ரெடிமேட் ஆடைகள் வியாபாரத்தைத் துவக்கி நடத்திய ஆரம்பக் காலங்களில், ராஜசேகர் பம்பாய், அகமதாபாத், சூரத் போன்ற ஊர்களுக்குத் தானே நேரில் சென்று, ஆடை தயாரிப்பாளர்களிடம் ஆடைகளைக் கொள்முதல் செய்து கொண்டு வருவார்.
ஒருமுறை, ஒரு தொழிற்சாலையில், ஒரு கிடங்குக்குள் ஆடைகள் துணிக்குப்பைகள் போல் மலை மலையாகக் குவித்து வைத்திருப்பதைப் பார்த்து விட்டு, "அது என்ன?" என்று கேட்டார் ராஜசேகர்.
"நாங்க சிறிய தொழிற்சாலைகள், குடிசைத் தொழில் மாதிரி வீட்டிலேயே ரெண்டு மூணு தையல் மெஷின் வச்சுக்கிட்டுத் தைக்கறவங்க இவங்ககிட்டல்லாம் கொஞ்சம் ஆடைகள் வாங்குவோம். அதில தரக் கட்டுப்பாட்டில சிலது ரிஜெக்ட் ஆகும். அதைத் திருப்பி எடுத்துக்கிட்டுப் போய்ப் பிரயோஜனம் இல்லேன்னு அவங்க எடுத்துக்கிட்டுப் போக மாட்டாங்க. அதைத் தவிர, எங்க தொழிற்சாலையில் தைக்கப்பட்டற ஆடைகள்ளேயும் கொஞ்சம் ரிஜெக்ட் ஆகும். அதையெல்லாம்தான் இங்கே போட்டு வச்சிருக்கோம்" என்றார் அந்தத் தொழிற்சாலையின் அதிபர்.
"இதையெல்லாம் என்ன செய்வீங்க?"
"பிளாட்ஃபார வியாபாரிகள் சில பேர் அப்பப்ப வந்து வாங்கிக்கிட்டுப் போவாங்க. ஸ்க்ராப் ரேட்ல எடை போட்டுத்தான் கொடுப்போம்."
"எனக்கும் அதே ரேட்ல கொடுப்பீங்களா?" என்றார் ராஜசேகர்.
"கொடுக்கலாமே! ஆனா, நீங்க என்ன செய்வீங்க இதை?"
எடை போட்டு ஸ்க்ராப் ரேட்டில் வாங்கி வந்த, தரமில்லை என்று தள்ளப்பட்ட உடைகளை, நல்ல துணிகளுடன் கலந்து விற்க ஆரம்பித்தார் ராஜசேகர்.
மூன்று வாங்கினால் இரண்டு இலவசம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, தரமுள்ள உடைகளின் விலையைப் பெரிய அளவில் உயர்த்தி, தரமற்ற உடைகளை அவற்றுடன் இலவசமாகக் கொடுத்துத் தனக்கு மொத்த லாபம் கணிசமாக அதிகரிக்கும் அளவில் விற்பனை செய்தார் ராஜசேகர்.
இது போன்ற கவர்ச்சியான திட்டங்களால், அவர் கடையின் விற்பனை மிக வேகமாக அதிகரித்தது.
தரமற்ற உடைகள் பற்றிச் சில வாடிக்கையாளர்கள் புகார் செய்தபோது, சிலருக்கு வேறு நல்ல துணிகளை மாற்றிக் கொடுத்தார். வேறு சிலரிடம், இலவசமாகக் கொடுத்த உடைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று கைவிரித்தார்.
அவ்வப்போது சிலர் இந்தக் கடையில் தாமற்ற ஆடைகள் விற்கப்படுவதாகப் புகார் செய்தாலும், மிகக் குறைந்த விலையில் துணிகள் விற்கப்படும் கடை என்ற பெயர் கடையின் வியாபாரத்தை மிகப் பெரிய அளவுக்கு உயர்த்தியது.
ஒரு சில ஆண்டுகளிலேயே, நகரத்தின் அந்த முக்கியமான கடைவீதியில் மூன்று கட்டிடங்களை வாங்கி, மூன்று கடைகளை நடத்த ஆரம்பித்து விட்டார் ராஜசேகர். மூன்று கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வியாபாரிகள் சங்க அலுவலகத்திலிருந்து அவசரமாக அழைப்பு வந்ததால், ராஜசேகர் அந்த அலுவலகத்துக்குச் சென்று செயலாளரைச் சந்தித்தார் .
"அவசரமா வரச் சொன்னீங்களே! என்ன விஷயம்?"
"சுப்ரீம் கோர்ட்ல நம்ப அப்பீலை ரிஜக்ட் பண்ணிட்டாங்க. முறையான அனுமதி இல்லாம கட்டின கட்டிடங்களையெல்லாம் ஒரு மாசத்துக்குள்ள இடிக்கணும்னு உத்தரவு போட்டுட்டாங்க!" என்றார் வியாபாரிகள் சங்கச் செயலாளர்.
"ஐயையோ! ஆனா, கட்டிடங்களை நான் கட்டலியே! வேற ஒத்தர்கிட்டேந்துதானே வாங்கினேன்!" என்றார் ராஜசேகர், பட்டத்துடன்.
"அதையெல்லாம் அவங்க பாக்க மாட்டாங்க. அனுமதி பெறாம கட்டப்பட்ட கட்டிடத்தை ஏன் வாங்கினீங்கன்னு கேப்பாங்க! எனக்கு என்ன வருத்தம்னா, உங்க தெருவில மொத்தம் ஆறு கட்டிடத்தை இடிக்கச் சொல்லி இருக்காங்க. அதில மூணு உங்களுடையது!"
மூன்று கடைகளும் தரை மட்டமாக்கப்பட்ட பின், தன்னால் இன்னொரு கட்டிடத்தைக் கட்டியோ, வாடகைக்கு எடுத்தோ வியாபாரத்தைத் தொடர முடியுமா என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. பல வருடங்களாகக் கட்டிக் காத்த தொழில் ஒரே நாளில் அழிக்கப்பட்டது போல் உணர்ந்தார் ராஜசேகர்.
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
பொருள்:
களவு மூலம் பொருள் ஈட்ட வைக்கும் விருப்பம், பெரும் துன்பத்தை விளைவிக்கும்.
No comments:
Post a Comment