அறத்துப்பால்
அவாவறுத்தல்
361. பார்வதி சொன்ன பொய்!
"இன்னிக்கு நானும் உன்னோட ஆசிரமத்துக்கு வரேன்" என்றான் ராஜன்.பார்வதி மௌனமாகத் தலையாட்டினாள். என்றுமில்லாமல் திடீரென்று ஆசிரமத்துக்கு வருவதில் ராஜன் ஆர்வம் காட்டியது அவளுக்கு வியப்பளித்தாலும், அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஆசிரமத்துக்குச் சென்றதும், சுவாமிஜியிடம் தன் கணவனை அறிமுகப் படுத்தினாள் பார்வதி.
"பார்வதி பல வருஷங்களா தினமும் சில மணி நேரம் இந்த ஆசிரமத்துக்கு வந்து சேவை செஞ்சுட்டுப் போறா. இங்கே இருக்கிற துறவிகள், இங்கே சேவை செய்யற பக்தர்கள், அடிக்கடி இங்கே வருகிறவர்கள் எல்லாருக்கும் பார்வதி மேல அன்பும் மதிப்பும் உண்டு. அவளோட அன்பு, பொறுமை, சேவை மனப்பான்மை இதெல்லாம் நிறைய பேருக்குப் பெரிய தூண்டுதலா இருந்திருக்கு. நீங்க இன்னிக்கு இங்கே வந்திருக்கறது எனக்கு சந்தோஷமா இருக்கு!" என்றார் சுவாமிஜி.
சுவாமிஜியிடமிருந்து இப்படி ஒரு புகழ்ச்சியை பார்வதி எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் அவரை நன்றியுடன் பார்த்தாள்.
"ஆமாம், சுவாமிஜி! நானும் அவளோட சேவைகளை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என்னால இங்க வந்து எதுவும் செய்ய முடியல. ஆனா, அவளுக்கு ஆதரவா நான் எப்பவுமே இருப்பேன். அதை உங்ககிட்ட நேரில சொல்லணும்னுதான் இன்னிக்கு இங்கே வந்தேன்" என்றான் ராஜன்.
சுவாமிஜி சிரித்துக் கொண்டே மௌனமாகத் தலை அசைத்தார்.
"சுவாமிஜி! அடுத்த ஜன்மத்திலேயும் பார்வதிதான் என் மனைவியா இருக்கணும். நீங்க அதுக்கு அருள் புரியணும்!" என்றான் ராஜன்.
"அது என்னோட ஜூரிஸ்டிக்ஷன்ல இல்லையே!" என்றார் சுவாமிஜி, பார்வதியைப் பார்த்துச் சிரித்தபடியே.
"என்னோட ஆசையும் அதுதான், சுவாமிஜி" என்றாள் பார்வதி.
அடுத்த நாள், பார்வதி தயக்கத்துடன் சுவாமிஜியின் அருகில் வந்து நின்றாள்.
"சொல்லும்மா!" என்றார் சுவாமிஜி.
"சுவாமிஜி! நேத்து நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன்"
"என்ன பொய்?"
"என் கணவர் அடுத்த ஜன்மத்திலேயும் நான்தான் அவரோட மனைவியா வரணும்னு சொன்னப்ப, என்னோட ஆசையும் அதுதான்னு சொன்னேன்."
"ஏன், உனக்கு அதில விருப்பம் இல்லையா?"
"அப்படி இல்ல, சுவாமிஜி. இந்த ஆசிரமத்துக்கு நான் வர ஆரம்பிச்சப்பறம், எனக்கு எந்த ஆசையும் வரதில்ல. அடுத்த ஜன்மத்தைப் பத்தியோ, அப்பவும் இவர்தான் என் கணவரா வரணும்னோ நான் நினைச்சுப் பாத்ததே இல்ல. ஆனா என் கணவர் அப்படிச் சொன்னதும், நானும் அப்படிச் சொன்னாதான் அவர் சந்தோஷப்படுவார்னு நினைச்சு, டக்னு அப்படிச் சொல்லிட்டேன். ஆனா அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்படாதபோது, 'அதுதான் என்னோட ஆசையும்'னு சொன்னது தப்புதானே? அதுதான் உங்ககிட்ட உண்மையைச் சொல்லணும்னு சொல்றேன்" என்றாள் பார்வதி.
அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சுவாமிஜி, "ஆசைகள் இருந்தா, அவை மறுபடி பிறவி ஏற்பட வழி வகுக்கும்கறது பல ஞானிகளோட கருத்து. உனக்கு ஆசைகள் இல்லாம இருக்கறது பெரிய விஷயம். உன் கணவரோட மனத் திருப்திக்காக, உனக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கறதா நீ சொன்னது தப்பு இல்லை. கடவுளோட அருள் உனக்கு நிறைய இருக்கணும்னு வாழ்த்தறேன்" என்றார் சுவாமிஜி.
குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
பொருள்:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.
362. பெரிய ஆசை
"எனக்கு எதுவுமே வேண்டாம்" என்று சிரித்தபடியே கூறிய கார்த்திகேயனைச் சற்று வியப்புடன் பார்த்தாள் யாமினி.
யாமினியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் விதித்த ஒரே நிபந்தனை திருமணத்துக்குப் பின் அவள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான்.
"எதுக்கு நான் வேலைக்குப் போகணும்னு சொன்னீங்க?" என்று திருமணத்துக்குப் பிறகு யாமினி கேட்டபோது, "எனக்கு நிறைய ஆசை உண்டு. அதையெல்லாம் நிறைவேத்திக்க நிறையப் பணம் வேணும். அதனாலதான், நீயும் சம்பாதிச்சாதான் உதவியா இருக்கும்னு நினைச்சேன்" என்றான் கார்த்திகேயன்.
வசதியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புவது இயற்கைதானே என்று நினைத்தாள் யாமினி.
ஆனால் கார்த்திகேயனின் மனநிலை, 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்பது போல் இருந்தது. அவர்கள் வசதிக்கு மீறிப் பொருட்களை வாங்குவது, பிறகு அதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையைச் சமாளிப்பது என்பது அவர்கள் இருபத்தைந்து ஆண்டுக் குடும்ப வாழ்க்கையில் ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகி விட்டது.
அவனைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர் கார் வாங்குவதும், பராமரிப்பதும் தங்கள் சக்திக்கு மீறிய வாழ்க்கை முறை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், அவன் ஒரு பழைய காரை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி விட்டான்.
பிறகு, சில ஆண்டுகளில் அதை விற்று விட்டுப் புதிய கார், பிறகு பெரிய கார், வீடு, வீட்டு உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் இவை தவிர கேளிக்கைகள், உல்லாசப் பயணங்கள் என்று அவன் ஆசைகள் பெருகிக் கொண்டே போக, பொருளாதார நிர்வாகம் அவர்களுக்கு எப்போதுமே திணறலாகவே இருந்து வந்தது.
