About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, July 29, 2020

352. திடீர் மனமாற்றம்

"இந்த வயசில எதுக்கு புதுசா ஒரு தொழிலை ஆரம்பிக்கிறீங்க? ஏற்கெனவே இருக்கிற தொழில் போதாதா?" என்றாள் பார்வதி.

"அதைத்தான் நம்ம பையனைப் பாத்துக்கச் சொல்லிட்டேனே! நான் என்ன செய்யறது?"

"அதுக்காக இந்த வயசில 5 கோடி ரூபா முதலீடு பண்ணி புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்கணுமா?"

"ஏதாவது செய்யணும்ல? என்னால சும்மா உக்காந்திருக்க முடியாது."

"வேலையிலேந்து ரிடயர் ஆனவங்கள்ளாம் கோவில் குளம் போறது, தங்களுக்குப் பிடிச்ச பொழுது போக்கிலே ஈடுபடறது மாதிரி ஏதாவது செய்யலியா?"

"எனக்கு ரிடயர்மெண்ட் எல்லாம் கிடையாது. ஒண்ணு ஏதாவது உடம்புக்கு வந்து நான் படுத்துக்கணும், அல்லது இந்த உலகத்தை விட்டே போயிடணும்" என்றார் சபாபதி. 

அதற்குப் பிறகு பார்வதி விவாதத்தைத் தொடர விரும்பவில்லை.

தான் தொடங்கப் போகும் புதிய தொழிலுக்காக நிலம் வாங்குதல், அரசு அங்கீகாரம் பெறுதல் போன்றவற்றுக்காக 2 கோடி ரூபாய் பணமாக வேண்டும் என்பதும் அதற்காக சில சொத்துக்களை விற்று தான் 2 கோடி ரூபாய் ஏற்பாடு செய்திருப்பதும் நல்ல வேளை மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டார் சபாபதி. 

ரண்டு நாட்களுக்குப் பிறகு "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள் பார்வதி.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ சொன்னதைப் பத்தி யோசித்துப் பாத்தேன். இனிமே புது பிசினஸ் எல்லாம் வேண்டாம்னு தீர்மானிச்சுட்டேன். எப்படியும் இருக்கிற பிசினஸை நம்ப பையன் பாத்துக்கறான். நம்ப கிட்ட இருக்கற பணம் நம்ப ரெண்டு பேரும் வாழ்க்கை நடத்த தாராளமாப் போதும். இனிமே வீட்டிலேயே ஓய்வா இருக்கப் போறேன். அப்பப்ப உன்னை அழைச்சுக்கிட்டு கோவில், குளம், வெளியூர்ப் பயணம்னு போகப் போறேன்!" என்றார் சபாபதி.

"நம்பவே முடியலியே! திடீர்னு இப்படி மனசு மாறிட்டீங்களே! ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றாள் பார்வதி மகிழ்ச்சியுடன். 

தொடர்ந்து, "ராத்திரி முழுக்க தூங்காம புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருந்ததைப் பாத்து, புது பிசினஸ் பத்தி யோசனை பண்ணிக்கிட்டுத்தான் தூக்கம் வராம புரண்டுக்கிட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். இதைப் பத்தித்தான் யோசிச்சீங்களா?" என்றாள்.

சபாபதி மௌனமாக இருந்தார். 

முதல் நாள் இரவு 8 மணிக்கு பிரதமர் வெளியிட்ட பண மதிப்பு இழப்பு அறிவிப்பால் தான் பணமாக வைத்திருந்த 2 கோடி ரூபாயில் மிகப் பெரும்பாலான பகுதியை வங்கியில் போட முடியாத நிலைமை ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதும், இறுதியில் இந்த இழப்பை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனி பணம் தேடும் முயற்சிகளில் ஈடுபடாமல் மனைவி சொன்னது போல் மன அமைதி தரும் செயல்களில் ஈடுபடுவதென்று முடிவெடுத்ததையும் தன் மனைவியிடம் அவர் சொல்லப் போவதில்லை. 

"என்னங்க? இனிமே 500 ரூபா 1000 ரூபா நோட்டெல்லாம் செல்லாதாமே? எங்கிட்ட ஏழாயிரம் ரூபாய்க்கு 500 ரூபா, 1000 ரூபா நோட்டு இருக்கு. அதை பாங்க்கில போட்டுடுங்க. நல்ல வேளை! நாம அதிகமா கையில பணம் வச்சுக்கல!" என்றாள் பார்வதி.

"ம்..." என்றார் சபாபதி.   

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

பொருள்:
மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யுணர்வைப் பெற்றவர்க்கு அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்













Monday, July 27, 2020

351. குருபிரசாதின் கடைசி தினங்கள்

ராமமூர்த்திக்கு அன்றைய பொழுது மகிழ்ச்சியானதாக விடியவில்லை.

அவர் வழக்கம்போல் காலையில் எழுந்து சுறுசுறுப்பாகத் தன் பணிகளைத் துவக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரது கைபேசி ஒலித்தது. 

குருபிரசாத் மாரடைப்பால் இறந்து விட்டாராம்.   

குருபிரசாத் ஒரு வங்கியின் தலைவராக இருந்து ஒய்வு பெற்றவர். அவருடைய வங்கியில் ராமமூர்த்தியின் நிறுவனத்துக்குக் கணக்கு இருந்ததால்தான் அவருடன் ராமமூர்த்திக்கு அறிமுகம் ஏற்பட்டது என்றாலும் இருவருக்கும் இடையே தனிப்பட்ட நெருக்கம் ஏற்பட்டு விட்டது.  

குருபிரசாதை நேர்மையானவர் என்று சொல்ல முடியாது. நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் அவர் தன் வங்கியில் கடன் வழங்குவார் என்று அவரைப் பற்றி ஒரு பிம்பம் உண்டு. 

ராமமூர்த்தியே தன் நிறுவனத்துக்குக் கடன் பெற குருபிரசாதுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். 'நட்பு வேறு, பிசினஸ் வேறு' என்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தவர் குருபிரசாத்!

ஆயினும் எல்லோரிடமும் நன்கு பழகக் கூடியவர் என்பதால் அவருடன் நிறுவன ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும்  ஒரு நெருக்கம் இருந்தது. எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 

குருபிரசாத் ஒய்வு பெற்றுச் சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் குருபிரசாத் ராமமூர்த்திக்கு ஃபோன் செய்து, "என்ன ராமமூர்த்தி? நான் ரிடயர் ஆனதும் என்னை மறந்துட்டீங்களா? வீட்டுப் பக்கமே வரலியே?" என்று கேட்டார்.

அவர் சொன்னதற்காக ராமமூர்த்தி அவர் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

குருபிரசாத் அவரிடம் புலம்பித் தள்ளி விட்டார்.

"சொன்னா நம்ப மாட்டீங்க. நான் ரிடயர் ஆனா அடுத்த நாள்ளேந்து என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு. எப்பவும் என்னைச் சுத்தி பத்து பேராவது இருந்துக்கிட்டிருப்பாங்க. உங்களுக்கு பிரைவசியே இல்லையேன்னு என் மனைவி கூட சில சமயம் சொல்லி இருக்கா. ஆனா அது எனக்குப் பிடிச்சிருந்தது.

"ஆனா இப்ப ஒத்தர் கூட என்னைப் பாக்க வரதில்ல. ஃபோன் பண்றதும் இல்ல. நானா யாருக்காவது ஃபோன் பண்ணிப் பேசினாக் கூட பட்டும் படாம பேசிட்டு டக்னு கட் பண்ணிடறாங்க. வெளியில எங்கேயாவது பாத்தா கூட கண்டும் காணாம போறாங்க. நானா வலுவில போய்ப் பேசினாக் கூட ஒப்புக்கு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசிட்டு விலகிடறாங்க. ஏன், நீங்க கூட என்னை மறந்துட்டீங்களே! நான் ஃபோன் பண்ணினப்புறம்தான் வந்தீங்க. ஆனா அதுக்கே நான் உங்களுக்கு நான் நன்றி சொல்லணும்"

"அப்படி இல்ல. வேலை அதிகமா இருந்ததால..."

"இல்ல, ராமமூர்த்தி. பணம், பதவி, அதிகாரம் இதையெல்லாம் சம்பாதிக்கறதிலயே என் வாழ்க்கையைக் கழிச்சுட்டேன். நல்ல நண்பர்களை சம்பாதிக்க நான் முயற்சி செய்யவே இல்ல. என் சொந்தக்காரங்க கிட்ட கூட அலட்சியமாத்தான் நடந்துக்கிட்டேன். இப்ப அவங்களும் என்னை மதிக்கறதில்ல."

"எல்லாம் சரியாயிடும் சார். நான் முடிஞ்சப்பல்லாம் உங்களை வந்து பாக்கறேன். நீங்களும் உங்க மனைவியை அழைச்சுக்கிட்டு என் வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி வீட்டுக் கிளம்பினார் ராமமூர்த்தி.

அதற்குப் பிறகு இரண்டு மூன்று முறை ராமமூர்த்தி குருபிரசாதின் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்தார். குருபிரசாத் மனதளவில் மிகவும் சோர்வடைந்து மன வருத்தத்துடனேயே காட்சி அளித்தார். 

வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின் எல்லா வசதிகளுடனும், ஒரு பிரச்னையும் இன்றி நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை அவருக்கு அமைந்திருந்தாலும், அதை அனுபவிக்கும் மனநிலையை அவரால் பெற முடிய வில்லை என்று ராமமூர்த்திக்குத் தோன்றியது.

குருபிரசாதின் இறுதித் சடங்கு மாலை 4 மணிக்கு நடக்க இருப்பதை அறிந்து சுமார் மூன்றரை மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்றார் ராமமூர்த்தி. 

தெரு நிறைய கார்கள் நிற்கும், தன் காரை நிறுத்த இடம் இருக்குமோ என்னவோ என்று நினைத்துக் கொண்டே சென்றார் ராமமூர்த்தி. 

ஆனால் குருபிரசாதின் வீட்டு வாசலில் ஒரே ஒரு காரும், சில இரு சக்கர வாகனங்களும்தான் நின்றிருந்தன. 

