About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 21, 2020

310. சுவாமிஜியின் கோபம்!

என் நண்பர் சதாசிவம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர். ஒரு சுவாமிஜியால் ஈர்க்கப்பட்டு அவர் அவருடைய மடத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து விட்டார்.

சதாசிவத்தின் மகனும் மகளும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தனர். 

மனைவி இறந்ததும் சில ஆண்டுகள் தனியாக வசித்து வந்த சதாசிவத்தின் இந்த முடிவு எனக்கு வியப்பளிக்கவில்லை. 

சுவாமிஜியின் ஆசிரமம் ஆந்திராவில் விஜயவாடாவுக்கு அருகே ஒரு சிறிய ஊரில் இருந்தது. சதாசிவம் அங்கேதான் தங்கி ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

ஒருமுறை வேலை விஷயமாக நான் விஜயவாடாவுக்குச் சென்றபோது சதாசிவத்தைப் பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த மடத்துக்குச் சென்றேன்.

என்னைப் பார்த்ததில் சதாசிவத்துக்கு மிகவும் மகிழ்ச்சி. மடத்தில் இருந்தபோது தனிமையாக உணர்ந்திருப்பாரோ என்னவோ! நான் நாள் முழுவதும் அவருடன் இருந்து விட்டு இரவில்தான் விஜயவாடாவுக்குச் செல்ல வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டேன். மடத்தில் சதாசிவத்தின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைத்தேன்.

மடத்தில் இருந்தவர்களை சதாசிவம் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரைப் போலவே அங்கே தங்கி இருந்து மடத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் சிலர் இருந்தனர். 

இவர்களைத் தவிர, சுவாமிஜியின் செயலாளர் சுந்தர் இருந்தார். அவர் எம் பி ஏ படித்தவர், சுவாமிஜியிடம் இருந்த ஈர்ப்பால் பல நல்ல வேலை வாய்ப்புகளைப் புறக்கணித்து விட்டு, அவர் சுவாமிஜியின் செயலாளராகப் பணியாற்றுகிறார் என்று சதாசிவம் சொன்னபோது, அவரை பிரமிப்புடன் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து இயல்பாகப் புன்னகை செய்தார்.

"சதாசிவம்! நீ உன் வேலையைப் பாரு. நான் பாட்டுக்கு இருக்கேன்" என்றேன் சதாசிவத்திடம்.

"நீ ரூம்ல இருக்கறதுன்னா இரு, இல்ல சும்மா மடத்தை சுத்திப் பாத்துக்கிட்டு இரு. நான் அப்பப்ப வந்து உன்னைப் பாத்துக்கறேன்" என்றார் சதாசிவம்.

"சுவாமிஜி எங்க இருப்பாரு? அவரை நான் பாக்க முடியுமா?" என்றேன்.

"அவரு அவரோட அறையில இருப்பாரு. அதிகமா வெளியில வர மாட்டாரு. சாயந்திரம் 6 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு இருக்கு. அப்ப நிறைய பேர் வருவாங்க. நீயும் அவர் பேச்சைக் கேட்டுட்டு இங்கேயே இரவு உணவு சாப்பிட்டுட்டு அப்புறம் போகலாம்" என்றார் சதாசிவம். 

சற்று நேரம் நான் அறையில் உட்கார்ந்து விட்டுப் பிறகு மடத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினேன். 

அது பெரிய இடம். அது கிராமப்புறம் என்பதால் பல ஏக்கர் நிலத்தை மடத்துக்காக வாங்கி இருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் கட்டிடங்கள் அதிகம் இல்லை. பெரும்பாலும் காலியிடமாகத்தான் இருந்தது. பல மரங்களுடன் அந்த இடம் அழகாகவும் அமைதியாகவும் தோற்றமளித்தது. 

ஒருமுறை மடத்தைச் சுற்றி நடந்து விட்டு மீண்டும் முன்புறம் வந்தபோது சட்டென்று ஒரு கதவு திறக்கப்பட்டு, காவியுடை அணிந்த ஒருவர் வெளியே வந்தார். 

அவர் சுவாமிஜியாக இருப்பார் என்று நினைத்துக் கை கூப்பி வணங்கினேன்.

அவர் என் வணக்கத்தைப் பொருட்படுத்தாமல் என்னை உற்றுப் பார்த்து விட்டு, "யார் நீங்க?" என்றார் ஆங்கிலத்தில்.

"சதாசிவத்தோட நண்பன்" என்றேன்.

