About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, March 2, 2017

70. கடன் பெற்றார் நெஞ்சம்

"அப்பா! எங்க ஹெட்மாஸ்டர் ஒன்னை வரச் சொன்னார்" என்றான் சிவகுமார்.

"எதுக்குடா?" என்றான் மாணிக்கம் வாயிலிருந்து பீடியை எடுக்காமலேயே.

"தெரியலப்பா. நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து பாத்துட்டுப் போயிடேன்."

"நான் என்ன ஒங்க எட்மாஸ்டர் மாதிரி ரூமுக்குள்ள ஒக்காந்து பொழுதைப்  போக்கிட்டிருக்கவனா? வெய்யில்ல  நாலு எடம் சுத்தினாத்தானே உனக்கும் உன் அம்மாவுக்கும் சோறு போட முடியும்?"

"காலையில வண்டிய எடுத்துக்கிட்டு நேரா ஸ்கூலுக்கு வந்து எங்க எச் எம்மைப் பாத்துட்டு அப்புறம் நீ போக வேண்டிய  எடத்துக்குப் போயிக்கயேன்."

"நீயெல்லாம் எனக்கு புத்தி  சொல்ற அளவுக்கு இருக்கு என் நிலைமை!" என்று மாணிக்கம் சலித்துக் கொண்டாலும், மகன் சொன்னபடி செய்தான்.

சிவகுமார் படித்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. அங்கே பத்தாம் வகுப்பு வரை கல்வி இலவசம்தான். ஆனால் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ஐயாயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. பத்தாம் வகுப்பு படிக்கும் சிவகுமார் நன்றாகப் படிப்பதால் அவன் பதினொன்றாம் வகுப்பில் தொடர வேண்டும் என்பது அவன் தலைமை ஆசிரியரின் விருப்பம்.

எப்படியாவது பணம் கட்டி சிவகுமாரைப் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டால், சில மாதங்களில் அவனுக்கு ஏதாவது ஸ்காலர்ஷிப் ஏற்பாடு செய்து விடுவதாகத் தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம் சொன்னார். கட்டிய பணம் திருப்பிக் கிடைப்பதுடன், அடுத்த ஆண்டு பணம் கட்ட வேண்டியிருக்காது என்றும் அவர் விளக்கினார்.

ஆனால் மாணிக்கம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பழைய வீட்டுப்பொருட்களை வாங்கி விற்கும் அவன் வியாபாரத்துக்காகத் தள்ளுவண்டி வாங்கவும், பொருட்கள் கொள்முதல் செய்யவும் என்று ஏற்கெனவே வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கும் நிலையில் மேலும் கடன்பட அவன் விரும்பவில்லை.

பழைய  வீட்டுப்பொருட்களை அவன் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும். ஆனால் அவனிடம் பொருட்களை வாங்கும் மொத்த வியாபாரிகள் அவனுக்கு இரண்டு மூன்று மாதம் கழித்துத்தான் பணம் கொடுப்பார்கள். அவன் பணம் கொடுத்து வாங்கி வைத்திருக்கும் சில பொருட்களை அவர்கள் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இதனால் அவன் கடன் வளர்ந்து கொண்டே போய் வருமானத்தில் பெரும் பகுதி வட்டிக்கே போய்க் கொண்டிருந்தது.

'இதில் பையனைப் படிக்க வேறு கடன் வாங்க வேண்டுமாக்கும்!' என்று அலுத்துக் கொண்டான் மாணிக்கம்.

சிவகுமார் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியதுமே, அவனைத் தன்னுடன் வியாபாரத்தில் சேர்த்துக் கொண்டு விட்டான் மாணிக்கம். தேர்வு முடிவுகள் வந்து சிவகுமார் பள்ளியிலேயே இரண்டாவது அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் என்ற செய்தி வந்தபோது சிவகுமார் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தான்.

ஒரு வருடத்திலேயே சிவகுமார் தொழிலில் தேர்ச்சி பெற்று விட்டான். பையன் உற்சாகமாக வேலை செய்வதைப் பார்த்த மாணிக்கம் இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, பையனுக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுத்து அவனை வேறு பகுதியில் தனியாக வியாபாரம் செய்யச் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மாணிக்கத்தின் இடது காலில் வலி ஏற்பட்டு அவனால் நடக்க முடியாமல் போய் விட்டது.