உள்ளே சென்றபோது இறுதிச் சடங்குகள் துவங்கி நடந்து கொண்டிருந்தன. அவர் மனைவி மகன்களைத் தவிர ஒரு சில உறவினர்களும், இன்னும் நான்கைந்து பேரும்தான் இருந்தனர்.  நிறைய பேர் இனிமேல்தான் வருவார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் ராமமூர்த்தி.

ஆனால் நான்கரை மணிக்கு குருபிரசாதின் சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதும் மொத்தம் பதினைந்து பேர்தான் வந்திருந்தனர்.

"தோளில் தூக்கிட்டுப் போக நாலு பேர் வரணும். யார் வரீங்க?" என்றார் சாஸ்திரி.

இரண்டு பேர்தான் முன் வந்தார்கள். வேறு யாரும் வராததைக் கண்டு ராமமூர்த்தியும் முன் வந்தார்.

"இன்னும் ஒத்தர் வேணுமே!" என்றார் சாஸ்திரி.

அதற்குப் பிறகு, தயக்கத்துடன் இன்னொருவர் முன் வந்தார். 

குருபிரசாதின் இறுதிச் சடங்குகள் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் நீண்ட நேரம் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி. 

எப்போதும் குருபிரசாதைச் சுற்றிப் பல பேர் நின்றிருப்பார்களே, இன்று ஏன் யாருமே வரவில்லை? 

வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வங்கியில் கடன் பெற்றவர்கள், அவருடைய பிற நண்பர்கள் என்று நூற்றுக் கணக்கானோர் இருப்பார்களே, அவர்களில் பத்து பேர் கூட வரவில்லையே! அவருடைய உறவினர்கள் கூட ஐந்தாறு பேர்தான் வந்திருந்தனர். ஏன் இப்படி?

குறு பிரசாத் தன்னிடம் சொன்னது ராமமூர்த்திக்கு நினைவு வந்தது. 

குருபிரசாத் தன் வாழ்நாள் முழுவதும் பதவி, அதிகாரம், பணம் போன்றவற்றைச் சம்பாதிப்பதில்தான் கவனம் செலுத்தினார்.

அவருடைய  இறுதிக் காலத்தில் அவர் மீது அன்பும் அக்கறையும் காட்டி, இறந்த பிறகு அவரை வழியனுப்ப வரும் அளவுக்கு அவர் மீது அன்பு செலுத்தக் கூடியவர்களை அவர் சம்பாதிக்கவில்லை! 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு..

பொருள்:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்










Friday, July 24, 2020

350. கட்டிட மேஸ்திரி

வீட்டின் மேல் தளத்துக்கு கான்கிரீட் போட்டு முடித்தபோது மாலை 7 மணி ஆகி விட்டது. நல்லவேளை இருட்ட ஆரம்பித்ததுமே வேலை முடிந்து விட்டது. இல்லாவிட்டால் விளக்குகளுக்கு ஏற்பாடு செய்து இருட்டிய பின் வேலையைத் தொடர்வது கடினமாக இருந்திருக்கும். கான்கிரீட் போட ஆரம்பித்தால் முழுவதும் போட்டு முடிக்க வேண்டுமே! 

வேலை செய்த ஆட்கள் அனைவரும் கிளம்பிய பின் பொருட்கள் வைத்திருக்கும் அறையைப் பூட்டி விட்டு, வாட்ச்மேனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான் கஜேந்திரன். கான்கிரீட் போட்டு முடிக்கும் வரை படபடப்புதான். இனிமேல் சில நாட்களுக்கு அவ்வளவு மன அழுத்தம் இருக்காது.  

ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வழியில் அம்மன் கோவிலில் ஏதோ சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. 

"வீடு கட்டும்போது கான்கிரீட் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்ததும் ஆர்வத்துடன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு கவனித்தான் கஜேந்திரன். 'நம் வேலையைப் பற்றிப் பேசுகிறாரே!'

சற்று நேரம் அவர் பேச்சைக் கேட்கலாம் என்று நினைத்த கஜேந்திரன் ஸ்கூட்டரை நிறுத்த இடம் தேடினான். அங்கே பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் ஸ்கூட்டரை நிறுத்த இடமில்லை. சற்று தூரம் ஸ்கூட்டரைத் தள்ளிக் கொண்டு போய் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு வந்தான்.

சொற்பொழிவாளர் பேசியது காதில் விழுந்து கொண்டிருந்தது. ஆனால் ஸ்கூட்டரை நிறுத்த இடம் பார்த்துக் கொண்டிருந்ததில் பேச்சை அவன் சரியாக கவனிக்கவில்லை.

அவன் உள்ளே போய் உட்கார்ந்தபோது அவர் இறைவனிடம் பக்தி செலுத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவர் கான்கிரீட் போடுவது பற்றிப் பேசியதைக் கேட்டுத்தான் அவன் பேச்சைக் கேட்க வந்தான். ஆனால் அதை அவன் தவற விட்டு விட்டான் என்று தோன்றியது.

ஆயினும் பேச்சு சுவாரசியமாக இருந்ததால் ஒரு மணி நேரம் அங்கே அமர்ந்து அவர் பேசி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டிருந்தான் கஜேந்திரன்.   

சொற்பொழிவு முடிந்ததும் கஜேந்திரன் எழுந்து வந்தபோது தன்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பினான்.

அவனுடைய காண்டிராக்டர் முத்தையா!

"என்னப்பா இங்க? நீ இது மாதிரி பக்திப் பேச்சுக்கெல்லாம் வருவியா என்ன?" என்றார் அவர்.

"இல்ல சார். சும்மாதான்!" என்று தயங்கியபடியே சொன்ன கஜேந்திரன், "ஸ்கூட்டரில் வந்துக்கிட்டிருந்தப்ப ஏதோ கான்கிரீட் போடறதைப் பத்திப் பேசினது காதில விழுந்தது. அதான் வந்தேன். ஆனா அப்புறம் அவரு வேற விஷயங்களுக்குப் போயிட்டாரு. கான்கிரீட் போடறதைப் பத்தி எதுக்கு சொன்னாருன்னு புரியல. நீங்க முழுக்கக் கேட்டீங்களா?"  என்றான்.

"கேட்டேன். ஆனா என்னால உனக்கு விளக்க முடியுமான்னு தெரியல. பேச்சாளர் எனக்குத் தெரிஞ்சவர்தான். வா, அவர் கிட்டயே போய்க் கேட்டுடலாம்" என்றார் முத்தையா.

"பரவாயில்ல சார்!" என்று கஜேந்திரன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, முத்தையா அவன் கையைப் பற்றி மேடைக்குப் பின்னே இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறையில் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்த சொற்பொழிவாளர், முத்தையாவைப் பார்த்ததும் "வாங்க முத்தையா!" என்று அழைத்து விட்டு "இவர்தான் என் வீட்டைக் கட்டிக் கொடுத்த காண்டிராக்டர்" என்று மற்றவரிடம் முத்தையாவை அறிமுகப்படுத்தினார்.

"நீங்க பேசிக்கிட்டிருங்க, நான் இப்ப வரேன்" என்று சொல்லி மற்றவர் எழுந்து வெளியே சென்றார்.

இருவரையும் அமரச் சொன்ன பின் "சொல்லுங்க முத்தையா. பேச்சைக் கேட்டீங்களா? கூட்டத்தில் நீங்க இருந்ததை  நான் கவனிக்கவே இல்லையே!" என்றார் சொற்பொழிவாளர்.

"கேட்டேன் சார். இவரு கஜேந்திரன். நம்ம கிட்ட மேஸ்திரியா இருக்காரு. இவரு எங்கிட்ட வந்து சேர்ந்தப்பறம் நான் கட்டிடம் கட்டறதைப் பார்க்கப் போக வேண்டியதே இல்லை. எல்லாத்தையும் இவரே நல்லாப் பாத்துப்பாரு. இவரு நீங்க பாதி பேசிக்கிட்டிருக்கறச்சேதான் வந்திருக்காரு. நீங்க கான்கிரீட் போடறதைப் பத்தி ஏதோ சொன்னீங்க இல்ல. அதைப் பத்தி என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க விரும்பறாரு. நீங்க என்ன சொன்னீங்கன்னு நான் சொல்றதை விட நீங்களே சொன்னா நல்லா இருக்கும்னுதான் உங்க கிட்ட அழைச்சுக்கிட்டு வந்தேன். நீங்க விளக்கறதைக் கேட்டா எனக்கும் இன்னும் தெளிவாப் புரிஞ்சுக்கிட்ட மாதிரி இருக்கும்" என்றார் முத்தையா.

"அப்படியா? உங்க ஆர்வத்தைப் பாராட்டறேன். நான் பேசினது நமக்கு இருக்கற பற்றுக்களை விடறதைப் பத்தி. பற்றுக்களை விடறது சுலபம் இல்ல. ஆனா கடவுள் கிட்ட பற்று வச்சா மற்ற பற்றுக்கள் விலகிடும்னு சொல்லிட்டு அதுக்கு உதாரணமா கான்கிரீட் போடறதைச் சொன்னேன்" என்று சொல்லி விட்டு கஜேந்திரனைப் பார்த்தார் சொற்பொழிவாளர்.

கஜேந்திரன் மௌனமாகத் தலையாட்டினான்.

"கான்கிரீட் எப்படிப் போடுவீங்க?" என்றார் பேச்சாளர் கஜேந்திரனைப்பார்த்து.

கஜேந்திரன் ஒரு நிமிடம் திகைத்து விட்டு முத்தையாவைப் பார்த்தான். பிறகு தயக்கத்துடன், "முதல்ல கம்பி கட்டுவோம். அப்புறம் கம்பிகளுக்கு அடியில பலகைகளை வச்சு, பலகைகளை மரக் கம்பங்களால முட்டுக் கொடுத்து நிக்க வச்சுட்டு அப்புறம் கம்பிகளுக்கு மேல கான்கிரீட் போடுவோம்" என்றான்

"கீழே பலகை, அதுக்கு முட்டுக் கொடுக்கத் தூண்கள் இதெல்லாம் எதுக்கு?"

"கீழே பலகை இல்லேன்னா கான்கிரீட் எப்படி நிக்கும்?" என்றான் கஜேந்திரன், இவர் என்ன இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டே.

