About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 36 - மெய்யணர்தல்

திருக்குறள் 
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 36 
மெய்யுணர்தல்

 351. குருபிரசாதின் கடைசி தினங்கள் 

ராமமூர்த்திக்கு அன்றைய பொழுது மகிழ்ச்சியானதாக விடியவில்லை.

அவர் வழக்கம்போல் காலையில் எழுந்து சுறுசுறுப்பாகத் தன் பணிகளைத் துவக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரது கைபேசி ஒலித்தது. 

குருபிரசாத் மாரடைப்பால் இறந்து விட்டாராம்.   

குருபிரசாத் ஒரு வங்கியின் தலைவராக இருந்து ஒய்வு பெற்றவர். அவருடைய வங்கியில் ராமமூர்த்தியின் நிறுவனத்துக்குக் கணக்கு இருந்ததால்தான் அவருடன் ராமமூர்த்திக்கு அறிமுகம் ஏற்பட்டது என்றாலும் இருவருக்கும் இடையே தனிப்பட்ட நெருக்கம் ஏற்பட்டு விட்டது.  

குருபிரசாதை நேர்மையானவர் என்று சொல்ல முடியாது. நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் அவர் தன் வங்கியில் கடன் வழங்குவார் என்று அவரைப் பற்றி ஒரு பிம்பம் உண்டு. 

ராமமூர்த்தியே தன் நிறுவனத்துக்குக் கடன் பெற குருபிரசாதுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். 'நட்பு வேறு, பிசினஸ் வேறு' என்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தவர் குருபிரசாத்!

ஆயினும் எல்லோரிடமும் நன்கு பழகக் கூடியவர் என்பதால் அவருடன் நிறுவன ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும்  ஒரு நெருக்கம் இருந்தது. எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 

குருபிரசாத் ஒய்வு பெற்றுச் சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் குருபிரசாத் ராமமூர்த்திக்கு ஃபோன் செய்து, "என்ன ராமமூர்த்தி? நான் ரிடயர் ஆனதும் என்னை மறந்துட்டீங்களா? வீட்டுப் பக்கமே வரலியே?" என்று கேட்டார்.

அவர் சொன்னதற்காக ராமமூர்த்தி அவர் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

குருபிரசாத் அவரிடம் புலம்பித் தள்ளி விட்டார்.

"சொன்னா நம்ப மாட்டீங்க. நான் ரிடயர் ஆனா அடுத்த நாள்ளேந்து என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு. எப்பவும் என்னைச் சுத்தி பத்து பேராவது இருந்துக்கிட்டிருப்பாங்க. உங்களுக்கு பிரைவசியே இல்லையேன்னு என் மனைவி கூட சில சமயம் சொல்லி இருக்கா. ஆனா அது எனக்குப் பிடிச்சிருந்தது.

"ஆனா இப்ப ஒத்தர் கூட என்னைப் பாக்க வரதில்ல. ஃபோன் பண்றதும் இல்ல. நானா யாருக்காவது ஃபோன் பண்ணிப் பேசினாக் கூட பட்டும் படாம பேசிட்டு டக்னு கட் பண்ணிடறாங்க. வெளியில எங்கேயாவது பாத்தா கூட கண்டும் காணாம போறாங்க. நானா வலுவில போய்ப் பேசினாக் கூட ஒப்புக்கு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசிட்டு விலகிடறாங்க. ஏன், நீங்க கூட என்னை மறந்துட்டீங்களே! நான் ஃபோன் பண்ணினப்புறம்தான் வந்தீங்க. ஆனா அதுக்கே நான் உங்களுக்கு நான் நன்றி சொல்லணும்"

"அப்படி இல்ல. வேலை அதிகமா இருந்ததால..."

"இல்ல, ராமமூர்த்தி. பணம், பதவி, அதிகாரம் இதையெல்லாம் சம்பாதிக்கறதிலயே என் வாழ்க்கையைக் கழிச்சுட்டேன். நல்ல நண்பர்களை சம்பாதிக்க நான் முயற்சி செய்யவே இல்ல. என் சொந்தக்காரங்க கிட்ட கூட அலட்சியமாத்தான் நடந்துக்கிட்டேன். இப்ப அவங்களும் என்னை மதிக்கறதில்ல."

"எல்லாம் சரியாயிடும் சார். நான் முடிஞ்சப்பல்லாம் உங்களை வந்து பாக்கறேன். நீங்களும் உங்க மனைவியை அழைச்சுக்கிட்டு என் வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி வீட்டுக் கிளம்பினார் ராமமூர்த்தி.

அதற்குப் பிறகு இரண்டு மூன்று முறை ராமமூர்த்தி குருபிரசாதின் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்தார். குருபிரசாத் மனதளவில் மிகவும் சோர்வடைந்து மன வருத்தத்துடனேயே காட்சி அளித்தார். 

வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின் எல்லா வசதிகளுடனும், ஒரு பிரச்னையும் இன்றி நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை அவருக்கு அமைந்திருந்தாலும், அதை அனுபவிக்கும் மனநிலையை அவரால் பெற முடிய வில்லை என்று ராமமூர்த்திக்குத் தோன்றியது.

குருபிரசாதின் இறுதித் சடங்கு மாலை 4 மணிக்கு நடக்க இருப்பதை அறிந்து சுமார் மூன்றரை மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்றார் ராமமூர்த்தி. 

தெரு நிறைய கார்கள் நிற்கும், தன் காரை நிறுத்த இடம் இருக்குமோ என்னவோ என்று நினைத்துக் கொண்டே சென்றார் ராமமூர்த்தி. 

ஆனால் குருபிரசாதின் வீட்டு வாசலில் ஒரே ஒரு காரும், சில இரு சக்கர வாகனங்களும்தான் நின்றிருந்தன. 

உள்ளே சென்றபோது இறுதிச் சடங்குகள் துவங்கி நடந்து கொண்டிருந்தன. அவர் மனைவி மகன்களைத் தவிர ஒரு சில உறவினர்களும், இன்னும் நான்கைந்து பேரும்தான் இருந்தனர்.  நிறைய பேர் இனிமேல்தான் வருவார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் ராமமூர்த்தி.

ஆனால் நான்கரை மணிக்கு குருபிரசாதின் சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதும்  மொத்தம் பதினைந்து பேர்தான் வந்திருந்தனர்.

"தோளில் தூக்கிட்டுப் போக நாலு பேர் வரணும். யார் வரீங்க?" என்றார் சாஸ்திரி.

இரண்டு பேர்தான் முன் வந்தார்கள். வேறு யாரும் வராததைக் கண்டு ராமமூர்த்தியும் முன் வந்தார்.

"இன்னும் ஒத்தர் வேணுமே!" என்றார் சாஸ்திரி.

அதற்குப் பிறகு, தயக்கத்துடன் இன்னொருவர் முன் வந்தார். 

குருபிரசாதின் இறுதிச் சடங்குகள் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் நீண்ட நேரம் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி. 

எப்போதும் குருபிரசாதைச் சுற்றிப் பல பேர் நின்றிருப்பார்களே, இன்று ஏன் யாருமே வரவில்லை? 

வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வங்கியில் கடன் பெற்றவர்கள், அவருடைய பிற நண்பர்கள் என்று நூற்றுக்கணக்கானோர் இருப்பார்களே, அவர்களில் பத்து பேர் கூட வரவில்லையே! அவருடைய உறவினர்கள் கூட ஐந்தாறு பேர்தான் வந்திருந்தனர். ஏன் இப்படி?

குறு பிரசாத் தன்னிடம் சொன்னது ராமமூர்த்திக்கு நினைவு வந்தது. 

குருபிரசாத் தன் வாழ்நாள் முழுவதும் பதவி, அதிகாரம், பணம் போன்றவற்றைச் சம்பாதிப்பதில்தான் கவனம் செலுத்தினார்.

அவருடைய  இறுதிக் காலத்தில் அவர் மீது அன்பும் அக்கறையும் காட்டி, இறந்த பிறகு அவரை வழியனுப்ப வரும் அளவுக்கு அவர் மீது அன்பு செலுத்தக் கூடியவர்களை அவர் சம்பாதிக்கவில்லை!

குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு..

பொருள்:

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

352. திடீர் மனமாற்றம்
"இந்த வயசில எதுக்கு புதுசா ஒரு தொழிலை ஆரம்பிக்கிறீங்க? ஏற்கெனவே இருக்கிற தொழில் போதாதா?" என்றாள் பார்வதி.

"அதைத்தான் நம்ம பையனைப் பாத்துக்கச் சொல்லிட்டேனே! நான் என்ன செய்யறது?"

"அதுக்காக இந்த வயசில 5 கோடி ரூபா முதலீடு பண்ணி புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்கணுமா?"

"ஏதாவது செய்யணும்ல? என்னால சும்மா உக்காந்திருக்க முடியாது."

"வேலையிலேந்து ரிடயர் ஆனவங்கள்ளாம் கோவில் குளம் போறது, தங்களுக்குப் பிடிச்ச பொழுது போக்கிலே ஈடுபடறது மாதிரி ஏதாவது செய்யலியா?"

"எனக்கு ரிடயர்மெண்ட் எல்லாம் கிடையாது. ஒண்ணு ஏதாவது உடம்புக்கு வந்து நான் படுத்துக்கணும், அல்லது இந்த உலகத்தை விட்டே போயிடணும்" என்றார் சபாபதி. 

அதற்குப் பிறகு பார்வதி விவாதத்தைத் தொடர விரும்பவில்லை.

தான் தொடங்கப் போகும் புதிய தொழிலுக்காக நிலம் வாங்குதல், அரசு அங்கீகாரம் பெறுதல் போன்றவற்றுக்காக 2 கோடி ரூபாய் பணமாக வேண்டும் என்பதும் அதற்காக சில சொத்துக்களை விற்று தான் 2 கோடி ரூபாய் ஏற்பாடு செய்திருப்பதும் நல்ல வேளை மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டார் சபாபதி. 

ரண்டு நாட்களுக்குப் பிறகு "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள் பார்வதி.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ சொன்னதைப் பத்தி யோசித்துப் பாத்தேன். இனிமே புது பிசினஸ் எல்லாம் வேண்டாம்னு தீர்மானிச்சுட்டேன். எப்படியும் இருக்கிற பிசினஸை நம்ப பையன் பாத்துக்கறான். நம்ப கிட்ட இருக்கற பணம் நம்ப ரெண்டு பேரும் வாழ்க்கை நடத்த தாராளமாப் போதும். இனிமே வீட்டிலேயே ஓய்வா இருக்கப் போறேன். அப்பப்ப உன்னை அழைச்சுக்கிட்டு கோவில், குளம், வெளியூர்ப் பயணம்னு போகப் போறேன்!" என்றார் சபாபதி.

"நம்பவே முடியலியே! திடீர்னு இப்படி மனசு மாறிட்டீங்களே! ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றாள் பார்வதி மகிழ்ச்சியுடன். 

தொடர்ந்து, "ராத்திரி முழுக்க தூங்காம புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருந்ததைப் பாத்து, புது பிசினஸ் பத்தி யோசனை பண்ணிக்கிட்டுத்தான் தூக்கம் வராம புரண்டுக்கிட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். இதைப் பத்தித்தான் யோசிச்சீங்களா?" என்றாள்.

சபாபதி மௌனமாக இருந்தார். 

முதல் நாள் இரவு 8 மணிக்கு பிரதமர் வெளியிட்ட பண மதிப்பு இழப்பு அறிவிப்பால் தான் பணமாக வைத்திருந்த 2 கோடி ரூபாயில் மிகப் பெரும்பாலான பகுதியை வங்கியில் போட முடியாத நிலைமை ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதும், இறுதியில் இந்த இழப்பை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனி பணம் தேடும் முயற்சிகளில் ஈடுபடாமல் மனைவி சொன்னது போல் மன அமைதி தரும் செயல்களில் ஈடுபடுவதென்று முடிவெடுத்ததையும் தன் மனைவியிடம் அவர் சொல்லப் போவதில்லை. 

"என்னங்க? இனிமே 500 ரூபா 1000 ரூபா நோட்டெல்லாம் செல்லாதாமே? எங்கிட்ட ஏழாயிரம் ரூபாய்க்கு 500 ரூபா, 1000 ரூபா நோட்டு இருக்கு. அதை பாங்க்கில போட்டுடுங்க. நல்ல வேளை! நாம அதிகமா கையில பணம் வச்சுக்கல!" என்றாள் பார்வதி.

"ம்..." என்றார் சபாபதி.   
   
குறள் 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

பொருள்:
மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யுணர்வைப் பெற்றவர்க்கு அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.

353. ஆளவந்தார்

அரசர் மிகவும் கோபமாக இருக்க, சமையற்காரர் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

"ஒரு கீரை வாங்க முடியவில்லையா உன்னால்?" என்றார் அரசர்.

"மன்னிக்க வேண்டும் அரசே! நீங்கள் விரும்பி உண்ட அந்த தூதுவளைக் கீரையை ஒருவர் தினமும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவர் வரவில்லை. அது போன்ற கீரை வேறு எங்கும் கிடைக்கவில்லை" என்றார் சமையற்காரர்.

"சரி போ. அவரைத் தேடிப் பிடிக்க முடியுமா என்று பார்!"

அடுத்த நாள் அரசரிடம் வந்த சமையற்காரர் "அரசே கீரை கொடுத்து வந்தவர் மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் அவர் கீரை கொண்டு வரவில்லை. தங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்!" என்றார்.

"கீரை கொடுப்பவர் என்னை ஏன் பாரக்க வேண்டும்?" என்ற அரசர், 'கீரை வேண்டுமே' என்ற எண்ணத்தில் "சரி, வரச் சொல்!" என்றார்.

சமையற்காரர் அழைத்து வந்த வைணவப் பெரியாரைப் பார்த்ததும் தன்னை அறியாமலேயே எழுந்து நின்ற அரசர், சமையற்காரனைப் பார்த்து "இவரா கீரை கொடுத்தவர்?' என்றார். 

