"என்ன செய்யறது? அவர் காலம் முடிஞ்சு போச்சு!"
"எவ்வளவு சுறுசுறுப்பானவரு! நம்ம கம்பெனியில வேலை செய்யறவங்கள்ள பல பேர் அவரை விட வயசில சின்னவங்கதான். ஆனா, அவர் வேகத்துக்கு யாராலயும் ஈடு கொடுக்க முடியலியே!"
"இனிமே கம்பெனி என்ன ஆகுமோ!"
"ஏன்? அவர் இவ்வளவு பெரிசா வளர்த்து வச்சிருக்காரு, அவர் பையன் பாத்துக்க மாட்டாரா என்ன?"
"பாக்கலாம். என்ன ஆகப் போகுதோ!"
சோமசேகர் இறந்து இரண்டு வாரங்களுக்குப் பின், அவருடைய ஒரே மகன் பூபதி, நிறுவனத்தின் ஆடிட்டர் சபாபதியைப் பார்க்கப் போனான்.
"சார்! நான் இப்பதான் படிப்பை முடிச்சிருக்கேன். இத்தனை வருஷமா அப்பாவோட கம்பெனியைப் பத்தி நான் எதையுமே தெரிஞ்சுக்கல. இனிமே கம்பெனியை நடத்த, நீங்கதான் எனக்கு உதவி செய்யணும்" என்றான்.
"நிச்சயமா!" என்றார் சபாபதி. "ஆமாம் உங்க அப்பாவோட சொத்து விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். உங்க அம்மா பேர்ல ஏதாவது சொத்து இருக்கா?" என்றார்.
"இல்லையே! எல்லாமே அப்பா பேர்லதான். என் அம்மா கூட விளையாட்டா சொல்லுவாங்க, ஒரு நாள் உங்கப்பா நம்ப ரெண்டு பேரையும் வீட்டை விட்டு விரட்டிட்டா, நாம நடுத்தெருவிலதான் நிக்கணும்னு. ஆமாம், எதுக்குக் கேக்கறீங்க?"
"ஒண்ணுமில்ல. உங்கப்பா ஒரு அருமையான பிசினஸ்மேன். சின்னதா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு, 20 வருஷத்திலே அதை இவ்வளவு பெரிசா ஆக்கினது அவரோட சாதனை. அடுத்த 10 வருஷத்துல என்ன செய்யணும்னு கூட திட்டம் போட்டு வச்சிருக்காரு! பாங்க்ல எல்லாம் அவர் மேல நம்பிக்கை வச்சு, அவர் கேட்டபோதெல்லாம் கேட்ட தொகையைக் கடன் கொடுப்பாங்க. அவரும் கடன் வட்டி எல்லாத்தையும் சரியாக் கட்டிடுவாரு."
"கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு, சார்!" என்றான் பூபதி.
"ஆனா, அவர் மேல அவங்க அவ்வளவு நம்பிக்கை வச்சு ஏராளமாக் கடன் கொடுத்ததே இப்ப ஒரு பிரச்னை ஆயிடுச்சு" என்றார் சபாபதி.
"என்ன சார் சொல்றீங்க?"
"உங்கப்பா நடத்தின நிறுவனத்துக்குத்தான் பாங்க்ல கடன் கொடுத்தாங்கன்னாலும், அவங்க கடன் கொடுத்தது உங்கப்பாவை நம்பித்தான்."
"அதனால?" என்றான் பூபதி, சற்றுக் கவலையுடன்.
"இந்த நிறுவனத்தை உன் அப்பா ஒரு தனி ஆளாத்தான் நடத்திக்கிட்டு வந்திருக்காரு. அவருக்கு அடுத்த நிலையில இதை நடத்தறதுக்கு அவர் யாரையும் உருவாக்கல. அதோட, நீண்ட காலத் திட்டமெல்லாம் போட்டு நிறையக் கடன் வாங்கி இருக்காரு. அதனால பாங்க்ல இப்ப அந்தக் கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்கச் சொல்றாங்க. உன் அப்பா இறந்த அடுத்த நாளிலிருந்தே, எங்கிட்ட இதை பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்க! நான்தான் அவங்களைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னேன்" என்றார் சபாபதி.
"இப்ப நான் இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தறேன்னா, கடன்களைத் தொடருவாங்க இல்ல?"
சபாபதி தலையைப் பக்கவாட்டில் ஆட்டினார். "அதைத்தான் சொல்ல வந்தேன். பாங்க்கைப் பொருத்தவரை, அவங்க கடன் கொடுத்தது உன் அப்பாவுக்குத்தான். அவர் போனப்பறம், அவரோட நிறுவனத்துக்கு அவங்க இந்தக் கடனைத் தொடர விரும்பல" என்றார், தொடர்ந்து.
"பரவாயில்ல, சார்! கம்பெனியோட சொத்துக்களை வித்துக் கடனையெல்லாம் அடைக்க ஏற்பாடு செஞ்சுடுங்க. நான் ஏதாவது வேலைக்குப் போய்க்கறேன்" என்றான் பூபதி.
சபாபதி ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "அது அவ்வளவு சுலபம் இல்ல, பூபதி. நிறுவனத்துக்குன்னு உன் அப்பா எந்த சொத்தும் வாங்கல. தொழிற்சாலை, ஆஃபீஸ் எல்லாம் வாடகைக் கட்டிடத்திலதான் இயங்கிக்கிட்டு இருக்கு. நான் எத்தனையோ தடவை அவர்கிட்ட சொன்னேன், தொழிற்சாலைக்கும் ஆஃபீசுக்கும் சொந்தக் கட்டிடம் வாங்குங்க சார், அதுக்கெல்லாம் விலை மதிப்புக் கூடும்னு. நிலத்திலேயும், கட்டிடத்திலேயும் முதலீடு செய்யறதைத் தொழில்ல முதலீடு செஞ்சா, இன்னும் அதிக லாபம் கிடைக்குமேன்னு அவர் சொல்லிட்டாரு."
"அப்ப, நிறைய லாபம் சம்பாதிச்சிருப்பாரு இல்ல?"
"சம்பாதிச்ச லாபத்தையெல்லாம் மறுபடி தொழில்லேயே முதலீடு செஞ்சு, புதுசா இயந்திரங்கள், ஸ்டாக்னு வாங்கிப் போட்டாரு. அதையெல்லாம் வித்தா, அதிகமாப் பணம் வராது."
"அப்படின்னா?"
சபாபதி மீண்டும் சிறிது நேர மௌனத்துக்குப் பின், "நிறுவனத்துக்குன்னு சொத்து எதுவும் இல்லாததால, உன் அப்பா உங்க வீட்டைத்தான் பாங்க்ல செக்யூரிட்டியாக் கொடுத்திருக்காரு" என்றார்.
"சார்! அப்படின்னா, எங்க வீடு கூடப் போயிடுமா?" என்றான் பூபதி, அதிர்ச்சியுடன்.
"எனக்கே வருத்தமாத்தான் இருக்கு. அதனாலதான், உங்கம்மாவுக்குன்னு தனியா சொத்து ஏதாவது இருக்கான்னு கேட்டேன். உங்கப்பா இருந்திருந்தார்னா, பிசினஸ் சிறப்பாப் போய்க்கிட்டிருக்கும். அவர் அதற்கான திட்டமெல்லாம் பிரமாதமாப் போட்டு வச்சிருந்தாரு. அவரோட திடீர் மரணத்தினால, எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. நிறுவனத்துக்காக இவ்வளவு திட்டமெல்லாம் போட்டவர், தன்னோட வாழ்க்கையைப் பத்தி நினைக்காம இருந்துட்டாரு. இன்ஷ்யூரன்ஸ் கூட அதிகமா எடுத்துக்கல. எனக்கு எதுக்கு அதெல்லாம்னுட்டாரு. .."
சபாபதி சொன்ன விஷயத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உட்கார்ந்திருந்தான் பூபதி.
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
பொருள்:
அறியாதவர்கள் தங்கள் வாழ்க்கையின் தன்மை பற்றி ஆராய்ந்து அறிய மாட்டார்கள். ஆனால், அவர்கள் வீணாகச் சிந்திக்கும் விஷயங்களின் எண்ணிக்கை ஒரு கோடி அல்ல, அதற்கு மேல்.
No comments:
Post a Comment