"ஓ! சரி. உள்ள வாங்க!" என்று என்னை அழைத்தவர், அவர் அறைக்குள் அழைத்துச் சென்று சிம்மாசனம் போன்றிருந்த அவருடைய இருக்கையில் அமர்ந்து, அருகில் இருந்த ஒரு நாற்காலியில் என்னை உட்காரச் சொல்லி விட்டு, ஒரு ஊழியரிடம், "சதாசிவத்தை வரச் சொல்லு!" என்றார் தெலுங்கில். 

சதாசிவம் வந்ததும், "உன் நண்பன் வந்ததை எங்கிட்ட ஏன் சொல்லல?" என்றார் உரத்த குரலில், கோபமாக. அவர் பேசியது தெலுங்கில் என்றாலும் அவர் பேச்சு எனக்குப் புரிந்தது. தெலுங்கு தெரிந்த சதாசிவம் அவரிடம் தெலுங்கிலேயே பதில் சொன்னார். 

"இல்ல. நீங்க பிஸியா இருந்தீங்க. உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு..." என்று மென்று விழுங்கினார் சதாசிவம். 

"இது சத்திரம் இல்ல. இங்க யாராவது வந்தா எனக்குத் தகவல் சொல்லணும்" என்றார் சுவாமிஜி கோபம் தணியாமல்.

"சுவாமிஜி! மன்னிச்சுக்கங்க. நான் இப்பவே கிளம்பிடறேன்" என்று எழுந்த என்னைக் கையமர்த்திய சுவாமிஜி, "இங்க ஆயிரம் பேர் வந்து தங்கினாலும் எனக்கு சந்தோஷம்தான். ஆனா எனக்குத் தகவல் தெரியணும். நான் சதாசிவத்தைக் கண்டிச்சது ஆசிரமத்தோட கட்டுப்பாட்டுக்காக. இப்ப நீங்க சதாசிவத்தோட கெஸ்ட் மட்டும் இல்ல, இந்த ஆசிரமத்தோட கெஸ்ட் கூட!" என்றவர், சதாசிவத்திடம் திரும்பி, "என் அறைக்குப் பல தடவை வந்தியே, அப்ப எங்கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே?" என்றார் கோபம் குறையாமல்.

"இல்ல சுவாமிஜி, நீங்க வேற ஒரு விஷயமா ரொம்பக் கோபத்தில இருந்தீங்க.." என்று ஆரம்பித்தார் சதாசிவம்.

அதற்குள் அறைக்குள் சுவாமிஜியின் செயலாளர் சுந்தர் நுழைந்தார். உள்ளே வரும்போதே, அவர் நடப்பதை கவனித்துப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்!

"சுவாமிஜி! சதாசிவம் உங்ககிட்ட சொல்ல வந்தாரு. நான்தான் உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொன்னேன். நீங்க காலையிலேந்து ரொம்பக் கோபமா இருந்ததால..." என்றார் சுந்தர்.

"என்ன, காலையில நான் உன்னைக் கோவிச்சுக்கிட்டதை இப்ப எங்கிட்ட சொல்லிக் காட்டறியா?" என்றார் சுவாமிஜி இன்னும் அதிகக் கோபத்துடன்.

"இல்லை சுவாமிஜி..." 

"போத் ஆஃப் யூ கெட் லாஸ்ட்!" என்றார் சுவாமிஜி.

இருவரும் மௌனமாக வெளியேறினர்.

நானும் எழுந்தேன். ஆனால் சுவாமிஜி என்னைப் போக விடவில்லை. "நீங்க இருங்க! என்னோட ஆசிரமத்தில கட்டுப்பாடு எனக்கு ரொம்ப முக்கியம். அதனாலதான் இந்தப் பசங்க கிட்ட இப்படிப் பேசினேன். யூ ஆர் மை கெஸ்ட்!" என்றார் என்னிடம்.

'இந்தப் பசங்க! இதென்ன ஆசிரமமா, பள்ளிக்கூடமா?' என்று மனதில் நினைத்தபடி பேசாமல் இருந்தேன்.

அரை மணி நேரம் என்னிடம் பல விஷயங்களைப் பேசி விட்டுத்தான் சுவாமிஜி என்னை விடுவித்தார். இதற்கிடையில் அவருடைய செயலாளர் சுந்தரை இரண்டு முறை கூப்பிட்டு வேறு சில விஷயங்கள் தொடர்பாக முன்பு பேசியது போலவே கடுமையாகப் பேசினார். 

சுவாமிஜியின் கோபமான பேச்சை சுந்தர் மௌனமாகக் கேட்டுக் கொண்டு பொறுமையாக பதில் சொன்னார்.

நான் சுவாமிஜியின் அறையிலிருந்து வெளியே சென்றதும் சதாசிவத்தைத் தேடினேன். அவனைக் காணவில்லை. சுந்தர்தான் எதிர்ப்பட்டார்.

