"உங்களுக்கு எத்தனையோ பேர் பலவிதமான தீங்குகளை இழைச்சிருப்பாங்க. நீங்க அதையெல்லாம் கடந்து வந்திருப்பீங்க.
"ஆனாலும் உங்களுக்குக் கெடுதல் செஞ்ச மனுஷங்க மேல உங்க ஆழ்மனத்தில் கோபமும், வெறுப்பும் நீறு பூத்த நெருப்பு மாதிரி இருந்துக்கிட்டே இருக்கும்.
"இந்த நெருப்புதான் உங்களுக்குத் தெரியாமலயே உங்களோட வாழ்க்கையையே கொஞ்சம் கொஞ்சமா எரிச்சுக்கிட்டிருக்கு! முன்னேற்றத்துக்கான உங்களோட சிந்தனைகள் நிறைவேற முடியாம உங்க முயற்சிகளை சுட்டுப் பொசுக்கிக்கிட்டிருக்கு.
"அதனால, இந்த நெருப்பை மூடியிருக்கிற சாம்பலை ஊதி, நெருப்பை வெளிக்குக் கொண்டு வந்து, மன்னிப்பு என்கிற நீரை ஊற்றி, அந்த நெருப்பை முழுமையா அழிக்கணும். முதல்ல எல்லாரும் கண்ணை மூடிக்கங்க!"
குருவின் கட்டளைக்கு இணங்கி, பயிற்சியாளர்கள் அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர்.
அடுத்த சில நிமிடங்களில் பயிற்சியாளர்கள் மனதை அமைதிப்படுத்தி ஆழ்நிலைக்குக் கொண்டு செல்லும் கட்டளைகள் குருவிடமிருந்து வெளிப்பட்டன.
"இப்போது உங்கள் மனம் மிகவும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறது. மெதுவாக உங்கள் கடந்த காலத்துக்குள் செல்லுங்கள்.
"சிறு வயது முதல் உங்களுக்குத் தீங்கு செய்தவர்கள் யார் யார் என்று நினைத்துப் பாருங்கள். ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து அவர்களை ஒரு திறந்த வெளியில் வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்துங்கள்.
"நான் 5 நிமிடம் காத்திருப்பேன். அதற்குள் எத்தனை பேரை நினைவுக்குக் கொண்டு வர முடியுமோ அத்தனை பேரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
"5 நிமிடம் கழித்து நான் மீண்டும் பேசுவேன். அப்போது உங்களுக்குத் தீங்கு செய்தவர்களை எப்படி மன்னிப்பது, அதன் மூலம் எப்படி உங்கள் மனத்தின் அடியில் உள்ள நெருப்பை அணைத்து உங்கள் மனதை அதன் முழு வலிமையோடு செயல்பட வைப்பது என்பதை விளக்குகிறேன்."
குரு பயிற்சியாளர்களை நோட்டம் விட்டார். அவர்களில் ஒருவர் மட்டும் கண்களை மூடாமல் அமர்ந்திருந்தார். அவரைக் கண்களை மூடும்படி குரு சைகை செய்தார். ஆனால் அவர் தன் தலையை ஆட்டித் தன்னால் அப்படிச் செய்ய முடியாது என்றோ, செய்ய முடியவில்லை என்றோ சொல்ல முயன்றார்.
குரு தன் உதவியாளர்களில் ஒருவரைப் பார்த்துக் கண்ணசைக்க, அவர் அந்த மனிதரை எழுந்திருக்கச் சொல்லி அறைக்கு வெளியே அழைத்துச் சென்றார்.
தியான வகுப்பு முடிந்ததும், அந்த மனிதரைத் தனியே அழைத்துப் பேசினார் குரு.
"உங்க பேர் என்ன?" என்றார் குரு.
"சஞ்சீவி."
"நீங்க ஏன் கண்ணை மூடாம இருந்தீங்க?"
