About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 10 - இனியவை கூறல்

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 10
இனியவை கூறல்  

91. சொல்லின் செல்வன்
அது முதியோர்களுக்கான கல்வி வகுப்பு. தமிழ்ப் பாடம் நடந்து கொண்டிருந்தது.

"ஐயா, 'சொல்லின் செல்வன்' என்பது யாரைக் குறிக்கும்?" என்று கேட்டார் ஒரு மாணவர்.

"அனுமனைக் குறிக்கும்" என்றார் தமிழ் ஆசிரியர்.

"'சொல்லின் செல்வன்' என்றால் என்ன பொருள்?"

"செல்வம் என்றால் உங்களுக்குத் தெரியும். ஒருவர் சொல்லும் சொற்கள் மதிப்புள்ளவையாக இருந்தால் அவரைச் 'சொல்லின் செல்வன்' என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்."

"அனுமனுக்குச் 'சொல்லின் செல்வன்' என்ற பட்டத்தைக் கொடுத்தவர் யார்?"

"கம்பர்தான் அனுமனைச் 'சொல்லின் செல்வன்' என்று வர்ணிக்கிறார். ஆனால் அனுமனுக்கு இந்தப் பட்டத்தை சீதாப்பிராட்டியே வழங்கியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது."

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"அசோகவனத்தில் சீதையிடம் மூன்று தரப்பினர் உரையாடுகிறார்கள். ஒருவன் ராவணன். இரண்டாவது சீதையைக் காவல் காக்கும் அரக்கிகள். மூன்றாவது அனுமன். இந்த மூவரும் அவரிடம் எப்படிப் பேசுகிறார்கள் என்று பார்ப்போம்.

"அரக்கிகள் சீதையிடம் இருவிதமாகப் பேசுகிறார்கள். ஒரு புறம், நைச்சியமாகப் பேசி அவரை ராவணனை ஏற்றுக் கொள்ளச் செய்ய முயல்கிறார்கள். இது போன்ற பேச்சில் இனிமை இருந்தாலும் உண்மை இல்லை, வஞ்சகம்தான் இருக்கிறது. இன்னொரு புறம், கடுமையான சொற்களால் அவரை பயமுறுத்துகிறார்கள். ராவணனின் இச்சைக்கு இணங்காவிட்டால் ராவணன் சீதையைக் கொன்று விடுவான் என்று மிரட்டுகிறார்கள்.

"ராவணன் சீதையுடன் பேசும்போதும் இதே அணுகுமுறையைத்தான் பயன்படுத்துகிறான். இந்த இரு தரப்பினர் பேச்சிலும் வஞ்சம் இருக்கிறது, கடுஞ்சொற்கள் இருக்கின்றன. அன்பு இல்லை, உண்மை இல்லை. இனிமையாகப் பேசுவது போல் பேசும்போதும் வஞ்சம் உள்ளிருப்பதால் அங்கே இனிமையும் இல்லை.

"மாறாக அனுமன் பேச்சில் இனிமை இருக்கிறது, உண்மை இருக்கிறது. வஞ்சம், கபடம் எதுவும் இல்லை. அனுமன் பேச்சை சீதை மிகவும் பாராட்டியதாக வால்மீகி, கம்பன் இருவருமே குறிப்பிட்டிருக்கின்றனர். எனவேதான் 'சொல்லின் செல்வன்' என்ற பட்டத்தை சீதையே அனுமனுக்கு அளித்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்."

"ஐயா! நீங்களும் 'சொல்லின் செல்வர்தா'ன்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"நாங்கள் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்டால் கூட, எங்களைக் கடிந்து கொள்ளாமல் பொறுமையாகவும், இனிமையாகவும் பதில் சொல்கிறீர்களே, அதனால்தான் அப்படிச் சொன்னேன்.",

"நன்றி. திருவள்ளுவரின் அறிவுரையைப் பின்பற்றினால், நாம் எல்லோருமே 'சொல்லின் செல்வர்'களாக ஆகலாம். உங்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் அன்பு நிறைந்தவையாகவும், வஞ்சம் இல்லாதவையாகவும், உண்மையானவையாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!" என்றார் தமிழாசிரியர்.

குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

பொருள்:
ஒருவர் தான் சொல்ல வரும் செய்தியின் உட்பொருளை உணர்ந்து அதை அன்பு கலந்தும், வஞ்சம் இன்றியும் வெளிப்படுத்தினால் அதுவே இன்சொல் ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


92. கர்ணனும் யுதிஷ்டிரனும்
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஒருமுறை கர்ணன் கிருஷ்ணரைச் சந்திக்க நேர்ந்தது.

"கண்ணா! எனக்கு ஒரு சந்தேகம்." என்றான் கர்ணன்.

"கேள்!" என்றார் கிருஷ்ணர்

"நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

"நீ ஒரு பெரிய வீரன். வில்வித்தையில் சிறந்தவன்."

"அவ்வளவுதானா?"

"வாள் வீச்சு போன்ற பிற  போர்க்கலைகளிலும் வல்லமை பெற்றவன்."

"நான் என் வீரத்தைப் பற்றிக் கேட்கவில்லை.."

"வேறு எதைப் பற்றிக் கேட்கிறாய்?"

"என்னை ஒரு கொடைவள்ளல் என்று எல்லோரும் சொல்கிறார்களே!"

ஓ! அதுவா? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை."

"அப்படியானால் நான் ஒரு வள்ளல் என்று நீ ஒப்புக்கொள்ள மாட்டாயா?"

"நான் எங்கே அப்படிச் சொன்னேன்? நீ கேட்டவர்களுக்குக் கேட்ட பொருட்களை  வழங்குபவன் என்று எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். யார் எது கேட்டாலும் அதைக் கொடுப்பது என்ற ஒரு விரதத்தையே நீ பின்பற்றுவது கூட எனக்குத் தெரியும்."

கர்ணன் மௌனமாக இருந்தான்.

"கர்ணா? உன் குறை என்ன? அதைச் சொல்" என்றார் கிருஷ்ணர்.

"நான் அங்க தேசத்து அரசனாக இருக்கிறேன். என்னிடம் தினம் எத்தனையோ பேர் வந்து பொருட்களைக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். என்னை வள்ளல் என்றும் சொல்கிறார்கள்.....ஆனால்  எங்கேயோ காட்டில் இருக்கும் யுதிஷ்டிரனைத் தேடி தினமும் பலர் தொலைதூரம் நடந்து போகிறார்களே, அது ஏன்?

"எனக்குத் தெரிந்து யுதிஷ்டிரன் அதிகம் பொருட்களை வழங்கியதாகத் தெரியவில்லை. கொடுப்பதற்கு இப்போது அவனிடம் பொருள் எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவன் ஹஸ்தினாபுரத்தில் இளவரசனாக இருந்தபோதும், இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாக இருந்தபோதும் கூட அப்படி ஒன்றும் யாருக்கும் வாரி வழங்கியதாகத் தெரியவில்லை. பின் ஏன் அவனைத் தேடி இத்தனை பேர் போகிறார்கள்?"

"உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாயே கர்ணா!" என்றார் கிருஷ்ணர் சிரித்தபடி.

"புரியவில்லையே கிருஷ்ணா!"

"யுதிஷ்டிரனைத் தேடித் போகிறவர்கள் அவனிடம் பொருட்களை  எதிர்பார்த்துப் போகவில்லை."

"பின் எதற்குப் போகிறார்கள் என்பதுதானே என் கேள்வி?"

"அவனுடைய இனிய சொற்களைக் கேட்பதற்காகப் போகிறார்கள்!"

"என்ன சொல்கிறாய் கண்ணா?"

"கேட்டவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பது என்ற விரதத்தை நீ கடைப்பிடித்து வருவதுபோல், யுதிஷ்டிரனும்  ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறான். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும் என்ற தர்மம்தான் அது. அதனால் அவனிடமிருந்து இனிய சொற்கள் மட்டும்தான் வரும். அந்த இனிய சொற்களைக் கேட்பதற்காகத்தான், இங்கே நகரத்தில் வசிக்கும் மக்கள் அவனைத் தேடிப் போகிறார்கள்."

"நானும் இனிய சொற்களைத்தானே பேசுகிறேன்?"

"அப்படியா? சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றபின், கௌரவர் சபையில், பாண்டவர்களையம், திரௌபதியையும் நீ இழிவாகப் பேசியதெல்லாம் இன்சொற்களா? மாறாக, யுதிஷ்டிரன் தனக்குக்  கொடுமைகள் செய்த துரியோதனனைப் பற்றிக் கூடக் கடிய சொற்களைப்  பயன்படுத்த மாட்டான்."

கர்ணன் மௌனமாக இருந்தான்.

"நீ கடைப்பிடிக்கும் கொடைதர்மத்தை விட, இனிய சொற்களை மட்டுமே பேசுவது என்று உறுதி பூண்டிருக்கும் யுதிஷ்டிரனின் தர்மம் உயர்ந்தது."

குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின்.