சமையற்காரன் தலையாட்டியதும் அவனை அனுப்பி விட்டு அந்தப் பெரியவரை அமரச் செய்தார் அரசர்.

"அரசே! என்னை மன்னிக்க வேண்டும். உங்களைச் சந்தித்துப் பேச முயன்றேன். உங்கள் காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அதனால்தான் உங்கள் சமையற்காரரிடம் கீரை கொடுத்து அந்தக் கீரையின் சுவையை நீங்கள் மிகவும் விரும்பியதை அறிந்து, அதை நிறுத்தி உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை வலிந்து பெற்றேன். என்ன செய்வது, சில சமயம் தலையைச் சுற்றித்தான் மூக்கைத் தொட வேண்டி இருக்கிறது!" என்றார் பெரியவர்.

"மன்னிக்க வேண்டும் பெரியவரே! அரசனான பிறகு எனக்கு ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு இல்லை. இது தெரிந்துதான் என் காவலர்கள் உங்களை அனுமதிக்கவில்லை. உங்களுக்கு என் பூர்வீகம் பற்றித் தெரியாது என்று நினைக்கிறேன்..." என்று ஆரம்பித்தார் அரசர்.

"நன்றாகத் தெரியும் யமுனாமுனி!" என்று இடைமறித்தார் பெரியவர். "நான் உன்னைச் சந்திக்க வந்ததே உன் பூர்வீகம் பற்றி உனக்கு நினைவூட்டத்தான்!"

அந்தப் பெரியவர் தன் பழைய பெயரைச் சொல்லி அழைத்ததுடன் திடீரென்று தன்னை ஒருமையில் அழைக்கவும் துவங்கியதைக் கேட்டு சற்றே அதிர்ச்சி அடைந்த அரசர், "சுவாமி தாங்கள் யார்?" என்றார்.

"சொல்கிறேன். அதற்கு முன் நீ யார் என்பதை உனக்கு நினைவுபடுத்தி விடுகிறேன். உன் தாத்தா நாதமுனி குடும்பத்துடன் வடநாட்டில் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்தபோது, அங்கே அவருக்கு யமுனை நதிக் கரையில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாகக் கண்ணனே காட்சி தந்து அவரை உடனே தன் சொந்த ஊரான காட்டுமன்னார் கோவிலுக்குத் திரும்பும்படி பணித்தார்.

"அப்படி அவர் திரும்பிய பிறகுதான் அவருடைய குமாரர் ஈஸ்வர முனிக்கு நீ பிறந்தாய். உன்  குடும்பம் யமுனை தீரத்துக்குச் சென்று திரும்பிய பின் நீ பிறந்ததால் உனக்கு யமுனாமுனி என்று பெயரிட்டனர். 

"உன் தாத்தா பூசை செய்து வந்த காட்டுமன்னார் கோவில் ஆலயத்தில் ஒரு சிறுவன் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியின் 10 பாசுரங்களைப் பாடியதைக் கேட்ட உன் தாத்தா நாதமுனி, மற்ற பாசுரங்களையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு நம்மாழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர  திவ்யப் பிரபந்தங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு இசை வடிவமும் கொடுத்து இந்த உலகுக்கு வழங்கினார்.

"அவர் வழித்தோன்றலான நீ மஹாபாஷ்ய பட்டரிடம் பாடம் கற்று வந்தபோது மன்னரின் அவைப்புலவரான ஆக்கியாழ்வாரின் சவாலை ஏற்று அவரை விவாதத்தில் வென்று, அரசரால் ஆளவந்தார் என்ற பட்டமும் அவருடைய ராஜ்யத்தில் ஒரு பகுதியும் வழங்கப்பட்டு, அரசனாகி இருக்கிறாய். அரசனானதும் பழையவற்றை மறந்து விட்டு அரசப் பதவியின் சுகங்களிலேயே ஈடுபட்டு வந்திருக்கிறாய்!"

"பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்புதானே சுவாமி? அரச வாழ்க்கை என்ற பொக்கிஷம் எனக்குக் கிடைத்திருக்கும்போது அதை நான் அனுபவிப்பதில் என்ன தவறு? அது சரி தாங்கள் யார் என்று இன்னும் கூறவே இல்லையே!"

"உன் தாத்தா நாதமுனியின் சீடர் உய்யக் கொண்டார். அவருடைய சீடன் நான். என் பெயர் ராம மிஸ்ரன். என்னை மணக்கால் நம்பி என்றும் கூறுவார்கள். உன் தந்தை அவர் சீடரான உய்யக் கொண்டார் மூலம் என்னிடம் கொடுத்துச் சென்றுள்ள ஒரு பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்படைப்பதற்காகவே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்."

"இந்த அரச போகத்தை விட உயர்வான பொக்கிஷமா அது?"

"அந்தப் பொக்கிஷத்தை நான் உனக்குக் காட்டியதும் நீயே ஒப்புக் கொள்வாய்!"

"அப்படியானால் அதை எனக்குக் காட்டுங்கள்" என்றார் ஆளவந்தார்.

"என்னுடன் வா. அது இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்" என்றார் மணக்கால் நம்பி.

உடனே மணக்கால் நம்பியுடன் கிளம்பினார் ஆளவந்தார்.

"பொக்கிஷத்தைக் காட்டுவதாகச் சொல்லி இவ்வளவு தூரம் அழைத்து வந்து விட்டீர்கள். எங்கே அந்தப் பொக்கிஷம்?" என்றார் ஆளவந்தார்.

"இதோ திரை விலகியவுடன் நீயே காண்பாய்!" என்று மணக்கால் நம்பி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அர்ச்சகர் திரையை விலக்கி கற்பூர ஆரத்தி காட்ட, கற்பூர ஒளியில் தெரிந்த அரங்கனின் திருவுருவைப் பார்த்து பிரமிப்பில் உறைந்தார் ஆளவந்தார்.

'இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'

என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியபோது அவருக்கு இருந்த உணர்வு ஆளவந்தாருக்கு ஏற்பட்டது.

தற்குப் பிறகு ஆளவந்தார் அரச பதவியைத் துறந்து திருவரங்கத்திலேயே இருந்து அரங்கனுக்குச் சேவை செய்தபடி, யமுனாச்சாரியர் என்ற பெயரில் ஒரு வைணவ ஆசானாகி, ராமனுஜரின் ஆசான்களான பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகிய ஆசான்களை உருவாக்கியதுடன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாறனேரி நம்பியைச் தன் சீடராக ஏற்று அருள் செய்ததும், தன் பூத உடலை நீத்த பிறகும் ராமானுஜருக்கு வழிகாட்டியாக அமைந்ததும் வரலாறு.

குறள் 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

பொருள்:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

354. போட்டியில் பங்கேற்காதவர்

"நம் எல்லோருக்கும் ஐந்து புலன்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் திறமை நம்மிடம் இருக்கிறதா? அதைச் சோதிக்கத்தான் இந்தப் போட்டி. இந்தப் போட்டியில் உங்கள் ஐந்து புலன்களுக்கும் சவால்கள் இருக்கும்.

