"ஆறு மாசமாப் படுத்துக் கிடக்கேன். ஒத்தர் கூட வந்து எட்டிப் பாக்கல. நீயாவது இப்ப வந்தியே!" என்றாள் சாரதா.
"குடும்பத்தை விட்டுட்டு வரது அவ்வளவு சுலபமில்லை சாரதா!" என்றாள் அவள் அக்கா வசந்தா.
தனக்குக் குடும்பம் இல்லையென்று அக்கா சொல்லிக் காட்டுகிறாளோ என்ற சந்தேகத்துடன் சாரதா வசந்தாவைப் பார்த்தாள்.
"அதுவும் வெளியூர்லேந்து வரதுங்கறது சுலபம் இல்ல. இப்பவே என்னை யாரும் போக விடல. நான்தான் பிடிவாதமா உன்னைப் பாக்கணும்னு வந்தேன். உடம்பு எப்படி இருக்கு?"
"அப்படியேதான் இருக்கு. ஒரே வலி. தூக்கமும் வரதில்ல. இருபத்து நாலு மணி நேரமும் வேதனைதான்."
அப்போது, துர்கா காப்பியுடன் வந்தாள்.
காப்பியை வாங்கிக் கொண்ட வசந்தா, துர்கா உள்ளே சென்றதும், "இவ யாரு சமையக்காரியா?" என்றாள்.
"சமையலுக்குத்தான் வந்தா. ஆனா, இப்ப எனக்கு வலது கை மாதிரி இருக்கா."
"எப்ப வேலைக்குச் சேந்தா?"
"ஒரு வாரம்தான் ஆச்சு. இதுக்கு முன்னால இருந்தவ ஏதோ கடனுக்கு வேலை செஞ்சுட்டுப் போவா. ஆனா, இவ எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்கறா. அதனால, வீட்டிலேயே தங்கச் சொல்லிட்டேன். ரொம்ப ஏழையான பொண்ணு."
"எப்படியோ, உதவிக்கு ஒரு ஆள் கிடைச்சாளே!"
"சரி. நீ கொஞ்ச நாள் இருப்ப இல்ல?" என்றாள் சாரதா.
"ஒரு வாரம் இருந்து உனக்கு உதவி செய்யலாம்னுதான் வந்திருக்கேன்" என்றாள் வசந்தா.
அடுத்த நாள் காலை, "வந்த இடத்தில உனக்கு சமையல் வேலை வரும் போலருக்கு. உன்னால ரெண்டு மூணு நாளைக்கு சமைக்க முடியுமா?" என்றாள் சாரதா, வசந்தாவிடம்.
"எதுக்குக் கேக்கற?'
"துர்காவோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். ரெண்டு நாள் ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லி லீவு கேட்டா."
"வேலைக்குச் சேந்தே ஒரு வாரம்தான் ஆச்சுன்னு சொல்ற. அதுக்குள்ளே லீவா?" என்றாள் வசந்தா.
"அவ அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னுதானே லீவு கேக்கறா? அதனால சரின்னு சொல்லி அனுப்பிட்டேன்."
"அனுப்பிட்டியா? எப்ப? நான் தூங்கி எழுந்துக்கறதுக்குள்ளயா?"
"அவளுக்கு ராத்திரியே ஃபோன் வந்திருக்கு போலருக்கு. ராத்திரி பூரா தூங்காம அழுதுக்கிட்டு இருந்திருக்கா. காலையில தயங்கிக்கிட்டே எங்கிட்ட சொன்னா. சரி போன்னு அனுப்பி வச்சேன்."
"எந்த ஊருக்குப் போயிருக்கா?"
"வேலூர் பக்கத்தில ஏதோ கிராமமாம். உனக்கு சமைக்கறதுக்குக் கஷ்டமா இருக்கும்னா சொல்லு. ஹோட்டல்லேந்து வரவழைச்சுக்கலாம்" என்றாள் சாரதா.
"அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்ல. நாம ரெண்டு பேர்தானே" என்றாள் வசந்தா.
சற்று நேரம் கழித்துப் பரபரப்புடன் சாரதாவிடம் வந்த வசந்தா, "என் ஹேண்ட்பேக்ல பத்தாயிரம் ரூபா வச்சிருந்தேன், காணுமே!" என்றாள், பதட்டத்துடன்.
"சரியாப் பாரு. எங்க போயிருக்கும்?"
"ஹேண்ட்பேக்ல சரியாப் பாக்கறதுக்கு என்ன இருக்கு? எனக்கென்னவோ அந்த துர்கா மேலதான் சந்தேகமா இருக்கு. அவளுக்கு ஃபோன் பண்ணு."
"அவகிட்ட ஃபோன் இல்லியே!"
"ராத்திரி அவளுக்கு ஃபோன் வந்ததா சொன்னியே!"
"என்னோட லாண்ட்லைன் நம்பரைத்தான் அவ கொடுத்திருப்பா. அதிலதான் ஃபோன் வந்திருக்கும்."
"வந்திருக்குமா? அப்ப, அவ ஃபோன்ல பேசினதை நீ கேக்கலியா?"
