக்கும் என்ற யூக சிந்தனையில் மனம் ஒரு கணம் ஈடுபட்டது. பத்திரிகையை வெளியே எடுத்துப் படித்தால் விவரம் தெரிந்து விடும். ஆயினும் முழு விவரங்களும்  தெரியும் முன்பே அவற்றை ஊகிக்க முயலும் மனதின் இயல்பான முயற்சி!

உறையைப் பிரித்துப் பத்திரிகையின் ஆங்கில வடிவத்தைப் படித்த பிறகும் யாரென்று நினைவுக்கு வரவில்லை. ஆனந்தி என்ற பெயர் மட்டும் எப்போதோ அறிந்த பெயராகத் தோன்றியது. இந்தப் பத்து வருட மருத்துவத் தொழிலில் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறான். அவர்களில் யாரோ ஒருவராக இருக்கக் கூடும்.

தமிழ் வடிவத்தில், கரகக்கும்பம்  ராமமூர்த்தியின் மகள் ஆனந்தி என்று படித்த பிறகு அவனுக்கு எல்லாம் நினைவு வந்து விட்டது. ஆனந்தி என்ற பெயரைத் தன்னால் எப்படி மறக்க முடிந்தது என்று ஒருகணம் தன்னையே நொந்து கொண்டான்.

து 1965ஆம் வருடம். அவன் மருத்துவப் படிப்பை முடித்து அரசு வேலையில் சேர்ந்தபின் முதல் பணி வழங்கப்பட்டது தஞ்சை மாவட்டம் நன்னிலத்துக்கு அருகில் இருந்த நத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் (இப்போது அந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கலாம்.)

சுற்றுப்புறத்தில் இருந்த பல கிராமங்களுக்கும் அதுதான் ஒரே மருத்துவ மனை என்பதால் மருத்துவ மனையில் தினமும் கூட்டமாக இருக்கும். மருத்துவ மனைக்கு அருகிலேயே அவனுக்கு அரசாங்க வீடு அளிக்கப்பட்டிருந்ததால், சில சமயம் இரவிலும் சிலர் அவன் வீட்டுக் கதவைத் தட்டுவார்கள்.

அப்படி ஒருமுறை தட்டியவள்தான் ஆனந்தி. மருத்துவ மனையிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த கரகக்கும்பம் கிராமத்திலிருந்து வந்ததாகச் சொன்னாள் அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி. அருகில் இன்னொரு ஆள். வாசலில் சைக்கிள். அந்த ஆளுடன் சைக்கிளில் வந்திருப்பாள் என்று தோன்றியது.

"டாக்டர்! அப்பா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. கண் முழிச்சப்ப ஒரு கையும் ஒரு காலும் மரத்துப் போய் இருக்கு" என்று பயத்துடனும் அழுகையுடனும் சொன்னாள் ஆனந்தி.

அவர்களுடன் பின்னாலேயே அவர்கள் வீட்டுக்குத் தன் சைக்கிளில் போனான் ரங்கராஜன். 

ஆனந்தியின் தந்தை ராமமூர்த்திக்குப் பக்கவாதம் வந்திருந்தது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கையில் இருந்த சில மாத்திரைகளைக் கொடுத்து விட்டு ரங்கராஜன் ஆனந்தியுடன் வந்த ஆளிடம் கேட்டான். "வீட்டில வேற யாராவது பெரியவங்க இருக்காங்களா?"

"அம்மா இருக்காங்க. நானும் என் தம்பியும்தான். நீங்க என்கிட்டயே சொல்லுங்க சார். நான் எஸ் எஸ் எல் சி படிக்கிறேன்" என்றாள் ஆனந்தி.

அந்தக் கடினமான சூழ்நிலையிலும் மன உறுதியுடன் இருந்த ஆனந்தியை மனதில் வியந்தபடியே ரங்கராஜன் சொன்னான் "ரத்த அழுத்தம் அதிகமானதால இந்தப் பக்கவாதம் வந்திருக்கு. பி பியைக் குறைச்சா பக்கவாதம் சரியாகலாம். தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போய் வைத்தியம் பாக்கறது நல்லது. ஆனா இப்ப இவரு இருக்கிற நிலைமையில இவரை டாக்சியில தூக்கி வச்சு அழைச்சுக்கிட்டுப் போறது ரிஸ்க். நான் சில மாத்திரைகளை எழுதித் தரேன். நாளைக்குத் திருவாரூருக்குப் போய் அதையெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுக்க ஆரம்பிங்க.

