About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, October 30, 2019

291. புலிவேட்டை!

"அப்புறம் தாத்தா, புதுசா வேற ஏதாவது கதை சொல்லுங்க" என்றான் ஒரு சிறுவன்.

"அதான் நிறையக் கதை சொல்லிட்டேனே - ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணர் கதை, முருகன் கதை, விநாயகர் கதைன்னு! இனிமே சொல்லணும்னா நானா இட்டுக்கட்டித்தான் சொல்லணும்!" என்றார் செல்லமுத்து.

"தாத்தா, உங்க கதையைச் சொல்லுங்க. நீங்க வேட்டையாடுவீங்களா?" என்றான் இன்னொரு சிறுவன். 

"ஏன் அப்படிக் கேக்கற?"

"இல்ல, அங்கே ஒரு மான் தலை மாட்டி இருக்கே! அதான் கேட்டேன்" 

"ரொம்ப நாள் முன்னே அஸ்ஸாம் காட்டில இருந்தப்ப வேட்டையாடி இருக்கேன்!"

"அப்படியா? அங்கே மாட்டி இருக்கற மான் தலை நீங்க வேட்டையாடின மானோடதா?"

"சேச்சே! அது மரத்தில செஞ்சது. மானையெல்லாம் நான் வேட்டையாட மாட்டேன். சிங்கம் புலி மாதிரி கொடிய மிருகங்களைத்தான் வேட்டையாடுவேன்."

"அப்ப சிங்கம், புலி, தலையெல்லாம் சேத்து வச்சிருக்கீங்களா?" என்றான் இன்னொரு சிறுவன்.

"சேச்சே! அதெல்லாம் அழுகிப் போயிடும்டா, எப்படி வச்சு வைக்க முடியும்?" என்றான் இன்னொருவன்.

"அதையெல்லாம் பாடம் பண்ணி வைப்பாங்கடா! உனக்குத் தெரியாது" என்றான் முதலில் பேசிய சிறுவன். "சொல்லுங்க தாத்தா! தலைகள் எல்லாம் சேத்து வச்சிருக்கீங்களா?" 

"சேத்து வச்சிருந்தேன். ஆனா அஸ்ஸாமை விட்டு வரச்சே அங்கே இருந்த மியூசியத்துக்குக் கொடுத்துட்டேன்."

"ஏன் தாத்தா அப்படிப் பண்ணினீங்க?"

"அதையெல்லாம் ரயில்ல எடுத்துக்கிட்டு வர அனுமதிக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க!" என்றார் செல்லமுத்து.

"வேட்டையாடின துப்பாக்கியையாவது வச்சிருக்கீங்களா?"

"அதையும் மியூசியத்துக்கே கொடுத்துட்டேன்."

"ஏன் தாத்தா?"

"வேட்டையாடறதுக்கு நம்ப ஊர்ல காடே இல்லையே! துப்பாக்கியை வச்சுக்கிட்டு என்ன செய்யறது?"

"அப்ப நீங்க வேட்டையாடினதுக்கு அடையாளமா எதுவுமே இல்லையா?'" என்றான் ஒரு சிறுவன் ஏமாற்றத்துடன்.

"ஏன் இல்லை? நான் வேட்டையாடின ஒரு புலியோட தோலைப் பாடம் பண்ணி வச்சிருக்கேன்."

"எங்கே, காட்டுங்க தாத்தா! நாங்க அதைப் பாக்கணும்" என்றனர் சிறுவர்கள் பலர் ஒன்று சேர்ந்த குரலில். 

"இருங்க" என்று உள்ளே போன செல்லமுத்து, கையில் 'புலித்தோலுடன்' வந்தார். "இதான். பாருங்க!" என்று அதை அவர்களிடம் காட்டினார்.

சிறுவர்கள் அதைத் தொட்டுப் பார்த்து விட்டு "வழவழன்னு இருக்கே! ஏன் தாத்தா புலியோட தோல் வழவழன்னா இருக்கும்?" என்றனர்.

"சொரசொரப்பாத்தான் இருந்தது. அதை கெமிக்கல் எல்லாம் போட்டு சுத்தம் பண்ணி பாடம் பண்ணி பாலிஷ் பண்ணி வழவழன்னு ஆக்கிட்டாங்க" என்றார் செல்லமுத்து.

"இந்தப் புலித்தோலை வச்சுக்கிட்டு என்ன செய்வீங்க தாத்தா?"

"அதில உக்காந்து தவம் பண்ணுவேன்!"

"நீங்க தவம் பண்ணி இருக்கீங்களா? கடவுள் உங்க முன்னால வந்தாரா?" என்றான் ஒரு சிறுவன் உற்சாகத்துடன்.

"அந்தக் கதையை இன்னொரு நாளைக்குச் சொல்றேன். இன்னிக்கு நேரம் ஆச்சு, வீட்டுக்குப் போய் ஸ்கூல் பாடம்லாம் படிங்க" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் செல்லமுத்து. 

சிறுவர்கள் போனதும், உள்ளிருந்து சிரித்துக்கொண்டே வந்த அவர் மனைவி, "ஏங்க,  நீங்க எப்ப அஸ்ஸாம்ல இருந்தீங்க? எப்ப புலி வேட்டை ஆடினீங்க? தவம் வேற பண்ணினீங்களாம்! கடையில வாங்கின பிளாஸ்டிக் புலித்தோலைக் காட்டிப் பசங்களை நல்லா ஏமாத்தறீங்க! உள்ளே இருந்து கேட்டப்ப எனக்கு சிரிப்புத் தாங்கல. எதுக்குங்க இவ்வளவு பொய்யி?" என்றாள்.

"பையன்களை சந்தோஷப்படுத்தறதுக்காக அப்படிச் சொன்னேன். அவங்க சுவாரசியமா கேட்டுட்டு சந்தோஷமாப் போறாங்க பாரு. அவங்க இதை உண்மைன்னு நம்பறதால ஒண்ணும் கெட்டுப் போயிடப் போறதில்லையே!!" என்றார் செல்லமுத்து.  
அறத்துப்பால்
துறவறவியல்
     அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

பொருள்:
உண்மை என்பது என்னவென்றால், அது யாருக்கும் எந்தத் தீங்கையும் விளைவிக்காத ஒரு சொல் ஆகும்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்
















Monday, October 28, 2019

290. நண்பரைச் சந்தித்தபோது...

தன் நண்பர் முத்துசாமி உடல்நலம்  சரியில்லாமல் தஞ்சாவூரில் தன் மகன் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று அறிந்து அவரைப் பார்க்கச் சென்றார் மாதவன். 

இருவரும் அரசாங்கத்தில் ஒரே இலாகாவில் பணிபுரிந்தவர்கள். சில சமயம் ஒரே ஊரில், ஒரே அலுவலகத்திலும், சில சமயம் வேறு ஊர்களிலும் பணி புரிந்தவர்கள். வேலை பற்றிய அணுகுமுறையில் இருவரும் இரு துருவங்கள்.  

மாதவன் நேர்மைக்கும், கடமை உணர்ச்சிக்கும் பெயர் பெற்றவர். முத்துசாமியிடம் பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்பது ஊரறிந்த விஷயம். வறுமையில் உள்ளவர்களுக்கு சாதாரண சான்றிதழ்கள் வழங்கக் கூட அவர்களிடம் ஈவு இரக்கம் இல்லாமல் பணம் கறந்து விடுவார் முத்துசாமி.  

பணி செய்த காலத்திலேயே தன் சொந்த ஊரில் நிலங்கள் வாங்கியவர் முத்துசாமி. இது தவிர தஞ்சாவூரில் ஒரு பெரிய வீட்டையும் தன் மகன் பெயரில் வாங்கி இருந்தார். அவர் மனைவியின் தந்தையால் தன் பேரனுக்குப் பரிசாக வாங்கிக் கொடுக்கப்பட்ட வீடாக அது பதிவு செய்யப்பட்டது. முத்துசாமியின் மாமனாருக்கு விவசாய வருமானம் இருந்ததால் வருமான வரிப் பிரச்னை எழவில்லை. அந்த வீட்டில்தான் இப்போது உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார் முத்துசாமி.

முத்துசாமி பற்றி மாதவனுக்கு நன்கு தெரியும் என்றாலும், எதனாலோ இருவருக்குமிடையே ஒரு நட்பு ஏற்பட்டு அது நீடித்து வந்தது. தங்கள் அலுவலகப் பணி குறித்து மிகவும் குறைந்த அளவே பேசி, அலுவலக விஷயங்கள் தங்கள் நட்பை பாதிக்காமல் இருவருமே பார்த்துக் கொண்டனர்.

முத்துசாமியின் வீடு நகருக்கு சற்று வெளிப்புறத்தில் அமைந்திருந்தது. காம்பவுண்ட் சுவருடன் கூடிய தனி வீடு. 

மாதவன் அழைப்பு மணியை அடித்ததும், கதவைத் திறந்த பெண்மணி, "யார் வேணும்?" என்றாள்.

"நான் முத்துசாமியோட நண்பன்" என்றார் மாதவன். 

"உள்ள வாங்க!" என்று அழைத்தவள்  வாசற்படி தாண்டியதுமே, வலது புறம் இருந்த ஒரு அறையைக் காட்டி விட்டு உள்ளே போய் விட்டாள்.

மாதவனுக்கு முதலில் அங்கே ஒரு அறை இருப்பதே கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு இருட்டு! கொஞ்சம் தடுமாறிக் கொண்டுதான் உள்ளே சென்றார்.

உள்ளே கட்டிலில் ஒருவர் படுத்திருப்பது தெளிவில்லாமல் தெரிந்தது. 

அறைக்குள் நுழைந்ததும் குப்பென்று ஒரு நெடி அடித்தது. 

