About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 26 - புலால் மறுத்தல்

திருக்குறள் 
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 26 
புலால் மறுத்தல்

251. முத்துவின் ஆடுகள்

முத்து பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் முதலில் செய்வது தன் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளைச் சென்று பார்ப்பதுதான். 

பெரும்பாலும் அவை வீட்டின் பின்னே வெட்ட வெளியில் நின்று கொண்டிருக்கும், அல்லது அருகில் எங்காவது புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும்.

சிறு வயதிலிருந்தே முத்து ஆடுகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறான். குட்டிகள், பெரிய ஆடுகள் என்று அவன் வீட்டில் ஐந்தாறு ஆடுகளுக்குக் குறையாமல் இருக்கும். சில சமயம் பெரிய ஆடுகளில் ஒன்று காணாமல் போகும். அவன் அம்மாவிடம் கேட்கும்போது அதை விற்று விட்டதாகச் சொல்லுவாள்.

"எதுக்கும்மா ஆட்டை விக்கணும்?" என்று முத்து ஒருமுறை கேட்டான்.

"நம்மளால அஞ்சாறு ஆட்டுக்கு மேல வச்சுப் பராமரிக்க முடியாது. ஆடு குட்டி போட்டா நமக்குத் புதுசா ஆடு கிடைக்குதுல்ல? அதனால பெரிய ஆடு எதையாவது அப்பப்ப வித்துடுவோம்" என்றாள் அவன் அம்மா.

முத்துவுக்கு இந்த விளக்கம் புரிந்தும் புரியாமலும் இருந்தது. ஆனால் அதைப் பற்றி மேலே கேட்க அவனுக்குத் தெரியவில்லை. பழகிய ஆடுகளில் ஒன்று வீட்டை விட்டுப் போவது வருத்தமாக இருந்தாலும், மற்ற ஆடுகளிடம், குறிப்பாகக் குட்டி ஆடுகளிடம் தன் அன்பைக் காட்டிக் கொண்டு இருந்தான்.

முத்து ஆட்டின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தபோது அவன் அம்மா வந்தாள்.

"ம்...இன்னும் ஒருநாள்தான் இந்த ஆடு உனக்கு?" என்றாள்.

"ஏம்மா, இதை விக்கப் போறமா?" என்றான் முத்து.

"விக்கப் போறதில்லடா. உன் அக்கா சமைஞ்சிருக்கால்ல? அவளுக்கு சடங்கு செஞ்சு விருந்து போட இந்த ஆட்டை வெட்டித்தான் கறிச்சோறு வைக்கணும்."

முத்து அதிர்ச்சியுடன், "என்னது? இதை வெட்டி, கறிச்சோறு செய்யப் போறியா? ஏன் கடையிலேந்து கறி வாங்கலாம் இல்ல?" என்றான்.

"அத்தனை பேருக்கு கறி சமைக்கக் கடையில வாங்கிக் கட்டுப்படி ஆகாது."

"இந்த ஆட்டை வித்துட்டு அந்தப் பணத்தில வாங்கலாமே?" என்றான் முத்து.

"இதை வித்தா கடையில இதை வெட்டி, கறியா விப்பாங்க. அதை நாம வாங்கறதுக்கு நாமளே வெட்டிக் கறி செஞ்சா செலவு கம்மியா இருக்கும்."

"நாம விக்கற ஆட்டையெல்லாம் வெட்டி, கறி ஆக்கிடுவாங்களா?"

"பின்ன எதுக்கு நம்மகிட்ட பணம் கொடுத்து ஆடு வாங்கிட்டுப் போறாங்க?"

"அவங்க வளக்கறதுக்குத்தான் நம்மகிட்டேந்து வாங்கிக்கிட்டுப் போறாங்கன்னில்ல நெனச்சேன்!"

"நாம விக்கறதெல்லாம் இனிமே குட்டி போட முடியாத வயசான ஆடு இல்லேன்னா கடா ஆடு. கறிக்குத்தான் அதையெல்லாம் வாங்கிட்டுப் போறாங்க."

"நாம சாப்பிடற கறியெல்லாம் இப்படித்தான் வருதா?"

"பின்ன? ஆட்டுக்கறி என்ன வெண்டைக்காயா செடியில காய்க்கறதுக்கு? நம்மள மாதிரி ஆளுங்க விக்கற ஆடுகளை வெட்டி அந்தக் கறியைத்தான் கடையில விக்கறாங்க. அதை வாங்கித்தான் எத்தனையோ நாள் நம்ம வீட்டில கறி சமைச்சிருக்கோம்!"

முத்து அதிர்ச்சியுடன் ஆடுகளைப் பார்த்தான். 'ஆட்டுக்கறி இப்படித்தான் வருகிறதா? இத்தனை நாள் இது ஏன் எனக்குப் புரியவில்லை? ஏதோ அம்மா கடையிலிருந்து வாங்கி வருகிறாள் என்று நினைத்தேனே தவிர, கடைக்கு அது எப்படி வருகிறது என்று யோசிக்கவில்லையே! அன்போடு வளர்க்கும் இந்த எல்லா ஆடுகளும் ஒரு நாள் நமக்கு உணவாகத்தானா?'

அவன் அக்காவின் சடங்கின்போது போடப்பட்ட கறிச்சோற்றை முத்து உண்ணவில்லை.

குறள் 251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

பொருள்:  
தன் உடலை வளர்ப்பதற்கு இன்னொரு உயிரின் உடலை உண்பவன் எப்படி அருள் உள்ளவனாக இருக்க முடியும்?

252. திருமண விருந்து
ஒரு ஓட்டலில் நடந்த ஒரு திருமண வரவேற்பில், சம்பந்தம் மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவர் முகம் பரிச்சயமானது போல் இருந்தது.

இவரை எங்கே பார்த்திருக்கிறோம் என்று சம்பந்தம் யோசிப்பதற்குள் அவர் சட்டென்று எழுந்து, "சார் நீங்க சம்பந்தம்தானே?" என்றார்.

அதற்குள் சம்பந்தமும் அவரை நினைவுபடுத்திக் கொண்டு விட்டார். "சுந்தர்தானே நீங்க?" என்றார்.

இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

சுந்தர் சம்பந்தத்தின் வீட்டில் குடி இருந்தவர்.

வீட்டுச் சொந்தக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் இடையே பொதுவாக இருக்கும் சந்தேகம், பயம், தற்காப்பு உணர்வு இவற்றைத் தாண்டி இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தார்கள்.

"இங்கே சத்தமா இருக்கும், வெளியே போய்ப் பேசலாம்" என்றார் சுந்தரம்.

இருவரும் ஓட்டல் வரவேற்பறையில் சென்று அமர்ந்தனர்.
 
"இருபது வருஷத்துக்கு மேலே இருக்குமே? எங்கே இருக்கீங்க, எப்படி இருக்கீங்க?" என்றார் சம்பந்தம்.

"நல்லா இருக்கேன்" என்ற சுந்தர். "நீங்க எப்படி இருக்கீங்க? அதே வீட்டிலதானே இருக்கீங்க? நான் இருந்த போர்ஷன்ல யார் இருக்காங்க?" என்றார் தொடர்ந்து.

