"துறவி ஆகணும்னா உங்க ஊர்லேயே ஆகி இருக்கலாமே! எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்க?" என்றார் சுவாமி சச்சிதானந்தர்.
"என் சொந்தக்காரங்க, நண்பர்கள் யாரும் என் மனசை மாத்த முயற்சி செய்யக் கூடாதுங்கறத்துக்காகத்தான், என் ஊர்லேந்து தொலைவில இருக்கற இந்த ஊர்ல சந்நியாசியா இருந்தா, நான் இங்கே இருக்கறது யாருக்கும் தெரியாதுன்னுதான்" என்றான் பலராமன்.
"வீட்டில சொல்லிட்டுத்தான் வந்ததா சொன்னீங்க?"
"என் மனைவிகிட்ட என் விருப்பதைச் சொல்லி, அவ சம்மதம் வாங்கிட்டேன். அவ குழந்தைகளோட தன் பெற்றோர் வீட்டுக்குப் போயிட்டா. என் மனைவியின் பெற்றோர்கள் வசதியானவங்க. அவங்க என் மனைவியையும், குழந்தைகளையும் காப்பாத்துவாங்க. என் குழந்தைகளை நல்லாப் படிக்க வச்சு முன்னுக்குக் கொண்டு வந்துடுவாங்க. என் குடும்பத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுத்தான், நான் சந்நியாசியா ஆக இங்கே வந்திருக்கேன்."
"எப்படி எங்க மடத்தைத் தேர்ந்தெடுத்து இந்த ஊருக்கு வந்தீங்க?"
"ரெண்டு வருஷம் முன்னால, நீங்க என் ஊருக்கு வந்திருந்தீங்க. உங்க சொற்பொழிவுக்கு நான் வந்திருந்தேன். உங்க சொற்பொழிவு பத்திக் கொடுத்த நோட்டீசில உங்க தலைமை மடத்தோட விலாசம் இருந்ததது. உங்க சொற்பொழிவைக் கேட்டதும், அப்பவே உங்ககிட்ட வந்து சேரணும்னு தோணிச்சு. எனக்குச் சில கடமைகள் இருந்ததால, அதையெல்லாம் முடிச்சுட்டு வர ரெண்டு வருஷம் ஆயிடுச்சு."
"நான் என்னோட எந்தப் பேச்சிலேயும், யாரும் சந்நியாசம் வாங்கிக்கணும்னு சொன்னதில்லையே! சந்தோஷமா வாழணும்னுதானே சொல்லிக்கிட்டு வந்திருக்கேன்" என்றார் சச்சிதானந்தர், சிரித்தபடி.
பலராமன் மௌனமாக இருந்தான்.
"சரி. உங்களுக்கு சந்நியாசத்தில விருப்பம் இருந்தா, நான் அதைத் தடுக்க மாட்டேன். இப்ப எல்லாத்துக்குமே ஒரு முறை வந்துடுச்சு. அதனால, நீங்க ஒரு படிவத்தை நிரப்பிக் கொடுக்கணும்" என்றார் சச்சிதானந்தர்.
"விண்ணப்பப் படிவமா?" என்றான் பலராமன், சிரித்தபடி.
சச்சிதானந்தர் அவனை சந்நியாசியாக ஏற்றுக் கொள்ள அனேகமாகச் சம்மதித்து விட்டார் என்று தோன்றியதால், அவன் இறுக்கம் சற்றுத் தளர்ந்திருந்தது.
தன்னிடம் கொடுக்கப்பட்ட படிவத்தைப் படித்துப் பார்த்ததும், மீண்டும் சச்சிதானந்தரின் அறைக்குச் சென்ற பலராமன், "இதில என் கடைசி விலாசம், என் பின்னணி விவரங்கள் எல்லாம் கேட்டிருக்கே? நான் இருக்கற இடம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு உங்ககிட்ட விளக்கினேனே!" என்றான்.
"கவலைப்படாதீங்க! நீங்க இங்கே இருக்கறதை நாங்க யார்கிட்டேயும் சொல்ல மாட்டோம். ஆனா சந்நியாசியா சேர விரும்பறவங்களோட பின்னணி விவரங்களை வாங்கி வச்சுக்கறது இங்கே இருக்கிற நடைமுறை" என்றார் சச்சிதானந்தர்.
பலராமன் படிவத்தை நிரப்பிக் கொடுத்ததும், அவனை மீண்டும் தன் அறைக்கு அழைத்த சச்சிதானந்தர், "பலராமா! இங்கே சந்நியாசியா சேர விரும்பறவங்களுக்கு ஒரு வாரம் பயிற்சி உண்டு. அந்தப் பயிற்சி முடிஞ்சப்பறம், நாங்க மேற்கொண்டு முடிவெடுப்போம்!" என்றார்.
முதல் முறையாக, சச்சிதானந்தர் தன்னை ஒருமையில் விளித்ததது அவர் தன்னை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், பயிற்சியைத் தான் வெற்றிகரமாக முடிக்க வேண்டுமே என்ற கவலை பலராமனுக்கு ஏற்பட்டது.