யாமினி எவ்வளவோ சொல்லியும் கார்த்திகேயன் கேட்கவில்லை.
"அனுபவிக்கறதுக்குத்தானே வாழ்க்கை? நாம ஆசைப்படறதை செய்யக் கூடாதுன்னா, அப்புறம் அது என்ன வாழ்க்கை?" என்றான் அவன்.
"அது சரி. ஆனா இந்தக் கடன் சுமைக்காகக் கவலைப்பட்டுக்கிட்டே, நாம ஆசைப்பட்டு வாங்கின பொருட்களையும் வசதிகளையும் எப்படி அனுபவிக்க முடியும்?"
"நான் கவலைப்படல. என்னால இதையெல்லாம் சமாளிக்க முடியும். நீ ஏன் கவலைப்படற? நாம ஆசைப்படற விஷயங்களை அனுபவிக்கறதைப் பத்தி சந்தோஷமா இரு!" என்று புதிய கீதோபதேசம் செய்தான் கார்த்திகேயன்.
ஆனால், கடந்த சில மாதங்களாக கார்த்திகேயனிடம் ஒரு மாறுதலை கவனித்தாள் யாமினி.
பொருட்களை வாங்கும் ஆசைகளைக் குறைத்துக் கொண்டான். இத்தனைக்கும் அவர்கள் பெண் எழில் படித்து முடித்து விட்டு வேலைக்குப் போகத் தொடங்கியதும், அவர்கள் பொருளாதார நிலை முன்பை விட வசதியாகவே இருந்தது.
முன்பெல்லாம் உறவினர்கள், நண்பர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தால், அவர்களிடம் ஏதாவது பொருட்கள் வாங்கி வரச் சொல்லி, அவற்றுக்கான விலையை அவர்களிடம் கொடுத்து அந்தப் பொருட்களை வாங்கிக் கொள்வான் கார்த்திகேயன். ஆனால் இப்போது, அவர்கள் பெண் அலுவலக வேலையாக அமெரிக்கா போயிருக்கும்போது, தனக்கு எதுவும் வாங்கி வர வேண்டாம் என்கிறான்!
"என்ன ஆச்சு உங்களுக்கு? முன்னெல்லாம் நிறையப் பொருட்களை வாங்கணும், அங்கே போகணும், இங்கே போகணும்னெல்லாம் ஆசைப்படுவீங்க. இப்ப கொஞ்ச நாளா எதுவுமே வேண்டாம்னு இருக்கீங்களே! ஆசைகளையெல்லாம் விட்டுட்டீங்களா?" என்றாள் யாமினி.
"விடல. சின்னச் சின்ன ஆசைகளை விட்டுட்டு, ஒரு பெரிய ஆசையை எடுத்துக்கிட்டிருக்கேன்."
யாமினிக்கு பகீரென்றது. "பெரிய ஆசையா? அது என்ன? உங்க சின்ன ஆசைகளையே நம்மால சமாளிக்க முடியலியே!"
"கவலைப்படாதே! சின்ன ஆசைகளைச் சமாளிக்கத்தான் பெரிய ஆசையே! அதுக்கு முன்னால, இந்தப் பெரிய ஆசை எனக்கு எப்படி வந்ததுன்னு சொல்றேன். ஒரு கதை படிச்சேன். ஒத்தன் நிறையத் திருடிக்கிட்டே இருக்கான். இந்தத் திருட்டையெல்லாம் விட்டுடணும்னு திடீர்னு ஒருநாள் அவனுக்குத் தோணுது. பெரிசா ஒரு திருட்டைப் பண்ணிட்டா அப்புறம் திருடறதையே விட்டுடலாம்னு நினைச்சு, ஒரு பாங்க்கைக் கொள்ளையடிக்கத் திட்டம் போடறான். என் ஆசைகளை விடணும்னா, அவனை மாதிரி என்ன செய்யலாம்னு நினைச்சுதான், இந்தப் பெரிய ஆசையை வளத்துக்கிட்டா மத்த ஆசைகள் எல்லாம் போயிடும்னு நினைச்சு முயற்சி செஞ்சு, மத்த ஆசைகளை விட்டுட்டேன்" என்றான் கார்த்திகேயன்.
"கேக்க நல்லாத்தான் இருக்கு. நீங்க ஆசைகளை விட்டுட்டதை நான்தான் கவனிச்சு சொன்னேனே! ஆனா, அந்தப் பெரிய ஆசை என்ன? அது நம்மை என்ன பாடு படுத்தப் போகுதோ?" என்றாள் யாமினி.
"அதைப் பத்தி ஏன் கவலைப்படற? அந்த ஆசைதான் ஏற்கெனவே நிறைவேறிடுச்சே!"
"நிறைவேறிடுச்சா? என்ன ஆசை அது?" என்றாள் யாமினி, வியப்புடன்.
"எந்த ஆசையுமே வரக் கூடாதுங்கற பெரிய ஆசைதான் அது!" என்றான் கார்த்திகேயன், சிரித்தபடி.
குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
"நான் கேட்டிருந்தா வாங்கிக் கொடுத்திருப்பாரு. ஆனா, எனக்கு நகை போட்டுக்கறதில எல்லாம் ஆசை இல்லையே!" என்றாள் சாரதா, சிரித்துக் கொண்டே.
"உனக்கு எதிலதான் ஆசை இருந்திருக்கு?" என்று மீனா சொல்லிக் கொண்டிருந்தபோதே, உள்ளிருந்து சாரதாவின் கணவன் சிவகுரு வந்தான்.
'தங்கையின் கணவர் வீட்டில் இருப்பது தெரியாமல், தங்கையிடம் அவள் கணவன் நகை வாங்கிக் கொடுக்காததைப் பற்றிப் பேசி விட்டோமே!' என்று மனதுக்குள் சிறிது சங்கடப்பட்ட மீனா, சமாளித்துக் கொண்டு, சற்று நேரம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி விட்டுப் போய் விட்டாள்..
மீனா சென்றதும்," உன் அக்கா சொன்ன மாதிரி, உனக்கு நான் நகை எதுவும் வாங்கிக் கொடுத்ததில்ல. அதில உனக்கு வருத்தமா?" என்றான் சிவகுரு.
"நீங்க வேற! அவளுக்கு வேற வேலை இல்ல. எனக்கு இதிலெல்லாம் ஆசை இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்றாள் சாரதா.
"உனக்கு எதிலதான் ஆசை இருந்திருக்குன்னு உன் அக்கா கேட்டது சரிதான் போலருக்கு!" என்றான் சிவகுரு, சிரித்தபடி.
