About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, November 29, 2018

226. ஐந்து லட்சம்

"ரிடையர் ஆனப்பறம் ரொம்ப பயமா இருக்கு" என்றார் சபாபதி.

"என்ன பயம்?" என்றார் தனபால்.

"பி எஃப், கிராச்சுவிட்டி பணத்தையெல்லாம் எதில முதலீடு செய்யறதுன்னே தெரியல. பாங்க்ல போட்டா, வட்டி கம்மியாதான் வரும். வேற எதிலேயாவது முதலீடு செஞ்சா ரிஸ்க் அதிகம்."

"இப்பல்லாம் பாங்க் கூட ரிஸ்க் ஆகிக்கிட்டு வருது. பேசாம ரிஸ்க் எடுத்து மியூச்சவல் ஃபண்ட்ல கொஞ்சம், ஷேர் மார்க்கெட்ல கொஞ்சம் போடலாம்னு பாக்கறேன்" என்றார் சண்முகம்.

"என் பையன் எனக்கு வந்த அம்பது லட்சத்தையும் வாங்கி அவன் பிஸினஸ்ல போட்டுட்டான். வருஷா வருஷம் லாபத்தில் பங்கு தரேன்னு சொல்லியிருக்கான். இருபது பர்சென்ட்டுக்கு மேல ரிட்டர்ன் வரும்னு சொல்றான். பணத்தைக் கொடுத்துட்டு பக் பக்னு உக்காந்திருக்கேன். அவன் பிசினஸ் எப்படிப் போகுதுன்னு கூடத் தெரியல. வருஷம் முடிஞ்சதும் ரிட்டர்ன் வருமான்னு தெரியல. அதுக்கப்பறம் எல்லா வருஷமும் தொடர்ந்து வருமானம் வருமான்னும் தெரியல" என்று புலம்பினார் நடராஜன்.

"ஏன் எல்லாப் பணத்தையும் பையனோட பிஸினஸுக்குக் கொடுத்தீங்க? பாதிப் பணத்தையாவது பாங்க்ல போட்டிருக்கலாமே!" என்றார் தனபால்.

"பணத்தை நாலு பங்காப் பிரிக்கணும். ஒரு பங்கை பாங்க்ல போடணும். ஒரு பங்குல நகை வாங்கி வச்சுக்கணும். ஒரு பங்கை ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ல போடணும். ஒரு பங்கில எங்கேயாவது நிலம் வாங்கிப் போடணும்" என்றார் ராமலிங்கம்.

"நீங்க அப்படித்தான் செஞ்சீங்களா?" என்று கேட்டார் சபாபதி

"இல்ல. ஏதோ அந்த நேரத்தில தோணின மாதிரி செஞ்சேன். இப்படிச் செஞ்சிருந்தா நல்லா இருக்கும்னு அப்புறம் தோணிச்சு" என்றார் ராமலிங்கம்.

"நாமெல்லாம் பேசிக்கிட்டிருக்கோம். வீரராகவன் எதுவுமே சொல்ல மாட்டேங்கறாரே!" என்றார் தனபால்.

"எனக்கு அம்பது லட்ச ரூபா வந்தது. அதில பத்து சதவீதம் அதாவது 5 லட்சத்தைத் தனியா எடுத்து வச்சுட்டு, மீதி 45 லட்சத்தை என் பையன் கிட்ட சொல்லி முதலீடு செய்யச் சொன்னேன். அவன் பாங்க்ல வேலை செய்யறானே! அவன் ரெண்டு மூணு வகையில என் பேர்ல முதலீடு செஞ்சிருக்கான். ஏதோ வருமானம் வந்துக்கிட்டிருக்கு. ஆனா எத்தனை சதவீதம் வருது, அதிகமா, குறைவான்னெல்லாம் நான் கணக்குப் பாக்கல" என்றார் வீரராகவன்.

"சரி. தனியா எடுத்து வச்ச அஞ்சு லட்சத்தை என்ன செஞ்சீங்க?" என்று கேட்டார் சண்முகம்.