இருட்டுக்குள் கண்கள் பழகியதும், "முத்துசாமி!" என்று அழைத்தார் மாதவன் கட்டிலுக்கு அருகில் சென்று.

குரல் கேட்டுக் கண் விழித்த முத்துசாமி ஒரு நிமிடம் அவரை உற்றுப் பார்த்து விட்டு, "மாதவா! வா வா! எவ்வளவு சந்தோஷமா இருக்கு! உக்காரு" என்றவர், "சாரி. இங்கே நாற்காலி எதுவும் இல்லை. இப்படி கட்டிலிலே ஓரமா உக்காரு" என்றார்.

மாதவன் சற்றுத் தயங்கி விட்டுக் கட்டிலில் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அந்த நெடியைத் தாங்கிக் கொண்டு அறையில் இருப்பதே அவருக்குக் கடினமாக இருந்தது. 'இவன் எப்படி இந்த நெடியிலேயே படுத்துக் கொண்டிருக்கிறான்!'

"உடம்பு எப்படி இருக்கு உனக்கு?" என்றார் மாதவன்.

"அதான் பாக்கறியே. படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலைமை."

"யாரு பாத்துக்கறாங்க உன்னை?"

"ஒரு நர்ஸ் போட்டிருக்காங்க. ராத்திரியில ஒரு ஆளு இருப்பான். ஆனா இந்த ரூம்ல நெடி அடிக்குதுன்னு யாரும் உள்ளே வர மாட்டாங்க. வெளியில எங்கேயாவது இருப்பாங்க. நான் கத்தினா கூட அவங்களுக்குக் கேக்காது."

"ஆமாம், என் இப்படி நெடி அடிக்குது? ரூமை சரியா க்ளீன் பண்றதில்லையா?"

"அதெல்லாம் பண்ண மாட்டாங்க. என்னை ஒரு காத்தோட்டமான இடத்தில படுக்க வைக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு. ஆனா இந்த ரூம் காத்து வெளிச்சம் இல்லாத குகை. கிராமத்தில எல்லாம் சாகக் கிடக்கறவங்களை ரேழியில போடறதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி போட்டு வச்சிருக்காங்க என்னை. இவ்வளவு பெரிய வீட்டில, எனக்கு ஒரு காத்தோட்டமான அறை கொடுக்க இவங்களுக்கு மனசில்லை. நான் வாங்கின வீடு இது! ரூமை சரியா க்ளீன் பண்றதும் இல்ல. என்னால இந்த நெடியைத் தாங்கிக்கிட்டு இங்க இருக்க முடியல. ஆனா நான் என்ன செய்ய முடியும்?"

"ஏன் இப்படி? உன் பையன்கிட்ட சொல்றதுதானே?"

"அவன் என்னை வந்து பாத்தே பலநாள் ஆச்சு. நான் செத்துப் போனப்பறம் என்னைத் தூக்கிக்கிட்டுப் போய் எரிக்கத்தான் வருவான்னு நினைக்கிறேன். ஏதோ குடும்பத்துக்கு சம்பாதிக்கறதா நினைச்சு தப்பால்லாம் சம்பாதிச்சேன். ஏழை பாழைகள்னு கூட இரக்கம் காட்டாம எல்லார்கிட்டயும் பணம் பிடுங்கினேன். இப்ப என் பொண்டாட்டி போயிட்டா. என் சொத்தையெல்லாம் அனுபவிக்கிற என் பையனுக்கு எனக்கு வைத்தியம் பாக்கறதில அக்கறை இல்லை. ஆஸ்பத்திரியில சேத்து விடுன்னு சொன்னேன். செலவு அதிகமாகும்னு வீட்டிலேயே போட்டு வச்சிருக்கான். இன்னும் எத்தனை நாள் இந்த அவஸ்தைன்னு தெரியல." 

முத்துசாமி விக்கி விக்கி அழ ஆரம்பித்தார்.

"அழாதே முத்துசாமி! உனக்கு சீக்கிரமே உடம்பு சரியாகிடும்" என்றார் மாதவன். தன் நண்பனின் நிலையைப் பார்த்தபோது அவருக்கே அழுகை வந்து விடும் போல் இருந்தது.

"இல்லடா! எனக்கு நல்லா புரியுது. இதெல்லாம் நான் செஞ்சதுக்கு தண்டனை. செத்துப் போனப்பறம் நரகத்துக்குப் போவேனோ என்னவோ தெரியாது. இந்த உலகத்திலேயே நரகத்தை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்." 

மாதவன் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தார்.

"உன்னைப் பாக்கறப்ப, நானும் உன்னை மாதிரி இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு தோணுது. நீ இப்ப நல்ல வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்க. சொர்க்கம், நரகம்னெல்லாம் உண்மையாவே இருந்தா, நீ நிச்சயம் சொர்க்கத்துக்குப் போவ!" 

மாதவன் தன் நண்பரின் கையைப் பிடித்து ஆதரவுடன் மெல்ல அழுத்தினார்.

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

பொருள்:
களவு செய்து வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையே தவறிப் போகும். களவு செய்யாமல் நேர்மையாக வாழ்பவர்க்கு தேவருலகமும் கிடைக்கத் தவறாது.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்









Sunday, October 27, 2019

289. பேச்சு வார்த்தை!

"அரசாங்கத்தில் உயர் அதிகாரியா இருந்திருக்காரு. நல்ல நிர்வாகி, ஸ்ட்ரிக்ட்டா இருக்கறவர்னு பேர் வாங்கி இருக்காரு. நம்ம கம்பெனியில ஜெனரல் மேனேஜர் ஹெச் ஆர் பதவிக்கு இவர் ரொம்ப பொருத்தமா இருப்பார்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?" என்றார் நிர்வாக இயக்குனர் கணபதி.

தலைமை நிர்வாக அதிகாரி கண்ணன் சற்றுத் தயங்கினார்.  

"என்ன யோசிக்கிறீங்க? அரசாங்கத்தில் வேலை செஞ்சவரு நம்ப கம்பெனிக்கு சரியா வருவாரான்னு பாக்கறீங்களா?"

"அதில்லை சார். அரசாங்கத்தில வேலை செஞ்சவரா இருந்தாலும் நம்ப கம்பெனி நடைமுறைகளுக்கு அவர் அட்ஜஸ்ட் பண்ணிக்கறதில ஒண்ணும் பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா அவரைப் பத்தி நான் கேள்விப்பட்ட சில விஷயங்கள்..."

"ஓ, லஞ்சம் வாங்கறவர்னு அவரைப் பத்தி இருக்கற இமேஜைப் பத்தி சொல்றீங்களா? இருக்கலாம். இங்கே அதுக்கெல்லாம் அவருக்கு வாய்ப்பே இல்லையே! பர்சேஸ் மாதிரி துறையா இருந்தா யோசிக்கணும். ஊழியர்கள் நிர்வாகத்தில அவரால என்ன செய்ய முடியும்? அவரோட ஸ்ட்ரிக்ட்டான அணுகுமுறையும், நிர்வாகத் திறமையும் நமக்கு உதவியா இருக்கும். நம்ப கம்பெனியில யூனியனோட ஆட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கு. அதை அடக்க இவரை மாதிரி ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அவரையே அப்பாயின்ட் பண்ணிடுங்க" என்றார் கணபதி.

அதன்படி ஒய்வு பெற்ற அரசு அதிகாரி சந்திரபோஸ் அந்த நிறுவனத்தில் பொது மேலாளர் (ஊழியர் நிர்வாகம்) என்ற பதவிக்கு அமர்த்தப்பட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கண்ணன் நிர்வாக இயக்குனர் கணபதியின் அறைக்கு வந்தார். "சார்! யூனியன் லீடர் நாராயணன் உங்களைப் பாக்கணும்கறார்" என்றார்.

"என்னை எதுக்குப் பாக்கணும்? இப்ப சம்பள உயர்வு விஷயமா சந்திரபோஸோட பேச்சு நடத்திக்கிட்டிருக்காங்க இல்ல? பேச்சு வார்த்தை முடிஞ்சதும் ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால என்னைச் சந்திக்கறதுதானே வழக்கம்?" என்றார் கணபதி.

"பேச்சு வார்த்தையிலே ஏதோ பிரச்னையாம். அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேசணும்கறாரு."

"பாத்தீங்களா?" என்றார் கணபதி புன்னகையுடன். "நான் எதிர்பார்த்த மாதிரியே சந்திரபோஸ் ஸ்ட்ரிக்ட்டா இருக்கறது யூனியன்காரங்களை அப்செட் பண்ணி இருக்கு. அதான் எங்கிட்ட ஓடி வராங்க. சரி, எதுவாயிருந்தாலும் உங்ககிட்ட பேசிக்கட்டுமே, எங்கிட்ட எதுக்கு வராரு?"

"இல்லை சார். பிரச்னை கொஞ்சம் சீரியஸ். அவர் முதல்ல எங்கிட்டத்தான் வந்தாரு. நான்தான் இது உங்களுக்குத் தெரியணும்னு உங்களைச் சந்திக்க அவரை அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன். வெளியிலதான் இருக்காரு."

"சரி. பாக்கறேன்" என்ற கணபதி மணியை அடித்து பியூனை அழைத்து வெளியே காத்திருந்த யூனியன் தலைவர் நாராயணனை உள்ளே அனுப்பும்படி சொன்னார்.

நாராயணனுடன் இன்னொருவரும் உள்ளே வந்தனர்.

"உங்களை மட்டும்தானே வரச் சொன்னேன்? எதுக்கு இன்னொருத்தர்?" என்றார் கணபதி கோபத்துடன்.

