About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, April 28, 2018

158. மொட்டைக் கடிதம்

தலைமை அலுவலகத்திலிருந்து பொது மேலாளர் பேசுகிறார் என்று அவரது உதவியாளர் லீலா அறிவித்ததும், கிளை மேலாளர் ருத்ரமூர்த்தி தொலைபேசியை எடுத்து "சார்!" என்றார். 

"உங்க ஸ்டெனோ பக்கத்தில இருக்காங்களா?" என்றார் பொது மேலாளர்.

"ஆமாம்" என்ற ருத்ரமூர்த்தி, பொது மேலாளர் தன்னிடம் தனிமையில் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொண்டு, லீலாவை எழுந்து போகும்படி சைகை செய்தார். 

லீலா அறையை விட்டு வெளியே சென்ற பிறகு, "இப்ப இங்க யாரும் இல்லை. சொல்லுங்க சார்!" என்றார். 

"என்ன மூர்த்தி! உங்க ஸ்டெனோவோட நீங்க ரொம்ப நெருக்கமா இருக்கீங்களாமே!" என்றார் பொது மேலாளர்.

ருத்ரமூர்த்தி அதிர்ச்சி அடைந்தவராக, "என்ன சார் இது?" என்றார்.

"நல்ல வேளை! 'உங்களுக்கு எப்படித் தெரியும்?'னு நீங்க கேக்கல! இது மாதிரி எங்களுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்திருக்கு."

"சார்! இது ரொம்ப அபாண்டம்!"

"நாங்க இதை நம்புவோமா? இதை யார் எழுதியிருப்பாங்கன்னு உங்களால ஊகிக்க முடியுமா?"

"ஊகம் இல்ல சார்! உறுதியாவே தெரியும். நீங்க என் மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி."

"யாரு இதை எழுதியிருப்பாங்கன்னு எங்கிட்ட சொன்னீங்கன்னா, நாங்க அந்த ஆள் மேல ஒரு கண் வச்சுப்போம். சந்தர்ப்பம் வரும்போது அவர் மேல நடவடிக்கை எடுப்போம்" என்றார் பொது மேலாளர்.

"வேண்டாம் சார்! ஐ வில் டீல் வித் இட்!" என்றார் ருத்ரமூர்த்தி.

தொலைபேசியை வைத்ததும், பியூனை அழைத்து "பாஸ்கரை வரச்சொல்லு!" என்றார்.

பாஸ்கர் வந்ததும், "என்ன பாஸ்கர்! ஒரு கஸ்டமர் கம்ப்ளெயின்ட் பத்தி உங்கிட்ட சொன்னேனே! என்ன ஆச்சு?" என்றார். 

"அவரை நேர்ல போய்ப் பாத்துப் பேசிட்டேன். அவர் நான் சொன்னதை ஏத்துக்கிட்டு கம்பளெயின்ட்டை வாபஸ் வாங்கிட்டாரு."

"குட்!" என்ற ருத்ரமூர்த்தி,"ஆமாம்! லீலாவைப் பத்தி நீ என்ன நினைக்கறே?" என்றார்.

"என்ன சார் கேள்வி இது?"

"அவளைப் பத்தி ஹெட் ஆஃபீஸுக்கு யாரோ மொட்டைக் கடுதாசி எழுதி இருக்காங்க."

"அவங்களைப் பத்தியா?" என்றான் பாஸ்கர்.

"பின்ன என்னைப் பத்தியா எழுதுவாங்க?"

"ஆமாம், இதை ஏன் சார் எங்கிட்ட சொல்றீங்க?"

"ஏன்னா, நீ ஒரு புத்திசாலி. எல்லா விஷயங்களையும் நல்லாப் புரிஞ்சுக்கிறவன். யாரோ என்னைப் பழி வாங்கறதா நெனச்சு அந்த நல்ல பொண்ணோட பேரைக் கெடுக்கப் பாக்கறாங்க."

பாஸ்கர் மௌனமாக இருந்தான்.

"நீ பொறுப்புள்ளவன். இந்த மாதிரி மொட்டைக் கடுதாசி எழுதறவங்க யாருன்னு கண்டுபிடிச்சு அவங்களுக்கு புத்தி சொல்லு. என் மேல கோபம் இருந்தா, என்னோட நேரடியா மோதட்டும். மத்தவங்க பாதிக்கப்படக் கூடாது. சரி. போ!"

பாஸ்கர் மௌனமாக வெளியேறினான்.

பாஸ்கர் சென்றதும் ருத்ரமூர்த்தி யோசித்தார். அவனுடைய முகபாவம், பேச்சு இவற்றிலிருந்து கடிதத்தை எழுதியவன் அவன்தான் என்பது அவருக்கு உறுதியாகி விட்டது. லீலாவை இதில் இழுத்தது தவறு என்று அவன் உணர்ந்திருப்பான் என்று தோன்றியது.

பாஸ்கர் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே அவரிடம் விரோதம் பாராட்டி வந்திருக்கிறான். பயிற்சிக் காலத்தில் அவர் கடுமையாக நடந்து கொண்டதும், சரியாக வேலை செய்யாவிட்டால், பயிற்சிக் காலம் முடிந்ததும் அவன் வேலை நிரந்தரம் ஆகாது என்றும், அவன் வேலையை விட்டு அனுப்பப்படுவான் என்றும் அவர் எச்சரித்ததும் அவர் மீது அவனுக்கு ஒரு தவறான அபிப்பிராயத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டது. 

அவருக்கு எதிராக அவன் பல செயல்களைச் செய்து கொண்டிருந்தது அவருக்குத் தெரியும். பிற ஊழியர்களிடம் அவரைப் பற்றித் தவறாகக் கூறுவது, தலைமை அலுவலகத்துக்கு அவர் மீது பழி சொல்லி மொட்டைக் கடிதங்கள் எழுதுவது போன்ற செயல்களில் அவன் ஈடுபட்டிருந்தது அவருக்குத் தெரியும்.

ஆயினும் அவன் வேலையை அவன் திறமையாகச் செய்து வந்ததால் அவர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இப்போது லீலாவை அவருடன் தொடர்பு படுத்தி அவன் எழுதியதால்தான் அவர் அவனிடம் அந்த மொட்டைக் கடிதம் பற்றிப் பேசினார் - அதுவும் மறைமுகமாக.

இந்த சம்பவத்துக்குப் பிறகும் அவருக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்ந்தன. அவற்றுக்குப் பின்னே இருந்தது பாஸ்கர்தான் என்பதில் அவருக்கு சந்தேகமில்லை. 

அவர் மீது புகார் அடங்கிய கடிதங்கள் தலைமை அலுவலகத்துக்கு அவ்வப்போது அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் அவற்றில் மற்ற ஊழியர்கள் தொடர்பு படுத்தப் படவில்லை. மற்றவர்களை இழுக்க வேண்டாம் என்று அவர் சொன்னதை அவன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டதாகத் தோன்றியது!

"சார்! ஜி எம் கிட்டேருந்து ஃபோன்" என்றாள் லீலா.

ருத்ரமூர்த்தி ஃபோனை எடுத்துப் பேசினார்.

"மிஸ்டர் மூர்த்தி! நாலஞ்சு வருஷமா உங்களைப் பத்தி அப்பப்ப ஏதாவது மொட்டைக் கடுதாசி வந்துக்கிட்டிருக்கு!"

"அதுக்காக எம்மேல ஆக்‌ஷன் எடுக்கப் போறீங்களா சார்?" என்றார் ருத்ரமூர்த்தி சிரித்துக்கொண்டே.

"நீங்க சொல்லாட்டாலும், இதையெல்லாம் எழுதறது யாருன்னு எனக்குத் தெரியும்."

ருத்ரமூர்த்தி மௌனமாக இருந்தார்.

"உங்க ஆஃபீஸ் ஸ்டாஃப்  மூலமாவே எங்களுக்குத் தகவல்கள் வந்துக்கிட்டுருக்கு. பாஸ்கர்தானே அது?" என்றார் பொது மேலாளர்.

ருத்ரமூர்த்தி பதில் பேசவில்லை.

"நீங்க இதையெல்லாம் பொறுமையா சகிச்சுக்கிட்டிருக்கீங்க. அதுக்கே உங்களைப் பாராட்டணும். எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்னா அவனை வேலையை விட்டுத் தூக்கி இருப்பேன்! ஆனா இப்படி ஒரு காரியம் பண்ணியிருக்கீங்களே!"

"நீங்க எதைச் சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது!"

"அசிஸ்டன்ட் மானேஜர் போஸ்டுக்கு பாஸ்கர் பேரை ரெகமெண்ட் பண்ணி இருக்கீங்களே! அதுவும் அவனை விட சீனியர்கள் மூணு பேரு இருக்கறப்ப!"

"சார்! திறமை அடிப்படையில பாஸ்கர்தான் முதல்ல இருக்கான். ஒரு பொறுப்பான பதவிக்குத் திறமைதானே சார் முக்கியம்?"

"அவன் உங்களுக்குப் பண்ணின கெடுதலை எல்லாம் மறந்துட்டீங்களா? இது மாதிரியெல்லாம் செய்யறவனை எப்படி ஒரு பொறுப்பான பதவியில் நியமிக்க முடியும்?"

"சார்! வேலை விஷயத்தில பாஸ்கரோட செயல்பாடு எப்பவுமே சிறப்பாத்தான் இருந்திருக்கு. அதனால இனிமேயும் அப்படித்தான் இருக்கும்னு எதிர்பாக்கறதில என்ன தப்பு? பொறுப்பான பதவிக்கு வந்தப்பறம் அவன் இன்னும் அதிகப் பொறுப்போடு நடந்துப்பான்னு நினைக்கறேன். கம்பெனிக்கு எது நல்லதுன்னுதான் பார்த்தேன். தனிப்பட்ட முறையில அவன் எனக்கு நிறைய தொந்தரவு கொடுத்தான் என்கிறதுக்காக அவனுக்குக் கிடைக்க வேண்டிய புரமோஷனை நான் ஏன் சார் தடுக்கணும்?' என்றார் ருத்ரமூர்த்தி.
  .
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல் 

பொருள்:  
தம் ஆணவத்தால் நமக்குத் தீங்குகள் செய்த ஒருவரை நாம் நமது பொறுமை என்ற பண்பினால் வென்று விட வேண்டும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்























 

Tuesday, April 24, 2018

157. வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு

மூன்று நாள் லாக் அப்பில் இருந்து விட்டு வீட்டுக்கு வந்தபோது சோமசுந்தரம் சோர்ந்து போயிருந்தார்.

அவருக்குத் தண்ணீர், காப்பி எல்லாம் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்திய பிறகுதான் மங்களம் அவர் உடலில் இருந்த சிராய்ப்புகளையும் வீக்கங்களையும் கவனித்தாள்.

"ஏங்க, அடிச்சாங்களா உங்களை?" என்றாள் அதிர்ச்சியுடன்.

"போலீஸ்காரன் அடிக்காம இருப்பானா?"

"நீங்க இந்த ஊர்ல ஒரு பெரிய மனுஷர். உங்க மேலயே கை வச்சுட்டாங்களே, பாவிங்க!" என்று புலம்பினாள் மங்களம்.

"போலீஸ் ஸ்டேஷன் இருக்கறது நம்ம ஊர்ல இல்லியே! அதோட இன்ஸ்பெக்டர் புதுசா வந்திருக்காரு. அவருக்கு நம்ம ஊரைப் பத்தியும் தெரியாது, ஊர் ஜனங்களைப் பத்தியும் தெரியாது. விடு, அதான் வீட்டுக்கு வந்துட்டேனே!" என்றார் சோமசுந்தரம்.

மங்களத்தின் கண்களில் நீர் தளும்பியது. "நல்லா இருப்பானா அந்த மாணிக்கம்?" என்று அவள் கேட்டுக்கொண்டிருந்தபோது அவள் தம்பி சிவகுரு உள்ளே வந்தான்.

"என்ன மாமா இது? எப்படி நடந்தது இது? நான் உங்களைப் பாக்க தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன். ஆனா உங்களைப் பாக்கவே விடல. ஆமாம் எப்படி நடந்தது இது?"

