About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 14 - ஒழுக்கமுடைமை

திருக்குறள் 
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 14
ஒழுக்கமுடைமை 
131.நெருக்கம் 
நிர்வாக இயக்குனரின் தனிச் செயலர் என்ற அந்த உயர் பதவிக்கான நேர்முகத்துக்கு வந்திருந்தவர்களிலேயே வயதில் குறைந்தவன் பத்மநாபன்தான். ஆயினும் அவன்தான் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

நேர்முகத் தேர்வை நடத்திய பொது மேலாளர் "இப்ப நீங்க எம் டியைப் பாக்கணும். அவங்க உங்களை ஓகே பண்ணிட்டா உங்க அப்பாயிண்ட்மென்ட் கன்ஃபர்ம்ட்!" என்றார்.

நிர்வாக இயக்குனர் நர்மதா அவனை விட ஐந்தாறு வயது இளையவளாக இருப்பாள் என்று தோன்றியது. அவள் அவனை அதிகம் எதுவும் கேட்கவில்லை.

அவன் படிப்பு, அனுபவம் பற்றி ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு, அருகிலிருந்த பொது மேலாளரைப் பார்த்துத் தலையசைத்தாள். பொது மேலாளர் "கங்கிராட்ஸ்" என்று சொல்லி அவன் கையைக் குலுக்க, நர்மதா மெலிதாக ஒரு புன்னகை செய்தாள்.

வேலையில் சேர்ந்த புதிதில், நர்மதா அவனிடம் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அலுவலகத்தில் அவளுடைய எல்லாப் பணிகளும் அவன் மூலமாகத்தான் நடக்க வேண்டும் என்ற நிலையிலும், அவள் தன்னைச் சற்று தூரத்திலேயே வைத்திருப்பதாக பத்மநாபனுக்குத் தோன்றியது.

ஆயினும் சில மாதங்களில் சில படிப்படியான மாறுதல்களை அவன் கவனித்தான். அவன் சிறப்பாகச் செயலாற்றும் முறையை நர்மதா கவனித்து அங்கீகரிக்கத் தொடங்கினாள். 

ஆரம்பத்தில் அவனை ஒரு கீழ்மட்ட உதவியாளன் போல் நடத்தி வந்த நர்மதா, நாளடைவில் பல விஷயங்களை முடிவெடுக்கும் அதிகாரத்தை அவனிடமே அளித்தாள். பொது மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம் கூட அவ்வப்போது "எதுவாயிருந்தாலும் பத்மநாபன் சார் கிட்டக் கேட்டுக்கங்க!" என்று அவனுக்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் அளித்தாள்.

அவனை அடிக்கடி அழைத்து விவாதிப்பது, அவனிடம் கருத்துக் கேட்பது என்று தொடங்கி, பல முக்கியமான சந்திப்புகளுக்கு அவனையும் அழைத்துச் செல்லத் துவங்கினாள்.

தன் திறமையான செயல்பட்டாலும், உண்மையான ஈடுபாட்டாலும், கடுமையான உழைப்பாலும் நிர்வாக இயக்குனரிடம் நற்பெயரையும் மதிப்பையும், சம்பாதித்து விட்டதை நினைத்து பத்மநாபன் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது.

ரு முக்கியமான வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக அவர்கள் இருவரும் அவர்களுடைய நிறுவனத்தின் விருந்தினர் மாளிகைக்குச் சென்றிருந்தனர். வாடிக்கையாளர் தனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் சொல்லி, அவர்களைத் தன் அறையிலேயே காத்திருக்கச் சொல்லி விட்டு வெளியே சென்றார்.

"நான் லாபியில வெயிட் பண்றேன். அவர் வந்ததும் வரேன்" என்று எழுந்த பத்மநாபனை,"உக்காருங்க பத்மநாபன். அவர் வரதுக்குள்ள சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு" என்று சொல்லி அங்கேயே உட்கார வைத்தாள் நர்மதா.

சில நிமிடங்கள் மௌனமாக இருந்த நர்மதா, "பத்மநாபன்! இந்த ஏழெட்டு மாசமா உங்களோட பர்ஃபாமன்ஸைப் பாத்து நான் ஆச்சரியப்பட்டிருக்கேன். ஒரு எக்ஸிக்யூடிவ் அசிஸ்டன்ட் வச்சுக்கலாம்னு முடிவு பண்ணினபோது பேப்பர் ஒர்க்கிலேருந்து எனக்குக் கொஞ்சம் விடுதலை கிடைக்கும்னுதான் நினச்சேன். ஆனா நீங்க இவ்வளவு இனிஷியேடிவ் எடுத்து, எனக்கு பிராக்டிகலா வேலையே இல்லாம பண்ணிட்டீங்க. ஐ ஆம் வெரி ஹேப்பி" என்றாள் நர்மதா.

"தாங்க்ஸ் மேடம்!" என்றான் பத்மநாபன். அதற்கு மேல் என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

"உங்ககிட்ட என்னோட பர்சனல் மேட்டர்ஸ் சிலதைப் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். நான் எங்கப்பாவுக்கு ஒரே பொண்ணு. சின்ன வயசிலியே அம்மா இறந்துட்டாங்க. டிகிரி முடிச்சதும் அப்பாவுக்கு உதவியா கம்பெனியில சேர்ந்தேன். ஓரளவுக்கு வேலையைக் கத்துக்கிட்டேன். ஆனா ரெண்டு வருஷத்திலியே அப்பா போயிட்டாரு. அதுக்கப்பறம் நானே எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு இந்த கம்பெனியை மேனேஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"மேடம்! உங்களைப் புகழறதா நினைக்காதீங்க. நீங்க ரொம்ப பிரில்லியண்ட். பிரமாதமா கம்பெனியை நடத்துறீங்கங்கறதுதான் உங்களைப் பத்தி மார்க்கெட்ல இருக்கற இம்ப்ரெஷன். நானே எட்டு மாசமாப் பாத்துக்கிட்டிருக்கேனே!" என்றான் பத்மநாபன்.

"தாங்க்ஸ்! எல்லாம் எங்கப்பாகிட்ட கத்துக்கிட்டதுதான். நீங்க புதுசா இந்த கம்பெனிக்கு வந்து வேலை கத்துக்கிட்டு என்னோட வேலையில பெரும் பகுதியை செஞ்சு முடிச்சுடறீங்களே! அதை விடவா?... ஓகே! நான் சொல்ல வந்த விஷயம்... எனக்குக் கல்யாணத்துல ஈடுபாடு இல்ல. கடைசி வரையிலே தனியா இருந்துடலாம்னுதான் நெனச்சேன்..."

மேலே எப்படித் தொடர்வது என்று தயங்குவது போல் சற்று நிறுத்தி விட்டு, மீண்டும் தொடர்ந்தாள் நர்மதா. 

"நான் நேரா விஷயத்துக்கு வரேன். எனக்கு உங்க மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டுடுச்சு. வெயிட்! நீங்க கல்யாணம் ஆனவர்னு எனக்குத் தெரியும். பட் ஐ வான்ட் யூ. இது காதல் எல்லாம் இல்ல. உங்களோட நெருக்கமா இருக்கணும்னு நினைக்கறேன்."

"மேடம்!" என்றான் பத்மநாபன் அதிர்ச்சியுடன்.

"சீரியஸ் ரிலேஷன்ஷிப் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு ஃபன் மாதிரி அவ்வளவுதான். இது மாதிரி சில இடங்கள்ள சில சமயங்கள்ள நாம நெருக்கமா இருக்கலாம். இது யாருக்கும் தெரியாது. உங்க மனைவிக்கும் தெரியாது. இது நம்ப அஃபீஷியல் ரிலேஷன்ஷிப்பை பாதிக்காது. வாட் டூ  யூ ஸே?"

"நான் போய் வெளியில வெயிட் பண்றேன்" என்று எழுந்தான் பத்மநாபன்.

"திங்க் அபவ்ட் இட்.  இதுல தப்பு எதுவும் இல்ல. இது வெளியில தெரிஞ்சா எனக்குத்தான் பாதிப்பு அதிகம். அதனால யாருக்கும் ஒரு சின்ன சந்தேகம் கூட வராம பாத்துக்கறது என் பொறுப்பு."

அவள் பேசிக் கொண்டிருந்தபோதே பத்மநாபன் எழுந்து சென்று விட்டான்.

ரவு அவன் வீட்டில் இருந்தபோது, அவன் கைபேசி அடித்தது. அவன் மனைவி சாரதா, உள்ளே அவர்களுடைய ஐந்து வயது மகன் விக்னேஷிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"சொல்லுங்க மேடம்" என்றான் பத்மநாபன்.

"உங்க ரெஸிக்னேஷன் லெட்டரை ஈமெயில்ல அனுப்பியிருக்கீங்க.  உங்களுக்கு இஷ்டம் இல்லேன்னா ஓகே. நீங்க ஏன் ரிஸைன் பண்ணணும்? நான் உங்களை வற்புறுத்தலியே?" என்றாள் நர்மதா.

"இல்லை. இன்னிக்கு நடந்ததோட நிழல் எப்பவும் என் மேல விழுந்துக்கிட்டே இருக்கும். அந்தச் சூழ்நிலையில என்னால சரியா வேலை செய்ய முடியாது. தயவு செஞ்சு என்னோட ராஜினாமாவை ஏத்துக்கிட்டு சீக்கிரம் என்னை ரிலீவ் பண்ணிடுங்க."

