About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 21, 2020

310. சுவாமிஜியின் கோபம்!

என் நண்பர் சதாசிவம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர். ஒரு சுவாமிஜியால் ஈர்க்கப்பட்டு அவர் அவருடைய மடத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து விட்டார்.

சதாசிவத்தின் மகனும் மகளும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தனர். 

மனைவி இறந்ததும் சில ஆண்டுகள் தனியாக வசித்து வந்த சதாசிவத்தின் இந்த முடிவு எனக்கு வியப்பளிக்கவில்லை. 

சுவாமிஜியின் ஆசிரமம் ஆந்திராவில் விஜயவாடாவுக்கு அருகே ஒரு சிறிய ஊரில் இருந்தது. சதாசிவம் அங்கேதான் தங்கி ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

ஒருமுறை வேலை விஷயமாக நான் விஜயவாடாவுக்குச் சென்றபோது சதாசிவத்தைப் பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த மடத்துக்குச் சென்றேன்.

என்னைப் பார்த்ததில் சதாசிவத்துக்கு மிகவும் மகிழ்ச்சி. மடத்தில் இருந்தபோது தனிமையாக உணர்ந்திருப்பாரோ என்னவோ! நான் நாள் முழுவதும் அவருடன் இருந்து விட்டு இரவில்தான் விஜயவாடாவுக்குச் செல்ல வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டேன். மடத்தில் சதாசிவத்தின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைத்தேன்.

மடத்தில் இருந்தவர்களை சதாசிவம் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரைப் போலவே அங்கே தங்கி இருந்து மடத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் சிலர் இருந்தனர். 

இவர்களைத் தவிர, சுவாமிஜியின் செயலாளர் சுந்தர் இருந்தார். அவர் எம் பி ஏ படித்தவர், சுவாமிஜியிடம் இருந்த ஈர்ப்பால் பல நல்ல வேலை வாய்ப்புகளைப் புறக்கணித்து விட்டு, அவர் சுவாமிஜியின் செயலாளராகப் பணியாற்றுகிறார் என்று சதாசிவம் சொன்னபோது, அவரை பிரமிப்புடன் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து இயல்பாகப் புன்னகை செய்தார்.

"சதாசிவம்! நீ உன் வேலையைப் பாரு. நான் பாட்டுக்கு இருக்கேன்" என்றேன் சதாசிவத்திடம்.

"நீ ரூம்ல இருக்கறதுன்னா இரு, இல்ல சும்மா மடத்தை சுத்திப் பாத்துக்கிட்டு இரு. நான் அப்பப்ப வந்து உன்னைப் பாத்துக்கறேன்" என்றார் சதாசிவம்.

"சுவாமிஜி எங்க இருப்பாரு? அவரை நான் பாக்க முடியுமா?" என்றேன்.

"அவரு அவரோட அறையில இருப்பாரு. அதிகமா வெளியில வர மாட்டாரு. சாயந்திரம் 6 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு இருக்கு. அப்ப நிறைய பேர் வருவாங்க. நீயும் அவர் பேச்சைக் கேட்டுட்டு இங்கேயே இரவு உணவு சாப்பிட்டுட்டு அப்புறம் போகலாம்" என்றார் சதாசிவம். 

சற்று நேரம் நான் அறையில் உட்கார்ந்து விட்டுப் பிறகு மடத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினேன். 

அது பெரிய இடம். அது கிராமப்புறம் என்பதால் பல ஏக்கர் நிலத்தை மடத்துக்காக வாங்கி இருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் கட்டிடங்கள் அதிகம் இல்லை. பெரும்பாலும் காலியிடமாகத்தான் இருந்தது. பல மரங்களுடன் அந்த இடம் அழகாகவும் அமைதியாகவும் தோற்றமளித்தது. 

ஒருமுறை மடத்தைச் சுற்றி நடந்து விட்டு மீண்டும் முன்புறம் வந்தபோது சட்டென்று ஒரு கதவு திறக்கப்பட்டு, காவியுடை அணிந்த ஒருவர் வெளியே வந்தார். 

அவர் சுவாமிஜியாக இருப்பார் என்று நினைத்துக் கை கூப்பி வணங்கினேன்.