"அந்த மாணிக்கம் என்னோட வரப்பை வெட்டி விட்டு, என் வயல்லேருந்து அவன் வயலுக்குத் தண்ணியைத் திருப்பி விட்டிருந்தான். நான் அதைப் பாத்துட்டு, மம்முட்டியால மண்ணை வெட்டிப் போட்டு வரப்பை அடைச்சுக்கிட்டிருந்தேன். அப்ப மாணிக்கம் வந்து எங்கிட்ட தகராறு பண்ணினான். கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டுப் போயிட்டான். அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் நான் அவனை மம்முட்டியால வெட்ட வந்ததாப் புகார் கொடுத்திருக்கான். அவங்களும் அதை உண்மைன்னு நெனச்சு என்னைக் கைது செஞ்சுட்டாங்க!" என்றார் சோமசுந்தரம்.

"அது எப்படி? அவன் புகார் கொடுத்தா, விசாரிக்காமக் கைது பண்ணிடுவாங்களா?"

"என்னோட தகராறு பண்றத்துக்குக் கொஞ்ச நேரம் முன்னாலதான், அவன் தன்னோட வயல்ல வேலை செய்யறப்ப மம்முட்டியால கால்ல வெட்டிக்கிட்டிருக்கான். 

"அந்தக் காயத்தைப் போலீஸ் கிட்ட காட்டி, நான் அவனை மம்முட்டியால வெட்ட வந்ததாகவும், அவன் என்கிட்டேயிருந்து தப்பிச்சு ஓடறப்ப என் மம்முட்டி அவன் கால்ல பட்டு, அந்தக் காயம் பட்டுதுன்னும் சொல்லியிருக்கான். 

"நான் மறுபடியும் அவனை வெட்டறதுக்காகத் துரத்தினதாகவும், அவன் என்கிட்டேயிருந்து தப்பிச்சு நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்துட்டதாகவும் இன்ஸ்பெக்டர்கிட்ட ஒரு கதையைச் சொல்லி இருக்கான். கூடவே பொய்சாட்சி சொல்ல ஒரு ஆளையும் அழைச்சுக்கிட்டுப் போயிருக்கான்."

"அடப்பாவி! ஆமாம், அதை நம்பி உங்களைக் கைது பண்ணின இன்ஸ்பெக்டர் எப்படி உங்களை விட்டாரு?"

"இன்ஸ்பெக்டர் ஊர்ல வந்து விசாரிச்சப்ப, பொய்சாட்சி சொன்னவன் பயந்து போய், தான் எதையும் பாக்கலைன்னு ஒத்துக்கிட்டிருக்கான். ஊர்லயும் எல்லாரும் என்னைப் பத்தி நல்ல விதமா சொன்னதால இன்ஸ்பெக்டர் என்னை விட்டுட்டாரு."

"பொய்க்கேஸ் போட்டானே அந்த மாணிக்கம் - அவன் பேர்ல ஏன் நடவடிக்கை எடுக்கல?"

"அவன் இப்பவும் நான் அவனை வெட்டினதாத்தானே சொல்லிக் கிட்டிருக்கான்? அதனால சாட்சி இல்லன்னு சொல்லிப் புகாரை முடிச்சு வச்சுட்டாங்க. அவ்வளவுதான்."

"எப்படிப் போட்டு அடிச்சிருக்காங்க பாருடா!" என்றாள் மங்களம்.

"என்னது அடிச்சாங்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்ட சிவகுரு அவரது காயங்களைப் பார்த்து விட்டு, "அவனை சும்மா விடக்கூடாது மாமா!" என்றான்.

சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் சோமசுந்தரத்தின் மகள் புவனா சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே நடந்து வந்து கொண்டிருந்த மாணிக்கத்தின் மீது மோதி விட, இருவருக்கிடையேயும் சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், சிவகுரு சோமசுந்தரத்திடம் வந்தான்.

"மாமா! புவனாவோட மாணிக்கம் பய தகராறு பண்ணியிருக்கான். இதை வச்சு அவன் மேல போலீஸ்ல புகார் கொடுத்து அவனை உள்ள வச்சுடலாம்!" என்றான்.

"புகார் கொடுக்கறதுக்கு இதில என்ன இருக்கு? சின்ன வாய்ச்சண்டைதானே இது?"

"சைக்கிள்ள போயிக்கிட்டிருந்த பொண்ணை வழி மறிச்சு அவகிட்ட தப்பாப் பேசினான்னு புகார் கொடுத்துட்டா, ஈவ் டீசிங் கேஸ் ஆயிடும். ஒரு மாசத்துக்கு ஜாமீன்ல வர முடியாத அளவுக்குப் பண்ணிடலாம். நமக்கு சாதகமா நிறைய சாட்சிகளைத் தயார் பண்ணிடலாம். பொய்க்கேஸ் கொடுத்து உங்களை அவமானப்படுத்திட்டான்கறதனால, ஊர்ல எல்லாரும் மாணிக்கத்தின் மேல கோவமாத்தான் இருக்காங்க. நம்ம கேக்காமலேயே நிறைய பேரு அவனுக்கு எதிரா சாட்சி சொல்லுவாங்க."

சோமசுந்தரம் தன் உடலில் இன்னும் மறையாமலிருந்த சில தழும்புகளைத் தொட்டுப் பார்த்தார். "சிவகுரு! என்னைக் கைது பண்ணி லாக் அப்ல வச்சு அடிச்சு உதைச்சப்ப எனக்கு ஏற்பட்ட வலிகளை இன்னும் நான் மறக்கல. இப்ப மாணிக்கத்தைக் கைது பண்ணினா அவனையும் இப்படித்தானே அடிப்பாங்க? அவனுக்கும் இதே மாதிரிதானே வலிக்கும்? சின்ன வயசுப் பையன், அதுவும் ஈவ் டீசிங் கேஸுங்கறதால அவனை இன்னும் அதிகமாவே அடிப்பாங்க! வேணாம் சிவகுரு. நான் அடியோட வலியையும், ஜெயிலோட கொடுமையையும், அவமானத்தையும் அனுபவிச்சிருக்கேன். அதோட வேதனை எனக்குத் தெரியும். இந்த வேதனை இன்னொருத்தருக்கு ஏற்பட நான் ஏன் காரணமா இருக்கணும்? என்னதான் மாணிக்கம் எனக்குக்  கெடுதல் பண்ணியிருந்தாலும், நான் பட்ட மாதிரி வேதனையை அவனுக்குக் கொடுக்க நான் விரும்பல. வேணாம். விட்டுரு" என்றார்.

இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து 
அறனல்ல செய்யாமை நன்று.  

பொருள்:  
பிறர் நமக்குக் கொடுமைகள் செய்தாலும், பதிலுக்கு நாம் அவருக்குத் தீங்கு செய்தால் அதனால் அவருக்கு ஏற்படக்கூடிய வலியை உணர்ந்து நாம் அவர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















Sunday, April 22, 2018

156. முத்துமாலை

"நந்தினி! உன் முத்துமாலை கிடைத்து விட்டது!" என்றான் மன்னன் மதிசூடன்.

"எப்படிக் கிடைத்தது?"

"நம் அரண்மனைச் சேவகன் ஒருவன்தான் திருடியிருக்கிறான். காவலர்கள் அவன் மீது சந்தேகப்பட்டு அவன் வீட்டைச் சோதனை போட்டபோது, நகை கிடைத்து விட்டது. இதோ உன் நகை" என்று அரசியிடம் மீட்கப்பட்ட முத்துமாலையைக் கொடுத்தான் அரசன்.

நகையைப் பெற்றுக்கொண்ட நந்தினி அதை உற்றுப் பார்த்தும், தொட்டுப் பார்த்தும் அது தன் நகைதான் என்று உறுதி செய்து கொண்டாள்.

"நகையைத் திருடியவனை என்ன செய்யப் போகிறீர்கள்?"

"காவலர்கள் அவனைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். நாளை அவனை நீதிபதியிடம் கொண்டு செல்வார்கள். அவர் விசாரித்து அவனுக்குத் தகுந்த தண்டனை அளிப்பார்."

"அவனை நீங்களே விசாரிக்க முடியாதா?"

"பொதுவாக இது போன்ற குற்றங்களை நீதிபதிதான் விசாரிப்பார்."

"பாண்டிய நாட்டு அரசியின் சிலம்பைத் திருடியதாகக் கைது செய்யப்பட்ட கோவலனைப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் விசாரிக்கவில்லையா?"

"நீ விரும்பினால் நானே அவனை விசாரிக்கிறேன்!" என்றான் அரசன்.

"ஒரு வேண்டுகோள். அவனுக்கு தண்டனை அளிக்கும் முன்பு என்னிடம் சொல்லி விட்டுச் செய்யுங்கள்" என்றாள் நந்தினி.

"ஏன், அவனுக்குக் கொடுக்கப்படும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயா?" என்று கேட்டான் அரசன்.

நந்தினி பதில் சொல்லாமல் சிரித்தாள்.

"நந்தினி! உன் விருப்பப்படி உன் முத்துமாலையைத் திருடியவனை அரச சபைக்கு அழைத்து வரச்சொல்லி நானே விசாரித்தேன். திருட்டை அவன் ஒப்புக்கொண்டு விட்டான். தண்டனையை நாளை அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறேன். என்ன தண்டனை என்பதை நீதான் சொல்ல வேண்டும்!" என்றான் மதிசூடன்.

"வேறு நீதிபதி விசாரித்திருந்தால் என்ன தண்டனை கொடுத்திருப்பார்?" என்றாள் நந்தினி.

"பத்து ஆண்டுகள் சிறைவாசம் என்று விதித்திருப்பார். அரசியின் நகையைத் திருடினான் என்பதால் மரண தண்டனை வழங்கியிருந்தாலும் ஆச்சரியமில்லை!" என்றான் அரசன்.

"ஒருவேளை நீதிபதி அவனை மன்னிக்க நினைத்திருந்தால், அவரால் அவனை மன்னித்திருக்க முடியுமா?"

"நிச்சயம் முடியாது. நீதிபதிக்கு அதற்கு அதிகாரம் இல்லையே! சட்டப்படி தண்டனை வழங்க மட்டும்தான் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. மன்னிக்கும் அதிகாரம் மன்னனுக்கு மட்டும்தான் உண்டு."

"அதனால்தான் இந்த வழக்கை நீங்களே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்!"

"என்ன சொல்கிறாய் ராணி? அரசியின் முத்துமாலையைத் திருடியது பெரிய குற்றம். அவனை ஏன் மன்னிக்க வேண்டும்?"

"மன்னரே! அரசரிடம் திருடினாலும், ஆண்டியிடம் திருடினாலும் திருட்டு என்பது ஒரே மாதிரியான குற்றம்தான். அவன் அரசியின் நகையைத் திருடினான் என்று நினைக்காமல், இதை அவன் செய்த முதல் குற்றம் என்று கருதி, ஏன் அவனை மன்னிக்கக் கூடாது? ஒருமுறை மன்னிக்கப்பட்டால்ர அவன் திருந்தலாம் அல்லவா?"

"நந்தினி! குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் முறை."

"குற்றம் செய்தவரை தண்டிப்பதன் மூலம் சட்டத்தை நிலைநாட்டுவது உங்கள் கடமைதான். ஆனால் யாருடைய பொருள் திருடப்பட்டதோ அவரே திருடியவனை மன்னித்து அவனுக்கு தண்டனை வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால், அவருடையே வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?"

"நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன் தேவி! உன் கருணை உள்ளம் எனக்குப் புரிகிறது. குற்றத்தை மன்னித்த உன் செயலைக் கல்வெட்டில் பொறிக்கச் செய்கிறேன். அதன் மூலம் உன் புகழ் காலம் காலமாக நிலைத்து நிற்கும்!" என்றான் மதிசூடன்.

இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் 
பொன்றுந் துணையும் புகழ்.

பொருள்:  
தனக்குத் தீங்கு செய்தவரை தண்டிப்பவருக்கு அன்று ஒருநாள் மட்டுமே இன்பம் (திருப்தி) கிடைக்கும். ஆனால் தனக்குத் தீங்கு செய்தவரின் குற்றத்தைப் பொறுத்து, அவரை தண்டிக்காமல் விட்டவரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
  பொருட்பால்                                                                                                காமத்துப்பால்



















Saturday, April 21, 2018

155. பிறந்த நாள்

"என்ன செய்யலாம் சொல்லுங்க?" என்று கேட்டான் பரத்.

"பத்தாயிரம் ரூபா களவாடி இருக்கான். வேலையை விட்டு அனுப்ப வேண்டியதுதான். உங்கப்பா அப்படித்தான் செஞ்சிருப்பாரு" என்றார் தட்சிணாமூர்த்தி. அவர் பரத்தின் தந்தையின் காலத்திலிருந்தே நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர்.  

"அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். வீட்டிலே எங்ககிட்டல்லாம் கூட அப்படித்தான் இருப்பாரு."

"அடேயப்பா! எப்படிப்பட்ட ஆளு அவரு! அவருகிட்ட நிலைச்சு வேலை செஞ்சவன் நான் ஒத்தன்தான். எனக்கு முன்னாடி இருந்த மூணு மானேஜர்கள் தாக்குப் பிடிக்காம ஓடிட்டாங்க. மத்த ஊழியர்களெல்லாம் கூட வேற வேலை கெடச்சுருந்தா போயிருப்பாங்க!"

"சின்னத் தப்புக்குக் கூட தண்டனை கொடுப்பாரா?"

"ஆமாம். அடிக்கடி லேட்டா வந்தாங்கங்கறதுக்காகவே ரெண்டு மூணு பேரை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டார்னா பாத்துக்கங்களேன்!"

பரத் மணியை அடித்து பியூனை வரவழைத்தான். "காஷியர் சுகுமாரைக் கொஞ்சம் வரச் சொல்லு!" என்றான்.

"நீங்க எதுக்கு சார் அந்தத் திருட்டுப் பயகிட்ட பேசணும்? நீங்க அவனை வேலையை விட்டு நீக்கிட்டீங்கன்னு நானே சொல்லிடறேன். போலீசுக்குப் போகணுமா, இல்ல, நாமளே அவன்கிட்ட பணத்தை வசூலிக்க வேண்டிய விதத்தில வசூலிச்சுடலாமான்னு மட்டும் சொல்லிடுங்க" என்று தட்சிணாமூர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுகுமார் உள்ளே வந்தான்.

"பணத்தை எடுத்தீங்களா?" என்றான் பரத் சுகுமாரைப் பார்த்து.

சுகுமார் தலையைக் குனிந்தபடியே நின்றான்.

"எதுக்கு எடுத்தீங்க?"

"ஒரு கடன்காரனுக்குப் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. ரெண்டு நாள்ள எங்கேயாவது புரட்டிப் பணத்தைத் திரும்ப வச்சுடலாம்னு நெனச்சு ஒரு பதட்டத்தில எடுத்துட்டேன்" என்றான் சுகுமார் மெல்லிய குரலில். 

"இப்ப வேலையே போகப் போகுதே, என்ன செய்யப் போறீங்க?" என்றான் பரத்.

சுகுமார் பேசாமல் நின்றான்.

"சரி. ரெண்டு நாள்ள பணத்தைப் புரட்டிக் கொடுத்துடுவீங்களா?"

"சார்!" என்றான் சுகுமார். 

"எடுத்த பணத்தைத் திரும்பக் கொடுத்துட்டு வேலையில சேந்துக்கங்க!" என்றான் பரத்.

"சார்!" என்றான் சுகுமார் நம்ப முடியாமல்.

"இப்ப உங்களுக்கு வேலை கிடையாது. பணத்தைத் திருப்பிக் கொடுக்கறதுக்கு உங்களுக்கு மூணு நாள் டயம் தரேன். அதுக்குள்ளே பத்தாயிரம் ரூபாயை மானேஜர் கிட்ட கொண்டு வந்து கொடுத்துட்டு மறுபடியும் வேலையில சேந்துக்கங்க. ஆனா நீங்க இனிமே காஷியரா இருக்க முடியாது. மானேஜர் உங்களுக்கு வேற வேலை அலாட் பண்ணுவாரு."

"சார்! நான் இதை எதிர்பாக்கல. ரொம்ப நன்றி சார். இனிமே எந்தத் தப்பும் பண்ண மாட்டேன் சார்!" என்றான் சுகுமார் கை கூப்பியபடியே.

சுகுமார் சென்றதும், "என்ன சார்! இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார் தட்சிணாமூர்த்தி. 

பரத் பதில் சொல்லாமல் சிரித்தான்.  

சி மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் பரத் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, அலுவலகம் முழுவதும் தோரணங்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான். 

தன் அறைக்குச் சென்றதும், தட்சிணாமூர்த்தியை அழைத்து 'என்ன விசேஷம்?' என்று கேட்க நினைத்தான். 

அதற்குள் தட்சிணாமூர்த்தியே உள்ளே வந்து விட்டார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்!" என்றார் சிரித்தபடியே.

"உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடறது இல்லையே!" என்றான் பரத்.

"எனக்குத் தெரியாது சார். நம்ப ஊழியர்கள் எல்லாரும் எப்படியோ இன்னிக்கு உங்க பிறந்த நாள்னு தெரிஞ்சுக்கிட்டு, காலையில சீக்கிரமே ஆஃபீஸுக்கு வந்து ஆயுத பூஜைக்குப் பண்ற மாதிரி தோரணம் எல்லாம் கட்டி, உங்க பிறந்த நாளைக் கொண்டாடறாங்க. ரெண்டு நாள் முன்னாடியே அவங்களுக்குள்ளேயே பணம் வசூலிச்சு, தோரணம், மாலை, இனிப்புகள் எல்லாம் வாங்கி இருக்காங்க."  

"அப்பா இருந்தபோதும் இப்படியெல்லாம் கொண்டாடுவாங்களா?"

"இல்ல சார்! உங்கப்பாகிட்ட எல்லாருக்கும் பயம்தான் இருந்தது. உங்க மேல எல்லாருக்கும் மதிப்பு, மரியாதை, விசுவாசம் எல்லாம் இருக்கு. இந்த வித்தியாசத்தை என்னால பாக்க முடியுது!" என்றார் தட்சிணாமூர்த்தி 

இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் 
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

பொருள்:  
தனக்குத் தீங்கு செய்தவரை தண்டித்தவரை உலகத்தார் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். தனக்குத் தீங்கு செய்தவரைப் பொறுத்துக் கொண்டவரை உலகத்தார் பொன் போல் மதித்துப் போற்றுவர்.
 பொருட்பால்                                                                                                காமத்துப்பால்






















Wednesday, April 18, 2018

154. காலை முதல் மாலை வரை

டாக்டர் பரந்தாமனுடன் ஒரு நாள் முழுவதும் இருந்து அவரை அருகிலிருந்து கவனிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பரந்தாமன் ஒரு பொருளாதார நிபுணர். கல்லூரிப் பேராசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், கல்லூரி மாணவர்களுக்காகப் பொருளாதாரப் புத்தகங்கள் எழுதிக் கல்வித் துறையில் பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து, இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரம் ஆகியவை குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி முதலில் தேச அளவிலும், பிறகு உலகளவிலும் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். 

அதன் பிறகு பொருளாதாரம் குறித்த கருத்தரங்குகளில் அவரது பங்கேற்பு இன்றியமையாததாகக் கருதப்பட்டது.

விரைவிலேயே நாட்டின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர்களில் ஒருவராகக் கருதப்பட்டு, திட்டக் குழு உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு நிபுணர் குழுக்களிலும் பங்கு வகித்தார். வெளிநாடுகள் பலவற்றிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்தன.

பொருளாதாரத்தைப் பற்றிப் பேசும் எவரும் பரந்தாமனைக் குறிப்பிடாமல் பேச முடியாது என்ற அளவுக்கு அவரது செல்வாக்கும், பங்களிப்பும் மிகுந்திருந்தன.

அறுபது வயதைக் கடந்த பின் தனது துறை சார்ந்த செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டு ஆன்மீகப் பணிகளில் ஈடுபடத் துவங்கினார். 

ஒரு பிரபல தொண்டு நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, நிர்வாக ரீதியாக அவர்களின் செயல்பாடுகளில் பங்கேற்று வந்தார்,

'ஒரு முழுமையான மனிதர்' என்ற தலைப்பில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக என் பத்திரிகையின் சார்பில் ஒருநாள் முழுவதும் நான் அவர் அருகில் இருந்து கவனித்து அவரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதுவது என்று முடிவானது.

காலை 7 மணிக்கு நான் பரந்தாமனின் வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தியபோது, அவரே வந்து கதவைத் திறந்தார்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், என்னை வரவேற்று உட்கார வைத்து, காப்பி கொடுத்து உபசரித்தார்.

பிறகு என்னிடம், "மிஸ்டர் மணி! நான் என் வேலைகளை செஞ்சுக்கிட்டே இருப்பேன். நீங்க என் கூடவே இருந்து பாருங்க. எங்கிட்ட ஏதாவது கேக்கணும்னா கேளுங்க. முடிஞ்சா அப்பவே பதில் சொல்லுவேன். பிஸியா இருந்தா அப்புறம் சொல்லுவேன்" என்றார்.

"சார்! நீங்க அதுக்குள்ளே குளிச்சு ரெடியாயிட்டீங்களே! எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க?" என்றேன்.

"நாலரை மணிக்கு."

"எப்ப தூங்கப் போவீங்க?"

"பத்தரை மணிக்குத் தூங்கப் போகணும்கறது என்னோட டைம் டேபிள். ஆனா பல நாள் பதினொண்ணுக்கு மேல ஆயிடும்" என்றார்.

அதன் பிறகு அவர் செய்தவற்றை கவனித்துக் குறிப்பெழுதிக் கொண்டே வந்தேன்.

அவருடைய அறிவுக்கூர்மை, சுறுசுறுப்பு, பல விஷயங்களில் அவருக்கிருந்த ஆர்வம் மற்றும் ஞானம், சோர்வோ, சலிப்போ இல்லாமல் அவர் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு வந்தது ஆகியவை என்னை பிரமிக்க வைத்தன.

நான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோதும், அவர் இயல்பாக என்னென்ன செய்வாரோ அவற்றையெல்லாம் செய்து கொண்டு வந்தார். செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது, குறிப்புகள் எழுதுவது, தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றில் அவர் ஈடுபடும்போது நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் நான் எழுந்து அறைக்கு வெளியே சென்று விடுவேன். 

ஆனால் சில சமயம், அவர் என்னை இருக்கச் சொல்லிக் கை காட்டுவார். பொருளாதாரம் மற்றும் பல விஷயங்கள் பற்றி அவர் தொலைபேசியில் பேசும்போது, நான் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சைகை செய்வார்.

காலை உணவுக்குப் பிறகு அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் நானும் அவருடன் காரில் சென்றேன். அவர் சேவையாற்றி வந்த தொண்டு நிறுவனம், வேறு சில அலுவலகங்கள் ஆகிய இடங்களுக்கு அவருடன் சென்றேன். 

அவர் யாரிடமாவது தனிப்பட்ட முறையில் உரையாடும் சமயங்கள் தவிர, மற்ற சமயங்களில் நான் அவருடனேயே இருந்தேன்.

மாலையில் அவர் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு பார்வையாளர் வரிசையில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டேன். 

மாலை வீட்டுக்கு வந்து, மீண்டும் படித்தல், எழுதுதல், தொலைபேசியில் பேசுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டார். 

இரவு உணவு முடிந்ததும் 9 மணிக்கு மேல்தான் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

"ரொம்ப போர் அடிச்சுதா?" என்றார், நான் கிளம்பும்போது.

"இல்ல சார்! உங்க பக்கத்தில இருந்து பாத்ததில, உங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்" என்றேன்.

"ரொம்ப அபாயமானதாச்சே அது!" என்று சிரித்துக்கொண்டே சொன்னவர், "என்ன எழுதறீங்கன்னு பாக்கறேன்!" என்றார்.

ரந்தாமனைப் பற்றிய என்னுடைய கட்டுரை வெளியான அன்று மாலை அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். 

"என்னப்பா இப்படில்லாம் எழுதியிருக்கே!" என்றார் கோபத்துடன். (நான் அவருடன் இருந்தபோது என்னை மரியாதையாக விளித்து வந்தவர், இப்போது என்னை ஒருமையில் விளிப்பதை கவனித்தேன்!)

"எதை சார் சொல்றீங்க?" என்றேன்.

"என்ன ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேக்கறே? நான் ரொம்ப முன்கோபி, சிடுமூஞ்சி அப்படிங்கற மாதிரி எழுதி இருக்கே?"

"சார்! அப்படிப்பட்ட வார்த்தைகளை நான் பயன்படுத்தல. உங்களோட அறிவுக்கூர்மை, பல விஷயங்களைப் பற்றிய உங்க பரந்த அறிவு, ஒரு நிமிஷத்தைக் கூட வீணடிக்காம, நேரத்தை நீங்க பயன்படுத்தற அற்புதம், உங்களோட சேவைகள் இதையெல்லாம் பத்தி எழுதி இருக்கேனே சார்!"