"நீங்க இருந்த போர்ஷன்லாம் இப்ப இல்ல. வீட்டை இடிச்சு ஃபிளாட் கட்டியாச்சு. எனக்கு ரெண்டு ஃபிளாட்டும், கொஞ்சம் பணமும் கொடுத்தாங்க. ஒரு ஃபிளாட்டில நான் இருந்துக்கிட்டு இன்னொரு ஃபிளாட்டை வாடகைக்கு விட்டிருக்கேன். குடியிருக்கறவரு உங்களை மாதிரி நல்ல மனுஷர்தான்!" என்றார் சம்பந்தம்.

"நீங்க தங்கமான மனுஷராச்சே! உங்களுக்கு எல்லாரும் நல்லவங்களாத்தான் தெரிவாங்க!" என்றார் சுந்தர். 

"அது சரி. நீங்க எங்க இருக்கீங்க இப்ப?"

"வேலை விஷயமா ஊர் ஊராப்  போயிட்டு மறுபடி சென்னைக்கு வந்திருக்கேன். இப்ப புரசைவாக்கத்தில் இருக்கேன்."

"உங்க வேலை எப்படி இருக்கு? உங்க கம்பெனி நல்லா போய்க்கிட்டிருக்கு போலருக்கே? அதே கம்பெனியிலதானே இருக்கீங்க?"

"ஆமாம். இன்னும் ரெண்டு வருஷத்திலே ரிடையர் ஆகணும்."

"அப்படியா? எங்கே செட்டில் ஆகப் போறீங்க? சொந்த வீடு எந்த ஊர்ல இருக்கு?"

"சொந்த வீடெல்லாம் எதுவும் இல்லை. நிறைய சம்பாதிச்சேன்னுதான் பேரு. ஆனா வீடு வாங்கல. சேமிப்பும் பெரிசா இல்ல. பையனைப் படிக்க வச்சு கல்யாணம் செஞ்சு வச்சதைத் தவிர உருப்படியா எதுவும் செய்யல. சம்பாதிச்ச பணமெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல! ரிடையர் ஆனப்புறம் என்ன செய்யப் போறேன்னு தெரியல."

"கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லபடி நடக்கும்" என்றார் சம்பந்தம்.

"சரி, வாங்க. சாப்பிடப் போகலாமா?" என்றார் சுந்தர். 

வரிசையில் நின்று தட்டில் உணவுகளை வாங்கிக் கொண்டு இருவரும் ஒரு மேஜையில் வந்து அமர்ந்தனர்.

"தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க நான்-வெஜ் சாப்பிடுவீங்களா என்ன?" என்றார் சுந்தர், சம்பந்தத்தின் தட்டைப் பார்த்து விட்டு.

"சாப்பிடுவேன். ஏன் கேக்கறீங்க?" என்றார் சம்பந்தம்.

"இல்லை. உங்க வீட்டில சுத்த சைவம்னு எனக்கு நினைவிருக்கு. என் மனைவி சொல்லியிருக்கா, உங்க வீட்டில முட்டை கூட சேத்துக்க மாட்டீங்கன்னு. அதான் கேட்டேன். சாரி. தப்பா நினைச்சுக்காதீங்க" என்றார் சுந்தர்.

"நீங்க கேட்டதில எதுவும் தப்பில்ல. எங்க குடும்பம் சுத்த சைவம்தான். ஆனா எனக்கு மட்டும் நண்பர்களோட சேர்ந்து இந்தப் பழக்கம் வந்துடுச்சு!" என்றார் சம்பந்தம்.

"அதனால என்ன?" என்றார் சுந்தர்.

"இல்ல, சைவக் குடும்பத்தில பிறந்திருந்தாலும், என் நாக்கு ருசிக்காக அசைவத்தைப் பழக்கிக்கிட்டு விட முடியாம இருக்கறது எனக்கு வருத்தம்தான்" என்றார் சம்பந்தம் சற்றே சங்கடத்துடன்.

குறள் 252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருள்:  
பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்களுக்குப் பொருள் படைத்தவர் என்ற சிறப்பு இல்லை. புலால் உண்பவர்களுக்கு அருள் உடையவர் என்ற சிறப்பு இல்லை.
253. சுப்புவின் விருப்பம்

சுப்புவுக்கு அந்த மடத்துடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது அவனுக்குத் தெரியாது. சிறு வயதில் அவனை அங்கே யாரோ சேர்த்து விட்டுச் சென்றதாகச் சென்னார்கள்.

அந்த மடத்தின் தலைவர் அவனைத் தன் மகன் போல்தான் நடத்தி வந்தார்.

சாப்பாடு, தங்க இடம், மடத்தில் இருந்தவர்களின் அன்பு இவையெல்லாம் கிடைத்ததால், சுப்பு தனக்குப் பெற்றோர் இல்லை என்ற குறையையே உணரவில்லை.

சுப்புவுக்கு ஐந்து வயதானதும் அவனை அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தார்கள். மடத்தலைவரும், மடத்தில் பணி புரிந்த சிலரும் அவன் படிப்பில் அக்கறை காட்டி, பாடங்களைப் புரிந்து கொள்ளவும், வீட்டுப் பாடங்கள் செய்யவும் அவனுக்கு உதவினார்கள்.

சில வருடங்கள் கழித்து மடத்தில் மாலையில் நடக்கும் ஆன்மீகம் குறித்த வகுப்புகளில் அமர்ந்து பாடம் கேட்கும்படி மடத்தலைவர் சுப்புவிடம் சொன்னார். 

அவர் சொன்னதற்காகத்தான் சுப்பு அந்த வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான். ஆயினும், ஆன்மீகப் பாடங்களில் அவனுக்கு ஒரு ஈடுபாடு ஏற்படத் துவங்கியது. வகுப்புகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெறும் அளவுக்கும் அவன் ஆர்வம் வளர்ந்தது.

ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிப் பாடங்கள் அதிகம் இருந்ததால் ஆன்மீக வகுப்புகளில் அவனால் தினமும் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த வகுப்புகளில் கலந்து கொண்டு தன் ஆன்மீக ஆர்வத்துக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்தான்.

"சுப்பு நம் மடத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு வருவான்" என்று சிலர் மடத்தலைவரிடம் சொன்னபோது மடத்தலைவருக்குப் பெருமையாக இருந்தது.

சுப்பு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மடத்தலைவர் அவனைத் தனியே அழைத்தார். 

'உன் எதிர்காலத்தைப் பத்திப் பேசணும். என்ன செய்யப் போற?" என்றார் மடத்தலைவர்.

"நீங்க சொல்றபடி செய்யறேன் ஐயா!" என்றான் சுப்பு.

"நீ நல்லா படிக்கறே. பிளஸ் டூவில நிறைய மார்க் வாங்குவ. நீ விரும்பினா எஞ்சினியரிங்கோ மெடிகலோ படிக்கலாம். நம் மடத்துக்கு வர சில பெரிய மனுஷங்க உன் படிப்புச் செலவைப் பாத்துப்பாங்க. படிப்பை முடிச்சுட்டு நீ நல்ல வேலைக்குப் போய் உன் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்கலாம்."