அவர் என் வணக்கத்தைப் பொருட்படுத்தாமல் என்னை உற்றுப் பார்த்து விட்டு, "யார் நீங்க?" என்றார் ஆங்கிலத்தில்.

"சதாசிவத்தோட நண்பன்" என்றேன்.

"ஓ! சரி. உள்ள வாங்க!" என்று என்னை அழைத்தவர், அவர் அறைக்குள் அழைத்துச் சென்று சிம்மாசனம் போன்றிருந்த அவருடைய இருக்கையில் அமர்ந்து, அருகில் இருந்த ஒரு நாற்காலியில் என்னை உட்காரச் சொல்லி விட்டு, ஒரு ஊழியரிடம், "சதாசிவத்தை வரச் சொல்லு!" என்றார் தெலுங்கில். 

சதாசிவம் வந்ததும், "உன் நண்பன் வந்ததை எங்கிட்ட ஏன் சொல்லல?" என்றார் உரத்த குரலில், கோபமாக. அவர் பேசியது தெலுங்கில் என்றாலும் அவர் பேச்சு எனக்குப் புரிந்தது. தெலுங்கு தெரிந்த சதாசிவம் அவரிடம் தெலுங்கிலேயே பதில் சொன்னார். 

"இல்ல. நீங்க பிஸியா இருந்தீங்க. உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு..." என்று மென்று விழுங்கினார் சதாசிவம். 

"இது சத்திரம் இல்ல. இங்க யாராவது வந்தா எனக்குத் தகவல் சொல்லணும்" என்றார் சுவாமிஜி கோபம் தணியாமல்.

"சுவாமிஜி! மன்னிச்சுக்கங்க. நான் இப்பவே கிளம்பிடறேன்" என்று எழுந்த என்னைக் கையமர்த்திய சுவாமிஜி, "இங்க ஆயிரம் பேர் வந்து தங்கினாலும் எனக்கு சந்தோஷம்தான். ஆனா எனக்குத் தகவல் தெரியணும். நான் சதாசிவத்தைக் கண்டிச்சது ஆசிரமத்தோட கட்டுப்பாட்டுக்காக. இப்ப நீங்க சதாசிவத்தோட கெஸ்ட் மட்டும் இல்ல, இந்த ஆசிரமத்தோட கெஸ்ட் கூட!" என்றவர், சதாசிவத்திடம் திரும்பி, "என் அறைக்குப் பல தடவை வந்தியே, அப்ப எங்கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே?" என்றார் கோபம் குறையாமல்.

"இல்ல சுவாமிஜி, நீங்க வேற ஒரு விஷயமா ரொம்பக் கோபத்தில இருந்தீங்க.." என்று ஆரம்பித்தார் சதாசிவம்.

அதற்குள் அறைக்குள் சுவாமிஜியின் செயலாளர் சுந்தர் நுழைந்தார். உள்ளே வரும்போதே, அவர் நடப்பதை கவனித்துப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்!

"சுவாமிஜி! சதாசிவம் உங்ககிட்ட சொல்ல வந்தாரு. நான்தான் உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொன்னேன். நீங்க காலையிலேந்து ரொம்பக் கோபமா இருந்ததால..." என்றார் சுந்தர்.

"என்ன, காலையில நான் உன்னைக் கோவிச்சுக்கிட்டதை இப்ப எங்கிட்ட சொல்லிக் காட்டறியா?" என்றார் சுவாமிஜி இன்னும் அதிகக் கோபத்துடன்.

"இல்லை சுவாமிஜி..." 

"போத் ஆஃப் யூ கெட் லாஸ்ட்!" என்றார் சுவாமிஜி.

இருவரும் மௌனமாக வெளியேறினர்.

நானும் எழுந்தேன். ஆனால் சுவாமிஜி என்னைப் போக விடவில்லை. "நீங்க இருங்க! என்னோட ஆசிரமத்தில கட்டுப்பாடு எனக்கு ரொம்ப முக்கியம். அதனாலதான் இந்தப் பசங்க கிட்ட இப்படிப் பேசினேன். யூ ஆர் மை கெஸ்ட்!" என்றார் என்னிடம்.

