
இருவரும் அரசாங்கத்தில் ஒரே இலாகாவில் பணிபுரிந்தவர்கள். சில சமயம் ஒரே அலுவலகத்திலும், சில சமயம் வேறு ஊர்களிலும் பணி புரிந்தவர்கள். வேலை பற்றிய அணுகுமுறையில் இருவரும் இரு துருவங்கள்.
மாதவன் நேர்மைக்கும், கடமை உணர்ச்சிக்கும் பெயர் பெற்றவர். முத்துசாமியிடம் பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்பது ஊரறிந்த விஷயம். வறுமையில் உள்ளவர்களுக்கு சாதாரணச் சான்றிதழ்கள் வழங்கக் கூட ,அவர்களிடம் ஈவு இரக்கம் இல்லாமல் பணம் கறந்து விடுவார் முத்துசாமி.
பணி செய்த காலத்திலேயே, தன் சொந்த ஊரில் நிலங்கள் வாங்கியவர் முத்துசாமி. இது தவிர, தஞ்சாவூரில் ஒரு பெரிய வீட்டையும் தன் மகன் பெயரில் வாங்கி இருந்தார். அவர் மனைவியின் தந்தையால் தன் பேரனுக்குப் பரிசாக வாங்கிக் கொடுக்கப்பட்ட வீடாக அது பதிவு செய்யப்பட்டது. முத்துசாமியின் மாமனாருக்கு விவசாய வருமானம் இருந்ததால், வருமான வரிப் பிரச்னை எழவில்லை. அந்த வீட்டில்தான் இப்போது உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார் முத்துசாமி.
முத்துசாமியின் நேர்மையற்ற செயல்பாடு பற்றி மாதவனுக்கு நன்கு தெரியும் என்றாலும், எதனாலோ இருவருக்குமிடையே ஒரு நட்பு ஏற்பட்டு அது நீடித்து வந்தது. தங்கள் அலுவலகப் பணி குறித்து மிகவும் குறைந்த அளவே பேசி, அலுவலக விஷயங்கள் தங்கள் நட்பை பாதிக்காமல் இருவருமே பார்த்துக் கொண்டனர்.
முத்துசாமியின் வீடு நகருக்குச் சற்று வெளிப்புறத்தில் அமைந்திருந்தது. காம்பவுண்ட் சுவருடன் கூடிய தனி வீடு.
மாதவன் அழைப்பு மணியை அடித்ததும், கதவைத் திறந்த பெண்மணி, "யார் வேணும்?" என்றாள்.
"நான் முத்துசாமியோட நண்பன்" என்றார் மாதவன்.
"உள்ள வாங்க!" என்று அழைத்தவள், வாசற்படி தாண்டியதுமே, வலது புறம் இருந்த ஒரு அறையைக் காட்டி விட்டு உள்ளே போய் விட்டாள்.
மாதவனுக்கு முதலில் அங்கே ஒரு அறை இருப்பதே கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு இருட்டு! கொஞ்சம் தடுமாறிக் கொண்டுதான் உள்ளே சென்றார்.
உள்ளே கட்டிலில் ஒருவர் படுத்திருப்பது தெளிவில்லாமல் தெரிந்தது.
அறைக்குள் நுழைந்ததும், குப்பென்று ஒரு நெடி அடித்தது.
இருட்டுக்குள் கண்கள் பழகியதும், "முத்துசாமி!" என்று அழைத்தார் மாதவன், கட்டிலுக்கு அருகில் சென்று.
குரல் கேட்டுக் கண் விழித்த முத்துசாமி, ஒரு நிமிடம் அவரை உற்றுப் பார்த்து விட்டு, "மாதவா! வா வா! எவ்வளவு சந்தோஷமா இருக்கு! உக்காரு" என்றவர், "சாரி. இங்கே நாற்காலி எதுவும் இல்லை. இப்படிக் கட்டில்ல ஓரமா உக்காரு" என்றார்.
மாதவன் சற்றுத் தயங்கி விட்டுக் கட்டிலில் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அந்த நெடியைத் தாங்கிக் கொண்டு அறையில் இருப்பதே அவருக்குக் கடினமாக இருந்தது. 'இவன் எப்படி இந்த நெடியிலேயே படுத்துக் கொண்டிருக்கிறான்!'