"ஓரு படத்தைக் காட்டி அதில இருக்கும் பொருட்களைக் குறிப்பிடச் சொல்வோம். இது சுலபமானதாத் தோன்றலாம். ஆனால் படத்தில இருக்கும் சில நுணுக்கமான விஷயங்களைக் கூர்மையான பார்வை இருப்பவர்களால்தான் கவனிக்க முடியும்.

அது போல் ஒவ்வொரு புலனுக்கும் தனித் தனியாகப் போட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும்  ஒருவர் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் கொடுக்கப்படும்."

நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட போட்டிகள் நிறைவு பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பரிசு பெற்றவர்கள் பெயர்களை அறிவித்த பின் அறிவிப்பாளர் கூறினார்

"ஒரு முக்கியமான அறிவிப்பு. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு ஒரு முக்கியமான அறிவிப்பு இருக்கிறது. எல்லோரும் இருந்து அதைக் கேட்டு விட்டுப் போக வேண்டும்."

பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு அறிவிப்பாளர் கூறினார்:

"இந்தப் போட்டியில் இன்னொருவரும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தன் பெயர் பரிசுக்காகப் பரிசீலிக்கப்பட விரும்ப வில்லை. ஆனால் ஒவ்வொரு  புலனுக்கான போட்டியிலும் எல்லோரையும் விட அதிக மதிப்பெண் வாங்கியது அவர்தான். ஒவ்வொரு போட்டியிலுமே அவர் வாங்கிய மதிப்பெண் நூற்றக்கு நூறு! மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறேன்."

எளிமையான தோற்றம் கொண்ட ஒரு மனிதர் மேடைக்கு வந்தார்.

"பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள். பரிசுக்கு என் பெயர் பரிசீலிக்கப்பட வேண்டாம் என்று கூறி விட்டு நான் ஏன் போட்டியில் கலந்து கொண்டேன் என்ற கேள்வி உங்கள் பலர் மனதிலும் எழலாம். நான் இங்கே வந்தது நான் உணர்ந்து கொண்ட ஒரு உண்மையை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

"ஐம்புலன்களிலும் அதிகக் கூர்மை பெற்று அதை வெளிப்படுத்திய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் - பரிசு பெற்றவர்கள், பெறாதவர்கள் அனைவருக்கும். புலன்கள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் அவற்றுக்கு வரும் விஷயங்கள் இனிமையாக இருந்தால் மட்டுமே அவை நமக்கு இன்பம் அளிக்கும். தொலை தூரத்திலிருந்து ஒலிக்கும் ஒரு நாராசமான ஓசை நம் கூர்மையான செவிப்புலனுக்கு எட்டினாலோ, ஒரு மிக இலேசான துர்நாற்றத்தை துல்லியமான சக்தி கொண்ட நம் நாசி நுகர்ந்தாலோ, அது நமக்கு மகிழ்ச்சி அளிக்குமா?

"நம் ஐம்புலன்களையும் பயன்படுத்தி மெய்ப்பொருளான இறைவனை நாம் உணர்ந்தால் அதுதான் உண்மையான உணர்வாக இருக்கும். இறைவனின் திருவுருவைக் காணும்போதும், இறைவனின் பெருமைகளைக் கேட்கும்போதும், இறைவனின் புகழை நாம் பாடும்போது நம் நாவில் ஊறும் சுவையை உணரும்போதும், இறைவனுக்குச் சூடிய மலர்கள், இறைவனுக்கு அர்ப்பணித்த சந்தனம், கற்பூரம், மலர்கள் போன்றவற்றின் மணத்தை உணரும்போதும், இறைவனின் திருமேனி தொடர்பு பெற்ற மலர்கள், சந்தனம், சடாரி போன்றவை நம் உடலில் படும்போதும் நமக்கு ஏற்படும் உணர்வே உண்மையான உணர்வு என்பது நான் அனுபவித்து உணர்ந்த உண்மை. 

"இந்த உணர்வுகளை நாம் அதிகம் அனுபவிக்கும்போது நாம் யார் என்பது பற்றியும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியுமான உணர்வு நம்மிடம் வளரும். இதுதான் மெய்யுணர்வு. இந்த உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு வந்தேன். நன்றி!" என்று கூறி விட்டு வணக்கம் செலுத்தி விட்டு மேடையிலிருந்து இறங்கினார் அவர்.

குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

பொருள்:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றுப் பெற்ற போதிலும் பயன் இல்லை.

355. அனுபவம் தந்த பாடம் 

"ஏம்ப்பா ரெண்டு நாளா என் பின்னாலேயே வந்துக்கிட்டிருக்க?" என்றார் கசங்கிய ஆடையும், பரட்டைத் தலையும், புதர் போல் தாடி மீசை படர்ந்திருந்த முகமும் கொண்ட அந்த மனிதர்.

"சாமி! உங்களைப் பாத்தா ஒரு யோகி மாதிரி தெரியுது" என்றான் பரமு.

"நீ புத்திசாலிதான்! என்றார் அவர்.

"அப்படின்னா நான் நினைச்ச மாதிரி நீங்க ஒரு யோகிதானா?"

"யோகின்னு சொல்லாம யோகி மாதிரி தெரியுதுன்னு சொன்னியே அதுக்குத்தான் உன்னை புத்திசாலின்னு சொன்னேன்!" என்றார் அவர் சிரித்தபடி.

"மன்னிச்சுக்கங்க சாமி, உங்க மேல நம்பிக்கை இல்லாம நான் அப்படிச் சொல்லல."

"நீ சொன்னதுதாம்ப்பா சரி. வெளித் தோற்றத்தை வச்சு எதையும், யாரையும் எடை போடக் கூடாது."

"நீங்க சொல்றது சரிதான் சாமி! எனக்கு ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உண்டு  ஒரு சாமியாரோட பேச்சால கவரப்பட்டு அவர் மடத்தில சேர்ந்து சேவை செய்யலாம்னு போனேன். ஆனா அங்க சேந்தப்பறம்தான் அவரைப் பத்திப் புரிஞ்சுது. வெளியில புலன்களை அடக்கறதைப் பத்தியும், எளிமையான வாழ்க்கை வாழறதைப் பத்தியும் அற்புதமாப் பேசற அவரு தன் ஆசிரமத்துக்குள்ள ஒரு அரசர் மாதிரி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காரு! அறுசுவை உணவு என்ன, ஆடம்பரமான ஓய்வறைகள் என்ன! ஒரு நிமிஷம் கூட ஏசி இல்லாம இருக்கக் கூடாதுங்கறதுக்காக மின்சாரம் நின்னு போனா உடனே இயங்கற வசதியோட ஜெனரேட்டர் என்ன! மதுபானமும் அந்தப்புரப் பெண்களும்தான் இல்லேன்னு நினைக்கறேன். அதெல்லாம் கூட எனக்குத் தெரியாம இருந்திருக்கலாம்! கொஞ்ச நாளைக்கப்புறம் சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டேன். ஆன்மீகத்தின் மேலேயே வெறுப்பு வந்துடுச்சு."