"சாரி சார்! உங்க ஜி எம் அப்படி ஒரு நிலைமையை உருவாக்கிட்டாரு. நான் மட்டும் உங்ககிட்ட தனியா பேசினா, நான் உங்ககிட்ட டீல் போட்டுட்டதா தொழிலாளர்கள் நினைச்சுடக் கூடாதுங்கறதுக்காகத்தான் சாட்சிக்கு இன்னொருத்தரை வச்சுக்கிட்டு உங்ககிட்ட பேச விரும்பறேன்" என்றார் நாராயணன்.

"எதுக்கு சாட்சி? என்ன சொல்றீங்க?"

"சார்! எத்தனையோ வருஷமா நாங்க நிர்வாகத்துக்கிட்ட எத்தனையோ விஷயங்கள் பத்திப் பேசி இருக்கோம். சில சமயம் உடன்பாடு ஏற்பட்டிருக்கு. சில சமயம் உடன்பாடு ஏற்படாம கசப்பு உணர்வு மட்டும் மிஞ்சி இருக்கு. ஆனா, இந்த முறை புதுசா வந்திருக்கற உங்க ஜி எம் பணம் கொடுத்து என்னை விலைக்கு வாங்கப் பாக்கறாரு!" என்றார் நாராயணன் கோபத்துடன்.

"என்ன சொல்றீங்க? உங்களை விலைக்கு வாங்கறதா?"

"ஆமாம் சார். உங்க ஜி எம்எங்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா?  'நீங்க கேக்கற அளவு சம்பள உயர்வு கொடுக்க முடியாது. கொஞ்சம்தான் கொடுப்போம். உங்களுக்குத் தனியா ஒரு தொகை கொடுத்துடறோம். நீங்க ஊழியர்கள் கிட்டப் பேசி சம்மதிக்க வைங்க'ன்னு சொல்றாரு. உங்க சம்மதத்தோடதான் அவர் இப்படிச் சொன்னாரா?" என்றார் நாராயணன் கோபம் குறையாமல்.

கணபதி அதிர்ச்சியுடன் கண்ணனைப் பார்த்தார். 'நான் அப்பவே சொன்னேனே, சார்! நேர்மையில்லாதவரைப் போட வேண்டாம்னு!' என்று சொல்வது போல் அவர் நிர்வாக இயக்குனரை மௌனமாகப் பார்த்தார்.

"ஹௌ ப்ரிபாஸ்ட்ரஸ்!" என்ற கணபதி, கண்ணனிடம், "அவரை உடனே டிஸ்மிஸ் பண்ணுங்க!" என்றவர், நாராயணனைப் பார்த்து, "ஐ ஆம் சாரி! நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்!" என்றார்.  

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

பொருள்:
களவு தவிர மற்ற வழிகளை அறியாதவர், முறையற்ற செயல்களைச் செய்து கெட்டு அழிவர்.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்














288. இரண்டு பேர்!

"என்ன சார், உங்களை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்களாமே!" என்றார் சரவணமுத்து, வருத்தமான குரலில். 

"ஆமாம். எங்க கேரியர்ல இதெல்லாம் வழக்கமா நடக்கற விஷயங்கள்தானே?" என்றார் மணி சிரித்துக் கொண்டே. 

"உங்களை மாதிரி நேர்மையா இருக்கறவங்க மாத்திப் போனா எங்களுக்கு வருத்தமாத்தான் இருக்கும். ஆனா இதில என்னோட சுயநலமும் இருக்கே!" என்றார் சரவணமுத்து சிரித்தபடி.

"கவலைப்படாதீங்க. நான் ரிலீவ் ஆக இன்னும் பத்து நாள் ஆகும். அதுக்குள்ளே உங்க அப்ளிகேஷனை கிளியர் பண்ணிடறேன். நான் பார்த்தவரையில உங்க அப்ளிகேஷன்ல எல்லாமே சரியாத்தான் இருக்கு. நான் ஃபார்வர்ட் பண்ணிடறேன்." 

"தாங்க்ஸ் சார். நீங்க ஃபார்வர்ட் பண்ணினா, ஜிம் எம் சாங்ஷன் பண்ணிடுவாரு."

ரண்டு நாட்கள் கழித்து சரவணமுத்து வந்தபோது, மணியின் சீட்டில் புதிதாக ஒருவர் உட்கார்ந்திருக்க, மணி அவர் எதிரில் உட்கார்ந்திருந்தார்.

"இவர்  மிஸ்டர் தயாளன். எனக்கு பதிலா வந்திருக்காரு. நான் என் பொறுப்புகளை இவர் கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிட்டேன். தயாளன், இவர் மிஸ்டர் சரவணமுத்து. இவர் அப்ளிகேஷன் ப்ராசஸ்ல இருக்கு. நான் கம்ப்ளீட் பண்றதுக்குள்ள உங்ககிட்ட சார்ஜ் ஹாண்ட் ஓவர் பண்ணச்  சொல்லிட்டாங்க. அதைக் கொஞ்சம் பாத்துக்கங்க" என்றார் மணி.

"நிச்சயமா! நீங்க ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன். நான் உங்க அப்ளிகேஷனைப் பாத்து வைக்கறேன்" என்றார் தயாளன், சரவணைமுத்துவைப் பார்த்து.

ணி அந்த அலுவலகத்திலிருந்து மாறிச் சென்றபின் ஒரு மாதம் கழித்து விடுமுறையில் மீண்டும் அந்த ஊருக்கு வந்தபோது தன் பழைய அலுவலகத்துக்கு வந்தார். அப்போது தயாளனின் அறைக்குச் சென்றபோது அங்கே அவர் இல்லை. பார்வையாளர்கள் இருக்கையில் தயாளனுக்காகக் காத்திருப்பது போல் சரவணமுத்து உட்கார்ந்திருந்தார்.

இருவரும் வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்துக்கொண்ட பிறகு, "உங்க அப்ளிகேஷன் சாங்ஷன் ஆயிடுச்சு இல்ல?" என்றார் மணி.

சரவணமுத்து "ஆயிடுச்சு, ஒருவழியா! இன்னிக்கு ஆர்டர் கொடுக்கறதா சொன்னார். அதான் வந்தேன். அவர் ஜி எம் ரூமுக்குப் போயிருக்காரு" என்றவர் யாரும் உள்ளே வருகிறார்களா என்று அறைக்கதவைப் பார்த்தபடி, "நீங்க இருந்தப்பவே முடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்!" என்றார்.

"நான் ப்ராசஸ் பண்றதுக்குள்ள என் இடத்தில ஜாயின் பண்ண தயாளன் வந்துட்டாரு. அவர்கிட்ட எல்லாத்தையும் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு என்னை உடனே ரிலீவ் ஆகச் சொல்லிட்டாங்க. நான் பாதி முடிச்சிருக்கற ரெண்டு மூணு அப்ளிகேஷனை முடிச்சுடறதா தயாளன்கிட்ட சொன்னேன். அவரு 'வேண்டாம் நானே பாத்துக்கறேன்'னு சொல்லிட்டாரு. அதான் உங்களோடது சாங்ஷன் ஆயிடுச்சே? கொஞ்சம் தாமதமாயிடுச்சு போலருக்கு!" என்றார் மணி.

"தாமதம் மட்டும் ஆயிருந்தா பரவாயில்லையே!..." என்ற சரவணமுத்து, சற்றுத் தயங்கியபின், மீண்டும் ஒருமுறை அறைக்கு வெளியே பார்த்து விட்டு, "நீங்க நல்ல மனுஷன். நீங்க நல்லதை மட்டும்தான் நினைப்பீங்க. அதனாலதான் பெண்டிங் அப்ளிகேஷனை எல்லாம் முடிக்கணும்னு முயற்சி செஞ்சிருக்கீங்க. ஆனா தயாளன் உங்களை மாதிரி இல்ல. எங்ககிட்டல்லாம் பணம் வசூல் பண்றதுக்காகத்தான் அவரு உங்களை முடிக்க வேண்டாம்னு சொல்லி, தானே அதையெல்லாம் ப்ராசஸ் பண்ணி இருக்காரு!" என்றார் வெறுப்புடனும், கோபத்துடனும்.

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

பொருள்:
அளவறிந்து நெறியோடு வாழ்பவர் நெஞ்சில் அறம் இருக்கும். களவு செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நெஞ்சில் வஞ்சம் இருக்கும்.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்















Saturday, October 26, 2019

287. விசாரணையின் முடிவு

"சபரிங்கற உயர் அதிகாரியைக் கையும் களவுமா லஞ்சப் பணத்தோட பிடிச்சிருக்காங்க. அதைப் பத்தி விசாரணை நடத்த உன்னையும் என்னையும் நியமிச்சிருக்காங்க" என்றார் பாஸ்கர்.

"சரி. நம்ப ரெண்டு பேர் கிட்ட இந்த விசாரணையை ஒப்படைச்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?" என்றார் சேகர். 

"இருக்கு. நாம ரெண்டு பேரும் ரெண்டு விதமான பார்வையில இதை அணுகுவோம்னு அவங்களுக்குத் தெரியும். அதனால ஒரு பாலன்ஸ்ட் அப்ரோச் இருக்கும்னு நினைக்கறாங்க!"

"ஆமாம். நீ சாட்சிகளையும், சான்றுகளையும் வச்சுப் பாப்ப. நான் மனிதர்களோட இயல்பை வச்சுப் பாப்பேன்." 

"ஆமாம். அப்ப நீ உன் வழியில இன்வெஸ்டிகேட் பண்ணு. நான் என் வழியில பண்றேன். இதான் கேஸ் ஃபைல்" என்று ஃபைலை நீட்டினார் பாஸ்கர்.

ஃபைலை வாங்கிப் பார்த்த சேகர், அதில் இருந்த ஃபோட்டோவைப் பார்த்து விட்டு, "இந்த மூஞ்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!" என்றார்.

ரு வாரம் கழித்து இருவரும் மீண்டும் சந்தித்தபோது, "உன் முடிவு என்ன?" என்றார் பாஸ்கர்.