"உடம்பு எப்படி இருக்கு உனக்கு?" என்றார் மாதவன்.
"அதான் பாக்கறியே! படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலைமை."
"யார் பாத்துக்கறாங்க உன்னை?"
"ஒரு நர்ஸ் போட்டிருக்காங்க. ராத்திரியில ஒரு ஆளு இருப்பான். ஆனா, இந்த ரூம்ல நெடி அடிக்குதுன்னு யாரும் உள்ளே வர மாட்டாங்க. வெளியில எங்கேயாவது இருப்பாங்க. நான் கத்தினா கூட அவங்களுக்குக் கேக்காது."
"ஆமாம், ஏன் இப்படி நெடி அடிக்குது? ரூமை சரியா க்ளீன் பண்றதில்லையா?"
"அதெல்லாம் பண்ண மாட்டாங்க. என்னை ஒரு காத்தோட்டமான இடத்தில படுக்க வைக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு. ஆனா, இந்த ரூம் காத்து வெளிச்சம் இல்லாத குகை. கிராமத்தில எல்லாம் சாகக் கிடக்கறவங்களை ரேழியில போடறதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி போட்டு வச்சிருக்காங்க என்னை. இவ்வளவு பெரிய வீட்டில, எனக்கு ஒரு காத்தோட்டமான அறை கொடுக்க இவங்களுக்கு மனசில்லை. நான் வாங்கின வீடு இது! ரூமை சரியா க்ளீன் பண்றதும் இல்ல. என்னால இந்த நெடியைத் தாங்கிக்கிட்டு இங்க இருக்க முடியல. ஆனா நான் என்ன செய்ய முடியும்?"
"ஏன் இப்படி? உன் பையன்கிட்ட சொல்றதுதானே?"
"அவன் என்னை வந்து பாத்தே பலநாள் ஆச்சு. நான் செத்துப் போனப்பறம், என்னைத் தூக்கிக்கிட்டுப் போய் எரிக்கத்தான் வருவான்னு நினைக்கிறேன். ஏதோ குடும்பத்துக்கு சம்பாதிக்கறதா நினைச்சுத் தப்பான வழியில எல்லாம் சம்பாதிச்சேன். ஏழை பாழைகள்னு கூட இரக்கம் காட்டாம எல்லார்கிட்டயும் பணம் பிடுங்கினேன். இப்ப என் பொண்டாட்டி போயிட்டா. என் சொத்தையெல்லாம் அனுபவிக்கிற என் பையனுக்கு எனக்கு வைத்தியம் பாக்கறதில அக்கறை இல்லை. ஆஸ்பத்திரியில சேத்து விடுன்னு சொன்னேன். செலவு அதிகமாகும்னு வீட்டிலேயே போட்டு வச்சிருக்கான். இன்னும் எத்தனை நாள் இந்த அவஸ்தைன்னு தெரியல."
முத்துசாமி விக்கி விக்கி அழ ஆரம்பித்தார்.
"அழாதே, முத்துசாமி! உனக்கு சீக்கிரமே உடம்பு சரியாகிடும்" என்றார் மாதவன். தன் நண்பனின் நிலையைப் பார்த்தபோது, அவருக்கே அழுகை வந்து விடும் போல் இருந்தது.
"இல்லடா! எனக்கு நல்லாப் புரியுது. இதெல்லாம் நான் செஞ்சதுக்கு தண்டனை. செத்துப் போனப்பறம், நரகத்துக்குப் போவேனோ என்னவோ தெரியாது. இந்த உலகத்திலேயே நரகத்தை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்."
மாதவன் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தார்.
"உன்னைப் பாக்கறப்ப, நானும் உன்னை மாதிரி இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு தோணுது. நீ இப்ப நல்ல வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்க. சொர்க்கம், நரகம்னெல்லாம் உண்மையாவே இருந்தா, நீ நிச்சயம் சொர்க்கத்துக்குப் போவ!"
மாதவன் தன் நண்பரின் கையைப் பிடித்து ஆதரவுடன் மெல்ல அழுத்தினார்.
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.
பொருள்:
களவு செய்து வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையே தவறிப் போகும். களவு செய்யாமல் நேர்மையாக வாழ்பவர்க்கு தேவருலகமும் கிடைக்கத் தவறாது.
No comments:
Post a Comment