"அதைத் தனியா பாங்க்ல டெபாசிட் பண்ணி இருக்கேன். அதிலேந்து வர வருமானத்தை அன்னதானம் பண்றவங்களுக்கு, அநாதை இல்லங்களுக்கு, முதியோர் இல்லங்களுக்குன்னு கொடுத்துக்கிட்டு வரேன்" என்றார் வீரராகவன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பொருள்:  
வறியவர்களின் கொடிய பசியைத் தீர்ப்பதே ஒருவன் தான் பெற்ற பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















Sunday, November 25, 2018

225. அழையா விருந்தாளி

பத்து நாள் உபவாசம் முடிந்து இன்று பதினோராவது நாள்.

பிரசன்ன பார்க்கவர் மெல்ல எழுந்தார். பத்து நாள் பட்டினி கிடந்த உடல், சோர்வினால் நிற்க முடியாமல் தள்ளாடியது. 

பிரசன்ன பார்க்கவர் ஒரு காலைத் தூக்கி மடக்கி, மறு காலின் முழங்காலுக்குப் பக்கவாட்டில் வைத்து அழுத்தியபடி, இரு கைகளையும் மேலே தூக்கிக் குவித்தபடி, விருட்சாஸனத்தில் நின்றார். முதலில் தள்ளாட்டம் அதிகமானது போல் தோன்றினாலும், சில வினாடிகளில் உடல் நிலை பெற்று அசையாமல் நின்றது.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, இயல்பு நிலைக்கு வந்து, மெல்ல நடக்க ஆரம்பித்தார் அவர். சற்றுத் தொலைவு நடந்து ஊருக்குள் வந்ததும், வாசலில் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்த ஒரு வீட்டை நோக்கி நடந்தார்.

வீட்டின் தாழ்வாரத்தில் இலை போடப்பட்டு சிலர் சாப்பிட அமர்ந்திருந்தது வாசலிலிருந்து தெரிந்தது. உள்ளே சென்று, ஒரு ஓரத்தில் காலியாயிருந்த இலையில் அமர்ந்தார்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கியதும், சற்றுத் தொலைவிலிருந்து பரபரப்பாக ஒடி வந்த ஒருவர்,"சாமி" என்று கூவியபடி பிரசன்ன பார்க்கவரின் காலில் விழப் போனார்.

அவரைத் தடுத்த பிரசன்ன பார்க்கவர், "நீங்கள் என்னை விடப் பெரியவர். நீங்கள் என் காலில் விழக் கூடாது" என்றார்.

"நான் வயசில பெரியவனா இருக்கலாம். ஆனா நீங்க ஒரு முனிவர். எத்தனையோ நாள் பசி, தூக்கம் இல்லாம தவம் இருந்திருக்கீங்க. பத்து நாளா நீங்க சாப்பிடாம, இருந்த  இடத்தை விட்டு அசையாம தவம் இருந்தீங்களே, அதுக்கு எவ்வளவு மனவலிமை வேணும்! அதனால நீங்க என்னை விடப் பல விதத்திலும் பெரியவர். நீங்க என் வீட்டுக்கு வருவீங்கன்னு நான் எதிர்பாக்கல. நான் பக்கத்தில கடைக்குப் போயிருந்தேன். நீங்க வந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கிறதா ஒத்தர் வந்து சொன்னதும், ஓடி வந்தேன். நீங்க என் வீட்டில வந்து சாப்பிட்டது என்னோட புண்ணியம்" என்றார் அவர்.