"இந்த ஆளு நிச்சயமா தப்பு செஞ்சிருக்க மாட்டாரு!" என்றார் சேகர்.

"செஞ்சிருக்க மாட்டார்னுதான் சொல்ல முடியுமா? செய்யலேன்னு சொல்ல முடியாதா?" என்று கேட்டார் பாஸ்கர். 

"நான் சாட்சியங்களை வச்சு சொல்லலியே! மனித நடத்தைகளையும், அவை மூலமா வெளிப்படற இயல்புகளையும் வச்சுத்தானே சொல்றேன்! சரி. சாட்சியங்கள் அடிப்படையில நீ நடத்தின விசாரணையோட முடிவு என்ன?"

"அதை நான் அப்புறம் சொல்றேன். நீ எப்படி இந்த முடிவுக்கு வந்தேன்னு முதல்ல சொல்லு."

"லஞ்சம் வாங்கினதா சொல்லப்படற சபரியைப் பத்தி வெளியில பல இடங்கள்ள விசாரிச்சேன். அவர் ஒரு பெரிய அதிகாரி. சமூகத்தில அந்தஸ்து உள்ளவர். ஆனா வெளியில எங்கியுமே அவர் தன்னோட பதவியையோ அந்தஸ்தையோ வெளிக் காட்டிக்கிட்டதில்ல. ஒரு தடவை  பாங்க்ல டிராஃப்ட் வாங்கறதுக்காக அவர் வரிசையில நிக்கறதைப் பாத்துட்டு பாங்க் மானேஜர் அவரைத் தன்னோட அறையில வந்து உக்காரச் சொல்லி இருக்காரு. டிராஃப்டை ரெடி பண்ணிக் கொண்டு வந்து கொடுப்பாங்கன்னு மானேஜர் சொன்னப்ப, சபரி அதை மறுத்துட்டு வரிசையில நின்னு கவுன்ட்டர்ல அப்ளிகேஷன் கொடுத்து டிராஃப்ட் வாங்கிக்கிட்டுப் போயிருக்காரு. 

"அவர் பையனைப் பள்ளிக்கூடத்தில சேக்கப் போனப்ப, பள்ளிக்கூடத்தில நன்கொடை கேட்டிருக்காங்க. ஆனா அதுக்கு ரசீது கொடுக்க மாட்டோம்னு சொல்லியிருக்காங்க. நன்கொடை கொடுக்கறேன், ஆனா ரசீது இல்லாம கொடுக்க மாட்டேன்னு  சொல்லிட்டு வேற பள்ளிக் கூடத்தில பையனைச் சேத்திருக்காரு."

"அப்படியா? அப்புறம்?" என்றார் பாஸ்கர்.

"விதிகளையெல்லாம் கொஞ்சம் கூட மீறாம பின்பற்றற அவரோட இயல்பு பற்றி இன்னும் இது மாதிரி பல சம்பவங்களைப் பல பேர் சொன்னாங்க. பொதுவா பெரும்பாலானோர் வருமானத்தில் காட்டாத சின்னச் சின்ன வருமானங்களைக் கூட சபரி தன் வருமானத்தில் காட்டி அதுக்கு வரி கட்டுவார்னு அவரோட ஆடிட்டர் சொன்னாரு. 

"முதல்ல ஃபைல்ல அவர் ஃபோட்டோவைப் பார்த்தப்ப அவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்குன்னு சொன்னேன் இல்ல? அப்புறம்தான் ஞாபகம் வந்தது. ஒரு கல்யாண வரவேற்பில அவரைப் பாத்திருக்கேன். மேடைக்குப் போய் மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்றதுக்காக நிறைய பேர் வரிசையில நின்னுக்கிட்டிருந்தாங்க. சபரியும் நின்னுக்கிட்டிருந்தாரு. அவரைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் அவரை முன்னால போகச் சொன்னாங்க. பெண்ணோட அப்பா வந்து அவரை மேடைக்கு அழைச்சுக்கிட்டுப் போறதுக்காகக் கூப்பிட்டாரு. அவரு போகல. வரிசையிலதான் வருவேன்னு பிடிவாதமா இருந்து அரை மணி நேரத்துக்கு மேல வரிசையில நின்னு மேடைக்குப் போனாரு. தன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில இவ்வளவு ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நேர்மையான அணுகுமுறையையும் கடைப்பிடிக்கிற ஒரு மனுஷன் நிச்சயம் லஞ்சம் வாங்கியிருக்க மாட்டார்னு நான் நினைக்கிறேன்" என்று முடித்தார் சேகர் 

"ஒருவேளை சாட்சியங்கள் அவரைக் குற்றம் செஞ்சவர்னு காட்டினா?"

"எனக்கு ஏமாற்றமா இருக்கும். நான் வேற என்ன சொல்ல முடியும்?"

"கவலைப்படாதே! சாட்சியங்கள்ளேந்தும் அவர் குற்றம் செய்யலேங்கற முடிவுக்குத்தான் நானும் வந்திருக்கேன். அவரை மாட்ட வைக்க சில பேர் செஞ்ச ஏற்பாடு இதுங்கறதை நான் கண்டு பிடிச்சிருக்கேன். ஆனா அவரோட நடத்தையையும், பொதுவான செயல்பாடுகளையும் வச்சே இந்த முடிவுக்கு வந்த உனக்கு என்னோட பாராட்டுக்கள்" என்றார் பாஸ்கர்.

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

பொருள்:
அளவறிந்து நெறியோடு வாழ்வதை விரும்புகிறவர்களிடம் களவு என்னும் தீய சிந்தனை இருக்காது.
 பொருட்பால்                                                                                   காமத்துப்பால்













Friday, October 25, 2019

286. மதிய உணவு

"நான் சொன்ன தொகையைக் கொண்டு வந்திருக்கீங்களா?" என்றான் மாசிலாமணி.  

அவர் சுற்றுமுற்றும் பார்த்து விட்டுக் கையில் இருந்த கவரை அவன் கையில் ரகசியமாகக் கொடுப்பது போல் அழுத்தினார். 

"நாளைக்கு வந்து ஆர்டர் வாங்கிக்கிட்டுப் போங்க" என்றான் மாசிலாமணி.

"ஏம்ப்பா, உண்மையாவே பணம் உங்க ஆஃபீசருக்குத்தானா, இல்ல, அவர் பேரைச் சொல்லி நீ பணம் வாங்கறியா?" என்றார் அவர்.

"அப்ப, பணம் கொடுக்காதீங்க. ஆஃபீசரைப் பாத்துப் பேசி ஆர்டர் வாங்கிக்கங்க!" என்று கவரை அவரிடம் திருப்பிக் கொடுக்கப் போனான் மாசிலாமணி.

"கோவிச்சுக்காதப்பா. அவரைப் பாத்தா விபூதி குங்குமம்லாம் இட்டுக்கிட்டு சாமியார் மாதிரி இருக்காரே, அவரு பணம் கேப்பாரான்னு எனக்கு சந்தேகமா இருந்தது. அதான் கேட்டேன்."

'அவரா சாமியார்?' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான் மாசிலாமணி.

சோமசுந்தரம் அறையில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவர் அறைக்குச் சென்று கவரைக் கொடுத்த மாசிலாமணி, "சார்! இது சுந்தர் கேசுக்காக" என்றான்.

"அவர் சுந்தர். நான் சோமசுந்தரம், முடிச்சுடலாம்" என்று சிரித்தார் சோமசுந்தரம்.

"சார்! அப்புறம் அந்த சீனிவாசன் கேசு..."

"அவருதான் இன்னும் பணம் கொடுக்கலியே?"

"இல்ல சார். அவரு ரொம்ப கஷ்டப்படறவரு. 'என்னால ரெண்டுதான் கொடுக்க முடியும்'னு சொல்றாரு."

"இப்படியெல்லாம் கருணை காட்டினா, நாம பிச்சைக்காரங்களாத்தான் இருக்கணும்! யாரா இருந்தா என்ன? அஞ்சு கொடுத்தா வேலை நடக்கும். இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடு" என்றார் சோமசுந்தரம் நிர்தாட்சண்யமாக.

"சரி சார்."

"அப்புறம், என் டிஃபன் பாக்சில் இருக்கறதை நீ சாப்பிட்டுட்டு எனக்கு முத்துசாமி ஹோட்டல்லேந்து பிரியாணி வாங்கிக்கிட்டு வந்துடு" என்றார் சோமசுந்தரம்.

"ஏன் சார் உங்க வீட்டில கொடுத்தனுப்பின சாப்பாட்டை சாப்பிடாம ஹோட்டல்ல வாங்கிக்கிட்டு வரச் சொல்றீங்க?"

"இந்த மாசக் கடைசியில எங்க குலதெய்வம் கோவிலுக்கு ஒரு வேண்டுதலுக்காகப் போறோம். அதுக்காக, பதினைஞ்சு நாள் அசைவம் சாப்பிடாம விரதம் இருக்கணும்னு வீட்டில உத்தரவு போட்டிருக்காங்க! எனக்குத்தான் அசைவம் இல்லாம சரியா வராதே! ரெண்டு வாரத்துக்கு நீ சாப்பாடு கொண்டு வராதே. எங்க வீட்டு சாப்பாடுதான் உனக்கு!" என்றார் சோமசுந்தரம் சிரித்தபடி.

"ஏன் சார், குலதெய்வம் கோவிலுக்குப் போறப்ப விரதத்தை மீறினா குத்தமாயிடாதா?"

"விரதமாவது மண்ணாங்கட்டியாவது! வாய்க்கு ருசியா சாப்பிடறதை  விட்டுட்டு, விரதம் இருக்கேன்னு வரட்டுச் சோத்தைத் தின்னுக்கிட்டு இருக்கணுமா என்ன?" என்றார் சோமசுந்தரம்.