அவன் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டது போல், "கவலைப்படாதே! பயிற்சின்னா தியானம், பிராணாயாமம், உணவுக் கட்டுப்பாடு. மௌன விரதம், தனிமையில் இருப்பது இதெல்லாம்தான் இருக்கும். சந்நியாசம் ஆகணுங்கற உறுதி இருக்கறவங்களுக்கு இது ரொம்ப எளிமையாத்தான் இருக்கும்!" என்று சிரித்தபடி கூறினார் சச்சிதானந்தர்.
பயிற்சி முடிந்த பிறகு, பலராமனைத் தன் அறைக்கு அழைத்த சச்சிதானந்தர், "நீ எதுக்கு சந்நியாசி ஆக விரும்பின?" என்றார்.
"எனக்கு இல்லறத்தில ஈடுபாடு இல்ல, துறவறத்திலதான் எனக்கு விருப்பம் இருந்தது" என்றான் பலராமன், திடீரென்று இவர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று வியந்தபடி.
அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்த சச்சிதானந்தர், "உனக்கு வாழ்க்கையில நிறையப் பிரச்னைகள். உன் தொழில் சரியா நடக்கல. உன் குடும்பத்தைக் காப்பத்த முடியமான்னு உனக்குக் கவலை வந்துடுச்சு. உன் பிரச்னைகளிலேந்து தப்பிக்கறத்துக்காகதான் நீ சந்நியாசி ஆகணும்னு முடிவு செஞ்சிருக்க!"
"சுவாமி! என்னைப் பத்தி விசாரிச்சீங்களா?" என்றான் பலராமன், அதிர்ச்சியுடன்.
"ஆமாம்" என்றார் சச்சிதானந்தர், சிரித்தபடி,
"நான் இருக்கற இடத்தை யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு சொன்னீங்களே!"
"சொல்லல. எங்ககளுக்கு அனேகமா எல்லா ஊர்லயுமே தொடர்புகள் இருக்கு. அவங்க மூலமா விசாரிச்சோம். துறவறத்தில ஈடுபாடு ஏற்பட்டுத் துறவு வாங்கிக்கறது சரிதான். ஆனா, துறவியாயிட்டா பிரச்னைகள்ளேந்து தப்பிச்சுடலாம்னு நினைக்கறது உண்மையான துறவு இல்ல."
"இல்லை, சுவாமி! போராடிப் போராடி அலுத்துட்டேன். விதி எப்பவுமே எனக்கு எதிராவே இருக்கற மாதிரி இருக்கு. நான் விலகிப் போயிட்டா, என் மனைவி, தன் பெற்றோர் உதவியோட குடும்பத்தை எப்படியும் காப்பத்திடுவா, ஆனா நான் அங்கே இருக்கும்போது, அவங்க உதவியைக் கேக்கவும் முடியாது, அவங்களா உதவி செஞ்சா அதை ஏத்துக்கவும் முடியாது. அதனாலதான், என் மனைவி கிட்ட பேசி இதுக்குச் சம்மதிக்க வச்சேன். சந்நியாசியா ஆகலேன்னா நான் தற்கொலை செஞ்சுக்கற மனநிலைக்குப் போயிடுவேன்னு சொல்லித்தான் அவளை சம்மதிக்க வச்சேன். அவளையும், என் பிள்ளைங்களையும் அவ பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிட்டு, நான் இங்கே கிளம்பி வந்தேன். அவளோட பெற்றோர்கள் கொஞ்ச நாளைக்கு என் மேல கோபமா இருந்தாலும், என் குடும்பத்தை எப்படியும் காப்பாத்திடுவாங்க, என் குடும்பத்தோட விதியை மாத்த இதுதான் வழின்னு நினைச்சேன்" என்றான் பலராமன், இயலாமையுடன்.
"பலராமா! சந்நியாசம் வாங்கிக்கறதன் மூலமா நமக்கு வாழ்க்கையில வரக் கூடிய துன்பங்களைத் தவிர்த்துடலாம்னு எல்லோரும் நினைச்சா, அப்புறம் உலகத்தில சந்நியாசிகள்தான் மிஞ்சுவாங்க. வாழ்க்கையில வர பிரச்னைகளையும், துன்பங்களையும் ஏத்துக்கிட்டு அவற்றை சமாளிச்சுத்தான் ஆகணும், இதைத் தவிர்க்கக் குறுக்கு வழி எதுவும் கிடையாது. நல்லது நடக்கும்கற நம்பிக்கையோட, துன்பங்களை எதிர்கொண்டு வாழறதுதான் வாழ்க்கை. நீ உடனே ஊருக்குத் திரும்பிப் போய், உன் குடும்பத்தோட வாழ்க்கை நடத்து. இந்த ஒரு வாரமா நீ பயிற்சி செஞ்ச விஷயங்கள் உனக்கு உதவியாக இருக்கும். கடவுளோட அருள் உன் குடும்பத்துக்கு முழுமையா இருக்கணும்னு வாழ்த்தறேன்" என்றார் சச்சிதானந்தர்.
குறள் 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
No comments:
Post a Comment