அவன் ஃபோனை வைத்தபோது மனைவி அருகில் வந்திருந்தாள். "வேலையை ரிஸைன் பண்ணிட்டீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லியே!" என்றாள்.

"சாப்பாட்டுக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன். வேலை இல்லேன்னா சாப்பாடு கிடையாதுன்னு சொல்லிட்டேன்னா?"

"ஜோக் அடிக்கிற நேரமா இது? நல்ல வேலையை விட்டுட்டீங்களே! ஏன்?"

"எனக்கும் என் பாஸுக்கும் ஒத்துப் போகல."

"என்னவோ நிழல்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க?"

"நான் என்ன வேலை செய்யறேன்னு நிழல் மாதிரி கூடவே நின்னு பாத்துக்கிட்டிருந்தா என்னால எப்படி வேலை செய்ய முடியும்? அதைத்தான் சொல்லிக்கிட்டிருந்தேன்."

"உங்க பிரச்னை என்னன்னு எனக்குத் தெரியும்!"

"என்ன?"

"ஒரு பொண்ணு பாஸா இருக்கிறத உங்களால ஏத்துக்க முடியல. அதானே?"

"ஏம்மா! வீட்டில ஒரு பொண்ணை பாஸா ஏத்துக்கிட்டிருக்கிற என்னால ஆஃபிஸ்ல ஒரு பொண்ணை பாஸா ஏத்துக்க முடியாதா?"

"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை" என்று சிரித்தாள் சாரதா. அவள் சிரிப்பில் பத்மநாபனும் சேர்ந்து கொண்டபோது வேறு வேலை தேட வேண்டுமே என்ற கவலை அவனுக்கு ஒரு கணம் மறந்து போயிற்று.
  
குறள் 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்:  
ஒழுக்கம்தான் ஒருவனுக்கு உயர்வைத் தரும். அதனால் ஒழுக்கத்தை உயிரை விட மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


132.திருட்டும் 'புரட்டும்'  
மெட்ரோ ரயிலில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் முகம் தெரிந்த முகமாகத் தோன்றியது. 

எங்கே பார்த்திருக்கிறோம் இவரை என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே, "நீங்க அருணாசலம்தானே?" என்று அவரே கேட்டு விட்டார்.

"ஆமாம். ஆனா நீங்க யாருன்னு எனக்குத் தெரியலியே!" என்றேன்.

"என் பேரு கணேசன். உங்களோட ஸ்கூல்ல படிச்சவன்" என்றார் அவர் தயக்கத்துடன்.

எனக்கு உடனே நினைவு வந்து விட்டது. கணேசனின் தயக்கத்துக்கான காரணமும் புரிந்தது.

"டேய் கணேசா! எப்படிரா இருக்கே?" என்றேன் பள்ளி நாட்களின் சுவாதீனத்துடன்.

"நல்லா இருக்கேன்" என்றான் கணேசன். இப்போதும் அவன் பேச்சில் ஒரு இறுக்கம் தெரிந்தது.

நான் போக வேண்டிய இடம் வேறு என்றாலும் அவன் இறங்கிய ஸ்டேஷனிலேயே நானும் இறங்கிக் கொண்டேன். எனக்கு வெட்டி முறிக்கிற வேலை எதுவும் இல்லையே!

ஒரு ஓட்டலில் சென்று அமர்ந்து கொண்டோம்.

கணேசனும் நானும் ஒரே வகுப்பில்தான் படித்தோம். அப்போது நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கணேசன் ரகு என்ற மாணவனுடைய பேனாவைத் திருடி விட்டான் என்று ஒரே பரபரப்பு. கணேசனைத் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துப் போனார்கள். அப்புறம் அவனை நான் பார்க்கவேயில்லை. அவன் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.

"திருட்டு புத்தி உள்ளவங்ககிட்டல்லாம் சகவாசம் வச்சுக்காதே!' என்று என் அப்பா கண்டிப்பாகச் சொல்லி விட்டதால் கணேசன் வீட்டு விலாசத்தைக் கேட்டறிந்து அவனைப் போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்தை நான் கைவிட்டு விட்டேன்.

கணேசன் போன்ற ஒரு நெருங்கிய நண்பனைப் பிரிந்தது பற்றி நான் பல நாட்கள் வருந்தி இருக்கிறேன். அவன் பேனாவைத் திருடி இருப்பான் என்று என்னால் நம்ப முடியவில்லை.

ஓட்டலில் அமர்ந்திருந்தபோதும் கணேசன் அதிகம் பேசவில்லை. பழையதை நினைத்து அவமானமாக உணர்வது போல் இருந்தான்.

"டேய் கணேசா! நீயும் நானும் எப்பவுமே ஃபிரண்ட்ஸ்தாண்டா! நீ பேனாவைத் திருடியிருப்பேன்னு நான் அப்பவும் நினைக்கல, இப்பவும் நினைக்கல. நீ எங்கிட்ட பழையபடி ஃப்ரீயா இருக்கலாம்" என்றேன்.

"இல்லடா! நான் திருடினது உண்மைதான்" என்றான் கணேசன்.

நான் சற்று வியப்புடன் அவனைப் பார்த்தேன். ஆனால் அவன் திடீரென்று உற்சாகமாக மாறி விட்டான்.

"நீ என்னை வெறுத்து ஒதுக்கியிருப்பியோன்னு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா நீ என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கியே! அதனால உங்கிட்ட உண்மையைச் சொன்னா நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன். உனக்குத் தெரியும். அந்தக் காலத்துல நாங்க கொஞ்சம் கஷ்டப்படற குடும்பமாத்தான் இருந்தோம்.

"அப்பல்லாம் நாம ஒரு பேனாவை ரெண்டு மூணு வருஷம் கூட வச்சுப்போம். இப்ப தினம் நாலு பால்பாயிண்ட் பேனாவைத் தொலைக்கறோம். நெனச்சுப் பாத்தா ஆச்சரியமா இருக்கு. அப்பல்லாம் பேனாவைத் தொலைச்சா ஏதோ சொத்தே போயிட்ட மாதிரி பெரிய விஷயமா இருக்கும்!

"என் பேனா தொலைஞ்சு போச்சு. எங்கப்பா கிட்ட சொல்றதுக்கு பயமாவும் தயக்கமாவும் இருந்தது. இன்னொரு பேனா வாங்கிக் கொடுக்கறது எங்கப்பாவுக்கு ஒரு சுமையாத்தான் இருந்திருக்கும். ரகு பணக்காரப் பையன். அடிக்கடி பேனாவை மாத்திக்கிட்டே இருப்பான். அவனோட பேனாவை அவன் பாக்காதபோது எடுத்துட்டேன். அவன் அதைப் பெரிசா நெனைக்க மாட்டான்னு நெனச்சேன். ஆனா அவன் அவனோட பேனா எங்கிட்ட இருக்கறதைப் பாத்துட்டு, கிளாஸ் டீச்சர் கிட்ட கம்ப்ளெயின் பண்ணிட்டான்.

"கிளாஸ் டீச்சர் ஹெட்மாஸ்டர் கிட்ட சொல்ல, ஹெச் எம் எங்கப்பாவைக் கூப்பிட்டு அனுப்பி, என்னையும் தன்னோட ரூமுக்குக் கூப்பிட்டு விசாரிச்சு, என்னையும் எங்கப்பாவையும் ரொம்ப இழிவாப் பேசி அவமானப்படுத்திட்டாரு. வீட்டுக்குப் போனதும் எங்கப்பா எங்கிட்ட ஒண்ணுமே சொல்லல. நானேதான் வேற ஸ்கூல்ல படிக்கறேன்னு சொல்லி ஸ்கூலை மாத்திக்கிட்டேன். அந்த ஸ்கூல் என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம். தினம் ரெண்டு மைல் நடக்கணும். அப்படி தினம் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடந்து போறதுல நான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்கற மாதிரி ஒரு திருப்தி இருந்தது."

கணேசனின் கண்களின் ஓரத்தில் இலேசாக ஈரம் படர்ந்ததாக எனக்குத் தோன்றியது.

"விட்டுத் தள்ளுடா! சின்ன வயசில செஞ்ச தப்பு அது!" என்றேன்.

"சின்ன வயசில யோசிக்காம அப்படி ஒரு காரியம் பண்ணி எனக்கும் என் அப்பாவுக்கும் அவமானத்தைச் சம்பாதிச்சுக் கொடுத்தது என்னை ரொம்பவும் பாதிச்சுடுச்சு. இனிமே வாழ்க்கையில ஒரு சின்னத் தப்பு கூடப் பண்ணாம, ஒழுக்கமா நேர்மையா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அது மாதிரியே வாழ்ந்துக்கிட்டிருக்கேன்."

"ஓ, ரொம்ப நல்ல விஷயம்" என்றேன் பாராட்டுமுகமாக.

 "ஆமாண்டா. நான் இப்ப ஒரு கம்பெனியில பர்ச்சேஸ் மேனேஜரா இருக்கேன். வேடிக்கை என்னன்னா, மொதல்ல அட்மினிஸ்ட்ரேஷன்லதான் இருந்தேன். பர்ச்சேஸ் மானேஜரா இருந்தவரு நிறைய கமிஷன் வாங்கினார்னு கண்டு பிடிச்சு அவரை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. பர்ச்சேஸில ஒரு நேர்மையான ஆளைப்  போடணும்னுட்டு, என்னைப் போட்டிருக்காங்க!"

