அவர் சுற்றுமுற்றும் பார்த்து விட்டுக் கையில் இருந்த கவரை அவன் கையில் ரகசியமாகக் கொடுப்பது போல் அழுத்தினார்.
"நாளைக்கு வந்து ஆர்டர் வாங்கிக்கிட்டுப் போங்க" என்றான் மாசிலாமணி.
"ஏம்ப்பா, உண்மையாவே பணம் உங்க ஆஃபீசருக்குத்தானா, இல்ல, அவர் பேரைச் சொல்லி, நீ பணம் வாங்கறியா?" என்றார் அவர்.
"அப்ப, பணம் கொடுக்காதீங்க. ஆஃபீசரைப் பாத்துப் பேசி ஆர்டர் வாங்கிக்கங்க!" என்று கவரை அவரிடம் திருப்பிக் கொடுக்கப் போனான் மாசிலாமணி.
"கோவிச்சுக்காதப்பா! அவரைப் பாத்தா, விபூதி குங்குமம்லாம் இட்டுக்கிட்டு சாமியார் மாதிரி இருக்காரே, அவர் பணம் கேப்பாரான்னு எனக்கு சந்தேகமா இருந்தது. அதான் கேட்டேன்."
'அவரா சாமியார்?' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான் மாசிலாமணி.
சோமசுந்தரம் அறையில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவர் அறைக்குச் சென்று கவரைக் கொடுத்த மாசிலாமணி, "சார்! இது சுந்தர் கேசுக்காக" என்றான்.
"அவர் சுந்தர். நான் சோமசுந்தரம், முடிச்சுடலாம்" என்று சிரித்தார் சோமசுந்தரம்.
"சார்! அப்புறம் அந்த சீனிவாசன் கேசு..."
"அவர்தான் இன்னும் பணம் கொடுக்கலியே?"
"இல்ல, சார். அவர் ரொம்பக் கஷ்டப்படறவரு. 'என்னால ரெண்டுதான் கொடுக்க முடியும்'னு சொல்றாரு."
"இப்படியெல்லாம் கருணை காட்டினா, நாம பிச்சைக்காரங்களாத்தான் இருக்கணும்! யாரா இருந்தா என்ன? அஞ்சு கொடுத்தா வேலை நடக்கும். இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடு" என்றார் சோமசுந்தரம், நிர்தாட்சண்யமாக.
"சரி சார்."
"அப்புறம், என் டிஃபன் பாக்சில் இருக்கறதை நீ சாப்பிட்டுட்டு, எனக்கு முத்துசாமி ஹோட்டல்லேந்து பிரியாணி வாங்கிக்கிட்டு வந்துடு" என்றார் சோமசுந்தரம்.
"ஏன் சார் உங்க வீட்டில கொடுத்தனுப்பின சாப்பாட்டை சாப்பிடாம, ஹோட்டல்ல வாங்கிக்கிட்டு வரச் சொல்றீங்க?"
"இந்த மாசக் கடைசியில, எங்க குலதெய்வம் கோவிலுக்கு ஒரு வேண்டுதலுக்காகப் போறோம். அதுக்காக, பதினைஞ்சு நாள் அசைவம் சாப்பிடாம விரதம் இருக்கணும்னு வீட்டில உத்தரவு போட்டிருக்காங்க! எனக்குத்தான் அசைவம் இல்லாம சரியா வராதே! ரெண்டு வாரத்துக்கு நீ சாப்பாடு கொண்டு வராதே. எங்க வீட்டுச் சாப்பாடுதான் உனக்கு!" என்றார் சோமசுந்தரம், சிரித்தபடி.
"ஏன் சார், குலதெய்வம் கோவிலுக்குப் போறப்ப, விரதத்தை மீறினா குத்தமாயிடாதா?"
"விரதமாவது, மண்ணாங்கட்டியாவது! வாய்க்கு ருசியா சாப்பிடறதை விட்டுட்டு, விரதம் இருக்கேன்னு வறட்டுச் சோத்தைத் தின்னுக்கிட்டு இருக்கணுமா என்ன?" என்றார் சோமசுந்தரம்.
'அது சரி! உங்களை மாதிரி அடுத்தவங்க பணத்தைப் பிடுங்கறததையே தொழிலா வச்சுக்கிட்டிருக்கறவங்ககிட்டல்லாம் விரதம், கட்டுப்பாடு இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?' என்று நினைத்துக் கொண்டான் மாசிலாமணி.
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 286அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
பொருள்:
களவு செய்து பிறர் பொருளை அடைவதில் விருப்பம் உள்ளவர், அளவறிந்து நெறியோடு வாழும் வாழ்வை வாழ மாட்டார்.
No comments:
Post a Comment