'இந்தப் பசங்க! இதென்ன ஆசிரமமா, பள்ளிக்கூடமா?' என்று மனதில் நினைத்தபடி பேசாமல் இருந்தேன்.

அரை மணி நேரம் என்னிடம் பல விஷயங்களைப் பேசி விட்டுத்தான் சுவாமிஜி என்னை விடுவித்தார். இதற்கிடையில் அவருடைய செயலாளர் சுந்தரை இரண்டு முறை கூப்பிட்டு வேறு சில விஷயங்கள் தொடர்பாக முன்பு பேசியது போலவே கடுமையாகப் பேசினார். 

சுவாமிஜியின் கோபமான பேச்சை சுந்தர் மௌனமாகக் கேட்டுக் கொண்டு பொறுமையாக பதில் சொன்னார்.

நான் சுவாமிஜியின் அறையிலிருந்து வெளியே சென்றதும் சதாசிவத்தைத் தேடினேன். அவனைக் காணவில்லை. சுந்தர்தான் எதிர்ப்பட்டார்.

"சதாசிவம் வெளியே போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு. நீங்க என் ரூமுக்கு வாங்களேன்!" என்று என்னை அவர் அறைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

அவர் அறையில் இருந்து சற்று நேரம் அவரிடம் பொதுவாகப் பேசியபின், "சார்! ஒரு விஷயம் கேப்பேன். தப்பா நினைக்க மாட்டீங்களே?" என்றேன்.

"கேளுங்க!" 

"நீங்க நிறையப் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு எத்தனையோ நல்ல வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்கும். நீங்க ஏன் இங்க இருக்கீங்க, அதுவும் உங்க சுவாமிஜியோட கோவத்தை சமாளிச்சுக்கிட்டு?"

"சார்! எனக்கு ஆன்மீகத்தில் நிறைய ஆர்வம் உண்டு. சுவாமிஜிக்கு நிறைய ஞானம் உண்டு. அவர் அளவுக்கு ஆன்மீக விஷயங்களை ஆழமாப் பேசறவங்க ஒரு சில பேர்தான் இருப்பாங்க. அதனால்தான் அவர்கிட்ட செயலாளரா இருந்துக்கிட்டு தினமும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு வரேன்" என்றார் சுந்தர்.

"சார்! நான் இது பத்திப் பேசக் கூடாதுதான். ஆனா ஒரு ஆதங்கத்தில சொல்றேன். சுவாமிஜி எங்கிட்ட கூட நல்லாத்தான் பேசினார். அவரு பெரிய ஞானியா இருக்கலாம். ஆனா அவர் கோபத்தில் உங்ககிட்ட கடுமையாப் பேசறதைப் பாத்தேன். அவர் பேசறதைக் கேட்டு உங்களுக்குக் கோபம் வரலியா? நான் வந்தது பத்தி சுவாமிஜிகிட்ட சதாசிவம் சொல்லாததுக்குக் கூட நீங்க பொறுப்பு ஏத்துக்கிட்டு அவர் மேல பாஞ்ச சுவாமிஜியோட கோபத்தையும் நீங்களே வாங்கிக்கிட்டீங்க! உங்களுக்குக் கோபமோ வருத்தமோ இல்லையா?" என்றேன்.

"அவருக்குக் கோபம் வந்தா அது என்னை ஏன் பாதிக்கணும்? அவர் என்ன சொல்ல வராருங்கறதில மட்டும்தான் நான் கவனம் செலுத்துவேன். அவரோட கோபத்தை நான் பொருட்படுத்தறதே இல்ல" என்றார் சுந்தர் 

சுவாமிஜி ஒரு நல்ல துறவியோ என்னவோ, அவருடைய செயலாளர் சுந்தரிடம் ஒரு நல்ல துறவிக்கான பண்புகள் முழுமையாக இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

பொருள்:
சினத்தை அதிகம் வெளிப்படுத்தியவர் இறந்தவரை ஒத்தவர். சினத்தை அடக்கியவர் துறவியைப் போன்றவர்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்





















No comments:

Post a Comment