பொருள்:
மனமகிழ்ச்சியுடன் பிறருக்குப் பொருள் ஈவதைக் காட்டிலும், முகமகிழ்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவது சிறந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

93. மெல்லப் பேசுங்கள்!
மாதவனுக்கு நீண்ட நாட்களாக ஒரு குறை உண்டு. அவன் பேசினால் யாரும் கவனிப்பதில்லை என்பதுதான் அது.

அலுவலகத்தில் அவன் ஒரு குழுவை வழி நடத்துபவன். அவன் குழுவில் அவனைத் தவிர 5 பேர் இருந்தார்கள். அவ்வப்போது அவர்களிடம் தனித்தனியாகவும், அனைவரையும் கூட்டி வைத்தும் பேச வேண்டி இருந்தது.

அவன் பேசும்போது அவன் குழுவில் சிலர் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அல்லது அவனை இடைவெட்டிப் பேசுவார்கள். அல்லது அவன் பேசும் விஷயத்துக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம் பற்றிக் குறுக்கே பேசுவார்கள்.

அதிகாரத்தினால் அவர்களை மிரட்ட முடியாது என்று அவனுக்குத் தெரியும்.

சில சமயம் அவன் ஒரு குறிப்பிட்ட வேலையைக் குறிப்பிட்ட விதத்தில் செய்யச் சொன்னால், அதைச் சரியாகக் கேட்டுக் கொள்ளாமல் வேறு விதமாகச் செய்வார்கள். கேட்டால் "நீங்க அப்படியா சொன்னீங்க? சாரி" என்பார்கள்.

வேறு வழியின்றி, முக்கியமான செய்திகளை மின்னஞ்சல் மூலம் அனுப்ப ஆரம்பித்தான். தான் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பேசினாலே கேட்கக்கூடிய தூரத்தில் இருப்பவர்களுக்கு, வாயால் சொல்ல வேண்டிய செய்தியை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டியதை நினைக்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் வேறு வழி தெரியவில்லை.

அதற்குப் பிறகு அவன் ஏதாவது சொன்னால் அவர்கள் "மெயில் அனுப்பிடுங்களேன்" என்று பதில் சொல்ல ஆரம்பித்தது அவனுக்கு மேலும் எரிச்சலூட்டியது.

வன் அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த ஒரு ஆலோசகர் இது போன்ற தகவல் தொடர்புப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கொடுப்பார் என்று பெயர் பெற்றிருந்தார். அவரைத் தேடித் சென்றான்.

அவன் தன் பிரச்னையைச் சொல்ல ஆரம்பித்ததுமே அவர் குறுக்கிட்டு, "மாதவன்! உங்கள் பிரச்னை என்னன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு? ஏன் முகத்தை இப்படிக் கடுகடுன்னு வச்சுக்கிட்டிருக்கீங்க?" என்றார்.

"என் மூஞ்சி இயல்பாகவே அப்படித்தான் சார் இருக்கும்!" என்றான் மாதவன் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு.

"இப்ப சிரிச்சீங்களே, அது மாதிரி எப்பவுமே இருக்கப் பழகுங்க."

" எப்படிப் பழகறது?"

அவர் சில பயிற்சிகளைச் சொன்னார். "இது மாதிரி ஒரு மாசம் பிராக்டீஸ் பண்ணுங்க. அப்புறம் உங்க முகத்தில எப்பவுமே இயல்பா ஒரு சிரிப்பு இருக்கும். அப்புறம் உங்க டீம் மெம்பர்ஸ் உங்க பேச்சை கவனிக்க ஆரம்பிப்பாங்க"

ரண்டு மாதம் கழித்து மாதவன் மீண்டும் ஆலோசகரைச் சந்தித்தான். "இப்ப எப்படி இருக்கு?" என்றார் அவர்.

"முன்னை விடப்  பரவாயில்ல. ஆனா இப்பவும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்  அவங்க கவனம் வேற பக்கம் போயிடுது" என்றான் மாதவன்.

"சரி பார்க்கலாம்" என்றவர், தன்னுடைய உதவியாளர்கள் 4 பேரை அழைத்தார். "இவங்கதான் உங்க டீம் மெம்பர்ஸ்ன்னு வச்சுக்கங்க. நீங்க உங்க டீம் மெம்பர்ஸுக்கு, அவங்க செய்ய வேண்டிய வேலையைச் சொல்ற மாதிரி இவங்க கிட்ட சொல்லுங்க" என்றார்.

மாதவன் அவர்களிடம் பேசினான். ஆலோசகர்  சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு கவனித்தார். 15 நிமிடம் கழித்து, "போதும்"என்று சொல்லி, தன் உதவியாளர்களை அவர்கள் இருக்கைகளுக்குப் போகச் சொன்னார்.

"மாதவன்! நான் கவனிச்சதை வச்சு ஒரு விஷயத்தைச் சொல்றேன். நீங்க எதையும் சரியாகச் செய்யணும்னு நினைக்கிறவர். அதனால நீங்க சொல்றதை மத்தவங்க சரியாப் புரிஞ்சுக்கலேன்னா உங்களுக்குக்  கோபம் வருது. உங்க கோபம் உங்க வார்த்தைகள்ள வெளிப்படுது.."

"சார்! நான் இவங்ககிட்ட கோபமா எதுவும் பேசலியே?" என்றான் மாதவன்.

"நீங்க கோபமாப் பேசணும்னு நினைக்கல. ஆனா உங்க பொறுமையின்மையும் கோபமும் உங்களை அறியாம உங்க வார்த்தைகளிலும் உங்க தொனியிலும் வெளிப்படுது. கேக்கறவங்களுக்கு இது பிடிக்காது.  அவங்க காயப்பட்டதா உணர்வாங்க. அதுக்கப்பறம் அவங்களை அறியாமலேயே  உங்க பேச்சை கவனிக்கறதை நிறுத்திடுவாங்க."

"நான் என்ன செய்யணும்?'

"நீங்க ரெண்டு விஷயங்கள்ள உங்களை மாத்திக்க வேண்டியிருக்கு. நீங்க முதல் தடவை வந்தபோதே நான் இந்த மாதிரி ஒரு மாக் செஷன் வச்சு உங்க பிரச்னையை முழுமையாப் புரிஞ்சுக்கிட்டிருக்கணும். அவசரப்பட்டு நீங்க மாத்திக்க வேண்டிய ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு உங்களை அனுப்பிச்சுட்டேன்."

"சார்! நீங்க ஒரு நிபுணர். என்னை விடப்  பெரிய பதவியில இருக்கீங்க. ஆனா நீங்க எங்கிட்ட உங்க தவறைப் பத்திப் பேசறீங்க! "

"இனிமையாப் பேசப் பழகிட்டா, பணிவு தானாவே வந்துடும். அல்லது பணிவா இருக்கப் பழகிக்கிட்டா, பேச்சிலே இனிமை தானா வந்துடும்!"

"கிரேட் சார்!"

"நீங்க என்ன செய்யணும்னு உங்களுக்குத் புரிஞ்சுடுச்சா?"

"எஸ் சார். நீங்க சொன்ன ரெண்டு விஷயங்கள். முகத்தை இனிமையா வச்சுக்கணும். இதுக்கு நான் பழகிக்கிட்டேன். ரெண்டாவது இனிமையாப்  பேசணும். இதையும் பழகிக்கறேன். ரொம்ப நன்றி சார்."

"குட். ஐ திங்க் யூ வில் சக்ஸீட் திஸ் டைம். உங்க பிரச்னை தீரலைன்னா ஒரு மாசம் கழித்து மறுபடி என்னை வந்து பாருங்க."

ஒரு மாதம் கழித்து மாதவன் மீண்டும் ஆலோசகரைப் பார்க்க வந்தான். ஆனால் இந்த முறை அவன் வந்தது அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக!
  
குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்.

பொருள்:
மலர்ந்த முகத்துடன் நோக்கி, மனதிலிருந்து வரும் இன்சொற்களைப் பேசுவதே அறம்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

94. காலை முதல் மாலை வரை
ஆனந்தனுக்கு அன்று பொழுது ஆனந்தமாக விடியவில்லை. காலையில் எழுந்ததுமே அவன் மனைவி சுந்தரி "என்னங்க, பால் திரிஞ்சு போச்சு. வேற பால் வாங்கிட்டு வரீங்களா?" என்றாள்.

பல் கூடத் துலக்காமல் பால் வாங்கக் கிளம்பினான் ஆனந்தன்.  அன்று பார்த்து அருகில் இருந்த கடையில் பால் கிடைக்கவில்லை. சற்று தூரம் நடந்து போய் வாங்கி வந்தான் ஆனந்தன்.

வீட்டுக்கு வந்ததும் மனைவி பொறுமை இழந்தவளாக, "ஏங்க இவ்வளவு நேரம்? எனக்கு காப்பி குடிச்சாதான் வேலையே ஓடும்? நீங்க இவ்வளவு மெதுவா வரீங்க! ஹோட்டல்ல காப்பி குடிச்சுட்டு வாரீங்களா என்ன?" என்றாள்.

