![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEAkkgs2W21vwyinKdh1sxB0GkfD_7ob99YgFtSv7TChNNsrLb9jmPZQkpbN7mY8KEmkewuFzjg0N0CWdBIBq2BS296hxHJx-Cc7TtKi3_2l-ULN_b9D2sVPjIraQFrMJZ9vdHbCH03o4/s400/342.jpg)
அடுத்த பத்து ஆண்டுகளில், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இன்னும் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. முதல் பத்து ஆண்டுகளில் அவருடைய நிறுவனம் அகில இந்திய அளவில் புகழ் பெற்றதென்றால், அடுத்த பத்தாண்டுகளில் அது உலகளவில் பெயர் பெற்றது.
தனி நபர் முதலீட்டில் துவங்கப்பட்ட அந்த நிறுவனம் பல லட்சம் பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனமாக மாறியும், அது சச்சிதானந்தம் என்ற தனி மனிதரின் நிறுவனமாகவே அடையாளம் காணப்பட்டது.
அந்த நிறுவனம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இன்னும் பெரிதாக வளர்ந்து கொண்டே இருக்கும் என்று எல்லா நிபுணர்களும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர்.
அப்போதுதான், சச்சிதானந்தம் யாரும் எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாகி என்ற பொறுப்பு உட்பட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக அவர் அறிவித்தார்,
அத்துடன், தன் குடும்பத்தின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைத் தொடர்ந்து அளிக்க எவ்வளவு முதல் வேண்டுமோ அந்தத் தொகை வரும் அளவுக்குத் தன் பங்குகளில் சிறு பகுதியை மட்டும் விற்று விட்டு, மீதமுள்ள பங்குகளைத் தன் நிறுவன ஊழியர்களுக்குப் பரிசாக அளித்து விட்டார்.
நிறுவனத்தின் இயக்குனர்கள், உயர் அதிகாரிகள், நண்பர்கள் என்று பலரும் வற்புறுத்தியும், அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
போர்டில் ஒரு கௌரவ இயக்குனராகவாவது தொடரும்படி கேட்டார்கள். அதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
"எல்லாவற்றையும் விட்டுட்டு இருக்கப் போறேன்!" என்றார் சச்சிதானந்தம்.
அவர் மனைவி உட்பட யாருக்குமே அவருடைய முடிவுக்கு காரணம் புரியவில்லை.
"ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு இந்த நிறுவனத்தை நடத்திட்டேன். நம்ப பையனும் பெண்ணும் அவங்களுக்குப் பிடிச்ச வேலையை செஞ்சுக்கிட்டு, கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க வாழ்க்கையை நடத்திக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கு நிறுவனத்தில் தனியா பங்குகள் கொடுத்திருக்கேன். உனக்கும் பங்குகள் கொடுத்திருக்கேன். எனக்கு மனத் திருப்தி ஏற்படற அளவுக்கு இந்த நிறுவனத்தை நடத்திட்டேன். அதனால, இனிமே எல்லாத்தையும் விட்டுட்டு இருக்கலாம்னு பாக்கறேன்" என்று அவர் தன் மனைவியிடம் சொன்னபோது, அவர் மனைவிக்கு அது ஒரு விசித்திரமான பதிலாகத் தோன்றியது.
"இனிமே என்ன செய்யப்போறீங்க?" என்றாள் மனைவி.
"தெரியல. செய்யறதுக்கு ஏதாவது நல்லதாக் கிடைக்கும்!" என்றார் சச்சிதானந்தம்.
சில மாதங்கள் பொழுதைப் பல்வேறு விதங்களில் கழித்த பிறகு, ஒருநாள் திடீரென்று அவருக்குத் தோட்டம் போடலாம் என்று தோன்றியது.
வீட்டுக்குப் பின்னால் காலியாக இருந்த இடத்தில் சிறிய அளவில் தோட்டம் அமைப்பதில் ஈடுபட்டார். சில வாரங்களிலேயே தோட்டக்கலையில் அவருக்குப் பெரும் ஈடுபாடு வந்து விட்டது. பல்வேறு செடிகள் பற்றிப் புத்தகங்கள் படித்தார். பல நர்சரிகளுக்குச் சென்று விவரங்கள் சேகரித்துச் சில செடிகளை வாங்கி வந்து பயிரிட்டார்.
வீட்டைச் சுற்றிலும் காலியாக இருந்த இடம் முழுவதிலும் செடிகள் வைத்த பிறகு, மொட்டை மாடியிலும் செடிகள் வளர்த்தார்.
ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தியபோது இருந்த திருப்தி, தோட்ட வேலையிலும் அவருக்குக் கிடைத்தது.
சில ஆண்டுகளுக்குப் பின், அவர் நிறுவனம் சில பிரச்னைகளைச் சந்தித்தது. இது பற்றிப் பத்திரிகையில் படித்து அறிந்து கொண்டார் சச்சிதானந்தம். ஆனால், அவர் அதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
ஒருநாள், அவர் நிறுவனத்தின் இயக்குனர்கள் சிலரும், தலைமை அதிகாரியும் சச்சிதானந்தத்தைப் பார்க்க அவர் வீட்டுக்கு வந்தனர்.
மாடியறையில் அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார் சச்சிதானந்தம்.
அவர்கள் சென்றதும், "எதுக்கு வந்தாங்க?" என்றாள் சச்சிதானந்தத்தின் மனைவி.
"மறுபடி கொஞ்ச நாளைக்கு கம்பெனியைப் பொறுப்பு எடுத்து நடத்த முடியுமான்னு கேட்டாங்க. நான் பொறுப்பேத்து நடத்தினா, கம்பெனியைப் பழைய நிலைக்கு கொண்டு வந்துடலாம்னு அவங்க நினைக்கறாங்க!"
"சரின்னு சொல்லிட்டீங்க இல்ல?"
"சாரின்னு சொல்லிட்டேன்! போதும்னு முடிவு பண்ணித்தானே விட்டுட்டு வந்தேன்? மறுபடி போய் வேலை செய்யறதில என்ன அர்த்தம் இருக்கு?"
"நீங்க கொஞ்ச நாள் பாத்துக்கிட்டீங்கன்னா, கம்பெனியை முன்னுக்குக் கொண்டு வந்துடலாம் இல்ல?"
"என்னை விட நல்லா நிர்வகிக்கறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. எனக்கு உடம்பு சரியில்லாம இருந்தாலோ, இல்லை நான் செத்துப் போயிருந்தாலோ என்ன செஞ்சிருப்பாங்க? அதை விடு. நேத்திக்குப் புதுசா ஒரு செடி வச்சேன். அது எப்படி இருக்குன்னு பாக்கணும்" என்றபடியே தோட்டத்தை நோக்கிச் சென்றார் சச்சிதானந்தம்.
துறவறவியல்
அதிகாரம் 35
துறவு
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
பொருள்:
துன்பமில்லாத நிலை வேண்டுமானால், பொருட்கள் உங்களிடம் இருக்கும்போதே அவற்றைத் துறக்க வேண்டும். அவ்வாறு துறந்த பின், இங்கே பெறக் கூடும் இன்பங்களும் பல.
No comments:
Post a Comment