"சரி. இப்ப என்ன?"

"உங்களைப் பாத்தப்ப முதல்ல ஒரு சாதாரண..." என்று தயங்கினான் பரமு
.
"பண்டாரம்னு நினைச்சிருப்ப!" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

"உண்மையைச் சொல்லணும்னா அப்படித்தான் சாமி. ஆனா உங்க கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டாதில ரெண்டு நாளா உங்களை கவனிச்சுக்கிட்டிருக்கேன்."

"இப்ப என்ன நினைக்கறே?"

"நீங்க பாக்கறதுக்கு சாதாரணமானவரா இருந்தாலும் மனசை அடக்கி வாழற துறவின்னு நினைக்கறேன். உங்க கிட்ட ஆசிரமம் இல்லை, சிஷ்யர்கள் இல்லை. ஆனா நீங்க ஒரு பெரிய யோகிதான். உங்களோட இருந்து உங்களுக்கு சேவை செஞ்சுக்கிட்டிருந்தா எனக்கும் துறவு மனப்பான்மை வரும்னு நினைக்கறேன்."

"எதையுமே வெளித்தோற்றத்தைப் பாத்து அப்படியே ஏத்துக்கக் கூடாது, அதோட உண்மைத்தன்மையை ஆராய்ஞ்சப்பறம்தான்  அதைப்பத்தி முடிவு செய்யணும்னு உன் அனுபவத்திலேந்து நீ புரிஞ்சுக்கிட்டிருக்கிறது நல்ல விஷயம்தான். அதனால என்னோட இருக்கறதைப் பத்தி நீ முடிவு பண்றதுக்கு முன்ன என்னைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்க. நீ எதிர் பாக்கற மாதிரி நான் இல்லேன்னா எப்ப வேணும்னாலும் என்னை விட்டுட்டுப் போகலாம். எங்கிட்ட சொல்லிட்டே போகலாம். நான் உன்னைப் பத்தி தப்பா நினைச்சுக்கவும் மாட்டேன், உன்னைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யவும் மாட்டேன்!" என்றார் அவர் சிரித்தபடி.

குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பொருள்:
ஒரு பொருள் வெளித் தோற்றத்துக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதன் உண்மையான தன்மையை அறிந்து கொள்வதுதான் அறிவுடைமை.

356. பிறவா வரம் வேண்டும்!

காட்டில் அமர்ந்திருந்த அந்த முனிவரின் முன்பு சிலர் அமர்ந்திருந்தனர். முனிவர் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

அன்று காலை முனிவர் கண்களை மூடி அமர்ந்திருப்பதைப் பார்த்த ஒருவன், முனிவர் கண் திறந்ததும் அவர் கூறுவதைக் கேட்டு அறிவு பெறலாம் என்று எண்ணி அவர் முன் அமர்ந்தான். அதற்குப் பிறகு அங்கே வந்த மேலும் சிலரும் அங்கே அமர்ந்து கொண்டனர்.

ஆயினும் பல மணி நேரங்கள் ஆகியும் முனிவர் தன் கண்களைத் திறக்கவில்லை. 

மேலும் காத்திருக்க விரும்பாமல் ஒவ்வொருவராக எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.

மாலையில் முனிவர் தன் கண்களைத் திறந்தபோது அங்கே நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். 

அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த முனிவர் "காலையிலிருந்து காத்திருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார்.

"முனிவரே! நான் தவம் செய்யவேண்டும் என்று இந்தக் காட்டுக்கு வந்தேன். தாங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும்" என்றான் ஒருவன்.

முனிவர் மற்ற மூவரையும் பார்க்க, அவர்கள் தாங்களும் அதே நோக்கத்துடன்தான் இருப்பதாகச் சொல்வது போல் தலையாட்டினர்.

"எதற்காகத் தவம் செய்யப் போகிறீர்கள்?" என்றார் முனிவர். 

"மீண்டும் பிறவி ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான்" என்றான் இன்னொருவன்.

"மீண்டும் பிறவி வேண்டாம் என்றால், அதற்கு நீங்கள் மெய்ப்பொருளை உணர வேண்டும். கற்க வேண்டியவற்றைக் கற்றால்தான் மெய்ப்பொருளை உணர முடியும்" என்றார் முனிவர்.

"அப்படியானால் நான் உடனேபோய் கற்க வேண்டியவற்றைக் கற்கிறேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி முனிவரே!" என்று சொல்லி விட்டு ஒருவன் எழுந்து முனிவரின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அவரிடம் விடை பெற்றுச் சென்றான்.

அவனைத் தொடர்ந்து இன்னும் இருவரும் அவ்வாறே அவரை வணங்கி விட்டுக் கோளம்பினர்.

ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தான்.

"ஏனப்பா? நீ கிளம்பவில்லையா?" என்றார் முனிவர்.

அவன் எழுந்து நின்று, "முனிவரே! கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப்பொருளை உணர்ந்தால்தான் பிறவியிலிருந்து விடுதலை பெற முடியும் என்று கூறினீர்கள். கற்க வேண்டியவற்றைக் கற்பிக்க முற்றும் உணர்ந்து முனிவராக வாழும் தங்களை விடப்  பொருத்தமானவர்கள் வேறு யார் இருக்க முடியும்? தங்களுக்குப் பணி விடை செய்து தங்களிடமே கல்வி பெற்று மெய்ப்பொருளை உணரும் நிலையை அடைய விரும்புகிறேன். தாங்கள் என்னைச் சீடனாக ஏற்று எனக்கு அருள் புரிய வேண்டும்!' என்று கூறி முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினான் அவன். 

அவனை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக முனிவர் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

பொருள்:
கற்க வேண்டியவற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

357. குருவின் முடிவு

"ஊருக்குப் போய் உன் பெற்றோரைப் பார்த்து விட்டு ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுப் போனாய். ஆனால் ஆறு மாதங்கள் கழித்து வந்திருக்கிறாயே!" என்றார் ரிஷபமுனி கோபத்துடன். 

"மன்னிக்க வேண்டும் ஆசானே! சொன்னபடி வர முடியவில்லை" என்றான் ராமதாசன்.

"உன் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லையா?"

"இறைவன் அருளால் என் பெற்றோர்கள் நலமாகத்தான் இருக்கிறார்கள்."

"அப்படியானால் நீ வேறு எந்தக் காரணம் கூறினாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உனக்கு இந்த குருகுலத்தில் இடமில்லை. நீ போகலாம்!" என்றார் குரு.

"ஐயா! நான் கூறுவதைத் தாங்கள் தயவு செய்து கேட்க வேண்டும்."

"இது ஆன்மீகச் சாதனைக்கான குருகுலம். பொதுவான கல்வி அளிக்கும் குருகுலம் என்றால் உன்னை அனுமதித்திருப்பேன். ஆன்மீகச் சாதனையை, விட்டு விட்டுப் பயில முடியாது. 