"அடாடா! இது எனக்குத் தோணாமல் போயிடுச்சே!" என்றான் ஆனந்தன் சிரித்தபடி.

அவன் பல் துலக்கியதும், காப்பி கொடுத்த மனைவி, "இந்த மாசம் செலவு நிறைய இருக்கு. உங்களுக்கு வேலை எதுவுமே வரலியே!" என்றாள்.

"ஒரு பெயின்டிங் காண்டிராக்ட் கிட்டத்தட்ட முடிவாயிடுச்சு. ரெண்டு மூணு நாள்ள அட்வான்ஸ் கொடுத்துடுவாங்க. கவலைப்படாதே!" என்றான் ஆனந்தன்.

அவன் செல்ஃபோன் ஒலித்தது. "அவருதான்!" என்று சொல்லி விட்டு அறைக்குள் போய்ப் பேசி விட்டு வந்தான்.

"என்ன அட்வான்ஸ் குடுக்கறேன்னாரா?"

"இல்லை. காண்டிராக்ட் இல்லைன்னுட்டாரு!"

"ஏன் அப்படி?"

"ஏதோ காரணம் சொல்றாரு."

"ஆர்டர் கொடுக்கறேன்னு சொல்லிட்டு ஏன் ஏமாத்தினீங்கன்னு அவர்கிட்ட சண்டை போட வேண்டியதுதானே?"

"விடு!"

"எப்படிங்க விடறது? நீங்க அவரை விடு விடுன்னு விட்டிருக்கணும்! இந்த மாசச் செலவுக்கு அந்தப் பணத்தைத்தானே நம்பி இருந்தீங்க?"

"பாக்கலாம்" என்று சிரித்தான் ஆனந்தன்.

"உங்களால எப்படித்தான் சிரிக்க முடியுதோ?" என்றாள் சுந்தரி.

வேறு சில இடங்களில் போய் முயற்சி செய்து விட்டு வருவதாகச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டு ஆனந்தன் வீட்டுக்கு வரும்போது மணி 3 ஆகி விட்டது.

அவன் உள்ளே நுழைந்ததுமே, "என்ன, ஏதாவது ஆர்டர் கெடச்சுதா?" என்றாள் சுந்தரி.

ஆனந்தன் மௌனமாகத் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்..

"சரி. சாப்பிட வாங்க. ரொம்ப நேரமாயிடுச்சு. நான் கூடச் சாப்பிட்டுட்டேன்"

ஆனந்தன் சாப்பிட உட்கார்ந்தான். சுந்தரி பரிமாறத் துவங்கியபோது, பள்ளியிலிருந்து வந்த அவர்கள் மகள் ஆர்த்தி "அம்மா" என்று அழைத்துக்கொண்டே ஒடி வந்து சுந்தரியைக் கட்டித் தழுவ முயன்றாள்.

ஒடி வந்தவள் சாம்பார் பாத்திரத்தைக் கையில் பிடித்தபடி வந்து கொண்டிருந்த சுந்தரியின் மீது மோதியதில் சாம்பார் மொத்தமும் கீழே கொட்டி விட்டது.

"ஏண்டி, இப்படியா கண்மண் தெரியாம ஓடி வருவே?" என்று சுந்தரி மகளைக் கடிந்து கொண்டிருந்தபோதே, ஆனந்தன் எழுந்தான்.

"ஏன் எழுந்துட்டீங்க?" என்றாள் சுந்தரி.

"கீழே கொட்டியிருக்கிற சாம்பாரைத் துடைச்சுட்டு வரேன். ஹால் முழுக்கத் தெறிச்சிருக்கு. உனக்குத் துடைக்கறதுக்குக் கஷ்டமா இருக்கும்" என்ற ஆனந்தன், "ஆர்த்தியை ஒண்ணும் சொல்லாதே! அவ உன் மேல இருக்கிற ஆசையினாலதானே அப்படி ஒடி வந்தா?" என்று சொல்லி விட்டு, மகளின்  கன்னத்தைத் தட்டி, "நல்ல வேளை! ஸ்கூல் யூனிஃபார்ம்ல சாம்பார் படல. போய் டிரஸ் மாத்திக்கிட்டு வா!" என்றான்.

"ஏங்க, சாம்பார் மொத்தமும் கொட்டிப் போச்சே! இன்னிக்குன்னு பாத்து நான் ரசம் கூட வைக்கல!"

"அதனால பரவாயில்லை. மோரும், பொரியலும், ஊறுகாயும் இருக்கே, அது போதும்" என்றான் ஆனந்தன்.

எது நடந்தாலும் கடுமையாகப் பேசாமல் பொறுமையாக இருக்கிற தன் கணவனை கடவுள் ஏன் சோதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி.

சாப்பிட்டு விட்டு ஆனந்தன் சற்று நேரம் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டிருந்தபோது அவன் செல்ஃபோன் அடித்தது. சற்றுத் தள்ளி நாற்காலியில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த சுந்தரி, யாராவது வாடிக்கையாளர் கூப்பிடுகிறாரோ என்ற ஆவலில் அவன் ஃபோனில் பேசுவதை கவனித்தாள்.

ஆனந்தன் எதிர்முனையில் பேசுபவர் சொன்னதைக் கேட்டு விட்டு, "அப்படியா? எனக்குப் பத்தாயிரம் ரூபாய்தான்  லோன் வேணும். கொடுப்பீர்களா?..ஓ...மினிமம் ஒரு லட்ச ரூபாயாய்தான் கொடுப்பீங்களா? ...பரவாயில்லை. தாங்க்ஸ்" என்று சொல்லி ஃபோனை வைத்தான்.

"ஏங்க, நானும் நிறைய தடவை கவனிச்சுருக்கேன். யாராவது ஃபோன் பண்ணி லோன் வேணுமான்னு கேட்டா வேணாம்னு சொல்லாம, ஏன் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமாங்கறீங்க உங்களுக்கு உண்மையிலேயே பத்தாயிரம் ரூபாய் கடன் வேணுமா?"

"இல்லை. லோன் எதுவும் வேணாம்னு சொன்னா அவங்களுக்கு ஏமாத்தமா இருக்கும். அவங்க சின்னத் தொகையெல்லாம் கொடுக்க மாட்டாங்கன்னு தெரியும். அதனால பத்தாயிரம் ரூபாய் தருவீங்களான்னு கேப்பேன். அவங்க 'சாரி. மினிமம் இவ்வளவுதான் கொடுப்போம்'னு சொல்லி வச்சிடுவாங்க. அப்ப அவங்களுக்கு அவ்வளவு ஏமாத்தமா இருக்காது."

"அவங்களுக்கு ஏமாத்தமா இருக்கும்னா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? நமக்கு அனாவசியமான தொந்தரவுதானே இது?"

"அவங்க வேலையே இதுதானே? அவங்களுக்கு உதவ முடியாவிட்டாலும், நம்மளால முடிஞ்ச அளவுக்கு அவங்க ஏமாத்தத்தைக் குறைக்கலாமே!"

"என்னவோ போங்க! யாரோ ஃபோன் பண்ணி உங்களுக்கு வேலை கொடுக்கப் போறாங்களோன்னு  நினைச்சு நான் ஏமாந்துதான் மிச்சம்!'

"கவலைப்படாதே! நீ எதிர்பார்க்கறதும் நடக்கலாமே!"

"பாக்கலாம்!" என்றாள் சுந்தரி நம்பிக்கையில்லாமல்.

மாலையில் சுந்தரி சமையற்கட்டில் இருந்தபோது ஆனந்தனின் ஃபோன் அடித்ததையும் அவன் அதை எடுத்துப் பேசியதையும் கேட்ட சுந்தரி 'யாராவது கிரெடிட்  கார்டு வேணுமான்னு கேப்பாங்க. அவரும் பொறுமையா பதில் சொல்லிக்கிட்டிருப்பாரு' என்று அலுத்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து ஆனந்தன் உள்ளே வந்தான்."போன வாரம் ஒரு ஃபிளாட்டில பெயின்டிங் பண்ணினேனே ஞாபகம் இருக்கா, அவருதான் ஃபோன் பண்ணினாரு. அவர் வீட்டில என் பெயின்டிங் ரொம்ப நல்லா வந்திருக்காம். அதனால அவரோட ஆஃபீஸ் பெயின்டிங் வேலையையும் எனக்கே கொடுக்கிறாராம். அது பெரிய வேலை. இப்பவே அவரோட ஆஃபீசுக்கு வந்து அட்வான்ஸ் வாங்கிக்கிட்டுப் போகச் சொல்றாரு. போயிட்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
  

குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

பொருள்:
எல்லோரிடமும் அவர்களை மகிழ்விக்கும் வகையில் இன்சொல் பேசுபவரைத் துன்பம் விளைவிக்கும் வறுமை அணுகாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


95. வேலையில் முதல் நாள்
புதிதாக வேலையில் சேர்ந்த வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் ஐந்து பேருக்கும் பயிற்சி முடிந்தது. பயிற்சியின் இறுதியில் அவர்களிடம் பேசிய பொது மேலாளர் கடைசியாகச் சொன்னார்.