"இல்ல. அவ சொன்னதுதான். நான் தூங்கினப்பறம் வந்திருக்கும்னு நினைச்சேன். ஹால்ல ஃபோன் அடிக்கிறது சில சமயம் இந்த ரூம்ல கேக்கக் கூடக் கேக்காதே!"
"அப்ப, நான் சந்தேகப்படறது சரியாத்தான் இருக்கும். அவ யார் மூலமா வந்தா?"
"பழைய சமையக்காரி வேலையை விட்டுப் போகப் போறேன்னு சொன்னதும், நான் சமையலுக்கு ஆள் தேவைன்னு வீட்டு வாசல்ல போர்டு எழுதி வச்சேன். அதைப் பாத்து வந்தவதான்."
"அப்படின்னா, நீ அவ யார்னு விசாரிக்கல!"
"பாக்கறதுக்கு நல்லவளா, பாவமா இருந்தா. ஊர்ல அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, வருமானம் இல்லாம இங்கே யாரோ சொந்தக்காரங்க வீட்டிலே தங்கிக்கிட்டு வேலை தேடறதா சொன்னா. அதான் வீட்டோட வந்து இருன்னு சொன்னேன்."
"அவ அட்ரஸ் இருக்கா? இருந்தாலும் பொய் அட்ராஸாத்தான் இருக்கும்!"
"இங்க பாரு, வசந்தா! உன் பணம் காணும்கறதுக்காக, அனாவசியமா ஒரு நல்ல பொண்ணு மேல குத்தம் சொல்லாதே. நான் அவளுக்கு மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம் கொடுக்கறேன். அவ ஊருக்குப் பணம் அனுப்பணும்னு சொன்னதால, முதல் மாசச் சம்பளத்தை அட்வான்ஸா வேற கொடுத்திருக்கேன். உன்கிட்ட பத்தாயிரம் ரூபா திருடிட்டு, அப்புறம் அவளால இங்க வேலை செய்ய முடியுமா? அப்ப, மாசம் பத்தாயிரம் ரூபா வருமானம் அவளுக்கு நஷ்டமாகாதா?" என்றாள் சாரதா, சற்றுக் கோபத்துடன்.
"அவ திரும்ப இங்கே வேலைக்கு வரதா இருந்தாதானே? சரி, உன்கிட்டயே ஏதாவது திருடிக்கிட்டுப் போயிருக்காளான்னு பாப்போம். பீரோவில ஏதாவது பணம் வச்சிருந்தியா?"
"ஆமாம். அம்பதாயிரம் ரூபா இருக்கும்."
"நகைகள்?"
அதுவும் பீரோவிலேயே லாக்கர்லதான் இருக்கும்."
"பீரோ சாவி?"
"என் தலகாணிக்குக் கீழதான் இருக்கு" என்றாள் சாரதா, தலையணைக்குக் கீழ் தொட்டுப் பார்த்துத் திருப்தி அடைந்தவளாக.
"சாவி இருக்கற இடம் துர்காவுக்குத் தெரியும் இல்ல?"
"தெரிஞ்சிருக்கும். நான் சாவியை எடுத்துக்கிட்டுப் போய் பீரோவைத் திறக்கறதைப் பாத்திருப்பா."
"உன் பீரோவைத் திறந்து பாத்துடறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்றாள் வசந்தா.
"எதுக்கு?" என்ற சாரதா, "சரி. பாத்துடலாம்" என்று சாவியை எடுத்து வசந்தாவிடம் கொடுக்கப் போனவள், "சரி. நானும் வரேன்" என்று கட்டிலிலிருந்து மெதுவாக இறங்கி மெல்ல நடந்து வந்தாள்.
பீரோவைத் திறந்து மேல் தட்டில் பார்த்தவள், "அய்யய்யோ! அம்பதாயிரம் ரூபாயைக் காணுமே!" என்று கூவினாள்.
பிறகு, ஒரு அவசரத்துடன் லாக்கரையும் திறந்து பார்த்தவள், "அடிப்பாவி! நூறு பவுன் நகையையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாளே!" என்றாள், நெஞ்சைப் பிடித்தபடி.
"பதட்டப்படாதே! உக்காரு. நல்லா தேடிப் பாக்கலாம்" என்ற வசந்தா, சாரதாவை அருகில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தாள்.
"சரியாத் தேடிப் பாக்கறதுக்கு என்ன இருக்கு? ரெண்டுமே வச்ச இடத்தில இல்லியே! உடம்பு சரியில்லாம கஷ்டப்படறவன்னு கூட இரக்கம் பாக்காம மொத்தமா அடிச்சுக்கிட்டுப் போயிட்டாளே, பாதகி!" என்றாள் சாரதா, அழும் குரலில்.
"அடுத்தவங்க அசந்திருக்கற சமயம் பாத்துக் கொள்ளை அடிக்கணும்கற எண்ணத்தோட இருக்கறவங்ககிட்ட இரக்கம், கருணை, அன்பு இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?" என்றாள் வசந்தா.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 285அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
பொருள்:
ஒருவர் அயர்ந்திருக்கும் நேரம் பார்த்து அவர் பொருளைக் களவாட நினைப்பவர்களிடம், கருணையைப் பெரிதாக நினைக்கும் குணமோ, அன்பாக இருக்கும் குணமோ இருக்காது.
No comments:
Post a Comment