சுப்பு மௌனமாக இருந்தான்.

"சொல்லு."

"வேண்டாம் ஐயா. நான் இந்த மடத்திலேயே இருந்து சேவை செய்ய விரும்பறேன்" என்றான் சுப்பு.

"நீ இப்படிச் சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன். எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா நீ படிக்கணும். பி ஏ, பி எஸ் சி, பி காம் ஏதாவது படிச்சுட்டு அப்புறம் மடத்தில் நீ வேலை செய்ய ஆரம்பிக்கலாம். நீ விரும்பினா போஸ்ட் கிராஜுவேஷனோ பி எச் டியோ கூடப் பண்ணலாம். உன் படிப்பு மடத்துக்குப் பயனுள்ளதாத்தான் இருக்கும்."

"வேணாங்க. பி ஏ மட்டும் படிக்கிறேன். அதுக்கப்புறம் மேலே படிக்கணும்னு நீங்க விருப்பப்பட்டா படிக்கிறேன். ஆன்மீக விஷயங்களைத் தெரிஞ்சுக்கறதிலதான் எனக்கு ஆர்வம் இருக்கு" என்றான் சுப்பு.

"ரொம்ப நல்லது" என்றார் மடத்தலைவர். 

ஒரு நிமிடம் மௌனமாக அவனை உற்றுப் பார்த்து விட்டு, "உன் ஆர்வத்தைப் பாராட்டறேன். ஆனா நீ இந்த மடத்தில சேவை செய்யணும்னா ஒரு விஷயத்தில உன்னை மாத்திக்கணும்" என்றார் மடத்தலைவர்.

"சொல்லுங்க ஐயா!"

"நீ அசைவம் சாப்பிடறதை நிறுத்தணும்."

"ஐயா!" என்றான் சுப்பு அதிர்ச்சியுடன்.

"எனக்குத் தெரியும் சுப்பு. மடத்தில சைவச் சாப்பாடுதான். அதுவும் உப்புச் சப்பு இல்லாமதான் இருக்கும். உன் பள்ளிக்கூட நண்பர்களோட சில சமயம் நீ ஓட்டலுக்குப் போய் அசைவம் சாப்பிடறது எனக்குத் தெரியும். உன் கைச்செலவுக்காக நான் கொடுக்கற பணத்தை இதுக்குச் செலவழிக்கறேன்னும் எனக்குத் தெரியும்."

"என்னை மன்னிச்சுடுங்க ஐயா. ஏதோ ஆசையில..."

"இதில மன்னிக்கறதுக்கு எதுவும் இல்ல. ஆன்மீகத்தில இருக்கறவங்களுக்கு அருள் ரொம்ப முக்கியம். அருள்னா கடவுளோட அருளை வேண்டறது மட்டும் இல்ல. நாம எல்லார்கிட்டயும் - மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், புழு பூச்சிகள், செடி கொடிகள் எல்லார்கிட்டயும் - கருணையோடு, அருளோடு இருக்கணும். இப்பவே  நீ அப்படித்தான் இருக்கிறதா நீ நினைக்கலாம், நான் அதை இல்லேன்னு சொல்லல. ஆனா அது முரண்பாடா இருக்கும். அஹிம்சை பேசறவன், கையில கத்தியோடு அலையக் கூடாது. அது மாதிரிதான் இதுவும். 

"பிளஸ் டூ ரிசல்ட் வர ஒரு மாசம் ஆகும். இப்ப பள்ளிக்கூடமும் கிடையாது. நீ மடத்திலதான் இருக்கப் போற. இந்த ஒரு மாசத்துல உன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டு அசைவம் சாப்பிடாம இருந்து பாரு. அப்படி இருக்க முடியும்னா சொல்லு. அப்புறம் நீ பட்டப்படிப்பு படிச்சுட்டு, உன் விருப்பப்படி மடத்தில் சேரலாம்" என்றார் மடத்தலைவர். 

குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்..

பொருள்:  
கொலைக்கருவியைக் கையில் வைத்திருப்பவர் நெஞ்சில் அருள் இல்லாதது போல் பிற உயிர்களை உண்பவரின் மனம் அருளை நோக்காது.

254. கேள்வி நேரம்
சுவாமி அபேதானந்தர் பேசி முடித்ததும், "சுவாமிஜி பேசிய விஷயங்கள் பற்றி உங்க சந்தேகங்களை நீங்க கேக்கலாம்" என்றார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். 

"சுவாமிஜி, உலகத்தில பாவம், புண்ணியம்னெல்லாம் இருக்கா என்ன?"

கேள்வி கேட்டவர் இருந்த திசையைப் பார்த்த அபேதானந்தர், "உங்க பேர் என்ன?" என்றார்.

"சம்பந்தம்."  

"நீங்க என் பேச்சைக் கேட்டீங்களா?" 

"கேட்டேனே!"  

"பாவம், புண்ணியம் என்கிற வார்த்தைகளை நான் பயன்படுத்தவே இல்லையே!" என்றார் அபேதானந்தர். 

கூட்டத்தில் இலேசான சிரிப்பலை எழுந்தது. 

கேள்வி கேட்டவர் சற்று சங்கடப்பட்டவராக, "ஆனா, உயிர்களைக் கொல்லக் கூடாதுன்னு சொன்னீங்களே!" என்றார்.

"அப்படிச் சொல்லலியே நான்! உயிர்கள் கிட்ட அன்பா இருக்கணும். அது அருள். உயிர்களைக் கொல்றது அருள் இல்லாத செயல் அப்படின்னுதான் சொன்னேன்."

"அப்ப, அது பாவம்னுதானே அர்த்தம்?"

"பாவம், புண்ணியத்தைப் பத்தி நான் பேசல. அது வேற தலைப்பு. அதுக்குள்ளே நான் போகல. நீங்க அருள் உள்ளவரா இருக்கணும்னா என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாதுன்னு சொன்னேன். அருள் உள்ளவரா இருக்கணுமாங்கறதை நீங்கதான் முடிவு செய்யணும்."

"எனக்குப் புரியல சுவாமிஜி. பொதுவா இதையெல்லாம் பாவம், புண்ணியம்னுதானே சொல்வாங்க?"

"பாவம், புண்ணியங்கறது விளைவுகள். நான் சொன்னது உங்க செயல்கள் உங்க எண்ணங்களின்படி இருக்கணும்னு. எல்லாரும் தங்களை அன்பு உள்ளவங்களாத்தான் நினைக்க விரும்புவாங்க. அன்பு உள்ளவர்கள் இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாதுன்னு சொன்னேன்."

"அ பாவம், புண்ணியம்னு சொல்லி இருக்கலாமே!"

"சரி. உங்களை ஒண்ணு கேக்கறேன். நீங்க நேர்மையானவரா?"

சம்பந்தம் சற்றுத் தயங்கி விட்டு, "ஆமாம்" என்றார்.

"இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் யோசனை செஞ்சுட்டு பதில் சொன்னதே உங்க நேர்மையைக் காட்டுது!" என்ற அபேதானந்தர், தொடர்ந்து, "நீங்க நேர்மையானவர்னா அடுத்தவங்க பொருளை அபகரிக்க மாட்டீங்க இல்ல?"