"இந்த மூன்று நாட்களும் உங்கள் வேலையைப் பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள். நாளையிலிருந்து நீங்கள் அலுவலகத்தில் அமர்ந்து வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பேசி அவர்கள் குறைகளைக் கேட்டு, அவர்கள் தேவைகளை உணர்ந்து அவர்கள் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களைத் திருப்திப்படுத்தப் போகிறீர்கள். 'ஆள் பாதி, ஆடை பாதி' என்பது பழமொழி. வேலைக்கு வரும்போது நீங்கள் அனைவரும் டை கட்டிக் கொண்டு வர வேண்டும். யாருக்காவது டை கட்டிக்கொள்ளத் தெரியாவிட்டால் சொல்லுங்கள். நான் கட்டி விடுகிறேன்."

மெல்லிய சிரிப்பு எழுந்தது.

டுத்த நாள் அலுவலகத்துக்கு வந்த ஐவரில் பரந்தாமன் ஒருவன் மட்டும் டை கட்டிக்கொண்டு வரவில்லை. அவன் உடைகளும் கசங்கியிருந்தன.

"என்னப்பா?" என்றார் கிளை மேலாளர்.

"சார்! ஸ்கூட்டரில் வந்தபோது சின்ன விபத்து. ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்துட்டேன். டை தரையில் பட்டுக் கறையாயிடுச்சு. பாண்ட் சட்டையெல்லாம் கூடக் கசங்கிடுச்சு. அழுக்குப் பட்ட இடங்கள்ள தண்ணி போட்டுத் துடைச்சுக்கிட்டு வந்திருக்கேன். என் வீடு ரொம்ப தூரம். திரும்பவும் வீட்டுக்குப் போய் வேற டிரஸ் போட்டுக்கிட்டு வரத்துக்கு ரொம்ப நேரம் ஆயிடும். இன்னிக்கு ஒரு நாளைக்கு அனுமதி கொடுத்தீங்கன்னா..."

"சரி. போய் வேலையைப் பாரு. சாயந்திரம் ஜி எம் வருவாரு. அவரு என்ன சொல்லப்போறாரோ!" என்றார் கிளை மேலாளர்.

மாலை பொது மேலாளர் வந்தபோது, ஐந்து புதிய அதிகாரிகளும் ஐந்து கவுண்ட்டர்களில் உட்கார்ந்து வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

"கிளை மேலாளரின் அறையில் போய் உட்கார்ந்ததும், "என்ன? எல்லாம் சரியா இருக்கா? புது ஆளுங்க எப்படி இருக்காங்க?" என்றார் பொது மேலாளர்.

"பரவாயில்லை சார்..." என்றார் கிளை மேலாளர், ஒருவர் மட்டும் டை கட்டிக் கொள்ளாமல் வந்திருப்பதை இப்போது சொல்லலாமா அப்புறம் சொல்லலாமா என்று யோசித்தபடி.

"ஏன் ஒரு கவுண்ட்டர்ல மட்டும் கியூ நீளமா இருக்கு?"

"தெரியல சார். காலையில வேலை ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரத்திலிருந்தே அப்படித்தான் இருக்கு. நான் அந்த க்யூவிலே இருந்தவங்க கிட்ட போயி வேற வரிசைக்குப் போங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க 'பரவாயில்லை'ன்னு சொல்லிட்டு அங்கேயே நிக்கறாங்க. அதோட மத்த கியூவிலிருந்தும் ஒண்ணு  ரெண்டு பேர் அந்த நீள கியூவுக்கு வராங்க."

"அந்த வரிசை இருக்கிற கவுண்ட்டர்ல இருக்கற எக்ஸிக்யூடிவ் யாரு?"

"பரந்தாமன். சார்! அவரு.." என்று ஆரம்பித்தார் கிளை மேலாளர்.

"நானே பக்கத்தில போய்ப் பார்க்கிறேன்" என்று எழுந்த பொது மேலாளர்  வெளியே போய் கவுண்ட்டர்களுக்கு அருகில்  நின்று பார்த்தார். கிளை மேலாளரும் அவர் பின்னே போய் நின்று கொண்டார். கியூவில் நின்றவர்கள் அவர்களை மறைத்ததால் கவுண்ட்டருக்குப் பின்னால் அமர்ந்திருந்த வாடிக்கை சேவையாளர் அதிகாரிகளால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.

இரண்டு மூன்று நிமிடம் கழித்து, பொது மேலாளர் கிளை அதிகாரி பின் தொடர அறைக்குத் திரும்பினார்.

"சம்திங் ஆட், இல்லை சம்திங் ஃபன்னி, இல்லை சம்திங் இன்ட்ரஸ்டிங்!"

"சார். அந்த கவுண்ட்டரில் உட்கார்ந்திருக்கிற பரந்தாமன் டை கட்டிக்காததைத்தானே சொல்றீங்க?"

"அவனுக்கு எதுக்கு டை?"

"என்ன சார் சொல்றீங்க?"

"அந்தப் பரந்தாமனை கவனிச்சீங்களா? சிரிச்ச முகத்தோட, பணிவா, பொறுமையா, கோபப்படாம, மத்தவங்களைப் புண்படுத்தாத விதத்தில  கஸ்டமர்கள் கிட்டப் பேசிக்கிட்டிருக்கான். அதை வெளியிலிருந்து பாத்துட்டுதான் அவனோட கவுண்ட்டர்ல நிறைய பேரு நிக்கறாங்க. 'ஆள் பாதி ஆடை பாதி'ன்னு நேத்திக்கு நான்தான் டிரெயினிங்கிலே சொன்னேன். ஆனா அவனோட பணிவும், பதமான பேச்சுமே டையும் சூட்டும் கொடுக்க முடியாத ஒரு பர்சனாலிட்டியை அவனுக்குக் கொடுத்துடுச்சு." என்றார் பொது மேலாளர்.

குறள் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்:  
பணிவுடையவனாகவும், இனிமையாகப் பேசுபவனாகவும் இருப்பதே ஒருவருக்குச் சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்ற அணிகலன்கள் தேவையில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


96. சுப்பையா கொடுத்த புகார்
"வாங்க, என்ன விஷயம்?"

"ஒரு புகார் கொடுக்கணும்."

"யார் மேல?"

"என் தம்பி மேல!"

"என்ன பண்ணினாரு அவரு?"

"என்னைக் கொல்லப் போறேன்னு மிரட்டினான்."

"என்ன தகராறு உங்களுக்குள்ள?"

"வரப்புத் தகராறுதான். என் வயலுக்குள்ள ஒரு அடி தள்ளி அவன் வரப்பைப் போட்டிருக்கான். கேட்டதுக்கு அரிவாளை எடுத்து ஒரே சீவா சீவிடுவேன்னு மிரட்டறான்."

இன்ஸ்பெக்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். "சரி. உங்க பேரு, உங்க தம்பி பேரு, ரெண்டு பேரோட விலாசம் இதெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுங்க. நான் விசாரிக்கிறேன்."

"சார்! நீங்க உடனே அவனைக் கைது பண்ணணும்."

"சாயந்திரம் உங்க தம்பி வீட்டில இருப்பாரா?"

"இருப்பான். சாயந்திரம் எதுக்கு? இப்பவே என்னோட வாங்க. அவன் வீட்டைக் காட்டறேன். நாங்க ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து வீடுதான்."

"சாயந்திரம் வரேன். நீங்களும் வீட்டிலதானே இருப்பீங்க?"

வெளியில் போய் விட்டு மாலை வீட்டுக்கு வந்ததும், சுப்பையா தன்  மனைவியிடம் "பக்கத்து வீட்டுக்குப் போலீஸ்காரங்க யாராவது வந்தாங்களா?" என்றார்.

"போலீஸ்காரங்க யாரும் வரலை. பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு ஒருத்தர் வந்தாரு. ரொம்ப நேரமா உங்க தம்பி வீட்டில உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்காரு."

ஒருவேளை, தான் புகார் கொடுத்திருப்பது தெரிந்து தம்பி முன்ஜாமீன் வாங்குவதற்காக வக்கீல் யாரையாவது வரவழைத்திருப்பானோ?'

சற்று நேரம் கழித்து வாசலில் ஏதோ அரவம் கேட்டது. வாசலில் யாரோ ஒருவர் நின்று கொண்டிருந்தார். 'இவர்தான் தம்பி வீட்டுக்கு வந்தவரோ? இங்கே எதற்கு வந்திருக்கிறார்?'

அருகில் போனதும்தான் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தது.

"சார், நீங்களா? காலையில உங்களை போலீஸ் டிரஸ்ல பார்த்ததால இப்ப சட்டுனு அடையாளம் புரியல."

"உள்ளே வரலாமா?"

"வாங்க சார்!"

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து அமர்ந்ததும், "என் தம்பி வீட்டுக்குப் போயிருந்தீங்களா?" என்றார் சுப்பையா.

"அவருகிட்ட பேசிட்டுத்தான் வரேன்."