"அது உண்மைதான். சின்ன வயசிலேயே, மீனா என் அப்பா அம்மாகிட்ட தனக்கு இது வேணும் அது வேணும்னு அடிக்கடி கேட்டுக்கிட்டிருப்பா. அவங்க கூட, 'உன் தங்கையைப் பாரு, அவ ஏதாவது கேக்கறாளா?'ன்னு அவகிட்ட சொல்லுவாங்க. இயல்பாகவே இது வேணும், அது வேணும்கற எண்ணங்கள் எனக்கு ஏற்படல்ல."
"இப்படிப்பட்ட மனநிலை அமையறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும், இல்ல, நான்தான் கொடுத்து வச்சிருக்கணும்!" என்றான் சிவகுரு.
"என்னடி, இப்படி ஆயிடுச்சு உன் வாழ்க்கை?" என்றாள் மீனா.
"என்ன ஆயிடுச்சு இப்ப?" என்றாள் சாரதா, அமைதியாக.
"ஏண்டி, உன் புருஷனுக்குத் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டு, இப்ப அவர் ஏதோ ஒரு வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பத்தற நிலைமை வந்திருக்கு. நீங்க உங்க பெரிய வீட்டை வித்துட்டு, சின்னதா ஒரு வாடகை வீட்டில குடி இருக்கற நிலைமை வந்திருக்கு. என்ன ஆயிடுச்சுன்னு கேக்கற! உனக்கு வருத்தம் இல்லையா?"
"வருத்தம்தான். அவர் தொழில்ல நஷ்டம் வந்து, அவர் வேலைக்குப் போக வேண்டிய நிலைமை வந்தது பத்தி வருத்தம்தான். அவருக்கு இப்படி ஒரு பொருளாதாரப் பிரச்னை வந்தது பத்தி வருத்தம்தான். என்ன செய்யறது? ஆனாலும், நாங்க சமாளிச்சு வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கோம்?" என்றாள் சாரதா.
"பழையபடி வசதியா வாழணும்னு உனக்கு ஆசை இல்லையா?"
"பழையபடி உயர்ந்த நிலைமைக்கு வரணும்னு அவர் முயற்சி பண்ணிக்கிட்டிருக்காரு. அவரோட முயற்சிக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். அது சீக்கிரம் நடக்குமா, நாள் ஆகுமான்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னெல்லாம் எனக்கு ஆசை கிடையாது" என்றாள் சாரதா, சிரித்த முகத்துடன்.
அவளைச் சற்று வியப்புடன் பார்த்த மீனா, "நீ அதிர்ஷ்டக்காரியா, உன் கணவர் அதிர்ஷ்டக்காரரான்னு தெரியல!" என்றாள், உண்மையான உணர்வுடன்.
அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த சிவகுரு, "எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம்தான்!" என்றான், மீனாவைப் பார்த்துச் சிரித்தபடி.
குறள் 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்..
"உங்கள் பிறவியின் நோக்கம் என்ன என்று நான் கேட்டதற்குப் பலரும் பல்வேறு விடைகளைக் கூறினீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதிலிருந்து, மற்றவர்களுக்கு உதவ வேண்டும், உங்கள் பெயர் நிலைத்திருக்கும்படியான சாதனை புரிய வேண்டும் என்று பல நோக்கங்களைக் கூறினீர்கள்.
"எல்லாமே உயர்ந்த நோக்கங்கள்தான். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த நோக்கம், மீண்டும் ஒரு பிறவி ஏற்படாமல் இருக்க வகை செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பற்றுக்களை விட்டு விட்டால், பிறவிப் பிணி உங்களுக்கு இருக்காது.
"பற்றுக்களை விடுவது என்றால், என்னைப் போல் துறவியாக வேண்டும் என்று பொருளல்ல. ஆசைகளைத் துறந்து, உங்கள் கடமைகளைப் பலனை எதிர்பாராமல் செய்து வர வேண்டும். இதுதான் கீதை காட்டும் வாழ்க்கை நெறி.
"பற்றை விட்டு விட்டு வாழ்ந்தால், நாம் மீண்டும் பிறக்காமல், இந்தப் பிறவி முடிந்ததும் இறைவனின் திருவடிகளை அடைந்து விடுவோம். இதுதான் வாழ்க்கையின் மிக உயர்ந்த நோக்கமாக இருக்க முடியும்."
ஆனந்தரங்கர் தன் பேச்சை முடித்து விட்டு, அவையைத் திருப்தியுடன் பார்த்தார். அவர் சொன்னதை அவர்கள் பின்பற்றுவார்களோ என்னவோ தெரியாது, ஆனால் அவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு, அவர் சொன்ன கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
வெளியூர்ப் பயணத்தை முடித்துக் கொண்டு ஆனந்தரங்கர் ஆசிரமத்துக்குத் திரும்பினார். மடத்தின் தலைவர் அனந்தரங்கர் அவரைப் பார்க்க விரும்பியதாக ஒரு துறவி அவரிடம் தெரிவித்திருந்ததால், உடல் சுத்திகரிப்புக்கான நியமங்களைச் செய்து முடித்த பின், அனந்தரங்கரைப் பார்க்கச் சென்றார் ஆனந்தரங்கர்.
அவர் அனந்தரங்கரின் அறைக்கருகில் சென்றபோது, அறைக்குள்ளிருந்து சாந்தரங்கர் வந்து கொண்டிருந்தார். சாந்தரங்கர் அந்த மடத்தில் ஆனந்தரங்கருக்கு அடுத்த நிலையில் இருப்பவர். ஆனந்தரங்கரைப் பார்த்து "நாராயணா" என்று சொல்லி வணங்கிய சாந்தரங்கர், "பாராட்டுக்கள்" என்றார், புன்சிரிப்புடன்.
"நாராயணா" என்று இயந்திரமயமாக அவருக்கு பதில் வணக்கம் தெரிவித்த ஆனந்தரங்கர், 'பாராட்டுகள் என்று எதற்குச் சொல்கிறார்?' என்று யோசித்தார்.
'அப்படித்தான் இருக்க வேண்டும். அனந்தரங்கர் என்னைத் தன் வாரிசாக அறிவிக்கப் போகிறார். அதற்குத்தான் என்னை வரச் சொல்லி இருக்கிறார். அனந்தரங்கர், ஆனந்தரங்கர் என்று இருவர் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால், பலரும் என்னை மடத்தின் தலைவர் என்றே நினைத்துக் கொள்கிறார்கள். இனிமேல் அந்தக் குழப்பத்துக்கே அவசியம் இருக்காது!'