சொல்லும்போதே கணேசனிடம் ஒரு பெருமிதம் தெரிந்தது. ஒரு தவறு செய்து விட்டு, அதைத் திருத்திக்கொண்டு, சரியான பாதையில், சிறிது கூட ஒழுங்கு தவறாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பெருமிதம்.

"எங்கப்பா என்னோடதான் இருக்காரு. என்னைப் பத்தி அவருக்கு ரொம்பப் பெருமை. எனக்கு இது போதும். ஒரு விதத்தில நான் பண்ணின தப்பே எனக்கு நல்லதா அமைஞ்சுடுச்சு. நான் பண்ணின திருட்டு என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சுன்னு சொல்லலாம். இங்கிலீஷில 'பிளஸ்ஸிங் இன் டிஸ்கைஸ்'னு சொல்லுவாங்க."

"நீ உண்மையிலே ரொம்பப் பெரியவன்தாண்டா! ஒரு சின்ன சறுக்கலையே எஸ்கலேட்டர் மாதிரி பயன்படுத்தி மேல போயிட்ட!" என்றேன் நான் மனப்பூர்வமான பாராட்டுணர்வுடன்.

"அது சரி. நீ என்ன பண்றே?" என்றான் கணேசன்.

"நான் ஒரு பாங்க்ல ஒர்க் பண்ணிட்டு வி ஆர் எஸ் வாங்கிட்டேன். இப்ப சும்மாதான் இருக்கேன்" என்றேன்.

கணேசனுக்கு மாறாக, ஆரம்பத்தில் தவறு ஏதும் செய்யாமல் வளர்ந்த நான் ஒரு வங்கி அதிகாரியாகப் பணி செய்தபோது, பேராசையாலும், யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்ற அசட்டு தைரியத்தாலும் உந்தப்பட்டுப் பண மோசடி செய்து அது கண்டு பிடிக்கப்பட்டதால் வேலையை இழந்து மூன்று வருடம் சிறைக்கும் சென்று வந்த விவரங்களை என் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு தைரியம் இல்லை.
      
குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை.

பொருள்:  
ஒழுக்கத்தை கவனத்துடன் பேணிக் காக்க வேண்டும். வாழ்க்கையில் பலவற்றைக் கற்றறிந்த நிலையிலும் ஒழுக்கம்தான் நமக்குத் துணை நிற்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


133.நல்லதொரு குடும்பம் 
பள்ளியிலிருந்து தொலைபேசிச் செய்தி வந்ததும் மஞ்சுளா, அலுவலகத்திலிருந்த தன் கணவன் சாமிநாதனுக்குக் கைபேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டு, மகன் குணசீல் படிக்கும் பள்ளிக்கு விரைந்தாள். அவள் உள்ளே நுழையும்போதே சாமிநாதனின் காரும் பள்ளி வாசலில் வந்து நின்றது.

இருவரும் பள்ளி முதல்வர் அறைக்குச் சென்றனர்.

"வாங்க" என்று இறுக்கமான முகத்துடன் அவர்களை வரவேற்ற முதல்வர் அவர்களை உட்காரச் சொன்னார்.

"குணசீல் எங்கே?" என்றான் சாமிநாதன்.

"ரூம்ல படுத்துக்கிட்டிருக்கான். கொஞ்ச நேரத்தில தெளிஞ்சுடுவான்னு நினைக்கறேன். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். உங்க பையனுக்கு குடிப்பழக்கம் இருக்கறது உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா?" என்றார் முதல்வர்.

"என்ன சார் பேசறீங்க? குணசீல் தங்கமான பையன். நீங்க ஃபோன்ல சொன்னதை என்னால நம்பவே முடியல. முதல்ல நாங்க அவனைப் பாக்கணும்" என்றாள் மஞ்சுளா.

"ஒன்பதாவது படிக்கிற பையனுக்கு குடிப்பழக்கம் இருக்கறது எனக்கே அதிர்ச்சியாத்தான் இருக்கு. ஆனா அவனை டாஸ்மாக் கடையில ரெண்டு மூணு தடவை பாத்திருக்கறதா சில மாணவர்கள் சொல்றாங்க" என்றார் முதல்வர்.

"எங்க பையனை நாங்க அப்படி வளக்கல சார். சகவாச தோஷம்தான் காரணமா இருக்கணும். சேரக்கூடாதவங்களோட சேர்ந்துதான் இந்தப் பழக்கம் அவனுக்கு வந்திருக்கும்" என்றான் சாமிநாதன்.

"நீங்க அவனுக்கு தாராளமா கொடுக்கற பாக்கெட் மணியும் காரணமா இருக்கலாம்!" என்று முதல்வர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, குணசீலை அழைத்துக் கொண்டு ஒரு ஆசிரியர் முதல்வரின் அறைக்குள் வந்தார். கூடவே இன்னொரு பையனும் வந்தான். பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்டவன் போல் நடந்து வந்த குணசீல், சோர்ந்திருந்த கண்களால் பெற்றோரைப் பார்த்தான்.

"எப்படிடா வந்தது உனக்கு இந்தப் பழக்கம்? நம்ப குடும்பத்தில யாருக்குமே இந்தப் பழக்கம் இருந்ததில்லையே?" என்றான் சாமிநாதன் கோபமாக.

குணசீல் பேசாமல் நின்றான்.

"அந்தப் பையன் யாரு?" என்றாள் மஞ்சுளா, குணசீலுடன் வந்த பையனைக் காட்டி.

"அவன்தான் ரோட்டில மயங்கி விழப்போன குணசீலை எழுப்பி, கையைப் பிடிச்சு இங்கே அழைச்சுக்கிட்டு வந்தான்" என்றார் முதல்வர்.

"இவனோட சேர்ந்து போய்தான் குடிச்சுட்டு வந்திருக்கானா? சகவாச தோஷம்னு நான் அப்பவே சொல்லல?" என்ற சாமிநாதன், முதல்வரிடம் திரும்பி, "உங்க ஸ்கூல்ல எப்படிப்பட்டவங்களை சேர்க்கறதுன்னு ஒரு தராதரம் வேண்டாம்?" என்றான் குற்றம் சாட்டும் தொனியில்.

"இந்தப் பையன் எங்க ஸ்கூல்ல படிக்கிற பையன் இல்ல" என்றார் முதல்வர்.

"பின்ன இவன்கிட்ட எப்படிடா உனக்கு சிநேகிதம்? தெருவில போற பையங்ககிட்டல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டு, அவங்களோட சேர்ந்து குடியைப் பழக்கிக்கற அளவுக்கு வந்துட்ட பாரு!" என்றாள் மஞ்சுளா, மகனிடம்.

"மேடம்! யூ ஆர் மிஸ்டேகன். இவனோட சேர்ந்து உங்க பையன் குடிக்கல. லஞ்ச் இண்டர்வல்ல உங்க பையன் பக்கத்தில இருக்கற டாஸ்மாக் கடைக்குப் போய் எதையோ வாங்கிக் குடிச்சுட்டு, தெருவில நடந்து வரப்ப தள்ளாடிக் கீழே விழப் பாத்திருக்கான். அப்ப ரோட்டில நடந்து போய்க்கிட்டிருந்த இந்தப் பையன் அவனைத் தாங்கிப் புடிச்சு, இந்த ஸ்கூல்ல படிக்கிற பையனாத்தான் இருக்கணும்னு நெனச்சு இங்க கொண்டு விட்டிருக்கான். நான்தான் நீங்க வந்துட்டுப் போறவரையிலும் அவனை இங்க இருக்கச் சொன்னேன்.  உங்க பையன் பண்ணின தப்புக்கு இந்த அப்பாவிப் பையன் மேல ஏன் பழி போடறீங்க? உங்க பையனைக் கீழே விழாம தாங்கிப் புடிச்சு அழைச்சுக்கிட்டு வந்ததுக்கு அவனுக்கு நீங்க கொடுக்கற பரிசா இது?" என்றார் முதல்வர், கடுமையான குரலில்.

அந்தப் பையன் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! எங்கப்பா குடிகாரர்தான். ஆனா நான் குடிக்கறதில்ல" என்றான்.
      
குறள் 133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும்

பொருள்:  
ஒழுக்கத்துடன் இருப்பதே ஒருவர் நல்ல குடியில் பிறந்தவர் என்பதற்கான அடையாளம். ஒழுக்கம் தவறுவது ஒருவரை இழிந்த குடியில் பிறந்தவராகக் காட்டி விடும்.

134.இரண்டு தவறுகள்  
"மிஸ்டர் சேகர்! நீங்க செஞ்சிருக்கிற காரியத்துக்கு உங்களை நாங்க தொடர்ந்து இங்க வேலை செய்ய அனுமதிக்க முடியாது. நீங்க ரிஸைன் பண்றதுதான் உங்களுக்கு கௌரவமா இருக்கும்" என்றார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் பழனி.

"சார்! தயவு பண்ணி எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. தப்பு பண்றது எல்லோருக்கும் சகஜம்" என்றான் சேகர்.

"முடியாத காரியம்."

"சார்! கடந்த காலத்தில இது மாதிரி சந்தர்ப்பத்திலே மத்தவங்களுக்கு நீங்க இன்னொரு சான்ஸ் குடுத்திருக்கீங்க."

"யாரைச் சொல்றீங்க?"