"பலகையோட சப்போர்ட்லதான் கான்கிரீட் நிக்குது. பலகைகளே  மரக்கம்பங்களோட சப்போர்ட்லதான் நிக்குது! ஆனா பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சுப் பலகைகளை எடுத்துடுவீங்க இல்ல?"

"ஆமாம்."

"அப்ப கான்கிரீட் எப்படி அந்தரத்தில் நிக்குது?"

"அந்தப் பத்து பதினஞ்சு நாள்ள, கான்கிரீட் இறுக்கமானதும் இரும்போட பிடிச்சுக்குமே, அதனாலதான்!" என்று விளக்கினான் கஜேந்திரன்.

"அதனால அதுக்கு வேற சப்போர்ட் தேவையில்லை அப்படித்தானே?"

"ஆமாம்."

"நம்ப ஒவ்வொத்தருக்கும் நிறைய பற்றுக்கள் இருக்கு, கான்கிரீட் நிற்க பலகைகள் தேவைப்படற மாதிரி நாமும் இந்தப் பற்றுக்களை விட முடியாம இருக்கோம். பலகைகளுக்கே பற்றுக்கோல்கள் தேவையா இருக்கு. கடவுள் கிட்ட நாம பற்று வைக்கறப்ப கான்கிரீட் இரும்போட இறுக்கமா ஒட்டிக்கிற மாதிரி நாமும் கடவுள் கிட்ட நெருக்கமாயிடுவோம். அப்பதான் மற்ற பற்றுக்களை நம்மால விட முடியும். பலகைக்கு சப்போர்ட் தேவைப்படற மாதிரி இரும்புக்குத் தேவையில்லை. அதனால்தான் கான்கிரீட் கீழ விழாம உறுதியா வேற எந்த சப்போர்ட்டும் இல்லாம நிக்குது. கடவுள் கிட்ட பற்று வைக்கறதன் மூலமாத்தான் மற்ற பற்றுக்களை நாம விட முடியுங்கறதை விளக்கத்தான் இந்த உதாரணத்தைச் சொன்னேன். ஓரளவாவது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் சொற்பொழிவாளர்.

"நல்லாவே புரிஞ்சதுங்க" என்று சொல்லிக் கை கூப்பினான் கஜேந்திரன்.

"சொற்பொழிவில நீங்க சொன்னதை மறுபடியும் விளக்கமாக் கேட்டதில எனக்கும் இன்னும் நல்லாப்  புரிஞ்சுது. என் மேஸ்திரிக்குத்தான் நான் நன்றி சொல்லணும்" என்று சொல்லி சொற்பொழிவாளரிடம் விடை பெற்றார் முத்தையா. 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பொருள்:
பற்று எதுவும் இல்லாத கடவுளின் மீது பற்று வைக்க வேண்டும். நம் பற்றுக்களிலிருந்து விடுபட அந்தப் பற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, July 22, 2020

349. அர்ஜுனனின் கேள்விகள்

"கண்ணா! இவ்வளவு நேரம்  உடல், ஆத்மா ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகள் பற்றி நீ விரிவாக விளக்கிய பிறகு எனக்கு ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும் இன்னும் சில ஐயங்கள் உள்ளன" என்றான் அர்ஜுனன்.

"கேள், ஆனால் விரைவாகக் கேள். போரைத் துவக்கத் தயாராகி விட்டார் பீஷ்மர்" என்றார் கண்ணன்.

"நீயும் சரி, நானும் சரி, இதற்கு முன் பல பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்று சொன்னாயே?"

"ஆமாம்."

"எதற்கு இத்தனை பிறவிகள்? ஒரு பிறவி போதாதா?"

"போதும் என்பதை முடிவு செய்வது உன் கையில்தான் இருக்கிறது!"

"எப்படி?"

" 'நான்', 'எனது' என்ற எண்ணங்கள் இருக்கும் வரை பிறவிகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். அவற்றைக் கைவிட்டு விட்டால் இனி பிறவி இருக்காது."

" 'நான்', 'எனது' என்ற எண்ணங்கள் இயல்பானவைதானே? அவற்றில் என்ன தவறு?"

" 'நான்' என்ற எண்ணம் அகந்தையை வளர்க்கும். உன்னை முக்கியமானவன் என்று உணர வைக்கும். அந்த முக்கியத்துவத்துக்கு ஏதாவது பங்கம் வந்தால் கோபத்தைத் தூண்டும். கோபம் தவறான செயல்களில் உன்னை ஈடுபட வைக்கும். 'எனது' என்ற எண்ணம் பொருட்களின் மீதான ஆசையை வளர்க்கும். என்னுடையது என்று நான் நினைக்கும் பொருள் கையை விட்டுப் போகக் கூடாது என்ற எண்ணமும், வேறு பொருட்களை என்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உன்னைத் தவறான செயல்களில் ஈடுபட வைக்கும்."

"அப்படிப் பார்த்தால், இந்த ராஜ்யம் வேண்டும் என்பதற்காகப் போர் செய்வது கூடத் தவறுதானே?"

"உன்னிடம் ஒருவர் ஒரு பொருளை ஒப்படைத்திருக்கிறார் என்றால் அதைப் பாதுகாப்பது உன் கடமை. அதை உன்னிடமிருந்து வேறொருவர் பறிக்க முயற்சி செய்தால் போரிட்டாவது அதைக் காக்க வேண்டியது உன் கடமை. 

"இந்த ராஜ்யம் உங்களுக்குத் சொந்தம் இல்லை. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜ்யத்தை நீங்கள் ஆண்டு வந்திர்கள். அவ்வளவுதான். உங்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்த திருதராஷ்டிரர் உங்களிடம் அதைத் திருப்பிக் கேட்டிருந்தால் உன் அண்ணன் யுதிஷ்டிரன் மகிழ்ச்சியுடன் அதைத் திருப்பிக் கொடுத்திருப்பான். 

"ஆனால் வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட ராஜ்யத்தைப் போர் செய்து மீட்கும் பணிக்கு நீங்கள் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். எனவே போர் உன் கடமை ஆகிறது. போரில் வென்று ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றவுடன், அதை என்னுடையது என்ற எண்ணம் இன்றி நீங்கள் ஆட்சி புரிய வேண்டும்." 

" 'நான்', 'எனது' என்பவை ஒருவருக்கு அடிப்படையான விஷயங்கள் அல்லவா? அவற்றை எப்படிக் கை விட முடியும்?"

"இவற்றைக் கைவிட வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் காலப் போக்கில் பொருட்களின் மீதான பற்று குறைந்து 'நான்', 'எனது' என்ற மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்."

" 'நான்', 'எனது' என்ற எண்ணத்தை முழுமையாக விட்டவர்கள் முனிவர்களைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா?"

"சென்ற பிறவியில் என் மாமனாராக இருந்த ஜனகர் அப்படி இருந்தவர்தான். ஒரு அரசராக இருந்தும் அவர் எதையுமே தனதென்று நினைக்காமல் ஒரு அரசருக்கான கடமைகளைச் செய்து வந்தார். தனது ராஜ்யத்தைப் பாதுகாக்க அவர் எதிரிகளுடன் போர் செய்திருக்கக் கூடும். ஆனால் என்னுடைய ராஜ்யம் என்ற எண்ணம் அவரிடம் சிறிதும் இருந்ததில்லை."

"ஆமாம். நீ கூடப் பல பிறவிகள் எடுத்திருக்கிறாயே, உனக்குக் கூட'நான்', 'எனது' என்ற எண்ணம் இருந்ததா என்ன?"

"நான் பிறவிகள் எடுத்தது என் விருப்பத்தினால். நான் விரும்பினால் இன்னொரு பிறவி கூட எடுப்பேன், அல்லது இதுவே நான் எடுக்கும் கடைசிப் பிறவியாக இருக்கவும் கூடும். சரி. பீஷ்மர் சங்கைக் கையில் எடுத்து விட்டார். அவர் சங்கை ஊதியதும், நானும் ஊதுவேன். உடனே போர் துவங்கி விடும். நான் சொன்னவற்றை மனதில் கொண்டு 'நான்', 'எனது' என்னும் எண்ணம் இல்லாமல் போர் செய்வதை ஒரு கடமையாக நினைத்துச் செய். உனக்கு வெற்றி உண்டாகட்டும்!" என்று அர்ஜுனனை வாழ்த்தி விட்டு சங்கைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஊதுவதற்குத் தயாராக நின்றார் கண்ணன்.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பொருள்:
இருவகைப் பற்றையும் அறுத்த பிறகுதான் ஒருவருக்குப் பிறவி இல்லாத நிலைமை ஏற்படும். இல்லாவிடில், பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும் நிலையாமைதான் ஏற்படும்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Monday, July 20, 2020

348. பூர்வாசிரமம்

"குருவே! என் பூர்வாசிரம மனைவியும், மகனும் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப்  பார்த்துப் பேசத் தங்கள் அனுமதி வேண்டும்" என்றார் தர்மானந்தர்.  

"பார்த்துப் பேசி விட்டு வா!" என்றார் பிரம்மானந்தர் சிரித்தபடி. 

சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்த தர்மானந்தர், "சுவாமி! என் மகனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறதாம். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை என்னிடம் தெரிவித்து, கல்யாணப் பத்திரிகையை என்னிடம் கொடுத்து ஆசி பெறவே என் மனைவியும், மகனும் வந்திருக்கிறார்கள். தாங்களும் அவர்களை ஆசீர்வதித்துக் கல்யாணப் பத்திரிகையையும் தங்கள் கையால் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அருள வேண்டும்" என்றார்.

"அருள வேண்டியது ஆண்டவன்தான் அப்பா, நான் இல்லை" என்ற பிரம்மானந்தர், "அவர்களை வரச் சொல். எல்லோரும் வாழ்த்துவது போல் நானும் வாழ்த்துகிறேன்" என்றார்.

தர்மானந்தரின் மனைவியும், மகனும் பிரம்மானந்தரின் காலடிக்குக் கீழ் திருமண அழைப்பிதழை வைத்து அவர் காலில் விழுந்து வணங்கினர். 

திருமண அழைப்பிதழை எடுத்துப் போய் தான் ஆராதிக்கும் விக்கிரகத்தின் திருவடிகளில் வைத்து வணங்கி விட்டு அதை அவர்களிடம் கொடுத்து, "இறைவன் அருளால் திருமணம் சிறப்பாக நடக்கும். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று நீண்ட நாட்கள் சிறப்பாக வாழ்வார்கள்" என்று வாழ்த்தினார் பிரம்மானந்தர்.