"அதை மட்டும் எழுதியிருந்தா பரவாயில்லயே! நான் ஏதோ பொறுமையில்லாதவன் மாதிரியும், எல்லார்கிட்டயும் எரிஞ்சு விழறவன் என்கிற மாதிரியும் எழுதி இருக்கியே?"

"சார்! நடந்த சம்பவங்களை அப்படியே எழுதியிருக்கேன். நீங்க பொறுமை இல்லாம நடந்துக்கிட்டீங்கன்னு விமர்சனம் பண்ணல. நீங்க எல்லார்கிட்டயும், எல்லா விஷயத்திலேயும் பர்ஃபெக்ஷனை எதிர்பாக்கறவரு. 

"அது இல்லாதபோது, நீங்க கோபப்பட்டுப் பேசறீங்க. காலையில பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடறப்ப, தண்ணி வெக்கலேன்னு சமையல்காரரைக் கோவிச்சுக்கிட்டீங்க. அது மாதிரி டின்னர் சாப்பிடறப்ப, தோசை முறுகலா இல்லேன்னு கோவிச்சுக்கிட்டீங்க. 

"கார்ல வரும்போது, கார்ல ஏசி அதிகமா இருந்ததுங்கறதுக்காக டிரைவரைக் கோவிச்சுக்கிட்டீங்க. சாயந்தரம் நீங்க மீட்டிங்கில பேசறப்ப, மைக் சரியா வேலை செய்யலைங்கறதுக்காக 'ஒரு மைக் கூட ஒழுங்கா அரேஞ்ஜ் பண்ண முடியாதவங்க என்னைப் பேசறதுக்குக் கூப்பிடாதீங்க'ன்னு கூட்டத்தை ஏற்பாடு பண்ணினவர் கிட்ட சத்தமா சொன்னீங்க. மைக் இல்லாமலேயே அது எல்லார் காதிலேயும் விழுந்தது! 

"இது மாதிரியான சம்பவங்களை அப்படியே நடந்தது நடந்தபடி எழுதியிருக்கேன். நடக்காதது எதையாவது நான் எழுதியிருந்தா சொல்லுங்க!" என்றேன்.

அவரிடமிருந்து பேச்சு வரவில்லை, கோபமான பெருமூச்சு மட்டும் தொலைபேசியில் கேட்டது.
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
போற்றி யொழுகப் படும்.

பொருள்:  
எல்லாவற்றிலும் நிறைவாக இருக்கும் தன்மை ஒருவரை விட்டு நீங்காமல் இருக்க வேண்டுமானால், அவர் பொறுமை என்னும் குணத்தைப் போற்றிக் காக்க வேண்டும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Monday, April 16, 2018

153. அவதூறுச் செய்தி

"முப்பது வருஷமா அரசியல்ல இருக்கீங்க. உங்க மேல யாரும் ஒரு தப்புக் கூடச் சொன்னதில்லை. எல்லாக் கட்சித் தலைவர்களும் உங்களை வந்து பார்த்துத் தங்களோட மரியாதையைத் தெரிவிச்சுட்டுப் போறாங்க. உங்களைப் பத்தி ஒரு சின்னப்பய இப்படி எழுதிட்டானே!" என்றான் அருள்மொழி.

"என்ன எழுதிட்டான்?" என்றார் பெரியசாமி.

"நீங்க அரசியல்லேருந்து ஒய்வு பெறப் போறதா அறிவிச்சீங்க இல்ல, அதைக் கிண்டல் பண்ணி, 'பூனை சந்நியாசம் வாங்கிட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கு இது' அப்படின்னு எழுதி இருக்கான்,"

"அப்படீன்னா?"

"என்னங்க, ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கறீங்க?" 

"அப்படில்லாம் எழுதினா, இந்தக் காலத்தில யாருக்கும் புரியாதே! அதனால அதுக்கு விளக்கம் கொடுத்திருப்பானே, அதைக் கேட்டேன்!"

"அதானே பாத்தேன்! உங்களுக்குப் புரியாத விஷயம்னு ஏதாவது இருக்கா என்ன? நீங்க நினைக்கறது சரிதான். பூனை சந்நியாசம் வாங்கினாலும், எலியைப் பாத்தா, அதைப் பிடிக்கப் பாய்ஞ்சு ஓடுமாம். அது மாதிரி நீங்க அரசியல்லேர்ந்து ஒய்வு பெற்றாலும், ஊழல் பண்ண வாய்ப்புக் கிடைச்சா, அதை கப்புனு பிடிச்சுப்பீங்களாம்!"

"அடப்பாவி! என் மேல யாரும் இதுவரைக்கும் எந்த ஊழல் புகாரும் சொன்னதில்லையே!"

"அதான் தலைவரே, எனக்கு நெஞ்சு கொதிக்குது!"

"எழுதினது யாரு? எந்தப் பத்திரிகையில வந்திருக்கு?"

"'அக்கப்போர்' பத்திரிகையிலதான். 'அறிவுக்கொழுந்து'ன்னு ஒரு அரைவேக்காடு அதில அடிக்கடி எழுதுவானே, அவன்தான் எழுதி இருக்கான்."

"ஓ! அது ஒரு குப்பைப் பத்திரிகை ஆச்சே! சரி. பத்திரிகையைக் கொடு. படிச்சுப் பாக்கறேன்" என்றார் பெரியசாமி.

"உங்களைப் பத்தி ரொம்ப அவதூறா எழுதியிருக்கான்யா. நீங்க ஏகப்பட்ட ஊழல் பண்ணிட்டு, உத்தமர் வேஷம் போடறீங்களாம். வெளிநாட்டு வங்கிகள்ள பணம் வச்சிருக்கறவங்க பட்டியல் அரசாங்கத்துக்கு வந்திருக்காம். அந்தப் பட்டியல்ல உங்க பேரும் இருக்காம்! அது தெரிஞ்சுதான், அரசியல்லேர்ந்து ஒதுங்கி இருந்தீங்கன்னா, உங்க அரசியல் எதிரிங்க உங்களை விட்டுடுவாங்கன்னு நெனச்சு, நீங்க அரசியல்லேர்ந்து விலகிட்டீங்களாம். எப்படிப்பட்ட அவதூறு பாருங்க!" என்று சொல்லியபடியே அருள்மொழி அவரிடம் பத்திரிகையைக் கொடுத்தான்.

கட்டுரையைப் படித்த பின், பெரியசாமி, "ரொம்பக் கடுமையாத்தான் இருக்கு!" என்றார்.

"நீங்க அரசியல்லேர்ந்து ஒய்வு பெற்றுட்டீங்கங்கறதனால நீங்க செல்லாக்காசா ஆயிட்டீங்கன்னு நெனச்சு உங்களைச் சீண்டிப் பாத்திருக்கான். சொல்லுங்க. அமைச்சர் கிட்ட சொன்னா அவனைப் புடிச்சு உள்ள போட்டுருவாரு. 'அக்கப்போர்' பத்திரிகையையும் ரெண்டு மாசம் வர விடாம முடக்கச் சொல்லிடலாம்."

"அதெல்லாம் எதுக்கு? கோர்ட்ல அவன் மேல அவதூறு வழக்குப் போட்டா, அவனால அதைச் சமாளிக்க முடியாது. வக்கீல் வச்சு வாதாடறதுக்குக் கூட அவனுக்கு வசதி இல்லை."

"அப்புறம் என்ன? வக்கீலுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லட்டுமா?" 

"வேண்டாம்."

"பின்ன?"

"நீயே சொன்னியே, அவன் ஒரு சின்னப்பயன்னு. நமக்கு வலு இருக்குங்கறதை ஒரு சின்னப் பையன்கிட்ட காட்டணுமா?"

"அவன் உங்களைத் தாக்கியிருக்கான்ல? அவனுக்கு பதிலடி கொடுக்க வேண்டாமா?"

"சில சமயம் ரோட்டில நடந்து போயிக்கிட்டிருக்கறப்ப, யாரோ ஒரு சின்னப்பையன் ஒரு கல்லை எடுத்து நம்ம மேல போட்டான்னா, அவனைத் திருப்பிக் கல்லால அடிப்பமா அல்லது அவன் மேல போலீஸ்ல புகார் கொடுப்பமா? வலிச்சா கூட, அடிபட்ட இடத்தைக் கையால தேச்சு விட்டுட்டுப் போயிக்கிட்டே இருப்போம்ல? ஏன்? அந்தச் சின்னப்பையனுக்கு, தான் செய்யற காரியத்தோட தீவிரம் தெரியாதுங்கறதனாலதானே? அது மாதிரிதான் இந்த அறிவுக்கொழுந்தும், தான் எழுதற அவதூறினால தனக்கு என்ன விளைவுகள் ஏற்படும்னே தெரியாம ஏதோ எழுதியிருக்கான்."

"நீங்க என்ன சொல்ல வரீங்க? அவன் இப்படியெல்லாம் அபாண்டமா, எழுதியிருக்கானே?"

"விட்டுத் தள்ளு!" என்றார் பெரியசாமி.   

இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை.

பொருள்:  
வறுமையிலும் கொடிய வறுமை விருந்தினரை உபசரிக்க முடியாதது. அறிவில்லாதவர்கள் செய்த தீங்கைப் பொறுத்துக்கொள்வதுதான் வலிமையிலும் வலிமை ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















Sunday, April 15, 2018

152. நினைக்கத் தெரிந்த மனமே!

"இப்ப நீங்க செய்யப் போற தியானப் பயிற்சிதான் இந்த 'நித்ய யோகா' கோர்ஸ்ல ரொம்ப முக்கியமான பயிற்சி. 

"உங்களுக்கு எத்தனையோ பேர் பலவிதமான தீங்குகளை இழைச்சிருப்பாங்க. நீங்க அதையெல்லாம் கடந்து வந்திருப்பீங்க. 

"ஆனாலும் உங்களுக்குக் கெடுதல் செஞ்ச மனுஷங்க மேல உங்க ஆழ்மனத்தில் கோபமும் வெறுப்பும் நீறு பூத்த நெருப்பு மாதிரி இருந்துக்கிட்டே இருக்கும். 

"இந்த நெருப்புதான் உங்களுக்குத் தெரியாமலயே உங்களோட வாழ்க்கையையே கொஞ்சம் கொஞ்சமா எரிச்சுக்கிட்டிருக்கு! முன்னேற்றத்துக்கான உங்களோட சிந்தனைகள் நிறைவேற முடியாம உங்க முயற்சிகளை சுட்டுப் பொசுக்கிக்கிட்டிருக்கு. 

"அதனால, இந்த நெருப்பை மூடியிருக்கிற சாம்பலை ஊதி நெருப்பை வெளிக்குக் கொண்டு வந்து, மன்னிப்பு என்கிற நீரை ஊற்றி, அந்த நெருப்பை முழுமையா அழிக்கணும். முதல்ல எல்லாரும் கண்ணை மூடிக்கங்க!" 

குருவின் கட்டளைக்கு இணங்கி, பயிற்சியாளர்கள் அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர்.

அடுத்த சில நிமிடங்களில் பயிற்சியாளர்கள் மனதை அமைதிப்படுத்தி ஆழ்நிலைக்குக் கொண்டு செல்லும் கட்டளைகள் குருவிடமிருந்து வெளிப்பட்டன.

"இப்போது உங்கள் மனம் மிகவும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறது. மெதுவாக உங்கள் கடந்த காலத்துக்குள் செல்லுங்கள். 

"சிறு வயது முதல் உங்களுக்குத் தீங்கு செய்தவர்கள் யார் யார் என்று நினைத்துப் பாருங்கள். ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து அவர்களை ஒரு திறந்த வெளியில் வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்துங்கள். 

"நான் 5 நிமிடம் காத்திருப்பேன். அதற்குள் எத்தனை பேரை நினைவுக்குக் கொண்டு வர முடியுமோ அத்தனை பேரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். 

"5 நிமிடம் கழித்து நான் மீண்டும் பேசுவேன். அப்போது உங்களுக்குத் தீங்கு செய்தவர்களை எப்படி மன்னிப்பது, அதன் மூலம் எப்படி உங்கள் மனத்தின் அடியில் உள்ள நெருப்பை அணைத்து உங்கள் மனதை அதன் முழு வலிமையோடு செயல்பட வைப்பது என்பதை விளக்குகிறேன்."

