![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqAiu_f0fKaKSWKXbtpYlc45zivxghejISSXaXdiJt1Brrkkrk4fVxd-O-IeWHV7fO2AHTWBXRx-hYX0eCLcMM37z_83hyphenhyphen8WaWRFcFZedM65k_FXd8UXqidZW89Rko52eJ_iWA2bBSPpk/s400/download+%252815%2529.png)
"நீ பொழைச்சுக் கிடந்தாலா, பார்வதி அத்தை பொழைச்சுக் கிடந்தாலா?" என்றேன் நான்.
"என்னடா அமங்கலமாப் பேசற? அவங்களுக்கு உடம்பு குணமாகி ரொம்ப நாள் இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிட்டிருக்கேன் நான்!" என்றாள் அம்மா, படபடப்புடன்.
"நீதானேம்மா வார்த்தைக்கு வார்த்தை பொழைச்சுக் கிடந்தான்னு சொல்ற?"
"நான் சொல்றது பழக்கத்தால. எங்கம்மா எப்பவும் அப்படி சொல்லிக்கிட்டிருப்பாங்க. அதைக் கேட்டு எனக்கும் பழக்கமாயிடுச்சு!" என்றார் அம்மா.
அம்மா சொன்னது போல், அப்படிச் சொல்வது அவருக்கு ஒரு பழக்கமாகத்தான் ஆகி இருந்தது.
"நாளைக்கு வெள்ளிக்கிழமை. பொழைச்சுக் கிடந்தா, எண்ணெய் தேச்சுக்கணும்," "பொழைச்சுக் கிடந்தா, நாளைக்கு உனக்கு டிஃபன் பாக்ஸ்ல தேங்காய் சாதம் போட்டு அனுப்பறேன்" என்பது போல், அடுத்த நாளைப் பற்றிப் பேசும்போதெல்லாம், 'பிழைத்துக் கிடந்தால்' என்ற எச்சரிக்கைச் சொற்றொடரைச் சேர்க்காமல் அவரால் பேசவே முடியாது.
திடீரென்று, அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. ரத்த அழுத்தம் அதிகமாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகும் அவரை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
அம்மா அவரை மிகவும் அக்கறையுடனும், கவனத்துடனும் பார்த்துக் கொண்டார்.
ஒருமுறை, "பொழைச்சுக் கிடந்தா நாளைக்கு..." என்று ஆரம்பித்தவர், சட்டென்று நிறுத்திக் கொண்டார்.
நான் அம்மாவைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், 'பிழைத்துக் கிடந்தால்' என்ற சொற்றொடர் அச்சானியமாக இருக்கும் என்று அவர் நினைத்தது எனக்குப் புரிந்தது.
அதற்குப் பிறகு, 'பிழைத்துக் கிடந்தால்' என்று சொல்வதையே விட்டு விட்டார் அம்மா. பேச்சுக்குப் பேச்சுக்கு அப்படிச் சொல்லி வந்தவர், அதை அடியோடு நிறுத்தியது எனக்கு வியப்பாக இருந்தது. அதே சமயம், அவர் அதைச் சொல்லாமல் தவிர்த்ததே, என் அப்பாவுக்கு எந்த நேரமும் எதுவும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை எனக்கு உள்ளூர ஏற்படுத்தியது.
நான் பொதுவாகக் காலையில் சற்று தாமதமாக எழுபவன். அன்று நான் எழுந்து அப்பாவின் அறைக்குப் போனபோது, அப்பா படுக்கையில் அமர்ந்திருந்தார்.
என்னைப் பார்த்ததும், "உன் அம்மா வாக்கிங் போயிட்டு இன்னும் வரல போலிருக்கு. ம்ம். உன் அம்மா வாக்கிங் போற மாதிரி நான் போயிருந்தா, எனக்கு இந்த உடம்பே வந்திருக்காது!" என்றார் அப்பா.
அப்பாவுக்குக் காலையில் எழுந்ததுமே, தொண்டையைக் காப்பியால் நனைத்துக் கொள்ள வேண்டும். வாக்கிங் போகுமுன், அம்மா டிகாக்ஷன் போட்டு வைத்திருப்பார். அப்பாவுக்கு நானே காப்பி கலந்து எடுத்து வரலாம் என்று நினைத்து, சமையலறைக்குப் போனேன்.
அங்கே டிகாக்ஷன் போட்டு வைக்கப்படவில்லை. சமையலறை முதல் நாள் இரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் சுத்தமாக இருந்தது.
ஒருவிதப் பதட்டத்துடன், அம்மா வழக்கமாகப் படுத்திருக்கும் முன்னறைக்குச் சென்று பார்த்தேன். அம்மா இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை.
அருகில் சென்று, அம்மாவைத் தொட்டுப் பார்த்தேன். பிறகு அசைத்துப் பார்த்தேன். அம்மா உயிருடன் இல்லை என்று புரிந்தது.
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமையைக் கொண்டது இந்த உலகம்.
No comments:
Post a Comment