"சுவாமி! தாங்கள் திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள் தர்மானந்தரின் மனைவி. 

"என் போன்ற சந்நியாசிகள் திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம் இல்லையே!" என்று சொல்லி தர்மானந்தரைப் பார்த்துச் சிரித்தார் தர்மானந்தர்.

தர்மானந்தரின் மனைவி தன் முன்னாள் கணவரின் முகத்தைப் பார்த்தாள். அவர் மௌனமாக இருந்தார்..

"அவர்களை வழி அனுப்பி விட்டு வா, தர்மானந்தா!" என்றார் பிரம்மானந்தர்.

மனைவியும், மகனையும் வழியனுப்பி வைத்து விட்டுத் திரும்பி வந்தார் தர்மானந்தர். 

"என்ன தர்மானந்தா?" என்றார் பிரம்மானந்தா.  

"இல்லை... என் மகனின் திருமணத்துக்கு நான் சென்று அவனை ஆசீர்வதித்து விட்டு வரலாமா?" என்றார் தர்மானந்தர்.

"அது உன் விருப்பம்" என்றார் பிரம்மானந்தர்.

தர்மானந்தர் மௌனமாக இருந்தார்.

"ஆளவந்தார் என்று ஒரு வைணவத் துறவி இருந்தார். ராமானுஜரின் குருக்களுக்கும் குருவாக இருந்தவர்."

"கேள்விப் பட்டிருக்கிறேன் சுவாமி. ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை மீட்டு இந்த உலகுக்கு அளித்த மகான் நாதமுனிகள் பேரன்."

"ஆமாம். நீ நன்கு கற்றறிந்தவன் என்பது எனக்குத் தெரியும். அதனால்தானே எனக்குப் பின் இந்த மடத்தின் தலைமைப் பீடத்தை ஏற்க உன்னைத் தேர்ந்தெடுத்து  நீ உடனே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அடுத்த மாதம் நாளும் குறித்திருக்கிறேன்! 

"ஆளவந்தார் துறவியாவதற்குமுன் ஒரு சிறிய நாட்டின் அரசராக இருந்தவர். தன் ராஜ்யம், குடும்பம் எல்லாவற்றையும் விட்டு விட்டுத் துறவியானவர். அவர் துறவி ஆனதும் அவருடைய மகன் அவர் மடத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்பினார். ஆளவந்தார் அவரை அண்டவே விடவில்லை. 

"அவர் சீடர்கள் வற்புறுத்திய பிறகு அவரைத் தன் பார்வையில் வராதபடி வேறொரு இடத்தில் பணி புரிய அனுமதித்தார். வயதான காலத்தில் அவர் மனைவி அவரைச் சந்திக்க வந்தபோதும் அவர் மறுத்து விட்டார்."

"என் தவறு எனக்குப் புரிகிறது சுவாமி. என் பூர்வாசிரம உறவுகளை நான் பார்த்திருக்கக் கூடாது!" என்றார் தர்மானந்தர். 

"பலர் நம்மிடம் வந்து தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழைக் கொடுத்து ஆசி கேட்கிறார்கள். நாமும் அவர்கள் மனத் திருப்திக்காக அவர்களுக்கு ஆசி கூறுகிறோம், ஆனால் பற்றுதல் எதுவும் இல்லாமல். துறவு ஒரு கடினமான நிலை. துறவு ஏற்றபின் பற்று தொடர்ந்தால், அது நம்மைப் பற்றிக் கொள்ளும்! முதலில் 'என் பூர்வாசிரம மனைவியும் மகனும் வந்திருக்கிறார்கள்' என்று சொன்ன நீ அவர்களைப்  பார்த்து விட்டு வந்ததும், 'என் மனைவி, என் மகன்' என்று சொல்ல ஆரம்பித்து விட்டாய்! இது உன்னை அறியாமலேயே நிகழ்ந்தது. பூர்வாசிரமும் சந்நியாச ஆசிரமம் கலந்து விட்டன. அதுதான் பற்றின் வலிமை!"

"நான் தவறு செய்து விட்டேன் குருவே! நான் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பேற்கத் தகுதியற்றவன். அந்தப் பொறுப்புக்கு வேறு யாராவது தகுதி உடையவர்களை நியமித்து விடுங்கள் குருவே!" என்றார் தர்மானந்தர்.

"இல்லை தர்மானந்தா! உன் தவறை உடனே உணர்ந்து உன் தகுதியையும் குறைத்துக் கொள்கிறாய்! இது உன் பண்பட்ட மனத்தைக் காட்டுகிறது. தலைமைப் பொறுப்பை ஏற்க உனக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஆயினும் நீ பொறுப்பேற்றுக் கொள்வதை ஒரு வருடம் தள்ளிப் போடுவது உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

"பூரியில் இருக்கும் நம் மடத்துக்குப் பொறுப்பேற்று நடத்தியவர் இறைவனடி அடைந்து விட்டாரே, அதனால் அந்த மடத்தைத் தலைமையேற்று நடத்த யாரையாவது நியமிக்க வேண்டும். நீ ஒரு வருடம் நம் பூரி மடத்துக்குப் பொறுப்பேற்று நடத்து. அடுத்த ஆண்டு உன்னை இங்கே திரும்ப அழைத்து வந்து உன்னிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கிறேன்" என்றார் பிரம்மானந்தர்.  

"அப்படியே செய்கிறேன் குருவே!"

"நீ உடனே பூரிக்குச் செல்ல வேண்டும் என்பதில்லை. நீ எப்போது கிளம்ப விரும்புகிறாயோ அப்போது கிளம்பலாம்" என்றார் பிரம்மானந்தர்.

"இல்லை குருவே! நான் உடனே கிளம்புகிறேன். என் பூர்வாசிரமாக் குடும்பத்தில் நடக்கும் திருமணத்தின்போது நான் இங்கே இருக்க விரும்பவில்லை." 

பிரம்மானந்தர் புன்சிரிப்புடன் தர்மானந்தரைப் பார்த்தார். 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

பொருள்:
முற்றும் துறந்தவர்களே உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். அவ்வாறு துறக்காத மற்றவர்கள் அறியாமை என்னும் வலையில் சிக்கியவர்கள் ஆவார்கள்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Saturday, July 18, 2020

347. வீட்டுக்கு வந்த நண்பர்

"வாடா! எவ்வளவு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்க! உக்காரு" என்று நண்பர் சாமிநாதனை உற்சாகத்துடன் வரவேற்றார் பழனிவேல்.

சாமிநாதன் உட்கார்ந்ததும் கண்களைச் சுழற்றி வரவேற்பறையில் பொருட்கள் தாறுமாறாகச் சிதறி இருப்பதைப் பார்ப்பதை கவனித்துப் பழனிவேல் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

"கம்பெனி எப்படி நடக்குது? 24 மணி நேரமும் கம்பெனியையே நினைச்சுக்கிட்டிருப்பியே! என் வீட்டுக்கு வர உனக்கு நேரம் கிடைச்சதே பெரிய விஷயம்தான்!" என்றார் பழனிவேல்.

"என்ன செய்யறது? உன்னை மாதிரி ரிடயர் ஆயிட்டு ஹாய்யா வீட்டில் உக்காந்திருக்க முடியலே என்னால. கம்பெனியில ஏகப்பட்ட பிரச்னை. எனக்கும் 70 வயசு ஆகப் போகுது. சமாளிக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு. அதனாலதான் ஒரு ஆறுதலுக்கு உன்னைப் பாத்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்."  

"அதான் உன் பையன் இருக்கானே? அவன் பாத்துக்கறான். நீயும் என்னை மாதிரி ஹாய்யா வீட்டில இருக்கலாமே!"

இதற்குள் கையில் காப்பியுடன் வந்த பழனிவேலின் மனைவி கங்கா, "எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு. சுமதியையும் அழைச்சுக்கிட்டு வந்திருக்கலாம் இல்ல?" என்றாள் காப்பியை டீபாயில் மீது வைத்தபடி. பழனிவேலிடம் திரும்பி, "உங்களுக்கு வேண்டாம். நீங்க ரெண்டு தடவை காப்பி குடிச்சாச்சு" என்று சொல்லிச் சிரித்தாள்.

"இன்னொரு நாளைக்கு அழைச்சுக்கிட்டு வரேம்மா! நீங்கள்ளாம் நல்லா இருக்கீங்க இல்ல?" என்று கங்காவிடம் சொல்லியபடியே காப்பி டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டார் சாமிநாதன்.

"'எல்லாரும் நல்லா இருக்கோம். பேசிக்கிட்டிருங்க! இதோ வரேன்!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் கங்கா.

"என் பையனைப் பத்திக் கேட்ட இல்ல?" என்று பழனிவேலின் கேள்விக்கு பதில் சொல்லி உரையாடலைத் தொடர்ந்தார் சாமிநாதன். "அவன் பாத்துப்பான்னு நினைச்சுத்தான் ரெண்டு வருஷம் முன்னால கம்பெனியை அவன் பொறுப்பிலே விட்டுட்டு கொஞ்ச நாள் வீட்டில இருந்தேன். ஆனா கம்பெனியில என்ன நடக்குதுன்னு கவனிச்சுக்கிட்டேதான் இருந்தேன். அவன் நிர்வாகம் சரியா இல்ல. அதனால நான் மறுபடியும் ஆஃபீசுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். இப்பவும் அவன்தான் எம் டி. எனக்கு கம்பெனியில எந்தப் பதவியும் கிடையாது. ஆனா நான்தான் கம்பெனியை நடத்திக்கிட்டிருக்கேன். எல்லா பிரச்னையையும் நான்தான் சமாளிச்சுக்கிட்டிருக்கேன். அவன் டம்மியாத்தான் இருக்கான்."

"அவனை டம்மியாக்கினது நீதானே?"

"பின்னே கம்பெனியை ஒழுங்கா நடத்தலேன்னா பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? நான் வளர்த்த கம்பெனி இது!"என்றார் சாமிநாதன் உணர்ச்சிப் பெருக்குடன்.