"மாட்டேன்."

"நேர்மையானவர்னா இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாதுன்னு உங்களுக்கு ஒரு வரையறை இருக்கற மாதிரி, அருள் உள்ளவர்னா இதைச் செய்யலாம் செய்யக் கூடாதுன்னும் சில வரையறை இருக்கு. அதுதான் நான் சொன்னது. புரியுதா?"

"புரியுது. ஆனா, ஏன் இதை நீங்க பாவ புண்ணியத்தோட தொடர்பு படுத்தலேன்னுதான் எனக்குப் புரியல."

"நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, பாவ புண்ணியங்கள் என்பவை விளைவுகள். மறுபடி நான் சொன்ன உதாரணத்துக்கு வரணும்னா, அடுத்தவங்க பொருளை ஒருவர் அபகரிச்சா சட்டம் அவரைத் தண்டிக்கலாம். அது போல ஒருவர் நேர்மையா நடந்துக்கிட்டா அவருக்குப் பாராட்டோ, பரிசா கிடைக்கலாம். ஆனா நாம நேர்மையா நடந்துக்கறது பரிசுக்கு ஆசைப்பட்டோ, தண்டனைக்கு பயந்தோ இல்லை. நேர்மையா நடக்கறது சரியான வழின்னு நாம நினைக்கறதாலதான், நாம நேர்மையா இருக்கோம். அது மாதிரி அருளோட இருக்கறதுதான் நம் இயல்புன்னு நினைச்சா, நாம உயிர்கள் கிட்ட அன்போட நடந்துக்கலாம். பாவ புண்ணியத்துக்காக பயந்து நடந்துக்கறது செயற்கையானது இல்லையா?"

" புரியுது சுவாமிஜி. பொதுவா எல்லாரும் இதைச் செஞ்சா புண்ணியம், இதைச் செஞ்சா பாவம்னுதான் சொல்லுவாங்க. நீங்க சொல்றது தெளிவா இருக்கு. எனக்கு இன்னொரு சந்தேகம். கேக்கலாமா?"

"கேளுங்க."

"அசைவ உணவு சாப்பிடறது அருளற்ற செயலா?"

"அதை அறம் இல்லாததுன்னுதான் சொல்லணும்."

"நாம உயிர்க்கொலை செய்யறதில்லையே. கடையில நாம புலால் வாங்கி சமைக்கிறோம், அல்லது ஓட்டல்ல புலால் உணவு சாப்பிடறோம். இதில அறத்துக்குப் புறம்பா என்ன இருக்கு?"

"உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, நீங்க வெளிப்படையா கேள்விகள் கேட்டு எல்லாருக்குமே பயன் அளிக்கிற வகையில நடந்துக்கிட்டதுக்காக உங்களைப் பாராட்டறேன். இங்கே வாங்க" என்று அவரை அழைத்தார் அபேதானந்தர்.

சம்பந்தம் அபேதானந்தர் அருகில் வந்து அவரை வணங்கினார். 

அபேதானந்தர் அவர் தலையில் கையை வைத்து வாழ்த்தி விட்டு. "இந்தாங்க பிரசாதம்" என்று அவரிடம் சில மாம்பழத் துண்டுகளைக் கொடுத்தார்.

கொடுக்கும்போது அபேதானந்தரின் கை தவறிப் பழத் துண்டுகள் கீழே மண் தரையில் விழுந்தன.

சம்பந்தம் அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கைகளில் வைத்துக் கொண்டார். 

"சாப்பிடுங்க" என்றார் அபேதானந்தர்.

"மண்ணாயிடுச்சே!" என்றார் சம்பந்தம் தயங்கியபடி.

"அதனால் என்ன? நான்தானே பழத் துண்டுகளைத் தரையில் போட்டு மண்ணாக்கினேன்? நீங்க போடலியே! அதனால நீங்க சாப்பிடலாமே!" என்றார் அபேதானந்தர் சிரித்தபடியே.

தன் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதை சம்பந்தம் உணர்ந்தார்.

குறள் 254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

பொருள்:  
அருள் எதுவென்றால் எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தல். அருள் இல்லாதது எதுவென்றால் உயிர்களைக் கொல்லுதல். அறம் இல்லாதது எதுவென்றால் புலால் உண்ணுதல்.

255. சரஸ்வதியின் சந்தேகம்
"மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே..."

"என்ன பாட்டு இது? சானலை மாத்துங்க!" என்றாள் சரஸ்வதி.

கோமதிநாயகம் டிவியை செய்தி சானலுக்கு மாற்றினார்.

"என்ன பாட்டு இது? மனுஷனை மனுஷன் சாப்பிடறதாவது! கேக்கவே ஒரு மாதிரி இருக்கு."

"இந்தப் பாட்டுக்கு அர்த்தம் அது இல்ல" என்றபடியே தொலைக்காட்சியின் ஒலியை அதிகரித்தார் கோமதிநாயகம்.

"இறைச்சி உற்பத்தி சென்ற ஆண்டு 9 சதவீதம் அதிகரித்துள்ளது..." என்றது செய்தி சானல்.

"இது பரவாயில்லையா?"என்று கேட்டபடியே டிவியை நிறுத்தினார் கோமதிநாயகம்.

"ஏங்க, நீங்க சைவம்கறதுக்காக உலகத்தில யாருமே அசைவம் சாப்பிடக் கூடாதா என்ன?"

"அப்படி நினைச்சிருந்தா அசைவம் சாப்பிடற குடும்பத்தைச் சேர்ந்த உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டிருப்பேனா?"

"ஆமாம். இதையே சொல்லிக்கிட்டிருங்க.  நான்தான் கல்யாணம் ஆனப்பறம் அசைவம் சாப்பிடறதை விட்டுட்டேனே! நீங்க எங்க வீட்டுக்கு வரப்பல்லாம் எங்க வீட்டிலேயும் அசைவம் சமைக்கறதில்ல."

"அதெல்லாம் சரிதான். நான் யாரையும் அசைவம் சாப்பிட வேண்டாம்னு சொல்லல. ஆனா இறைச்சிக்காக உயிர்கள் கொல்லப்படறது எனக்கு வருத்தமா இருக்கு."

"இது உலகத்தோட இயல்புங்க. எல்லா உயிர்களும் வேற உயிர்களைக் கொன்னு தின்னுதான் உயிர் வாழுதுங்க."

"அதுதான் இல்ல. விலங்குகளிலேயே சைவப் பிராணிகள் நிறைய இருக்கு. அவ்வளவு பெரிய யானையே சைவம்தான்."

"பிராணிகளுக்குள்ள சைவம் அசைவம் இருக்கற மாதிரி மனுஷங்களுக்குள்ளேயும் இருக்காங்க. இது இயல்புதானே!"

"இயல்பா இருக்கலாம். ஆனா மனுஷங்க நர மாமிசம் திங்கறவங்களா இருந்தா என்ன ஆகும்? இந்தப் பாட்டில வர மாதிரி மனுஷனை மனுஷன் சாப்பிட்டுக்கிட்டு நம்மளை நாமே அழிச்சுக்கிட்டிருப்போம்."