குரு பயிற்சியாளர்களை நோட்டம் விட்டார். அவர்களில் ஒருவர் மட்டும் கண்களை மூடாமல் அமர்ந்திருந்தார். அவரைக் கண்களை மூடும்படி குரு சைகை செய்தார். ஆனால் அவர் தன் தலையை ஆட்டித் தன்னால் அப்படிச் செய்ய முடியாது என்றோ செய்ய முடியவில்லை என்றோ சொல்ல முயன்றார்.

குரு தன் உதவியாளர்களில் ஒருவரைப் பார்த்துக் கண்ணசைக்க, அவர் அந்த மனிதரை எழுந்திருக்கச் சொல்லி அறைக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

தியான வகுப்பு முடிந்ததும் அந்த மனிதரைத் தனியே அழைத்துப் பேசினார் குரு.

"உங்க பேர் என்ன?" என்றார் குரு.

"சஞ்சீவி."

"நீங்க ஏன் கண்ணை மூடாம இருந்தீங்க?"

"முதல்ல கண்ணை மூடிக்கிட்டுத்தான் இருந்தேன். எனக்குத் தீங்கு செஞ்சவங்களை நினைவுக்குக் கொண்டு வரச் சொல்லி நீங்க சொன்னப்பறம்தான் கண்ணைத் திறந்தேன்." 

"நான் சொன்னதை முயற்சி பண்ணிப் பாத்திருக்கணும் இல்ல?"

"இல்ல குருஜி. எனக்குத் தீங்கு செஞ்சவங்களைப் பத்தி நான் நினைக்க விரும்பல!"

"அதான் நான் சொன்னேனே! உங்க ஆழ்மனதில் அவங்க மேல இருக்கிற வெறுப்பு போகணும்னா, சாம்பலைத் தட்டி மனசுக்கு அடியில இருக்கற நெருப்பை முதல்ல வெளிக்கொண்டு வந்து அப்புறம்தான் தண்ணியை விட்டு அந்த நெருப்பை அணைக்கணும்னு!"

"மன்னிச்சுக்கங்க குரு. என்னால அப்படிச் செய்ய முடியாது."

"ஏன்?"

"எனக்கு ஒரு பழக்கம். எனக்கு யாராவது கெடுதல் செஞ்சாங்கன்னா நான் அதை உடனே மறந்துடுவேன்."

"அப்படியெல்லாம் செய்ய முடியாது. அவங்க மேல உள்ள கோபம் மனசுக்குள்ளதான் இருக்கும். அதை விரட்டி அடிக்கத்தான் இந்த தியானப் பயிற்சி."

"இல்லை குரு. எனக்கு யாராவது கெடுதல் செஞ்சா நான் உடனே அவங்க எனக்கு செஞ்ச நல்ல விஷயங்களை நெனச்சுப் பாப்பேன். அப்படிச் செஞ்சா, அவங்க மேல முதல்ல வந்த கோபம் போயிடும் அல்லது நிறையக் குறைஞ்சுடும். 

"அவங்க எனக்கு நல்லது செஞ்சிருக்காட்டாலும், 'பாவம்! தங்களுக்கு ஏதோ நல்லது நடக்கணும்னு நெனச்சு இப்படிப் பண்ணியிருக்காங்க. எனக்குக் கெடுதல் பண்ணணும்னு அவங்க நெனச்சிருக்க மாட்டாங்க அப்படின்னு நெனைச்சுப்பேன். எப்படியும் அவங்க மேல எனக்குக் கோபமோ வெறுப்போ இல்லாதபடி பாத்துப்பேன். அதனால அவங்க எனக்குக் கெடுதல் செஞ்ச விஷயம் சீக்கிரமே என் மனசை விட்டுப் போயிடும். 

"இப்ப நீங்க சொன்னபடி நான் செஞ்சிருந்தா, நான் மறந்து போன தீங்குகள், அதைச் செஞ்சவங்க எல்லாம் எனக்கு மறுபடி ஞாபகத்துக்கு வரும். இது நல்லதா குருவே?" என்றார் சஞ்சீவி.

குரு மௌனமாக இருந்தார்.

"நான் ஏற்கெனவே மறந்து போன விஷயத்தை மறுபடி நினைவுக்குக் கொண்டு வந்து அப்புறம் அதை நீர்த்துப் போகச் செய்ய முயற்சி செய்யறது சரிதானான்னு எனக்கு சந்தேகமா இருந்தது. அதை உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா அந்த தியானம் பண்ணிப் பாக்கலாம்னு நெனச்சேன்."

'நான்தான் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும் போலிருக்கிறதே!' என்று நினைத்தார் குரு.

இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
மறத்தல் அதனினும் நன்று

பொருள்:  
பிறர் நமக்குச் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை மறந்து விடுவது இன்னும் சிறப்பானது

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ;
      பொருட்பால்                                                                                             காமத்துப்பால்



Saturday, April 14, 2018

151. கானகத்தைத் தேடி...

காட்டுக்குள் இருந்த வால்மீகியின் ஆசிரமத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது அந்த முதியவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

அயோத்தியிலிருந்து கிளம்பிப் பல நாட்கள் பயணம் செய்து, காட்டுக்குள் வழி கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில் எங்கெங்கோ சுற்றி அலைந்து ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.

சீதாப்பிராட்டியைப் பார்க்க வேண்டும் என்று அவர் ஆசிரமத்தின் வாயிலில் இருந்த ஒரு சீடரிடம் செய்தி சொல்லி அனுப்பிய சில நிமிடங்களில் சீதாப்பிராட்டி வெளியே வந்தார்.

முதியவரைப் பார்த்ததும், "மிகவும் களைப்படைந்திருக்கிறீர்களே! முதலில் உணவருந்துங்கள்" என்று சீதை சொல்லி முடிப்பதற்குள்ளேயே உள்ளிருந்து ஒரு சீடர் ஒரு பழத்தட்டுடன் வந்தார். அதை முதியவர் முன் வைத்தார்.

"நான் யார் என்று தெரிந்தால் நீங்கள் என்னை இப்படி உபசரிக்க மாட்டீர்கள் தாயே!" என்றார் முதியவர்.

"நீங்கள் யாராக இருந்தால் என்ன? இங்கே வருபவர்களுக்கு உணவளித்து உபசரிப்பது எங்கள் வழக்கம். அதுவும் உங்களைப் போன்ற முதியவர்களையும், அதிகக் களைப்புடன் வருபவர்களையும் முதலில் உணவருந்தச் செய்தபின்தான் அவர்கள் யார் என்றே கேட்போம்."

"இல்லை தாயே! நான் யார் என்று முதலில் சொல்லி விடுகிறேன். நான் ஒரு சலவைத் தொழிலாளி."

"அப்படியா? இந்த ஆசிரமத்தில் சலவை செய்து உடுத்தக் கூடிய உடையை யாரும் அணிவதில்லையே!"

"இல்லை தாயே! நான் சலவைக்குத் துணி கேட்டு வரவில்லை. நான்...நான்.. அயோத்தியிலிருந்து வருகிறேன்."

ஒருகணம் சீதையின் முகத்தில் ஒரு சோகச் சாயை படிந்தது. ஆனால் மறுகணமே முகமலர்ச்சியுடன், "அயோத்தியில் ராமபிரானும், அவரது சகோதரர்களும் மற்றவர்களும் நலம்தானே?" என்றார்.

அந்த முதியவர் விசும்பி அழத் தொடங்கினார். "நான் யார் என்பது இன்னும் தங்களுக்கு விளங்கவில்லை தாயே! தாங்கள் இந்தக் கானகத்தில் வந்து துன்பத்தை அனுபவிப்பதற்குக் காரணம் நான்தான். தங்களைப் பற்றி நான் அவதூறாகப் பேசியதைக் கேட்டுத்தான் ராமபிரான் தங்களைக் காட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார்" என்றார் அழுகையினூடே.

சீதையின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. "பல வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் அது. அது பற்றி இப்போது என்ன?" என்றார்.

"இல்லை தாயே! ஏதோ ஒரு மனநிலையில் பொறுப்பற்று அப்படிப் பேசி விட்டேன். தீயில் குளித்தெழுந்து தங்கள் தூய்மையை உலகுக்கு உணர்த்தியவர் தாங்கள். அது தெரிந்தும் தங்களை இகழ்ந்து பேசியது நான் செய்த பெரிய கொடுமை."

சீதை பதில் பேசாமல் மௌனமாக இருந்தார்.

"நான் பேசிய பேச்சை எண்ணி எண்ணி இத்தனை ஆண்டுகளாக என்னையே நொந்து கொண்டிருக்கிறேன். தங்களை நேரில் பார்த்து என் தவறுக்கு வருந்தித் தாங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தாங்கள் இருக்கும் இடத்தை விசாரித்தறிந்து, பல நாட்கள் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறேன்" என்றார் முதியவர்.

"பார்த்தீர்களா? உங்களை உணவருந்தச் சொல்லாமல் நான் பேசிக் கொண்டிருக்கிறேனே! முதலில் உணவருந்துங்கள்!" என்றார் சீதை.

"இல்லை தாயே! தாங்கள் எனக்கு ஏதாவது ஒரு தண்டனை அளிக்க வேண்டும். இந்த ஆசிரமத்தில் இருக்கும் மனிதர்களிடம் சொல்லி எனக்குப் பிரம்படியோ, கசையடியோ கொடுக்கச் சொல்லுங்கள்."

"சரி. தண்டனையை அனுபவிக்க உங்கள் உடலில் வலு இருக்க வேண்டும் அல்லவா? நீங்கள் பல நாட்கள் பயணம் செய்து வந்திருக்கிறீர்கள். வழியில் உங்களுக்குத் தேவையான அளவு உணவு கூடக் கிடைத்திருக்காது. எனவே முதலில் உணவருந்துங்கள்"

"உணவருந்தியபின் எனக்கு ஏதாவது தண்டனை அளிப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டபடியே பழங்களை அருந்தத் தொடங்கினார் அந்த முதியவர். சீதை உள்ளே சென்றார்.

சில நிமிடங்களுக்குப் பின் சீதை மீண்டும் வெளியே வந்தபோது, அவருடன் ஒரு சீடர் கையில் ஒரு மண்வெட்டியுடன் வந்தார்.

ஆசிரமத்துக்கு முன்பிருந்த மண் தரையில் மண்வெட்டியால் பள்ளம் தோண்டத் தொடங்கினார் அந்தச் சீடர்.

'இவர் ஏன் இப்போது பள்ளம் தோண்டுகிறார்? இந்தப் பள்ளத்தில் என்னை உயிரோடு புதைக்கப் போகிறார்களோ?' என்ற ஐயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் முதியவர்.

மண் ஈரப்பசையுடன் இருந்ததால் பள்ளம் தோண்டுவது கடினமாக இல்லை. சில நிமிடங்களுக்குள்ளேயே ஒரு சிறிய பள்ளம் உருவாக்கி விட்டது.

"போதும். இப்போது நீங்கள் தோண்டிய பள்ளத்தில் இறங்கி நில்லுங்கள்!" என்றார் சீதை.

 சீடர்  தோண்டுவதை நிறுத்தி விட்டு, மண்வெட்டியைக் கீழே போட்டு விட்டுப் பள்ளத்துக்குள் இறங்கி நின்றார்.

"பெரியவரே! பள்ளத்தில் இறங்கிய அவர் ஏன் பூமிக்குக் கீழே போகாமல் பள்ளத்துக்குள்ளேயே நிற்கிறார் என்று சொல்ல முடியுமா?" என்றார் சீதை.

"அவரைத் தான் பூமி தாங்கிக் கொண்டிருக்கிறதே!" என்றார் முதியவர்.

"பூமியின் மேற்பரப்பில் அவர்  நின்று கொண்டிருந்தபோது பூமி எப்படி அவரைத் தாங்கிக் கொண்டிருந்ததோ, அதேபோல்தான், அவர் பூமியைத் தோண்டித் தான் தோண்டிய பள்ளத்தில் நிற்கும் போதும் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது! 

"என் தந்தை ஜனகர் என்னை பூமியிலிருந்துதான் கண்டெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே நான் பூமியின் புதல்விதான். தன்னைத் தோண்டுபவர்களையும் தாங்கி நிற்கும் என் தாயின் பொறுமையில் சிறிதளவேனும் எனக்கும் இருக்காதா? 

"உங்களை நான் தண்டிக்க விரும்பவில்லை. என்னிடம் உங்கள் தவறைச் சொல்லி வருந்தி விட்ட திருப்தியுடன், நீங்கள் அயோத்திக்குத் திரும்பிப் போய் அங்கே மன நிம்மதியுடன் இருங்கள். 

