![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsROMft9L83VGlJ99CsbTd_cYCdcou9JgAm7hNps8QML_mkqLjwIqNA53Wt0ZCSL2rrf-uF8a8jZwlAIo8Y668NsEjvTZwunFQE3OhkJgtJZZrXCSjCOLfEbp3YlVVrSJ7L7RI4oRohpc/s400/images.jpg)
வளர்ந்து பெரியவனாகி வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும், இந்த ஆர்வம் அவனுக்குப் புதிது புதிதாக வரும் பொருட்களையும், சாதனங்களையும் வாங்க வேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்க ஆரம்பித்தது.
புதிதாக வரும் சமையல் உபகரணங்களை வாங்கலாம் என்று அவன் திருமணத்துக்கு முன்பு தன் தாயிடமும், திருமணத்துக்குப் பிறகு தன் மனைவியிடமும் யோசனை கூறுவது வழக்கம். அவனுடைய பெரும்பாலான யோசனைகளை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.
"என்னங்க இது, பொதுவா ஒரு வீட்டில பொண்டாட்டிதான் பொருட்களை வாங்கித் தரச் சொல்லிப் புருஷனைத் தொந்தரவு பண்ணுவா, புருஷன் வாங்கித் தர மாட்டேம்பாரு, நம்ம வீட்டில தலைகீழா இருக்கே!" என்று ஒருமுறை அவன் மனைவி சொன்னாள்.
ஆயினும், புதிய பொருட்களை வாங்கும் ஆசையால், அருள் அவ்வப்போது எதையாவது வாங்கிக் கொண்டிருந்தான்.
அவன் வாங்கி வைத்த வேக்குவம் கிளீனர், பர்சனல் ஆர்கனைசர் போன்ற பொருட்கள் வீட்டில் ஒரு மூலையில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.
வி.சி.ஆர் (வீடியோ காஸட் ரிகார்டர்) சந்தையில் அறிமுகமான சில நாட்களிலேயே அருள் அதை வாங்கி விட்டான், அவன் மனைவி வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல்! ஆரம்பத்தில் புதிய காஸெட்களை வாங்கி, டிவியிலிருந்து சில நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வந்தான். பிறகு, அதில் ஆர்வம் குறைந்து போய் விட்டது.
அந்தப் பகுதியில் வீடியோ லைப்ரரி வைத்திருந்தவர் ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்து, "ஏன் சார் வி.சி.ஆரை வாங்கிட்டுப் பயன்படுத்தாம வச்சிருக்கீங்க? அப்புறம் அது கெட்டுப் போயிடும். நம்ம லைப்ரரியில சேர்ந்துக்கங்க. புதுப் பட காஸட் எல்லாம் நிறைய எங்கிட்ட இருக்கு. நானே கொண்டு வந்து கொடுத்துட்டு, திருப்பி வாங்கிக்கிட்டுப் போறேன்" என்று சொல்ல, அருள் உடனே அந்த வீடியோ லைப்ரரியில் உறுப்பினராகச் சேர்ந்து, வீடியோ காஸெட்களை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தான்.
காஸெட்களைப் பார்க்க அவனுக்கு நேரமிருப்பதில்லை, அவன் மனைவிக்கு ஆர்வம் இல்லை. ஆயினும், வீடியோ லைப்ரரியிலிருந்து தினம் ஒரு காஸட் வந்து கொண்டிருந்தது. பலவற்றைப் பார்க்காமலே, பணம் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தான்.
இடையில் ஒருமுறை வி.சி.ஆர் பழுதடைந்து விட, அதைப் பழுது பார்ப்பதற்கு வேறு பணம் செலவாயிற்று.
"இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குவானேன்? இப்ப ரிப்பேர் செலவுக்குக் காசு அழுவானேன்?" என்று புலம்பினாள் அவன் மனைவி.
பழுது பார்க்கப்பட்ட பிறகு, வி.சி.ஆரின் தரம் முன்பு போல் இல்லை என்று தோன்றியது. ஆனால் பழுது பார்த்த நிறுவனம் அது சரியாகத்தான் இருப்பதாகச் சாதித்து விட்டது.
"பேப்பர் போடற மாதிரி தினம் ஒரு காஸட் போட்டுட்டுக் காசு வாங்கிக்கிட்டுப் போயிட்டிருக்காரு வீடியோ லைப்ரரிக்காரர். நம்ப பையனும் இப்ப படம் பாக்க ஆரம்பிச்சுட்டான். அப்புறம் அவன் ஒழுங்காப் படிக்க மாட்டான். மொதல்ல இந்த காஸட் போடறதை நிறுத்தத் சொல்லுங்க!" என்றாள் அவன் மனைவி.