"கோபாலைத்தான்."

"கோபாலா?" என்ற பழனி, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மற்ற இரு உறுப்பினர்களான கல்லூரி முதல்வரையும், நிர்வாகக் குழுவின் செயலாளரையும் பார்த்தார். அவர்கள் இருவரும் மௌனமாகப் புன்னகைத்தனர்.

ந்து வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம் அது. கோபால் என்ற விரிவுரையாளர் மீது மாணவர்களிடமிருந்து புகார்கள் வரத் தொடங்கின.

"அவர் கிளாஸ் ஒழுங்கா நடத்தறதில்ல."

"நிறைய விஷயங்களை விட்டுடறாரு. புத்தகத்தைப் பாத்தப்பறம்தான் அவர் நிறைய டாபிக்ஸை கவர் பண்ணலைன்னு தெரிஞ்சது."

"சில சமயம் புத்தகத்தைப் பாத்து அப்படியே படிக்கிறார்."

"ஒரு டாபிக்கை விளக்கிக்கிட்டிருக்கச்சே, பாதியில அப்படியே நின்னுடறாரு. மேற்கொண்டு தெரியலையா, மறந்துட்டாரான்னே தெரியல. அப்புறம் அதை அப்படியே விட்டுட்டு வேற டாபிக்குக்குப் போயிடறாரு."

முதல்வர் கோபாலைக் கூப்பிட்டு விசாரித்தார். கோபால் இந்தப் புகார்களெல்லாம் உண்மையில்லை என்று மறுத்தார்.

கோபாலை இரண்டு மூத்த பேராசிரியர்கள் சோதிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

கோபாலைச் சோதித்த பேராசிரியர்கள் கோபாலிடம் அவருடைய சப்ஜெக்ட் பற்றிக் கேட்ட பல கேள்விகளுக்கு அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

கோபால் வகுப்பில் பாடம் நடத்துவதை, பக்கத்து வகுப்பில் நின்று அவருக்குத் தெரியாமல் கேட்டார்கள். புகார்கள் உண்மைதான் என்று அறிக்கை கொடுத்தார்கள்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு கோபாலை விசாரித்தது. கோபால் தனது பிரச்னையை ஒப்புக் கொண்டார். பல மாதங்களாக அவர் புத்தகங்களைப் படித்துத் தயார் செய்து கொள்ளாமலேயே வகுப்புகள் நடத்தி வந்திருக்கிறார்.

தனக்குத் தெரிந்த சப்ஜெக்ட்தானே என்ற அலட்சியத்தில் புத்தகங்களைப் படிக்காமல் மேலோட்டமாகப் பாடம் நடத்தி வந்ததில் அவர் படித்து அறிந்திருந்த பல விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர் நினைவிலிருந்து அகன்று விட்டன. இதை அவரால் உணர முடியவில்லை.

"ஏதோ ஒரு ஓவர்கான்ஃபிடன்ஸினால அப்படி நடந்துக்கிட்டேன். நான் செஞ்சது தப்புத்தான். இனிமே படிச்சு நல்லாத் தயார் பண்ணிக்கிட்டு வந்து வகுப்பு நடத்தறேன்" என்றார் கோபால்.

ஆனால் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதை ஏற்கவில்லை. அவரை வேலையில் தொடர அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

"எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. நான் ஒரு வருஷம் லீவ் போட்டுட்டு என் சப்ஜெக்ட் தொடர்பான எல்லாப் பாடங்களையும் மறுபடியும் முழுசாப் படிச்சுட்டு வரேன். இப்ப என்னை டெஸ்ட் பண்ணின மாதிரி, சீனியர் ப்ரொஃபஸர்கள் மறுபடியும் டெஸ்ட் பண்ணட்டும். அவங்க என்னை அப்ரூவ் பண்ணினா மட்டும் என்னை மறுபடியும் வேலையில சேந்துக்க அனுமதிங்க" என்றார் கோபால்.

அவர் வேண்டுகோளை ஏற்று அவருக்கு ஒரு வருடம் சம்பளம் இல்லாத விடுப்பு கொடுக்கப்பட்டது. கோபால் தான் சொன்னபடியே ஒரு வருடம் பாடங்களை மீண்டும் படித்துத் தன்னை நன்கு தயார் செய்துகொண்டு வந்து பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சிறப்பாக பதில் சொன்னார். அதன் பிறகு, அவரை மீண்டும் வேலையில் தொடர அனுமதித்தார்கள்.

அதைத்தான் சேகர் குறிப்பிட்டுச் சொன்னான்.

ழனி வாய்விட்டுச் சிரித்து விட்டார். "மிஸ்டர் சேகர்! உங்ககிட்ட நாங்க இவ்வளவு தூரம் பேசிக்கிட்டிருக்கிறதே அதிகம். கோபால் பண்ணின தப்பு வேற, நீங்க பண்ணின குற்றம் வேற. 

"அவரு கொஞ்சம் சோம்பேறித்தனமா இருந்து  புத்தகங்களைப் படிக்காம அரைகுறையா கிளாஸ் எடுத்து தான் படிச்ச விஷயங்கள்ள நிறைய மறந்து போய், அவர் மேல மாணவர்களுக்கு இருந்த நல்ல அபிப்பிராயத்தைப் போக்கிக்கிட்டாரு. 

"நீங்க உங்க கிளாஸ்ல படிச்ச மாணவியை பாலியல் பலாத்காரம் பண்ண முயற்சி செஞ்சிருக்கீங்க. காலேஜ் பியூன் பாத்துட்டு ஒடி வந்து உங்களை அடிச்சு விலக்கி விட்டு, அந்தப் பொண்ணைக் காப்பாத்தியிருக்காரு. 

"இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம்னு அந்தப் பொண்ணோட பெற்றோர்கள் கேட்டுக்கிட்டதால உங்க மேல போலீஸ் புகார் கொடுக்காம உங்களை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டு அதோட பிரச்னையை முடிச்சு வைக்கலாம்னு பாக்கறோம். நீங்க என்னடான்னா..! சரி. சட்னு சொல்லுங்க. ரிஸைன் பண்ணப் போறீங்களா இல்லை உங்களை டிஸ்மிஸ் பண்ணனுமா?"
     
குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

பொருள்:  
ஒரு அந்தணன் வேதத்தை மறந்து விட்டால், அவனால் அதை மீண்டும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவன் ஒழுக்கம் தவறி விட்டால் அவனுடைய உயர்ந்த குடிப்பிறப்பையே அவன் இழந்து விடுவான்.

(தற்போதைய காலத்துக்குப் பொருந்தும்படி, 'ஒருவன் தான் கற்ற கல்வியை மறந்து விட்டால், அதை மீண்டும் கற்க முடியும். ஆனால் அவன் ஒழுக்கம் தவறி விட்டால், அவனுடைய மதிப்பு போய் விடும்' என்று இந்தக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.)

135.இலக்கை எட்டினாலும்...
ஒரு சேல்ஸ் மேனேஜர் என்ற முறையில் என் குழுவில் வேலை செய்யும் எல்லா சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்களின் வளர்ச்சியிலும் எனக்கு அக்கறை உண்டு.

என் குழுவில் இருக்கும் 15 சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்களில் இருவர் பற்றி எனக்குக் கொஞ்சம் கவலை உண்டு. இத்தனைக்கும் இருவருமே திறமைசாலிகள். திறமை இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறார்களே என்பதுதான் என் கவலை.

இருவரில் நரேஷின் பிரச்னை என்னவென்று எனக்குத் தெரியும். ஏன், அவனைத் தவிர எல்லோருக்குமே இது தெரியும்! எப்போதும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பதுதான் அவன் வேலை. யாராவது அவனை விட அதிகமாக விற்பனை செய்து விட்டால், அவர்கள் மீது ஏதாவது புகார் சொல்வான்.

அவனுடைய புகார்களில் அர்த்தமோ, வலுவோ இருக்காது. "மத்தவங்க என்ன பண்றாங்கன்னு நீ ஏன் பாக்கறே? உன்னோட டார்கெட்டை எப்படி அச்சீவ் பண்றதுன்னு பாரு" என்று நான் அவனிடம் பலமுறை சொல்லி விட்டேன். ஆனால் அவன் மாறவில்லை. 

அவனுடைய இந்த மனப்போக்கினால் அவனால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அத்துடன் மற்றவர்களுடன் அவனுக்கு நல்லுறவு இல்லாமல் போய் விட்டது. இனி அவனே உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்டாலொழிய அவனுக்கு எதிர்காலம் இல்லை.

இன்னொருவன் பிரசாத். அவனுடைய பிரச்னை என்னவென்று எனக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு சேல்ஸ் எக்ஸிக்யூடிவுக்கும் ஒரு மாதாந்திர இலக்கு உண்டு. இலக்குக்கு மேல் அவர்கள் விற்பனை செய்தால் ஊக்கத்தொகை உண்டு. பல சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்கள் தங்கள் இலக்கை அடையக் கஷ்டப்படுவார்கள். கடுமையாக உழைப்பார்கள். 

ஆனால் பிரசாத் பத்து அல்லது பதினைந்து தினங்களுக்குள் தன் மாதாந்திர இலக்கை எட்டி விடுவான். ஆனால் இலக்கை எட்டிய பிறகு அதற்கு மேல் விற்பனை எதுவும் வராது. கேட்டால், முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்' என்பான்.