"நீங்கள் வழியில் உண்பதற்காகக் கொஞ்சம் பழங்களை மூட்டையாகக் கட்டிக் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அதைப் பெற்றுக்கொண்டு கவனமாகப் பயணம் செய்யுங்கள். உங்களுக்கு வழி காட்டச் சற்று தூரம் வரை ஒரு சீடர் உங்களுடன் வருவார்" என்றார் சீதை.

அறத்துப்பால் 
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள்:  
தன்னைத் தோண்டுபவர்களையே இந்த பூமி தாங்கி நிற்பது போல், நம்மை இகழ்ச்சியாகப் பேசுபவர்களை  நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 பொருட்பால்                                                                                         காமத்துப்பால்






















Wednesday, April 11, 2018

150. செய்யாத தவறு!

ஜெகன்மூர்த்தி சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வாரமாகி விட்டது.

இந்த ஒரு வாரத்தில் அவரை யாரும் வீட்டில் வந்து பார்க்கவில்லை.

சிறையிலிருந்து விடுதலையாகி வரும்போது, தன் மகன் கிட்டு தன்னை அழைத்துப் போக சிறைவாசலில் காத்திருப்பான் என்று ஜெகன்மூர்த்தி எதிர்பார்த்தார். ஆனால் அவன் வரவில்லை. மகனே வராதபோது, மகள் ராதிகாவோ, மாப்பிள்ளை குமாரோ வராததில் வியப்பில்லை. மனைவியால் தனியே வர முடியாது.

வீட்டுக்கு வந்த பிறகுதான் அவருக்கு விவரம் தெரிந்தது. சிறைக்குச் சென்ற அப்பாவுடன் ஒரே வீட்டில் இருக்க விருப்பமில்லாமல், கிட்டு ஒரு வாரம் முன்பு வேறு வீடு பார்த்துக்கொண்டு தனியே போய் விட்டானாம்!

வீட்டில் மனைவி கோகிலா மட்டும்தான் இருந்தாள். வீட்டுக்குள் நுழைந்த ஜெகன்மூர்த்தியைப் பார்த்ததும் அவள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.

 "அப்பா வந்துட்டாருடா!" என்று மகனுக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொன்னாள். அதற்குப் பிறகும் அவன் தந்தையை வந்து பார்க்கவில்லை. மகளுக்கும் சொன்னாள். அவளும் வரவில்லை.

இரண்டு வருடம் சிறையில் கணவனுக்குச் சரியான சாப்பாடு இருந்திருக்காதே என்று தினமும் அவருக்கு வகை வகையாகச் சமைத்துப் போட்டாள் கோகிலா. அவருக்கு ருசிக்கவில்லை.

"இருபது வருஷம் அந்தக் கம்பெனிக்கு மாடா உழைச்சேன். என்னோட செயல்பாட்டையும், சாதனைகளையும் பாராட்டி எனக்கு அவார்டு, ப்ரமோஷன் எல்லாம் கொடுத்தாங்க. ஆனா, நான் ஏதோ மோசடி பண்ணிட்டேன்னு சொல்லி, என்னை வேலையை விட்டுத் தள்ளி, என் மேல வழக்குப் போட்டு ரெண்டு வருஷம் ஜெயிலுக்கு அனுப்பினாங்க.

"விடுதலையாகி வந்தப்பறம் என்னைப் பார்க்க என் பொண்ணு, புள்ளைகளுக்கெல்லாம் கூட விருப்பமில்லை. என் கம்பெனியில என்னோட வேலை செஞ்ச ஒத்தருக்குக் கூட என்னைப் பார்க்க இஷ்டமில்லை. நண்பன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சவங்கள்ளாம் எங்கே இருக்காங்கன்னே தெரியல! நீ மட்டும் ஏன் எனக்கு இப்படிப் பாத்துப் பாத்து சமையல் பண்ணிப் போட்டுக்கிட்டிருக்கே? என் மேல உனக்கு வருத்தமில்லையா?" என்றார் அவர் ஒருநாள் மனைவியிடம்.

"வருத்தம், கோபம் எல்லாமே உண்டு. ஆனா..."

"என்ன, பதிபக்தியா?"

"அது மட்டும் இல்ல. அதுக்கு மேல, ஒரு விஷயத்தில உங்க மேல எனக்கு ரொம்ப மதிப்பு இருக்கு!"

"என்ன அது?"

கோகிலா பதில் சொல்வதற்குள் அழைப்பு மணி அடித்தது.

கோகிலா கதவைத் திறந்தாள்.

அவருடைய நிறுவனத்தில் அவருக்கு உதவியாளராக இருந்த பவானி!

உள்ளே வந்த பவானி "சாரி சார்!" என்றாள்.

"என்ன சாரி? எனக்கு எதிரா எல்லா டாகுமெண்ட்டையும் தேடி எடுத்துக் கொடுத்துட்டு, இப்ப நான் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தப்பறம் சாரி சொல்றியா?"

"சார்! ஆஃபீஸ்ல எங்கிட்ட கேட்ட விவரங்களை நான் எப்படிக் கொடுக்காம இருக்க முடியும்? எனக்கு எப்பவுமே உங்க மேல மதிப்பு உண்டு சார்!"

"நான் உனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன்!. இன்க்ரிமெண்ட் எல்லாம் நிறைய வாங்கிக் கொடுத்திருக்கேன். உனக்கு ப்ரோமோஷன் கொடுக்கணும்னு கூட சிபாரிசு பண்ணியிருக்கேன்."

"சார்! நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. ஆனா நான் உங்ககிட்ட மதிப்பு வச்சிருக்கறது அதுக்காகல்லாம் இல்ல சார்!"

"வேற எதுக்காக?"

"நீங்க எங்கிட்ட நடந்துக்கிட்ட விதத்துக்காக! இதுக்கு முன்னால நாலைஞ்சு பேர்கிட்ட நான் உதவியாளரா இருந்திருக்கேன். அவங்க எல்லாருமே எங்கிட்ட ஏதாவது ஒரு விதத்தில தப்பா நடந்துக்கப் பாப்பாங்க. தற்செயலா கை படற மாதிரி என்னைத் தொடுவாங்க. மேலே இடிக்கிற மாதிரி வந்து நிப்பாங்க. ரெண்டு அர்த்தம் வச்சுப் பேசுவாங்க. 'உன் கணவரோட நீ சந்தோஷமா இருக்கியா?'ன்னு ஒரு மாதிரி சிரிச்சுக்கிட்டே கேப்பாங்க. மட்டமான ஜோக்கெல்லாம் சொல்லி, நான் அதை ரசிக்கிறேனான்னு பாப்பாங்க. என் டிரஸ்ஸைப் பத்தி, என் நிறத்தைப் பத்தி, நான் ஸ்லிம்மா இருக்கறதைப் பத்தி, இன்னும் பலவித விஷயங்களைப் பத்தி கேஷுவலாப் பேசற மாதிரி மட்டமாப் பேசுவாங்க.

"ஆனா நீங்க மட்டும்தான் ஆஃபீஸ்ல வேலை பார்த்த பெண்களையெல்லாம் கண்ணியமா நடத்தினவரு. தவறிப் போய்க் கூட ஒரு தப்பான வார்த்தை உங்க வாயிலிருந்து வந்ததில்லை. உங்க பார்வை கூட எப்பவும் தப்பா இருந்தததில்லை. எங்களுக்குத் தெரியும், ஒரு ஆணோட பார்வை எப்படிப்பட்டதுன்னு! நீங்க வேற என்ன தப்புப் பண்ணி இருந்தாலும், என்னை மாதிரி பெண்கள் கிட்ட கண்ணியமா நடந்துக்கிட்டதுக்காக எப்பவுமே நாங்க உங்க மேல மரியாதை வச்சிருப்போம். நான் உங்களைப் பார்க்க வந்தது அந்த மரியாதைக்காகத்தான். நம்ம ஆஃபீஸ்ல வேலை செய்யற மத்த பெண்களும் உங்ககிட்ட அவங்க மரியாதையைத் தெரிவிக்கச் சொன்னாங்க. நான் வரேன் சார்!" என்று கிளம்பினாள்.

"உங்களை நான் மதிக்கிறதுக்கு பதிபக்தியைத் தவிர இன்னொரு காரணமும் இருக்குன்னு சொல்லிக்கிட்டிருந்தேனே, அது பவானி சொன்ன காரணம்தான்!" என்றாள் கோகிலா.

அறத்துப்பால் 
இல்லறவியல் 
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் 
பெண்மை நயவாமை நன்று.

பொருள்:  
ஒருவன் அறத்துக்குப் புறம்பான வேறு செயல்களைப் புரிந்திருந்தாலும், இன்னொருவர் மனைவியை நாடாமல் இருந்தால் அது மிகவும் சிறந்த செயல்.
      பொருட்பால்                                                                                       காமத்துப்பால்



Friday, April 6, 2018

149. மூவரில் ஒருவர்

"நம்ம நிறுவனத்தோட ஜெனரல் மேனேஜர் பதவிக்கு மூணு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்கேன். இந்த மூணு பேர்ல யாரை நியமிக்கறதுன்னு நீங்கதான் சார் முடிவு பண்ணணும்!" என்றான் முகுந்தன்.

"வெளியிலே இருந்து யாரையாவது எடுக்கறதுன்னா நான் அவங்க பின்னணியைப் பார்க்க வேண்டியதுதான். இவங்கள்ளாம் நம்ப நிறுவனத்தோட மூத்த நிர்வாகிகள்தானே? சி ஈ ஓ என்கிற முறையில உங்களுக்குத்தான் அவங்களைப் பத்தி நல்லாத் தெரியுமே! நீங்களே ஒத்தரை நியமிக்கலாமே! இதை ஏன் என்கிட்ட கொண்டு வரீங்க?" என்றார் நிறுவனத்தின் தலைவர் சங்கரராமன்.

"எனக்கு அடுத்த நிலையில இருக்கப் போறவரை நான் தேர்ந்தெடுக்கறதை விட நீங்க தேர்ந்தெடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்கறேன்."

"ஐ அப்ரிஷியேட் யுவர் எதிக்ஸ். மூணு பேரோட ப்ரொஃபைலையும் காட்டுங்க. முதல்ல இருக்கற பேருதான் உங்களோட முதல் தேர்வுன்னு வச்சுக்கலாமா?"

"அப்படி இல்ல. மூணு பேருமே இந்தப் பதவிக்கு ரொம்பவும் பொருத்தமானவங்கதான்."

"சரி. முதல் பேரில இருந்து ஆரம்பிக்கலாம். கிரிதரன்..."

ஒரு நிமிடம் அவரது விவரங்களைப் படித்து விட்டு, "இவரோட பின்னணி நல்லாத்தான் இருக்கு. இது என்ன நிறைய பேப்பர்ஸ் அட்டாச் பண்ணியிருக்கீங்க?" என்றார் சங்கரராமன்.

"அதெல்லாம் ஹெச் ஆர்ல தயார் பண்ணிக் கொடுத்த அவரோட முழுமையான பின்னணி விவரங்கள். அவர் முன்னால வேலை செஞ்ச கம்பெனிகளோட விவரம் எல்லாத்தையும் தொகுத்துத்தான் சுருக்கமா ஒரு ப்ரொஃபைல் ஷீட் தயார் பண்ணியிருக்கோம். அதைத்தான் நீங்க பாத்தீங்க. உங்ககிட்ட கொடுக்கும்போது இந்த அட்டாச்மெண்ட்டையெல்லாம் நான் ரிமூவ் பண்ணியிருக்கணும். ஐ ஆம் சாரி" என்றான் முகுந்தன்.

"அதனால் என்ன?" என்று சொல்லிக் கொண்டே தாள்களை வேகமாகப் புரட்டிய சங்கரராமன், "இதென்ன, ஏதோ எஃப் ஐ ஆர்னு போட்டிருக்கு?" என்றார்.

"சார்! அது ஒண்ணுமில்ல. அது அவர் முன்னால வேலை செஞ்ச கம்பெனி சம்பந்தப்பட்டது."

"என்ன அது? விவரமா சொல்லுங்க."

"சார்! அவருக்கும் ஒரு லேடி ஸ்டாஃபுக்கும் ஏதோ அ ஃபேர்  இருந்திருக்கு. அந்தப் பொண்ணோட சம்மதத்தோடதான் அது நடந்திருக்கு."