"சதாசிவம் வெளியே போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு. நீங்க என் ரூமுக்கு வாங்களேன்!" என்று என்னை அவர் அறைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

அவர் அறையில் இருந்து சற்று நேரம் அவரிடம் பொதுவாகப் பேசியபின், "சார்! ஒரு விஷயம் கேப்பேன். தப்பா நினைக்க மாட்டீங்களே?" என்றேன்.

"கேளுங்க!" 

"நீங்க நிறையப் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு எத்தனையோ நல்ல வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்கும். நீங்க ஏன் இங்க இருக்கீங்க, அதுவும் உங்க சுவாமிஜியோட கோவத்தை சமாளிச்சுக்கிட்டு?"

"சார்! எனக்கு ஆன்மீகத்தில் நிறைய ஆர்வம் உண்டு. சுவாமிஜிக்கு நிறைய ஞானம் உண்டு. அவர் அளவுக்கு ஆன்மீக விஷயங்களை ஆழமாப் பேசறவங்க ஒரு சில பேர்தான் இருப்பாங்க. அதனால்தான் அவர்கிட்ட செயலாளரா இருந்துக்கிட்டு தினமும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு வரேன்" என்றார் சுந்தர்.

"சார்! நான் இது பத்திப் பேசக் கூடாதுதான். ஆனா ஒரு ஆதங்கத்தில சொல்றேன். சுவாமிஜி எங்கிட்ட கூட நல்லாத்தான் பேசினார். அவரு பெரிய ஞானியா இருக்கலாம். ஆனா அவர் கோபத்தில் உங்ககிட்ட கடுமையாப் பேசறதைப் பாத்தேன். அவர் பேசறதைக் கேட்டு உங்களுக்குக் கோபம் வரலியா? நான் வந்தது பத்தி சுவாமிஜிகிட்ட சதாசிவம் சொல்லாததுக்குக் கூட நீங்க பொறுப்பு ஏத்துக்கிட்டு அவர் மேல பாஞ்ச சுவாமிஜியோட கோபத்தையும் நீங்களே வாங்கிக்கிட்டீங்க! உங்களுக்குக் கோபமோ வருத்தமோ இல்லையா?" என்றேன்.

"அவருக்குக் கோபம் வந்தா அது என்னை ஏன் பாதிக்கணும்? அவர் என்ன சொல்ல வராருங்கறதில மட்டும்தான் நான் கவனம் செலுத்துவேன். அவரோட கோபத்தை நான் பொருட்படுத்தறதே இல்ல" என்றார் சுந்தர் 

சுவாமிஜி ஒரு நல்ல துறவியோ என்னவோ, அவருடைய செயலாளர் சுந்தரிடம் ஒரு நல்ல துறவிக்கான பண்புகள் முழுமையாக இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

பொருள்:
சினத்தை அதிகம் வெளிப்படுத்தியவர் இறந்தவரை ஒத்தவர். சினத்தை அடக்கியவர் துறவியைப் போன்றவர்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்





















Sunday, January 12, 2020

309. வங்கியில் ஒரு விவாதம்!

சுந்தரம் என்ட்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் அதிபர் சோமசுந்தரம் தணிக்கையாளர் சாரங்கனைத் தொலைபேசியில் அழைத்து, "சார்! பாங்க்ல புதுசா ஒரு பிராஞ்ச்  மானேஜர் வந்திருக்காங்க. அவங்க எனக்கு ஃபோன் பண்ணி நம்ம கம்பெனியோட அக்கவுண்ட் திருப்திகரமா இல்லேன்னு சொல்லி ரொம்பக் கோபமாப் பேசினாங்க. அது பத்திப் பேச நாளைக்கு என்னை நேரில வரச் சொல்லி இருக்காங்க. நீங்களும் என்னோட வந்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்றார்.

"வரேன்" என்றார் சாரங்கன்.

சோமசுந்தரமும், சாரங்கனும் வங்கியின் கிளை மேலாளர் கவிதாவின் அறைக்குள் அழைக்கப்பட்டனர். சுந்தரம் என்ட்டர்ப்ரைசஸ் அக்கவுண்ட்டை நிர்வகிக்கும் வங்கி அதிகாரி சுதாகரும் உள்ளே அமர்ந்திருந்தார்.

அவர்கள் உள்ளே சென்று அமர்ந்ததுமே கிளை மேலாளர் கவிதா பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டார்.