சில மாதங்களில் 20 தேதி வரை ஒரு விற்பனை கூட இருக்காது. ஆனால் இருபது தேதிக்கு மேல் ஆர்டர்கள் வரும். மாத இறுதிக்குள் இலக்கை எட்டி விடுவான்!

ஒரு மாதத்தில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் மட்டும்தான் உழைக்கிறான். மற்ற நாட்களில் விற்பனையில் கவனம் செலுத்துவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மற்ற நாட்களிலும் நன்கு உழைத்தால் ஊக்கத்தொகையாகவே நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் அவன் ஏன் அப்படிச் செய்வதில்லை என்பது எனக்குப் புரியவில்லை.

பிரசாத்துக்குக் குடும்பப் பிரச்னை ஏதாவது இருக்குமோ என்று தோன்றியது. அதனால்தான் இலக்கை அடையும் வரை மட்டும் உழைத்து விட்டு, மற்ற நாட்களில் வேறு எதிலாவது கவனத்தைச் செலுத்துகிறானோ?

அவன் வீட்டிலேயே போய் விசாரித்து விட்டு வந்து விடலாம் என்று ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவன் வீட்டுக்குப் போனேன். வீட்டில் பிரசாத்தின் தந்தை இருந்தார்.

நான் யார் என்று சொன்னதும் அவர் பதறிப் போய் விட்டார். 

"என்ன சார்! ஏதாவது பிரச்னையா?" என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. பிரசாத்துக்கு நல்லது செய்யலாம்னு நெனைச்சுத்தான் வந்திருக்கேன். அவரைப் பத்தி சில விஷயங்கள் உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்" என்றேன்.

"சார்! பிரசாத் ரொம்ப நல்ல பையன். தப்பு எதுவும் பண்ண மாட்டான். இந்தப் பாழாப்போன குடிப்பழக்கம்தான் அவனோட எதிரி..."

"என்ன சார் சொல்றீங்க?" என்றேன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம் சார். அவன் வாங்கற சம்பளத்தில பாதி குடிக்கே போயிடுது. எனக்குக் கொஞ்சம் பென்ஷன் வருது. அதனால குடும்பம் ஓடிக்கிட்டிருக்கு. ஆனா, ஆஃபீஸ் வேலையில கரெக்டா இருக்கேன், அங்க ஒண்ணும் பிரச்னை இல்லைன்னு எங்கிட்ட சொல்லியிருக்கானே! ஏதாவது தப்புப் பண்ணியிருந்தான்னா அவசரப்பட்டு வேலையை விட்டுத் தூக்கிடாதீங்க சார்!" என்றார் அவர் பதட்டம் தணியாதவராக.

பிரசாத்தின் பிரச்னை எனக்குப் புரிந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு மாதத்தில் சில நாட்கள் கடுமையாக உழைத்து விற்பனை இலக்கை எட்டி விடுகிறான். அதற்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்தாமல் குடித்து விட்டு வீணே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறான்! ஒரு தவறான பழக்கம் எப்படி ஒருவனின் திறமையையே மழுங்க அடித்து விடுகிறது என்று நினைத்து வருந்தினேன்.
      
குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை 
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொருள்:  
பொறாமை உள்ளவனிடம் செல்வம் சேராது. அதுபோல் ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு ஏற்படாது.

136.வேண்டாம் மேனகை! 
"நண்பர்களே! நாம இங்க என்ஜாய் பண்றதுக்காக வந்திருக்கோம். அதனால எல்லாரும் ஃப்ரீயா இருங்க. இங்க எம்.டி, ஜி.எம், அஸிஸ்டன்ட்னு வித்தியாசம்லாம் கிடையாது" என்றார் நிர்வாக இயக்குனர் மணிபாரதி.

"ஆமாம். நாம ஃப்ரீயா இருக்கணும்னுதான் பெண் ஊழியர்கள் இல்லாம ஆண்கள் மட்டும் வந்திருக்கோம்" என்றார் பொது மேலாளர் முருகன்.

அந்த நிறுவன ஊழியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பிக்னிக்குக்காக மலைப்பகுதியில் இருக்கும் அந்த ரிஸார்ட்டுக்கு வருவது வழக்கம்.

மாதவன் அந்த நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்ததால், அவனுக்கு இதுதான் முதல் முறை. அலுவலகத்தில் பாம்பாகச் சீறும் ஜி.எம்மும், அறையை விட்டு வெளியே வராத எம்.டியும் கீழ் மட்ட ஊழியர்கள் உட்பட அனைவரிடமும் கைகுலுக்கியும், தோளில் கைபோட்டும் பழகியது அவனுக்கு வியப்பாக இருந்தது.

பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பார்ப்பதில் கழிந்தது. மாலை தங்கள் அறைகளுக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறியதும் அனைவரும் மைய அறையில் கூடினார்கள்.

அறையின் முகப்பில் இருந்த பெரிய மேஜைகளின் மீது பல்வகை மதுபானங்களும், கண்ணாடித் தம்ளர்களும் வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய பானத்தையோ, கலவையையோ ஊழியர்களிடம் கேட்டுப் பெற்று எடுத்து வந்து நாற்காலிகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பானங்களை அருந்தியபடி அரட்டை அடிக்கத் தொடங்கினர்.

மாதவன் மட்டும் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். அவன் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்து அவனிடம் வந்த முகேஷ் "என்னப்பா! டிரிங்க்ஸ் பழக்கம் இல்லியா? முதல்ல கொஞ்சம் பியர் அடிச்சுப்பாரு. அப்புறம் பழகிடும். நான் எடுத்துக்கிட்டு வரட்டுமா?" என்றான்.

முகேஷ் அவனுடைய சீனியர். அலுவலகத்தில் அவனுக்கு நெருக்கமானவனும் கூட.

"வேண்டாம். நான் குடிக்கிறதில்ல" என்றான் மாதவன்.

"நான் கூட வந்த புதுசுல ஒன்னை மாதிரிதான் இருந்தேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு ஆட்டம் பாக்கப் போறோம். அதைப் பாத்தப்பறம் உனக்கே குடிக்கணும்னு ஆசை வந்துடும்" என்றான் முகேஷ்.

"ஆட்டமா?"

"ஆமாம்ப்பா! காபரே டான்ஸ்!"

"காபரேயா?"

"ஆமாம்ப்பா! இந்த ரிஸார்ட்டோட ஸ்பெஷாலிட்டியே காபரேதான். இந்த மாதிரி ஒரு ஆட்டத்தை சிட்டி ஹோட்டல்கள்ள கூடப் பாக்க முடியாது!"

"இல்ல. நான் அதைப் பாக்கப் போறதில்ல. நான் ரூமுக்குப் போயிடறேன்" என்றான் மாதவன்.

"முட்டாளாடா நீ? சிட்டியில, அவனவன் திருட்டுத்தனமா காபரே நடக்கற ஹோட்டல்கள்ள ஏகப்பட்ட பணம் கொடுத்து டிக்கட் வாங்கிக்கிட்டு எப்ப போலீஸ் வந்து எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிடுவாங்களோன்னு பயந்துகிட்டே பாக்கறான். இங்க நம்ப கம்பெனியில என்டர்டெயின்மென்ட் எக்ஸ்பென்ஸ் கணக்கில இது மாதிரி சூப்பர் டான்ஸ் எல்லாம் நமக்கு ஃப்ரீயாவே ஏற்பாடு பண்ணியிருக்காங்க. இதைப் பாக்க மாட்டேன்னு கண்ணை மூடிக்கிறேங்கறே!"

"வேண்டாம் முகேஷ். இது மாதிரி பழக்கம்லாம் ஆரம்பிச்சா பின்னால அடிக்‌ஷனாப் போயி, வாழ்க்கையே வீணாயிடும். அதனாலதான் இந்த மாதிரி விஷயங்களிலிருந்து விலகி  இருக்கலாம்னு பாக்கறேன்!"

"ஸ்கூல்ல படிச்ச திருக்குறளை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டிருக்க போலருக்கு! குடிக்க மாட்டேன்னு சொன்னே. அது ஓகே. நான் உன்னை வற்புறுத்தல. ஒரு கவர்ச்சி நடனத்தைப் பாக்கறதுனால நீ கெட்டுப் போயிடுவியா என்ன? சினிமாவிலல்லாம் பாக்கலியா?"

"நான் பாக்கற சினிமாவில இது மாதிரி டான்ஸ் அஞ்சு நிமிஷம் வரலாம். ஆனா இது மாதிரி டான்ஸைப் பாக்கணும்கறதுக்காக நான் சினிமாவுக்குப் போறதில்லியே!"

"டேய் சந்நியாசி! நீ என்ன டான்ஸ் ஆடறவங்களோட சல்லாபமா பண்ணப் போற? அவங்க கவர்ச்சியா ஆடறதை சும்மா பாக்கறதினால என்ன ஆயிடப் போகுது? ஒரு டான்ஸைப் பார்த்து யாராவது கெட்டுப் போயிருக்காங்களா? சொல்லு."

"போயிருக்காங்களே, சந்நியாசிகளே கெட்டுப் போயிருக்காங்க!"

"எந்த சந்நியாசி? ஒத்தர் பேரைச் சொல்லு பாக்கலாம்!"

"விசுவாமித்திரர்!" என்றான் மாதவன்.
   
குறள் 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் 
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்:  
ஒழுக்கம் தவறுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்தவர்கள் ஒழுக்கம் தவறாமல் கவனமாக இருப்பார்கள்.

