ஒரு தனியார் நிறுவனத்தில் சுமாரான சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு, அதிக சிரமம் இல்லாமல் வாழ்க்கையை ஒட்டி வந்த சிவராமனின் வாழ்க்கையில், கொரோனாவினால் வந்த ஊரடங்கு ஒரு அடியாக விழுந்தது.
ஊரடங்கால் மூடப்பட்ட நிலையிலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வசதி அவன் வேலை பார்த்த நிறுவனத்துக்கு இல்லை. வேலை பார்த்த நடப்பு மாதத்துக்கான சம்பளம் கூட தாமதமாகதான் வரும் என்று சொல்லி விட்டார்கள்.
அவன் சம்பளம் மாதாந்தரச் செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததால், அவனிடம் சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. அவன் வசிக்கும் வீடு அவன் அப்பா வழி வந்த சொத்து என்பதால், வீட்டு வாடகைப் பிரச்னை மட்டும் அவனுக்கு இல்லை.
கையில் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு சிறிது காலத்துக்கு ஓரளவுக்குச் சமாளித்து விடலாம் என்றாலும், மாதச் சம்பளம் ஓரிரு மாதங்களுக்காவது வராது என்ற சூழ்நிலை சிவராமனுக்குக் கவலையை ஏற்படுத்தியது.
"உங்களுக்கு வர சம்பளமே கொஞ்சம்தான். அதில மாசம் ஐநூறு ரூபா ஒரு அநாதை ஆசிரமத்துக்கு கொடுத்துக்கிட்டிருக்கீங்க. அந்தப் பணத்தை ரெக்கரிங் டெபாசிட் பண்ணியிருந்தீங்கன்னா, வட்டியோட சேந்து கிட்டத்தட்ட நாப்பதாயிரம் ரூபா கிடைச்சிருக்கும் இப்ப!" என்றாள் அவன் மனைவி ஜானகி.
"இங்க பாரு, ஜானகி! இதைப் பத்தி நாம எத்தனையோ தடவை பேசிட்டோம். சம்பாதிக்கறதில ஒரு சின்ன தொகையாவது மத்தவங்களுக்கு உதவி செய்யறதுக்காகக் கொடுக்கறது நம்ப சமுதாயக் கடமைன்னு நான் நினைக்கறேன். வாழ்க்கையில எதுவுமே நிலை இல்லை. நான் ரிடயர் ஆகிற வரையிலும் இந்த கம்பெனியில எனக்கு வேலை இருக்கும், சம்பளம் வந்துக்கிட்டிருக்கும்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன். திடீர்னு இப்படி ஒரு நிலைமை வரும்னு எதிர்பார்த்தோமா? என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்" என்றான் சிவராமன்.
சிவராமன் ஒரு மடிக்கணினியும், இன்டர்நெட் இணைப்பும் வைத்திருந்தான். அவன் மடிக்கணினி வாங்கியபோது, "எதுக்கு இந்த தெண்டச் செலவு? மாசா மாசம் இன்டர்நெட்டுக்கு வேற பணம் கட்டணும்!" என்று ஜானகி எதிர்த்தபோது, "உனக்கு டிவி, கேபிள் கட்டணம் மாதிரி, எனக்கு இதுன்னு வச்சுக்கயேன்!" என்று சொல்லி அவள் எதிர்ப்பைச் சமாளித்தான் சிவராமன் .
தினமும் இரவில் சில மணி நேரம் அவனுக்கு ஆர்வமான விஷயங்களை இன்டர்நெட்டில் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் வீட்டிலிருந்த சமயம் இன்டர்நெட் அவனுக்குக் கை கொடுத்தது. ஒரு ஆன்லைன் கோச்சிங் நிறுவனத்தில் தினம் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது.
"ஓரளவுக்கு வருமானம் வரும். சமாளிச்சுடலாம்" என்றான் சிவராமன், மனைவியிடம், உற்சாகமாக.
"பணம் எப்ப வரும்?" என்றாள் ஜானகி.
"மாசா மாசம் முதல் வாரத்தில என் பாங்க் அக்கவுன்ட்ல கிரெடிட் பண்ணிடுவாங்க."
"என்னவோ நிரந்தரமா வரும்கற மாதிரி பேசறீங்களே!"
"இப்போதைக்கு, ஊரடங்கு முடிஞ்சு என் ஆஃபீஸ் திறக்கற வரையிலும் வந்தா போதுமே!" என்றான் சிவராமன்.
"பணம் கிரெடிட் ஆயிடுச்சு. ஏ.டி.எம்-ல போய் எடுத்துக்கிட்டு வரேன்!" என்று கிளம்பினான் சிவராமன். .
நீண்ட நாட்கள் கழித்து, ஜானகியின் முகத்தில் சிரிப்புத் தெரிந்தது.
சிவராமன் பணம் எடுத்து வந்து கொடுத்ததும், அதை எண்ணிப் பார்த்த ஜானகி, "பத்தாயிரம் ரூபா வரும்னு சொன்னீங்களே! எட்டாயிரத்து ஐநூறு ரூபாதான் இருக்கு. அவ்வளவுதான் எடுத்தீங்களா?" என்றாள் ஜானகி.
"ஆயிரம் ரூபா வருமான வரி பிடிச்சுட்டாங்க. அநேகமா நான் வருமான வரி கட்டும்படி இருக்காது. ஆனாலும், அடுத்த வருஷம் நான் வருமான வரி ரிடர்ன் தாக்கல் செஞ்சுதான் அந்தப் பணத்தைத் திரும்ப வாங்க முடியும்."
"சரி. மீதி ஐநூறு ரூபா?"
"பணம் என் அக்கவுன்ட்டுக்கு வந்ததுமே ,ஐநூறு ரூபாயை அந்த அநாதை ஆசிரமத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன்" என்றான் சிவராமன், வேறு பக்கம் திரும்பியபடி.
"ஏங்க, இந்த மாதிரி கஷ்டமான சமயத்தில, எதிர்பாராம ஏதோ கொஞ்சம் பணம் வந்திருக்கு. அதிலேயும் கொஞ்சம் தானம் பண்ணணுமா?" என்றாள் ஜானகி, சற்றுக் கோபத்துடனும், ஏமாற்றத்துடனும்.
"ஜானகி, நீயே சொன்னே, இது எதிர்பாராத வருமானம்னு. முதல்ல ஒரு நிரந்தரமான வேலையில இருக்கேன்னு நம்பிக்கிட்டிருக்கச்சே, இப்படி ரெண்டு மூணு மாசம் சம்பளம் வராம போறது ஒரு எதிர்பாராத விஷயம். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுக் கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறதும் எதிர்பாராத விஷயம்தான். அதிலேயும் வருமான வரிக்கு ஆயிரம் ரூபா பிடிச்சுட்டாங்க. அதைத் திரும்ப வாங்க ஒரு வருஷத்துக்கு மேல ஆகும். எதையுமே நம்மால நிச்சயமா எடுத்துக்க முடியல. நமக்குப் பணம் கிடைக்கறப்ப, அதில ஒரு சிறிய தொகையையாவது மத்தவங்களுக்கு உதவறத்துக்காக செலவழிக்கணும்னு நினைக்கிறேன். அது தப்பா?" என்றான் சிவராமன்.
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
குறள் 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
பொருள்:
செல்வம் நிலையில்லாத இயல்புடையது. செல்வம் கிடைக்கப் பெற்றால், அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
சிலவற்றை இணைத்திருக்கிறேன். மற்றவைபளை இணைக்கிறேன்.
ReplyDelete