'அது சரி! உங்களை மாதிரி அடுத்தவங்க பணத்தைப் பிடுங்கறததையே தொழிலா வச்சுக்கிட்டிருக்கறவங்ககிட்டல்லாம் விரதம், கட்டுப்பாடு இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?' என்று நினைத்துக் கொண்டான் மாசிலாமணி.

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

பொருள்:
களவு செய்து பிறர் பொருளை அடைவதில் விருப்பம் உள்ளவர் அளவறிந்து நெறியோடு வாழும் வாழ்வை வாழ மாட்டார்.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்

















285. அவசரமாகச் சென்றவள்

"ஆறு மாசமாப் படுத்துக் கிடக்கேன். ஒத்தர் கூட வந்து எட்டிப் பாக்கல. நீயாவது இப்ப வந்தியே!" என்றாள் சாரதா.

"குடும்பத்தை விட்டுட்டு வரது அவ்வளவு சுலபமில்லை சாரதா!" என்றாள் அவள் அக்கா வசந்தா.  

தனக்குக் குடும்பம் இல்லையென்று அக்கா சொல்லிக் காட்டுகிறாளோ என்ற சந்தேகத்துடன் சாரதா வசந்தாவைப் பார்த்தாள்.

"அதுவும் வெளியூர்லேந்து வரதுங்கறது சுலபம் இல்ல. இப்பவே என்னை யாரும் போக விடல. நான்தான் பிடிவாதமா உன்னைப் பாக்கணும்னு வந்தேன். உடம்பு எப்படி இருக்கு?"

"அப்படியேதான் இருக்கு. ஒரே வலி. தூக்கமும் வரதில்ல. இருபத்து நாலு மணி நேரமும் வேதனைதான்."

அப்போது துர்கா காப்பியுடன் வந்தாள்.

காப்பியை வாங்கிக்கொண்ட அம்புஜம், துர்கா உள்ளே சென்றதும், "இவ யாரு சமையக்காரியா?" என்றாள்.

"சமையலுக்குத்தான் வந்தா. ஆனா இப்ப எனக்கு வலது கை மாதிரி இருக்கா."

"எப்ப வேலைக்குச் சேந்தா?" 

"ஒரு வாரம்தான் ஆச்சு. இதுக்கு முன்னால இருந்தவ ஏதோ கடனுக்கு வேலை  செஞ்சுட்டுப் போவா. ஆனா இவ எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்கறா. அதனால வீட்டிலேயே தங்கச் சொல்லிட்டேன். ரொம்ப ஏழையான பொண்ணு."

"எப்படியோ உதவிக்கு ஒரு ஆள் கிடைச்சாளே!"

"சரி. நீ கொஞ்ச நாள் இருப்ப இல்ல?" என்றாள் சாரதா.

"ஒரு வாரம் இருந்து உனக்கு உதவி செய்யலாம்னுதான் வந்திருக்கேன்" என்றாள் வசந்தா.

டுத்த நாள் காலை வசந்தாவிடம், "வந்த இடத்தில உனக்கு சமையல் வேலை வரும் போலருக்கு. உன்னால ரெண்டு மூணு நாளைக்கு சமைக்க முடியுமா?" என்றாள் சாரதா.

"எதுக்குக்  கேக்கற?'

"துர்காவோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். ரெண்டு நாள் ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லி லீவு கேட்டா."

"வேலைக்குச் சேந்தே ஒரு வாரம்தான் ஆச்சுன்னு சொல்ற. அதுக்குள்ளே லீவா?" என்றாள் வசந்தா.

"அவ அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னுதானே லீவு கேக்கறா? அதனால சரின்னு சொல்லி அனுப்பிட்டேன்."

"அனுப்பிட்டியா? எப்ப? நான் தூங்கி எழுந்துக்கறதுக்குள்ளயா?"

"அவளுக்கு ராத்திரியே ஃபோன் வந்திருக்கு போலருக்கு. ராத்திரி பூரா தூங்காம அழுதுக்கிட்டு இருந்திருக்கா. காலையில எங்கிட்ட தயங்கிக்கிட்டே சொன்னா. சரி போன்னு அனுப்பி வச்சேன்."

"எந்த ஊருக்குப் போயிருக்கா?"

"வேலூர் பக்கத்தில ஏதோ கிராமமாம். உனக்கு சமைக்கறதுக்குக் கஷ்டமா இருக்கும்னா சொல்லு. ஹோட்டல்லேந்து வரவழைச்சுக்கலாம்" என்றாள் சாரதா.

"அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்ல. நாம ரெண்டு பேர்தானே" என்றாள் வசந்தா.

ற்று நேரம் கழித்து பரபரப்புடன் சாரதாவிடம் வந்த வசந்தா, "என் ஹேண்ட்பேக்ல பத்தாயிரம் ரூபா வச்சிருந்தேன், காணுமே!" என்றாள் பதட்டத்துடன்.

"சரியாப் பாரு. எங்க போயிருக்கும்?"

"ஹேண்ட்பேக்ல சரியாப் பாக்கறதுக்கு என்ன இருக்கு? எனக்கென்னவோ அந்த துர்கா மேலதான் சந்தேகமா இருக்கு. அவளுக்கு ஃபோன் பண்ணு." 

"அவகிட்ட ஃபோன் இல்லியே!"

"ராத்திரி அவளுக்கு ஃபோன் வந்ததா சொன்னியே!"

"என்னோட லாண்ட்லைன் நம்பரைத்தான் அவ கொடுத்திருப்பா. அதிலதான் ஃபோன் வந்திருக்கும்."

"வந்திருக்குமா? அப்ப அவ ஃபோன்ல பேசினதை நீ கேக்கலியா?"

"இல்ல. அவ சொன்னதுதான். நான் தூங்கினப்பறம் வந்திருக்கும்னு நினைச்சேன். ஹால்ல ஃபோன் அடிக்கிறது சில சமயம் இந்த ரூம்ல கேக்கக் கூடக் கேக்காதே!"

"அப்ப நான் சந்தேகப்படறது சரியாத்தான் இருக்கும். அவ யார் மூலமா வந்தா?"

"பழைய சமையக்காரி போகப் போறேன்னு சொன்னதும் நான் சமையலுக்கு ஆள் தேவைன்னு வீட்டு வாசல்ல போர்டு எழுதி வச்சேன். அதைப் பாத்து வந்தவதான்."

"அப்ப நீ அவ யார்னு விசாரிக்கல!"

"பாக்கறதுக்கு நல்லவளா, பாவமா இருந்தா. ஊர்ல அம்மாவுக்கு உடம்பு  சரியில்லை, வருமானம் இல்லாம இங்கே யாரோ சொந்தக்காரங்க வீட்டிலே தங்கிக்கிட்டு வேலை தேடறதா சொன்னா. அதான் வீட்டோட வந்து இருன்னு சொன்னேன்."

"அவ அட்ரஸ் இருக்கா? இருந்தாலும் பொய் அட்ராஸாத்தான் இருக்கும்!"

"இங்க பாரு வசந்தா! உன் பணம் காணும்கறதுக்காக அனாவசியமா ஒரு நல்ல பொண்ணு மேல குத்தம் சொல்லாதே. நான் அவளுக்கு மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம் கொடுக்கறேன். ஊருக்குப் பணம் அனுப்பணும்கறதால முதல் மாச சம்பளத்தை அட்வான்ஸா வேற கொடுத்திருக்கேன். உன்கிட்ட பத்தாயிரம் ரூபா திருடிட்டு அப்புறம் அவளால இங்க வேலை செய்ய முடியுமா? அப்ப மாசம் பத்தாயிரம் ரூபா வருமானம் அவளுக்கு நஷ்டமாகாதா?" என்றாள் சாரதா சற்று கோபத்துடன்.

"அவ திரும்ப இங்கே வேலைக்கு வரதா இருந்தாதானே? சரி, உன்கிட்டயே ஏதாவது திருடிக்கிட்டுப் போயிருக்காளான்னு பாப்போம். பீரோவில ஏதாவது பணம் வச்சிருந்தியா?"

"ஆமாம். அம்பதாயிரம் ரூபா இருக்கும்."

"நகைகள்?"

 அதுவும் பீரோவிலேயே லாக்கர்லதான் இருக்கும்."

"பீரோ சாவி?"

"என் தலகாணிக்குக் கீழதான் இருக்கு" என்றாள்  சாரதா தலையணைக்கு கீழே தொட்டுப் பார்த்து திருப்தி அடைந்தவளாக.

"சாவி இருக்கற இடம் துர்காவுக்குத் தெரியும் இல்ல?"

"தெரிஞ்சிருக்கும். நான் சாவியை எடுத்துக்கிட்டுப் போய் பீரோவைத் திறக்கறதைப் பாத்திருப்பா."

"உன் பீரோவைத் திறந்து பாத்துடறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்றாள் வசந்தா. 

"எதுக்கு?" என்ற சாரதா, "சரி. பாத்துடலாம்" என்று சாவியை எடுத்து வசந்தாவிடம் கொடுக்கப் போனவள், "சரி. நானும் வரேன்" என்று கட்டிலிலிருந்து மெதுவாக இறங்கி மெல்ல நடந்து வந்தாள்.

பீரோவைத் திறந்து மேல் தட்டில் பார்த்தவள், "அய்யய்யோ! அம்பதாயிரம் ரூபாயைக் காணுமே!" என்று கூவினாள்.

பிறகு ஒரு அவசரத்துடன் லாக்கரையும் திறந்து பார்த்தவள், "அடிப்பாவி! நூறு பவுன் நகையையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாளே!" என்றாள் நெஞ்சைப் பிடித்தபடி.

"பதட்டப்படாதே! உக்காரு. நல்லா தேடிப் பாக்கலாம்" என்று வசந்தா சாரதாவை அருகில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தாள்.