"நான்  மெட்ராஸ்ல எனக்குத் தெரிஞ்ச ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கேக்கறேன். எங்க ஆஸ்பத்திரியில ஃபோன் கிடையாது. போஸ்ட் ஆஃபீஸுக்குப் போய் டிரங்க் கால் போட்டுத்தான் பேசணும். ஆஸ்பத்திரி நேரத்தில நான் போக முடியாது. ராத்திரி போனா போஸ்ட் ஆஃபீஸ் திறந்திருக்காது. அதனால அவருக்கு விவரமா லெட்டர் போடறேன். ரெண்டு நாள்ள பதில் வந்திடும். நான் நாளைக்கு வந்து பாக்கறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

"சார்! ஒரு நிமிஷம்" என்று உள்ளே ஓடிய ஆனந்தி ஒரு ஐந்து ரூபாய்த் தாளுடன் வந்தாள். "சார்! உங்க ஃபீஸ்..." என்று சொல்லி விட்டுத் தயங்கினாள்.

ரங்கராஜன் சிரித்துக்கொண்டே, "வேண்டாம்மா. நான் கவர்ன்மென்ட் டாக்டர். ஃபீஸ் வாங்கக்கூடாது" என்றான், அவள் தோளில் தட்டியபடியே.

"ராத்திரி நேரத்தில வீட்டில வந்து பாத்திருக்கீங்களே..." என்றாள் ஆனந்தி.

"நான் ஆஸ்பத்திரிக்கு வர நோயாளிகளை மட்டும்தான் பாக்கணும். வீட்டில போய்ப் பாக்கக் கூடாது. அப்படிப் பாத்தா பிரைவேட் பிராக்டீஸ் பண்றேன்னு என் மேல புகார் கூட வரலாம். ஆனா உங்கப்பா இருந்த நிலைமையில அவரை வந்து பாக்க மாட்டேன்னு சொல்றது சரியா இருக்காது. அதனாலதான் வந்தேன். உங்கப்பாவுக்கு குணமாகிறவரை அடிக்கடி வந்து பாக்கறேன். அவருக்குக்  கொஞ்சம் சரியானதும் தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்கு லெட்டர் தரேன். அங்கே போய்ப் பாருங்க. சரியாயிடும், கவலைப்படாதே" என்று சொல்லி விட்டுப் போனான் .

அதற்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு, முதலில் சில நாட்களுக்கு தினமும், பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் வந்து பார்த்து விட்டுப் போனான். சென்னையிலிருந்த ஸ்பெஷலிஸ்டின் ஆலோசனையின் பேரில் வேறு சில மருந்துகளையும் கொடுத்தான்.

மூன்று மாதங்களில் ராமமூர்த்தியிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

அதற்குப் பிறகு அவரைத் தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு டாக்சியில் அழைத்துச் சென்று காட்டினார்கள். அங்கிருந்த டாக்டர்கள் ரங்கராஜனின் சிகிச்சையை அங்கீகரித்து அவன் கொடுத்த மருந்துகளையே தொடரச் சொன்னார்கள்.

இனி எழுந்து நடமாட மாட்டார், அநேகமாகப் பிழைக்கக் கூட மாட்டார் என்று அந்த கிராமத்தினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக முடிவு செய்து விட்டிருந்த நிலையில், அப்போதுதான் படித்து முடித்திருந்த, அனுபவமில்லாத டாக்டரான ரங்கராஜன், தன் சிகிச்சையினால் ராமமூர்த்தியைக் காப்பாற்றி அவரை எழுந்து நடமாடச் செய்ததை அந்த ஊரே ஒரு நம்ப முடியாத ஆச்சரியமாகப் பார்த்தது.