"அப்படித்தான் இல்லையே!"

"நீ சொன்னபடி எல்லா உயிர்களும் மற்ற உயிர்களைத் தின்னு உயிர் வாழற நிலை இருந்தா, உலகத்தில சில பிராணிகள்தான் உயிரோட இருக்கும். அசைவம் சாப்பிடாத உயிர்களோட புண்ணியத்தினாலதான் உலகத்தில இத்தனை உயிர்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கு."

"ஏங்க உலகத்தில புண்ணியம், பாவம்னெல்லாம் இருக்கா? பாவம் பண்ணினவங்க மீளாத நரகத்துக்குப் போவாங்களா?"

"அது எனக்குத் தெரியாது. ஆனா சில பேர் பண்ற புண்ணியம் பல பேரைக் காப்பாத்தும்கறதில எனக்கு நம்பிக்கை உண்டு!" என்றார் கோமதிநாயகம், சரஸ்வதியின் கேள்விக்கு நேரான பதில் சொல்வதைத் தவிர்த்து!

குறள் 255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு..

பொருள்:  
ஊன் உண்ணாதிருத்தல் என்ற அறம் உலகில் இருப்பதால்தான் உலகில் பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. புலால் உண்பவர்களை நரகம் விழுங்கி விடும், வெளியே விடாது.

256. பெண் பார்த்த மாப்பிள்ளை 
"சாயந்திரம் வனிதாவைப் பெண் பாக்க வராங்க. நீங்க ரெண்டு பேரும் வரணும்" என்று அழைத்தார் சபாபதி.

"நாங்க எதுக்குப்பா?" என்றார் குருமூர்த்தி தயக்கத்துடன்.

"நீ இல்லாம என் வீட்டில எந்த நல்ல காரியமும் நடக்காது குரு. என் சொந்தக்காரங்களை விடவும் உன் குடும்பம்தானே எனக்கு நெருக்கம்?" என்றார் சபாபதி.

"சரி. அதுக்கு ஏன் நேர்ல வந்து கூப்பிடணும்? ஃபோன்ல சொல்லியிருந்தா போதுமே!"

"எங்கே? நேர்ல வந்து கூப்பிட்டப்பவே தயங்கறே! ஃபோன்ல கூப்பிட்டிருந்தா எப்படி சரியா இருந்திருக்கும்?"

குருமூர்த்தியும் அவர் மனைவியும் பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தனர்.

பெண் பார்க்கும் படலம் சுருக்கமாக முடிந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண்ணைப் பிடித்திருந்தது போல்தான் தோன்றியது. 

ஆயினும், போகும்போது, "பெண்ணுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டு வைங்க. நாங்களும் பையன்கிட்ட பேசிட்டு ரெண்டு நாள்ள ஃபோன் பண்றோம்" என்று சொல்லி விட்டுப் போனார்கள்.

"என்னம்மா பையனை உனக்குப் பிடிச்சிருக்கா?" என்றார் குருமூர்த்தி, சபாபதியின் மகளிடம்.

"அப்பா அம்மாதான் தீர்மானிக்கணும் அங்க்கிள்" என்றாள் அவள் சிரித்தபடி.

ஆனால் சபாபதியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்பதை குருமூர்த்தி கவனித்தார்.

"அப்ப நாங்க கிளம்பறோம். வீட்டில எல்லார்கிட்டயும் கேட்டு முடிவு செய்!" என்று சபாபதியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார் குருமூர்த்தி.

ன்று இரவு மீண்டும் குருமூர்த்தியின் வீட்டுக்கு சபாபதி வந்திருந்தார்.

"என்ன முடிவு செஞ்சிருக்க?" என்றார் குருமூர்த்தி.

"என் மனைவி, பொண்ணு ரெண்டு பேரும் சரின்னு சொல்லிட்டாங்க. எனக்குத்தான் கொஞ்சம் யோசனையா இருக்கு" என்றார் சபாபதி.

"என்ன யோசனை?"

"பையனோட தொழிலைப் பத்தித்தான்."

"பையன் ஏதோ பிசினஸ் பண்றான்னு சொன்னே. நான் கூட என்ன பிசினஸ்னு கேட்கலாம்னு நினைச்சேன். அப்புறம் கேட்டுக்கலாம்னு இருந்துட்டேன். ஏன், பையனோட வியாபாரம் சரியில்லையாமா?"

"வியாபாரம் நல்லாத்தான் போகுது. ஆனா..."

"சொல்லு."

"நானும் முதல்ல வியாபாரம் பத்தி சரியா கேட்டுக்கல. ஏற்றுமதித் தொழில்னு சொன்னாங்க. என்ன ஏற்றுமதின்னு கேக்காம விட்டுட்டேன். இன்னிக்குத்தான் தெரிஞ்சுது. பையன் இறைச்சி ஏற்றுமதி செய்யறானாம். கடையும் வச்சிருக்கானாம்."

"ஓ!" என்றார் குருமூர்த்தி.

"அதான் எனக்குத் தயக்கமா இருக்கு."

"சரி. நீ, நான் எல்லாம் இறைச்சி சாப்பிடறவங்கதானே?"

"அது சரிதான். ஆனாலும் இறைச்சி வியாபாரம்னா எனக்குத் தயக்கமா இருக்கு."

"சபாபதி! உனக்கு மாப்பிள்ளையா வரவரு எப்படிப்பட்டவரா இருக்கணும்னு தீர்மானிக்கறது உன் விருப்பம். ஆனா நீ தயங்கறதுக்கான காரணம் சரின்னு எனக்குத் தோணல. உலகத்தில இறைச்சி சாப்பிடறவங்க இருக்கறப்ப, இறைச்சி விக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க?"

சபாபதி பதில் சொல்லவில்லை.

குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

பொருள்:  
புலால் உண்பதற்காக உலகத்தார் உயிர்களைக் கொல்லாமல் இருந்தால், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

257. ஷ்யாமின் சங்கடம்

புதிய வியாபாரத் தொடர்பு விஷயமாகப் பேச வெளியூரிலிருந்து வந்திருந்த வாடிக்கையாளருடனான சந்திப்பு சிறப்பாக நடந்து முடிந்தது.

நிர்வாக இயக்குனர் சுந்தர், "நீங்க இங்கே வந்து எங்களை சந்தித்துப் பேசினதுக்கு ரொம்ப நன்றி. இன்னிக்கு நாம பேசி முடிச்ச வியாபாரத் தொடர்பு நமக்குள்ள நீண்ட காலம் நீடிக்கும்னு நம்பறேன். நீங்க ஹோட்டல் ரூமுக்குப் போய் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்குங்க. ராத்திரி 8 மணிக்கு உங்களை டின்னருக்கு அழைச்சுக்கிட்டுப் போக எங்க ஜெனரல் மானேஜர் ஷ்யாம் வருவார். நானே வரணும். ஆனா இன்னிக்கு என் உறவினர் ஒத்தரோட கல்யாண ரிசப்ஷனுக்கு நான் போக வேண்டி இருக்கு. தப்பா நினைச்சுக்காதீங்க!" என்றார்.