"சரியாத் தேடிப் பாக்கறதுக்கு என்ன இருக்கு? ரெண்டுமே வச்ச இடத்தில இல்லியே! உடம்பு சரியில்லாம கஷ்டப்படறவன்னு கூட இரக்கம் பாக்காம மொத்தமா அடிச்சுக்கிட்டுப் போயிட்டாளே, பாதகி!" என்றாள் சாரதா, அழும் குரலில்.

"அடுத்தவங்க அசந்திருக்கற சமயம் பாத்துக் கொள்ளை அடிக்கணுங்கற எண்ணத்தோட இருக்கறவங்ககிட்ட இரக்கம், கருணை, அன்பு இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?" என்றாள் வசந்தா. 

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

பொருள்:
ஒருவர் அயர்ந்திருக்கும் நேரம் பார்த்து அவர் பொருளைக் களவாட நினைப்பவர்களிடம் கருணையைப் பெரிதாக நினைக்கும் குணமோ, அன்பாக இருக்கும் குணமோ இருக்காது.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்















Monday, October 21, 2019

284. மூன்று வாங்கினால் இரண்டு இலவசம்!

ரெடிமேட் ஆடைகள் வியாபாரத்தைத் துவக்கி நடத்திய ஆரம்பக் காலங்களில் ராஜசேகர் பம்பாய், அகமதாபாத், சூரத் போன்ற ஊர்களுக்குத் தானே நேரில் சென்று ஆடை தயாரிப்பாளர்களிடம்  ஆடைகளைக் கொள்முதல் செய்து கொண்டு வருவார். 

ஒருமுறை ஒரு தொழிற்சாலையில் ஒரு கிடங்குக்குள் ஆடைகள் துணிக்குப்பைகள் போல் மலை மலையாகக் குவித்து வைத்திருப்பதைப் பார்த்து விட்டு "அது என்ன?" என்று கேட்டார் ராஜசேகர்.

"நாங்க சிறிய தொழிற்சாலைகள், குடிசைத் தொழில் மாதிரி வீட்டிலேயே அஞ்சாறு தையல் மெஷின் வச்சுக்கிட்டுத் தைக்கறவங்க இவங்ககிட்டல்லாம் கொஞ்சம் ஆடைகள் வாங்குவோம். அதில தரக்கட்டுப்பாட்டில சிலது ரிஜெக்ட் ஆகும். அதைத் திருப்பி எடுத்துப் போய்ப் பிரயோஜனம் இல்லேன்னு அவங்க எடுத்துக்கிட்டுப் போக மாட்டாங்க. அதைத் தவிர எங்க தொழிற்சாலையில் தைக்கப்பட்டற ஆடைகள்ளேயும் கொஞ்சம் ரிஜெக்ட் ஆகும். அதையெல்லாம்தான் இங்கே போட்டு வச்சிருக்கோம்" என்றார் அந்தத் தொழிற்சாலையின் அதிபர்.

"இதையெல்லாம் என்ன செய்வீங்க?"

"பிளாட்ஃபார வியாபாரிகள் சில பேர் அப்பப்ப வந்து வாங்கிக்கிட்டுப் போவாங்க. ஸ்க்ராப் ரேட்ல எடை போட்டுத்தான் கொடுப்போம்."

"எனக்கும் அதே ரேட்ல கொடுப்பீங்களா?" என்றார் ராஜசேகர்.

"கொடுக்கலாமே! ஆனா நீங்க என்ன செய்வீங்க இதை?" 

டை போட்டு ஸ்க்ராப் ரேட்டில் வாங்கி வந்த, தரமில்லை என்று தள்ளப்பட்ட உடைகளை நல்ல துணிகளுடன் கலந்து விற்க ஆரம்பித்தார் ராஜசேகர். 

மூன்று வாங்கினால் இரண்டு இலவசம்  போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, தரமுள்ள உடைகளின் விலையைப் பெரிய அளவில் உயர்த்தி, தரமற்ற உடைகளை  அவற்றுடன் இலவசமாகக் கொடுத்துத் தனக்கு மொத்த லாபம் கணிசமாக அதிகரிக்கும் அளவில் விற்பனை செய்தார் ராஜசேகர்.

இது போன்ற கவர்ச்சியான திட்டங்களால் அவர் கடையின் விற்பனை மிக வேகமாக அதிகரித்தது. 

தரமற்ற உடைகள் பற்றி சில வாடிக்கையாளர்கள் புகார் செய்தபோது, சிலருக்கு வேறு நல்ல துணிகளை மாற்றிக் கொடுத்தார். வேறு சிலரிடம், இலவசமாகக் கொடுத்த உடைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று கைவிரித்தார். 

அவ்வப்போது சிலர் இந்தக் கடையில் தாமற்ற ஆடைகள் விற்கப்படுவதாகப் புகார் செய்தாலும், மிகக் குறைந்த விலையில் துணிகள் விற்கப்படும் கடை என்ற பெயர் கடையின் வியாபாரத்தை மிகப் பெரிய அளவுக்கு உயர்த்தியது. 

ஒரு சில ஆண்டுகளிலேயே, நகரத்தின் அந்த முக்கியமான கடைவீதியில் மூன்று கட்டிடங்களை வாங்கி, மூன்று கடைகளை ராஜசேகர் நடத்த ஆரம்பித்து விட்டார். மூன்று கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வியாபாரிகள் சங்க அலுவலகத்திலிருந்து அவசரமாக அழைப்பு வந்ததால், ராஜசேகர் அந்த அலுவலகத்துக்குச் சென்று செயலாளரைச் சந்தித்தார் .

"அவசரமா வரச் சொன்னீங்களே! என்ன விஷயம்?"

"சுப்ரீம் கோர்ட்ல நம்ப அப்பீலை ரிஜக்ட் பண்ணிட்டாங்க. முறையான அனுமதி இல்லாம கட்டின கட்டிடங்களையெல்லாம் ஒரு மாசத்துக்குள்ள இடிக்கணும்னு உத்தரவு போட்டுட்டாங்க!" என்றார் வியாபாரிகள் சங்கச் செயலாளர்.

"ஐயையோ! ஆனா கட்டிடங்களை நான் கட்டலியே! இன்னொருத்தர் கிட்டேந்துதானே வாங்கினேன்!" என்றார் ராஜசேகர் பட்டத்துடன்.

"அதையெல்லாம் அவங்க பாக்க மாட்டாங்க. அனுமதி பெறாம கட்டப்பட்ட கட்டிடத்தை ஏன் வாங்கினீங்கன்னு கேப்பாங்க! எனக்கு என்ன வருத்தம்னா, உங்க தெருவில மொத்தம் ஆறு கட்டிடத்தை இடிக்கச் சொல்லி இருக்காங்க. அதில மூணு உங்களுடையது!"

மூன்று கடைகளும் தரை மட்டமாக்கப்பட்ட பின் தன்னால் இன்னொரு கட்டிடத்தைக்  கட்டியோ, வாடகைக்கு எடுத்தோ வியாபாரத்தைத் தொடர முடியுமா என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. பல வருடங்களாகக் கட்டிக் காத்த தொழில் ஒரே நாளில் அழிக்கப்பட்டது போல் உணர்ந்தார் ராஜசேகர்.

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

பொருள்:
களவு மூலம் பொருள் ஈட்ட வைக்கும் விருப்பம், பெரும் துன்பத்தை விளைவிக்கும். 
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்













283. புது வெள்ளம்

"மொத்தம் எவ்வளவு முதலீடு பண்ணினே?" என்றார் ராகவன்.

"பத்து லட்சம்!" என்றார் ராமநாதன். 

"என்ன நடந்தது? விவரமாச் சொல்லு."

"சில வருஷங்கள் முன்னால கணேசன்னு ஒத்தன் எங்க கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். அப்புறம் எங்க கம்பெனியை விட்டுட்டு, வேற எங்கயோ வேலைக்குப் போயிட்டான். ரெண்டு மாசம் முன்னாடி தற்செயலா அவனைச் சந்திச்சேன். ஏதோ மெயில் ஆர்டர் பிசினஸ் பண்றதா சொன்னான். விசிட்டிங் கார்டெல்லாம் கொடுத்தான்.

"ஒரு நாளைக்கு அவன் ஆஃபீசுக்குப் போயிருந்தேன். நிறைய ஆர்டர், பில், எல்லாம் காட்டினான். ஒரு ரூம்ல நிறைய வீட்டு உபயோகப் பொருட்களும் இருந்தது. அதையெல்லாம் தயாரிக்கறவங்ககிட்டேந்து மொத்த விலைக்கு வாங்கி, பேப்பர்ல விளம்பரம் கொடுத்து, தபால் மூலமா ஆர்டர்கள் வாங்கி, பொருட்களை பார்சல்ல அனுப்பிடுவேன்னு சொன்னான். 

"அமெரிக்காவில எல்லாம் மெயில் ஆர்டர் பிசினஸ் ரொம்ப  பிரபலம்னு சொன்னான். 100 சதவீதம் லாபம், பணத்தை முன்னால வாங்கிக்கிட்டு அப்புறம்தான் பொருட்களை அனுப்பறதால கலெக்‌ஷன் பிரச்னை இல்லைன்னு சொன்னான்.

"அப்புறம் ரெண்டு மூணு தடவை என் வீட்டுக்கு வந்தான். சும்மா பொதுவாத்தான் பேசினான். அப்புறம் நான் இன்னொரு தடவை அவன் ஆஃபீசுக்குப் போனப்ப, 'ஆர்டர் நிறைய வருது, ஆனா பொருட்களை சப்ளை பண்றவங்க முன்பணம் கேக்கறாங்க. இன்னும் கொஞ்சம் முதலீடு இருந்தா நல்லா இருக்கும்'னான். 

