அவருக்குத் தண்ணீர், காப்பி எல்லாம் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்திய பிறகுதான் மங்களம் அவர் உடலில் இருந்த சிராய்ப்புகளையும் வீக்கங்களையும் கவனித்தாள்.
"ஏங்க, அடிச்சாங்களா உங்களை?" என்றாள் அதிர்ச்சியுடன்.
"போலீஸ்காரன் அடிக்காம இருப்பானா?"
"நீங்க இந்த ஊர்ல ஒரு பெரிய மனுஷர். உங்க மேலயே கை வச்சுட்டாங்களே, பாவிங்க!" என்று புலம்பினாள் மங்களம்.
"போலீஸ் ஸ்டேஷன் இருக்கறது நம்ம ஊர்ல இல்லியே! அதோட இன்ஸ்பெக்டர் புதுசா வந்திருக்காரு. அவருக்கு நம்ம ஊரைப் பத்தியும் தெரியாது, ஊர் ஜனங்களைப் பத்தியும் தெரியாது. விடு, அதான் வீட்டுக்கு வந்துட்டேனே!" என்றார் சோமசுந்தரம்.
மங்களத்தின் கண்களில் நீர் தளும்பியது. "நல்லா இருப்பானா அந்த மாணிக்கம்?" என்று அவள் கேட்டுக் கொண்டிருந்தபோது, அவள் தம்பி சிவகுரு உள்ளே வந்தான்.
"என்ன மாமா இது? எப்படி நடந்தது இது? நான் உங்களைப் பாக்க தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன். ஆனா உங்களைப் பாக்கவே விடல. ஆமாம் எப்படி நடந்தது இது?"
"அந்த மாணிக்கம் என்னோட வரப்பை வெட்டி விட்டு, என் வயல்லேருந்து அவன் வயலுக்குத் தண்ணியைத் திருப்பி விட்டிருந்தான். நான் அதைப் பாத்துட்டு, மம்முட்டியால மண்ணை வெட்டிப் போட்டு வரப்பை அடைச்சுக்கிட்டிருந்தேன். அப்ப மாணிக்கம் வந்து எங்கிட்ட தகராறு பண்ணினான். கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டுப் போயிட்டான். அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் நான் அவனை மம்முட்டியால வெட்ட வந்ததாப் புகார் கொடுத்திருக்கான். அவங்களும் அதை உண்மைன்னு நெனச்சு என்னைக் கைது செஞ்சுட்டாங்க!" என்றார் சோமசுந்தரம்.
"அது எப்படி? அவன் புகார் கொடுத்தா, விசாரிக்காமக் கைது பண்ணிடுவாங்களா?"
"என்னோட தகராறு பண்றத்துக்குக் கொஞ்ச நேரம் முன்னாலதான், அவன் தன்னோட வயல்ல வேலை செய்யறப்ப மம்முட்டியால கால்ல வெட்டிக்கிட்டிருக்கான்.
"அந்தக் காயத்தைப் போலீஸ்கிட்ட காட்டி, நான் அவனை மம்முட்டியால வெட்ட வந்ததாகவும், அவன் என்கிட்டேயிருந்து தப்பிச்சு ஓடறப்ப என் மம்முட்டி அவன் கால்ல பட்டு, அந்தக் காயம் பட்டுதுன்னும் சொல்லியிருக்கான்.
"நான் மறுபடியும் அவனை வெட்டறதுக்காகத் துரத்தினதாகவும், அவன் என்கிட்டேயிருந்து தப்பிச்சு நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்துட்டதாகவும் இன்ஸ்பெக்டர்கிட்ட ஒரு கதையைச் சொல்லி இருக்கான். கூடவே பொய் சாட்சி சொல்ல ஒரு ஆளையும் அழைச்சுக்கிட்டுப் போயிருக்கான்."
"அடப்பாவி! ஆமாம், அதை நம்பி உங்களைக் கைது பண்ணின இன்ஸ்பெக்டர் எப்படி உங்களை விட்டாரு?"
"இன்ஸ்பெக்டர் ஊர்ல வந்து விசாரிச்சப்ப, பொய் சாட்சி சொன்னவன் பயந்து போய், தான் எதையும் பாக்கலைன்னு ஒத்துக்கிட்டிருக்கான். ஊர்லயும் எல்லாரும் என்னைப் பத்தி நல்ல விதமா சொன்னதால, இன்ஸ்பெக்டர் என்னை விட்டுட்டாரு."