"உன் வயதான பெற்றோர்கள் தனிமையில் இருப்பது பற்றி நீ கவலை கொண்டிருந்ததால் அவர்களைச் சென்று பார்த்து விட்டு அவர்களை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டு வரச் சொல்லி நானேதான் உன்னை அனுப்பி வைத்தேன். ஒரு மாதத்துக்குள் உன்னால் திரும்பி வர முடியாவிட்டால் நீ மீண்டும் வர வேண்டாம் என்றும் உன்னிடம் கூறி இருந்தேன். 

"ஆன்மீகச் சாதனைகளைப் பயிலுவதற்கான மனப்பக்குவம் இன்னும் உனக்கு வரவில்லை என்று தோன்றுகிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்னை வந்து பார். உன்னைப் பயிற்சியில் சேர்த்துக் கொள்வது பற்றி அப்போது முடிவு செய்கிறேன்."

ராமதாசனின் பதிலை எதிர்பார்க்காமல் ரிஷபமுனி உள்ளே போய் விட்டார்.

மாலை தன் ஆசிரமத்திலிருந்து ரிஷபமுனி வெளியே வந்தபோது ராமதாசன் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

"நீ இன்னும் போகவில்லையா? காலையிலிருந்து இங்கேயேவா நின்று கொண்டிருக்கிறாய்?" என்றார் ரிஷபமுனி வியப்புடன்.

ராமதாசன் மௌனமாகத் தலையாட்டினான். 

"என்ன சொல்ல விரும்புகிறாயோ அதைச் சொல்லி விட்டுக் கிளம்பு!" என்றார் ரிஷபமுனி, கடுமை தணியாத குரலில்.

"ஐயா! என் பெற்றோரைப் பார்க்கச் சென்றபோது எங்கள் ஊரில் ஒரு தொற்றுநோய் பரவி இருந்தது. என்னால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். 

"மருத்துவரை அழைத்து வந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வைப்பது, அவர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, வசதி படைத்தவர்களிடம் நிதி பெற்று வறுமையான நோயாளிகளுக்கு உதவுவது போன்று சிறிய அளவில் உதவி செய்து வந்தேன். 

"பிறகு நான் உதவி செய்வது தெரிந்து வேறு பலரும் என் உதவியை நாடினார்கள். பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் கூட எனக்கு அழைப்பு வர ஆரம்பித்தது. அப்புறம் பலரை ஒருங்கிணைத்து இன்னும் அதிகமான நபர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். 

"தொற்றுநோயின் தீவிரம் குறைந்து இயல்பான நிலைக்கு வர இத்தனை காலம் ஆகி விட்டது. அதனால்தான் நான் திரும்பி வர இத்தனை காலம் ஆகி விட்டது. தாங்கள் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது, தங்களிடம் நடந்ததைத் தெரிவிக்க வேண்டும் என்றுதான் தங்களைக் காண்பதற்காகக் காத்திருக்கிறேன். 

"தங்களிடம் என் பிரச்னையை இப்போது தெளிவு படுத்தி விட்டேன். தாங்கள் கூறியபடியே ஓரிரு ஆண்டுகள் கழித்துத் தங்களை வந்து சந்திக்கிறேன்."

குருவுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ராமதாசன் கிளம்ப யத்தனித்தபோது, "நில், ராமதாசா!" என்றார் ரிஷபமுனி.

"உள்ளே வா!" என்று சொல்லி விட்டு ரிஷபமுனி தன் ஆசிரமத்துக்குள் செல்ல, ராமதாசன் அவர் பின்னால் சென்றான். 

ஆசிரமத்துக்குள் நுழைந்து தன் ஆனத்தில் அமர்ந்தார் ரிஷபமுனி. ராமதாசனைப் பார்த்து "உட்கார்!" என்றார்.

ராமதாசன் குருவின் எதிரே தரையில் அமர்ந்தான்.

"நான் இங்கே எல்லோருக்கும் ஆன்மீகப் பயிற்சி அளிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உண்மையான ஆன்மீகச் செயலை நீ ஆர்ப்பாட்டமில்லாமல் செய்து விட்டு வந்திருக்கிறாய். உன்னிடம் விவரம் கேட்காமல் உன்னைத் திருப்பி அனுப்பியது தவறுதான். ஆயினும் உனக்கு ஆன்மீகப் பயிற்சி உகந்ததில்லை என்று நான் கூறியது சரிதான்!" என்றார் ரிஷபமுனி.

"குருவே!"

"மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனைதான் மெய்ப்பொருள் ஞானம். மீண்டும் பிறக்காத நிலையை அடைவதுதான் ஆன்மீகம். மெய்ப்பொருளை உணர்ந்து செயல்பட்ட உனக்கு இனி மறுபிறவி இல்லை. எனவே உனக்கு எந்த ஆன்மீகப் பயிற்சியும் தேவையில்லை!"

ரிஷபமுனி ராமதாசனைப் பார்த்தார்.

ராமதாசன் மௌனமாக இருந்தான்.

"ஆயினும் உன்னைப் போல் மெய்ப்பொருளை உணர்ந்த ஒருவன் உடன் இருந்தால், அதனால் ஆன்மீகப் பயிற்சி பெறும் மற்ற மாணவர்கள் பயன் அடைவார்கள். அதனால் நீ பயிற்சியில் தொடரலாம் - மற்றவர்களின் நலனுக்காக!" என்றார் ரிஷபமுனி சிரித்தபடி.

குறள் 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

பொருள்:
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறவி உண்டு என எண்ண வேண்டாம்.

358. ஏன் இப்படி?
"ஏண்டா பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு இவ்வளவு வருஷம் வேல செஞ்சு உயர்ந்த பதவிக்கு வந்துட்டு ரிடயர் ஆகி இருக்க. ஹாய்யா வீட்டில உக்கந்துக்கிட்டு, உல்லாசப் பயணம் போய்க்கிட்டு வாழ்க்கையை சுகமா அனுபவிக்காம, எதுக்கு இந்த சமூக சேவை சமாசாரம் எல்லாம்?" என்றார் முருகப்பன்.

"இத்தனை வருஷமா எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் வாழ்ந்தாச்சு. மீதி இருக்கிற நாட்கள்ள என்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்கு செய்யலாமேன்னுதான்" என்றார் தங்கராஜ்.

"மத்தவங்களுக்கு உதவணும்னா நல்ல தொண்டு நிறுவனமாப் பாத்து நன்கொடை கொடு. உன் குடும்ப உறுப்பினர்கள் பிறந்த நாள் அன்னைக்கு ஏதாவது அநாதை இல்லக் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டுட்டு அவங்களோட ஒரு நாள் இருந்துட்டு வா! நீ எதுக்குப் போய் ஒரு தொழிலாளி மாதிரி களத்தில இறங்கி வேலை செய்யணும்.?

"நமக்கு வசதி இருக்கறப்ப மத்தவங்களுக்குப் பணம் கொடுத்து உதவறது ஒரு விஷயமே இல்ல. நம் உடம்பைக் கொஞ்சமாவது வருத்தி மத்தவங்களுக்கு உதவி செய்யறப்ப கிடைக்கிற மனநிறைவு எவ்வளவு அற்புதமானதுன்னு உணர்ந்து பாத்தாத்தான் தெரியும்."