"போன வருஷம் உங்க விற்பனை ரொம்பக் குறைஞ்சு போயிருக்கு. உங்க வங்கிக் கணக்கில பண வரவு ரொம்பக் கம்மியா இருக்கு. நீங்க கட்ட வேண்டிய காலாண்டு வட்டியை நேரத்துக்குக் கட்டறதில்ல. இப்ப உங்க ஒர்க்கிங் காப்பிடல் லோனைப் புதுப்பிக்க வேண்டிய நேரம். உங்களுக்குக் கொடுத்திருக்கிற அம்பது லட்சம் ரூபாய் லிமிட்டை முப்பது லட்சமாக் குறைக்கப் போறோம்" என்றார் கவிதா. 

சோமசுந்தரம் கோபமாக ஏதோ சொல்ல முயல, அவர் கையை அழுத்தி அவரைப் பேச வேண்டாம் என்று சைகை செய்த சாரங்கன், "மேடம்! நீங்க சொல்றதெல்லாம் சரிதான். உங்க பார்வையில எங்க லிமிட்டைக் குறைக்கணும்னு நீங்க நினைக்கிறதும் சரிதான். ஆனா எங்களோட பிரச்னையை நான் விளக்கமா சொல்றேன். நீங்க கொஞ்சம் அதைக் கேக்கணும்!" என்றார் பணிவான குரலில். 

"நீங்க சொல்றதைக் கேக்கறத்துக்காக நான் உங்களை வரச் சொல்லல. எங்க முடிவை உங்களுக்கு சொல்றதுக்காகத்தான் வரச் சொன்னேன்!" என்றார் கவிதா அலட்சியமாக.

சோமசுந்தரம் மீண்டும் எதோ சொல்லத் துவங்க, சாரங்கன் மீண்டும் அவர் கையை அழுத்தினார்.

"மேடம். இந்த கம்பெனியோட ஆடிட்டர்ங்கற முறையில நீங்க சுட்டிக் காட்டின குறைகளுக்கு பதில் சொல்ற கடமை எனக்கு இருக்கு. அதைக் கேட்டுட்டு நீங்க முடிவு செய்யுங்க. எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் கொடுக்க முடியுமா?" என்றார் சாரங்கன்.

"எனக்கு நிறைய வேலை இருக்கு" என்று முணுமுணுத்த கவிதா, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, "சீக்கிரமா சொல்லுங்க" என்றார்.

மோட்டார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் என்ட்டர்ப்ரைசஸ் மோட்டார் வாகனத் தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு விற்பனை குறைந்திருப்பதன் காரணத்தை சாரங்கன் விளக்கினார்.

"பெரிய ஆட்டோமொபைல் கம்பெனிகள்கிட்டேந்து எங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாக வந்ததாலதான் காலாண்டு வட்டித்தொகையைக் கட்டறதில தாமதம் ஏற்பட்டுச்சு. ஆனா நாங்க கட்ட வேண்டிய வட்டித்தொகையைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கோம். இப்ப எங்க லிமிட்டைக் குறைச்சீங்கன்னா எங்களுக்கு கஷ்டமா இருக்கும்..." என்றார் சாரங்கன்.

"நீங்க அவங்க ஆடிட்டர்தானே! அவங்க பிரச்னையைத்தான் பேசுவீங்க. அதையெல்லாம் நான் ஏன் கேட்டுக்கணும்?" என்றார். கவிதா இடைமறித்து.  

"அதோட நீங்க அப்படிச் செஞ்சா, எங்களால உடனே 20 லட்ச ரூபாய் கட்டி எங்க கடன் தொகையைக் குறைக்க முடியாது. அதனால எங்க அக்கவுண்ட் வராக்கடன் நிறுவனங்கள் பட்டியல்ல சேந்துடும். அதனால பாங்குக்கும்தான் பிரச்னை!" என்றார் சாரங்கன், கவிதாவின் குறுக்கீட்டைப் பொருட்படுத்தாமல்.

"என்ன பயமுறுத்தறீங்களா? எங்க பிரச்னையை நாங்க பாத்துக்கறோம்!" என்று சீறினார் கவிதா.

"ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க. நிலைமை இம்ப்ரூவ் ஆகுதான்னு பாக்கறோம். இல்லாட்டா நாங்களே படிப்படியா லிமிட்டைக் குறைச்சு ஒரு வருஷத்துக்குள்ள 30 லட்சத்துக்குக் கொண்டு வந்துடுவோம்" என்றார் சாரங்கன்  

கவிதா பதில் சொல்வதற்குள், வங்கி அதிகாரி சுதாகர், "மேடம்! ஒரு நிமிஷம்" என்றார்.

கவிதா அவரிடம் திரும்ப, அவர் மெல்லிய குரலில் ஏதோ சொன்னார். 

