About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, April 11, 2018

150. செய்யாத தவறு!

ஜெகன்மூர்த்தி சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வாரமாகி விட்டது.

இந்த ஒரு வாரத்தில் அவரை யாரும் வீட்டில் வந்து பார்க்கவில்லை.

சிறையிலிருந்து விடுதலையாகி வரும்போது, தன் மகன் கிட்டு தன்னை அழைத்துப் போக சிறைவாசலில் காத்திருப்பான் என்று ஜெகன்மூர்த்தி எதிர்பார்த்தார். ஆனால் அவன் வரவில்லை. மகனே வராதபோது, மகள் ராதிகாவோ, மாப்பிள்ளை குமாரோ வராததில் வியப்பில்லை. மனைவியால் தனியே வர முடியாது.

வீட்டுக்கு வந்த பிறகுதான் அவருக்கு விவரம் தெரிந்தது. சிறைக்குச் சென்ற அப்பாவுடன் ஒரே வீட்டில் இருக்க விருப்பமில்லாமல், கிட்டு ஒரு வாரம் முன்பு வேறு வீடு பார்த்துக் கொண்டு தனியே போய் விட்டானாம்!

வீட்டில் மனைவி கோகிலா மட்டும்தான் இருந்தாள். வீட்டுக்குள் நுழைந்த ஜெகன்மூர்த்தியைப் பார்த்ததும் அவள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.

 "அப்பா வந்துட்டாருடா!" என்று மகனுக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொன்னாள் கோகிலா. அதற்குப் பிறகும் அவன் தந்தையை வந்து பார்க்கவில்லை. மகளுக்கும் சொன்னாள். அவளும் வரவில்லை.

இரண்டு வருடம் சிறையில் கணவனுக்குச் சரியான சாப்பாடு இருந்திருக்காதே என்று தினமும் அவருக்கு வகை வகையாகச் சமைத்துப் போட்டாள் கோகிலா. அவருக்கு ருசிக்கவில்லை.

"இருபது வருஷம் அந்தக் கம்பெனிக்கு மாடா உழைச்சேன். என்னோட செயல்பாட்டையும், சாதனைகளையும் பாராட்டி எனக்கு அவார்டு, ப்ரமோஷன் எல்லாம் கொடுத்தாங்க. ஆனா, நான் ஏதோ மோசடி பண்ணிட்டேன்னு சொல்லி, என்னை வேலையை விட்டுத் தள்ளி, என் மேல வழக்குப் போட்டு ரெண்டு வருஷம் ஜெயிலுக்கு அனுப்பினாங்க.

"விடுதலையாகி வந்தப்பறம் என்னைப் பார்க்க என் பொண்ணு, புள்ளைகளுக்கெல்லாம் கூட விருப்பமில்லை. என் கம்பெனியில என்னோட வேலை செஞ்ச ஒத்தருக்குக் கூட என்னைப் பார்க்க இஷ்டமில்லை. நண்பன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சவங்கள்ளாம் எங்கே இருக்காங்கன்னே தெரியல! நீ மட்டும் ஏன் எனக்கு இப்படிப் பாத்துப் பாத்து சமையல் பண்ணிப் போட்டுக்கிட்டிருக்கே? என் மேல உனக்கு வருத்தமில்லையா?" என்றார் அவர், மனைவியிடம்.

"வருத்தம், கோபம் எல்லாமே உண்டு. ஆனா..."

"என்ன, பதிபக்தியா?"

"அது மட்டும் இல்ல. அதுக்கு மேல, ஒரு விஷயத்தில உங்க மேல எனக்கு ரொம்ப மதிப்பு இருக்கு!"

"என்ன அது?"

கோகிலா பதில் சொல்வதற்குள் அழைப்பு மணி அடித்தது.

கோகிலா கதவைத் திறந்தாள்.

அவருடைய நிறுவனத்தில் அவருக்கு உதவியாளராக இருந்த பவானி!

உள்ளே வந்த பவானி "சாரி சார்!" என்றாள்.

"என்ன சாரி? எனக்கு எதிரா எல்லா டாகுமெண்ட்டையும் தேடி எடுத்துக் கொடுத்துட்டு, இப்ப நான் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தப்பறம் சாரி சொல்றியா?"