"அப்ப அவனை அரெஸ்ட் பண்ணலியா நீங்க?" என்றார் சுப்பையா சற்றுக் கோபத்துடன்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க. ஒத்தர் மீது யாராவது புகார் கொடுத்தா அவங்களை உடனே அரெஸ்ட் பண்ண முடியாது. இப்ப உங்க மேல  உங்க தம்பி புகார் கொடுத்தார்னா நான் உங்களைக் கைது பண்ண முடியுமா?"

"என் மேல புகார் கொடுத்தானா அவன்?" என்றார் சுப்பையா கோபத்துடன்.

"இல்லை. உங்க மேல அவரு ரொம்ப மரியாதை வச்சிருக்காரு. பேச்சுக்குப் பேச்சு எங்க அண்ணன்னுதான் சொல்றாரு."

"ஆனா என்னைக் கொலை பண்ணிடுவேன்னு சொன்னதும் அவன்தான். சாட்சி வேணுமா உங்களுக்கு?"

"சாட்சியெல்லாம் எதுக்கு? அவரே ஒத்துக்கறாரே!"

"அப்ப அவனைக் கைது பண்ணிட வேண்டியதுதானே!"

"கைது பண்ணிடலாம். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டுச் செய்யலாம்னுதான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். அம்மா! குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"

"பாத்தீங்களா? வீட்டுக்கு வந்தவருக்குத் தண்ணி கூடக் கொடுக்கல. காப்பி சாப்பிடுறீங்களா? இல்லை இளநீர் மோர் ஏதாவது?"

"எதுவும் வேணாம் சார். உங்க தம்பி வீட்டில ஒரு தம்ளர் தண்ணி குடிச்சேன். அதனால உங்க வீட்டிலேயும் ஒரு தம்ளர் தண்ணி குடிக்கிறதுதானே முறை?"

சுப்பையாவின் முகத்தில் முதல்முறையாக இலேசான புன்னகை அரும்பியது. "அது சரி. கைது பண்றதுக்கு முன்னால எங்கிட்ட ஏதோ கேக்கணும்னீங்களே, அது எதுக்கு? நான்தான் புகார் கொடுத்திருக்கேனே!"

"அதனாலதான் உங்ககிட்ட கேக்க வேண்டி இருக்கு! ரெண்டு விஷயம். ஒண்ணு உங்க தம்பி கோபத்தில் அப்படிப் பேசிட்டேன்னு சொல்லி அதுக்காக வருத்தப்பட்டாரு. உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கப்  போறதாகவும் சொன்னாரு. நீங்க அவரை மன்னிச்சுட்டீங்கன்னா உங்க புகார் மேல நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்காது!..."

"ரெண்டு விஷயம்னு சொன்னீங்களே! ரெண்டாவது என்ன?"

"இப்ப உங்க தம்பியை நான் கைது செய்யறேன்னு வச்சுக்கங்க. அதனால உங்க வரப்புப் பிரச்னை தீர்ந்துடுமா?"

சுப்பையா மௌனமாக இருந்தார்.

"உங்களுக்கு எது முக்கியம் - வரப்புப் பிரச்னை தீர்றதா, அல்லது உங்க தம்பியைக் கைது பண்றதாங்கிறதை நீங்கதான் தீர்மானிக்கணும்!"

சுப்பையா மீண்டும் மௌனமாக இருந்தார்.

"உங்க அப்பா ஒரு வித்தியாசமான மனுஷர்னு நினைக்கிறேன்" என்றார் இன்ஸ்பெக்டர்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் சுப்பையா.

"இல்லை நீங்க மூத்தவர். உங்களுக்கு சுப்பையான்னு தம்பி முருகன் பேரை வச்சிருக்காரு. உங்க தம்பிக்கு கணேசன்னு அண்ணன் விநாயகர் பேரை வச்சிருக்காரே, அதுதான் கேட்டேன்."

சுப்பையா வாய் விட்டுச் சிரித்தார். "ஆமாம் இதைப் பத்தி முன்னமே சில பேரு எங்கிட்ட சொல்லி இருக்காங்க."

"உங்க அப்பா நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும்னுதான் எதிர்பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்."

"நான் மட்டும் அவன்கிட்ட சண்டை போடணும்னா திரியறேன்? ஏண்டா வரப்பைத் தள்ளிப் போட்டேன்னு கேட்டதுக்கு அவன்தான் என்னை வெட்டிடுவேன்னு சொன்னான்."

"அவருதான் அதுக்கு உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கறேங்கறாரே!"

"மன்னிப்புக் கேட்டா சரியாப் போச்சா? என் வயல்ல ஒரு அடி அகலத்தைப் பூரா  எடுத்துக்கிட்டானே!"

"அதையும் உங்க தம்பிகிட்ட கேட்டேன். மழையில வரப்பு கரைஞ்சு போயிட்டதனால புதுசா வரப்பு போடும்போது தப்பு நடந்திருக்கலாம்னு உங்க தம்பி சொன்னாரு. இது மாதிரி நிறைய பேருக்கு நடந்திருக்காமே! சர்வேயரை வச்சு அளந்து பாத்துக்கலாம்னு சொல்றாரு."

"அப்படிப் பண்ணினா எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை" என்றார் சுப்பையா.

"அப்ப பிரச்னையே இல்லே!  உங்க தம்பி உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கத் தயாரா இருக்காரு. நீங்க சரின்னு சொன்னா அவரு உங்க வீட்டுக்கு வந்து உங்ககிட்ட மன்னிப்புக்  கேட்டுக்கிட்டு, வரப்பைச் சரி பண்றதைப் பத்தியும் பேசுவாரு."

சுப்பையா மௌனமாக இருந்தார்.

"என்னய்யா யோசிக்கிறீங்க? இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கா உங்களுக்கு?"

"ஒரே ஒரு சந்தேகம்தான். பொதுவா போலீஸ்காரங்கன்னா ரொம்பக் கடுமையாப் பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்ககிட்ட புகார் கொடுக்க வரும்போதே தயக்கத்தோடதான் வந்தேன். ஆனா நீங்க இவ்வளவு பொறுமையா, சாந்தமாப் பேசி  எங்க பிரச்னையை முடிச்சு வச்சுட்டீங்களே அது எப்படின்னுதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்!"

குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.

பொருள்:  
நன்மை நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இனிமையாகப் பேசப்படும் வார்த்தைகளால் விரும்பத்தகாத விளைவுகள் தவிர்க்கப்பட்டு நற்செயல்கள் பெருகும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


97. அரவிந்தனின் அனுபவம்
அரவிந்தன் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் ஒரு பியூன் அவனை நந்தி போல் இடைமறித்தான்.

"என்ன வேணும்?"

"டைரக்டரைப் பாக்கணும்."

"அதெல்லாம் பார்க்க முடியாது."

இதற்கு என்ன பதில் சொல்வதென்று அரவிந்தனுக்குத்  தெரியவில்லை. ஒரு நிமிடம் பேசாமல் நின்றான்.

"எஸ் ஓவைப் போய்ப் பாரு" என்றான் பியூன் 'போனால் போகிறது' என்பது போல்.

"தாங்க்ஸ்" என்று சொல்லி விட்டு அரவிந்தன் உள்ளே போனான்.

செக்‌ஷன் ஆஃபிஸர் என்ற செவ்வகப் பலகை வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜைக்குப் பின்னால் ஒருவர் அதிகார தோரணையுடன் அமர்ந்திருந்தார். மேஜைக்குப் பக்கத்தில் இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.

பணிவுடனும், கவலையுடனும் நின்று கொண்டிருந்தவர்கள் அந்த அலுவலகத்துக்கு ஏதோ ஒரு நோக்கத்துக்காக வந்தவர்கள் என்றும், அலட்சியமாகக் கையில் ஒரு பேப்பருடன் நின்றிருந்தவர் அலுவலக ஊழியர் என்றும் அரவிந்தன் ஊகித்தான்.

இரண்டு மூன்று நிமிடங்கள் நின்ற பிறகும் செக்‌ஷன் ஆஃபீஸர் அவனை கவனித்ததாகத் தெரியவில்லை.

அவன் "சார்" என்றதும் அவனைப் பார்க்காமலேயே 'கொஞ்சம் இரு' என்பது போல் கையால் சைகை காட்டி விட்டு, எதிரில் இருந்தவர்களிடம் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அருகில் நின்ற ஊழியர் அதை ரசிப்பது போல் புன்னகை செய்து கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டு நிமிடங்கள் ஆனதும் அரவிந்தன் மீண்டும் "சார்!" என்றான்.

எஸ் ஓ இப்போது முகத்தை இன்னும் கடுமையாக்கிக் கொண்டு அவனிடம் திரும்பினார். "ஏம்ப்பா பேசிக்கிட்டிருக்கேனே தெரியல? நீயெல்லாம் படிச்சவன்தானே? அறிவு வேண்டாம்?" என்று எரிந்து விழுந்தார்.

அரவிந்தன் மௌனமாகத் தன் கையிலிருந்த கடிதத்தை அவர் முன் நீட்டினான்.