கவிதா சாரங்கனிடம் திரும்பி, "அஞ்சு நிமிஷம் வெளியில வெயிட் பண்ணுங்க. நான் டிஸ்கஸ் பண்ணிட்டு உங்களைக் கூப்பிடறேன்" என்றார்.

வெளியே வந்ததும் சோமசுந்தரம் சாரங்கனிடம், "என்ன சார்  இது? அந்த அம்மா உங்களைக் கொஞ்சம் கூட மதிக்காம பேசறாங்க. நீங்க பொறுமையா கேட்டுக்கிட்டிருக்கீங்க. நான் பதில் சொல்ல முயற்சி பண்ணினப்ப என்னையும் தடுத்துட்டீங்க!" என்றார்.

"பாங்க் பார்வையில அவங்க பேசறாங்க!" என்றார் சாரங்கன்.

"அதுக்காக இப்படியா? நீங்க வயசில பெரியவர். ஒரு சீனியர் ஆடிட்டர். உங்க வயசுக்கும், அனுபவத்துக்கும் மதிப்புக் கொடுக்காம, ஏதோ நீங்க பெரிய குத்தம் பண்ணிட்ட மாதிரி உங்க கிட்ட பேசறாங்க. நீங்க ஏதாவது சொன்னா அதை முழுசாக் கேக்காம குறுக்கக் குறுக்கப் பேசறாங்க. நீங்க அவங்களுக்கு சூடா பதில் சொல்லி இருக்கலாம்!" 

"நமக்குக் காரியம் முக்கியம், சோமசுந்தரம். நானோ நீங்களோ பதிலுக்கு அவங்க கிட்ட கோபமா பேசி இருந்தா, பிரச்னை தீராம நாம பாதியில எழுந்து வர வேண்டி இருந்திருக்கும்."

"இப்ப மட்டும் பிரச்னை தீர்ந்திடுச்சா என்ன?" என்று சோமசுந்தரம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தலைமை மேலாளரின் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சுதாகர், "சார்! நீங்க சொன்னதுக்கு மேடம் ஒத்துக்கிட்டாங்க. உங்க லிமிட்டைப் புதுப்பிச்சு இன்னிக்கே ஆர்டர் அனுப்பிடறேன்!" என்றார்.

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

பொருள்:
மனதில் கோபம் இல்லாமல் இருப்பவரால் தான் விரும்பிய நன்மைகளைப் பெற முடியும்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்















Monday, January 6, 2020

308. ஒரு கைதியின் டயரி!

ஆளும் கட்சியின் தேர்தல் முறையீடுகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியதற்காக முத்துசாமி சிறையில் அடைக்கப்பட்டு 25 நாட்கள் ஆகி விட்டன.

அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. 

ஆளும் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக எதிர்க்கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

புதிய அரசின் உத்தரவுக்கேற்ப தேர்தல் முறையீடுகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

முத்துசாமியைச் சிறையிலிருந்து விடுதலை செய்த சப் இன்ஸ்பெக்டர் பசுபதி தயக்கத்துடன் அவரைப் பார்த்து, "ஐயா! உங்ககிட்ட நான் கடுமையா நடந்துக்கிட்டிருந்தா என்னை மன்னிச்சுடுங்க!" என்றார்.

"நடந்துக்கிட்டிருந்தாவா? அப்ப நீங்க எங்கிட்ட கடுமையா நடந்துக்கலையா?" என்றார் முத்துசாமி சிரித்தபடி.

"ஐயா! உங்களுக்குத் தெரியாதது இல்ல. அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்க எல்லாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவா நடந்துக்க வேண்டிய கட்டாயத்திலதானே இருக்கோம்?" என்றார் பசுபதி.

"அப்படியா? அமைதியாப் போராடின என்னை வன்முறையில் ஈடுபட்டதா, பொய்யா வழக்குப் போட்டுக் கைது செஞ்சீங்க. என் வயசுக்குக் கூட மரியாதை கொடுக்காம என்னை வாடா போடான்னு பேசினதோட இல்லாம, தகாத வார்த்தைகளால் திட்டினீங்க. தினம் சிறைக்குள்ள வந்து என்னை மிருகத்தனமா அடிச்சுட்டுப் போனீங்க. இப்படியெல்லாம் செய்யச் சொல்லி உங்ககிட்ட அமைச்சர்களோ, ஆளுங்கட்சிக்காரங்களோ சொன்னாங்களா என்ன?"

"சார்! ஒண்ணு ரெண்டு நாள் ஏதோ கோபத்தில் உங்களை அடிச்சிருக்கலாம்..."