அதன் பிறகு, வி.சி.ஆரும் கட்டாய ஒய்வு பெற்று ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டது.
காலம் போகப் போக, வாஷிங் மெஷின், புது வகை மிக்சி, கிரைண்டர், ஏசி, கம்ப்யூட்டர், பெரிய திரை டிவி, டி.வி.டி, சமையலறைக்கு மின் புகைபோக்கி என்று பொருட்கள் குவிந்து கொண்டே இருந்தன. இப்போது அவன் மனைவிக்கும் நவீன சாதனங்களில் ஆர்வம் வந்து விட்டது!
"ஏன் இந்த மாசம் இவ்வளவு செலவு ஆகி இருக்கு?" என்றான் அருள்.
"ரிப்பர் செலவே நிறைய ஆகியிருக்கு. ஏசி, வாஷிங் மெஷின் ரெண்டுமே இந்த மாசம் ரிப்பர் பண்ணினோம் இல்ல?" என்றாள் அவன் மனைவி.
"போன மாசம் கூட நிறைய ரிப்பேர் செலவு ஆச்சே?'
"போன மாசம் எலக்ட்ரிக் சிம்னி ரிப்பேருக்கு நிறைய செலவாயிடுச்சு."
"ஒவ்வொரு மாசமும் ஏதாவது ரிப்பேர் செலவு வந்துக்கிட்டுத்தான் இருக்கு!"
"ஆமாம். நம்மகிட்ட பொருட்கள் அதிகம் இருக்கறதால, ஏதாவது மாத்தி மாத்தி ரிப்பேர் ஆகிக்கிட்டுத்தான் இருக்கு."
"இந்தப் பொருட்கள் எல்லாம் நமக்கு வேணுமா?" என்றான் அருள், திடீரென்று.
"நீங்களா இப்படிச் சொல்றீங்க? நீங்கதானே புதுசா புதுசா ஏதாவது வாங்கிக்கிட்டிருப்பீங்க."
"ஆமாம். இப்பதான் கொஞ்ச நாளா யோசிச்சுப் பாக்கறேன். இத்தனை நாளா, பொருட்கள் வாங்கறோம்னு, எவ்வளவு பணம் வேஸ்ட் பண்ணி இருக்கேன்! அதெல்லாம் நமக்குப் பயன்பட்டிருக்கான்னா, இல்ல!
"பல பொருட்களைப் பயன்படுத்தாம தூக்கிப் போட்டிருக்கோம். இப்ப இவ்வளவு பொருட்களைக் காசு கொடுத்து வாங்கிட்டு, அதெல்லாம் ரிப்பர் ஆனா அதுக்காகக் கவலைப்பட்டுக்கிட்டு, அதை ரிப்பர் பண்ணப் பணம் செலவழிச்சுக்கிட்டு, அதுக்காகக் கவலைப் பட்டுக்கிட்டிருக்கோம்!"
"நீங்க சொல்றது சரிதான். அதுக்கு என்ன செய்யலாங்கறீங்க?"
"கார் ரிப்பேர் செலவைப் பத்தி நாம கவலைப்படறோமா?"
"நம்பகிட்டதான் கார் இல்லையே!"
"அதுதான் பாயிண்ட். நம்மகிட்ட இருக்கற பொருட்கள்ள நமக்கு அவசியமான சிலதை மட்டும் வச்சுக்கிட்டு, மீதியையெல்லாம் வந்த விலைக்கு வித்துடலாம், விலை போகலேன்னா, பழைய பொருட்கள் வாங்கறவங்ககிட்ட வித்துடலாம். அப்புறம் இந்த ரிப்பேர் பத்திக் கவலைப்படறது, அதுக்காகச் செலவு செய்யறதாவது இதெல்லாம் இல்லாம இருக்கும். என்ன சொல்ற?" என்றான் அருள்.
"நீங்களே இப்படி ஒரு முடிவுக்கு வந்தப்பறம், நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? அப்படியே செஞ்சுடலாம்!" என்றாள் அவன் மனைவி.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 35
துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்..
பொருள்:
ஒருவன் எந்தெந்தப் பொருட்களில் பற்றில்லாமல் இருக்கிறானோ, அந்தப் பொருட்களினால் அவனுக்குத் துன்பம் நேராது.
No comments:
Post a Comment