மாணிக்கம் நாட்டு வைத்தியம், புத்தூர்க்கட்டு போன்ற சிகிச்சை முறைகளில் ஈடுபட்டிருக்க, சிவகுமார் தனியாகவே வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டான்.

ஏழெட்டு மாதங்கள் ஒடி விட்டன. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், மாணிக்கத்தின் கால் குணமாகவில்லை. வீட்டுக்குள் மட்டும் நடமாடிக் கொண்டிருந்ததால் வலி அதிகம் இல்லாமல் இருந்ததே தவிர, வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை.

சிவகுமார் வியாபாரத்தை நன்றாகவே கவனித்துக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. கடன் குறைந்து கொண்டு வருவதாகச் சொன்னான். வேறு சில மொத்த வியாபாரிகள் தொடர்பு கிடைத்திருப்பதால் லாபம் அதிகம் வருவதாகவும் அவன் சொன்னான். 'பரவாயில்லை, பையன் பிழைத்துக் கொள்வான்' என்று மாணிக்கம் ஆறுதல் அடைந்தான்.

ஒருநாள் சிவகுமார் ஒரு டாக்சியை அழைத்துக்கொண்டு வந்தான். "அப்பா! டவுன் ஆஸ்பத்திரியில டாக்டர்கிட்ட பேசியிருக்கேன். உன் காலை குணப்படுத்திடலாம்னு சொன்னாரு. வா போகலாம்" என்றான்.

'நான் பார்க்காத ஆஸ்பத்திரியா?' என்று நினைத்துக்கொண்ட மாணிக்கம் பையனின் ஆசையைக் கெடுக்க வேண்டாமே என்று நினைத்து அவனுடன் கிளம்பினான்.

"என்னடா இது? தர்ம ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டு வருவேன்னு பாத்தா, இந்த ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்க? இது பணம் புடுங்கற ஆஸ்பத்திரியாச்சே!" என்றான் மாணிக்கம் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததும்.

"அப்படி ஒண்ணும் இல்லப்பா. இங்க நல்லா பாப்பாங்க" என்று சொல்லி விட்டு உள்ளே போன சிவகுமார் சில நிமிடங்களில் திரும்பி வந்தபோது, அவனுடன் ஒரு ஸ்ட்ரெச்சரைத் தள்ளியபடி இரண்டு ஊழியர்கள் வந்தனர்.

ஒரு வாரம் கழித்து மாணிக்கம் வீடு திரும்பியபோது அவன் கால்வலி குணமாகியிருந்தது. ஒரு மாதம் வீட்டில் ஓய்வெடுத்த பிறகு அவனால் நன்றாகவே நடக்க முடிந்தது. ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு செலவு ஆயிற்று என்று எவ்வளவு கேட்டும் சிவகுமார் சொல்லவில்லை.

தன்னால்தான் நன்றாக நடக்க முடிகிறதே, இன்னொரு வண்டி வாங்கித் தானும் வியாபாரத்தில் ஈடுபடலாம் என்று நினைத்துத் தனக்கு வழக்கமாகக் கடன் தரும் குமரேசன் வீட்டுக்குப் போனான் மாணிக்கம்.

மாணிக்கம் கடன் கேட்டதும், குமரேசன் கொஞ்சம் யோசித்தான்.

"என்னங்க யோசனை? என் பையன் கடனைக் கட்டிக்கிட்டு வரான் இல்ல? இப்ப எவ்வளவு பாக்கி இருக்கு?" என்றான் மாணிக்கம்.

"பழைய கடன் முழுக்கக் கட்டிட்டான். ஆனா மறுபடியும் அம்பதாயிரம் ரூபா கடன் வாங்கியிருக்கானே!" என்றான் குமரேசன்.

பழைய கடனை மகன் முழுவதுமாக அடைத்து விட்டான் என்பது மாணிக்கத்துக்கு வியப்பை அளித்தாலும், புதிதாக ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பது அதிர்ச்சியளித்தது.