137.பணமோசடி 
"என்ன திடீர்னு ஆஃபீஸ்ல ஒரே பரபரப்பு?" என்றான் கோவர்த்தனம். பொதுவாக அவன், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவன்.

"ஏதோ மோசடி நடந்திருக்காம்" என்றான் கணேசன். அவன் இப்போதுதான் ஜெனரல் மானேஜர் அறைப்பக்கம் போய் நோட்டம் பார்த்து விட்டு வந்திருந்தான்.

"என்ன மோசடி?"

"நம்ப சப்ளையரோட அக்கவுண்ட்டுக்குப் போக வேண்டிய மூணு லட்ச ரூபாய் வேற ஏதோ அக்கவுண்ட்டுக்குப் போயிருக்கு."

"அது எப்படி முடியும்? சீஃப் அக்கவுண்ட்டன்ட்தானே பாங்க் ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் பண்ணுவாரு?"

"யாரோ அவரோட பாஸ்வேர்டைப் பயன்படுத்திப் பணத்தை வேற அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. சப்ளையருக்கு தொடர்ச்சியா நிறைய பேமெண்ட் நடந்துக்கிட்டிருக்கறதால இந்த ஒரு பேமெண்ட் வரல்லேங்கறதை அவங்க கண்டு பிடிச்சு நம்பகிட்ட கேட்டு, நாம கணக்கெல்லாம் செக் பண்ணி பாங்க்ல போய் விசாரிச்சு இப்படி ஒரு மோசடி நடந்துருக்குங்கறதைக் கண்டு பிடிக்கவே மூணு மாசம் ஆயிடுச்சு. போலீஸ்ல புகார் கொடுத்து ரெண்டு மூணு வாரம் ஆயிடுச்சாம். ஆனா மேனேஜ்மேன்ட்ல விஷயத்தை ரகசியமா வச்சிருந்திருக்காங்க. இன்னிக்குத்தான் ரெண்டு போலீஸ் அதிகாரிங்க நம்ம ஆஃபீசுக்கு வந்திருக்காங்க" என்று கணேசன் விளக்கினான்.

"யார் அக்கவுண்ட்டுக்குப் பணம் போயிருக்குன்னு கண்டு பிடிச்சு அவங்களைப் புடிச்சுடலாமே!" என்றான் கோவர்த்தனம்.

"அது புதுசா ஓப்பன் பண்ணின அக்கவுண்ட்டாம். ரெண்டு மூணு தடவையா பணத்தை வித்ட்ரா பண்ணிட்டு அக்கவுண்ட்டைத் துடைச்சு வச்சுட்டுப் போயிட்டான் போலருக்கு! ஐடி ப்ரூஃப், அட்ரஸ் ப்ரூஃப் எல்லாமே போலியாம்!" என்றான் கணேசன்.

"நம்ப ஸ்டாஃப் யாரையாவது சந்தேகப்படறாங்களா?" என்றான் கோவர்த்தனம்.

கணேசன் இதற்கு பதில் சொல்வதற்குள் பியூன் வந்து கோவர்த்தனத்திடம், "சார்! ஜி.எம் உங்களைக் கூப்பிடறாரு" என்று சொல்ல, கோவர்த்தனம் எழுந்து ஜெனரல் மானேஜரின் அறைக்குச் சென்றான்.

ஜி.எம் அறையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். கோவர்த்தனம் உள்ளே போனதும், ஜி.எம் அவனிடம், "கோவர்த்தனம்! பத்து வருஷம் முன்னால விநாயகா என்டர்ப்ரைசஸ்ங்கற கம்பெனியில நீங்க ஒர்க் பண்ணினீங்களா?" என்றார்.

கோவர்த்தனம் அதிர்ச்சி அடைந்தவனாக "ஆமாம் சார்!" என்றான் மென்று விழுங்கியபடி.

"நீங்க இங்க வேலைக்குச் சேர்ந்தபோது கொடுத்த அப்ளிகேஷன்ல அந்த கம்பெனியில வேலை செஞ்சதா சொல்லலியே, ஏன்?" என்றார் அவர்.

"எப்படிச் சொல்லுவான்? அங்கே அவன் ஐம்பதாயிரம் ரூபா கையாடல் பண்ணி மாட்டிக்கிட்டு வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆனதைப் பெருமையாவா சொல்லிக்க முடியும்?" என்றார் போலீஸ் அதிகாரி. உடனேயே அவனைப் பார்த்து "சொல்லுடா! இந்த மூணு லட்ச ரூபா  மோசடியைப் பண்ணினது நீதானே?" என்றார்.

கோவர்த்தனத்துக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது. பத்து வருடம்  முன்பு, இளம் வயதில் சூதாட்டத்தில் ஈடுபட்டு நிறையத் தோற்றுக் கடன் வாங்கி, கடனை அடைக்க முடியாமல் ஏதோ ஒரு வேகத்தில் ஆஃபீஸ் பணத்தை எடுத்து மாட்டிக்கொண்டதும், பிறகு அம்மாவின் நகைகளை விற்றுப் பணத்தைக் கட்டி விட்டதால், அந்த நிறுவனம் போலீசில் புகார் கொடுக்காமல் அவனை வேலையை விட்டு அனுப்பியதும் மனதில் படக்காட்சிகள் போல் வேகமாக வந்து போயின.

"இது எப்படி எங்களுக்குத் தெரியும்னு யோசிக்காதே. இங்கே வேலை செய்யற ஒவ்வொருத்தரோட பின்னணியையும் நாங்க ஆராய்ஞ்சுக்கிட்டிருக்கோம். நீ இங்கே வேலைக்குச் சேர்ந்து பத்து வருஷம் ஆகுது. ஆனா நீ படிப்பை முடிச்சு 12 வருஷம் ஆகுது. ரெண்டு வருஷம் வேலை தேடிக்கிட்டிருந்ததா சொல்லி நீ இவங்களை நம்ப வச்சிருக்கே. ஆனா நாங்க சந்தேகப்பட்டு விசாரிச்சு உன் பழைய வேலை விவரங்களைக் கண்டு புடிச்சுட்டோம். சொல்லு. மூணு லட்ச ரூபாயை என்ன பண்ணினே?" என்றார் அந்த அதிகாரி.

கோவர்த்தனம் ஜி.எம்மைப் பார்த்து, "சார்! நான் ஒரு தடவை தப்பு செஞ்சது உண்மைதான். ஆனா அதுக்கப்பறம் ஒரு சின்னத் தப்புக் கூடச் செய்யக் கூடாதுன்னு வைராக்கியமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இந்த கம்பெனியில இந்தப் பத்து வருஷத்திலே நான் ஒரு தப்பு கூடப் பண்ணினதில்ல சார். இந்த பாங்க் ட்ரான்ஸ்ஃபர் மாதிரி கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியவும் தெரியாது சார்! என்னை நம்புங்க!" என்றான் கெஞ்சும் குரலில்.

ஜி.எம் பதில் சொல்லாமல் போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தார்.

"இப்ப எங்களுக்கு உன் மேலதான் சந்தேகம். அதனால உன்னை அரெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்" என்றார் போலீஸ் அதிகாரி.

"சார்!" என்றான் கோவர்த்தனம், ஜி.எம்மைப் பார்த்து.

ஜி.எம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

கோவர்த்தனம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கோவர்த்தனம் விடுதலை செய்யப்பட்டான்.

கோவர்த்தனம் விடுதலையாகி இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவர்த்தனத்தின் வீட்டுக்கு அவன் அலுவலக நண்பன் கணேசன் வந்தான். அவன் முகத்தைப் பார்க்கவே கோவர்த்தனத்துக்கு அவமானமாக இருந்தது.

"டேக் இட் ஈஸி! அதுதான் உன் மேல் குத்தம் இல்லைன்னு தெரிஞ்சுடுச்சே!" என்றான் கணேசன்.

"பத்து வருஷத்துக்கு முன்னால நான் பண்ணின தப்பு என்னை இன்னும் விரட்டிக்கிட்டு வருதே! எவ்வளவு அவமானம்! உன் மூஞ்சியைப் பார்க்கக் கூட எனக்கு சங்கடமா இருக்கு" என்றான் கோவர்த்தனம்.

"பரவாயில்ல விடு" என்றான் கணேசன்.

"நான் அப்படி ஒரு தப்பைப் பண்ணினதாலதானே இப்ப என்னை சந்தேகப்பட்டாங்க? ஒரு தடவை பண்ணின தப்பு இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு எவ்வளவு பெரிய அவமானத்தையும் சரிவையும் கொடுத்திருக்கு பாரு! ஆனா எனக்கு ஒரு வருத்தம்."

"என்ன?"

"ஒரு தடவை தப்பு பண்ணினேன். அதுக்கு தண்டனைதான் இந்தப் பழியும் அவமானமும். சரி. ஆனா இந்தப் பத்து வருஷமா நேர்மையா நடந்துக்கிட்டிருக்கேனே, அந்த நேர்மைக்கு ஒரு பலனும் கிடையாதா?"

"ஏன் கிடையாது? நிச்சயமா உண்டு" என்றான் கணேசன்.

"தத்துவம் எல்லாம் வேண்டாம். என் நேர்மைக்கு எனக்கு என்ன பலன் கிடைச்சிருக்கு?"