"சார்! ஆஃபீஸ்ல எங்கிட்ட கேட்ட விவரங்களை நான் எப்படிக் கொடுக்காம இருக்க முடியும்? எனக்கு எப்பவுமே உங்க மேல மதிப்பு உண்டு சார்!"

"நான் உனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன்!. இன்க்ரிமெண்ட் எல்லாம் நிறைய வாங்கிக் கொடுத்திருக்கேன். உனக்கு ப்ரோமோஷன் கொடுக்கணும்னு கூட சிபாரிசு பண்ணியிருக்கேன்."

"சார்! நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. ஆனா நான் உங்ககிட்ட மதிப்பு வச்சிருக்கறது அதுக்காகல்லாம் இல்ல சார்!"

"வேற எதுக்காக?"

"நீங்க எங்கிட்ட நடந்துக்கிட்ட விதத்துக்காக! இதுக்கு முன்னால நாலைஞ்சு பேர்கிட்ட நான் உதவியாளரா இருந்திருக்கேன். அவங்க எல்லாருமே எங்கிட்ட ஏதாவது ஒரு விதத்தில தப்பா நடந்துக்கப் பாப்பாங்க. தற்செயலா கை படற மாதிரி என்னைத் தொடுவாங்க. மேலே இடிக்கிற மாதிரி வந்து நிப்பாங்க. ரெண்டு அர்த்தம் வச்சுப் பேசுவாங்க. 'உன் கணவரோட நீ சந்தோஷமா இருக்கியா?'ன்னு ஒரு மாதிரி சிரிச்சுக்கிட்டே கேப்பாங்க. மட்டமான ஜோக்கெல்லாம் சொல்லி, நான் அதை ரசிக்கிறேனான்னு பாப்பாங்க. என் டிரஸ்ஸைப் பத்தி, என் நிறத்தைப் பத்தி, நான் ஸ்லிம்மா இருக்கறதைப் பத்தி, இன்னும் பலவித விஷயங்களைப் பத்தி கேஷுவலாப் பேசற மாதிரி மட்டமாப் பேசுவாங்க.

"ஆனா நீங்க மட்டும்தான் ஆஃபீஸ்ல வேலை பார்த்த பெண்களையெல்லாம் கண்ணியமா நடத்தினவரு. தவறிப் போய்க் கூட ஒரு தப்பான வார்த்தை உங்க வாயிலிருந்து வந்ததில்லை. உங்க பார்வை கூட எப்பவும் தப்பா இருந்தததில்லை. எங்களுக்குத் தெரியும், ஒரு ஆணோட பார்வை எப்படிப்பட்டதுன்னு! நீங்க வேற என்ன தப்புப் பண்ணி இருந்தாலும், என்னை மாதிரி பெண்கள் கிட்ட கண்ணியமா நடந்துக்கிட்டதுக்காக எப்பவுமே நாங்க உங்க மேல மரியாதை வச்சிருப்போம். நான் உங்களைப் பார்க்க வந்தது அந்த மரியாதைக்காகத்தான். நம்ம ஆஃபீஸ்ல வேலை செய்யற மத்த பெண்களும் உங்ககிட்ட அவங்க மரியாதையைத் தெரிவிக்கச் சொன்னாங்க. நான் வரேன் சார்!" என்று கிளம்பினாள்.

"உங்களை நான் மதிக்கிறதுக்கு பதிபக்தியைத் தவிர இன்னொரு காரணமும் இருக்குன்னு சொல்லிக்கிட்டிருந்தேனே, அது பவானி சொன்ன காரணம்தான்!" என்றாள் கோகிலா.

அறத்துப்பால் 
இல்லறவியல் 
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் 
பெண்மை நயவாமை நன்று.

பொருள்:  
ஒருவன் அறத்துக்குப் புறம்பான வேறு செயல்களைப் புரிந்திருந்தாலும், இன்னொருவர் மனைவியை நாடாமல் இருந்தால் அது மிகவும் சிறந்த செயல்.
      பொருட்பால்                                                                            காமத்துப்பால்



No comments:

Post a Comment