"என்னவோ எனக்கு உன் மனப்போக்கே புரியல!"

"ஒரு விஷயம் புரியாம இருக்கறது நல்ல ஆரம்பம்தான். எனக்குக் கூட ரொம்ப நாளா வாழ்க்கையோட அர்த்தம் புரியல. படிக்கறது, நல்ல வேலையில இருக்கறது, பணம் சம்பாதிக்கிறது, நம்ம குடும்பத்தை சந்தோஷமா வச்சுக்கறது இதுதான் வாழ்க்கையா, இல்லை இதுக்கு மேல வாழ்க்கையோட உண்மையான அர்த்தம்னு வேற ஏதாவது இருக்கான்னு எனக்கு அடிக்கடி தோணும். 

"இப்ப நான் ரிடயர் ஆனப்பறம் ஒரு தொண்டு நிறுவனத்தில சேர்ந்து அவங்க செய்யற உதவிகள்ள  நானும் பங்கேற்க ஆரம்பிச்சப்பறம் வாழ்க்கையோட அர்த்தம்னு வேற ஏதோ இருக்கும்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அது எனக்கு முழுமையாப் புரியுமான்னு தெரியல. ஒருவேளை நாளடைவில எனக்கு வாழ்க்கையோட அரத்தம் பரியறதுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமா இருக்கலாம்!" என்று சொல்லிச் சிரித்தார் தங்கராஜ்.

"சரி, வாழ்க்கையோட உண்மையான அர்த்ததைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போற?"

"தெரியல. இந்தப் பிறவியோட அர்த்தம் தெரிஞ்சா இனிமே பிறவி இருக்காதுன்னு சில பெரியவங்க சொல்லி இருக்காங்க. அது மாதிரி கூட நடக்கலாம்!"

முருகப்பன் என்ன சொல்வதென்று  தெரியாமல் மௌனமாகத் தன் நண்பரைப் பார்த்தார். 

குறள் 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பொருள்:
பிறவித் துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்கும் வகையில் முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

359. போருக்குப் பின் அமைதி

"வணக்கம் மன்னரே! தாங்கள் என்னை அழைத்ததாகச் செய்தி கிடைத்தது."

"வாருங்கள் படைத்தலைவரே! உங்கள் வீரத்தாலும், பலத்தாலும், நாம் பல போர்களை வென்றிருக்கிறோம். இப்போது இன்னொரு போருக்கு நாம் தயாராக வேண்டும். அதற்குத்தான் உங்களை அழைத்தேன்."

படைத்தலைவர் வல்லபர் மௌனமாக இருந்தார்.

"என்ன வல்லபரே! போர் என்றாலே உற்சாகம் ஆகி விடுவீர்களே! இப்போது ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?" என்றார் அரசர் வியப்புடன்.

"ஒரு விண்ணப்பம் அரசே! தாங்களே குறப்பிட்டபடி நான் பல போர்களில் பங்கேற்று விட்டேன். இனி நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். துணைப் படைத்தலைவர் காரியைப் படைத்தலைவராக நியமித்து எனக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார் வல்லபர்

"ஓய்வெடுக்க வேண்டிய வயதில்லையே உங்களுக்கு? இப்போதுதான் பிராயம் நாற்பதைத் தாண்டி இருக்கிறீர்கள். அறுபதைத் தொடும் நானே இன்னும் ஓய்வு பற்றிச் சிந்திக்கவில்லை! ஏன் இந்த திடீர் முடிவு?" என்றார் அரசர் வியப்புடன்.

"திடீர் முடிவு இல்லை மன்னவா! சில ஆண்டுகளாகவே போர்கள் விளைவிக்கும் துன்பங்களைப் பார்த்து எனக்கு மன வருத்தமும் குற்ற உணர்வும் ஏற்பட்டு வருகிறது. எனவேதான் இனி அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்." 

"ஓய்வு பெற்று என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களால் இல்லத்தில் சோம்பி அமர்ந்திருக்க முடியாதே!"

"நான் போருக்காகப் பல இடங்களுக்குச் சென்றபோது சில அற்புதமான ஆலயங்களைக் காணும் பேறு கிடைத்தது. அங்கெல்லாம் சென்று வழிபட்டபோது எனக்கு ஒரு புத்துணர்வும் அமைதியும் ஏற்பட்டன. அதற்குப் பிறகுதான் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் மனைவிக்கும் ஆலயங்களுக்குச் செல்வதில் அதிக ஆர்வம் உண்டு. இத்தனை காலமும் அவள் விருப்பத்தை நான் பெரிதாக நினைக்கவில்லை. இனி அவளுடன் பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அத்துடன்..."

"அத்துடன்?"

"ஒரு அரசராக மக்களுக்குத் தாங்கள் எத்தனையோ நன்மைகள் செய்து வருகிறீர்கள். ஆயினும் நோய்வாய்ப்பட்டவர்கள், உறவுகள் யாரும் இன்றி கவனித்துக்கொள்ள யாருமின்றித் தனிமையில் வாடும் முதியவர்கள் போன்ற பல மனிதர்களுக்குத் தனிப்பட்ட உதவிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய மனிதர்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்."

"நீங்களும் உங்கள் மனைவியும் ஆலய தரிசனம், ஆதரவற்றோர்க்கு உதவி என்று கிளம்பி விட்டால் உங்கள் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?" என்றார் அரசர்.

வல்லபர் சிரித்து, "அரசே! நானும் என் மனைவியும் துறவறம் மேற்கொள்ளப் போவதில்லை. மற்ற எல்லோரையும் போல் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு இல்லறம்தான் நடத்தப் போகிறோம். இது போன்ற பணிகளால் எங்கள் குடும்ப வாழ்க்கைக்கு எந்தக் குந்தகமும் வராது" என்றார்.

மன்னர் சற்று நேரம் மௌனமாக இருந்தார்.

"என்ன யோசனை மன்னரே!" என்றர் வல்லவர்.

"ஒன்றுமில்லை. உங்களுடன் சேர்ந்து நானும் இந்தப் பணிகளில் ஈடுபடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதற்கான மன முதிர்ச்சி எனக்கு இன்னும் ஏற்படவில்லை. அப்படி ஏற்படும்போது இளவரசனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு நானும் உங்களுடன் சேர்ந்து கொள்வேன்!" என்றார் அரசர் சிரித்தபடி.

"அப்படியானல் என்னைப் பணியிலிருந்து விடுவிக்கத் தங்களுக்குச் சம்மதம்தானே அரசே?"

"ஒரு நிபந்தனையுடன்!" என்றார் அரசர்.

"என்ன நிபந்தனை அரசே?" என்றார் வல்லவர் கவலையுடன்.

"ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய முனையும்போது அரசின் உதவி தேவை என்றால் தயங்காமல் என்னை அணுக வேண்டும். அது கூட வேண்டாம். நீங்கள் என்ன உதவி கேட்டாலும் செய்ய வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிடச் சொல்லி அமைச்சரிடம் சொல்லி விடுகிறேன்."

"மிக்க நன்றி அரசே!" என்றார் வல்லபர்.