"கன்சென்ஸுவல் ரேப்னு சொல்லுவாங்களே, அது மாதிரியா?" என்றார் சங்கரராமன் சிரித்தபடி.

"சார்! இது ரேப் இல்லை. அந்தப் பொண்ணுக்கும் இவருக்கும் ரொம்ப நாளா தொடர்பு இருந்திருக்கு. அது அந்த நிறுவனத்தில எல்லாருக்கும் தெரியுமாம். ஆனா அந்தப் பொண்ணு அவர் தன்னை பாலியல் வன்முறை செஞ்சதா திடீர்னு போலீஸ்ல புகார் கொடுத்திருக்கா!"

"இன்ட்ரஸ்டிங். அப்புறம்?"

"அவரை மிரட்டிப் பணம் கறக்கறதுக்காக அந்தப் பொண்ணோட புருஷன்தான் அவளை அப்படிப் புகார் கொடுக்க வச்சிருக்கான்!"

"அப்படின்னா அவ புருஷனுக்குத் தெரிஞ்சுதான் இந்த அஃபேர் நடந்திருக்குன்னு சொல்லுங்க. திஸ் இஸ் ரியல் கன்சென்சஸ்!"

"புகார் கொடுத்தா அவரு பயந்துடுவாரு, அவரை மிரட்டிப் பணம் வாங்கலாம்னு அவன் பிளான் பண்ணி இருக்கான். ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல உடனே எஃப் ஐ ஆர் போட்டுட்டாங்க. அப்புறம் ஏதோ ஒரு மாதிரி காம்ப்ரமைஸ் ஆயிடுச்சு. ஆனா கிரிதரன் பேர்ல எஃப்  ஐ ஆர் இருந்ததால அவங்க கம்பெனியில அதை அவரோட பர்சனல் ஃபைல்ல ரிக்கார்ட் பண்ணிட்டாங்க."

"ஆமாம். இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அவர் நம்ம கம்பெனியில சேர அப்ளிகேஷன் போட்டபோது, அவரோட பழைய கம்பெனியிலிருந்து வந்த கான்ஃபிடென்ஷியல் ரிப்போர்ட்டில் இந்த எஃப்  ஐ ஆர் பத்தி இருந்ததைப் பாத்துட்டு, அந்த கம்பெனி ஹெச் ஆர் மேனேஜருக்கு ஃபோன் பண்ணி விவரம் கேட்டேன். அவர்தான் இந்த விவரம் எல்லாம் சொன்னார். மத்தபடி கிரிதரன் ஒரு திறமையான நிர்வாகின்னும் சொன்னார்."

"நீங்க ரொம்ப தரோவா இருந்திருக்கீங்க. ஆனா செலக்‌ஷன்ல கோட்டை விட்டுட்டீங்க!"

"என்ன சார் சொல்றீங்க?"

"அடுத்தவனோட மனைவியோட உறவு வச்சுக்கறவனுக்கு எதுக்குமே தகுதியில்லை. ஹி டிஸர்வ்ஸ் நத்திங். எனக்கு இது முன்னாலயே தெரிஞ்சிருந்தா, இந்த ஆளை வேலைக்கு எடுக்காதீங்கன்னு அப்பவே சொல்லியிருப்பேன். இப்ப அவரை டிஸ்மிஸ் பண்ண முடியாது. ஆனா அவர் ஜி. எம்மா வராம தடுக்கலாம்."

"சார்! அது எப்பவோ நடந்தது! நம்ம கம்பெனிக்கு வந்தப்பறம் அவர் மேல எந்தப் புகாரும் இல்ல. அவர் ரொம்பத் திறமையானவர். இந்த மூணு பேர்ல அவர்தான் பெஸ்ட்ங்கறதுன்னு என்னோட அபிப்பிராயம்."

"தென் லெட் அஸ் கோ ஃபார் தி செகண்ட் பெஸ்ட்! சாரி முகுந்தன்! நான் முதலிலேயே சொன்ன மாதிரி, அடுத்தவன் மனைவியோட உறவு வச்சுக்கறவன்லாம் மனுஷனே இல்ல. அவனுக்கு எதுக்கும் எந்த அருகதையும் கிடையாது. கிரிதரன் பேரை அடிச்சிடுங்க. மீதி ரெண்டு பேர்ல ஒத்தரை செலக்ட் பண்ணுவோம்" என்றார் சங்கரராமன் உறுதியாக.

அறத்துப்பால் 
இல்லறவியல் 
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் 
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

பொருள்:  
இன்னொருவனின் மனைவியின் தோள்களை அணைக்காதவர்தான் கடல் சூழ்ந்த இவ்வுலகில் எந்த ஒரு நன்மையையும் பெறத் தகுதி உடையவர்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்









"  

148. தேர்தல் முடிவு!

அக்கவுண்ட்ஸ் மானேஜர் அரவிந்தும் சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸர் ரேகாவும் பேசிக் கொள்ளும்போது ரேகாதான் அரவிந்துக்கு மேலதிகாரியோ என்று தோன்றும்!

அரவிந்தை விட ரேகா இரண்டு வயது மூத்தவள் என்பதைத் தவிர இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

ஒரு வருடம் முன்பு, ரேகா அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்தும், ஒருமுறை இருவரும் தனிமையில் இருந்தபோது அரவிந்த் அவளிடம் தவறான முறையில் பேச யத்தனித்தபோது, அவனைக் கடுமையாகப் பேசி, தனது முறையற்ற பேச்சுக்கு அவனை மன்னிப்புக் கேட்க வைத்தாள் ரேகா.

அரவிந்த் தன்னிடம் மன்னிப்புக் கேட்ட பிறகு ரேகா அவனிடம் இயல்பாகவே நடந்து வந்தாள். ஆயினும் அவன் செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பது போல் அவனிடம் சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.

ரேகா தன்னைப் பற்றி யாரிடமாவது தவறாகச் சொல்லி விடுவாளோ என்ற பயத்தில் அரவிந்தும் அவளை வயதில் மூத்தவள் என்று கருதி மரியாதையாக நடந்து கொள்வது போல் சற்று அடக்கியே வாசித்து வந்தான். 

அடிக்கடி அவளிடம் விளையாட்டாக ஏதாவது பேசி தனக்கு அவள் மீது தவறான எண்ணம் ஏதும் இல்லை என்று காட்டிக் கொள்ள முயன்று வந்தான்.

"என்ன ரேகா மேடம்! எலக்‌ஷன்ல யாரு ஜெயிப்பாங்க?" என்றான் அரவிந்த்.

"என்ன எலக்‌ஷன்?" என்றாள் ரேகா.

"மறந்துட்டீங்களா? நாளைக்கு நம்ம கம்பெனி ஆண்டு விழாவிலே பெண் ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து ஆண் ஊழியர்கள்ள ஒத்தரை 'பெஸ்ட் மேன்'னு தேர்ந்தெடுக்கப் போறீங்களே, அந்த எலக்‌ஷனைப் பத்திக் கேட்டேன்!"

"ஓ! அதுவா? நிச்சயமா நீ ஜெயிக்கப் போறதில்ல!" என்றாள் ரேகா.

"என்ன ரேகா! இப்படிச் சொல்லிட்டீங்க? நான்தான் ஜெயிப்பேன்னு நம்ம ஆஃபீஸ்ல எல்லாரும் பேசிக்கிறாங்க!"

"பெண்கள் எதை வச்சு ஓட்டுப் போடுவாங்கன்னு ஆண்களுக்கு எப்படித் தெரியும்?"

"சரி. உங்க ஓட்டு யாருக்கு?"

"யாரு ஜெயிக்கப் போறாங்களோ அவங்களுக்குத்தான்!"

"அப்படின்னா நிச்சயமா எனக்கு இல்ல!"

"அடேயப்பா! என்ன ஷார்ப்! அதான் உன்னை மானேஜராப் போட்டிருக்காங்க!" என்றாள் ரேகா.

ண்டு விழா சனியன்று நடந்து முடிந்தது. திங்கட்கிழமையன்று அலுவலகம் வந்ததும் அரவிந்த் ரேகாவைப் பார்த்து, "ஹலோ!" என்றான்.

"ஹலோ பெஸ்ட் மேன்!" என்றாள் ரேகா.

"வெறுப்பேத்தாதீங்க!" என்றான் அரவிந்த். "எப்படிப் பெண்கள் எல்லாம் சேர்ந்து 'பெஸ்ட் மேனா' முரளியைத் தேர்ந்தெடுத்தாங்கன்னு ஆஃபீஸ்ல எல்லாருமே ஆச்சரியப்படறாங்க."

"ஆண்கள் எல்லாம் ஆச்சரியப்படறாங்கன்னு சொல்லு! நான்தான் அன்னிக்கே சொன்னேனே, பெண்கள் யாரைத் தேர்ந்தெடுப்பாங்கன்னு ஆண்களால ஊகிக்க முடியாதுன்னு!"

"இருக்கலாம். ஆனா, முரளியை எப்படித் தேர்ந்தெடுத்தாங்க? அவரு யார்கிட்டயும் சரியாப் பேசக் கூட மாட்டாரே!"

"அரவிந்த்! இப்ப, நம்ம ஆஃபீஸ்ல இருக்கிற ஆண்கள் கிட்ட பெண் ஊழியர்கள்ள 'பெஸ்ட் உமன்' யாருன்னு கேட்டா, யாரைத் தேர்ந்தெடுத்திருப்பீங்க?"

"நிச்சயமா உங்களை இல்ல!" என்றான் அரவிந்த்.

"என்ன, டிட் ஃபார் டேட்டா? அன்னிக்கு நான் சொன்னதுக்கு பதிலுக்கு சொல்லிக் காட்டறியா? என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். யாரைத் தேர்ந்தெடுப்பீங்கன்னும் எனக்குத் தெரியும்!"

"அது எப்படி? பெண்கள் மனசில என்ன இருக்குன்னு ஆண்களுக்குத் தெரியாது, ஆண்கள் மனசில என்ன இருக்குன்னு மட்டும் பெண்களுக்குத் தெரியுமா?"

"தெரியும். ஆண்கள் கிட்ட 'பெஸ்ட் உமன்' யாருன்னு கேட்டா அழகான பொண்ணைத் தேர்ந்தெடுப்பாங்க. ஆனா பெண்கள் கிட்ட 'பெஸ்ட் மேனை'த் தேர்ந்தெடுக்கச் சொன்னா யாரு நல்லவர்னு பார்த்து அவரைத் தேர்ந்தெடுப்பாங்க!"

"ஓ! முரளியை விட நல்லவங்க இந்த ஆஃபீஸ்ல இல்லியா? நான் கூட நல்லவன்தான்!"

"நான் நல்லவர்னு சொல்றது வேற அர்த்தத்தில. பெண்கள் கிட்ட கண்ணியமா நடந்துக்கறவங்களைத்தான் பெண்கள் 'நல்ல ஆண் மகன்'னு நினைப்பாங்க.

"இந்த ஆஃபீஸ்ல இருக்கற பெரும்பாலான ஆண்கள் பெண்களைப் பாத்துப் பல்லிளிக்கறவங்கதான். கல்யாணம் ஆன பொண்ணுன்னு கூடப் பாக்காம அவளை வளைக்க முடியுமான்னு பாப்பாங்க! 

"உங்க எல்லாருக்கும், நீங்க ரொம்ப ஸ்மார்ட், உங்க தோற்றத்திலயும், பேச்சுலயும் பெண்கள் மயங்கிடுவாங்கன்னு எண்ணம்! 

"உங்க மத்தியில, பெண்கள்கிட்ட கண்ணியமா நடந்துக்கற, குறிப்பா கல்யாணம் ஆன பெண்களை மதிச்சு நடந்துக்கற முரளிக்குப் பெண்கள் ஓட்டுப் போட்டதில என்ன ஆச்சரியம் இருக்கு?" என்ற ரேகா அவனைக் காயப்படுத்தி விட்டோமோ என்று நினைத்து "நான் பொதுவா சொன்னேன். தப்பா எடுத்துக்காதே!" என்றாள்.

"அடுத்த எலக்‌ஷன் வரதுக்குள்ள என்னை மாத்திக்கிட்டு உங்க ஓட்டுக்களை வாங்க முடியுமான்னு பாக்கறேன். குறைஞ்சது உங்க ஒத்தரோட ஓட்டையாவது நான் வாங்கணும்!" என்றான் அரவிந்த்

அறத்துப்பால் 
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு 
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பொருள்:  
பிறர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காத பேராண்மை நல்லவர்கள் பின்பற்ற வேண்டிய அறம். அது ஒரு சிறந்த ஒழுக்க நெறியும் ஆகும்.
      பொருட்பால்                                                                                       காமத்துப்பால்


Wednesday, April 4, 2018

147. வெள்ளி விழா


நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வெள்ளி விழா தம்பதிக்குத் தமிழிலும், ஆங்கிலத்திலும் விதவிதமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தன் அருகில் நின்றிருந்த கணவன் நாகராஜனைப் பெருமையுடன் பார்த்தாள் புவனா.