"நீங்க வயசில பெரியவர்ங்கறதுக்காக நான் அப்படிச் சொல்லல. பசியைப் பொறுத்துக்கறதை விட, பசிச்சவங்களுக்குச் சோறு போடறது பெரிய தவம். அதை நீங்க செய்யறீங்க. தினம் பட்டினியா இருக்கற சில பேரைத் தேடிப் பிடிச்சு உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து சாப்பாடு போடறீங்க. உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அவ்வளவு வசதியானவர் இல்லேன்னும் ஒரு தவம் மாதிரி இதை செஞ்சுக்கிட்டு வரீங்கன்னும் எனக்குத் தெரியும். பத்து நாள் உபவாசம் முடிஞ்சப்பறம், ஒரு உயர்ந்த மனிதர் வீட்டில சாப்பிடணும்னு நினைச்சுத்தான் உங்க வீட்டுக்கு அழையா விருந்தாளியா வந்தேன்" என்றார் பிரசன்ன பார்க்கவர் சிரித்தபடி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

பொருள்:  
தவ வலிமையினால் பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெரிதுதான். ஆனால் பசியால் வாடுபவர்க்கு உணவளித்து, பசியைப் போக்குபவரின் ஆற்றல் இன்னும் மேன்மை பொருந்தியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Wednesday, November 21, 2018

224. கவலைக்குக் காரணம்

"ஏன் காலையிலேந்து ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் செண்பகம்.

"ஒண்ணுமில்லை" என்றார் கமலநாதன்.

"வாக்கிங் போறச்சே நல்லாதானே இருந்தீங்க? திரும்பி வரச்சே முகம் வாடி இருந்தது. ரொம்ப நடந்து சோர்வாயிட்டீங்களோன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு நேரம் ஆகியும் முகத்தில தெளிவு வரலே. அதுதான் கேட்டேன்"

கமலநாதன் பதில் சொல்லவில்லை. ஆனால் மனதுக்குள் மனைவியின் நுணுக்கமான கவனத்தை வியந்தார்.

வழக்கமாக ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும் கமலநாதன் அன்று கிளம்பவில்லை. 

"என்னங்க ஆஃபீஸ் போகலையா? உடம்பு சரியில்லையா?" என்றாள் செண்பகம்.

"இல்ல. இன்னிக்கு கொஞ்சம் லேட்டா போகப் போறேன்" என்றார் கமலநாதன்.

அதற்குப் பிறகு செண்பகம் எதுவும் பேசவில்லை.

ஒன்பதே முக்கால் மணிக்கு வீட்டை வீட்டுக் கிளம்பிய கமலநாதன், "பாங்க்குக்குப் போயிட்டு வரேன். வந்ததும் ஆஃபீசுக்குக் கிளம்பிடுவேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.

பதினோரு மணிக்கு கமலநாதன் வீட்டுக்குத் திரும்பியதும், செண்பகம் அவரிடம் கேட்டாள். "இப்ப உங்க முகம் பிரகாசமா இருக்கு. பாங்க்குக்கு ஒரு மைல் தூரம் நடந்து போயிட்டு வந்த களைப்பு கூட இல்லை." 

கமலநாதன் சிரித்தார். 

"அப்பா! காலையிலேந்து முதல் தடவையா முகத்தில சிரிப்பு வந்திருக்கு! என்ன விஷயம்னு சொல்லுங்களேன்" என்றாள் செண்பகம்.

"காலையில வாக்கிங் போகச்சே, வழியில சீதாராமனைப் பாத்தேன். ரொம்ப சோர்வா இருந்தாரு. என்னன்னு கேட்டதுக்கு அழுதுட்டாரு. அவர் மனைவியோட நகைகளை அடகு வச்சுக் கடன் வாங்கி இருக்காரு. அசலும், வட்டியும் கட்ட முடியாம அவர் நகைகள் முழுகப் போற நிலையில இருக்காம். இன்னிக்குள்ள இருபதாயிரம் ரூபாய் கட்டணுமாம். நிறைய இடத்தில கேட்டும் அவருக்குப் பணம் கிடைக்கலியாம். அடகுக் கடைக்காரன் நகைகளை ஏலம் விட்டா, பாதி விலைக்குக் கூடப் போகாதாம். நகையெல்லாம் போயிடுச்சுன்னா, இப்ப இருக்கற விலையில, பொண்ணு கல்யாணத்துக்குப் புது நகை வாங்க முடியுமான்னு அழுதாரு."

"அதான் பாங்க்குக்குப் போய் பணம் எடுத்து அவருக்குக் கொடுத்துட்டு வந்தீங்களாக்கும்!" என்றாள் செண்பகம்.

"உனக்கு எப்படித் தெரியும்?"

"உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா?"

"வெளிநாட்டில எல்லாம் எப்ப வேணும்னாலும் ஏ டி எம்ல போய்ப் பணம் எடுத்துக்கற வசதி இருக்கு. நம் நாட்டில அது வர இன்னும் பத்து வருஷமாவது ஆகும்" என்றார் கமலநாதன்.

"அது சரி. அதுக்கு என் இவ்வளவு நேரம் வருத்தமா இருந்தீங்க?"

"காலையில சீதாராமன் எங்கிட்ட அவர் கஷ்டத்தைச் சொல்லி அழுததும் அவருக்காக வருத்தப்பட்டேன். பாங்க்ல பணம் எடுத்து அவர் கிட்ட கொடுத்ததும், அவர் முகத்தில வந்த சந்தோஷத்தைப் பாத்ததும்தான் என்னோட வருத்தம் போச்சு. அது என் முகத்தில உனக்குத் தெரிஞ்சிருக்கு போலருக்கு" என்றார் கமலநாதன் சிரித்தபடி.


றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

பொருள்:  
நம்மிடம் உதவி கேட்பவரின் நிலை கண்டு நம் மனதில் ஏற்படும் வருத்தம், அவருக்கு நாம் உதவி செய்தபின் அவர் முகத்தில் தோன்றும் மலர்ச்சியைக் கண்டதும் நீங்கி விடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Monday, November 19, 2018

223. உதவி செய்ய நிபந்தனை

"ஏண்டா, இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கி இருக்கக்கூடாது? கவர்ன்மென்ட் எஞ்சினீரிங் காலேஜில் இடம் கிடைச்சிருக்குமே!" என்றான் சாம்பசிவம், தன் மகன் குணசீலனிடம்.

குணசீலன் பதில் சொல்லவில்லை.

ஆனால் சாம்பசிவத்தின் மனைவி நீலா மகனுக்குப் பரிந்து கொண்டு வந்தாள். "நடந்ததைப் பத்திப் பேசி என்ன ஆகப் போகுது? நடக்க வேண்டியதைப் பத்திப் பேசுங்க."

"பேசறதுக்கு என்ன இருக்கு?  வருஷத்துக்கு ஒண்ணரை லட்சம் ரூபா அவன் படிப்புக்குச் செலவழிக்கற  நிலைமையில நான் இல்ல" என்றான் சாம்பசிவம்.

"அப்ப அவனை அம்போன்னு விட்டுடப் போறீங்களா? எஜுகேஷன் லோன் ஏதாவது கிடைக்குமான்னு பாருங்க."

சாம்பசிவம் யோசித்தான்.

நான்கு வருடங்கள் ஓடியதே தெரியவில்லைகுணசீலனின் படிப்பு முடிந்து, அவனுக்கு எஞ்சினீரிங் பட்டம் கிடைத்து விட்டது. காம்பஸ் இன்டர்வியூவில் நல்ல வேலையும் கிடைத்து விட்டது. ஓரிரு மாதங்களில் வேலையில் சேர வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள்.

"நாலு வருஷமா யாரோ ஒரு நண்பர் கிட்ட கடன் வாங்கிப் படிக்க வச்சதா சொன்னீங்களே தவிர, அது யாருன்னு சொல்லலியே? எனக்குத் தெரியாத அந்த நண்பர் யாரு? பள்ளிக்கூடத்துல உங்களோட படிச்சவர்னு சொன்னீங்களே தவிர அவர் பேரு கூட சொல்லலியே!" என்றாள் நீலா.

"இப்ப சொல்றேன்" என்ற சாம்பசிவம், தன் மகனிடம் திரும்பி, "குணசீலா! இந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. அசலை மட்டும் மாசா மாசம் உன் சம்பளத்திலேந்து கொடுத்துடணும். உன் சொந்தச் செலவுக்கு வேண்டியது போக மீதியைக் கடனுக்குக் கொடுத்துடு. குடும்பச் செலவுக்கு என் சம்பளப் பணம் போதும். ரெண்டு மூணு வருஷத்திலே கடனை அடைச்சிடணும், சரியா?" என்றான்.

"கண்டிப்பா செய்யறேன் அப்பா. சம்பளம் வாங்கின அன்னிக்கே ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். ஆனா அந்த நல்ல மனுஷர் யார்னு சொல்லுங்க" என்றான் குணசீலன்.

"உன் அண்ணன் சிவகுமார்தான் பணம் கொடுத்து உதவினார்" என்றான் சாம்பசிவம், நீலாவிடம்.

"அது எப்படிங்க..." என்றாள் நீலா, நம்ப முடியாதவளாக.

"குணசீலன் படிப்புக்காக என் ஆபீஸ்ல கடன் கேட்டேன். இல்லேன்னுட்டாங்க. பாங்க்ல எஜுகேஷன் லோன் கேட்டப்ப, இல்லேன்னு வெளிப்படையா சொல்லாம, இழுத்தடிச்சாங்க. அப்புறம்தான் உன் அண்ணன் ஞாபகம் வந்தது.

"அவர் வேற ஜாதியில் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்னு உங்க வீட்டில அவரோட உறவை வெட்டி விட்டுட்டீங்க. நம் கல்யாணத்துக்குக் கூட அவரைக் கூப்பிடல. நான் அவரைப் பாத்தது கூட இல்ல. ஆனா வசதியா இருக்கார்னு நீ சொல்லி இருக்க.

"அவரைப் பாத்து என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு உதவி கேட்டேன். அவர் உடனே சரின்னு சொல்லிட்டார். நான் முதல் வருஷப் படிப்புச் செலவுக்கு மட்டும்தான் பணம் கேட்டேன், அடுத்த வருஷங்களுக்கெல்லாம், வேற எங்கேயாவது முயற்சி பண்ணலாம்னுட்டு. அவர்தான் நாலு வருஷத்துக்கும் தானே பணம் கொடுக்கறதாச் சொன்னார். வட்டி வேண்டாம், அசலை மட்டும், நம் பையன் அவன் சம்பளத்திலேந்து கொஞ்ச கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தா போதும்னுட்டாரு. ஒரே ஒரு நிபந்தனைதான் போட்டாரு."

"என்ன நிபந்தனை?"

"அவர் பணம் கொடுத்ததை நான் யார்கிட்டயும் சொல்லக் கூடாது - உன்கிட்டயும், குணசீலன்கிட்டயும் கூட. அவரும் யார்கிட்டயும் சொல்ல மாட்டாரு."

"ஏன் அப்படி?"

"அவரு சொன்னாரு: 'மாப்பிள்ளை, உங்க கிட்ட உங்க பையனைப் படிக்க வைக்கப் பணம் இல்ல, எங்கிட்ட கடன் வாங்கித்தான் படிக்க வச்சீங்கன்னு எதுக்கு நாலு பேருக்குத் தெரியணும்? உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சா போதாதா?' அப்படின்னு. எப்படிப்பட்ட மனுஷன் பாத்தியா?" என்றான் சாம்பசிவம்.

   அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

பொருள்:  
ஒருவரிடம் பொருள் இல்லை என்பதைப்  பிறரிடம் கூறாமல், அவனுக்குக்  கொடுப்பது நல்ல குடியில் பிறந்தோரின் செயல்.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Monday, November 5, 2018

222. கோதானம்

குரு தன் அம்மாவின் இறப்புக்குப் பின் செய்ய வேண்டிய இறுதி நாள் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தான்.

"இப்ப நீங்க சில தானங்கள் செய்யணும். அந்தக் காலத்தில பசு, பொன் மாதிரி பொருட்களை தானம் பண்ணுவா. இப்ப அதெல்லாம் சரியா வராது. அதனால பணமாவே கொடுக்கலாம். ஒவ்வொரு தானமா பேரு சொல்றேன். அதுக்குத் தகுந்தாப்பல நூறு, ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம்னு நீங்க கொடுக்கலாம்" என்றார் புரோகிதர்.

குரு தலையாட்டினான். தானமாகக் கொடுக்க வேண்டிய பொருட்களின் பெயர்களை புரோகிதர் ஒவ்வொன்றாகச் சொல்ல, சடங்குக்கு வந்திருந்தவர்களில் ஒவ்வொருவராக அழைத்து, கொடுக்கப்பட வேண்டிய பொருளின் மதிப்புக்கேற்ப ஐம்பது ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்தான் குரு.

"இப்ப கோதானம், அதாவது பசு தானம். உங்க சொந்தக்காரங்களிலேயே யாராவது ஏழையா இருக்கறவாளுக்குக் கொடுக்கலாம். எவ்வளவு கொடுக்கப் போறேள்?" என்றார் புரோகிதர், குருவுக்கு மட்டும் கேட்கும்படி.

"என் மனைவியோட தம்பிக்குக் கொடுக்கலாமா?" என்றான் குரு புரோகிதரின் காதில்.

"பேஷாக் குடுக்கலாம். உங்க தம்பிக்குத்தான் கொடுக்கக் கூடாது! வேற யாராவது ஏழைகளுக்குக் கொடுக்கறதுன்னாலும் கொடுக்கலாம்" என்றார் புரோகிதர்.

"என் மைத்துனன் ரொம்பக் கஷ்டப்படறான். கோதானம்கறதால ஐயாயிரம் ரூபா கொடுக்கலாம்னு இருக்கேன். அவனுக்குக் கொடுத்தா உதவியா இருக்கும்."

"சரி. உங்க விருப்பப்படியே செய்யுங்கோ. அவரைக் கூப்பிடுங்கோ."

"பாலு!" என்று அழைத்தான் குரு.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்தான்.

குரு அருகிலிருந்த பணப்பையிலிருந்து ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான்.

"கோதானத்தை உங்களுக்குக் கொடுக்கணும்னு பிரியப்படறார். வாங்கிக்கோங்கோ" என்றார் புரோகிதர்.

"மன்னிச்சுக்கங்க. நான் தானம் வாங்கறதில்ல" என்றான் பாலு, புரோகிதர், குரு இருவரையும் பார்த்தபடி.

"வாங்கிக்கோப்பா. இது என் அம்மாவுக்காக செய்யறதுதானே?" என்றான் குரு.

"உங்க அம்மாவுக்காக நான் வேற ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க, சந்தோஷமா செய்யறேன். தானம் எதுவும் வாங்கக் கூடாதுங்கறது என்னோட கொள்கை" என்றான் பாலு.

"இது மாதிரி யாராவது தானம் கொடுத்தா, அதை வாங்கிக்க மாட்டேன்னு சொல்றது பாவம்ப்பா" என்றார் புரோகிதர்.

"பரவாயில்ல. அந்தப் பாவத்தை நான் ஏத்துக்கறேன்" என்றான் பாலு பிடிவாதமாக.

"வேண்டாம்னா விட்டுடுங்க. அவனை ஏன் வற்புறுத்தறீங்க?" என்றாள் குருவின் மனைவி மாலா.

"சரி. வேற யாருக்காவது கொடுத்துடுங்கோ" என்றார் புரோகிதர். உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவரை அவர் கைகாட்ட அவர் எழுந்து வந்தார்.

"வேற யாராவதுன்னா ஐநூறு, ஆயிரம்தான் கொடுத்திருப்பேன்" என்று முணுமுணுத்தபடியே, கையில் வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தான் குரு.

சற்று நேரம் கழித்து, சுமங்கலிகளுக்குப் புடவை தானம் நடந்தது. பத்து பேருக்கு விலை உயர்ந்த புடவைகளை தானமாகக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மாலா.

கடைசியாக வந்த பெண்மணியைப் பார்த்து, புரோகிதர், "இருங்கோ! நீங்க சுமங்கலியா?" என்றார் அவள் வெறும் கழுத்தையும் நெற்றியையும் பார்த்து விட்டு.

அந்தப் பெண் இல்லையென்று தலையாட்டினாள். பிறகு, "எங்கிட்ட கட்டிக்க நல்ல புடவை இல்ல. அதான் வந்தேன்" என்றாள்.

மாலா அவளிடம் ஒரு புடவையைக் கொடுக்க வந்தாள்.

"இருங்கோ. சுமங்கலி அல்லாதவாளுக்குக் கொடுக்கக் கூடாது. கொடுத்தா, உங்களுக்குப் பாவம்தான் வந்து சேரும்" என்றார் புரோகிதர்.

"பரவாயில்லை" என்றபடியே புடவையைக் கொடுத்தாள் மாலா.

"வந்து வாய்ச்சிருக்கீங்க பாருங்க அக்காவும் தம்பியும் ஒரே மாதிரியா!" என்று முணுமுணுத்தான் குரு.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

பொருள்:  
பிறர் கொடுக்கும் பொருளைப் பெற்றுக் கொள்வது (மேலுலகம் செல்ல) நல்வழி என்ற நிலையிலும் கொடையைப் பெற்றுக் கொள்வது தீயது. கொடை அளிப்பதால் ஒருவர் மேலுலகத்தை இழக்க நேரிடும் என்ற நிலையிலும் கொடை வழங்குவதே சிறந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Sunday, November 4, 2018

221. பரிசுப் பொருள்

அந்த அலுவலகத்தின் ஊழியர்களின் வீடுகளில் நடக்கும் விழாக்களுக்குப் பரிசுப் பொருள் வாங்கும் பொறுப்பு சந்திரனுடையது.

ஊழியர்கள் அனைவரும் தலைக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும். அதிகாரிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பதவிக்குத் தகுந்தாற்போல் தொகை நிர்ணயிக்கப்படும்.

எல்லோரும் தாங்கள் கொடுக்க வேண்டிய தொகையைச் சந்திரனிடம் கொடுத்து விடுவார்கள். மொத்தத் தொகையில் சந்திரன் ஒரு பரிசுப் பொருள் வாங்கி விடுவான்.

ஆனால் அந்த நிறுவனத்தின் பொது மேலாளரின் மகன் திருமணத்தின்போது பெரும்பாலானோர் தனித் தனியே பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க விரும்பினர். நல்ல பரிசு வாங்கிக் கொடுத்துப் பொது மேலாளரை மகிழச் செய்ய வேண்டும் என்பது பலரின் எண்ணம். இதனால் பரிசுக்காக அதிகப் பணம் கொடுக்க முடியாத ஊழியர்களுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு கடைநிலை ஊழியர் ராஜுவின் கிருகப் பிரவேச விழா வந்தது. அதற்கு வழக்கமான முறையில் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

வசூலான மொத்தப் பணத்தில் என்ன பரிசு வாங்கலாம் என்று சந்திரன் யோசித்தான். எப்போதும் குறிப்பிட்ட சிலரைக் கலந்து கொண்டுதான் அவன் பரிசுத் தொகையைத் தீர்மானிப்பான் - அவர்கள் குறை கூறும் இயல்புள்ளவர்கள் என்பதால்! மற்றவர்கள் என்ன பரிசு என்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

ராஜுவின் கிருகப் பிரவேசத்துக்கு மொத்தம் 10000 ரூபாய் வசூலாகியிருந்தது. பரிசுப் பொருள் பற்றிப் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டன. இறுதியில், சந்திரன் ராஜுவிடம் கேட்டு, அவனிடம் இல்லாத, அவனுக்குப் பயன்படக் கூடிய ஒரு பொருளை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

கிருகப் பிரவேசத்தன்று அன்று சந்திரன் கையில் பரிசுப் பொருள் எதுவும் எடுத்து வராததை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

அனைவரும் ராஜூவைச் சென்று வாழ்த்தியபோது சந்திரன் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தான்.

வெளியில் வந்ததும் அனைவரும் சந்திரனைச் சூழ்ந்து கொண்டு "கவர்ல என்ன இருந்தது?" என்று கேட்டனர்.