"கிடைச்சிருக்குப்பா! அதைச் சொல்லத்தான் வந்தேன். ஆனா நீ, நான் வந்தவுடனேயே புலம்ப ஆரம்பிச்சுட்டே! உன் மன பாரம் கொஞ்சம் இறங்கினப்பறம் நான் சொல்ல வந்த நல்ல விஷயத்தைச் சொல்லலாம்னு காத்துக்கிட்டிருக்கேன்."

"என்ன நல்ல விஷயம்?"

"பணத்தைக் கையாடினது நீ இல்லைன்னு தெரிஞ்சுட்டாலும், உன் பழைய வேலையைப் பத்திச் சொல்லாம மறைச்சுட்டேன்னு ஜி.எம் உன் மேல கோபமாத்தான் இருந்தாரு. ஆனா இத்தனை வருஷமா கம்பெனியில நேர்மையா, கடினமா உழைச்ச உனக்கு தண்டனை கொடுக்கக் கூடாதுன்னு  நெனச்சு உன்னை மறுபடியும் வேலையில சேத்துக்கறதுன்னு முடிவு பண்ணி இருக்காரு. உன் சஸ்பென்ஷனை ரத்து பண்ணி மறுபடியும் வேலையில சேரச் சொல்லி கம்பெனியிலிருந்து உனக்குக் கடிதம் அனுப்பிச்சுட்டாங்க. அநேகமா நாளைக்கே அந்தக் கடிதம் உனக்கு வரலாம்" என்றான் கணேசன்.
    
குறள் 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி.

பொருள்:  
ஒழுக்கத்தினால் ஒருவருக்கு மேன்மை கிடைக்கும். ஒழுக்கம் தவறுபவருக்கு வேண்டாத பழி வந்து சேரும்.

138.பயிற்சியில் துவங்கிய பழக்கம் 
என் நண்பன் முருகேஷ் மதுரையில் ஒரு மருத்துவமனையில் குடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்று தெரிந்ததுமே மதுரைக்குச் சென்று அவனைப் பார்க்க விரும்பினேன். ஆயினும் அலுவலகப் பணியினால் உடனே மும்பையிலிருந்து கிளம்பி மதுரைக்குச் செல்ல முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து நான் மதுரைக்குச் சென்றபோது முருகேஷ் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குப் போயிருந்தான். அவன் வீட்டுக்குச் சென்றபோது படுக்கையில் படுத்திருந்த உருவத்தைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

முருகேஷா இவன்? என்னதான் நான் முருகேஷப் பார்த்துச் சில வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் இப்படியா அடையாளம் தெரியாமல் மாறியிருப்பான்! ஒரு எலும்புக்கூடு படுத்திருப்பது போல் படுத்திருந்த அவன் தோற்றத்தைக் கண்டதும் துக்கம் என் நெஞ்சை அடைத்தது.

நான் அந்தப் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது டில்லியில் உள்ள பயிற்சிக் கல்லூரியில் ஒரு மாதப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டேன். அங்குதான் முருகேஷைத் சந்தித்தேன். சந்தித்த சில நிமிடங்களிலேயே நாங்கள் இருவரும் நெருக்கமாகி விட்டோம்.

பயிற்சியின் இறுதி நாளில் எங்களுக்கு ஒரு உயர்தர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது. விருந்துக்கு முன் மது வழங்கப்பட்டது. அதற்கு முன்பே மது அருந்தப் பழகிக் கொண்டவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் மதுவருந்தத் தொடங்கினர்.

நான், முருகேஷ் போன்ற மதுப்பழக்கம் இல்லாத ஒரு சிலர் மட்டும் தனித்து நின்றோம். எங்கள் பயிற்சி அதிகாரி, "சும்மா குடிங்க! இது மாதிரி உயர்ந்த சரக்கெல்லாம் வெளியில கிடைக்காது. எப்பவாவது குடிச்சா ஒண்ணும் ஆயிடாது. நான் கூட இது மாதிரி பார்ட்டிகள்ள மட்டும்தான் குடிப்பேன். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?" என்றார்.

அவர் பேச்சைக் கேட்டு மதுவைச் சுவைக்கத் தொடங்கியவர்களில் முருகேஷும் ஒருவன்.

முருகேஷும் நானும் வெவ்வேறு ஊர்களில் பணி செய்து வந்ததால் எங்களால் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிந்ததில்லை. ஆயினும் இருவரும் தொடர்பில்தான் இருந்தோம்.

எனக்குப் பதவி உயர்வுகள் கிடைத்துத் துணைப் பொது மேலாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டேன். ஆனால் முருகேஷ் இன்னும் ஒரு கீழ்நிலை அதிகாரியாகத்தான் இருந்தான்.

அன்று டில்லி ஓட்டலில் தொடங்கிய மதுப்பழக்கம் முருகேஷை உடும்பு போல் பற்றிக்கொண்டு விட்டது. ஒரு நாள் கூட அவனால் மது அருந்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

நான் அவனை நேரில் பார்க்கும்போதெல்லாம் மதுப்பழக்கத்தை விடச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவியும் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறாள். ஆனால் அவனால் மதுப் பழக்கத்தை விட முடியவில்லை.

குடிப் பழக்கம் அவன் குடலைச் சிதைத்த நிலையில்தான் அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

"என்னடா இப்படி ஆயிட்டே?" என்றேன்.

பின்புறமிருந்து ஒரு விசும்பல் கேட்டது. முருகேஷின் மனைவி பானுமதி!

"நீங்க, நான், இன்னும் எத்தனையோ பேரு சொல்லியும் கேக்காம இப்படிக் குடிச்சுக் குடிச்சு உடம்பைப் பாழாக்கிக்கிட்டு ஒக்காந்திருக்காரு பாருங்க"  என்றாள் அவள்.

"இனிமேயாவது இந்தப் பழக்கத்தை விடுடா!" என்றேன்.

முருகேஷ் மௌனமாகத் தலையாட்டினான்.

"மறுபடியும் குடிச்சா உயிரே போயிடும்னு டாக்டர் சொல்லியிருக்காரு. என் மேல பரிதாபப்பட்டாவது அவரைக் குடிக்காம இருக்கச் சொல்லுங்க" என்றாள் பானுமதி.

"இனிமே குடிக்க மாட்டேன்" என்றான் முருகேஷ்.

"உங்களால முடியுமா?" என்றாள் பானுமதி அவனிடம். தொடர்ந்து, என்னிடம் "எங்களுக்குக் குழந்தைங்க இல்லாதது ஒரு விதத்தில நல்லதுன்னு தோணுது. இவரு குடிக்கு ஆகிற செலவு போக மீதி இருக்கிற பணத்தில நாங்க ரெண்டு பேரு குடித்தனம் நடத்தறதே பெரும்பாடா இருக்கு. இதில குழந்தைங்க வேற இருந்தா அவங்களுக்கு என்னால ரெண்டு வேளை சோறு போடக் கூட முடிஞ்சிருக்காது. அப்புறம் படிக்க வைக்கறதெல்லாம் எங்கே? இன்னொரு விதத்தில பாத்தா, குழந்தைங்க இருந்திருந்தா எனக்குக் கொஞ்சம் ஆதரவா இருந்திருப்பாங்கன்னு தோணுது" என்றாள் வருத்தத்துடன்.

"டேய்! மூணு மாசம் லீவு போட்டுட்டு நீங்க ரெண்டு பெரும் மும்பைக்கு வந்து என்னோட இருங்க. ஒரு மாறுதலா இருக்கும். என்னோட இருந்தா உன் குடிப்பழக்கத்தையும் உன்னால விட முடியும்" என்றேன் நான். என்னால் வேறு என்ன செய்ய முடியும்?

குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்..

பொருள்:  
நல்லொழுக்கம் நன்மைகள் விளைவதற்கு அடிப்படையாக அமையும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத்தான் தரும்.

139.சீட்டுப்பணம் 
"என்னங்க இது? அனாதையாத் திரிஞ்சிக்கிட்டிருந்த பையனுக்கு நீங்க வேலை கொடுத்துப் பிழைப்புக்கு வழி பண்ணினீங்க. அவனும் இத்தனை வருஷமா உங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். இப்ப உங்ககிட்ட சொல்லிக்காம வேலையை விட்டு நின்னுட்டு, உங்களுக்குப் போட்டியா அவனே தொழில் ஆரம்பிச்சிருக்கான். அவனைச் சும்மா விடலாமா?" என்றாள் சுந்தரி.

சபாபதி பதில் சொல்லவில்லை.

"இப்படி நன்றியில்லாம நடந்துக்கிட்டதுக்கு.."

"வேணாம். அவனை சபிக்கிற மாதிரி எதுவும் சொல்லிடாதே! அவன் நல்லா இருந்துட்டுப் போகட்டும்" என்றார் சபாபதி.

"நமக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினவங்களை நாலு வார்த்தை சொல்லித் திட்டினாத்தானே மனசு ஆறும்?" என்றாள் சுந்தரி.

"நல்லவங்களா இருக்கறதுக்கு அடையாளம் நல்ல வார்த்தைகளையே பேசறதுதான்" என்றார்  சபாபதி.

"என்னங்க நீங்க பேசறது? தப்புப் பண்ணினவனுக்கு தண்டனை கொடுக்காம வேணும்னா விட்டுடலாம். ஆனா நம்ப வயித்தெரிச்சல் தீர ரெண்டு வார்த்தை சொல்றது கூடவா தப்பு?"