ஆனந்தரங்கரை வரவேற்று, அவர் சுற்றுப் பயண விவரங்களைக் கேட்டறிந்த பின், அனந்தரங்கர், "நான் உன்னைப் பார்க்க விரும்பியது எதற்கென்று ஊகித்திருப்பாய். எனக்குப் பிறகு இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டேன். அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல வேண்டும் இல்லையா?" என்றார்.
"சொல்லுங்கள், குருவே!" என்றார் ஆனந்தரங்கர், எதிர்பார்ப்புடன்.
"தலைமைப் பொறுப்பை சாந்தரங்கருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இதில் உனக்கொன்றும் வருத்தமில்லையே!" என்றார் அனந்தரங்கர், ஆனதரங்கரின் கண்களை நேராகப் பார்த்தபடி.
"இல்லை சுவாமி. எனக்கு மகிழ்ச்சிதான்!" என்றார் ஆனந்தரங்கர், அனந்தரங்கரின் பார்வையைத் தவிர்க்கும் வகையில் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு.
எவ்வளவு முயன்றும், ஆனந்தரங்கரால் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள முடியவில்லை. தன்னை அறியாமலேயே தன் ஏமாற்றம் வார்த்தைகளில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து, "நான் போய் முதலில் சாந்தரங்கருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு எழுந்தார்.
அப்போதுதான் அவருக்கு சாந்தரங்கர் தன்னைப் பாராட்டியது நினைவுக்கு வந்தது. 'அவர் ஏன் என்னைப் பாராட்டினார்?'
சட்டென்று திரும்பிய ஆனந்தரங்கர், "குருவே! சாந்தரங்கரிடம் இதைச் சொல்லி விட்டீர்களா?" என்றார்.
"சொன்னேன், தலைமைப் பொறுப்பை உனக்குக் கொடுக்கப் போவதாக!" என்றார் அனந்தரங்கர், சிரித்தபடி.
ஆனந்தரங்கர் குழப்பத்துடன் அனந்தரங்கரைப் பார்த்தார்.
"உட்கார்!" என்ற அனந்தரங்கர், "தலைமைப் பொறுப்பை உனக்குக் கொடுக்கப் போவதாக சாந்தரங்கரிடமும், அவனுக்குக் கொடுக்கப் போவதாக உன்னிடமும் சொன்னதற்குக் காரணம், உங்கள் இருவரின் மனநிலையை அறிந்து கொள்ளத்தான்.
"நாம் ஆசைகளை விட வேண்டும் என்று உபதேசிக்கிறோம். ஆனால், ஆசைகள் நம்மை விடுவதில்லை! ஆசைகளை விடுவதற்குக் கடும் பயிற்சியும், மன உறுதியும் வேண்டும். அதற்கு முன், நாம் இன்னும் ஆசைகளிலிருந்து விடுபடவில்லை என்ற புரிதல் நமக்கு வர வேண்டும்.
"எனக்குப் பிறகு யார் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அப்படி நான் முடிவு செய்யும் நாள் வருவதற்குள், நீ ஆசைகளை முழுமையாகத் துறந்து, பக்குவ நிலைக்கு வந்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பணிகளை நீ நன்றாகச் செய்து வருகிறாய். தொடர்ந்து சிறப்பாகச் செய்து வா!" என்று ஆனந்தரங்கரை வாழ்த்தினார் அனந்தரங்கர்.
குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
குருட்சேத்திரப் போரில் வென்ற பிறகு, யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தின் அரசனாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களைக் காண துவாரகையிலிருந்து கண்ணன் வந்தார்.
தன் நண்பன் அர்ஜுனன், அவன் மனைவியும் தன் தங்கையுமான சுபத்ரா, திரௌபதி, யுதிஷ்டிரனின் மற்ற சகோதரர்கள் அனைவரையும் நலம் விசாரித்த பின், யுதிஷ்டிரனைப் பார்க்க வந்தார் கண்ணன்.
"வா, கண்ணா! உன் தங்கை, உன் அன்புக்குரிய மைத்துனன், என் மற்ற சகோதரர்கள் எல்லோரையும் பார்த்த பின், இப்போதாவது என்னைப் பார்க்க நேரம் கிடைத்ததே உனக்கு!" என்றான் யுதிஷ்டிரன்.
"யுதிஷ்டிரா! நீ அரசன். உன் நேரத்தை நான் வீணாக்கக் கூடாது. அதனால் உன் முக்கியமான பணிகள் பற்றி உன் அமைச்சரிடம் கேட்டறிந்து, உனக்கு வேலைச்சுமை குறைவாக இருக்கும் நேரம் எது என்று அறிந்து கொண்டு, இப்போது வந்திருக்கிறேன்" என்றார் கண்ணன்.
"உன்னைச் சந்தித்து உரையாட என் எந்தப் பணியும் தடையாக இருக்காது, கண்ணா!" என்றான் யுதிஷ்டிரன்.
சற்று நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிய பின், இருவரும் அறத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
"கண்ணா! நீ அர்ஜுனனுக்கு கீதை உரைத்தபோது, பல தர்மங்களை எடுத்துச் சொன்னாய். நான் அவற்றை அவனிடம் கேட்டறிந்து, உன் அறிவுரையைப் பின்பற்ற முயன்று வருகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.
"உனக்குத் தெரியாத தர்மமா, யுதிஷ்டிரா? எல்லோரும் உன்னை தர்மபுத்திரன் என்றல்லவா அழைக்கிறார்கள்? காலப்போக்கில், யுதிஷ்டிரன் என்ற உன் பெயரே மறக்கப்பட்டு, தர்மபுத்திரன் என்ற பெயர்தான் உனக்கு நிலைத்து நிற்கும் என்று நினைக்கிறேன்."
"இல்லை, கண்ணா! அறத்தைப் பற்றிய ஒரு அடிப்படையான உண்மையை நான் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டு விட்டேன். எங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு அதுதான் முக்கியமான காரணம் என்று இப்போது எனக்குப் புரிகிறது" என்றான் யுதிஷ்டிரன்.
"எந்த உண்மையை நீ புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டு விட்டாய்?" என்றார் கண்ணன், வியப்புடன்,
"ஆசைகளுக்கு அஞ்சி வாழ்வதே அறம் என்ற உண்மையை நான் புரிந்து கொள்ளவில்லை."
"நீ சொல்வது வியப்பாக இருக்கிறது. நீ எதற்கும் ஆசைப்பட்டவன் அல்லவே! உங்களுக்காக துரியோதனனிடம் நான் தூது போனபோது, 'துரியோதனன் எங்களுக்கு உரிய நாட்டைக் கொடுக்க மறுத்தால், ஐந்து கிராமங்களையாவது கொடுக்கச் சொல், அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஐந்து வீடுகளையாவது கொடுக்கச் சொல்' என்று என்னிடம் சொல்லி அனுப்பியவன் அல்லவா நீ? உனக்கு ஆசை என்று ஒன்று எப்போது இருந்ததது?" என்றான் கண்ணன்.
"இருந்தது, கண்ணா. எனக்குப் பகடை ஆட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியுமே!"
கண்ணன் பெரிதாகச் சிரித்து, "இதைத்தான் ஆசை என்று சொல்ல வந்தாயா? பகடை ஆட்டம் ஒரு விளையாட்டு. அதில் ஈடுபாடு இருப்பது பெரிய குற்றம் இல்லையே!" என்றார்.
"ஒரு விளையாட்டு என்ற அளவில் அதில் எனக்கு ஆர்வம் இருந்திருந்தால், நீ சொல்வது சரி. ஆனால் பொருட்களைப் பணயம் வைத்து ஆடும் பகடை ஆட்டம் அறத்துக்கு விரோதமானதல்லவா? பொருளைப் பணயம் வைத்து ஆடப்படும் பகடை ஆட்டத்தில் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. யாராவது என்னைப் பகடை ஆட்டத்துக்கு அழைத்தால், என் எல்லாப் பணிகளையும் விட்டு விட்டுப் பகடை விளையாடப் போய் விடுவேன். என்னுடைய இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்டுதான், சகுனி துரியோதனனுடன் சேர்ந்து சதி செய்து, திருதராஷ்டிரர் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தான். நான் அதை ஏற்றுக் கொண்டதன் விளைவாக, நாங்கள் எல்லாவற்றையும் இழந்து காட்டுக்குச் செல்ல நேரிட்டதில் தொடங்கி, குருட்சேத்திரப் போர் நிகழ்ந்து, லட்சணக்கணக்கானோர் போரில் மடிந்தது வரை பல விபரீதங்கள் நிகழ்ந்து விட்டன."
"திருதராஷ்டிரர் அழைப்பை ஏற்காவிட்டால், அவர் மனம் புண்படும், உங்களுக்கும், கௌரவர்களுக்குமான பகை அதிகரிக்கும் என்று கருதித்தானே, நீ அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாய்?"
"நானும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அழைப்பை ஏற்றதற்கு உண்மையான காரணம், பகடை ஆட்டத்தின் மீது எனக்கு இருந்த ஆசைதான் என்று இப்போது எனக்குப் புரிகிறது. ஆசையைக் கண்டு அஞ்சும் மனநிலை அப்போது என்னிடம் இருந்திருந்தால், திருதராஷ்டிரரின் அழைப்பைப் பணிவுடன் மறுத்து, நடந்த விபரீதங்களைத் தவிர்த்திருக்க முடியும். இப்போது அதை நினைத்து அடிக்கடி வருந்துகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.
"வருந்தாதே, யுதிஷ்டிரா! நடதவற்றை நினைத்து வருந்துவதில் பயனில்லை என்பதை நீ நன்கு அறிவாய். அறம் பற்றிய உன் ஆழ்ந்த அறிவுதான் உன்னை இவ்வாறு சிந்தித்து, உன் செயல்களின் பின்னணியை ஆராய வைத்திருக்கிறது. இது உன் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு உதவும். ஆசைகளுக்கு அஞ்சி வாழ்ந்தால்தான் அறத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்ற உன் சிந்தனையை எனக்கும் ஒரு பாடமாக நான் எடுத்துக் கொள்கிறன்" என்றார் கண்ணன்.
குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
"நீங்க வேலையில இருந்தப்பவே, ஒரு சின்ன வீடாவது வாங்கி இருக்கலாம். அந்த எண்ணம் உங்களுக்கும் வரல, எனக்கும் வரல. நான் ஆசைப்பட்டிருந்தேன்னா, நீங்க எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கி இருப்பீங்க!' என்றாள் அவன் மனைவி புவனேஸ்வரி.
"நாம ரெண்டு பேருமே நமக்குன்னு எந்த ஆசையும் வச்சுக்கல. நம்ப ரெண்டு பெண்களையும் படிக்க வச்சுக் கல்யாணம் பண்ணி வைக்கறதுலதான் கவனம் செலுத்தினோம். கடன் வாங்கி வீடு வாங்கியிருந்தா, என்னோட வருமானத்தில கடனுக்கு மாசா மாசம் பணம் கட்டி இருக்க முடியுமாங்கறது சந்தேகம்தான். அதனால, நான் அப்படிப்பட்ட ஆசைக்கே இடம் கொடுக்கல. நீயும் என்னை மாதிரியே தனிப்பட்ட ஆசைகள் இல்லாமயே இருந்தது என்னோட அதிர்ஷ்டம்தான். பாக்கலாம். ஏதாவது வழி பிறக்காமயா போயிடும்?"
அன்று வீடு பார்க்க வெளியே அலைந்து விட்டு வீடு திரும்பிய ரகுராமன், "இன்னிக்கு ஒரு வீடு பாத்தேன். ஆனா, வீட்டுக்காரர் வேற எங்கேயோ இருக்காரு. அவர் என்னை நேரில பாத்துட்டுத்தான் வீடு கொடுப்பாராம். நாளைக்கு என்னை அவர் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காரு. போய்ப் பாத்துட்டு வரேன்" என்றான்.
மறுநாள் காலை வீட்டுக்காரரைப் பார்ப்பதற்காக வெளியே சென்ற ரகுராமன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மதியத்துக்கு மேல் புவனா அவனைத் தொலைபேசியில் அழைத்தபோது, அழைப்பு செல்லவில்லை.
மாலை ரகுராமன் வீடு திரும்பியதும், "ஏங்க இவ்வளவு நேரம்? நான் ஃபோன் பண்ணினேன், ஆனா, நீங்க ஃபோனை எடுக்கல. எனக்கு ரொம்பக் கவலையாயிடுச்சு. சாப்பிட்டீங்களா இல்லையா?" என்றாள் புவனேஸ்வரி, படபடப்புடன்.
"சாப்பிட்டுட்டேன். ரொம்ப தூரம் போயிருந்தேன். அங்கே சிக்னல் கிடைக்காம இருந்திருக்கும்" என்றான்.
"அப்படி எங்கே போனீங்க? வீட்டுக்காரரைப் பாத்தீங்களா இல்லையா? வீடு தரேன்னு சொன்னாரா?'
"நான் பாக்கப் போன வீட்டுக்காரர் ஒரு பெரிய புள்ளி. என்னைப் பத்தின விவரங்களைக் கேட்டதும், 'நான் ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறேன். அதுக்கு பிரின்சிபல் வேலைக்கு ஒரு நல்ல ஆளைத் தேடிக்கிட்டிருக்கேன். நீங்க வரீங்களா?'ன்னு கேட்டாரு, அப்புறம் கார்ல என்னை அந்த ஸ்கூலுக்கு அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டினாரு. ஸ்கூல் கட்டிடம் எல்லாம் கட்டி முடிச்சு, வகுப்புகள் ஆரம்பிக்கத் தயாரா இருக்கு. எல்லா அனுமதியும் வாங்கிட்டாரு."
"வேலையை ஒப்புத்துக்கிட்டீங்களா இல்லையா?" என்றாள் புவனேஸ்வரி, பொறுமையின்றி.
'உன்னைக் கேட்டுக்கிட்டுத்தானே சரின்னு சொல்லணும்?" என்றான் ரகுராமன், சிரித்தபடி.
"என்னை எதுக்குக் கேக்கணும்?"
"சம்பளம் நான் ரிடயர் ஆறப்ப வாங்கினதை விட பத்தாயிரம் ரூபா அதிகம். இப்ப வந்துக்கிட்டிருக்கற பென்ஷனும் வரும். நான் விரும்பற வரை வேலையில இருக்கலாம்னு சொல்லிட்டாரு. ஆனா, ஒரு சிக்கல்..."
"அதானே பாத்தேன்? என்ன சிக்கல்?" என்றாள் புவனா, சற்று ஏமாற்றத்துடன்.
"நாம அங்கேயேதான் இருக்கணும். இதை விடப் பெரிய வீடு கொடுக்கறாங்க. வாடகை கிடையாது. பரவாயில்லையா?"
"ஏங்க உங்களுக்குப் பைத்தியமா? இவ்வளவு நல்ல வாய்ப்பை உடனே ஒத்துக்காம, எங்கிட்ட கேட்டுக்கிட்டுத்தான் ஒத்துப்பேன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க! அவர் மனசு மாறிடப் போறாரு!" என்றாள் புவனேஸ்வரி, கவலையுடன்.
"கவலைப்படாதே! நான் வேலையை ஒத்துக்கிட்டேன். அவர் அப்பாயின்ட்மென் ஆர்டர் கொடுத்துட்டாரு. வீட்டுச் சாவியையும் கொடுத்துட்டாரு. நாம மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!" என்றான் ரகுராமன், பையிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து ஆட்டியபடியே.
குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
அவள் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டது போல் மௌனமாகத் தலையசைத்தாள்.
ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் மனநிலை சற்று மாறி விட்டது.
"நம்ம பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடத்தில சேக்கணுங்க" என்றாள் ஒரு நாள்.
"ஏன், இந்தப் பள்ளிக்கூடம் நல்லாத்தானே இருக்கு? ரெண்டு பேரும் நல்லாத்தானே படிக்கறாங்க?" என்றான் பரசு.
"படிக்கிறாங்க. ஆனா, இப்பல்லாம் படிப்பு மட்டும் இருந்தாப் போதாதுங்க. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்னு சொல்றாங்களே, அதெல்லாமும் இருந்தாதான், எதிர்காலத்தில நம்ம பிள்ளைங்களால மத்தவங்களோட போட்டி போட்டு முன்னுக்கு வர முடியும். சில பள்ளிக்கூடங்கள்ள ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்கெல்லாம் கூட மாணவர்களை ஆறாம் வகுப்பலேந்தே தயார் செய்யறாங்களாம்!" என்றாள் பிரேமா.
"சரி. விசாரிச்சுப் பாக்கறேன்" என்றான் பரசு.
சில நாட்கள் கழித்து, "நீ சொன்ன மாதிரி ரெண்டு மூணு பள்ளிக்கூடங்கள்ள விசாரிச்சுப் பாத்தேன், பிரேமா! அவங்க வாங்கற கட்டணம் நமக்குக் கட்டுபடியாகாது" என்றன் பரசு.
"அப்படியா?" என்றாள் பிரேமா, ஏமாற்றத்துடன்.
சில நாட்களுக்குப் பிறகு, "நீ சொன்ன மாதிரி நம்ப பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடத்தில சேத்துடலாம்!" என்றான் பரசு, பிரேமாவிடம்.
"எப்படிங்க? அவங்க வாங்கற ஃபீஸ் நமக்குக் கட்டுப்படி ஆகாதுன்னு சொன்னீங்களே!" என்றாள் பிரேமா, மகிழ்ச்சியுடனும், வியப்புடனும்.
லஞ்சம் புழங்கும் அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கக் கூடாது என்று நேர்மையுடன் செயல்பட்டு வந்த சிறுபான்மையருள் ஒருவனாக இருந்த தான், இப்போது பணத் தேவைக்காக மனம் மாறி லஞ்சம் வாங்கும் பெரும்பான்மையினர் கட்சியில் இணைந்து விட்டதை மனைவியிடம் தயக்கத்துடன் தெரிவித்தான் பரசு.
பிரேமா எதுவும் சொல்லவில்லை.
பரசுவிடம் பணப் புழக்கம் அதிகமானதும், அவர்கள் வீட்டில் பெரிய திரை எல்.ஈ.டி டிவி முதலிய பல புதிய வசதிகளும் இடம் பெறத் தொடங்கின.
"என்னங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் பிரேமா.
"நான் செய்யறது சரியான்னே தெரியல. ஒரு வருஷம் முன்னால வரைக்கும் சந்தோஷமா, நிம்மதியா இருந்தேன். இப்ப கொஞ்ச நாளா ஒரே மன உளைச்சல்!"
"ஏன், ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்னையா?"
"ஆமாம். ஆனா, எல்லாம் நானா வர வழைச்சுக்கிட்டதுதான். ஆஃபீஸ்ல நான் ஒரு சின்ன அதிகாரிதான்னா கூட எனக்கு ஒரு மதிப்பு, மரியாதை எல்லாம் இருந்தது. இப்ப எல்லாம் போயிடுச்சு. மதிப்பு, மரியாதையை விடு, அது முக்கியமில்ல.
"ஆனா இப்பல்லாம், விதிகளுக்கு மீறி சில விஷயங்களைச் செய்யச் சொல்லி எனக்கு அழுத்தம் கொடுக்கறாங்க. தங்களுக்கு வேலை நடக்க வேண்டியவங்க, 'அதான். பணம் வாங்கறியே, அப்புறம் என்ன? அட்ஜஸ்ட் பண்ணி செஞ்சு கொடுக்க வேண்டியதுதானே, ரூல்ஸ் பத்தி எல்லாம் ஏன் பேசறே?' ன்னு உரிமையோட கேக்கறாங்க. மேலதிகாரிகள் அவங்க விருப்பப்படி நான் நடந்துக்கணும்னு எதிர்பாக்கறாங்க. 'நீ ஒண்ணும் யோக்கியன் இல்லையே!' என்கிற மாதிரி பேசறாங்க.
"எனக்கு வேற, எப்ப மாட்டிக்கப் போறோமோன்னு எப்பவும் ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கு. முன்ன மாதிரி இருந்திருந்தா, நிம்மதியா சந்தோஷமா இருந்திருக்கலாமேன்னு தோணுது,"
"எல்லாத்தையும் விட்டுடுங்க. பழையபடியே இருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, குடும்பத்துக்கும் நல்லது" என்றாள் பிரேமா.
"என்ன சொல்ற, பிரேமா? பிள்ளைங்க படிப்பு என்ன ஆறது? அதுக்காகத்தானே இப்படியெல்லாம் செய்யறேன்!" என்றான் பரசு, குழப்பத்துடன்.
"நானே உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன். பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் புதுப் பள்ளிக்கூடம் பிடிக்கவே இல்லையாம். 'என்னம்மா இது, எவ்வளவுதான் கத்துக்கறது? நாள் முழுக்க வாட்டி எடுக்கறாங்க. ஏகப்பட்ட ஹோம் ஒர்க் வேற. தூங்கக் கூட நேரமில்ல. வீட்டில பெரிய டிவி வாங்கி இருக்கீங்க. அதை அரை மணி நேரம் கூடப் பாக்க முடியல. சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ், ஞாயித்துக்கிழமை நாள் பூரா செய்ய வேண்டிய அளவுக்கு ஹோம் ஒர்க். எங்களால முடியல அம்மா. இந்த வருஷம் முடியப் போகுது, அடுத்த வருஷம் எங்களைப் பழைய ஸ்கூலிலேயே சேத்துடுங்க. நாங்க நல்லாப் படிக்கறோம்'னு எங்கிட்ட புலம்பறாங்க.
"அதிகமா ஆசைப்பட்டது என்னோட தப்புதான். அவங்களைப் பழைய பள்ளிக்கூடத்திலேயே சேத்துடலாம். அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. நீங்களும் பழையபடியே நேர்மையானவரா சந்தோஷமா, நிம்மதியா இருக்கலாம்" என்றாள் பிரேமா.
பரசுவுக்கு ஏதோ லாட்டரியில் பெரிய பரிசு கிடைத்து விட்டதுபோல் இருந்தது.
குறள் 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
"என்னங்க, எக்ஸ்சேஞ்ஞ் ஆஃபர்ல இந்த சங்கிலியைக் கொடுத்துட்டுப் புதுசா ஒரு நெக்லஸ் வாங்கிக்கப் போறேன்!" என்றாள் கார்த்திகா.
அவள் கணவன் ராஜா எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
"நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலியே நீங்க?"
"நீ எங்கிட்ட எதுவும் கேக்கலியே! நெக்லஸ் வாங்கிக்கப் போறேன்னு சொன்னே. இதில நான் பதில் சொல்றதுக்கு என்ன இருக்கு? 'தகவல் சொன்னதுக்கு நன்றி'ன்னு வேணும்னா சொல்லலாம்!" என்று சொல்லி விட்டு, மனைவி கோபித்துக் கொள்ளப் போகிறாளே என்ற பயத்தில், விளையாட்டுக்குச் சொன்னதாகக் காட்டிக் கொள்வது போல், உடனே சிரித்தான் ராஜா
"எனக்குன்னு ஏதாவது வாங்கிக்கிட்டா உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். நீங்களா எனக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க மாட்டீங்க, நானா வாங்கிக்கிட்டாலும், உங்களுக்குப் பிடிக்காது" என்றாள் கார்த்திகா, கோபத்துடன்.
'கோபித்துக் கொண்டு 'சரி வேண்டாம்' என்று மட்டும் சொல்ல மாட்டாயே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ராஜா, "இங்க பாரு, கார்த்திகா! நீ எதை வாங்கினாலும் நான் வேண்டாம்னு தடுத்ததில்ல. ஆனா நீ நிறைய விஷயங்களுக்கு ஆசைப்படற. தேவையில்லாம குக்கர், மிக்ஸி மாதிரி பொருட்களை அடிக்கடி மாத்தற. வாரத்தில ரெண்டு நாள் மாட்னி ஷோ போற. நமக்கு வசதி இருக்குதான். ஆனா, நிறைய விஷயங்களுக்கு ஆசைப்படறது உனக்கே நல்லது இல்லைன்னு எனக்குத் தோணுது. அப்புறம் உன் இஷ்டம்" என்று சொல்லி விட்டு, அவள் பதில் சொல்வதற்கு முன் அங்கிருந்து வெளியேறி விட்டான் ராஜா.
பல பொருட்களை வாங்குவது, வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது போன்ற கார்த்திகாவின் பழக்கம் தொடர்ந்தது.
அவள் மகனும், மகளும் கூட, "ஏம்மா, சோஃபா, டிவின்னு எல்லாத்தையும் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கே? நாங்களே அந்த அளவுக்குப் புதுசா வர பொருட்களை வாங்க ஆசைப்படறதில்லையே!" என்று அவளிடம் பலமுறை சொன்னார்கள்.
"உங்க சந்தோஷத்துக்காகத்தான் நான் எதையுமே வாங்கறேன். அதைப் புரிஞ்சுக்காம, நீங்களும் உங்கப்பா சொல்ற மாதிரியே சொல்றீங்களே!" என்று குறைப்பட்டுக் கொண்டாள் கார்த்திகா.
சில வருடங்களுக்குப் பிறகு, பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள் கார்த்திகா. சினிமாவுக்குப் போவதையும் விட்டு விட்டாள்.
அவளுடைய மாற்றத்துக்குக் காரணம் ராஜாவுக்குப் புரியவில்லை. யாராவது ஆன்மீகச் சொற்பொழிவாளர் சொன்னதைக் கேட்டு மனம் மாறி இருப்பாளோ என்று நினைத்தான்.
ஒருமுறை, ராஜாவே அவளிடம் புதிதாக வந்திருக்கும் ஒரு விலை உயர்ந்த கைபேசியை வாங்கிக் கொள்ளச் சொன்னபோது, அவள் வேண்டாமென்று சொல்லி விட்டாள். "இந்த ஃபோன்லேயேதான் எல்லாம் இருக்கே! இதுக்கு மேல என்ன வேணும்?" என்றாள் அவள்.
"ரொம்ப ஆச்சரியமா இருக்கே! எப்படி இப்படித் தலைகீழா மாறின?"
"நீங்க சொன்ன மாதிரி, எல்லாத்துக்கும் ஆசைப்படற மனநிலைதான் எனக்கு இருந்தது. ஆனா, அப்பல்லாம் நான் சந்தோஷமாவே இல்லை. புதுசா ஏதாவது வாங்கினா கூட, அதை சந்தோஷமா அனுபவிக்காம வேற எதுக்காவது ஆசைப்படறது, அதைப் பத்தி நினைக்கறதுன்னு எப்பவும் மனசு அலைபாஞ்சுக்கிட்டே இருந்தது.
"சினிமா பாக்கறது, கச்சேரிகளுக்குப் போறது, லேடீஸ் கிளப் நிகழ்ச்சிகளுக்குப் போறது எல்லாம் கூட அப்படித்தான். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா யோசிச்சுப் பாத்தேன். எங்கிட்ட ஏதோ குறை இருக்கற மாதிரி தெரிஞ்சுது. 'அத்தனைக்கும் ஆசைப்படு'ன்னு ஒரு சாமியார் சொல்லுவாரே, அது மாதிரிதான் நான் உண்மையிலேயே இருக்கேனோன்னு தோணிச்சு!
"எனக்கு வந்த ஆசைகளையெல்லாம் அலட்சியப்படுத்த ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம் எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்க ஆரம்பச்சுது. நம்ம பிள்ளைங்களோட படிப்பு, அவங்களோட, தேவைகள், உங்களோட தேவைகள் எல்லாம் என் கவனத்துக்கு வர ஆரம்பச்சுது. அப்புறம் செய்ய வேண்டிய காரியங்கள்ள கவனம் செலுத்திக்கிட்டு இருக்கறப்ப, ஒரு அலாதியான திருப்தியும் சந்தோஷமும் கிடைக்குது. இப்பல்லாம் நான் முன்னை விட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள் கார்த்திகா.
ராஜா அவளை வியப்புடன் பார்த்தான்.
குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
"நிலத்தை வாங்கறப்ப, அந்த கம்பெனியில வருஷத்துக்கு இருபது பர்சன்ட் ரிடர்ன் கொடுக்கறேன்னு சொன்னாங்க. ஆனா, மூணு வருஷமா பத்து பர்சன்ட்தான் கொடுக்கறாங்க. கேட்டா, 'விளைச்சல் கம்மி, காய்கறிகள், பழங்களோட விலையெல்லாம் குறைஞ்சு போச்சு, நாங்க எதிர்பாத்த வருமானம் வரலைன்னு சாக்கு சொல்றாங்க!" என்றான் அவர் மகன் ராமு.
'நீ அந்த நிலத்தை வாங்கறப்பவே சொன்னேனே, அவங்க சொல்றபடியெல்லாம் வருமானம் வரும்னு எதிர்பார்க்க முடியாது, இதிலெல்லாம் முதலீடு செய்யாதேன்னு' என்று வைத்திலிங்கம் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
"பத்து பர்சன்ட் ரிடர்ன் கூடப் பரவாயில்லையே! எதுக்கு இப்ப அதை விக்கற?"
"இல்லப்பா. நான் இந்த நிலத்தை வாங்கறப்ப, இதே மாதிரி ஸ்கீம் இன்னொரு கம்பெனியிலேயும் இருந்தது. அவங்க பன்னிரண்டு பர்சன்ட் ரிடர்ன்தான் கொடுப்பேன்னு சொன்னாங்க. முதலீடு கூட இதை விடக் குறைச்சல்தான். அதிக ரிடர்ன் வரும்னு இதை வாங்கினேன். இப்ப அவங்க பதினைஞ்சு பர்சன்ட் ரிடர்ன் கொடுக்கறாங்க! இவங்க என்னை ஏமாத்திட்டாங்க. அதனாலதான் விக்கணும்னு நினைக்கறேன்" என்றான்.
"இப்ப இதை வித்துட்டு, அதை வாங்கப் போறியா?" என்றார் வைத்திலிங்கம்.
"இன்னும் முடிவு பண்ணல. முதல்ல இதை விக்க முடியுமான்னு தெரியல. இப்ப மார்க்கட் டல், விலையெல்லாம் குறைஞ்சு போச்சு, வாங்கறத்துக்கே ஆள் இல்லேன்னு சொல்றாங்க. ஏற்கெனவே ஸ்டாக் மார்க்கெட்ல போட்ட பணமெல்லாம் முடங்கி இருக்கு. அஞ்ச லட்ச ரூபா முதலீடு பண்ணினேன். இப்ப என் பங்குகளோட மதிப்பு 3 லட்ச ரூபாயாக் குறைஞ்சுடுச்சு. ஏன் எல்லாமே இப்படி நஷ்டமாப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியல! இதையெல்லாம் நினைச்சுப் பாத்தா, ஒரே விரக்தியா இருக்கு!" என்று சலித்துக் கொண்டான் ராமு.
'உனக்கு நல்ல வேலை, சம்பளம், அமைதியான குடும்பம் எல்லாம் இருந்தும், உன்னோட அதிகமான ஆசைதான் உன் விரக்திக்குக் காரணம்கறதை நீ எப்ப புரிஞ்சிக்கப் போறியோ!' என்று நினைத்துக் கொண்டார் வைத்தியலிங்கம்.
ஏற்கெனவே மகனிடம் இது பற்றி அவர் பல முறை பேசி மனக்கசப்பில் முடிந்ததில்தான் மிச்சம். அதனால்,இப்போதெல்லாம் வைத்திலிங்கம் மகனிடம் எந்தக் கருத்தும் கூறுவதில்லை.
"உங்க காலம் வேறப்பா! நீங்க கிடைச்சது போதும்னு இருந்திட்டீங்க. என்னால அப்படி இருக்க முடியாது" என்றான் ராமு, தந்தை எதுவும் சொல்லி விடுவாரோ என்று நினைத்து, முன்னெச்சரிக்கையாக.
'அதிகமாக ஆசைப்படாமல், குடும்பத்தை நன்கு பார்த்துக் கொண்டால் போதும் என்று நினைத்து நான் செயல்பட்டதால்தான் உன் அக்காவையும், உன்னையும் நன்றாகப் படிக்க வைத்து, உன் அக்காவுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து, நீ நல்ல நிலைக்கு வந்த பிறகும் உன்னை எதிர்பார்க்காமல் நானும் உன் அம்மாவும் கடைசி வரை நல்லபடியாகக் குடும்பம் நடத்தும் அளவுக்குக் கையில் சேமிப்பு வைத்துக் கொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது. இதை நீ எப்போது புரிந்து கொள்ளப் போகிறாயோ!' என்று நினைத்துக் கொண்டார் வைத்திலிங்கம்.
குறள் 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
No comments:
Post a Comment