"அதனால என்ன சார்? எதுக்கு இந்த ஃ பார்மாலிட்டி எல்லாம்?" என்றார் வாடிக்கையாளர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சபேசன். அவருடன் வந்திருந்த அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்ரீதரும் தலையசைத்து அதை ஆமோதித்தார்.

றுநாள் காலை அலுவலகத்துக்கு வந்ததும் சுந்தர் ஷ்யாமைத் தன் அறைக்கு அழைத்தார். "சபேசனும் ஸ்ரீதரும் ஊருக்குப் போயிட்டாங்களா? எப்படி ஃபீல் பண்ணினாங்க?" என்றார். 

"ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. காலையில அவங்களை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்குப் போயிருந்தேன். நாம அவங்களுக்கு 
நிறைய முக்கியத்துவம் கொடுத்து அவங்களை நல்லா கவனிச்சுக்கிட்டதில அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்" என்றார் ஷ்யாம்.

"வெரி குட். நீங்க ஏர்போர்ட்டுக்குப் போனது பெரிய விஷயம். ராத்திரி டின்னர் எப்படி இருந்தது?"

ஷ்யாம் சற்றுத் தயங்கியபடி, "ராத்திரி நான் டின்னருக்குப் போகல. டி ஜி எம் பிரகாஷை அனுப்பிச்சுட்டேன். அவரு அவங்களை நல்லா கவனிச்சுக்கிட்டாரு" என்றார்.

"ஏன்? நீங்க அவங்களோட டின்னருக்கு வருவீங்கன்னு நான் சொல்லி இருந்தேனே! உங்களுக்கு வேற வேலை இருந்ததா? அப்படி இருந்தா முன்னாடியே எங்கிட்ட சொல்லி இருக்கலாமே?" என்றார் சுந்தர் சற்று ஏமாற்றத்துடன்.

"இல்ல சார். அவங்க நான்-வெஜ் சாப்பிடுவாங்க. எனக்கு அவங்களோட உக்காந்து சாப்பிடறது கஷ்டமா இருக்கும். அதனால சாயந்திரம் அவங்களுக்கு ஃபோன் பண்ணி, அவசரமா ஒரு உறவினரைப் பாக்க ஆஸ்பத்திரிக்குப் போகணும், அதனால டி ஜி எம் பிரகாஷ் வருவார்னு சொல்லி அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டேன். அவங்க தப்பா எடுத்துக்கல. அதுக்காகத்தான் காலையில அவங்க எதிர்பாக்காத விதத்தில சீக்கிரமே அவங்க ஹோட்டலுக்குப் போய் அங்கேந்து அவங்களை ஏர்போர்ட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போய் வழி அனுப்பிட்டு வந்தேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்."

"அதெல்லாம் சரிதான். அவங்க நான்-வெஜ் சாப்பிட்டா பக்கத்தில உக்காந்து வெஜிடேரியன் உணவை சாப்பிடறதில உங்களுக்கு என்ன பிரச்னை? நான் கூட வெஜிடேரியன்தான். நான் எத்தனையோ தடவை நான்-வெஜ் சாப்பிடறவங்களோட சேர்ந்து சாப்பிட்டிருக்கேனே!"

"சாரி சார். இது என்னோட தனிப்பட்ட பிரச்னையா இருக்கலாம். எனக்கு என்னவோ நான்-வெஜ் அயிட்டங்களைப் பாத்தா உடம்பில ஏற்படற காயங்களைப் பாக்கற மாதிரி இருக்கும். இந்த உணர்வோடு என்னால சாப்பிட முடியாதது மட்டும் இல்ல, பக்கத்தில உக்காந்திருக்கவே முடியாது. அதனாலதான் இது மாதிரி சூழ்நிலைகளை நான் தவிர்த்துடுவேன். சாரி" என்றார் ஷ்யாம்.

"ஓகே. அடுத்த தடவை இது மாதிரி சூழ்நிலைகள் வரும்போது உங்களை இதில ஈடுபடுத்தக் கூடாதுங்கறதை நான் ஞாபகம் வச்சுக்கறேன்" என்றார் சுந்தர். 

குறள் 257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

பொருள்:  
புலால் என்பது இன்னொரு உயிரின் புண் என்று உணர்ந்தோர், புலால் உண்ணாமல் இருக்க வேண்டும்.

258. பயணம் சென்று வந்த பின்
பள்ளியிலிருந்து திரும்பி வந்த கிரி சோர்வுடன் இருந்தான்.

"ஏண்டா களைச்சுப் போய் வந்திருக்க?" என்றாள் அவன் அம்மா மங்கை.

"ஒண்ணும் இல்லையே!" என்றான் கிரி.

"இன்னிக்குப் பள்ளிக்கூடத்தில எங்கியோ வெளியே அழைச்சுக்கிட்டுப் போகப் போறதா சொன்னாங்களே, அழைச்சுக்கிட்டுப் போனாங்களா?"

"ஆமாம்."

"பஸ்ஸில போயிட்டு வந்திருப்ப. அதான் களைப்பா இருக்கே. தோசை சாப்பிடறியா?"

"இப்ப எதுவும் வேண்டாம்மா" என்று சொல்லி விட்டு தன் அறைக்குப் போய் விட்டான் கிரி.

"பள்ளிக்கூடத்தில எங்கே அழைச்சுக்கிட்டுப் போனாங்களாம்?" என்றாள் மங்கையின் மாமியார்.

"அதை நான் கேக்கலே. இங்கிலீஷிலே எதோ பேர் சொன்னான், அபீட்டோ என்னவோ. களைச்சுப் போயிருக்கான். அப்புறம் கேட்டுக்கலாம்" என்றாள்  மங்கை.

"ராத்திரிக்கு என்ன செய்யப் போற?" என்றாள் மாமியார்.

"பிரியாணிதான்" என்றாள் மங்கை.

ரவு அனைவரும் சாப்பிட உட்கார்ந்தபோது, "இன்னிக்கு பள்ளிக்கூடத்தில எங்கடா அழைச்சுக்கிட்டுப் போனாங்க?" என்றாள் மங்கை.

"ஒரு அபெட்டாருக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க."

"அப்படின்னா?"

"ஆடு வெட்டற இடம்!" என்றாள் கிரியின் அக்கா சுமதி.

"ஒரு தொழிற்சாலை மாதிரி முறையா, சுத்தமா செய்வாங்க" என்றார் கிரியின் அப்பா சிவமணி.

"இங்கல்லாமா அழைச்சுக்கிட்டுப் போவாங்க? சைவம் சாப்பிடறவங்கள்ளாம் வர மாட்டாங்களே!" என்றாள் மங்கை.

"ஆமாம். சில பேர் வரலை. இது கட்டாயம் இல்லை" என்றான் கிரி.

"அங்க என்ன பாத்தே?"

"ஆடு மற்ற மிருகங்களை வெட்டி, தோலை உரிச்சு, இறைச்சியை எடுத்து சுத்தம் பண்ணி கோல்டு ஸ்டோரேஜ்ல வைப்பாங்க. எல்லாம் சுத்தமா, சுகாதாரமா நடக்கும். அப்படித்தானேடா?" என்றார் சிவமணி.

"ஆமாம்ப்பா" என்ற கிரி, தன் தாய் தனக்குப் பரிமாற வந்தபோது, கையைக் குறுக்கே நீட்டி, "பிரியாணி வேண்டாம்மா. வெறும் சோறு இருந்தா போடு. மோர் ஊத்தி சாப்பிட்டுக்கறேன்" என்றான்.

"ஏண்டா உனக்குத்தான் பிரியாணி ரொம்பப் பிடிக்குமே!"

"இல்லம்மா. இன்னிக்கு அபெட்டார்ல ஒரு ஆட்டைக் கொன்னுட்டு அது உடம்பிலேந்து இறைச்சி எடுக்கறதைப் பாத்தப்பறம் எனக்கு இறைச்சி சாப்பிடவே பிடிக்கல!" என்றான் கிரி.

குறள் 258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

பொருள்:  
குற்றமற்ற அறிவை உடையவர்கள் ஒரு உயிரிலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ண மாட்டார்கள்.

259. மழைக்காக ஒரு யாகம் 
"நாட்டில் மழை பொய்த்து விட்டது. குடிமக்கள் மிகவும் அல்லல் படுகிறார்கள். எதுவும் செய்ய இயலாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது" என்றான் அரசன் குணவர்மன்.

"அரசே! மழை பெய்தால்தான் நம் நாட்டுக்கு விடிவு பிறக்கும். மழை வேண்டி யாகம் செய்யும் பழக்கம் உண்டு. தாங்கள் அது போல் ஒரு யாகம் செய்யலாம் என்பது என் கருத்து" என்றார் அமைச்சர்.

"உடனே செய்து விடலாம். யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்."

"அரசே! விஷ்ணுசித்தர் என்று ஒரு முனிவர் இருக்கிறார். அவர் தவ வலிமை மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இந்த யாகத்தை நடத்திக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தாங்கள் அவரை நேரில் சந்தித்து யாகத்தை நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்" என்றார் அமைச்சர். 

"நிச்சயமாக. உடனே கிளம்பலாம். நீங்களும் வாருங்கள்" என்றான் அரசன். 

"யாகம் நடத்த வேண்டும் என்று சொன்னது யார்?" என்றார் விஷ்ணுசித்தர்.

அரசர் அமைச்சரைப் பார்க்க, அமைச்சர் தாம் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டோமோ என்று பயந்தபடியே, "அடியேனுடைய கருத்துதான் அது" என்றார்.

"சரி. செய்யலாம்" என்றார் விஷ்ணுசித்தர் சிரித்தபடி.

அரசன் மகிழ்ச்சியுடன், "யாகத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று தாங்கள் தெரிவித்தால் நான் உடனே ஏற்பாடுகளைத் தொடங்கி விடுகிறேன்" என்றான்.

"சொல்கிறேன்" என்ற முனிவர், ஒரு நிமிடம் அரசனை உற்றுப் பார்த்து விட்டு, "மன்னா! நீ புலால் உண்பாயா?" என்றார்.

"வேட்டையாடுவதும், வேட்டையாடிய மிருகங்களின் ஊனைப் புசிப்பதும் அரசர்கள் வழக்கமாகச் செய்வதாயிற்றே!" என்றான் குணவர்மன் தயக்கத்துடன்.

"இந்த யாகம் செய்ய வேண்டுமானால், நீ ஒரு பட்சம் அதாவது பதினைந்து நாட்கள் வேட்டையாடாமல், புலால் உண்ணாமல் இருக்க வேண்டும்." 

"சரி முனிவரே! அப்படியே இருக்கிறேன்" என்றான் அரசன்.

"அதற்குப் பிறகும், நீ வேட்டையாடுவதையும் புலால் உண்ணுவதையும் அடியோடு நிறுத்தி விட வேண்டும். உன்னால் முடியுமா?" 

அரசன் சற்று யோசித்து விட்டு, "என் நாட்டு நலனுக்காக நான் இதைச் செய்கிறேன். ஆனால் என் குடும்பத்தினரையும், அரண்மனையில் உள்ள மற்றவர்களையும் இப்படி இருக்கச் செய்வது கடினம்."

"நான் இருக்கச் சொன்னது உன்னை மட்டும்தான். மற்றவர்கள் உன்னைப் பின்பற்ற விரும்பினால் அது அவர்கள் விருப்பம். அத்துடன் நீ வேட்டையாடுவதையும், புலால் உண்ணுவதையும் நிறுத்தி விட்டதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்" என்றார் முனிவர்.

"சரி, முனிவரே! அப்படியே செய்கிறேன்" என்று கூறி விடைபெற்றான் அரசன்.

தினைந்து நாட்களுக்குப் பிறகு குணவர்மன் அமைச்சருடன் மீண்டும் வந்து முனிவரைச் சந்தித்தான். 

"நீங்கள் சொன்னபடியே வேட்டையாடுவதையும் புலால் உண்ணுவதையும் நிறுத்தி விட்டேன் முனிவரே!" 

"நல்லது. தொடர்ந்து இதைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா?" என்றார் முனிவர்.

"நிச்சயமாக, முனிவரே! நான் புலால் உண்பதை நிறுத்தியதும் அரண்மனையில் எல்லோருமே நிறுத்தி விட்டார்கள். நான் யாரையும் நிறுத்தத் சொல்லிச் சொல்லவில்லை" என்றான் அரசன்.

"தாங்கள் சொன்னபடி நாட்டு மக்களுக்கு இதை அறிவித்தோம். அரசர் புலால் உண்ணுவதை நிறுத்தியதைப் பார்த்து மக்களில் சிலர் கூட புலால் அருந்துவதை விட்டு விட்டார்கள் என்று செய்தி வந்திருக்கிறது, முனிவரே!" என்றார் அமைச்சர்.

"நல்லது. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி!" என்றார் முனிவர்.  

"இன்னொரு வியப்பான, மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் அரண்மனையிலிருந்து கிளம்பியபோது மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. நீண்ட காலத்துக்குப் பிறகு நாங்கள் பார்த்த காட்சி இது. யாகம் செய்ய வேண்டும் என்று தங்களை அணுகியதுமே இப்படி ஒரு நல்ல அறிகுறி தோன்றியது எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. யாகத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம், முனிவரே?" என்றான் அரசன்.

"நீ ஏற்கெனவே யாகம் செய்து விட்டாய் மன்னா!" என்றார் முனிவர்.

"என்ன சொல்கிறீர்கள், முனிவரே?"

"பிற உயிர்களைக் கொல்லாமலும், அவற்றின் ஊனை உண்ணாமல் இருப்பதும் ஒரு வேள்விதான். இதை விடப்  பெரிய வேள்வி வேறு எதுவும் இல்லை."

"மழை பெய்வதற்காக யாகம் செய்ய வேண்டுமே?" என்றான் குணவர்மன் .

"யாகம் செய்தால் மழை பெய்யும் என்றால் நீ செய்திருக்கும் அறச்செயலான இந்த யாகத்துக்கும் மழை பெய்யும். மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டதாக நீயே சொல்கிறாயே! இந்த அறத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வா. அதுதான் நீ செய்யக் கூடிய மிகப் பெரிய வேள்வி!" என்றார் முனிவர்.