"முதல்ல கண்ணை மூடிக்கிட்டுத்தான் இருந்தேன். எனக்குத் தீங்கு செஞ்சவங்களை நினைவுக்குக் கொண்டு வரச் சொல்லி நீங்க சொன்னப்பறம்தான் கண்ணைத் திறந்தேன்."
"நான் சொன்னதை முயற்சி பண்ணிப் பாத்திருக்கணும் இல்ல?"
"இல்ல குருஜி. எனக்குத் தீங்கு செஞ்சவங்களைப் பத்தி நான் நினைக்க விரும்பல!"
"அதான் நான் சொன்னேனே! உங்க ஆழ்மனதில் அவங்க மேல இருக்கிற வெறுப்பு போகணும்னா, சாம்பலைத் தட்டி மனசுக்கு அடியில இருக்கற நெருப்பை முதல்ல வெளிக்கொண்டு வந்து அப்புறம்தான் தண்ணியை விட்டு அந்த நெருப்பை அணைக்கணும்னு!"
"மன்னிச்சுக்கங்க குரு. என்னால அப்படிச் செய்ய முடியாது."
"ஏன்?"
"எனக்கு ஒரு பழக்கம். எனக்கு யாராவது கெடுதல் செஞ்சாங்கன்னா நான் அதை உடனே மறந்துடுவேன்."
"அப்படியெல்லாம் செய்ய முடியாது. அவங்க மேல உள்ள கோபம் மனசுக்குள்ளதான் இருக்கும். அதை விரட்டி அடிக்கத்தான் இந்த தியானப் பயிற்சி."
"இல்லை குரு. எனக்கு யாராவது கெடுதல் செஞ்சா, நான் உடனே அவங்க எனக்கு செஞ்ச நல்ல விஷயங்களை நெனச்சுப் பாப்பேன். அப்படி செஞ்சா, அவங்க மேல முதல்ல வந்த கோபம் போயிடும், அல்லது நிறையக் குறைஞ்சுடும்.
"அவங்க எனக்கு நல்லது செஞ்சிருக்காட்டாலும், 'பாவம்! தங்களுக்கு ஏதோ நல்லது நடக்கணும்னு நெனச்சு இப்படிப் பண்ணியிருக்காங்க. எனக்குக் கெடுதல் பண்ணணும்னு அவங்க நெனச்சிருக்க மாட்டாங்க அப்படின்னு நெனைச்சுப்பேன். எப்படியும் அவங்க மேல எனக்குக் கோபமோ வெறுப்போ இல்லாதபடி பாத்துப்பேன். அதனால அவங்க எனக்குக் கெடுதல் செஞ்ச விஷயம் சீக்கிரமே என் மனசை விட்டுப் போயிடும்.
"இப்ப நீங்க சொன்னபடி நான் செஞ்சிருந்தா, நான் மறந்து போன தீங்குகள், அதைச் செஞ்சவங்க எல்லாம் எனக்கு மறுபடி ஞாபகத்துக்கு வரும். இது நல்லதா குருவே?" என்றார் சஞ்சீவி.
குரு மௌனமாக இருந்தார்.
"நான் ஏற்கெனவே மறந்து போன விஷயத்தை மறுபடி நினைவுக்குக் கொண்டு வந்து அப்புறம் அதை நீர்த்துப் போகச் செய்ய முயற்சி செய்யறது சரிதானான்னு எனக்கு சந்தேகமா இருந்தது. அதை உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அப்புறமா அந்த தியானம் பண்ணிப் பாக்கலாம்னு நெனச்சேன்."
'நான்தான் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும் போலிருக்கிறதே!' என்று நினைத்தார் குரு.
இல்லறவியல்
அதிகாரம் 16
பொறையுடைமை
குறள் 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று
பொருள்:
பிறர் நமக்குச் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை மறந்து விடுவது இன்னும் சிறப்பானது
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment