About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, November 4, 2018

221. பரிசுப் பொருள்

அந்த அலுவலகத்தின் ஊழியர்களின் வீடுகளில் நடக்கும் விழாக்களுக்குப் பரிசுப் பொருள் வாங்கும் பொறுப்பு சந்திரனுடையது.

ஊழியர்கள் அனைவரும் தலைக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும். அதிகாரிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பதவிக்குத் தகுந்தாற்போல் தொகை நிர்ணயிக்கப்படும்.

எல்லோரும் தாங்கள் கொடுக்க வேண்டிய தொகையைச் சந்திரனிடம் கொடுத்து விடுவார்கள். மொத்தத் தொகையில் சந்திரன் ஒரு பரிசுப் பொருள் வாங்கி விடுவான்.

ஆனால், அந்த நிறுவனத்தின் பொது மேலாளரின் மகன் திருமணத்தின்போது, பெரும்பாலானோர் தனித் தனியே பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க விரும்பினர். நல்ல பரிசு வாங்கிக் கொடுத்துப் பொது மேலாளரை மகிழச் செய்ய வேண்டும் என்பது பலரின் எண்ணம். இதனால், பரிசுக்காக அதிகப் பணம் கொடுக்க முடியாத ஊழியர்களுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு, கடைநிலை ஊழியர் ராஜுவின் கிருகப் பிரவேச விழா வந்தது. அதற்கு வழக்கமான முறையில் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

வசூலான மொத்தப் பணத்தில் என்ன பரிசு வாங்கலாம் என்று சந்திரன் யோசித்தான். எப்போதும் குறிப்பிட்ட சிலரைக் கலந்து கொண்டுதான் அவன் பரிசுத் தொகையைத் தீர்மானிப்பான் - அவர்கள் குறை கூறும் இயல்புள்ளவர்கள் என்பதால்! மற்றவர்கள் என்ன பரிசு என்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

ராஜுவின் கிருகப் பிரவேசத்துக்கு மொத்தம் 10000 ரூபாய் வசூலாகியிருந்தது. பரிசுப் பொருள் பற்றிப் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டன. இறுதியில், சந்திரன் ராஜுவிடம் கேட்டு, அவனிடம் இல்லாத, அவனுக்குப் பயன்படக் கூடிய ஒரு பொருளை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

கிருகப் பிரவேசத்தன்று சந்திரன் கையில் பரிசுப் பொருள் எதுவும் எடுத்து வராததை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

அனைவரும் ராஜூவைச் சென்று வாழ்த்தியபோது, சந்திரன் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தான்.

வெளியில் வந்ததும், அனைவரும் சந்திரனைச் சூழ்ந்து கொண்டு, "கவர்ல என்ன இருந்தது?" என்று கேட்டனர்.

"இன்வர்ட்டருக்கான பில். அந்தக் கடைக்கு ராஜு ஃபோன் பண்ணினா, அவங்க இன்வர்ட்டரை அவன் வீட்டில கொண்டு வந்து வச்சு, கனெக்‌ஷன் கொடுத்துடுவாங்க. இன்வர்ட்டர் கனமா இருக்கும். கையில தூக்கிட்டு வர முடியாதுங்கறதாலதான் நான் வாங்கிட்டு வரலை" என்றான் சந்திரன்.

"இன்வர்ட்டரா?" என்றனர் பலரும்.

"ஆமாம். ராஜுகிட்ட பேசினேன். அவர்கிட்ட டிவி, ஃபிரிட்ஜ் மாதிரி பொருட்கள் எல்லாம் இருக்கு. 10,000 ரூபாய்க்கு உபயோகமான பொருள் எதையும் அவரால சொல்ல முடியல. இந்த ஏரியாவில் பவர்கட் அதிகம். ராஜுவோட ரெண்டு பிள்ளைகளும் ஸ்கூல்ல படிக்கறாங்க. அதனால இன்வர்ட்டர் இருந்தா அவருக்கு உபயோகமா இருக்கும்னு நினைச்சு, அவர்கிட்ட கேட்டேன். அவரும் சரின்னாரு. அதான் இன்வர்ட்டர் வாங்கிட்டேன்."

"ஆனா, இன்வர்ட்டர் விலை அதிகமா இருக்குமே!"

"ஆமாம். நல்ல இன்வர்ட்டர் 18,000 ரூபாய்க்குத்தான் கிடைச்சது."

"அப்ப, மீதி 8,000 ரூபாய்?"

"நான் போட்டுத்தான் வாங்கினேன்."

"எதுக்கு? 10,000 ரூபாயில் ஏதாவது வாங்கியிருக்க வேண்டியதுதானே?" என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"தப்பா நினைச்சுக்காதீங்க. இங்க ஜி.எம். இல்ல. அதனால சொல்றேன். ஜி.எம். வசதியானவர். ஆனா, அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒவ்வொத்தரும் ஆயிரம், ரெண்டாயிரம்னு செலவு செஞ்சு பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தோம். ஆனா வசதிக்குறைவான ராஜு வீட்டு விழாவுக்கு, நூறு, இருநூறுக்கு மேல கொடுக்க நமக்கு மனசில்லை. 10000 ரூபாய்க்கு ராஜூவுக்குப் பயன்படாத ஏதாவது ஒரு ஆடம்பரப் பொருளை வாங்கிக் கொடுக்கறதுக்கு பதிலா, பயனுள்ளதா ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். உங்ககிட்ட மறுபடி அதிகத் தொகை கேட்டு வசூலிக்க எனக்கு விருப்பமில்லை. அதனாலதான், நான் பணம் போட்டேன். எப்பவாவது ஒரு தடவை செய்யறதுதானே இது? இப்ப நீங்க கேட்டதால, இதை உங்ககிட்ட சொல்ல வேண்டி ஆயிடுச்சு. தப்பா நினைச்சுக்காதீங்க" என்று விளக்கினான் சந்திரன்.

10,000 ரூபாயில் ஏதாவது வாங்கியிருக்க வேண்டியதுதானே என்று சொன்ன மூத்த அதிகாரி, "கிரேட் ஜாப், சந்திரன். நான் இன்னொரு ஐநூறு ரூபா கொடுக்கறேன்" என்று பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து இன்னும் பலரும், நூறு ரூபாய், இருநூறு ரூபாய், ஐநூறு ரூபாய் என்று கொடுத்தார்கள்."

"இருங்க. இப்படிக் கொடுத்தா, நான் எப்படிக் கணக்கு வச்சுக்கறது? கொடுக்க விரும்பறவங்க ஆஃபீஸ்ல வந்து கொடுங்க. ஒரு நோட்டில கணக்கு எழுதிக்கறேன்" என்றான் சந்திரன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பொருள்:  
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் ஈகை. மற்றவை பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுபவை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















No comments:

Post a Comment