அவர் அதைப் பார்க்காமலேயே, பியூனிடம் "ஏம்ப்பா தண்டபாணி! இவரையெல்லாம் ஏன் எங்கிட்ட அனுப்பற? எனக்கு ஆயிரம் வேலை இருக்கு" என்றார்.

"இல்லை சார். டைரக்டரைப் பாக்கணும்னாரு..."

"அப்ப டைரக்டர் கிட்ட அனுப்ப வேண்டியதுதானே! அவரோட தலைவலியையும் நான்தான் அனுபவிக்கணுமா?"

பியூன் அரவிந்தனிடம் சற்று உள்ளே தள்ளியிருந்த அறையைக் காட்டி "அந்த ரூம்தான் போ!" என்றான்.

ந்து நிமிடங்கள் கழித்து அரவிந்தன் டைரக்டரின் அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவனுடன் டைரக்டரும் வந்தார். செக்‌ஷன் ஆஃபீஸரின் அருகில் அவர்கள் வந்தபோது செக்‌ஷன் ஆஃபீஸர் எழுந்து நின்றார்.

"மிஸ்டர் சண்முகநாதன்! இவர் அரவிந்தன். நம்ப ஆஃபீஸ்ல அசிஸ்டண்ட் டைரக்டரா ஜாயின் பண்ணி இருக்காரு. யூ பி எஸ் சி பரீட்சை எழுதி செலக்ட் ஆயிருக்காரு" என்றார்.

"சாரி சார்! வெல்கம் சார்!" என்றார் சண்முகநாதன்.

அரவிந்தன் சிரித்துக்கொண்டே அவருடன் கை குலுக்கினான்.

"வாங்க சார். உங்க ரூமைக் காட்டறேன்" என்றார் சண்முகநாதன்.

டைரக்டர் தன் அறைக்குச் செல்ல, சண்முகநாதன் அரவிந்தனை அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

அரவிந்தன் சீட்டில் உட்கார்ந்ததும், சண்முகநாதன் "சாரி சார். நீங்க என்னோட மேலதிகாரி. நீங்க யார்னு தெரியாம உங்ககிட்ட தப்பாப் பேசிட்டேன்" என்றார்.

"முதல்ல உக்காருங்க" என்றான் அரவிந்தன்.

அவரிடம் சற்று நேரம் அந்த அலுவலக நடைமுறைகளைப் பற்றிக் கேட்டறிந்தான்.

அவர் எழுந்து செல்லும்போது மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டார்.

"சார்! நீங்க என்னை விட வயசுல பெரியவரு. அதிக அனுபவம் உள்ளவரு. நான் யார்னு தெரியாமத்தான் பேசினீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியும். ஆனா நம்ம ஆஃபீசுக்கு வரவங்க எல்லார்கிட்டயும் நீங்க சுமுகமாப் பேசினா, இந்த மாதிரி எப்பவுமே நடக்காதே!"

சண்முகநாதன் எதுவும் சொல்லாமல் வெளியே போனார். 'இந்தச் சின்னப்பய எனக்கு புத்தி சொல்ல வந்துட்டான்' என்று நினைத்துக்கொண்டாரோ அல்லது அவன் சொன்னதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பாரோ தெரியாது!

அவர் வெளியே சென்றதும் பியூன் தண்டபாணி உள்ளே வந்தான்.

"வாங்க தண்டபாணி!" என்றான் அரவிந்தன்.

"சார்! நீங்க யார்னு தெரியாம..." என்று ஆரம்பித்தான்.

"விட்டுத் தள்ளுங்க" என்ற அரவிந்தன் "நம்ம ஸ்டாஃப் எல்லாரையும் ஒவ்வொத்தரா வரச் சொல்லுங்க.அவங்களை நான் அறிமுகம் செஞ்சுக்கணும்" என்றான்.

"சரி சார்!" என்று சொல்லி விட்டு வெளியே போகத் திரும்பிய தண்டபாணி, திரும்பி வந்து "சார்! இந்த ஆஃபீஸ்ல என்னை வாங்க போங்கன்னு கூப்பிட்டவரு நீங்க ஒத்தர்தான்" என்றான்.

"எல்லார்கிட்டயும் - இந்த ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க, இந்த ஆஃபீசுக்கு வரவங்க எல்லார்கிட்டயும் - மரியாதையா, இனிமையா, பண்பாப் பேசிப் பாருங்க. எல்லாருமே உங்களுக்கு மரியாதை கொடுப்பாங்க" என்றான் அரவிந்தன்.

குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்:  
பிறருக்குப் பயன்படக் கூடிய விதத்தில் பண்போடு பேசப்படும் வார்த்தைகள் நன்மையை விளைவித்து நன்றி உணர்வை ஏற்படுத்தும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


98. சாந்தமூர்த்தியின் கோபம்!
உபன்யாசம் முடிந்ததும், நாராயணனைப் பலர் சூழ்ந்து கொண்டனர். இது வழக்கமாக நடப்பதுதான்.

"ரொம்ப நன்னா இருந்தது சுவாமி" என்று பாராட்டுபவர்களிடமிருந்து, புத்திசாலித்தனமான சந்தேகங்கள் கேட்பவர்கள் வரை தினமும் ஒரு பத்துப் பதினைந்து பேரின் பேச்சுக்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, தேவைப்பட்டால் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு மேடையை விட்டு அவர் இறங்கப் பதினைந்து நிமிடங்களாவது ஆகி விடும்.

அன்றும் அப்படித்தான். ஆனால் எல்லோரும் போன பிறகு, மேடை ஓரமாக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார்.

"சொல்லுங்கோ!" என்றார் நாராயணன்.

"உங்ககிட்ட கொஞ்ச நேரம் தனியாப் பேசணும். இப்ப பேசினா உங்களுக்கு நேரமாயிடும்னு நினைக்கிறேன். உங்களை எங்க வந்து பாக்கலாம்?" என்றார் அவர்.

"இப்பவே பேசலாமே. உங்களுக்குத் தனியாப் பேசணும்னா ரூமுக்குள்ள போய்ப் பேசலாம்" என்று அவரை மேடைக்குப் பின்னால் அழைத்துச் சென்றார் நாராயணன்.

உள்ளே போய் உட்கார்ந்ததும், "சாமிக்கு நல்ல ஞானம்.." என்று ஆரம்பித்தார் அவர்.

"என்னை சாமின்னெல்லாம் சொல்லாதீங்க. நான் ஒரு சாதாரண மனுஷன். வயத்துப் பொழப்புக்காக அரசாங்கத்தில வேலை செய்யறேன். சாயந்திர நேரத்தில நான் படிச்சும், கேட்டும் தெரிஞ்சுண்ட விஷயங்களை பகிர்ந்துக்கறேன். அவ்வளவுதான். நீங்க ஒரு பெரிய மனுஷர் மாதிரி இருக்கீங்க. ஆனா இவ்வளவு பணிவாப் பேசறீங்க. உங்களைத்தான் நான் ஸ்வாமின்னு கூப்பிடணும்!" என்றார் நாராயணன்.

"உங்களை மாதிரி எனக்குப் பணிவா, பதவிசாப் பேச வரலே சாமி. நான் ரொம்ப கோவக்காரன்."

"சுவாமிங்கற வார்த்தை வேண்டாம். என்னை நீங்க சார்னே கூப்பிடலாம். பொதுவா நாம அப்படித்தானே பேசிக்கிறோம்! நீங்க கோவக்காரர்னு சொன்னீங்க. உங்க பேர் என்னன்னு கேட்டா நீங்க கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"என் பேரு சாந்தமூர்த்தின்னு சொன்னா நீங்க சிரிக்க மாட்டீங்களே!" என்றார் சாந்தமூர்த்தி சிரித்துக்கொண்டே.

"உங்களால கோபப்படவே முடியாதுன்னு நான் நினைக்கிறேன்" என்றார் நாராயணன்.

"நான் ஒரு தொழிற்சாலையை நடத்திக்கிட்டிருக்கேன். எங்கிட்ட நூறு பேரு வேலை செய்யறாங்க. ஏதாவது தப்பு நடந்தா எனக்கு ரொம்பக் கோவம் வந்துடும். எங்கிட்ட வேலை செய்யறவங்களைக் கண்டபடி பேசிடுவேன். மானேஜர்லேருந்து கீழ்மட்டத் தொழிலாளி வரையிலும் எல்லார்கிட்டயும் கோபப்பட்டிருக்கேன். அதனால சில நல்ல ஆட்கள் என்னை விட்டுப் போயிட்டாங்க. சில சமயம் கஸ்டமர்கள்கிட்டக் கூடக் கடுமையாப் பேசி, சில வியாபார வாய்ப்புகளை இழந்திருக்கேன்."

"இவ்வளவு அமைதியாப் பேசறவர் ஒரு கோபக்காரர்னு என்னால நம்ப முடியல. சரி. இதுக்கு நான் என்ன செய்யணும்? நான் விதுர நீதி, தர்மோபதேசம் இது மாதிரி ஏதாவது சொன்னா நீங்க மாறிடுவீங்களா?"