ஆனந்திதான் பெரிய மனுஷி போல் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் தந்தைக்கு மருந்துகள் வாங்கி வருவது முதல் அவ்வப்போது மருத்துவ மனைக்கு வந்து ரங்கராஜனைப் பார்த்து ஆலோசனைகள் கேட்பது வரை எல்லாவற்றையும் செய்து வந்தாள். இத்தனைக்கும் நடுவில், படிப்பிலும் கவனம் செலுத்தி, எஸ் எஸ் எல் சியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறியும் விட்டாள்.

ரங்கராஜன் அங்கே வேலைக்கு வந்து ஒரு வருடத்தில் சென்னையில் ஒரு தனியார் மருத்துவ மனையில் வேலை கிடைத்ததால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்னைக்குப் போக முடிவு செய்து விட்டான்.

ராமமூர்த்தி அதற்குள் நன்கு குணமடைந்தவராக, ஆனந்தியுடன் மருத்துவ மனைக்கு வந்து ரங்கராஜனுக்கு நன்றி தெரிவித்து அவனுக்கு விடை கொடுத்தார்.

"நீங்கதான் சார் தெய்வம் மாதிரி வந்து எங்கப்பாவைக் காப்பாத்தினீங்க" என்றாள் ஆனந்தி.

"உங்க ஊர் டூரிங் டாக்கீஸ்ல நிறைய சினிமா பாப்ப போலிருக்கே!" என்றான் ரங்கராஜன் சிரித்துக்கொண்டே.

ப்போது பத்து வருடம் கழித்து ஆனந்தியின் திருமணத்துக்கு அவனுக்குப் பத்திரிகை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தன் சென்னை விலாசத்தை ராமமூர்த்தி தன்னிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டது அவனுக்கு நினைவு வந்தது.

அவன் மருத்துவ மனையில் இருந்தபோது, தொலைபேசி அடித்தது."சார் உங்களுக்கு டிரங்க் கால்" என்றாள் ஆபரேட்டர்.

"ஹலோ!"

"சார்! நான் கரகக்கும்பத்திலேந்து ஆனந்தி பேசறேன்."

"ஹலோ! கல்யாணப் பொண்ணே! கங்கிராசுலேஷன்ஸ்! அப்பா எப்படி இருக்காரு?" என்றான் ரங்கராஜன்.

"ஞாபகம் வச்சுக்கிட்டு உடனே கண்டுபிடிச்சுட்டீங்களே! ஆச்சரியமா இருக்கு சார். அப்பா பக்கத்துலதான் இருக்காரு. அவரு கிட்டயே கொடுக்கறேன்...ஹலோ டாக்டர்! நான் ராமமூர்த்தி பேசறேன்."

"எப்படி சார் இருக்கீங்க?" என்றான் ரங்கராஜன். கை கால் முடங்கிப் படுத்திருந்த ஒருவர், தான் அளித்த சிகிச்சையினால் நன்கு குணமடைந்து பத்து வருடங்களுக்குப் பிறகுத் தன்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

"நான் நல்லா இருக்கேன். மார்க்கண்டேயனை எமன்கிட்டேயிருந்து சிவபெருமான் காப்பாத்தின மாதிரி நீங்களும் என்னை எமன்கிட்டேயிருந்து காப்பாத்திட்டீங்கன்னுதான் எங்க ஊர்ல எல்லாரும் உங்களைப் பத்திப் பேசிக்கிறாங்க."

"சார்! ஒரு டாக்டர் செய்ய வேண்டியதைத்தான் நான் செஞ்சேன்."

"இல்லை சார்! அந்த சமயத்தில உங்களோட கடமையையெல்லாம் தாண்டி என் வீட்டுக்கு தினமும் வந்து பார்த்து, மருந்து கொடுத்து என்னைக் காப்பாத்தினது சாதாரண உதவி இல்லை சார். நான் எடுத்தது மறு ஜென்மம்தான். இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நானும் என் குடும்பமும் உங்களை மறக்க மாட்டோம்."

அவர் குரல் நெகிழ்ந்தது. "கல்யாணத்துக்கு உங்களை நேர்ல வந்து கூப்பிட முடியல. அதான் ஃபோன்லயாவது கூப்பிடலாம்னு..."