"இன்வர்ட்டருக்கான பில். ராஜு கடைக்கு ஃபோன் பண்ணினா, அவங்க அதைக் கொண்டு வந்து வச்சு கனெக்‌ஷன் கொடுத்துடுவாங்க. இன்வர்ட்டர் கனமா இருக்கும். கையில தூக்கிட்டு வர முடியாதுங்கறதாலதான் நான் வாங்கிட்டு வரலை" என்றான் சந்திரன்.

"இன்வர்ட்டரா?" என்றனர் பலரும்.

"ஆமாம். ராஜுகிட்ட பேசினேன். அவர்கிட்ட டிவி, ஃபிரிட்ஜ் மாதிரி பொருட்கள் எல்லாம் இருக்கு. 10,000 ரூபாய்க்கு உபயோகமான பொருள் எதையும் அவரால சொல்ல முடியல. இந்த ஏரியாவில் பவர்கட் அதிகம். ராஜுவோட ரெண்டு பிள்ளைகளும் ஸ்கூல்ல படிக்கறாங்க. அதனால இன்வர்ட்டர் இருந்தா அவருக்கு உபயோகமா இருக்கும்னு நினைச்சு அவர்கிட்ட கேட்டேன். அவரும் சரின்னாரு. அதான் இன்வர்ட்டர் வாங்கிட்டேன்."

"ஆனா இன்வர்ட்டர் விலை அதிகமா இருக்குமே!"

"ஆமாம். நல்ல இன்வர்ட்டர் 18,000 ரூபாய்க்குத்தான் கிடைச்சது."

"அப்ப மீதி 8,000 ரூபாய்?"

"நான் போட்டுத்தான் வாங்கினேன்."

"எதுக்கு? 10,000 ரூபாயில் ஏதாவது வாங்கியிருக்க வேண்டியதுதானே?" என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"தப்பா நினைச்சுக்காதீங்க. இங்க ஜி எம் இல்ல. அதனால சொல்றேன். ஜி எம் வசதியானவர். ஆனா அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒவ்வொத்தரும் ஆயிரம், ரெண்டாயிரம்னு செலவு செஞ்சு பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தோம். ஆனா வசதிக்குறைவான ராஜு வீட்டு விழாவுக்கு, நூறு, இருநூறுக்கு மேல கொடுக்க நமக்கு மனசில்லை. 10000 ரூபாய்க்கு ராஜூவுக்குப் பயன்படாத ஏதாவது ஒரு ஆடம்பரப் பொருளை வாங்கிக் கொடுக்கறதுக்கு பதிலா பயனுள்ளதா ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். உங்க கிட்ட மறுபடி அதிகத் தொகை கேட்டு வசூலிக்க எனக்கு விருப்பமில்லை. அதனாலதான் நான் பணம் போட்டேன். எப்பவாவது ஒரு தடவை செய்யறதுதானே இது? இப்ப நீங்க கேட்டதால, இதை உங்ககிட்ட சொல்ல வேண்டி ஆயிடுச்சு. தப்பா நினைச்சுக்காதீங்க" என்று விளக்கினான் சந்திரன்.

10,000 ரூபாயில் ஏதாவது வாங்கியிருக்க வேண்டியதுதானே என்று சொன்ன மூத்த அதிகாரி, "கிரேட் ஜாப், சந்திரன். நான் இன்னொரு ஐநூறு ரூபா கொடுக்கறேன்" என்று பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து இன்னும் பலரும், நூறு ரூபாய், இருநூறு ரூபாய், ஐநூறு ரூபாய் என்று கொடுத்தார்கள்."

"இருங்க. இப்படிக் கொடுத்தா நான் எப்படிக் கணக்கு வச்சுக்கறது? கொடுக்க விரும்பறவங்க ஆஃபீஸ்ல வந்து கொடுங்க. ஒரு நோட்டில கணக்கு எழுதிக்கறேன்" என்றான் சந்திரன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பொருள்:  
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் ஈகை. மற்றவை பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுபவை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்