"தப்புதான்."

"நீங்க சொல்றது விசித்திரமா இருக்கு. சில பேரு தங்களோட  கோபத்தைக் காட்ட வசவுச் சொற்களைப் பயன்படுத்துவாங்க. ஆனா கண்ணியமாப்  பேசறவங்க இந்த மாதிரி சொற்களைப் பயன்படுத்த மாட்டாங்க. 'அவன் நல்லா இருப்பானா?' 'அவன் நாசமாத்தான் போவான்' என்கிற மாதிரி ஏதாவது சொல்லுவாங்க. இதுதானே உலக வழக்கம்?"

"கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தறது நமக்கு நாமே கொடுத்துக்கற தண்டனை."

"எப்படிச் சொல்றீங்க?'

"முனிவர்கள் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிச்சு கடுமையா தவம் பண்ணி சில சக்திகளைப் பெறுவாங்க. ஆனா அவங்க யாருக்காவது சாபம் கொடுத்தா அவங்க தவ வலிமை குறைஞ்சுடும்னு புராணக் கதைகள்ள படிச்சிருக்கோம். சாபம் கொடுக்கறதுங்கறது மத்தவங்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடிய சொற்களைப் பேசறதுதானே? இது மாதிரி தீய சொற்களை முனிவர்கள் பயன்படுத்தினா அவங்க தவ வலிமை குறைஞ்சிடும்னா என்ன அர்த்தம்? அவங்களோட ஒழுக்கமும், கட்டுப்பாடும் கட்டுக்குலைஞ்சு போச்சுன்னுதானே? இது அவங்க தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கற தண்டனையில்லாம வேற என்ன?"

சுந்தரி பதில் சொல்லவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, மாதாந்திரச் சீட்டு நடத்தி வந்த ஒருவர் சீட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாகச் செய்தி வந்தது. சுந்தரியும் அவரிடம் சீட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கட்டியிருந்தாள். செய்தி கேட்டதும் முதலில் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தொடர்ந்து, ஏமாற்றி விட்டு ஓடிப் போனவன் மீது ஆத்திரம் வந்தது. "அவன் நாச..." என்று ஆரம்பித்தவள் "அவன் நல்லா இருக்கட்டும்" என்று வாக்கியத்தை மாற்றிக் கொண்டாள்.

குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயாற் சொலல்.

பொருள்:  
வாய்தவறிக் கூடத் தீய சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களுக்கு ஏற்புடையதல்ல.

140.குறை ஒன்று உண்டு கண்ணா  

"அசோசியேஷன் மீட்டிங்குக்கு நான் எதுக்கு வரணும்?" என்றான் கண்ணன்.

"எல்லாரையும் பாத்துப் பழகறதுக்கு இது ஒரு சந்தர்ப்பம்" என்றாள் அவன் மனைவி வசந்தி.

"நீ மட்டும் போயிட்டு வா."

"ஒரு அஞ்சு நிமிஷம் வந்து ஒக்காந்துட்டுப் போயிடுங்க."

அரைமனதாக ஒப்புக் கொண்டான் கண்ணன்.

அந்தக் குடியிருப்பில் அவர்கள் சமீபத்தில்தான் வீடு வாங்கிக்கொண்டு குடி போயிருந்தார்கள். வசந்தி அங்கிருந்த பலரிடமும் பழகிப் பரிச்சயமாகி  விட்டாள். 

ஆனால் கண்ணன் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கூடப் பேசியதில்லை. வெளியே போகும்போது யாராவது பார்த்துப் புன்னகை செய்தாலோ, தலையாட்டினாலோ கூட, கவனிக்காமல் எங்கேயோ பாத்தபடி போய்க் கொண்டிருப்பான்.

கண்ணன் உயிரியல் துறையில் பட்ட மேற்படிப்புப் படித்து விட்டு, ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளனாகப் பணி செய்து வந்தான்.
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஏதாவது படித்துக் கொண்டோ மடிக்கணினியில் வேலை செய்து கொண்டோ இருப்பான். வசந்தி ஏதாவது கேட்டால் பதில் சொல்வான். அவனாக அதிகம் பேச மாட்டான்.

சில சமயம் பத்திரிகையிலோ, தொலைக்காட்சியிலோ வந்த சுவையான விஷயத்தை வசந்தி அவனுடன் பகிர்ந்து கொண்டால் கேட்டுக் கொள்வான். அது கூட அவள் திருப்திக்காகத்தான் செய்கிறானே தவிர அவனுக்கு அவற்றில் ஈடுபாடு இல்லை என்பதை வசந்தி உணர்ந்திருந்தாள். சினிமா, ஷாப்பிங், உறவினர்கள் வீடு என்று எங்காவது போக வேண்டும் என்று வசந்தி சொன்னால் அவளுடன் போவான்.

தன் கணவன் யாருடனும் பழகாமல் ஒதுங்கியே இருப்பது வசந்திக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது. அலுவலகத்திலும் அப்படித்தான் என்று அவனுடைய நண்பன் சீனு சொல்லி இருக்கிறான். கண்ணனுக்கு நண்பன் என்று சொல்லிக்கொள்ள சீனு மட்டும்தான் உண்டு. ஏதோ ஒரு நண்பராவது இருக்கிறாரே என்று நினைத்துக் கொள்வாள் வசந்தி.

அந்தக் குடியிருப்பில் இருந்த 72 வீடுகளுக்கும் பொதுவான விஷயங்களை கவனித்துக் கொள்ளும் அசோஸியேஷனின் கூட்டத்தில் கலந்து கொள்ளத்தான் கண்ணனை அழைத்தாள் வசந்தி.

சோசியேஷன் கூட்டம் அரைமணியிலேயே முடிந்து விட்டது. இப்போது செயலாளராக இருப்பவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலக விரும்பினார். புதிதாக ஒரு செயலாளரைத் தேர்ந்தெடுக்கத்தான் கூட்டம் அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் செயலாளராகப் பொறுப்பேற்க யாரும் முன்வராததால் கூட்டம் சீக்கிரமே முடிந்து விட்டது.

வீட்டுக்கு வந்ததும், "ஏங்க? நீங்க ஏன் செகரெட்டரியா பொறுப்பேத்துக்கக் கூடாது?" என்றாள் வசந்தி.

"என்ன ஒளறர? நான் எப்படி இதெல்லாம் பாத்துக்க முடியும்?" என்றான் கண்ணன்.

"ஏன் முடியாது? நீங்க நிறையப் படிச்சவரு. புத்திசாலி. எதையும் நல்லா யோசிச்சு செய்யக் கூடியவரு. இது ஒண்ணும் அவ்வளவு கஷ்டமான வேலை இல்ல. சில பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் சரி பண்ணிட்டா அப்புறம் எல்லாம் ஒழுங்காப் போகும். உங்களால இந்தப் பிரச்னையை எல்லாம் சுலபமாத் தீர்த்து வைக்க முடியும்."

"உனக்கு என்னைப் பத்தித் தெரியும். நான் யார்கிட்டயும் அதிகமாப் பழக மாட்டேன். என்னால எப்படி இந்தப் பொறுப்பை ஏத்துக்க முடியும்?"

"நீங்க எல்லார்கிட்டயும் பழகணும்கறதுக்காகத்தான் நான் உங்களை இந்தப் பொறுப்பை எடுத்துக்கச் சொல்றேன். உங்களுக்குத் தெரியாதது இல்ல. இவ்வளவு படிச்சிருக்கிற நீங்க மத்தவங்களோட பழகாம ஒதுங்கி இருக்கிறது ஒரு குறை இல்லையா? இந்தக் குறையை நீங்க போக்கிக்க வேண்டாமா? நீங்க செகரெட்டரியாப் பொறுப்பு எடுத்துக்கிட்டா எப்படியும் பல பேரோட பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். அதுக்கப்பறம் உங்ககிட்ட இருக்கிற இந்தக் குறை உங்களை அறியாமலே உங்களை விட்டுப் போயிடும்" என்றாள் வசந்தி.

ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்த கண்ணன் "ஓகே பாஸ்! உங்க உத்தரவுப்படியே செய்யறேன்" என்றான் சிரித்துக்கொண்டே. மாற்றம் அவனிடம் அப்போதே துவங்கி விட்டதாக வசந்திக்குத் தோன்றியது.
   
குறள் 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 
கல்லார் அறிவிலா தார்

பொருள்:  
உலகத்தோடு பொருந்தி நடந்து கொள்ளும் கலையைக் கற்காதவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் அறிவில்லாதவர்கள் என்றே கருதப்படுவர். ('உலகம்' என்ற சொல் உலகில் உள்ள உயர்ந்தவர்களையே குறிக்கும் என்பது தொல்காப்பிய இலக்கணம் ('உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.') எனவே இந்தக் குறளுக்கு 'உலகில் உள்ள உயர்ந்த மனிதர்களோடு பொருந்தி வாழ்தல்' என்றே பெரும்பாலும் பொருள் கூறப்பட்டிருக்கிறது. நான் இங்கே பொதுவாக உலகில் மற்றவர்களுடன் பழகுவது என்று எளிமையாகப் பொருள் கொண்டிருக்கிறேன். இன்றைய உலகில், உயர்ந்தவர்கள் யார் என்று கண்டறிவதே கடினமான செயல் அல்லவா?)
     பொருட்பால்                                                                                             காமத்துப்பால்


















No comments:

Post a Comment