"கண்டிப்பா வரேன் சார்" என்று ரங்கராஜன் பதில் சொன்னபோது ராமமூர்த்தியின் குரலில் இருந்த நெகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டது. இவ்வளவு அன்பு காட்டும் இவர்கள் வீட்டுத் திருமணத்துக்குக் கண்டிப்பாகப் போக வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டான் ரங்கராஜன்.
அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

பொருள்:  
தங்கள் துயரைத் துடைத்தவர்களின் நட்பை ஏழு பிறவிகளிலும் நினைத்துப் போற்றுவர் பண்புடையார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



Thursday, November 9, 2017

106. வெள்ளமும் உள்ளமும்

காலையில் ஆரம்பித்த மழை பிற்பகலில் வலுத்து மாலையில் கொட்டத் தொடங்கியது. தெருவில் தண்ணீர் ஓடத் தொடங்கியது. தண்ணீர்  நிலை வேகமாக உயர்ந்து வீட்டின் படிகளில் ஏறி இறங்கி விளையாட்டுக் காட்டியது. ஐந்து மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

'மழை நின்ற பிறகுதான் மீண்டும் மின்சாரம் வரும்' என்று நினைத்துக் கொண்டான் சந்துரு.

அந்தத் தெருவில் இருந்த பலரும் தங்கள் உறவினர் வீடுகளுக்குக் கிளம்பி விட்டனர். அவன் இருந்த இடம் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய இடம். ஆனால் சந்துருவால் எங்கும் போக முடியாது.

அவன் அம்மா படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் எழுந்து நிற்க முடியாது. அவரை அழைத்துக்கொண்டு எங்கும் போவது இயலாத செயல். அவன் அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் மழையினால் அன்று வேலைக்கு வரவில்லை.

பக்கத்து வீட்டிலிருந்த குடும்பமும் உறவினர் வீட்டில் தஞ்சம் புகக் கிளம்பியது. ஆனால் அந்தக் குடும்பத் தலைவர் பத்ரி மட்டும் கிளம்பவில்லை. எங்கு போக வேண்டுமானாலும், சற்று தூரம் நடந்து ரயில் நிலையம் சென்று மின்சார ரயிலில்தான் போக வேண்டும். பஸ்கள் ஓடுகின்றனவா என்று தெரியவில்லை.

வாசலில் இறங்கும்போது பத்ரியின் மனைவி அவரிடம் ஏதோ கோபமாகப் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக இறங்கிப் போகும்போது, "ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது!" என்று இரைந்து சொல்லி விட்டுப் போனாள்.

சற்று நேரம் கழித்து பத்ரி வாசலுக்கு வந்தபோது இவனைப் பார்த்துச் சிரித்தார்.

"ஏன் சார், நீங்க போகலியா?" என்றான் சந்துரு.

"எல்லாரும் போயிட்டா, இருக்கறவங்களை யாரு பாத்துக்கறது?" என்றார் பத்ரி.

"வேற யாராவது இருக்காங்களா உங்க வீட்டில?"

"என் வீட்டில இல்ல. உங்க வீட்டில இருக்காங்களே!"

"எங்கம்மாவைச் சொல்றீங்களா? அதான் நான் இருக்கேனே?"

"இந்த மாதிரி சமயத்தில நீங்க மட்டும் எப்படித் தனியா உங்க அம்மாவைப் பாத்துக்க முடியும்? தெருவே காலி. நீங்களும் நானும்தான் இருக்கோம். நானும் போயிட்டா எப்படி?"

"எனக்காகவா நீங்க போகாம தங்கிட்டீங்க?" என்றான் சந்துரு நம்ப முடியாத வியப்புடனும், நெகிழ்ச்சியுடனும். "நான் மேனேஜ் பண்ணிப்பேன் சார். நீங்க உங்க குடும்பத்தோட போய் இருங்க சார்!"

"குடும்பம் எங்கே போகுது? மழை நின்னதும் ரெண்டு நாள்ள திரும்பி வந்துடப் போறாங்க. அம்மா எங்கே படுத்துக்கிட்டிருக்காங்க?"