குறள் 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

பொருள்:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

360. மறுபரிசீலனை!

"சார்! டைரக்டர் உங்ளைக் கூப்பிடறாரு!" என்று அறிவித்தான் பியூன்.

சம்பந்தம் டைரக்டரின் அறைக்குப் போனபோது, அங்கே இன்னொரு மனிதர் உட்கார்ந்திருந்தார்.

சம்பந்தத்தை அமரச் சொன்ன டைரக்டர், "மிஸ்டர் சம்பந்தம்! இவர் மிஸ்டர் தேவராஜன். இவரோட ப்ராஜக்டுக்கு நிலம் அலாட் பண்ற விஷயமாப் பேச வந்திருக்காரு" என்றார் டைரக்டர். 

"சார்! என்னோட பரிந்துரையை உங்களுக்கு அனுப்பிட்டேனே!" என்றார் சம்பந்தம் டைரக்டரிடம்.

"பாத்தேன். அவரோட பிராஜக்ட் நிலம் அலாட் ஆகத் தகுதி பெறலன்னு சொல்லி இருக்கீங்க. அதை நான் அவர் கிட்ட சொல்லிட்டேன். அவர் இதை மறுபரிசீலனை செய்யச் சொல்லிக் கேக்கறாரு. நீங்கதான் முடிவு செய்யணும்" என்றார் டைரக்டர் சிரித்தபடி.

சம்பந்தத்துக்கு சுருக்கென்று கோபம் வந்தது. அலுவலகத்தின் கோப்புகளில் கூறப்பட்ட கருத்துக்களை வெளியாட்களிடம் அதுவும் விண்ணப்பம் அளித்தவரிடமே பகிர்ந்து கொள்வதே தவறு. அத்துடன் தனக்கு நேரடியான அழுத்தமும் கொடுக்கப்படுகிறது!

கோபம் கொள்ளக் கூடாது என்ற தன் தீர்மானத்தை நினைவு கூர்ந்து சம்பந்தம் தன்னைஃ கட்டுப்படுத்திக் கொண்டார்.

"சாரி! என்னைப் பொருத்தவரை மறுபரிசீலனை செய்யறதுக்கு இதில எதுவும் இல்ல" என்றார் சம்பந்தம் சுருக்கமாக. 

"இவர் யாருன்னு தெரிஞ்சா நீங்க இப்படிப் பேச மாட்டீங்க. இவரு தாமோதரனோட சம்பந்தி. தாமோதரனைத் தான் உங்களுக்குத் தெரியுமே!"

சம்பந்தத்தின் உடல் முழுவதும் குப்பென்று ஒரு உணர்வு பரவியது - கோபம், திகில், அதிர்ச்சி, சோர்வு எல்லாம் கலந்த உணர்வு. 

ஆயினும் உடனே சமாளித்துக்கொண்டு, "ஓ! அப்படியா? தாமோதரன் சாரை நான் ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்க" என்று வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் தேவராஜனிடம் சொல்லி விட்டு டைரக்டரின் பதிலை எதிர் பார்க்காமல் இருக்கையிலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறினார் சம்பந்தம்.

லுவகம் முடிந்ததும் சம்பந்தம் நேரே தன் நண்பர் ராமநாதனின் வீட்டுக்குச் சென்றார். ராமநாதன் சம்பந்தத்தின் உதவியாளராக இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். 

ராமநாதன் சம்பந்தத்தை விட ஐந்து ஆண்டுகள் பெரியவர், சம்பந்தம் அவர் மேலதிகாரியாக இருந்தவர் என்பதையெல்லாம் தாண்டி இருவரிடையேயும் ஒரு நட்பு ஏற்பட்டு, அது ராமநாதன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் நீடித்தது. 

அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை ராமநாதனிடம் சம்பந்தம் விளக்கினார். 

"ஒரு காலத்தில பணத்தாசையால நான் காசு வாங்கிக்கிட்டு சட்டத்தை மீறி நடந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மைதான். அப்ப தாமோதரனுக்கும் நான் சட்டதை மீறி உதவி செஞ்சிருக்கேன். அதை வச்சு டைரக்டர் என்னை மடக்கப் பாத்தாரு. பழசெல்லாம் ஞாபகம் வந்து ஒரு நிமிஷம் வெலவெலத்துப் போயிட்டேன். ஆனாலும் சமாளிச்சுக்கிட்டு முடியாதுன்னு சொல்லிட்டேன்."

"நல்ல வேலை செஞ்சீங்க!" என்றார் ராமநாதன்.

"கடந்த காலத்தில எவ்வளவு முட்டாள்தனமா நடந்துக்கிட்டிருக்கேன்னு நெனச்சா எனக்கே சங்கடமா இருக்கு. அப்பல்லாம் என்னை ஆசை புடிச்சு ஆட்டிச்சு. பணத்தாசை! யாராவது நான் செய்யறது தப்புன்னு சொன்னா கோபம் வரும். இதெல்லாம் தப்புன்னு நீங்க கூட நிறைய தடவை சொல்லி இருக்கீங்க. உங்க மேலயும் நான் கோபப்பட்டிருக்கேன். பணத்தில உங்களுக்கும் பங்கு கொடுத்தா சரியாயிடும்னு நெனச்சேன். ஆனா நீங்க நான் கொடுத்த பங்கை வாங்கிக்கல. அப்புறம் நான் சஸ்பெண்ட் ஆகி, விசாரணையெல்லாம் நடந்து ஆறு மாசம் கழிச்சு என் மேல வந்த புகாருக்கு ஆதாரம் இல்லேன்னு சொல்லித் திரும்பவும் வேலையில சேத்துக்கிட்டாங்க. இதெல்லாம் துன்பங்களை வரவழைச்சுக்கற வழின்னு அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சுது. இப்ப நேர்மையா இருந்துக்கிட்டிருக்கேன். இப்பதான் நிம்மதியா இருக்கு. ஆனாலும் நான் முன்னே செஞ்ச தப்பை வச்சு என்னை வளைச்சுப் போட அப்பப்ப யாராவது முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காங்க!" என்று மனதில் இருந்தவற்றைக் கொட்டித் தீர்த்தார் சம்பந்தம்.

"இப்பதான் நீங்க உறுதியா இருக்கீங்களே! இனிமே உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது" என்றார் ராமநாதன்.

"உங்ககிட்ட மனசு விட்டுப் பேசிட்டுப் போனா நிம்மதியா இருக்கு. அதனாலதான் உங்களைப் பாக்க வந்தேன்" என்று சொல்லி விடை பெற்றார் சம்பந்தம்.

"வாங்க! மனசு விட்டுப் பேசறதுக்குத்தானே நண்பர்கள் இருக்காங்க!" என்று சொல்லி விடை கொடுத்தார் ராமநாதன்.  

குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

பொருள்:
விருப்பு, கோபம், அறியாமை இந்த மூன்றையும் அறவே ஒழித்து விட்டவர்களுக்கு எந்தத் துன்பமும் வராது.

அதிகாரம் 36 - அவாவறுத்தல்

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment