வைக்கோல் எப்படி இங்கே வந்தது என்று சங்கரன் அருகில் சென்று பார்த்தபோது, அதில் சில பறவை முட்டைகள் இருந்தன.
அருகிலிருந்த மாமரத்தை சங்கரன் நிமிர்ந்து பார்த்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பறவை - குருவி போல், ஆனால் சற்றுப் பெரிதாக இருந்தது அது - அவனைப் பார்த்தது.
"என்னுடைய முட்டைகள்தான், ஒன்றும் செய்து விடாதே!" என்று கேட்கிறதா, அல்லது, "என் முட்டைகளை ஏதாவது செய்தால், உன் கண்ணைக் கொத்தி விடுவேன் ஜாக்கிரதை!" என்று எச்சரிக்கிறதா என்று தெரியவில்லை!
மரத்தில் ஒரு கூடு இருந்ததை சங்கரன் கவனித்தான். அந்தக் கூட்டில் முட்டையிடாமல், ஏன் அந்தப் பறவை இங்கே வந்து வைக்கோல்களைக் கொண்டு வந்து போட்டு அதன் மீது முட்டை இட்டிருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை, முட்டைகள் இங்கே அதிகப் பாதுகாப்பாக இருக்குமென்று நினைத்தோ?
தன் ஐந்து வயது மகன் ராகுலுக்கு இதைக் காட்ட வேண்டும் என்று நினைத்து, 'ராகுல்' என்று அழைக்க நினைத்தவன், சத்தம் போட்டால் பறவை பயந்து விடக் கூடும் என்று நினைத்து, ராகுலைக் கூட்டி வர உள்ளே போனான்.
அறைக்குள் அவன் அப்பா முனகுவது கேட்டது. அவர் அறைக்குள் சென்று பார்த்தான். நோய்வாய்ப்பட்டு, இன்னும் சில தினங்கள்தான் இருப்பார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டு, அவர் மயக்க நிலையிலேயே படுத்திருந்தார். அவ்வப்போது மயக்க நிலையிலேயே ஏதாவது முனகுவார்.
அவன் அப்பாவுக்கு அருகில் அமர்ந்திருந்த அவன் அம்மா, "என்னவோ சொல்றாரு. என்ன சொல்றாருன்னுதான் தெரியல!" என்றாள்.
"மயக்கத்திலே ஏதோ முனகறாரும்மா. இதையெல்லாம் அவர் பேசறார்னு எடுத்துக்க முடியாது" என்று சொல்லி விட்டு, அறையை விட்டு வெளியே வந்தான் சங்கரன். அவன் அம்மா உட்பட வீட்டில் அனைவருமே, ஒரு சில நாட்களில் அவருக்கு நிகழப் போகும் மரணத்தை அறிந்து, மனதளவில் அதற்குத் தயாராகவே இருந்தனர்.
"டேய், ராகுல்! வீட்டுக்குப் பின்னால ஒரு பறவை முட்டை போட்டிருக்கு. போய்ப் பாக்கலாம், சத்தம் போடாம வா!" என்று ராகுலைப் பின்புறம் அழைத்துப் போய்ச் சற்றுத் தள்ளி நின்று அவனுக்குக் காட்டினான் சங்கரன்.
"ஹே, அழகாயிருக்கே! தொட்டுப் பாக்கணும் போலருக்கு! ஆனா உயரத்தில இருக்கு. என்னால் தொட முடியாதே!" என்றான் ராகுல் .
"தொட்டெல்லாம் பாக்கக் கூடாது. நம்ப கை பட்டாலே அது உடைஞ்சுடும். தள்ளி நின்னே பாரு!" என்று எச்சரித்தான் சங்கரன்.
அதற்குப் பிறகு, ராகுல் அடிக்கடி வந்து முட்டைகளை பார்த்துக் கொண்டிருந்தான். சில சமயம், பறவை அந்த முட்டைகள் மீது உட்கார்ந்திருக்கும். சங்கரன் குடும்பத்தினர் தங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள் என்று புரிந்து கொண்டதாலோ என்னவோ, அது அவர்களைப் பார்த்து பயப்படவில்லை.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சங்கரனின் அப்பா இறந்து விட்டார். அவர் அருகில் அமர்ந்து சங்கரனின் அம்மா அழுது கொண்டிருக்க, சங்கரனும், அவன் மனைவியும் மௌனமான சோகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கே வந்த ராகுல், என்ன நடக்கிறதென்று புரியாமல் ஒரு நிமிடம் விழித்து விட்டுப் பிறகு சங்கரனின் கையைப் பிடித்து அழுத்தி, "அப்பா, இங்கே வாயேன்!" என்றான்.
சங்கரன் அவன் பின்னால் சென்றான்.
சங்கரனைப் பின்புறம் அழைத்துச் சென்ற ராகுல், அவனிடம் பரணைக் காட்டி, "அப்பா! ஒரு முட்டை மட்டும் உடைஞ்சிருக்கு பாரு!" என்றான்.
"முட்டைக்குள்ளே இருந்த குஞ்சு, முட்டையை உடைச்சுக்கிட்டு வெளியே வந்துடுச்சு. அதோ பக்கத்திலேயே இருக்கு பாரு!" என்று காட்டினான் சங்கரன்.
"எவ்வளவு அழகா இருக்கு அந்தக் குஞ்சு! மீதி இருக்கற முட்டைகள்ளேந்தும் குஞ்சுகள் வருமா?" என்றான் ராகுல்.
"ஆமாம். ஒவ்வொரு முட்டையையும் உடைச்சுக்கிட்டு, உள்ளேந்து குஞ்சு வெளியில வரும்."
"ஓ!" என்று வியந்த ராகுல், திடீரென்று நினைத்துக் கொண்டவனாக, "ஆமாம், தாத்தாவுக்கு என்ன ஆச்சு? பாட்டி ஏன் அழறாங்க?" என்றான்.
"தாத்தா இறந்து போயிட்டாரு."
"அப்படின்னா?"
"தாத்தா உடம்பிலேந்து உயிர் வெளியில போயிடுச்சு" என்றான் சங்கரன். சொல்லும்போதே அவனுக்குத் தொண்டை கம்மியது.
ராகுல் தந்தை சொல்வது புரியாமல் அவனைப் பார்த்தான்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
பொருள்:
முட்டையைத் தனித்து விட்டு விட்டுப் பறவை பறந்து போவது போல்தான் உடலுக்கும் உறவுக்கும் உள்ள உறவு.
No comments:
Post a Comment