"ரூம்லதான். கட்டில்ல."

"வீட்டுக்குள்ள தண்ணி வந்துட்டா என்ன பண்ணுவீங்க?"

"மாடிக்குத்தான் போகணும்."

"உங்கம்மாவை எப்படி மாடிக்குத் தூக்கிக்கிட்டுப் போவீங்க?"

"கஷ்டம்தான்."

"நான் ஹெல்ப் பண்றேன். கவலைப்படாதீங்க"

அரை மணி நேரம் கழித்து அவன் வீட்டுக் கதவைத் தட்டினார் பத்ரி. திறந்தான்.

"தண்ணி லெவல் ஏறிக்கிட்டே இருக்கு. கொஞ்ச நேரத்தில வீட்டுக்குள்ள தண்ணி வந்துடும். அதனால இப்பவே உங்கம்மாவை மாடிக்குத் தூக்கிக்கிட்டுப் போயிடலாம்" என்றார் பத்ரி.

இருவரும் சேர்ந்து அவன் அம்மாவை மெல்லத் தூக்கி மாடியறைக்குக் கொண்டு சென்றார்கள். இருவரும் சேர்ந்து தூக்கிச் செல்வதே சிரமமாகத்தான் இருந்தது.

"நல்லவேளை சார்! நீங்க இல்லேன்னா நான் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பேன். நான் மட்டும் தனியா அம்மாவை மேல தூக்கிட்டுப் போயிருக்க முடியுமாங்கறதே சந்தேகம்தான்!"

"ஒரு ஆளா தூக்கிட்டுப் போறது கஷ்டம்தான். அதுவும் வயசானவங்க, உடம்பு சரியில்லாதவங்களை ஜாக்கிரதையாத் தூக்கணும் இல்ல?"

"கரெக்ட்தான் சார். இப்ப கூட நீங்க கிளம்பலாம் சார். அம்மாவைதான் மேல கொண்டு போய் வச்சாச்சே! இனிமே தண்ணி உள்ள வந்தாலும் பயமில்லையே!"

"இல்லை சந்துரு. இப்பவும் உங்களைத் தனியா விட்டுட்டுப் போக நான் விரும்பல. இந்த மாதிரி சமயத்தில எப்ப எந்த உதவி தேவைப்படும்னு சொல்ல முடியாது... அப்புறம், எனக்காக எங்க வீட்டில இட்லி, சப்பாத்தி, நொறுக்குத் தீனின்னு ஏகப்பட்டது பண்ணி வச்சிருக்காங்க. உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் கொஞ்சம் இட்லியும் சப்பாத்தியும் எடுத்துட்டு வரேன்."

"வேணாம் சார். நான் பிரட், பிஸ்கட் எல்லாம் கொஞ்சம் வாங்கி வச்சுருக்கேன். எனக்கு காலையில செஞ்ச சாப்பாடே மீதி இருக்கு. அம்மாவுக்குக் கஞ்சி போட்டு வச்சுட்டேன். தாங்க்ஸ் சார்" என்றான் சந்துரு.

அப்படியும், சற்று நேரம் கழித்து, ஒரு பொட்டலத்தில் நாலு இட்லியையும், இரண்டு சப்பாத்திகளையம் கட்டிக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார் பத்ரி.

ரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால் சந்துருவின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டின் கீழ்ப்பகுதி முழுவதிலும் இரண்டு அடி உயரத்துக்கு நீர் தேங்கி இருந்தது.

மறுநாள் முழுவதும் நான்கைந்து முறை சந்துருவின் வீட்டுக்கு  தண்ணீரில் நடந்து வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார் பத்ரி.

அன்று மாலை மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கியது. அன்று இரவு மின்சாரம் வந்தது.

அதற்கும் அடுத்த நாள் இயல்பு நிலை திரும்பி விட்டது. அன்று மாலை பத்ரியின் குடும்பத்தினரும் வீட்டுக்குத் திரும்பி விட்டனர்.