குறள் 259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

பொருள்:  
நெய் போன்ற பொருட்களைத் தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்வதை விட, ஒரு உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமல் இருப்பது நல்லது.

260. சொர்க்கத்தில் கண்ட காட்சி! 
சதீஷுக்கு விழிப்பு வந்தபோது ஒரு பெரிய அறையில் சோஃபாவில் அமர்ந்திருந்தது தெரிந்தது. 

திரும்பிப் பார்த்தபோது பக்கத்தில் அவன் நண்பன் முரளி. அவனுக்கும் அப்போதுதான் விழிப்பு வந்திருக்கும் போலும். அவனும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் சதீஷைப் பார்த்தவனாக, "நாம எங்கடா இருக்கோம்?" என்றான்.

"சொர்க்கத்தில்!" என்றது ஒரு பெண் குரல். 
தரையிலிருந்து முளைத்தது போல் அவர்கள் எதிரே ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.

"சொர்க்கத்திலேயா? நீங்க யாரு?" என்றான் சதீஷ். 

"இரண்டாவது கேள்விக்கு பதில் - நான் உங்கள் ரிலேஷன்ஷிப் மானேஜர் கார்யா. முதல் கேள்விக்கு...."

"கார்யாங்கறதுக்கு பதிலா காவ்யான்னு பேரு வச்சிருக்கலாம். நீங்க ஒரு காவியம் மாதிரி அவ்வளவு அழகா இருக்கீங்க!" என்றான் முரளி.

"சொர்க்கத்துக்கு வந்தும் பெண்களைப் பார்த்து ஜொள் விடும் பழக்கம் போகவில்லையா?" என்றாள் கார்யா சிரித்தபடி.

"சொர்க்கம்கறீங்க. ஜொள்ளுன்னெல்லாம் பேசறீங்க? அது சரி. நாங்க எப்படி சொர்க்கத்துக்கு வந்தோம்?" என்றான் சதீஷ்.

"இரண்டாவது கேள்விக்கு பதில் - நீங்கள் செய்த புண்ணியத்தால் இறந்த பிறகு நீங்கள் சொர்க்கத்துக்கு வந்திருக்கிறீர்கள். முதல் கேள்விக்கு பதில் இங்கே வரும் உங்களைப் போன்ற சிலரிடமிருந்து நாங்களும் ஜொள்ளு, லொள்ளு போன்ற நவீன தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்!"

"வந்து..." என்று ஆரம்பித்தான் முரளி.
 
"உங்கள் மனதில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றை என்னால் படிக்க முடியும். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி விடுகிறேன். 

"நீங்கள் இருவரும் சிறு வயது முதல் ஒன்றாக வளர்ந்து இறுதி வரை நெருக்கமாக இருந்து வந்த நண்பர்கள். இருவரும் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி ஒன்றாக உயிரிழந்து ஒன்றாக இங்கே வந்து விட்டீர்கள். 

"உங்கள் பாவ புண்ணியங்களை ஆராய்ந்த எங்கள் பாஸ் சித்ரகுப்தர் உங்களை சொர்க்கத்துக்கு அனுப்பத் தீர்மானித்து உங்களை இங்கே அனுப்பி விட்டார். நீங்கள் செய்த பாவங்கள் உங்கள் நினைவுக்கு வந்து 'நமக்கு எப்படி சொர்க்கம் கிடைத்தது?' என்று யோசிக்கிறீர்கள். 

"தற்போது பதவியில் இருக்கும் சித்ரகுப்தர் மிகவும் தாராள மனம் கொண்டவர். அதனால் அவர் பெரிய பாவங்களைத் தவிர மற்றவற்றை மன்னித்து விடுவார். சிறிய நற்செயல்களுக்கும் நிறைய மதிப்புக் கொடுப்பார். 

"அத்துடன் நரகத்தில் இடப் பற்றாக்குறை. அதனாலும் நரகத்துக்கு அனுப்பப்படுபவர்களின் எண்ணிக்கையை நாங்கள் குறைக்க வேண்டி இருக்கிறது. இந்தக் காரணங்களால் நீங்கள் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்."

"இங்கே நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றான் முரளி. 

"ஒன்றும் செய்ய வேண்டாம். சோமபானம் குடித்து விட்டு சொகுசாக இருக்க வேண்டியதுதான். பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பாவக்கணக்கில் சேர்ந்து சொர்க்க வாழ்க்கையின் காலத்தைக் குறைத்து விடும்! 

"நீங்கள் தங்க வேண்டிய அறையை ஏற்பாடு செய்து விட்டுச் சற்று நேரத்தில் வருகிறேன். அதுவரை உங்கள் உலக வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கலாம். எதிரே உள்ள திரையில் உங்கள் இருவர் வாழ்க்கையும் தனித் தனியே ஓடும். 

"இந்தத் தொலைக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியை வேண்டுமானால் பார்க்கலாம். அலுப்புத் தட்டினால் சொர்க்கத்தை சுற்றிப் பாருங்கள். இன்னும் பல கேளிக்கைகள் இங்கே இருக்கின்றன. சற்று நேரம் கழித்து நான் மீண்டும் வந்து உங்களைப் பார்க்கிறேன். இன்னும் சில வாடிக்கையாளர்களை நான் வரவேற்க வேண்டியிருக்கிறது" என்று சொல்லி விட்டு மறைந்தாள் கார்யா.

ரண்டு மணி நேரம் கழித்து கார்யா மீண்டும் அவர்கள் முன் தோன்றி, "எப்படி இருக்கிறது?" என்றாள்.

"ஒரு சந்தேகம்" என்றான் முரளி.

"உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குத் தெரியும். உங்கள் உலக வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்தானே அது? பல சமயங்களில் சதீஷ் சாலையில் நடந்து செல்லும்போது ஆடு, மாடு போன்ற பல மிருகங்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவது போல் தங்கள் காலைத் தூக்கிக் காட்டுகின்றன. அது உங்களுக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா?"

"ஆமாம். ஆனால் ஒரு முறை கூட இப்படி நடந்து நான் பாக்கலியே? நீங்க ஏதாவது கிராஃபிக்ஸ் பண்ணி இருக்கீங்களா?" என்றான் சதீஷ்.

"அவை அந்தப் பிராணிகளின் உள்ளுணர்விலிருந்து நிகழ்ந்தவை. அதனால் அவை அப்போது வெளிப்படவில்லை. இப்போது அந்த உள்ளுணர்வின் வெளிப்பாட்டை உங்களால் பார்க்க முடிகிறது." 

"இதுக்கு என்ன காரணம்? எனக்கு அப்படி நடக்கலியே? சதீஷுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மரியாதை?" என்றான் முரளி.

"ஏனென்றால், சதீஷ் புலால் உண்ணாதவர்!" என்றாள் கார்யா. 

குறள் 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

பொருள்:  
உயிர்களைக் கொல்லாமலும், புலாலை அருந்தாமலும் இருப்பவனை உலகில் உள்ள எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும்.
பொருட்பால்                                                                                               காமத்துப்பால்

No comments:

Post a Comment