"ஒண்ணு  ரெண்டு நாளா? இருங்க!" என்ற முத்துசாமி தன் ஜிப்பா பையில் கைவிட்டு ஒரு நோட்டை எடுத்தார்.

"என்னைப் பாக்க வந்த என் மனைவிகிட்ட ஒரு நோட்டும் பேனாவும் கொண்டு வரச் சொன்னேன். அவளும் கொண்டு வந்து கொடுத்தா. நீங்க அதுக்கு ஆட்சேபணை சொல்லல. அதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்! என்னைக் கைது செஞ்ச நாள்ளேந்து தினமும் நடந்ததை விவரமா இந்த நோட்டில எழுதி வச்சிருக்கேன். ஒவ்வொரு நாளும் நீங்க எவ்வளவு நேரம் என்னை அடிச்சீங்க, என்னென்ன வாத்தைகள் எல்லாம் சொல்லித் திட்டினீங்கன்னு எல்லாம் தேதி, நேரம் போட்டு எழுதி வச்சிருக்கேன்!"என்றார் முத்துசாமி.

"சார்!"

"இப்ப எங்க கட்சி ஆட்சிக்கு வந்திருக்கு. இந்த டயரியை என் கட்சிக்காரங்க யார் மூலமாவது முதல்வருக்கே என்னால அனுப்பி வைக்க முடியும். இதைப் படிச்சுட்டு அவரு என்ன நடவடிக்கை எடுப்பாரோ எனக்குத் தெரியாது. இல்லாட்டா ஏதாவது பத்திரிகைக்கு இதை அனுப்பினா கூட, 'ஒரு கைதியின் டயரி' ன்னு தொடரா வெளியிடுவாங்க!"

"வேண்டாம் சார்! நான் செஞ்சது தப்புதான்!"

"ஆனா நான் இதை யாருக்கும் அனுப்பப் போறதில்ல. ஏன், இதை எடுத்துக்கிட்டுக் கூடப் போகப் போறதில்ல" என்ற முத்துசாமி, நோட்டுப் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து அருகிலிருந்த குப்பைக் கூடையில் போட்டார்.

"அப்புறம் எதுக்கு இதை எழுதினேன்னு யோசிக்கிறீங்களா? நீங்க என்னைக் கண்டபடி பேசி, அடிச்சுக் கொடுமைப்படுத்தினப்ப, எனக்கு உங்க மேல ஆத்திரம் வரது இயல்புதானே? ஆனா அந்த ஆத்திரம் என் மனசில இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் என் கோபத்தையெல்லாம் கொட்டி இதை எழுதினேன். நல்லவேளை, இப்படி ஒரு வடிகால் இருந்ததால என் கோபமெல்லாம் அப்பப்ப வெளியேறிடுச்சு. இப்ப எனக்கு உங்க மேல கோபம் இல்ல. நீங்க செஞ்சது தப்புதான். இனிமே இப்படிப்பட்ட தப்பைச் செய்யாம இருங்க. நான் வரேன்."

முத்துசாமி கையை வீசியபடி ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்.

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

பொருள்:
நெருப்பில் வாட்டி எடுப்பது போல் வேதனை தரும் அளவுக்கு ஒருவர் நமக்குத் துன்பம் விளைவித்தாலும், அவர் மீது கோபப்படாமல் இருப்பது நமக்குக் கைகூடுமானால் அது மிக நன்று.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்














Saturday, January 4, 2020

307. கை மேல் பலன்!

"எப்படி உள்ளங்கையில அடிபட்டுது?" என்றாள் மீனாட்சி.

"கீழே விழுந்துட்டேன்" என்றார் பரமசிவம். 

"எங்கே விழுந்தீங்க? கீழே விழுந்தா உள்ளங்கையில அடிபடுமா என்ன - அதுவும் சுண்டுவிரலுக்குக் கீழ, விளிம்பில?"

'எப்படி அடிபடும்னு மறுபடி விழுந்து காட்டட்டுமா?' என்று வெடிக்க நினைத்த பரமசிவம், அன்று தான் அலுவலகத்தில் செய்து கொண்ட தீர்மானத்தை நினைத்துக் கோபத்தை அடக்கிக் கொண்டு, "மாடிப்படியில் ஏறும்போது கால் தடுக்கி விழுந்துட்டேன். மேல் படியில கை செங்குத்தா இடிச்சுருக்கும் போல!" என்றார். 

"இனிமேலயாவது எச்சரிக்கையா இருங்க!" என்றாள் மீனாட்சி. 

மனைவியின் இயல்பான வார்த்தைகளைக் கேட்டபோது "இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தான் அன்று அலுவலகத்தில் நினைத்ததை அவை பிரதிபலிப்பதாக அவருக்குத் தோன்றியது.  

அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவம் பரமசிவத்தின் மனதில் நிழலாடியது. 

ரமசிவம் எப்போதுமே கோபத்துக்குப் பெயர் போனவர். அலுவலகத்தில் கிளை நிர்வாகியான அவர் அறைக்குச் செல்லவே ஊழியர்கள் அஞ்சுவார்கள்.

அவர் யாரையாவது உள்ளே அழைத்தால் அவர்கள் கவலையுடனும், பயத்துடனும்தான் உள்ளே போவார்கள். அவர் யாரையாவது கடிந்து பேச மட்டும் செய்தால் 'அப்பா! இதோடு விட்டாரே!' என்று அவர்கள் நிம்மதி அடைவார்கள். 

ஏனெனில் பல சமயம் அவர் ஃபைலைத் தூக்கி ஊழியர் மீது எறிவார். ஏதாவது கடிதம் சரியாக எழுதப்படவில்லை என்றாலோ அல்லது எழுத்துப் பிழைகளுடன் டைப் செய்யப்பட்டிருந்தாலோ அந்தக் கடிதத்தைக் கசக்கி ஊழியர் முகத்தை நோக்கி வீசுவார்!

ஆனால் அன்று அவருடைய கோபம் மிக அதிகமாக இருந்தது. ஒரு ஊழியர் ஒரு முக்கியமான விஷயத்தை அவர் கவனத்துக்குக் கொண்டு வரத் தவறி விட்டார். இதனால் தலைமை அலுவலகத்திலிருந்து அவருக்கு ஒரு கண்டனக் கடிதம் வந்தது.

அந்தக் கடிதத்தைப் படித்ததும் அதிகமான அதிர்ச்சியும் கோபமும் அடைந்த பரமசிவம் ஊழியரை அழைத்து விசாரித்தார். ஊழியர் செய்த தவறு தெரிந்ததும், "நீங்கள் எல்லாம் எதுக்கு வேலைக்கு வரீங்க?" என்று கத்தியபடியே தன்னை அறியாமலேயே மேஜையின் மீது ஓங்கிக் குத்தினார்.

வலுவான மரத்தில் செய்யப்பட அந்தப் பழைய மேஜையில் ஓங்கிக் குத்தியதால் அவர் கையில் அதிக வலி ஏற்பட்டதுடன், சற்று சொரசொரப்பாக இருந்த மேஜையின் மேற்பரப்பின் மீது அவர் கை அழுத்தமாக விழுந்ததால், சுண்டு விரலுக்குக் கீழே அவர் கையின் ஓரத்தில் சிராய்ப்பும் ஏற்பட்டது. அதைத்தான் மனைவியிடம் கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் என்று சொல்லி அவர் சமாளித்தார்!

"என்ன சார் இப்படி அடிபட்டுக்கிட்டீங்களே!" என்று அந்த ஊழியர் அவர் கையைப் பிடித்துப் பார்த்து விட்டு வெளியே ஓடிப் போய் முதல் உதவிப்பெட்டியை எடுத்து வந்து சிராய்த்த இடத்தைப் பஞ்சால் துடைத்துக் களிம்பு தடவி விட்டார்.

"தாங்க்ஸ்!" என்று பரமசிவம் பலவீனமான குரலில் அவருக்கு நன்றி கூறினார். ஊழியர் வெளியே சென்றதும் தன் கோபத்தின் விளைவை நினைத்துப் பரமசிவத்துக்கு அவமானமாக இருந்தது.

மேஜையின் மீது ஓங்கி அடித்தால் கை வலிக்கும், காயம் படக் கூடும் என்ற சிந்தனையைக் கூட எழ விடாமல் தன் கோபம் தன்னைச் செயல்பட வைத்து விட்டதே என்று நினைத்தபோது அவருக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

இனி தனக்குக் கோபம் வரும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்துத் தன் கோபத்தை அடக்கப் பழக வேண்டும் என்று அவர் அப்போது முடிவு செய்தார்.

அதனால்தான் உள்ளங்கையில் எப்படி அடிபடும் என்று மனைவி கேட்டபோது, 'விழுந்து காட்டட்டுமா?' என்று மனதில் உடனே எழுந்த கோபமான பதிலை அடக்கிக் கொண்டு பொறுமையாக அவளுக்கு அவரால் பதில் சொல்ல முடிந்தது. 

'பரவாயில்லை. கோபத்தின் விளைவாகக் கையில் காயம் ஏற்பட்டாலும், அதைப் பயன்படுத்திக்  கோபத்தைக் கட்டுப்படுத்த முடிகிறதே!' என்று நினைத்து ஆறுதல் அடைந்தார் பரமசிவம்.   


துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

பொருள்:
நிலத்தைக் கையால் அறைந்தவன் வலியிலிருந்து தப்ப முடியாதது போல், கோபத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவன் கேடு அடைவதிலிருந்து தப்ப முடியாது.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்














Thursday, January 2, 2020

306. சிறையில் ஒரு சந்திப்பு

கம்பிக்குப் பின்னால் நின்ற சுப்புவைப் பார்த்ததும் வள்ளிக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

"எப்படி இருக்கே வள்ளி? குழந்தைங்க எப்படி இருக்காங்க" என்றான் சுப்பு.

"நீங்க இப்படி ஜெயில்ல இருக்கச்சே நாங்க எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?" என்றாள் வள்ளி, விம்மல்களுக்கிடையே.

"கவலைப்படாதே! சீக்கிரமே ஜாமீன் கிடைச்சுடும்னு வக்கீல் சொல்லி இருக்காரு" என்றான் சுப்பு.

"ஒரு மாசமா ஜெயில்ல இருக்கீங்க. ஜாமீன் கிடைச்சு வெளியில வந்தா கூட வழக்கு முடிஞ்சதும் தண்டனை கிடைச்சா மறுபடி ஜெயிலுக்குத்தானே போகணும்?" என்றாள் வள்ளி, சற்று கோபத்துடன்.

சுப்பு மௌனமாக இருந்தான்.

"அப்படி என்ன கோபம், ஒரு ஆளை அரிவாளால வெட்டற அளவுக்கு?" என்றாள் வள்ளி, ஆற்றாமையுடன்.

''நம்ம வயலுக்கு வர வேண்டிய தண்ணியைத் தன் வயலுக்குத் திருப்பி விட்டான். சொல்லிப் பாத்தேன். கேக்கல. ஆத்திரத்தில கையில இருந்த அரிவாளால அவன் தோள்ள ஒரு போடு போட்டேன். வெட்டுக் காயம்தானே பட்டது? கொலையா பண்ணிட்டேன்?" என்றான் சுப்பு.

"உங்க ஆத்திரத்துக்காக நானும், நம்ப பிள்ளைங்களும் கஷ்டப்படணுமா?"

"உங்களுக்கென்ன கஷ்டம்? சாப்பாட்டுக்கு அரிசி இல்லையா? இல்ல, செலவுக்குப் பணம் இல்லையா? என்னை மாதிரி ஜெயில் களியா தின்னுக்கிட்டிருக்கீங்க?" என்றான் சுப்பு எரிச்சலுடன்.

"சாப்பாடு மட்டும் கிடைச்சுட்டா போதுமா? என்னால வெளியில நடமாடவே முடியல. ரோட்டில நடந்து போனா, என்னைப் பாத்து மத்த பொம்பளைங்கள்ளாம் ஒதுங்கிப் போறாங்க. சில பேரு என் காது படவே 'சுப்பு பெண்டாட்டி போறா. அவ கிட்ட எதுவும் வம்பு வச்சுக்காதீங்க. அவ புருஷன் ஜெயிலிலேந்து வந்து வெட்டிப்புடுவான். ஜாக்கிரதை!'ன்னு கேலியாப் பேசிக்கிறாங்க. கோவிலுக்குப் போனா கூட, எனக்குத் தெரிஞ்சவங்க எங்கிட்ட பேசாம விலகிப் போறாங்க."

"அதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் சரியாயிடும்" என்றான் சுப்பு.

"எங்க சரியாப் போறது? நம்ப பையன் ஸ்கூலுக்கே போக மாட்டேங்கறான். அவனோட நண்பர்கள் கூட அவன்கிட்ட பேச மாட்டேங்கறாங்களாம். சில பேரு கேலியாப் பேசறாங்களாம். அவனால தாங்கிக்கவே முடியலியாம். பள்ளிக்கூடம் போறதையே நிறுத்திடறேம்மான்னு அழறான். நம்ப பொண்ணு - சின்னக் குழந்தை - ஏம்மா என்னை யாரும் விளையாட்டுக்கே சேத்துக்க மாட்டேங்கறாங்கன்னு எங்கிட்ட வந்து அழறா!" என்றாள் வள்ளி.

சுப்புவின் அடிவயிற்றிலிருந்து ஏதோ வந்து அவன் தொண்டையை அடைப்பது போலிருந்தது.  
துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

பொருள்:
தன்னுடன் இணைந்தவரை அழிக்கும் சினம் என்ற நெருப்பு ஒருவருடைய சுற்றத்தாரையும், அவருக்குத் துணையாக இருப்பவர்களையும் கூட அழித்து விடும்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்