"உடனே மாற முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா உங்க உபன்யாசத்தை அடிக்கடி கேட்டா காலப்போக்கில் மாற்றம் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு."

"ரொம்ப சந்தோஷம். ஆனா நீங்க எங்கிட்ட வேற ஏதோ கேக்க வந்தீங்கன்னு நினைக்கிறேன்."

"ஆமாம். ஒரு சந்தேகம்தான். ஆனா இதை எல்லார் முன்னாலயும் கேக்க விரும்பல. நீங்க ஒரு பதில் சொல்ல, நான் மறுபடியும் கேள்வி கேக்க, நான் பொறுமையிழந்து உங்ககிட்டக் கோவமாப் பேசிடுவேனோன்னு பயந்துதான் உங்ககிட்டத் தனியாய் பேச நினைச்சேன்."

"இவ்வளவு முன் யோசனையோடு செயல்படற உங்களால உங்க கோபத்தைக் கண்டிப்பாக்  கட்டுப்படுத்திக்க முடியும்."

"முன்யோசனையோட செயல்படறது  என்னோட வியாபார அனுபவத்தினால் வந்தது. ஆனா எனக்கு எப்ப கோவம் வரும்னு எனக்கே தெரியாது. நான் சொல்றதை நீங்க மறுத்துப் பேசினா கூட, எனக்குக் கோவம் வரலாம். சரி. நான் கேக்க வந்த சந்தேகம் இதுதான். இன்னிக்கு உங்க உபன்யாசத்தில ஒரு விஷயம் சொன்னீங்க. மத்தவங்களைக் கடுமையாப் பேசினா அதனால நமக்குப் பல இழப்புகள் ஏற்படும். அதோட நாம செஞ்ச புண்ணியத்தினால நமக்கு கிடைக்கக் கூடிய மோட்சம் கூடக் கிடைக்காமப் போகும்னு சொன்னீங்க."

"ஆமாம். மத்தவங்க மனசைக் காயப்படுத்தற மாதிரி பேசறது மிகப் பெரிய பாவம். அது நாம பண்ற புண்ணியங்களோட பலன்களைக் கூட நமக்குக் கிடைக்காம பண்ணிடும். சாஸ்திரங்கள்ள அப்படித்தான் சொல்லியிருக்கு. அதில என்ன சந்தேகம் உங்களுக்கு?"

"இதோட லாஜிக் எனக்குப் புரியல. நான் ஒரு கஸ்டமர் கிட்ட அவர் மனம் புண்படும்படியாப் பேசிடறேன். அதனால அவர்கிட்டேயிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய வியாபாரம் எனக்கு கிடைக்காமப் போயிடுது. இது எனக்கு ஒரு இழப்பு. நான் கடுமையாப் பேசினதோட  பலனை நான் அனுபவிச்சுட்டேன். அப்புறம் இது ஏன் என்னோட புண்ணியத்தை பாதிக்கணும்? ஒரு தப்புக்கு ரெண்டு தடவை தண்டனையா?"

நாராயணன் கொஞ்சம் யோசித்தார்.

 "உங்க ஃபேக்டரில எப்பவாவது ஸ்ட்ரைக் நடந்திருக்கா?"

"ஃபேக்டரின்னா ஸ்ட்ரைக் இல்லாம இருக்குமா? ஒரு தடவை நடந்திருக்கு."

"ஸ்ட்ரைக் பண்ணின நாட்களுக்கு நீங்க சம்பளம் கட் பண்ணிட்டீங்க இல்ல?"

"பின்னே? சம்பளத்தோட லீவுன்னு உண்டு! சம்பளத்தோட ஸ்ட்ரைக்னு உண்டா என்ன?"

"ஸ்ட்ரைக் பண்ணினவங்களுக்கு வேற ஏதாவது பனிஷ்மென்ட் கொடுத்தீங்களா?"

"ரெண்டு பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டேன். மீதி பேருக்கெல்லாம் ஒரு வருஷம் இன்க்ரிமெண்ட் கட் பண்ணிட்டேன்."

"ஸ்ட்ரைக் பண்ணினத்துக்கு தண்டனையா அவங்க சம்பளத்தை இழந்தாங்க. சரி. ஏன் அவங்களுக்கு வேலை போகணும், இன்க்ரிமெண்ட் போகணும்?"

சாந்தமூர்த்தி யோசித்தார்.

"எல்லாச் செயல்களுக்கும் உடனடிப் பலன், நீண்டகாலப் பலன்னு ரெண்டு உண்டு. ஒரு விபத்தில் காயம் பட்டா, அந்தக் காயம் சில நாள் இருக்கும். அப்புறம் ஆறிடும். ஆனா அந்த விபத்தினால நம்ம உடம்புக்கு வேற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அது நமக்கு ரொம்ப நாள் கழிச்சுத்தான் தெரியும். மத்தவங்களை சுடுசொற்களால காயப்படுத்தினா அவங்களோட அதிருப்தி, அதனால நமக்கு ஏற்படற பாதிப்புகள் இவை உடனடிப்பலன். நாம செய்யற புண்ணியத்தோட பலனை நாம இழக்கறது நீண்ட காலப் பலன். இப்ப லாஜிக் சரியா இருக்கா?" என்றார் நாராயணன்.

சாந்தமூர்த்தி சற்று நேரம் யோசித்து விட்டு, "சரி. இப்ப இதோட மறு பக்கத்தை எடுத்துப்போம். நாம மத்தவங்ககிட்ட இனிமையாய் பேசினா அதனால நமக்கு உடனடிப் பலன் கிடைக்கறதோட நீண்ட காலப் பலனும் கிடைக்கும்னு சொல்லலாமா?"

"நிச்சயமா?"

"அது என்ன பலனா இருக்கும்?"

"இம்மையில அதாவது இந்த உலகத்தில நமக்கு இன்பம் கிடைக்கிறது   உடனடிப்பலன்.  மறுமையிலும் அதாவது மோட்ச உலகத்திலும் நமக்கு இன்பம் கிடைக்கிறது நீண்டகாலப் பலன்" என்றார் நாராயணன்.

குறள் 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்:
சிறுமை இல்லாத இனிய சொல் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் நமக்கு இன்பம் பயக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


99. ஜிராக்ஸ் கடை 
காலையில் எழுந்ததுமே ராமநாதனை எரிச்சலூட்டும் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன.

தினமும் அவர் பேப்பர் படிக்கத் துவங்கும்போதே காப்பி வந்து விடும். ஆனால் இன்று அவர் பேப்பர் படித்து முடித்த பிறகும் காப்பி வரவில்லை.

"நான் எழுந்து இவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஒரு வாய்க் காப்பிக்கு வழியில்லை!" என்று கத்தினார் பேப்பரைத் தூக்கிப் போட்டபடியே.

"டிகாக்‌ஷன் இறங்கவே இல்லை. நான் என்ன செய்யறது?" என்றாள் அவர் மனைவி பொன்னம்மாள். சற்று நேரம் கழித்துக் காப்பியைக் கொண்டு வைத்தவள், "கோவமாப் பேசறதைக் கொஞ்சம் குறைச்சுக்கங்க" என்றாள்.

"காப்பியை இவ்வளவு நேரம் கழிச்சுப் போட்டுட்டு எனக்கு உபதேசம் வேறயா?" என்று பாய்ந்தார் ராமநாதன்.

பொன்னம்மாள் ஒன்றும் பேசாமல் உள்ளே போய் விட்டாள். அவள் சொன்னதைக் கேட்டு விட்டு பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவருக்கு தாமதமாகத்தான் தோன்றியது.

அலுவலகத்திலும் பல எரிச்சலூட்டும் சம்பவங்கள். அவருக்குக் கீழே பணியாற்றியவர்களை வார்த்தைகளால் பொரிந்து தள்ளி விட்டார்.

"தப்பித் தவறி உள்ளே போயிடாதே. மனுஷன் கடிச்சுக் குதறிடுவாரு" என்று அவரது உதவியாளர் இன்னொருவரிடம் சொன்னது அவருக்குத் தெரியாது!

மாலை வீடு வந்த பிறகும் எரிச்சலுடன்தான் இருந்தார்.

"ஆஃபீஸ்ல இன்னிக்கு எல்லார் மேலயும் எரிஞ்சு விழுந்தீங்களா?" என்றாள் மனைவி.

"டென்ஷன் இருந்தா கோவம் வரத்தான் செய்யும். உனக்கு என்ன தெரியும்?"

"என்ன கோவமா இருந்தாலும் பேச்சிலே கடுமையைக் குறைச்சுக்கலாம் இல்லியா?"

"நீ எனக்கு புத்தி சொல்ற அளவுக்கு நான் இல்ல. போய் வேலையைப் பாரு."

சற்று நேரம் கழித்து "வெளியில போயிட்டு வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் ராமநாதன். ஜிராக்ஸ் எடுக்க அருகில் இருக்கும் கடைக்குத்தான் போனார். வேண்டுமென்றேதான் மனைவியிடம் சொல்லவில்லை. 