கல்யாணம் ஆகும்போது அவளுக்கு வயது 20, நாகராஜனுக்கு 25.

கல்யாணம் ஆகி ஒரு வருடத்தில் கார்த்திக்கும், மூன்றாவது வருடத்தில் செல்வியும் பிறந்து விட்டார்கள்.

காலம் வேகமாக ஓடி விட்டது. நாகராஜன் வேலையில் வேகமாக முன்னேறி அவனுடைய நிறுவனத்தின் பொது மேலாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டான்.

சொந்த வீடு, சொகுசுக்கார், வருடம் தவறாமல் உல்லாசப் பயணம் என்று வாழ்க்கை இன்பமாக ஓடியது புவனாவுக்கு.

கார்த்திக் படிப்பை முடித்து வேலைக்குப் போய் விட்டான். செல்வியும் படிப்பை முடித்து விட்டு மேற்படிக்கு அமெரிக்கா செல்லத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாள்.

நாகராஜனின் நீண்ட நாள் நண்பன் சந்துரு "குடும்ப வாழ்க்கை எப்படி நடத்தணும்கறதுக்கு நீ ஒரு உதாரணமா இருக்கடா!" என்று சொன்னபோது புவனாவுக்குப் பெருமையாக இருந்தது.

டுத்த நாள் நாகராஜன் அலுவலகத்துக்குச் சென்றபோது அவனது உதவியாளர் பிரேமா "என்ன சார்! சில்வர்  ஜூப்லி எல்லாம் அமர்க்களமா நடந்ததா?" என்றாள்.

"ஓ! நீ ஏன் வரல?" என்றான் நாகராஜன்.

"அதான் சொன்னேனே சார்! என் ஹஸ்பெண்ட் நேத்து ராத்திரி ஜெர்மனிக்குக் கிளம்பிப் போனார். அவர் கிளம்பும்போதே மணி பத்து. அதுக்கப்பறம் எங்க வரது?"

"ஐ மிஸ்ட் யூ!" என்றான் நாகராஜன்.

"உண்மையாவா?" என்றாள் பிரேமா சிரித்துக் கொண்டே.

"எனக்கு ஒரு முக்கியமான கால் இருக்கு. அரைமணி நேரத்துக்கு யாரும் என்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு பியூன் கிட்ட சொல்லிடு" என்றான் நாகராஜன்.

"நான் இருக்கலாமா?"

"நீதானே நோட்ஸ் எடுக்கணும்!"

பிரேமா வெளியில் சென்று பியூனிடம் ஏதோ சொல்லி விட்டு உள்ளே வந்து கதவைப் பூட்டினாள்.

கதவைப் பூட்டி விட்டு அவள் திரும்புவதற்குள் நாகராஜன் அவள் அருகில் வந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் 
பெண்மை நயவா தவன்.

பொருள்:  
பிறன் மனைவியை விரும்பாதவனே அறவழியில் இல்வாழ்க்கை நடத்துவதாகக் கருதப்படுவான்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்







146. எத்தனை காலம்தான்...

"அண்ணன் தன் பொண்ணோட கல்யாணத்தை வேற ஊர்ல வச்சுக்கிட்டிருந்திருக்கக் கூடாது?" என்றான் சிவமணி.

"ஏன் அப்படிச் சொல்றீங்க? கிராமத்தில அவரு பெரிய மனுஷர். பெரிய வீடு இருக்கு. ஆள், படை எல்லாம் இருக்கு. அங்க வச்சுக்காம எதுக்கு வெளியூர்ல போய் வச்சுக்கணும்?" என்றாள் அவன் மனைவி சாந்தா.

"பதினஞ்சு வருஷமா ஊர்ப் பக்கமே போவல. இப்ப நான் போனா ஊர்ல எனக்குத் தெரிஞ்சவங்கள்ளாம் இதையே ஒரு குத்தமா சொல்லிப் பேசுவாங்க."

"இது ஒரு விஷயமா? நம்ம கல்யாணத்துக்கப்பறம் எங்கப்பா போயிட்டதனால அவரோட வியாபாரத்தைப் பாத்துக்கிட்டு நீங்க இந்த ஊரிலே தங்கிட்டீங்கங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே!"

"அது சரிதான். ஆனா இந்தப் பதினஞ்சு வருஷத்தில ஒரு தடவை கூடவா ஊருக்கு வர முடியாம போயிடுச்சுன்னு எல்லோரும் கேப்பாங்களே?"

"எனக்குக் கூட அந்தக் கேள்வி உண்டு! நீங்க ஊருக்குப் போறதையே தவிர்க்கிற மாதிரியில்ல நடந்துக்கிட்டீங்க?"

"அப்படி ஒண்ணும் இல்ல. வியாபாரத்தில இறங்கினப்பறம் ஒரு நிமிஷம் கூட அங்க இங்க நகர முடியல. உனக்கே இது புரியலன்னா ஊர்க்காரங்களுக்கு எங்கே புரியப் போவுது?" என்று அலுத்துக் கொண்டான் சிவமணி.

உண்மையான காரணம் அவனுக்கு மட்டும்தானே தெரியும்!

வனுக்குத் திருமணம் நடப்பதற்கு ஒரு வருடம் முன்பு நடந்த விஷயம் அது. ஊரில் அண்ணன் பெரிய மனிதர். நிறைய நிலங்கள், பெரிய வீடு, ஊருக்குள் செல்வாக்கு எல்லாம் உண்டு.

சிவமணி வாலிப முறுக்கில் கவலையில்லாமல் நண்பர்களுடன் ஊரில் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் உத்ராபதி என்பவரிடம் அண்ணன் தெரிவிக்கச் சொன்ன செய்தியைத் தெரிவிக்க உத்திராபதியின் வீட்டுக்குச் சிவமணி சென்றபோது உத்ராபதி வீட்டில் இல்லை. உத்திராபதியின் மனைவி சுசீலா மட்டும் தனியே இருந்தாள். ஏதோ ஒரு மயக்கத்தில் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. 

அதன் பிறகும், பலமுறை இருவரும் சந்தித்து உறவாடினர். உத்ராபதிக்கும் ஊரில் மற்றவர்களுக்கும் தெரிந்து விடுமோ என்ற பயம் இருவருக்கும் இருந்தபோதும் இருவரும் தொடர்பை முறித்துக் கொள்ளவில்லை.

விஷயம் யாருக்கோ தெரிந்து ஊரில் பரவ ஆரம்பித்து விட்டது. சிவமணியின் அண்ணனிடம் இதைச் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை.

 ஊரில் இந்தப் பேச்சு எழுந்த விஷயம் சிவமணிக்குத் தெரிந்ததும், அவன்  சுசீலாவைப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டான்.

ஆயினும் எந்த நேரமும் இது அண்ணனுக்குத் தெரிந்து விடுமோ, உத்ராபதிக்குத் தெரிந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.

ஒருமுறை சிவமணி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் உத்ராபதி கையில் ஒரு அரிவாளுடன் வருவதைப் பார்த்ததும் சிவமணிக்குக் குலை நடுங்கி விட்டது. 

அருகில் வந்ததும் உத்ராபதி அவனைப் பார்த்துச் சிரித்து விட்டுப் போனதும்தான் சிவமணிக்கு உயிர் வந்தது. 

கிராமத்தில் கையில் அரிவாளுடன் யாராவது நடந்து செல்வது ஒரு இயல்பான விஷயம். அது கூடத் தனக்கு ஒரு கிலியை ஏற்படுத்தி விட்டதை நினைத்து ஏன் இப்படி ஒரு தவறைச் செய்தோம் என்று அவன் தன்னை நொந்து கொண்டே இருந்தான்.

ஒருநாள் உத்ராபதி தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து விட்டான். கடன் தொல்லைதான் காரணம் என்று சொன்னார்கள். 

ஆயினும் அவன் மனைவி தன்னிடம் தொடர்பு வைத்திருப்பது தெரிந்துதான் உத்ராபதி தற்கொலை செய்து கொண்டு விட்டானோ என்ற சந்தேகம் சிவமணிக்கு இருந்து கொண்டே இருந்தது.

சில மாதங்களில் சிவமணிக்கு சாந்தாவுடன் கல்யாணம் நடந்தது. கல்யாணம் நடந்த ஒரு மாதத்திலேயே சாந்தாவின் தந்தை காலமாகி விட்டதால் அவருடைய வியாபாரத்தை சிவமணியே கவனித்துக் கொள்வது என்று முடிவானது. அதன் பிறகு சிவமணி ஊருக்குத் திரும்பி வரவே இல்லை.

சாந்தா சொன்னது போல் அவன் ஊருக்குப் போவதைத் தவிர்த்துக்கொண்டுதான் வந்திருக்கிறான். இப்போது அண்ணன் பெண் கல்யாணத்துக்காக ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம்!

ரில் பலர் அவனை விசாரித்தார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு அவனுக்கும் சுசீலாவுக்கும் இருந்த தொடர்பு பற்றித் தெரியும் என்று தெரியவில்லை.

சிறு வயதில் தன் நெருங்கிய நண்பனாக இருந்த முத்துவிடம் தனிமையில் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தபோது "உத்ராபதி சம்சாரம் எப்படி இருக்காங்க?" என்று அவனிடம் கேட்டான் சிவமணி.

"புருஷன் போனப்பறம் அவங்க வீட்டை விட்டே வெளியில வரதில்ல. நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு வர வருமானத்தில் குடித்தனம் நடத்திக்கிட்டிருக்காங்க. ஆமாம். நீ ஏன் அவங்களைப் பத்திக் கேக்கறே?" என்றான் முத்து.

"இல்லை. ஊர்ல சில பேரு என்னையும் அவங்களையும் தொடர்பு படுத்திப் பேசிக்கிட்டிருந்தாங்க. அதான்..."

"ஆமாம். எனக்கும் அது காதுல விழுந்தது."

"இப்பவும் பேசிக்கிட்டிருக்காங்களா?"

"கிராமத்தில இந்த மாதிரிப் பேச்செல்லாம் அடங்கவே அடங்காது. தலைமுறை தலைமுறையாத் தொடர்ந்துகிட்டே இருக்கும்!"

"நீ அதை நம்பறியா?"

"ஒன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்றான் முத்து.

இதற்கு என்ன பொருள் என்று சிவமணிக்கு விளங்கவில்லை.

"அதைப் பத்தி இப்ப என்ன?" என்ற முத்து பேச்சை மாற்ற விரும்பியவனாக, "உத்ராபதிக்கு ஒரு பையன் இருந்தான்ல, அவன் இப்ப பெரிய ஆளாயிட்டான். டவுன் காலேஜில் பி ஏ படிச்சு முடிச்சுட்டான். அவன் கூட ஒன்னைப் பாக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தான்" என்றான்.

"அவன் எதுக்கு என்னைப் பாக்கணும்?" என்றான் சிவமணி திடுக்கிட்டவனாக. 'ஒரு வேளை அவனுக்கு உண்மை தெரிந்து சினிமாவில் வருவது போல் என்னைப் பழி வாங்க நினைக்கிறானோ?'

"ஏதோ சின்னதா வியாபாரம் பண்ணலாம்னு பாக்கறானாம். 'வியாபார விஷயம்னா சிவமணிட்ட யோசனை கேட்டுக்க. அவனுக்குத்தான் நிறைய அனுபவம் இருக்கு'ன்னு யாரோ அவன்கிட்ட சொல்லி இருக்காங்க."

அவ்வளவுதானா? சிவமணிக்கு நின்று போன மூச்சு மீண்டும் வந்தது போல் இருந்தது.

'எப்போதோ செய்த தவறின் விளைவாக இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படிப் பழிக்கும், பாவத்துக்கும் ஆளாகி, ஏதாவது கெடுதல் நடந்து விடுமோ என்று அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறேன்?'

இந்தக் கேள்விக்கு அவனுக்கு விடை தெரியவில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பொருள்:  
இன்னொருவர் மனைவியை நாடுபவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு துன்பங்களும் நீங்க மாட்டா.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்