"எவ்வளவு பணம் வேண்டியிருக்கும்னு கேட்டேன். 'பத்து லட்சம் வேணும்'னு சொல்லிட்டு 'நீங்க முதலீடு பண்றீங்களா?'ன்னு கேட்டான். எனக்குத் தொழில் பண்றதுல ஆர்வம் இல்லேன்னேன். 'நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். பத்து லட்சம் முதலீடு செஞ்சீங்கன்னா மாசம் ஐம்பதாயிரம் ரூபா வருமானம் வரும், காரண்ட்டி'ன்னான். என்னை பார்ட்னரா போட்டு பார்ட்னர்ஷிப் டீட் ரிஜிஸ்டர் பண்றதாச் சொன்னான். 

"ஏதோ ஒரு சபலத்தில ஒத்துக்கிட்டு பத்து லட்சம் ரூபா கொடுத்தேன். கேஷ்தான் வேணும்னு சொன்னான். அதனால பாங்க்கிலேந்து பணம் எடுத்து கேஷாவே கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கிட்டுப் போனவன் திரும்பி வரல. ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணினேன். ஃபோனை யாரும் எடுக்கல, ஆஃபீசுக்கு நேர்ல போனேன். ஆஃபீஸ் பூட்டி இருந்தது. பக்கத்தில விசாரிச்சதில நாலு நாளைக்கு முன்னால காலி பண்ணிட்டுப் போயிட்டதா சொன்னாங்க. அவன் வீட்டு அட்ரஸ் கூட எங்கிட்ட இல்ல."

"போலீசுக்குப் போக வேண்டியதுதானே?" என்றார் ராகவன்.

"அதுக்கு முன்னால உன்கிட்ட கலந்து பேசலாம்னு நினைச்சேன். நீ ஏதாவது விசாரிக்க முடியுமா?"

"நான் போலீஸ்ல இருந்தவன்தான்னாலும், ரிடயர் ஆனப்பறம் எனக்கு ஒரு செல்வாக்கும் கிடையாது. என் போலீஸ் நண்பர்கள் யார்கிட்டயாவது விசாரிச்சு, அவங்ககிட்ட அவனைப் பத்தி ஏதாவது விவரம் கிடைக்குமான்னு பாக்கறேன்" என்றார் ராகவன்.

ரு வாரம் கழித்து ராகவன் ராமநாதன் வீட்டுக்கு வந்தார். "அவன் பெரிய ஃபிராடுப்பா. மெயில் ஆர்டர் பிசினஸ்னு சொல்லி, நிறைய பேர்கிட்ட பொருட்களை அனுப்பறதா சொல்லி பணத்தை வாங்கிக்கிட்டு பொருட்களை அனுப்பாம ஏமாத்தி இருக்கான். சில பேருக்கு தரக்குறைவான பொருட்களை அனுப்பி இருக்கான். பொருட்களைத் தயாரிக்கறவங்க சில பேர்கிட்டேந்து கடனுக்குப் பொருட்களை வாங்கி அவங்களுக்குப் பணம் கொடுக்காம ஏமாத்தி இருக்கான். அவன் பேர்ல நிறைய புகார் வந்திருக்கு. போலீஸ் விசாரிக்கறதுக்குள்ள ஆஃபீசை மூடிட்டு எங்கியோ தலைமறைவாயிட்டான். இந்த மாதிரி ஆட்கள் வேற எங்கேயாவது போயி இதே மாதிரி வேற ஏமாத்து வேலையை ஆரம்பிப்பாங்க. எதுக்கும் நீ போலீஸ்ல புகார் கொடு. ஒருவேளை அவன் கிடைச்சா, அவன்கிட்டேந்து பணம், பொருட்கள்னு ஏதாவது கைப்பற்றினா, உன் பணத்தில ஒரு பகுதியாவது திருப்பிக் கிடைக்கலாம்" என்றார் ராகவன்.

"வேணாம்ப்பா. என் முட்டாள்தனத்துக்கு நான் கொடுத்த விலையா நினைச்சுக்கறேன். நீ இதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். போலீஸ்கிட்டயும்தான்" என்றார் ராமநாதன். 

ராகவன் சென்ற பிறகு, "ஏங்க, அவர் சொன்னபடி போலீஸ்ல புகார் கொடுக்க வேண்டியதுதானே?" என்றாள் ராமநாதனின் மனைவி.

"எப்படிப் புகார் கொடுக்க முடியும்? பத்து லட்சத்தில அஞ்சு லட்சம்தான் பாங்க்கிலேந்து எடுத்தேன், மீதி அஞ்சு லட்சம் எங்கேந்து வந்ததுன்னு கேட்டா நான் என்ன சொல்றது?"

"ஏன், அது எங்கேந்து வந்தது?"  

தான் வேலை செய்த நிறுவனத்தில் பர்ச்சேஸ் டிப்பார்ட்மெண்ட்டில் வேலை செய்தபோது, கம்பெனிக்குப் பொருட்கள் வாங்குவதில் கமிஷன் வாங்கிச் சம்பாதித்த பணம் அது என்பதை மனைவியிடம் சொல்லலாமா என்று யோசித்தார் ராமநாதன்.

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

பொருள்:
களவினால் பெற்ற செல்வம் முதலில் அதிகரிப்பது போல் தோன்றினாலும், முன்பு இருந்த செல்வமும் குறையும் அளவுக்கு அழிந்து விடும். 
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்













Thursday, October 3, 2019

282. மாறியது நெஞ்சம்!

சுப்பு காரின் வேகத்தைக் குறைத்து, காரை  சாலை ஓரமாக நிறுத்தினான்.

"என்னய்யா ஆச்சு?" என்றார் தாமோதரன் எரிச்சலுடன்.

"தெரியல சார். காத்து இறங்கின மாதிரி இருக்கு. பஞ்ச்சரா இருக்கும்னு நினைக்கறேன்" என்று கூறியபடியே கீழே இறங்கினான் சுப்பு.

பின் சக்கரத்தைப் பார்த்து விட்டு வந்து, "சார்! காத்து இறங்கி இருக்கு. பின் சக்கரம் பஞ்ச்சர் ஆகியிருக்கு" என்றான் தாமோதரனிடம்.

"என்னய்யா டிரைவர் நீ? அவசரமாப் போக வேண்டிய நேரத்தில வண்டி பஞ்ச்சர் ஆகுது? இதையெல்லாம் முன்னாடியே பாக்கறதில்ல?" 

'பஞ்ச்சரை எப்படி முன்னால பாக்க முடியும்?' என்ற சூடான பதிலை மனதுக்குள் அடக்கிக் கொண்டு சுப்பு பேசாமல் இருந்தான்.

'சரி. பஞ்ச்சர் ஒட்டிட்டு ஆஃபீசுக்கு வந்துடு. நான் ஊபர்ல போய்க்கறேன்" என்று சொல்லி விட்டு ஊபர் டாக்சியை அழைக்க கைபேசியை எடுத்தார் தாமோதரன்.

"பஞ்ச்சர் ஒட்டக் காசு..."

"எவ்வளவு ஆகும்?"

"இருநூத்தம்பதிலேந்து ஐநூறு ரூபாய்க்குள்ள ஆகலாம், பஞ்ச்சரைப் பொருத்து."

"சரி. பாத்துக்க. டயர் பழசாயிடுச்சு. புதுசு மாத்தணும்னாலும் மாத்திடு" என்ற தாமோதரன் பர்ஸிலிருந்து இரண்டு இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை எடுத்து சுப்புவிடம் கொடுத்தார். 

காரை மெல்ல ஓட்டிக் கொண்டு அருகிலிருந்த ஒரு டயர் கடைக்குப் போனான் சுப்பு. 

கடைக்காரன் ஜாக்கி போட்டு, டயரைக் கழற்றி, டயரில் காற்றடித்து தண்ணீரில் வைத்துப் பார்த்து விட்டு "பஞ்ச்சர் பெரிசா இருக்கு. ஐநூறு ரூபாய் ஆகும்" என்றான்.

"நானூறு ரூபா வாங்கிக்கங்க" என்றான் சுப்பு.

"நீங்க டிரைவரா ஓனரா?" 

"டிரைவர்தான்! ஏன்?"

"டிரைவரா இருப்பேன்னுதான் நினச்சேன். ஆனா பேரம் பேசினதைப் பாத்ததும் சந்தேகம் வந்தது!" என்றான் பஞ்ச்சர் கடைக்காரன்.

"ஏன் டிரைவர்னா ரேட்டைக் குறைச்சுக்கச் சொல்லிக் கேக்கக் கூடாதா?"

"முதலாளி மேல அவ்வளவு அக்கறை! சரி. நான் ஒண்ணு சொல்றேன். இப்ப இந்த பஞ்ச்சரை ஒட்டிக் கொடுத்துடுவேன். கொஞ்ச நாள் ஓடும். ஆனா டயர் பழசாப் போச்சு. மாத்தினா நல்லது" என்றான் கடைக்காரன்.

"புது டயர் எவ்வளவு ஆகும்?'

பஞ்ச்சர் கடைக்காரன் ஒருமுறை அருகில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு, "ஒரிஜினல் டயர் மூவாயிரம் ரூபா ஆகும். ஆனா எங்கிட்ட டியூப்ளிகேட் இருக்கு. ஆயிரத்து ஐநூறு ரூபாதான். நல்லாத்தான் இருக்கும். பாக்க ஒரு வித்தியாசமும் தெரியாது. ஓரளவுக்கு ஓடும். ரெண்டு வருஷம் கழிச்சு மாத்த வேண்டி இருக்கலாம். அப்ப உன் முதலாளி ஞாபகம் வச்சுக்கிட்டா கேக்கப் போறாரு?" என்றான்.

"பரவாயில்ல. ஒரிஜினலையே போட்டுடு. எனக்கு பில் வேணும்" என்றான் சுப்பு.