"சாமிநாதா! உனக்கு யோசனை சொல்ற தகுதி எனக்குக் கிடையாது. நான் ஒரு சாதாரண வேலையில இருந்து ரிடயர் ஆனவன். நான் வேலையில இருந்தப்ப எனக்குக் கூட என் மேலதிகாரிகள் செய்யறது சரியில்லைன்னு, வேற மாதிரி செய்யணும்னு பல சமயம் தோணும். ஆனா எனக்கு அதிகாரம் இல்லையே! என்னைக் கேட்டாலே ஒழிய நானா யோசனை கூடச் சொல்ல முடியாது. அதனால என் வேலையை என்னால முடிஞ்ச அளவுக்கு செஞ்சுக்கிட்டு இருந்தேன். இப்ப ரிடயர் ஆகி பத்து வருஷம் ஆச்சு. இன்னும் என் கம்பெனி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. இப்ப கூட சில சமயம் ஆஃபிபீஸுக்குப் போனா சில விஷயங்கள் எல்லாம் சரியில்லை, தோணும். இப்ப மானேஜரா இருக்கறவன் என்னோட ஜுனியர்தான். அவன் கிட்ட நான் ஏதாவது யோசனை சொன்னா காது கொடுத்துக் கேப்பான். ஆனா நான் எதுவும் சொல்றதில்ல. நாமதான் விலகி வந்தாச்சே, அப்புறம் எதுக்கு கம்பெனி விஷயங்கள்ள ஈடுபாடுன்னு நினைச்சுக்கிட்டு பொதுவா ஏதாவது பேசிட்டு வந்துடுவேன்."

"அது உன் கம்பெனி இல்லையே அப்பா! என்னால அப்படி இருக்க முடியாதே!"

"இருக்கலாம், நீ மனசு வச்சா! உனக்கு அப்புறம் எப்படியும் உன்  பையன்தான் பாத்துக்கப் போறான். இப்பவே அவனைப் பாத்துக்க விடறதில என்ன தப்பு? உன்கிட்ட அவன் ஆலோசனை கேட்டா சொல்லு. இல்லாவிட்டா பேசாம இரு."

"அவன் எங்கிட்ட யோசனை கேக்க மாட்டானே! தனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுக்கறான். அதானே பிரச்னை?" என்றார் சாமிநாதன் கோபத்துடன்.

"நீதான் அப்படி இருக்க. அதான் பிரச்னை!" என்றார் பழனிவேல் சிரித்தபடி.

"என்னடா சொல்ற?"

"நம்ம எல்லாருக்கும் இருக்கற ஒரு பொதுவான மனப்பான்மை இது. நம்மாலதான் எதையும் சரியாச் செய்ய முடியுங்கற எண்ணம்! மத்தவங்க செய்யறது வேற மாதிரியா இருந்தா அது சரியா இருக்காதுன்னு நினைக்கிறோம். ஒவ்வொத்தருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. அவங்க அதன்படிதான் செயல்படுவாங்க. உதாரணமா தொழிலாளர்கள் பிரச்னையை நீ கையாண்ட விதம் ஒரு மாதிரியா இருந்திருக்கலாம். உன் பையன் வேற மாதிரி கையாள முயற்சி செய்யலாம்."

"அதேதாண்டா நடந்தது! எப்படி நேர்ல பாத்த மாதிரி சொல்ற?" என்றார் சாமிநாதன் வியப்புடன்.

"எல்லா நிறுவனங்களிலேயும் இருக்கக் கூடிய ஒரு பிரச்னையை உதாரணமா சொன்னேன். அவ்வளவுதான். மத்தபடி உன் நிறுவனத்தோட பிரச்னைகள் என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா எந்த ஒரு விஷயமும்  நமக்குத்தான் தெரியும், நம்மாலதான் அதைச் செய்ய முடியும்னு நினைக்கறப்ப அது நம்முடையதுங்கற மாதிரி ஒரு பிடிப்பு ஏற்பட்டு அதிலேந்து விட முடியாம போயிடும். அதனால நமக்கு பிரச்னைகள்தான் அதிகமாகும். எந்த விஷயமா இருந்தாலும் ஒரு கட்டத்திலே அதை நாம விட்டுத்தானே ஆகணும்?' என்றார் பழனிவேல்.

"பெரிய ஆன்மீகவாதி மாதிரி பேசறியே! நிறைய ஆன்மீக விஷயங்கள் எல்லாம் படிப்பியோ?"

"அதெல்லாம் இல்ல.  எல்லாம் அனுபவத்தில் கத்துக்கிட்டதுதான்!"

"அனுபவமா?"

"அனுபவம்னா உன்னை மாதிரி ஒரு நிறுவனத்தை நடத்தின அனுபவம் இல்ல. என் வீட்டிலேயே நான் நிர்வாகம் பண்ணின அனுபவம்! முன்னெல்லாம் வீட்டு நிர்வாகத்தில நான் ரொம்பத் தலையிடுவேன். பொருட்களை எங்கெங்கே வைக்கறதுங்கறதிலேந்து குடும்பம் சம்பந்தப்பட்ட பெரிய பெரிய விஷயங்கள் வரை நான்தான் தீர்மானிக்கனும்னு நினைப்பேன். இங்கே பாரு பொருட்கள் தாறுமாறாக் கிடக்கறதை! முன்னேயெல்லாம் இப்படி இருக்கறதைப் பாத்தா எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துடும்." 

"ஆமாம். நான் கூட கவனிச்சேன். நீ எல்லா விஷயத்திலேயும் ஒரு ஒழுங்கு இருக்கணும்னு நினைக்கறவனாச்சே!"

"முன்னெல்லாம் ஏதாவது சரியில்லேன்னா நான்தான் அதை சரி பண்ணனும்னு நினைப்பேன். அப்புறம் புரிஞ்சது. நான் அவசரப்பட்டு எல்லாத்திலேயும் தலையிடாம இருந்தா, வீட்டில இருக்கற மத்தவங்களே அதையெல்லாம் சரி செய்வாங்கன்னு. என்ன, அவங்க வேற மாதிரி வைக்கலாம். வச்சுட்டுப் போகட்டுமே. நான் வைக்கிற விதம்தான் சரின்னு ஏன் நினைக்கணும்? எல்லாம் என்னுடையது, நான் செய்கிற விதம்தான் சரிங்கற எண்ணம்தான் இதுக்குக் காரணம்னு புரிஞ்சதும் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திக்கிட்டேன். இப்ப எனக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையா தெரியறதில்ல. பொருட்கள் எல்லாம் இப்படிக் கிடக்கேன்னு நான் கவலைப்படறதில்ல. கொஞ்ச நேரம் கழித்து யாராவது வந்து எல்லாத்தையும் எடுத்து வைப்பாங்க. எடுத்து வைக்காட்டாலும் சரிதான். அது ஒரு பிரச்னை இல்லையே! நடக்கறப்ப எதையும் மிதிக்காம கொஞ்சம் கவனமா நடக்கணும் அவ்வளவுதான்!"

சாமிநாதன் யோசனையுடன் நண்பரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கையில் இரண்டு தட்டுக்களுடன் வந்த கங்கா, "தோசை சாப்பிடுங்க!" என்று தட்டுக்களை டீபாயில் வைத்தாள்.

"இல்லை. எனக்கு வேண்டாம்" என்றார் சாமிநாதன்.

"ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கீங்க. காப்பி மட்டும் குடிச்சுட்டுப்  போக உங்களை விட்டுடுவேனா? ரெண்டு தோசையாவது சாப்பிடுங்க. மெல்லிசாத்தான் இருக்கு. இருங்க. தண்ணி எடுத்துக்கிட்டு வரேன்!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் கங்கா.

"முன்னெல்லாம் வீட்டுக்கு யாராவது வந்தா, அவங்க உக்காரறதுக்குள்ளேயே, "கங்கா! காப்பி கொண்டு வா!"ன்னு இரைஞ்சு சொல்லுவேன். ஏன், நீங்க சொல்லாட்டா வந்தவங்களுக்கு நான் காப்பி கொடுக்க மாட்டேனா? நீங்க இப்படிச் சொன்னா, ஏதோ நீங்க சொன்னதுக்காகத்தான் நான் வந்தவங்களுக்கு காப்பி கொடுத்தேன், இல்லேன்னா கொடுத்திருக்க மாட்டேங்கற மாதிரி இருக்குன்னு கங்கா எங்கிட்ட நிறைய தடவை சொல்லிக் குறைப்பட்டுக்கிட்டிருக்கா. அப்பல்லாம் அதை நான் காதில போட்டுக்கவே இல்லை. இப்ப பாரு, நான் சொல்லாமலேயே முதல்ல காப்பி கொண்டு வந்து கொடுத்துட்டு, இப்ப டிஃபனும்  கொண்டு வந்து கொடுக்கறா! சாப்பிடு!" என்றார் பழனிவேல்.

"நீ என்னடா சொல்றது? அதான் உன் மனைவியே நான் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னு சொல்லிட்டாங்களே! நீ சொல்ற மாதிரி சொல்லி உன் ஈகோவைக் காட்டிக்கறியா? உன்கிட்ட பேசினப்பறம் நானே என்னோட ஈகோவை விட்டுட்டு இருந்து பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீ என்னடான்னா?" என்று சிரித்தபடி கூறியபடியே தோசையை விண்டு வாயில் போட்டுக் கொண்டார் சாமிநாதன்.

தண்ணீர் டம்ளர்களுடன் வந்த கங்கா சாமிநாதன் சொன்னதைக் கேட்டு விட்டுத் தன் கணவனைப் பார்த்துச் சிரித்தாள். 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

பொருள்:
தான், எனது என்ற இருவகைப் பற்றுக்களையம் பற்றிக்கொண்டு விடாத வரை துன்பங்களும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்











Wednesday, July 15, 2020

346. கைக்கடிகாரம்

"உங்களில் பல பேருக்கு சொந்த வீடு இருக்கும். இப்போது நீங்கள் உங்கள் வீட்டில் இல்லை. உங்களுக்குச் சொந்தமான ஒரு பொருள் உங்கள் கைவசம் இல்லை - சில மணி நேரங்களுக்காவது!

"நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த இடம் உங்களுக்குச் சொந்தமா? நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலி, உங்களுக்குக் காற்றை வழங்கிக் கொண்டிருக்கும் மின்விசிறி எதுவுமே உங்களுக்குத் சொந்தம் இல்லை. ஆனால் இவற்றை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

" நாம் அனுபவிப்பது எதுவும் நமக்குச் சொந்தம் இல்லை. நமக்குச் சொந்தம் என்று நாம் நினைக்கும் எல்லாம் நிரந்தரமாக நம் வசம் இருப்பதும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் பொருட்களின் மீது நமக்கு இருக்கும் பற்றை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும்."

ஞானானந்தர் பேசி முடித்ததும் கூட்டம் மௌனமாக எழுந்து வெளியேறத்  தொடங்கியது. சிலர் தாம் அமர்ந்திருந்த இருக்கைகளை உற்றுப் பார்த்து ஞானானந்தர் சொன்னதை நினைத்துப் பார்த்தனர். 

மேடைக்கு ஏறி சிலர் ஞானானந்தரைப் பார்த்து வணங்கி விட்டு ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுச் சென்றனர். ஞானானந்தர் புன்னகையுடன் அனைவரையும் பார்த்து மௌனமாகத் தலையசைத்தபடியே அவர்கள் வணக்கங்கள், பாராட்டுக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்.

மேடை ஓரத்தில் நின்ற பரஞ்சோதி எல்லோரும் சென்ற பிறகு ஞானானந்தர் அருகில் சென்று "சுவாமி! உங்களிடம் சில விளக்கங்கள் கேட்க வேண்டும்" என்றான் பணிவுடன். 

"உள்ளே வாருங்கள்" என்று அவனை உள்ளே அழைத்துச் சென்ற ஞானானந்தர் அவனுக்கு ஒரு நாற்காலியைக் காட்டி அதில் அமரச் சொன்னார். "இன்னும் சிறிது நேரத்துக்கு இந்த நாற்காலி உங்களுடையதுதான்!" என்று சிரித்துக் கொண்டே கூறியவர், தான் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, "எனக்கும் அப்படித்தான்!" என்றார்.

"சுவாமி! எனக்குத் துறவி ஆக வேண்டும் என்று விருப்பம். ஆனால் என் குடும்பத்தை விட்டு என்னால் வர முடியாது" என்றான்.

"விருப்பமே துறவுக்கு எதிரான விஷயம்தான். துறவு என்ற மனநிலை தானாக ஏற்படுவது. விருப்பத்தினால் ஏற்படுத்திக் கொண்டால் அது துறவாக இருக்காது" என்றார் ஞானானந்தர்.   

"நீங்கள் உங்கள் பேச்சில் பற்றுக்களை விட வேண்டும் என்கிறீர்களே!"

"எதுவும் நம்முடையது இல்லை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் பற்றுக்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று சொன்னேன். நான் என் ஆசிரமத்துக்கு துறவிகளை ரெக்ரூட் செய்வதற்காகப் பேசவில்லை! இல்லறத்தில் இருப்பவர்கள் பற்று வைப்பதால் ஏற்படும் மன வருத்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பேசினேன்."

"எனக்குச் சொந்தமானதை என்னுடையதில்லை என்று எப்படி நினைக்க முடியும் சுவாமி?" என்றான் பரஞ்சோதி.

"உங்கள் கைக்கடிகாரத்தைக் கழற்றிக் கொடுங்கள்!" 

பரஞ்சோதி சற்றுத் தயங்கி விட்டுப் பிறகு கைக்கடிகாரத்தைக் கழற்றி அவரிடம் கொடுத்தான்.

கைக்கடிகாரத்தை வாங்கித் தன் கையில் கட்டிக் கொண்ட ஞானானந்தர், "கையில் கட்டிக் கொண்டால் அழகாகத்தான் இருக்கிறது" என்றார் சிரித்தபடி. பிறகு, "இத்தனை நேரம் உங்கள் கையில் இருந்த கைக்கடிகாரம் இப்போது என் கையில் இருக்கிறது. இது எனக்குச் சொந்தம் என்று ஆகி விடுமா?" என்றார்.

பரஞ்சோதி மௌனமாக இருந்தான்.

"கடையில் ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள். அதை உங்கள் வீட்டு அலமாரியில் வைக்கிறீர்கள். அது உங்களுக்குச் சொந்தமானது என்று நினைக்கிறீர்கள். நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் வாங்கி வருகிறீர்கள். அதையும் உங்கள் புத்தக அலமாரியில் வைக்கிறீர்கள். ஆனால் அதை உங்களுக்குத் சொந்தம் என்று நினைப்பதில்லை - அதை நூலகத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதால்!  நீங்கள் கடையில் வாங்கிய புத்தகத்தையும் உங்களுக்குத் சொந்தமில்லை என்று நினைக்கப் பழகிக் கொள்ளலாம். 

" நூலகத்தில் வாங்கிய புத்தகம் உங்களிடம் 15 நாள் இருக்கும் என்றால், கடையில் நீங்கள் வாங்கிய புத்தகம் உங்களிடம் 15 வருடம் இருக்கலாம். அதற்குப் பிறகு அது கிழிந்து போகலாம், அல்லது நீங்களே தூக்கிப் போட்டு விடலாம். இடையில் அது தொலைந்து போகலாம். அல்லது உங்களிடம் யாராவது அதை இரவில் வாங்கிக் கொண்டு போய்த் திருப்பித் தராமல் இருக்கலாம் - உங்கள் கைக்கடிகாரத்தை நான் இன்னும் திருப்பிக் கொடுக்காத மாதிரி! அப்படியானால், அந்தப் புத்தகம் இரவல் வாங்கிச் சென்றவருக்குச் சொந்தம் என்று ஆகி விடுகிறது!"

"எனவே ஒரு பொருள் நமக்குச் சொந்தம் என்று நினைக்கும்போது அது ஒரு கால எல்லைக்கு உட்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கால எல்லை குறுகியதாக இருக்கலாம், நீண்டதாக இருக்கலாம். பெரும்பாலும் அந்தக் கால எல்லை எவ்வளவு என்பது நமக்கு ஆரம்பத்திலேயே தெரியாது.

"கால எல்லைக்குட்பட்ட ஒரு விஷயத்தில் பற்று வைப்பது அறிவுள்ள செயல் இல்லை என்பதை உணர்ந்து நம் பற்றின் அளவைக் குறைத்துக் கொள்ள முயல வேண்டும். இதுதான் துறவு மனநிலையை அடைவதற்கான முதல் படி" என்றார் ஞானானந்தர். 

"இந்த உடம்பே நமக்குச் சொந்தம் இல்லை என்று சொல்கிறார்களே சுவாமிஜி?" என்றான் பரஞ்சோதி.

"என் பேச்சில் நான் அப்படிச் சொல்லவில்லையே!" என்று சிரித்தார் ஞானானந்தர். "நான் இன்று பேசியது துறவு மனப்பான்மையின் ஆரம்ப நிலையைப் பற்றி. நீங்கள் சொல்வது துறவிகளுக்கே கடினமான ஒரு உயர்ந்த நிலை. ஆனாலும் இதைப் புரிந்து கொள்வது சுலபம்."

"எப்படி சுவாமி?"

ஞானானந்தர் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, "நான் என்னுடைய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அது இன்னொருவருடைய சிறுநீரகமாகி விடுகிறது. அது எனக்குச் சொந்தமானதும் இல்லை. என்னால் அதைப் பயன்படுத்தவும் முடியாது. நூலகத்திலிருந்து இரவல் வாங்கி என் வீட்டில் வைத்திருந்த புத்தகம் இன்னொருவருக்கு இரவல் கொடுக்கப்பட்டு அவர் வீட்டில் இருப்பது போல்தான் இது!

"இப்போது இறந்து போனவரின் பல உடல் உறுப்புகளை எடுத்து மற்றவர்கள் உடலில் வைக்க முடிகிறது. நேற்று ஒருவருடைய உடலின் ஒரு பகுதியாக இருந்த ஒரு உறுப்பு  இன்று இன்னொருவரின் உடலின் ஒரு பகுதியாக இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி சில ஆன்மீக விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது, பார்த்தீர்களா?"

"மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் சுவாமி. நீங்கள் கூறியவற்றை மனதில் வைத்துக் கொண்டு பொருட்களின் மீது எனக்கிருக்கும் பற்றுக்களைக் குறைத்துக் கொள்ளப் பார்க்கிறேன்" என்று சொல்லி எழுந்தான் பரஞ்சோதி.

"இருங்கள்!" என்று சொல்லித் தன் மணிக்கட்டிலிருந்து கைக்கடிகாரத்தைக் கழற்றி அவனிடம் நீட்டிய ஞானானந்தர், "அப்போதிலிருந்து நீங்கள் அடிக்கடி என் மணிக்கட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை நானே வைத்துக் கொண்டு விடுவேனோ என்ற கவலை உங்களுக்கு, பாவம்! என் கைக்கு அழகாக இருக்கிறது என்று வேறு சொல்லி விட்டேனா!" என்று சொல்லிச் சிரித்தார். 

"இல்லை சுவாமி. இதை நான் திரும்ப வாங்கிக் கொள்ளக் கூடாது. உங்கள் கையிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்றான் பரஞ்சோதி.

சுவாமிஜி தலையைப் பக்கவாட்டில் ஆட்டி விட்டு கைக்கடிகாரத்தை அவனிடம் கொடுத்தார். 

கைக்கடிகாரத்தை வாங்கிக் கொண்டு எழுந்த பரஞ்சோதி அருகில் இருந்த உண்டியலின் அருகில் சென்று கைக்கடிகாரத்தை அதற்குள் போடப் போனான். ஆனால் உண்டியலின் துவாரம் சிறிதாக இருந்ததால் அவனால் அதை அதற்குள் போட முடியவில்லை.

ஞானானந்தர் சிரித்துக் கொண்டே, "இது திருப்பதி உண்டியல் இல்லை. அதற்குள் இதை உங்களால் போட முடியாது. அப்படி நீங்கள் போட்டாலும் அது வெறும் அடையாளத் துறவாகத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் டோக்கனிஸம் என்று சொல்வார்கள். பற்றற்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுவது உங்களுக்கே புரியும். அதுதான் துறவு மன நிலையை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்" என்றார்.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

பொருள்:
உடம்பை:ஃ 'தான்' என்றும், பொருட்களைத் 'தனது' என்றும் நினைக்கும் ஆணவ எண்ணத்தை அழிப்பவன் தேவர்களால் கூட அடைய முடியாத உயர்ந்த நிலையை அடைவான்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்













Monday, July 13, 2020

345. குருவும் சீடரும்

"நாம ரெண்டு பெரும் துறவிகள்தான். ஆனா நமக்கு ஆசிரமம் இல்ல. என் பூர்வாசிரமப் பேரை நான் மாத்திக்கல. உன் பேரையும் நான் மாத்தி வைக்கல. ஏன் தெரியுமா?" என்றார் ருத்ரமூர்த்தி.

"எனக்கே இந்தக் கேள்வி உண்டு. ஆனா உங்க கிட்ட கேக்கத் தயக்கமா இருந்தது" என்றார் வைரம். 

"சொல்றேன். என் உடையைப் பாத்துட்டு நான் துறவின்னு நினைச்சு வரவங்க என் பேரு ருத்ரமூர்த்தின்னு தெரிஞ்சதும் பயந்து ஓடிடறாங்க!" என்று சொல்லிச் சிரித்தார் ருத்ரமூர்த்தி.

"எனக்குக் கூடத் துறவியா இருந்துக்கிட்டு வைரம்கற பேரோட இருக்கறது ஒரு மாதிரியா இருக்கு. துறவியானதும் எல்லாரும் பேரை மாத்திக்கற மாதிரி நாம என் மாத்திக்கலன்னு உங்க கிட்ட நான் கேட்டிருக்கேன். ஆனா நீங்க அதுக்கு பதில் சொல்லல."

"நான் துறவியானது மத்தவங்களுக்கு ஆத்மஞானத்தை போதிக்கறதுக்காக இல்ல. நான் அப்படிப்பட்ட ஒரு ஞானி இல்ல. துறவுங்கறது ஒரு வாழ்க்கை முறை. உலக சுகங்களை விட்டுட்டு. தனியா எளிமையா வாழறது. நான் துறவியானது அந்த அடிப்படையிலதான். நம்ம பெற்றோர் வச்ச பேரை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல. இன்னும் சொல்லப் போனா ஒரு துறவிக்குப் பேரே அவசியம் இல்ல. அவரைக் குறிப்பிட மத்தவங்களுக்கு வேணும்னா அது தேவைப்படலாம். அவங்க எப்படி வேணும்னா கூப்பிட்டுட்டுப் போகட்டும். அது அவங்க விருப்பம்."

வைரம் மௌனமாக இருந்தார்.

"அதனாலதான் நான் ஆசிரமம் ஆரம்பிக்கல. வேற ஆசிரமத்தில் போய்ச சேரவும் இல்ல. ஊர் ஊராப் போவேன். கிடைச்ச இடத்தில தங்கிக்கிட்டு, கிடைச்ச உணவை கிடைச்ச நேரத்தில தின்னுட்டு எந்தப் பற்றும் இல்லாம இருந்துக்கிட்டு, இந்தப் பிறவியை வாழ்ந்து முடிக்கணும்னு நினைச்சுத்தான் நான் துறவியானேன்."

"அப்படித்தானே வாழ்ந்துக்கிட்டிருக்கீங்க? நான் உங்க கிட்ட வந்து துறவியாகணும்னு சொன்னப்ப இதையெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டுதானே சேத்துக்கிட்டீங்க?" என்றார் வைரம்.

"ஆனா ஒரு தப்பு நடந்துடுச்சே!" என்றார் ருத்ரமூர்த்தி. 

"மன்னிச்சுடுங்க" என்றார் வைரம். 

சில நாட்களுக்கு முன் தெருவில் அனாதையாகச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு எட்டு வயதுச் சிறுவன் மீது இரக்கம் காட்டி அவனுக்கு உணவளித்தார் வைரம். அவன் அவரிடம் ஒட்டிக்கொண்டு விட்டான். அவனைத் தங்களுடன் வைத்துக் கொள்ளலாம் என்று அவர் ருத்ரமூர்த்தியிடம் கூறினார். ருத்ரமூர்த்தி எதுவும் சொல்ல வில்லை. 

அதற்குப் பிறகு இரண்டு வாரங்கள் அந்தச் சிறுவன் அவர்களுடனேயே இருந்தான். அவனுடன் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பதிலேயே வைரம் தன்  நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். அவர்கள் வேறு இடத்துக்குச் சென்றபோது அவனும் அவர்களுடன் வந்தான். 

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நபர் அவர்களைத் தேடி வந்தார். அந்தச் சிறுவன் அவருடைய மகன் என்றும் சில நாட்கள் முன்பு அவன் வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும் பல இடங்களில் அவனைத் தேடிய பிறகு, இரண்டு சாமியார்களுடன் ஒரு சிறுவன் இருப்பதாக யாரோ சொல்ல அவர்களைத்  தேடிக் கண்டு பிடித்து அங்கே வந்திருப்பதாகவும் சொல்லி அவனை அழைத்துக்கொண்டு போய் விட்டார். 

அந்தச் சிறுவன் சென்றதிலிருந்து வைரம் எதையோ இழந்து விட்டது போல் சற்று மனச் சோர்வுடனேயே இருந்தார்.

"தப்புதான் சாமி! நான் அதை பையன் மேல ஈடுபாடு வச்சிருக்கக் கூடாது. ஒரு வேளை அவனுக்கு சாப்பாடு கொடுத்ததோடு விட்டிருக்கணும். அவனை வேற யாராவது  பாத்துக்கிட்டிருப்பாங்க. அவனைக் கூட அழைச்சுக்கிட்டு வந்திருக்கக் கூடாது. தப்பு பண்ணிட்டேன்.இனிமே  இது மாதிரி நடக்காது" என்றார் வைரம்.  

"ஒரு துறவிக்கு அவனோட உடம்பே ஒரு சுமைதான். வேற வழியில்லாமதான் இதை சுமந்துக்கிட்டிருக்கோம். அது மேலயே பற்று வைக்கக் கூடாதுன்னுதான் உயிர் வாழற அளவுக்கு மட்டும் ஏதோ சாப்பிட்டுக்கிட்டு எந்த ஒரு சுகத்துக்கும் இடம் கொடுக்காம வாழ்ந்துக்கிட்டிருக்கோம். அப்படி இருக்கறப்ப இன்னொரு உடம்பை நம்மளோட சேத்துக்கறது எவ்வளவு பெரிய தப்பு!"

"மன்னிச்சுக்கங்க சாமி. இப்படி ஒரு தப்பு இனிமே நடக்காம பாத்துக்கறேன்" என்றார் வைரம்.

"நான் சொல்றது நான் செஞ்ச தப்பைப் பத்தி!"

"நீங்க என்ன தப்பு செஞ்சீங்க?"

"நீ துறவியாகணும்னு சொல்லி எங்கிட்ட வந்ததும் உன்னை என்னோட கூட வச்சுக்கிட்டது நான் செஞ்ச தப்புதான்! நீ அந்தப் பையனைக் கூட வச்சுக்கிட்ட மாதிரிதான் நான் உன்னை என் கூட வச்சுக்கிட்டதும்! உன் தப்பை நீ புரிஞ்சுக்கிட்டப்பறம்தான் என் தப்பு எனக்குப் புரிஞ்சிருக்கு. அவ்வளவு அறிவில்லாதவனா இருந்திருக்கேன் நான்! ஒரு துறவிக்குத் தன் உடம்பே சுமைங்கறப்ப இன்னொரு உடம்பை என்னோட சேத்துக்கிட்டேனே! எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்!"

வைரம் என்ன சொல்வதென்று தெரியாமல்மௌனமாக இருந்தார். 

 "இனிமே நீயம் நானும் தனித்தனியா இருந்து நம் துறவு வாழ்க்கையைத் தொடரலாம். அதுதான் துறவுக்கு உகந்ததாக இருக்கும். நான் வேற ஊருக்குக் கிளம்பறேன். நீ என்ன செய்யறதுன்னு நீயே முடிவு பண்ணிக்க!" என்று சொல்லி  விட்டு எழுந்தார் ருத்ரமூர்த்தி. 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

பொருள்:
பிறவித் துன்பத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அவர்கள் உடலே ஒரு மிகையான பொருளாக இருக்கும்போது அதற்கு மேலும் வேறு தொடர்புகள் ஏன்?
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, July 8, 2020

344. வங்கிக் கணக்கு

கிருஷ்ணன் சுவாமிஜியின் அறைக்குள் நுழைந்ததும் "வாங்க!" என்று அவனை வரவேற்றார் சுவாமிஜி.

மடத்தின் தலைவர் ஆன பிறகும் பழையபடிதான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன். 

கிருஷ்ணன் அந்த மடத்தில் மூன்று தலைவர்களைப் பார்த்திருக்கிறான். மூன்று பேருமே தாங்கள் மடத்தலைவர் ஆனதும் எல்லோரையும் - தங்களை விட வயதில் மூத்தவர்களைக் கூட -  ஒருமையில்தான் அழைப்பதுதான் வழக்கம். 

சில நாட்களில் இவரும் அந்த வழக்கத்துக்கு வந்து விடுவார் என்று நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன். 

அவர் முன் குனிந்து, தான் கொண்டு வந்த காகிதங்களை நீட்டினான் கிருஷ்ணன். 

"உக்காருங்க!" என்றார் சுவாமிஜி.

கிருஷ்ணன் சங்கடத்துடன் நெளிந்தான். 

மடத்தலைவரின் செயலரான அவன் மடத்தலைவர் முன்பு உட்கார்ந்து பேசுவது வழக்கம் இல்லை. 

"பரவாயில்லை சுவாமிஜி!" என்றான் கிருஷ்ணன். 

"சொல்லுங்க, என்ன இது?" என்றார் சுவாமிஜி, அவன் கொடுத்த காகிதங்களைப் பார்த்து.

"மடத்தோட பாங்க் கணக்கை ஆபரேட் பண்ண டிரஸ்ட்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க. நீங்க இந்த பேப்பர்கள்ள கையெழுத்துப் போட்டீங்கன்னா இதை பாங்க்ல கொடுத்துடுவேன். அப்புறம்தான் நீங்க செக்ல கையெழுத்துப் போட முடியும்."

கிருஷ்ணன் நீட்டிய பேனாவை வாங்காமல் சுவாமிஜி ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தார். 