"எனக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கறத்துக்கே யோசிப்பீங்களே, என் பையனுக்கு எப்படி அம்பதாயிரம் ரூபாயைத் தூக்கிக் குடுத்தீங்க? அதோட அவனுக்கு இன்னும் 18 வயசு ஆகலியே? எப்படிப் பத்திரம் எல்லாம் வாங்கினீங்க?"

"அதையெல்லாம் பாக்காம இருந்திருப்பேனா? இன்னும் அஞ்சாறு மாசத்துல உன் பையனுக்குப் பதினெட்டு வயசு ஆயிடும். அப்ப வேற பத்திரம் வாங்கிக்கறேன்! பத்திரம் எல்லாம் ஒரு நம்பிக்கைக்குத்தானே? நான் என்ன கோர்ட்டுக்கா போகப் போறேன்? உன் பையனால இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியும்ங்கற நம்பிக்கையிலதான் கடன் கொடுத்தேன்."

"எப்படி வந்தது இந்த நம்பிக்கை?'

"என்னப்பா இப்படிக் கேக்கறே? நீ பழைய வீட்டுச்சாமான்களை வாங்கி வித்துக்கிட்டிருந்தே. உன்  பையன் வீடுகள், ஆஃபீஸ்களிலிருந்து  பழைய கம்ப்யூட்டர்களை ஸ்க்ராப் விலைக்கு வாங்கி அவன் நண்பன் ஒத்தன் மூலமா அதையெல்லாம் ரிப்பேர் பண்ணி குறைஞ்ச விலைக்கு வித்து நல்ல லாபம் சம்பாதிக்கிறான்! அதோட அவன் விக்கறது எல்லாத்துக்கும் உடனே பணம் வந்துடுது. அதனால பணப் புழக்கமும் அதிகம். அதனாலதானே உன்னோட கடனையெல்லாம் இவ்வளவு சீக்கிரமா அடைக்க முடிஞ்சுது?"

"ஆனா அம்பதாயிரம் ரூபா பெரிய தொகை இல்லையா?"

"ஆமாம். என்ன, பெரிய தொகைங்கறதால, அதை அடைக்கக் கொஞ்சம் டயம் அதிகமா ஆகும். ஆனா ஒரு நல்ல காரியத்துக்காகத்தானே கேக்கறாங்கறதுனாலதான் கொடுத்தேன்."

"என்ன நல்ல காரியம்? வியாபாரத்தை அபிவிருத்தி பண்ணத்தானே கேட்டான்? அதுக்கு எதுக்கு இவ்வளவு பணம்?"

"என்னப்பா, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற? உன் வைத்தியச் செலவுக்குத்தானே அவன் கடன் கேட்டான்? அதனாலதான் நானும் தயங்காம கொடுத்தேன்? ஆனா உன் பையன் கெட்டிக்காரன். கடன் வாங்கி ஒரு மாசத்துக்குள்ளயே ஐயாயிரம் ரூபா கட்டிட்டான். வட்டி ரெண்டாயிரம் போக அசல்லியே மூவாயிரம் ரூபா குறைஞ்சுடுச்சே!

"வியாபாரத்தில் கெட்டிக்காரனா இருக்கறது இருக்கட்டும். அப்பா கால் சரியாகணும்கறதுக்காக நிறைய ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரிச்சு, நல்ல டாக்டர் யாருன்னு கண்டுபிடிச்சு, அவர்கிட்டே பேசி, செலவு விவரம்லாம் கேட்டுக்கிட்டு, அம்பதாயிரம் ரூபா கடன் வாங்கி வைத்தியம் பாத்திருக்கானே, இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்ப்பா!"

பையன் படிப்புக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாமல் அவனைத் தொழிலில் இழுத்து விட்டதை  நினைத்துக் கொண்டான் மாணிக்கம்.

குணமாகியிருந்த காலில் மீண்டும் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 70
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

பொருள்:
'இவனைப் பிள்ளையாகப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ?' என்று மற்றவர்கள் புகழும் நிலையை ஏற்படுத்துவதுதான் ஒரு மகன் தன்  தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்