ந்துரு பத்ரியின் வீட்டுக்குச் சென்று அவர் மனைவியிடம் "இந்த ரெண்டு நாளா உங்க வீட்டுக்காரர் எனக்கும் என் அம்மாவுக்கும் செஞ்ச உதவி சாதாரணமானது இல்லை. அதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு கூட எனக்குத் தெரியலை" என்று சொல்லி விட்டு பத்ரியைப் பார்த்தான்.

'இன்னும் ஐம்பது வருடம் நான் உயிர் வாழ்ந்து என் கடைசிக் காலத்தில் என்னுடைய நினைவுகள் எல்லாம் தப்பிப் போனாலும் உங்களை மட்டும் நான் மறக்க மாட்டேன்'  என்று தன் பார்வை மூலம் அவன் அவரிடம் சொன்னது அவருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை! 

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

பொருள்:  
குற்றமற்றவர்களின் நட்பை எப்போதும் மறக்கக் கூடாது. துன்பம் வந்தபோது துணை நின்றவர்களின் உறவை எப்போதும் விடக் கூடாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்























Tuesday, November 7, 2017

105. ஆவடியில் ஒரு வேலை

ராமன் பஸ்ஸுக்காகக் காத்திருந்த பஸ் நிறுத்தத்தைத் தாண்டிச் சில அடிகள் தள்ளி அந்தக் கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய இளைஞன் அவர் அருகில் வந்து "என்ன சார் என்னைத் தெரியுதா?" என்றான்.

"ஓ! ரமணியா? எப்படி இருக்கே? அம்மா எப்படி இருக்காங்க?" என்றார் ராமன்.

"எல்லாரும் நல்லா இருக்கோம் சார், உங்க புண்ணியத்தில. வீட்டில ஆன்ட்டி, ரவி, கமலி எல்லாரும் சவுக்கியம்தானே? எங்கே சார் போய்க்கிட்டிருக்கீங்க?"

"ஆவடி வரைக்கும் போகணும்ப்பா! அதான் பஸ்ஸுக்கு நின்னுக்கிட்டிருக்கேன்."    

"நானும் அங்கதான் சார் போறேன். வாங்க கார்லேயே போயிடலாம்."

"இல்லப்பா. நீ போ! உனக்கு எதுக்கு சிரமம்? நான் பஸ்லேயே போய்க்கிறேன்."

"எனக்கென்ன சார் சிரமம்? காருக்குத்தான் சிரமம்! நானும் ஆவடிக்குத்தானே போறேன்? நீங்களும் வந்தா எனக்குப் பேச்சுத் துணையா இருக்கும்."

ராமன் கொஞ்சம் தயங்கி விட்டுக் காரில் ஏறிக் கொண்டார்.

சுமார் எட்டு வருடங்களுக்கு முன் ரமணியின் தந்தை திடீரென்று இறந்து விட்டார். அப்போது ரமணிக்கு வயது 18 இருக்கும். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். குடும்பத்தில் அவனும் அவன் அம்மாவும் மட்டும்தான்.

உலகம் தெரியாத அவன் அம்மாவும், அனுபவம் இல்லாத அவனும் செயலிழந்து நின்றபோது, அவர்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்த ராமன்தான் அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்தார்.

அவன் தந்தையின் காரியங்கள் முடிந்த பிறகு கூட ரமணிக்கும் அவன் அம்மாவுக்கும் மேற்கொண்டு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிச் சரியான விவரம் தெரியவில்லை. அவர்கள் உறவினர்கள் யாரும் அருகில் வசிக்கவில்லை. அவர்களுடன் சில நாட்கள் தங்கி அவர்களுக்கு உதவி செய்யும் நிலையிலும் யாரும் இல்லை.

அப்போதும் ராமன்தான் உதவிக்கு வந்தார். ராமன் அவர்கள்  குடும்பத்துக்கு நெருக்கமானவர்  இல்லை. ரமணியின் தந்தையிடம் கூட ஓரிரு முறைகள்தான் பேசியிருப்பார்.

ஆயினும், ரமணி மற்றும் அவன் தாயாரின் நிலையை உணர்ந்து கொண்டு, ஒரு நெருங்கிய நண்பர் போல் அவர்களுக்கு உதவினார் அவர்.