"பொய்க் கேஸ் போட்டானே அந்த மாணிக்கம் - அவன் பேர்ல ஏன் போலீஸ் நடவடிக்கை எடுக்கல?"
"அவன் இப்பவும் நான் அவனை வெட்டினதாத்தானே சொல்லிக் கிட்டிருக்கான்? அதனால சாட்சி இல்லன்னு சொல்லிப் புகாரை முடிச்சு வச்சுட்டாங்க. அவ்வளவுதான்."
"எப்படிப் போட்டு அடிச்சிருக்காங்க பாருடா!" என்றாள் மங்களம்.
"என்னது அடிச்சாங்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்ட சிவகுரு, அவரது காயங்களைப் பார்த்து விட்டு, "அந்த மாணிக்கத்தை சும்மா விடக்கூடாது மாமா!" என்றான்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் சோமசுந்தரத்தின் மகள் புவனா சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே நடந்து வந்து கொண்டிருந்த மாணிக்கத்தின் மீது மோதி விட, இருவருக்கிடையேயும் சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், சிவகுரு சோமசுந்தரத்திடம் வந்தான்.
"மாமா! புவனாவோட மாணிக்கம் பய தகராறு பண்ணியிருக்கான். இதை வச்சு அவன் மேல போலீஸ்ல புகார் கொடுத்து அவனை உள்ள வச்சுடலாம்!" என்றான்.
"புகார் கொடுக்கறதுக்கு இதில என்ன இருக்கு? சின்ன வாய்ச் சண்டைதானே இது?"
"சைக்கிள்ள போயிக்கிட்டிருந்த பொண்ணை வழி மறிச்சு அவகிட்ட தப்பாப் பேசினான்னு புகார் கொடுத்துட்டா, ஈவ் டீசிங் கேஸ் ஆயிடும். ஒரு மாசத்துக்கு ஜாமீன்ல வர முடியாத அளவுக்குப் பண்ணிடலாம். நமக்கு சாதகமா நிறைய சாட்சிகளைத் தயார் பண்ணிடலாம். பொய்க் கேஸ் கொடுத்து உங்களை அவமானப்படுத்திட்டான்கறதனால, ஊர்ல எல்லாரும் மாணிக்கத்தின் மேல கோவமாத்தான் இருக்காங்க. நம்ம கேக்காமலேயே நிறைய பேரு அவனுக்கு எதிரா சாட்சி சொல்லுவாங்க."
சோமசுந்தரம் தன் உடலில் இன்னும் மறையாமலிருந்த சில தழும்புகளைத் தொட்டுப் பார்த்தார். "சிவகுரு! என்னைக் கைது பண்ணி லாக் அப்ல வச்சு அடிச்சு உதைச்சப்ப எனக்கு ஏற்பட்ட வலிகளை இன்னும் நான் மறக்கல. இப்ப மாணிக்கத்தைக் கைது பண்ணினா அவனையும் இப்படித்தானே அடிப்பாங்க? அவனுக்கும் இதே மாதிரிதானே வலிக்கும்? சின்ன வயசுப் பையன், அதுவும் ஈவ் டீசிங் கேஸுங்கறதால அவனை இன்னும் அதிகமாவே அடிப்பாங்க! வேணாம் சிவகுரு. நான் அடியோட வலியையும், ஜெயிலோட கொடுமையையும், அவமானத்தையும் அனுபவிச்சிருக்கேன். அதோட வேதனை எனக்குத் தெரியும். இந்த வேதனை இன்னொருத்தருக்கு ஏற்பட நான் ஏன் காரணமா இருக்கணும்? என்னதான் மாணிக்கம் எனக்குக் கெடுதல் பண்ணியிருந்தாலும், நான் பட்ட மாதிரி வேதனையை அவனுக்குக் கொடுக்க நான் விரும்பல. வேணாம். விட்டுரு" என்றார்.
இல்லறவியல்
அதிகாரம் 16
பொறையுடைமை
குறள் 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.
பொருள்:
பிறர் நமக்குக் கொடுமைகள் செய்தாலும், பதிலுக்கு நாம் அவருக்குத் தீங்கு செய்தால், அதனால் அவருக்கு ஏற்படக்கூடிய வலியை உணர்ந்து, நாம் அவர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும்.
தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in
ReplyDeleteநன்றி. தங்கள் ஆலோசனைப்படி இந்தக் கதைகளை tamilblogs.in வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளாத துவங்கி இருக்கிறேன்.
ReplyDeleteGreat, I am happy that I pointed out a missing story !
ReplyDeleteThanks RR.
Delete