"அப்பா! ஏன் தினமும் இதில ஒரு பேப்பரைக் கிழிக்கற?" என்றான் சிறுவன் ஜகன்.
"இது பேர் காலண்டர். இதில இருக்கறது தேதி. உனக்குத் தேதின்னா தெரியுமே! பள்ளிக்கூடத்தில சொல்லிக் கொடுத்திருக்காங்க இல்ல?" என்றான் ராகவன்.
"ஆமாம்."
"நேத்திக்கு என்ன தேதி, கிழமை சொல்லு, பாக்கலாம்."
"நேத்திக்குத் தேதி 8. வியாழக்கிழமை" என்றான் ஜகன்.
"அப்ப, இன்னிக்குத் தேதி 9 ஆகியிருக்கும் இல்ல? இதில 8 இருந்தது. அதைக் கிழிச்சுட்டேன். இப்ப 9 வந்திருக்கு பாரு!" என்று காட்டினான் ராகவன்.
"நாளையிலேந்து இதை நானே கிழிக்கிறேனே!" என்றான் ஜகன்.
"சரி. காலையில எழுந்ததுமே கிழிச்சுடு."
சில மாதங்கள் கழித்து, "அப்பா! இதில பேப்பர் கொஞ்சம்தான் இருக்கு. எல்லாத்தையும் கிழிச்சு முடிச்சுட்டா, அப்புறம் கிழிக்கறதுக்குத் தேதியே இருக்காதே!" என்றான் ஜகன்.
"எல்லாத் தேதியும் கிழிச்சு முடிச்சுட்டா, இந்த வருஷம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம். அடுத்த வருஷம் புது காலண்டர் வந்துடும்."
"எப்ப வரும்?"
"புது காலண்டர் கடையிலேந்து வாங்கிட்டு வந்துட்டேன். இந்த வருஷம் முடிஞ்சு இதில எல்லா தேதியையும் கிழிச்சு முடிச்சப்பறம், புது காலண்டர்ல தேதி கிழிக்கணும்."
"புது காலண்டர் எங்கே? காட்டு!" என்று ஜெகன் கேட்க, பீரோவில் வைத்திருந்த புதிய காலண்டரை எடுத்துக் காட்டினான் ராகவன்.
ஆவலுடன் அதைக் கையில் எடுத்துப் பார்த்த ஜகன், தேதிகளின் மீது இருந்த வழவழப்பான பிளாஸ்டிக்கைக் கையால் தடவிப் பார்த்தான்.
"ஏம்ப்பா, இதில தேதி எல்லாம் இவ்வளவு குண்டா இருக்கு? இந்த காலண்டர்ல மட்டும் இவ்வளவு ஒல்லியா இருக்கே!"
"இது புது காலண்டர். அதில இன்னும் தேதி கிழிக்கவே ஆரம்பிக்கல. பழைய காலண்டர்ல நிறையத் தேதி கிழிச்சுட்டோம் இல்ல?"
"ஆமாம். நான் தேதி கிழிக்க ஆரம்பிக்கறப்ப, இது கூட குண்டாதான் இருந்தது. இப்பதான் ரொம்ப ஒல்லி ஆயிடுச்சு!" என்ற ஜகன், "அப்ப, புது காலண்டரும் கொஞ்சம் கொஞ்சமா ஒல்லியாயிடுமா?" என்றான், கவலையுடன்.
"ஆமாம். தினம் கொஞ்சம் கொஞ்சமா ஒல்லி ஆகிக்கிட்டே இருக்கும், தினம் நீ கொஞ்சம் கொஞ்சமா பெரியவனா ஆகிக்கிட்டிருக்கியே, அது மாதிரி!"
ஜகன் சென்றதும் புதிய காலண்டரை பீரோவுக்குள் வைத்து பீரோவை மூடினான் ராகவன்.
கையை உயர்த்தி, காலண்டரை மேல் தட்டில் வைத்ததாலோ என்னவோ கை இலேசாக வலிப்பது போல் இருந்தது.
'என்ன, இந்தச் சின்ன வேலை செஞ்சதுக்குக் கூடக் கை வலிக்குது? அவ்வளவு பலவீனமாகவா ஆயிட்டேன்? இருக்கும்! முப்பது வயசு ஆயிடுச்சே! இளமையோட துடிப்பெல்லாம் அடங்க ஆரம்பிச்சுடுச்சோ என்னவோ! ஒவ்வொரு நாளும் இந்த காலண்டர் இளைச்சுக்கிட்டிருக்கிற மாதிரி, நானும் கொஞ்சம் கொஞ்சமா பலவீனமாயிட்டிருக்கேனோ என்னவோ!' என்று நினைத்துக் கொண்டான் ராகவன்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
குறள் 334நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
பொருள்:
வாழ்க்கையை உணர்ந்து பார்த்தால், ஒரு நாள் என்பது நம் ஆயுளை அறுத்துக் கொண்டே இருக்கும் வாள் என்பது புலப்படும்.
No comments:
Post a Comment