ரமணியுடன் அவன் தந்தையின் அலுவலகத்துக்குச் சென்று அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றைப் பெற்றுத் தந்தது, இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளுக்கு விண்ணப்பித்து அவர்களுக்குச் சேர வேண்டிய இன்ஷ்யூரன்ஸ் தொகையைப் பெற்றுத் தந்தது, அவன் தந்தையின் பெயர்களிலிருந்த வங்கிக் கணக்குகளை அவன் தாயின் பெயருக்கு மாற்றித் தந்தது என்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ரமணிக்கும் அவன் தாயாருக்கும் உதவியாக இருந்தார்.

ரமணியுடன் அவன் தந்தை வேலை செய்த அலுவலகம், இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் என்று பல இடங்களுக்குப் பலமுறை போயிருப்பார், ஓரிரு நாட்கள் அவருடைய அலுவலகத்துக்கு லீவ் போட்டு விட்டுக் கூட இவர்கள் வேலையைக் கவனித்திருக்கிறார்.

அவர் செய்த உதவிக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று ரமணியும் அவன் தாயாரும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.

சில மாதங்கள் கழித்து ரமணியும் அவன் அம்மாவும் ரமணியின் கல்லூரி இருந்த இடத்துக்கு அருகிலேயே வீடு பார்த்துக்கொண்டு போய் விட்டார்கள். அவ்வப்போது ராமனுக்கு ஃபோன் செய்து நலம் விசாரிப்பான் ரமணி. காலப்போக்கில் அதுவும் குறைந்து விட்டது.

ந்த எட்டு வருடங்களில் ரமணி படித்து முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து காரும் வாங்கி விட்டான். தற்செயலாக இந்தச் சந்திப்பு அன்று நிகழ்ந்தது.

காரில் போகும்போது இருவரும் பழைய நாட்களைப் பற்றியும், இருவரது குடும்ப நடப்புகளைப் பற்றியும் பேசிக்கொண்டே வந்தனர்.

கார் ஆவடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ரமணியின் கைபேசி அடித்தது. எடுத்துப் பேசினான்.

"...ஆமாம் சார். பதினோரு மணிக்கு வரதாச் சொன்னேன். வேற ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு. ரெண்டு மணிக்குள்ள வந்துடறேன். சாரி சார்..." என்றான்.

ராமன் அவனைத் திரும்பிப் பார்த்தார். "வேறெங்கேயோ போக வேண்டியவன் எனக்காக இந்தப் பக்கம் வந்திருக்கியா?" என்றார்.

ரமணி பதில் சொல்லாமல் இருந்தான்.

"நீ எங்க போகணும்?"

"மவுண்ட் ரோட்."

"மவுண்ட் ரோடா? ஆவடிப் பக்கம் போறேன்னு சொன்னியே? எதிர்ப் பக்கமாச்சே இது? எனக்காகவா?"

"ஆமாம் சார்!"

"என்னப்பா இது? முப்பது நாப்பது கிலோ மீட்டர் தூரம். மூணு மணி நேரம் டைம் வேஸ்ட். ஒன்னோட வேலையைக் கெடுத்துக்கிட்டு, எதுக்கு இதெல்லாம்?"

"சார்! நீங்க என் குடும்பத்துக்கு செஞ்ச உதவிக்கு பதில் உதவி செய்யறதுங்கறது நடக்காத காரியம். ஆனா இன்னிக்கு உங்களுக்கு ஒரு சின்ன உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சது. அதை எப்படி சார் நான் நழுவ விட முடியும்?"

ராமன் அவன் கையைப் பிடித்து மெதுவாக அழுத்தினார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பொருள்:  
ஒரு உதவிக்குச் செய்யப்படும் பதில் உதவி அந்த உதவியின் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில்லை, உதவி பெற்றவரின் (பதில் உதவி செய்பவரின்) பண்பின் அளவுக்கு  அது இருக்கும்.

(குறிப்பு: 'ஒருவர் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், உதவி பெற்றவரின் பண்பைப் பொறுத்து அவர் செய்யும் பதில் உதவி பெரிதாக அமையலாம் என்றும் இந்தக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.)

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













.