'எங்கே போறீங்க?' என்று அவள் கேட்க மாட்டாள். எங்கே போயிருக்கிறார், எப்போது வருவார் என்று தெரியாமல் கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருக்கட்டும்!

ஜிராக்ஸ் கடையை நடத்தி வந்த இளைஞன், தான் ஒருவனாகவே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். ஜிராக்ஸ், லாமினேஷன் போன்ற பணிகள் செய்வதைத் தவிர, பேனா போன்ற சில பொருட்களையும் விற்பனை செய்து வந்தான்.

பேனா, பென்சில், பேப்பர் என்று பல்வேறு பொருட்களை வாங்க வந்தவர்கள் சிலரும், ஒரு தாள் முதல், பல பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் வரை ஜிராக்ஸ் எடுக்க வந்திருந்தவர்கள் சிலரும் என்று ஐந்தாறு பேர் கடையில் நின்று கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் தன்னை முதலில் கவனிக்க வேண்டும் என்று அவசரப்படுத்திக் கொண்டிருக்க, அந்த இளைஞன் அனைவரையும் சமாளித்துக் கொண்டிருந்தான்.

"சார் இந்தாங்க. அஞ்சு பேனாதானே கேட்டீங்க? அம்பது ரூபா? சாரி சார். அஞ்சு ரூபா பேனா இல்லை. பத்து ரூபா  பேனாதான் இருக்கு...சார் இவ்வளவு பேஜ் எடுக்க டைம் ஆகும். கொடுத்துட்டுப் போங்க. எட்டு மணிக்கு வாங்க எடுத்து வைக்கிறேன்....ஏ-ஃபோர் ஷீட் தானே சார்?. இந்தாங்க. சார். ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்."

"ஏம்ப்பா எவ்வளவு நேரம் நிக்கறது? ஒரு பேஜ் ஜிராக்ஸ் எடுத்துட்டு என்னை அனுப்பக்கூடாது?" என்று கத்தினார் ராமநாதன்.

இளைஞன் சிரிப்புடன் அவர் பக்கம் திரும்பினான். "சாரி சார். அவங்கள்ளாம் உங்களுக்கு முன்னால வந்தவங்க" என்றவன் இன்னொருவரைப் பார்த்து "சார்! பெரியவருக்கு ஒரு பேஜ் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டு, "சார் கொடுங்க" என்று அவரிடமிருந்து பேப்பரை வாங்கி ஜிராக்ஸ் எடுத்து அவரிடம் கொடுத்தான்.

அவர் பத்து ரூபாயை நீட்டினார்.

"சில்லறை இல்லையே சார்! பரவாயில்லை. அப்புறம் இந்தப் பக்கம் வரும்போது கொடுங்க" என்று சொல்லி விட்டு அடுத்தவரிடம் திரும்பினான்.

ராமநாதன் வீட்டுக்குத் திரும்பும்போது அந்த இளைஞனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்.

'இவ்வளவு அழுத்தத்திலும் எப்படி அவன் சிரித்த முகத்துடன் இனிமையாகப் பேசுகிறான்? காலை முதல் மாலை வரை இப்படித்தான் இருப்பானோ? எப்படி அவனால் முடிகிறது?'

அவனுடைய அழுத்தமான சூழ்நிலையோடு ஒப்பிடும்போது அவரது டென்ஷன் எதுவுமே இல்லை என்று தோன்றியது. காலையில் காப்பி போடக் கொஞ்சம் நேரமாகி விட்டது என்பதற்காக மனைவியைக் கடிந்து கொண்டோமே என்று நினைத்துக் கொண்டார்.

'இனிமேல் மனைவி சொன்னது போல் பேச்சில் கடுமையைக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் பொறுமையாகப் பேசிப் பழக வேண்டும்?'

வீட்டுக்குப் போனதும் "ஜிராக்ஸ் எடுக்கப் போயிருந்தேன்" என்றார் மனைவியிடம்.

"நீங்க எங்கே போனா எனக்கென்ன?" என்றாள் மனைவி.

குறள் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது.

பொருள்:  
இன்சொல் பேசினால் இனிய பயன்கள் கிடைக்கும் என்று உணர்ந்த எவரும் கடுஞ்சொற்களைப் பேச மாட்டார்கள்.

100. துவார்ப்பு வாழை 
நாகம்மையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவளிடம் அதிகம் பேச்சுக் கொடுக்க மாட்டார்கள். அவளுடன் வாக்குவாதம் செய்தால், அவள் வாயிலிருந்து வரும் சுடுசொற்களை யாராலும் தாங்க முடியாது.

நாகம்மையின் பேச்சைத் தாங்க முடியாமல் அவள் மாமியார் நிரந்தரமாகவே தன் இன்னொரு பிள்ளையிடம் போய் விட்டாள். அவள் சகோதரிகள் கூட அவளிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

அவள் தங்கை சிவகாமி ஒருமுறை அவளைப் பற்றித் தன் இன்னொரு சகோதரியிடம் "நம்ப அப்பா அம்மா அவளுக்கு நாகம்மைன்னு சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க. பாம்பு விஷத்தைக் கக்கற மாதிரிதானே பேசறா அவ!" என்று சொல்லியிருக்கிறாள்.

நல்லவேளை! இது நாகம்மையின் காதுகளுக்கு எட்டவில்லை. எட்டியிருந்தால் தன் தங்கை சொன்னது எவ்வளவு உண்மை என்று இன்னொரு முறை நிருபித்திருப்பாள்!

அவள் கணவன் சண்முகம் அவள் பேச்சைச் சகித்துக்கொண்டு, வேறு வழியின்றி அவளுடன் குடித்தனம் நடத்தி வந்தான்.

அவர்களுடைய 12 வயது மகள் சுமதி மட்டும்தான் தன் தாய்க்கு ஈடு கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பவள். "ஏம்மா இப்படி சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருக்கே?" என்று அம்மாவைப் பலமுறை கடிந்து கொண்டிருக்கிறாள்.

"ஒனக்கு என்னடி தெரியும்? எனக்கு புத்தி சொல்ல வந்துட்ட!" என்று பதிலடி கொடுப்பாள் நாகம்மை.

ன்று சுமதி பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது நாகம்மை தன் கணவனைப் பிடி பிடி என்று பிடித்துக் கொண்டிருந்தாள்.

"ஏங்க, எத்தனை வருஷமா கடைக்குப் போயி காய், பழம் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கீங்க! இன்னும் பழமாப் பாத்து வாங்க உங்களுக்குத் தெரியலியே! எப்படித்தான் ஒங்க அம்மா உங்களை இப்படித் துப்பு இல்லாதவரா வளத்தாங்களோ தெரியல!"

"என்னம்மா விஷயம்?" என்றாள் சுமதி.

"இங்க பாரு உங்கப்பா வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்திருக்கிற லட்சணத்தை! வாழைப்பழம் வாங்கிட்டு வரச் சொன்னா வாழைக்காய் வாங்கிக்கிட்டு வந்திருக்காரு. இதைச் சாப்பிட முடியாது. பொறியல்தான் பண்ண முடியும்"

"அப்ப பொறியல் பண்ணிடு" என்றாள் சுமதி.

"எரிச்சலைக் கிளப்பாதேடி. பாதிப்பழமா இருந்தா, பொறியலும் பண்ண முடியாது, பழமா சாப்பிடவும் முடியாது."

"அப்ப ரெண்டு நாள் வச்சிருந்து, பழுத்தப்பறம் சாப்பிடு!" என்றாள் சுமதி.

"ரெண்டு நாள் கழிச்சு சாப்பிடறதுக்கா இன்னிக்கு வாங்கிக்கிட்டு வரச் சொன்னேன்?"

"இல்லை நாகம்மை! போன தடவை வாங்கின பழமெல்லாம் சீக்கிரமே அழுகிப் போயிடுச்சுன்னு குத்தம் சொன்னே! அதுதான் கொஞ்சம் காவெட்டா வாங்கிக்கிட்டு வந்தேன்" என்றான் சண்முகம்.

"அதுக்காக இவ்வளவு காயாவா வாங்கறது? கடிக்கவே முடியலை அவ்வளவு காயா இருக்கு. வாயெல்லாம் துவர்க்குது" என்றாள் நாகம்மை.

"ஏம்மா வாழைப்பழம் காயா இருந்தா துவர்ப்பா இருக்கும்னு சொல்றியே, அதுமாதிரிதானே, நீ சண்டை போடற மாதிரி பேசறது மத்தவங்களுக்கு வருத்தமா இருக்கும்?" என்றாள் சுமதி, தான் பள்ளியில் படித்த குறளை நினைவு கூர்ந்தவளாக.
  
குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பொருள்:  

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் கடிய சொற்களைப் பயன்படுத்துவது பழத்தை விட்டு விட்டுக் காயைப் பறிப்பது போன்றதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்





















2 comments:

  1. பயனுள்ளதாய் அமைந்துள்ளது தங்களது தொகுப்பு. தங்களது முயற்சிக்குப் பாராட்டு...

    ReplyDelete