பிறகு, "போர்ட் ஆஃப்  டிரஸ்டீஸ்ல நானும் ஒரு உறுப்பினர்தானே?" என்றார். 

"ஆமாம். நீங்க இப்ப மடத்தோட தலைவர் ஆயிட்டதால சட்டப்படி நீங்கதான் டிரஸ்ட் போர்டுக்குத் தலைவர்."

"எக்ஸ் அஃபீஷியோ!" என்று சொல்லிச் சிரித்த சுவாமிஜி, "டிரஸ்ட் போர்டை எவ்வளவு சீக்கிரம் கூட்ட முடியுமோ கூட்டுங்க. நான் சில விஷயங்களை விவாதிக்கணும்" என்றார்.

'என்ன விவாதிக்கப் போகிறார்? டிரஸ்ட் உறுப்பினர்கள் யாரும் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று சொல்லப் போகிறாரா? அவர்கள்தான் எப்போதுமே தலையிடுவதில்லையே! ஒருவேளை எனக்குத் தெரியாமல் தலையீடுகள் இருந்திருக்கலாம். பழைய சுவாமிஜி இவரிடம் சொல்லிப் புலம்பி இருப்பாரோ என்னவோ! அதுதான் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறாரோ?'

டிரஸ்ட் போர்டு கூட்டத்தில் சுவாமிஜியின் செயலர் என்ற முறையில் கிருஷ்ணனும் அமர் ந்திருக்க அனுமதி உண்டு. 

கூட்டம் துவங்கியதும், சுவாமிஜி பேச ஆரம்பித்தார். 

"இந்த மடத்தை நிறுவிய மகானோட ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பறதுதான் நம்ப நோக்கம். இந்த மடத்தோட தலைவர்ங்கற முறையில என்னோட பொறுப்பு அதுதான். ஆனா நான் ஒரு துறவி. ஒரு துறவிக்குப் பற்று இருக்கக் கூடாது. எனக்குக் குடும்பம் இல்லை, தனிப்பட்ட முறையில சொத்துக்கள் இல்ல. 

"ஆனா இந்த மடத்தோட நிதியை நான் நிர்வகிச்சா, அது ஒரு பற்றை உருவாக்கிடும். நான் கையெழுத்துப் போட்டுத்தான் எந்தச் செலவையும் செய்யணுங்கறப்ப எனக்கு வரவு செலவுகள்ள ஈடுபாடு வந்துடும். இது மாதிரி பற்று துறவுக்கு விரோதமான விஷயம்."

"நீங்க செலவு பண்ணப் போறதெல்லாம் மடத்துக்காகத்தானே?" என்றார் ஒரு உறுப்பினர்.

"மடத்துக்காகத்தான். ஆனாலும்  இதுவும் ஒரு பற்றுதானே? நான் கண்ணை மூடிக்கிட்டுக் கையெழுத்துப் போட முடியுமா? ஏன் எதுக்குன்னு கேக்க வேண்டி இருக்கும், இப்படிச் செய்யலாமே, அப்படிச் செய்யலாமேன்னு மாற்று யோசனையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கும். இதெல்லாம் என்னைத் துறவிங்கற நிலையிலேந்து ஒரு குடும்பஸ்தன் அல்லது ஒரு வியாபாரிங்கற நிலைக்கு மாத்திடும்!

"எனக்கு முன்னால இருந்த சுவாமிஜிகள் இந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டு செஞ்சிருக்காங்கறது உண்மைதான். அவங்க இதை இயல்பா நினைச்சிருக்கலாம். தாமரை இலைத் தண்ணி மாதிரி பற்று இல்லாம அவங்களால இருக்க முடிஞ்சிருக்கலாம். ஆனா நான் இந்தப் பற்றுகளை வச்சுக்க விரும்பல. உங்களுக்குள்ள ஒத்தரை நிர்வாகியா தேர்ந்தெடுத்துக்கணுங்கறது என்னோட விருப்பம்."

உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.

"அதோட மடத்தோட நிர்வாகத்தையும் நான் பாக்க விரும்பல. ஆன்மீக விஷயங்கள்ள மட்டுமே நான் என்னை ஈடுபடுத்திக்க விரும்பறேன். அதனால எனக்கு செயலாளர் யாரும் வேண்டாம். கிருஷ்ணன் எனக்கு முன்னால இருந்த சுவாமிஜிகளுக்கு செயலாளரா இருந்திருக்கார். நான் அவரை கவனிச்சிருக்கேன். அவர் ரொம்பத் திறமையானவர். உண்மையானவர். அவரை வேற ஏதாவது  நிர்வாகப் பணிகளுக்கு ஈடுபடுத்திக்கங்க. ஏன் அவரையே நிர்வாகியாப் போட்டு அவர் கிட்ட எல்லாப் பொறுப்பையுமே ஒப்படைச்சாலும் சரி. ஆனா ஒரு நிபந்தனை. அவர் எங்கிட்ட வந்து எந்த யோசனையும் கேட்கக் கூடாது, எந்தப் பிரச்னையையும் எங்கிட்ட விவாதிக்கவும் கூடாது. யாரு நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கிட்டாலும் அப்படித்தான்!" என்றார் சுவாமிஜி முத்தாய்ப்பாக.

கிருஷ்ணன்  சுவாமிஜியை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தான்.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

பொருள்:
ஒரு பற்றும் இல்லாமல் இருப்பதுதான் துறவுக்கு ஏற்ற இயல்பான நிலை. பற்று உடையவராக இருத்தல் மேலும் மேலும் ஆசைகள் உருவாக்க வழி வகுக்கும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்














Saturday, July 4, 2020

343. தகப்பன்சாமி!

"காசிக்குப் போனா எதையாவது விடணும்பாங்களே, நீ எதை விட்ட?" என்று தன் நண்பர் நடராஜன் கேட்டபோது, "கத்தரிக்காயை விட்டேன்" என்றார்  சுந்தரமூர்த்தி சிரித்துக் கொண்டே.

"உனக்குத்தான் கத்தரிக்கா பிடிக்காதே? நீ எப்பவுமே அதை சாப்பிட மாட்டியே!" 

"அதனாலதான் அதை விட்டேன்!"

"டேய்! காசிக்குப் போறப்ப எதையாவது விடணும்னா, நமக்குப் பிடிச்ச எதையாவது விடணும்னு அர்த்தம். பிடிக்காத விஷயத்தை விட்டுட்டேன்னு சொல்றது ஏமாத்து வேலை இல்லையா?" என்று நடராஜன் சொன்னபோது சுந்தரமூர்த்திக்கு இலேசாகக் கோபம் வந்தது. 

"ஏண்டா, முன்னெல்லாம் நிறைய டிவி பாப்ப? இப்பல்லாம் டிவி பாக்கறதை சுத்தமா விட்டுட்ட? நாங்க யாராவது டிவி போட்டா உடனே எழுந்து உள்ள போயிடற? ஏன் திடீர்னு டிவி மேல உனக்கு இவ்வளவு வெறுப்பு?" என்றார் சுந்தரமூர்த்தி.

"வெறுப்பெல்லாம் ஒண்ணுமில்லப்பா. டிவி அதிகமாப்  பாத்துக்கிட்டிருந்தேனா? அப்ப இந்தப் பழக்கத்தைக் குறைச்சுக்கணும்னு  தோணிச்சு. அப்புறம் குறைச்சுக்கறதை விட ஒரேயடியா விட்டுடலாமேன்னு தோணிடுச்சு. அதான் விட்டுட்டேன்" என்றான் அவர் மகன் சோமு.

"இந்த வயசிலேயே சாமியாராப் போகப் போறியா என்ன?" என்றார் சுந்தரமூர்த்தி கேலியாக.

"நல்லா கேளுங்க மாமா! சாப்பாட்டில கூட இப்படித்தான் செய்யறாரு. முன்னேயெல்லாம் அவருக்கு ஸ்வீட்னா ரொம்பப் பிடிக்கும். இப்ப ஸ்வீட் சாப்பிடறதையே நிறுத்திட்டாரு. பிளாட் ஷுகர் எல்லாம் கம்மியாத்தான் இருக்கு. ஏன் இப்படிப் பண்றாருன்னே தெரியல! கேட்டா சும்மாதான்னு சிரிக்கறாரு. எனக்குக் கூட இவர் சாமியாராப் போயிடுவாரோன்னு கவலையா இருக்கு!" என்றாள் சோமுவின் மனைவி அபிராமி.

"என்னடா இதெல்லாம்?" என்றார் சுந்தரமூர்த்தி.

"ஒண்ணும் இல்லப்பா. நமக்குப் பிடிச்ச விஷயங்களை விட்டுட முடிஞ்சா எப்படி இருக்கும்னு முயற்சி செஞ்சு பாத்தேன். விட முடியுங்கறப்ப நம்மால எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்க முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஸ்வீட் சாப்பிடக் கூடாதுன்னு இல்ல. அது மேல ஆசையை விட்டப்பறம் எப்பவாவது சாப்பிடலாம். ஆனா  ஸ்வீட் சாப்பிடணும்னு ஆசை வராது. டிவி பாக்கறதும் அப்படித்தான். முன்னெல்லாம் வெறி பிடிச்ச மாதிரி பாத்துக்கிட்டு இருந்துட்டு இப்ப பாக்கணும்ங்கற ஆர்வமே இல்லாம இருக்கறது சந்தோஷமா இருக்கு. எப்பவாவது வேணும்னா பாப்பேன். எப்ப வேணும்னாலும் பாக்கறதை நிறுத்திட்டு எழுந்து போயிடுவேன். நமக்குப் பிடிச்ச எல்லா விஷயங்களையும் இப்படிப் பழக்கிக்கலாங்கற நம்பிக்கை இப்ப எனக்கு வந்திருக்கு!"என்றான் சோமு.

தான் கத்தரிக்காயை விட்டது ஏமாற்று வேலை என்று நண்பர் சொன்னது சுந்தரமூர்த்திக்கு நினைவு வந்தது. 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

பொருள்:
ஐம்புலன்களுக்கான ஆசைகளை விட வேண்டும். அதற்காக நாம் விரும்பிய பொருட்களை விட வேண்டும்.
  பொருட்பால்                                                                                       காமத்துப்பால்