"நான் இன்னும் சொல்லி முடிக்கல. டியூப்ளிகேட் டயருக்கும் ஒரிஜினல் டயர் வாங்கின மாதிரி பில் தரேன், ஜி எஸ் டியோட. டயர் வாங்கறவங்க நிறைய பேர் பில் கேக்க மாட்டாங்க. அதனால உனக்கு பில் கொடுக்கறதில ஒண்ணும் பிரச்னை இல்ல. உனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு பில் கிடைக்கும். ஆனா நீ ஆயிரத்தைந்நூறு ரூபா கொடுத்தா போதும். மீதி ஆயிரத்தைந்நூறு ரூபாயை நீயே வச்சுக்கலாம்."

"இதில உனக்கென்ன லாபம்?" என்றான் சுப்பு.

"ஒரிஜினல் டயரை விக்கறதில கிடைக்கிற கமிஷனை விட டியூப்ளிகேட் டயர்ல அதிக கமிஷன் கிடைக்கும். நிறைய டிரைவர்களுக்கு இப்படி செஞ்சு கொடுத்திருக்கேன். ஒரு பிரச்னையும் வந்ததில்லை. முதலாளிகளுக்கு இதனால பெரிய நஷ்டமும் இல்ல. என்ன சொல்ற?" என்றான் டயர் கடைக்காரன்.

சுப்பு யோசித்தான். தாமோதரனிடம் அவன் எவ்வளவு உண்மையாக உழைத்தாலும் அவருக்கு அவன் மீது பரிவோ அக்கறையோ கிடையாது. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூடப் பெரிதாகக் குதிப்பார். சம்பளமும் சுமார்தான். 

'ஆயிரத்தைந்நூறு ரூபாய் கூடுதலாகக் கிடைத்தால் நல்லதுதானே! ஒருமுறைதானே இப்படிச் செய்யப் போகிறேன்! அதுவும் அவரே டயர் மாற்ற வேண்டும் என்றால் மாற்றி விடு என்று சொல்லிப் பணம் கொடுத்திருக்கிறார்!'

"சரி" என்றான் சுப்பு.

"இரு. டயர் எடுத்துட்டு வரேன்" என்று உள்ளே போனான் கடைக்காரன்.

அவன் திரும்பி வருவதற்குள் சுப்புவின் மனதில் பலவித எண்ணங்கள் ஓடின. இப்படிச் செய்யத்தான் வேண்டுமா? இத்தனை நாள் இல்லாமால் ஏன் இந்தத் திருட்டு எண்ணம்? 

சுப்பு சற்றுக் குழம்பிய நிலையில் இருந்தான்.

கடைக்காரன் டயரை எடுத்துக்கொண்டு வந்தான். அதை சுப்புவிடம் காட்டியபடியே, "பாத்தியா. எப்படி இருக்கு?  ஒரிஜினல் டயர் தயாரிக்கறவனே இது தன் கம்பெனி டயர்னுதான் நினைப்பான்!" என்றான்

சுப்பு சட்டென்று, "வேண்டாம். பஞ்ச்சர் ஓட்டிடு. அப்புறம் பாத்துக்கலாம்" என்றான்.

"ஏன் காசு இல்லையா?" என்றான் கடைக்காரன்.

"இல்ல பஞ்ச்சர் ஒட்டினா போதும், நானூறு ரூபாதான் கொடுப்பேன்!" என்றான் சுப்பு.  
  
துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

பொருள்:
ஒரு தவறான செயலை மனதில் நினைப்பதும் தீதே. எனவே, பிறர் பொருளை வஞ்சகனையால் அபகரிக்கலாம் என்று மனத்தால் கூட நினையாமல் இருக்க வேண்டும்.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்














Tuesday, October 1, 2019

281. வேலை கிடைத்தது, ஆனால்...

"ஏங்க நீங்க பொறந்து வளர்ந்த ஊர் இது. இதை விட்டுப் போகத்தான் வேணுமா?" என்றாள் மல்லிகா.

"வேற வழி? வேலை எங்கே கிடைக்குதோ அங்கேதானே போகணும்?" என்றான் பரமசிவம்.

"இங்கேயே நல்ல வேலையிலதானே இருந்தீங்க? அதைப் போய்க் கெடுத்துக்கிட்டீங்களே!"

பரமசிவம் பேசாமல் இருந்தான்.

ரமசிவம் அதிகம் படிக்காவிட்டாலும், ஒரு ஆடைகள் தைக்கும் தொழிற்சாலையில் தையற்கானாகச் சேர்ந்து, தன் உழைப்பாலும், ஆர்வத்தாலும் வேகமாக முன்னேறிப் பத்து ஆண்டுகளில் மானேஜர் என்ற நிலைக்கு வந்து விட்டான்.

நல்ல வேலை, சம்பளம், முதலாளிகளிடம் நற்பெயர், நூறு பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதில் கிடைத்த பெருமை, சந்தோஷம் எல்லாம் ஒரே நாளில் பறி போய் விட்டன.

அவன் நிறுவனத்துக்குப் புதிதாக துணி சப்ளை செய்ய விரும்பிய ஒரு நபர் தன்னிடம் துணி வாங்கினால் அவனுக்கு 5 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை காட்ட, இதனால் மாதம் தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு, ஒரு பலவீனமான மனநிலையில் பரமசிவம் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டான்.

முதல் முறை அவர் சப்ளை செய்த துணியே தரக்குறைவாக இருந்து பல பிரச்னைகள் வர, முதலாளிகள் தலையிட்டு என்ன பிரச்னை என்று ஆராய்ந்து பார்க்க, அவர்களுக்கு உண்மை தெரிந்து விட்டது. 

போலீசுக்குப் போக விரும்பாமல், பரமசிவத்தை வேலையை விட்டு அனுப்பிப் பிரச்னையை முடித்து விட்டார்கள்.

இப்போது பரமசிவம் வேறு வேலை தேட வேண்டிய நிலைமை.

"ஏங்க, இந்த ஊர்லயே உங்களுக்கு வேலை கிடைக்காதா?" என்றாள் மல்லிகா.

"என் அனுபவத்தை வச்சு என்னால இதே மாதிரி ஆடைகள் தயாரிக்கிற தொழிற்சாலைக்குத்தான் வேலைக்குப் போக முடியும். இது மாதிரி கம்பெனி இந்த ஊர்ல இது ஒண்ணுதான் இருக்கு. ரெண்டாவது, வேற கம்பெனியில எனக்கு வேலை கிடைக்கும்னு வச்சுக்கிட்டாலும், என் பின்னணி இந்த ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குங்கறதால எனக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டாங்க. என் நண்பன் ஒத்தன் மூலமா சென்னையில வேலை தேடிக்கிட்டிருக்கேன். அங்கே கிடைக்கும் போலருக்கு. கிடைச்சதும் நாம எல்லாரும் சென்னைக்குப் போயிட வேண்டியதுதான்" என்றான் பரமசிவம்.

ரண்டு நாட்கள் கழித்து வெளியில் போய் விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த பரமசிவம், "இந்த ஊர்ல எனக்கு வேலை கிடைக்காதுன்னு நினைச்சேன். ஆனா ஒத்தரு வேலை கொடுக்கறேங்கறாரு!" என்றான்.

"யாருங்க? என்ன வேலை?" என்றாள் மல்லிகா, வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.

"என் அப்பாவோட நண்பர் ஒத்தரை தற்செயலா சந்திச்சேன். அவரு நம்ம ஊர்ல ஒரு ரெடிமேட் கார்மெண்ட் தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறாராம். எக்ஸ்போர்ட் ஆர்டார்லாம் இருக்காம். கம்பெனியை நிர்வாகம் பண்ண ஒரு நல்ல ஆளைத் தேடிக்கிட்டிருந்தாராம். எனக்கு அனுபவம் இருக்கறதால என்னை மானேஜராப் போடறேன்னு சொன்னாரு."

"அவருக்கு... தெரியுமா?" என்றாள் மல்லிகா தயக்கத்துடன்.

"அவர் கிட்ட உண்மையைச் சொல்லிட்டேன். 'என்னப்பா இப்படிப் பண்ணிட்டியே!' அப்படின்னாரு. அப்புறம், 'பரவாயில்ல. இனிமே நீ தப்பு பண்ண மாட்டேன்னு நினைக்கறேன். உனக்கு நான் வேலை கொடுக்கறேன்'னு சொன்னாரு."

"அப்பா! நல்ல வேளை. கடவுள் ஒரு வழி காட்டிட்டாரு!" என்றாள் மல்லிகா.

"இல்ல மல்லிகா. இந்த வேலையை நான் ஏத்துக்ககறதா இல்ல. நான் இந்த ஊரை விட்டுப் போகறதுல உறுதியா இருக்கேன்" என்றான் பரமசிவம்.

"ஏங்க இப்படிச் சொல்றீங்க?" என்றாள் மல்லிகா ஏமாற்றத்துடன்.

"நான் ரோட்டில நடந்து போறப்ப மத்தவங்க என்னைப் பாக்கற பார்வையை என்னால தாங்கிக்க முடியல. மத்தவங்க முகத்தைப் பாத்தாலே அவமானமா இருக்கு. என்னால இந்த ஊர்ல இருந்துக்கிட்டு, இந்த ஊர்க்காரங்க முகத்தில முழிக்க முடியாது. அதனால ஊரை விட்டுப் போறதுதான் நல்லது" என்றான் பரமசிவம்.

துறவறவியல்
     அதிகாரம் 29      
கள்ளாமை   
குறள் 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

பொருள்:
பிறரால் இகழப்பட விரும்பாதவன் பிறர் பொருளைக் களவாடும் எண்ணம் தோன்றாமல் தன் நெஞ்சைப் பாதுகாக்க வேண்டும்.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்