திருக்குறள்
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 32
இன்னா செய்யாமை
311. வேண்டாம் விளம்பரம்!
நிர்வாக இயக்குனர் ரமணனின் அறைக்குள் வந்த பொது மேலாளர் சண்முகம் சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், தான் சொல்ல வந்த விஷயத்துக்குத் தயக்கத்துடன் வந்தார்.
"சார்! டிசம்பர் குவார்ட்டர் அக்கவுன்ட்ஸ் முடிஞ்சுடுச்சு. இப்பதான் அக்கவுன்ட்ஸ் மானேஜர் எங்கிட்ட விவரங்களைக் கொடுத்துட்டுப் போனார்."
"சொல்லுங்க!" என்றார் ரமணன், சண்முகம் என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்தவர் போல்.
"இந்த குவார்ட்டர்லயும் நமக்கு நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கு. போன குவார்ட்டரை விடக் கொஞ்சம் அதிகமாவே நஷ்டம்!"
"ம்..."
"நம்ம பத்திரிகைக்கு நல்ல பேர் இருந்தும், ஓரளவுக்கு நல்ல சர்க்குலேஷன் இருந்தும், நாம இப்படி நஷ்டத்தில் இயங்கறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு."
"என்ன செய்ய முடியும்? வாசகர்கள்கிட்ட நம்ம நிலைமையை விளக்கிச் சொல்லி, பத்திரிகையோட விலையைக் கொஞ்சம் உயர்த்த வேண்டியதுதான்! அதைத் தவிர, விளம்பர வருமானத்தை அதிகரிக்கவும் நாம முயற்சி பண்ணிக்கிட்டுத்தானே இருக்கோம்?" என்றார் ரமணன்.
"சார்! போன வருஷம்தான் விலையை உயர்த்தினோம். மறுபடி ஏத்தினா, அது சர்க்குலேஷனை பாதிக்கலாம். நீங்க சொன்னபடி, விளம்பர வருமானத்தை அதிகரிக்கறதிலதான் நாம கவனம் செலுத்தணும்" என்று சொல்லி விட்டுச் சற்றுத் தயக்கத்துடன் நிறுத்தினார் சண்முகம்.
ரமணன் மௌனமாக இருந்தார்.
"சார்! நான் கணக்குப் போட்டுப் பாத்தேன். நம்ம விளம்பரக் கொள்கையில நாம கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டா, பத்திரிகை விலையை உயர்த்தாமலேயே வருமானத்தைக் கூட்டி லாபம் வர அளவுக்குப் பத்திரிகையை நடத்தலாம்" என்ற சண்முகம், தான் தயாரித்திருந்த கணக்குகள் அடங்கிய தாளை ரமணன் முன் நீட்டினார்.
"மிஸ்டர் சண்முகம்! இதுக்கு கணக்கெல்லாம் தேவையில்லை. அதிக விளம்பரங்கள் வந்தா வருமானம் அதிகரிச்சு, லாபம் வரும்கறது எனக்குத் தெரியும். அதனால, நாம பத்திரிகையை இன்னும் நல்லா நடத்தி, இன்னும் சர்க்குலேஷனை அதிகரிச்சு, நல்ல லாபத்தோடயும், மார்க்கெட்ல நல்ல பேரோடயும் இயங்கலாம்கறதும் எனக்குப் புரியுது. ஆனா, இந்த காம்ப்ரமைஸை என்னால பண்ண முடியாது. வேற வழியில முயற்சி செஞ்சுதான் நஷ்டத்தைத் தவிர்த்து லாபமா இயங்கற வழியைப் பாக்கணும்!" என்றார் ரமணன்.
"சார்! மது, சிகரெட் விளம்பரங்களை வெளியிடறதில்லைங்கற உங்க கொள்கை உயர்ந்ததுதான். ஆனா, இப்படி நினைச்சுப் பாருங்க. நாம இந்த விளம்பரங்களைப் போடாததால யாரும் சிகரெட், மது அருந்தறதை நிறுத்திடப் போறதில்ல. நமக்கு ஒரு நன்மை கிடைக்கறப்ப, அதை ஏன் நாம பயன்படுத்திக்கக் கூடாது? இதில சட்டத்துக்கோ, தர்மத்துக்கோ விரோதமா எதுவும் இல்லையே?" என்றார் சண்முகம்.
"மிஸ்டர் சண்முகம்! பத்திரிகையில சிகரெட் மது விளம்பரங்களைக் கொடுக்கறவங்க எதுக்காகக் கொடுக்கறாங்க? பத்திரிகைக்கு வருமானம் கிடைக்கணும்கறதுக்காகவா? பத்திரிகையில வர விளம்பரத்தைப் பாத்துட்டு, வாசகர்கள் அவங்களோட பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்துவங்க, அதனால, அவங்களோட விற்பனை அதிகமாகுங்கறதுக்காகத்தானே? நம்ம பத்திரிகையில வர விளம்பரத்தைப் பார்த்து ஒண்ணு ரெண்டு பேர் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகி, அதனால அவங்க பாதிக்கப்பட்டாலும், அதில நமக்கு பொறுப்பு இருக்கு இல்ல? வேண்டாம், மிஸ்டர் சண்முகம்! சிகரெட், மது விளம்பரங்களால் வரக் கூடிய வருமானம், வளர்ச்சி இதெல்லாம் நமக்கு வேண்டாம். நாம கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை!" என்றார் ரமணன், உறுதியாக.
இன்றைய வியாபார உலகில் இப்படி ஒரு மனிதரா என்று தன் நிர்வாக இயக்குனரை வியப்புடனும், பிரமிப்புடனும் பார்த்தார் சண்முகம்.
குறள் 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
பொருள்:
மிகுந்த சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாக இருக்கும்.
312. பதவி உயர்வு
கதிரேசன் அந்த நிறுவனத்தில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்தபோது, சுகவனம் என்ற மற்றொரு அதிகாரியின் கீழ் பணி செய்யும்படி நியமிக்கப்பட்டான்.
அலுவலகப் பதவிப் படிக்கட்டில் சுகவனமும், கதிரேசனும் ஒரே படியில் இருந்தாலும், சீனியர் என்ற அடிப்படையில் சுகவனம் கதிரேசனுக்கு மேலதிகாரி என்ற நிலையைப் பெற்றார். அத்துடன், வயதிலும் அவர் கதிரேசனை விடப் பதினைந்து வருடங்கள் மூத்தவர்.
கதிரவன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, சுகவனம் கதிரேசனிடம், "நான் இந்த கம்பெனியில ஒரு உதவியாளரா சேர்ந்து, 10 வருஷம் கழிச்சுத்தான் ஒரு அதிகாரி ஆனேன். நீ ஏதோ அதிகம் படிச்சவன்கறதால, உன்னை நேரடியா ஒரு அதிகாரியா ஆக்கிட்டாங்க. உனக்கு வேலை கத்துக் கொடுக்கற பொறுப்பை எங்கிட்ட கொடுத்திருக்காங்க. உழைப்புக்கும், சீனியாரிட்டிக்கும் கிடைக்கிற மரியாதை இதுதான்!" என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சுகவீனம் சலித்துக் கொண்டது போல், கதிரேசனுக்கு வேலை கற்றுக் கொடுக்க அவர் அதிகம் கஷ்டப்பட வேண்டி இருக்கவில்லை. ஒரு சில வாரங்களிலேயே தன் வேலையைக் கற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டான் கதிரேசன். ஆயினும், அவனுக்கு மூத்த அதிகாரியான சுகவனத்தின் கீழ்தான் அவன் தொடர்ந்து செயல்பட வேண்டி இருந்தது
தன்னைப்போல் அல்லாமல், இளம் வயதிலேயே கதிரேசன் ஒரு அதிகாரியாகி விட்டதை சுகவனத்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவன் வேலையில் குற்றம் கண்டு பிடிப்பதும், மற்றவர் முன் அவனைக் கடிந்து பேசுவதுமாக, அவன் மீது தனக்கிருந்த வெறுப்பை அவர் வெளிக்காட்டிக் கொண்டே இருந்தார்.
மற்ற ஊழியர்களில் சிலர் கதிரேசனிடம், "நீங்க ஏன் சார் இதையெல்லாம் சகிச்சுக்கிட்டிருக்கீங்க? மானேஜர்கிட்ட சொல்லி, சுகவனத்தின் கீழ் பணி செய்யாம உங்களுக்குன்னு தனிப் பொறுப்பு வாங்கிக்கங்க. மானேஜருக்கு சுகவனத்தைப் பத்தித் தெரியும் நீங்க உங்க நிலைமையைச் சொன்னா, அவர் புரிஞ்சுப்பாரு" என்று கூறினர்.
"பரவாயில்ல. அவங்களா எப்ப எனக்குத் தனிப் பொறுப்பு கொடுக்கறாங்களோ, அப்ப கொடுக்கட்டும்!"என்றான் கதிரேசன்.
ஆறு மாதங்கள் கழித்து, கதிரேசனுக்குத் தனிப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. ஆயினும், இருவருக்கும் பொதுவாக இருந்த சில விஷயங்களில், சுகவனம் அவன் மீது குற்றம் கண்டு பிடிப்பதும், கிளை மேலாளரிடம் அவனைப் பற்றிப் புகார் செய்வதுமாக இருந்தார்.
ஓரிரு முறை கிளை மேலாளர் கதிரேசனைத் தனியாகக் கூப்பிட்டு விசாரித்து, அவன் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டார். ஆயினும், சுகவனம் ஒரு மூத்த அதிகாரி என்பதால், கிளை மேலாளர் அவரைக் கண்டிக்கவில்லை.
கதிரேசன் வேலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுடைய கிளை மேலாளர் பதவி உயர்வு பெற்றுத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
மற்ற அதிகாரிகளுள் ஒருவர் கிளை மேலாளராக நியமிக்கப் படுவார் என்று அறிவிக்கப்பட்டது. மூத்த அதிகாரி என்ற முறையில், கிளை மேலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று சுகவனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராதவிதமாகக் கதிரேசன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டான்.
முந்தைய கிளை மேலாளரின் பரிந்துரைதான் இதற்குக் காரணம் என்று அலுவலகத்தில் பரவலாக ஒரு கருத்து நிலவியது.
கதிரேசன் கிளை மேலாளராகப் பதவி ஏற்றுக் கொண்டதும், எல்லா ஊழியர்களும் அவன் அறைக்கு வந்து அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இறுதியாக, சுகவனம் அவன் அறைக்கு வந்தார்.
அவர் உள்ளே நுழைந்ததும், கதிரேசன் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று, "வாங்க சார்! உக்காருங்க" என்றான்.
சுகவனம் தயக்கத்துடன் அவன் எதிரே அமர்ந்தார்.
"சார், எதனாலோ உங்களுக்கு என்னைப் பிடிக்கல. எனக்கு நிறையத் தொந்தரவு கொடுத்தீங்க. இப்ப நான் உங்களுக்கு மேலதிகாரியா வந்துட்டதால, உங்களைப் பழி வாங்குவேன்னோ, பதிலுக்கு பதில் உங்களுக்குக் கஷ்டம் கொடுப்பேன்னோ நினைக்காதீங்க. பழைய மானேஜர் உங்களை எப்படி மரியாதையா நடத்தினாரோ, அதே மாதிரிதான் நானும் நடத்துவேன். நீங்க எப்பவும் போல உங்க வேலையைச் செய்யுங்க" என்றான் கதிரேசன்.
குறள் 312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
பொருள்:
ஆத்திரத்துடன் ஒருவர் நமக்குத் துன்பம் செய்தால் கூட, பதிலுக்கு அவருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாக இருக்கும்.
313. சிறையில் ஒரு கீதை!
"ஏம்ப்பா, நீ ஜெயிலுக்கு வந்து மூணு மாசம் ஆகப் போகுது. வந்ததிலேந்து ஒதுங்கியே இருக்கியே! என்ன தப்புப் பண்ணிட்டு வந்திருக்க?"
நடுத்தர வயதைத் தாண்டி விட்ட அந்தக் கைதியை ஜகன் நிமிர்ந்து பார்த்தான்.
"நான் ஒரு தப்புமே பண்ணலீங்க!" என்றான் ஜகன்.
"அப்படிப் போடு அருவாளை! நானும் 20 வருஷமா பாத்துக்கிட்டிருக்கேன். இந்த ஜெயிலுக்கு வரவங்க எல்லாருமே பேசற ஒரே வசனம் இதுதான்!" என்றான் அந்தக் கைதி.
"20 வருஷமாவா? 20 வருஷமாவா ஜெயில்ல இருக்கீங்க?" என்றான் ஜகன், வியப்புடன்.
"பின்னே? ஆயுள் தண்டனையாச்சே!"
"ஆயுள் தண்டனைன்னா, அப்ப..." என்று இழுத்தான் ஜகன்.
"ஆமாம். கொலை பண்ணிட்டுத்தான் உள்ள வந்திருக்கேன். சாதாரண மனுஷனைக் கொலை செஞ்சிருந்தா, ஆயுள் தண்டனைன்னா கூட ஏழெட்டு வருஷத்தில வெளியே விட்டிருப்பாங்க. ஆனா, நான் கொலை பண்ணினது ஒரு அரசியல் தலைவரையாச்சே! அதான் வெளியில விட மாட்டேங்கறாங்க. 25 வயசு வாலிபனா உள்ளே வந்தேன். இப்ப இளமையெல்லாம் போய், முதுமை வந்துக்கிட்டிருக்கு!" என்றான் அவன், சிரித்தபடி.
"ஓ! நீங்க... அண்ணாமலையா?" என்றான் ஜகன், அதிர்ச்சியுடன்.
"ஆமாம், பேப்பர்ல என்னைப் பத்திப் படிச்சிருப்பியே! இப்ப கூட என்னை விடுதலை செய்யச் சொல்லி யாரோ வழக்குப் போட்டு, அது கோர்ட்ல இருக்கு. இதில என்ன வேடிக்கைன்னா, யார் சொல்லி நான் இந்தக் கொலையைச் செஞ்சேனோ அவங்க பெரிய பதவியில எல்லாம் இருந்து, சில பேர் செத்துக் கூடப் போயிட்டாங்க. ஆனா, நான் இன்னும் ஜெயில்லியே இருக்கேன். அது இருக்கட்டும். உன் கதையைச் சொல்லு. நீ செய்யாத எந்தத் தப்புக்காக உன்னை உள்ளே போட்டிருக்காங்க?" என்றான் அண்ணாமலை, கேலியுடன்.
சற்று நேரம் தயங்கிய பிறகு, ஜகன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
ஜகன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு விஷயம் அவன் வாழ்க்கையையே சீரழித்து விட்டது.
அவன் வேலை செய்து வந்த நிறுவனம் ஒரு சிறந்த நிறுவனம். அதில் வேலை செய்தவர்களுக்கு வேலை உறுதி, நல்ல சம்பளம், வேறு பல வசதிகள் எல்லாம் இருந்தன. ஒரு சாதாரண உதவியாளன் என்ற நிலையிலும், ஜகன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.
ஒருமுறை. அந்த நிறுவனத்தின் காஷியர் பத்தாயிரம் ரூபாய் காணாமல் போய் விட்டதாகப் புகார் செய்தார். உடனே நிறுவனத்தின் கதவுகள் மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரி ஒவ்வொரு ஊழியராக அழைத்து விசாரித்தார். பாஸ்கர் என்ற ஊழியன் விசாரிக்கப்பட்டதும், பாதுகாப்பு அதிகாரி நேரே ஜகனிடம் வந்து, அவன் மேஜை இழுப்பறையைத் திறந்து பார்த்தார்.
காணாமல் போன பத்தாயிரம் ரூபாய் அங்கே இருந்தது!
ஜகனிடம் பாதுகாப்பு அதிகாரியும், மற்ற அதிகாரிகளும் விசாரித்தபோது அவன் அந்தப் பணம் எப்படித் தன் மேஜை இழுப்பறைக்குள் வந்தது என்று தனக்குத் தெரியாது என்று கதறினான். ஆனால், அவன் பேச்சு எடுபடவில்லை.
ஜகனை உடனே வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். போலீசுக்குப் போக வேண்டாம் என்று நிறுவனம் முடிவு செய்ததால், ஜகன் சிறைக்குப் போகாமல் தப்பினான்.
ஆயினும், பல மாதங்களுக்கு வேறு வேலை கிடைக்காமல், மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தை கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவன் பட்ட பாடு!
காணாமல் போன பணம் தன் மேஜை இழுப்பறைக்குள் எப்படி வந்தது என்பது அவனுக்கு விரைவிலேயே தெரிந்து விட்டது. காஷியர் தன் அறையைப் பூட்டாமல் சில நிமிடங்கள் தன் அறையை விட்டு வெளியே சென்றபோது, ஜகன் காஷியர் அறைக்குள் சென்றதைத் தான் பார்த்ததாக பாஸ்கர் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறியதால்தான், அவர் ஜகனின் மேஜை இழுப்பறையைச் சோதனை செய்திருக்கிறார்.
தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்திய பாஸ்கர்தான் பணத்தைத் திருடித் தன் மேஜை இழுப்பறையில் வைத்திருப்பான் என்பதில் ஜகனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
பாஸ்கருக்குச் சூதாடும் பழக்கம் இருந்ததால், அவன்தான் பணத்தைத் திருடியிருக்க வேண்டும் என்று அவனுக்கு நெருக்கமாக இருந்த அவனுடைய சக ஊழியர்கள் சிலர் கூட அவனிடம் பிறகு சொன்னார்கள்.
பாஸ்கருக்குத் தான் ஒரு சிறிய தொந்தரவு கூடக் கொடுத்தில்லை என்ற நிலையிலும், தனக்கு இவ்வளவு பெரிய தீங்கு செய்து விட்ட பாஸ்கரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஜகன் மனதில் அப்போதே தோன்றியது.
சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் இரவு, ஒரு தியேட்டரில் இரண்டாவது காட்சி பார்த்து விட்டு ஜகன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, தற்செயலாக பாஸ்கரை வழியில் சந்தித்தான்.
அந்த நேரத்தில், அந்த இடத்தில், வேறு எவரும் இல்லாத சூழ்நிலையில், பாஸ்கர் மீது அவனுக்கு இருந்த ஆத்திரத்தில், சாலையோரம் இருந்த ஒரு கட்டையை எடுத்து பாஸ்கரின் தோளில் ஓங்கி அடித்தான் ஜகன்.
அந்தப் பக்கம் சைக்கிளில் வந்த ஒரு நபர் நடந்ததைப் பார்த்து விட்டு, சைக்கிளிலிருந்து இறங்கி ஓடி வந்து ஜகனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட, இன்னும் சிலர் அங்கே வந்து விட்டனர்.
ஜகனைப் பிடித்து அவர்கள் போலீசில் ஒப்படைக்க, அவன் மீது வழக்குப் போடப்பட்டு, அவனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
"ஏம்ப்பா, ஒரு ஆளைக் கட்டையால அடிச்சிருக்க. அந்த சைக்கிள்காரர் வந்து உன்னைத் தடுக்கலேன்னா, நீ அவனை அடிச்சுக் கொலை கூடப் பண்ணி இருக்கலாம்! தப்பே பண்ணலேன்னு சொல்ற!" என்றான் அண்ணாமலை, பெரிதாகச் சிரித்தபடி.
"என்னங்க நீங்க? இவ்வளவு தூரம் விவரமா சொன்னேனே! எனக்கும் அவனுக்கும் ஒரு பிரச்னையும் இல்லாதப்ப, என் வாழ்க்கையையே அழிச்சவன் அவன்! அவன் மேல என் கோபத்தைக் காட்ட அவனை நான் ஒரு அடி அடிச்சதுக்கு எனக்கு ஒரு வருஷம் ஜெயில் தண்டனையா? என்னங்க நியாயம் இது?" என்று குமுறினான் ஜகன்.
"தம்பி! நான் ஒரு கொலைகாரன்தான். ஆனா, இந்த ஜெயில்ல 20 வருஷமா பல பேரைப் பாத்த அனுபவத்தில சொல்றேன். ஒத்தருக்குக் கெடுதல் செய்யறது தப்பு. நமக்குக் கெடுதல் செஞ்சவங்களுக்கு பதிலுக்கு கெடுதல் செய்யறது கூடத் தப்புதான். அப்படி செஞ்சா, சட்டப்படி தண்டனை கிடைக்காட்டாலும், வேற விதத்தில தண்டனை கிடைக்கும். இதை நான் எத்தனையோ பேர் விஷயத்தில பாத்திருக்கேன்!" என்றான் அண்ணாமலை.
'கொலைகாரன்! ஆனா, பெரிய ஞானி மாதிரி பேசறான்! ஆனா, என் விஷயத்தில அவன் சொல்ற மாதிரிதானே நடந்திருக்கு? எங்கிட்ட அடி வாங்கின பாஸ்கர் ஒரு மாசம் ஆஸ்பத்திரியில இருந்துட்டு வெளியே வந்திருப்பான். ஆனா, நான் ஒரு வருஷம் ஜெயில்ல இருக்கணுமே!' என்று நினைத்துக் கொண்டான் ஜகன்.
குறள் 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
பொருள்:
நாம் எதுவும் செய்யாதபோது நமக்குத் தீங்கு செய்தவருக்கு (பதிலுக்கு) நாம் தீங்கு செய்தால் கூட, மீள முடியாத துன்பம் நமக்கு வந்து சேரும்.
314. காணாமல் போன சங்கிலி!
"வாங்க!"
தன் ஃபிளாட் இருக்கும் அதே தளத்தில், எதிர்ப்புறமாக இருக்கும் ஒரு ஃபிளாட்டில் வசித்து வந்த உமாபதியை வரவேற்றார் பாலன்.
ஐந்து வருடங்களாக ஒரே தளத்தில் வசித்து வந்ததால், இருவர் குடும்பங்களும் பரிச்சயமானவை என்றபோதும் நெருக்கமானவை என்று கூற முடியாது. முதலில் இருந்த நெருக்கமும், இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியால் குறைந்து விட்டது.
"உக்காருங்க!" என்ற பாலன், உமாபதி சோஃபாவில் உட்கார்ந்ததும், தானும் அவர் எதிரே உட்கார்ந்தார்.
"சொல்லுங்க!" என்றார் பாலன்.
உமாபதி சற்றுத் தயங்கி விட்டு, "சார்! உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். எனக்கு இதைச் சொல்றதுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. மேடம் வெளியில போனதைப் பாத்துட்டுத்தான் வந்தேன். கடைக்குப் போறாங்க போல. இன்னும் பத்து நிமிஷத்துக்கு இங்கே யாரும் வர மாட்டாங்க, இல்ல?" என்றார்.
"வர மாட்டாங்க. சொல்லுங்க" என்றார் பாலன்.
"ரெண்டு வருஷம் முன்னால, உங்க வீட்டில ஒரு நகை காணாமப் போச்சு."
"ஆமாம். என் மனைவி அப்பதான் புதுசா வாங்கி இருந்த டாலர் வச்ச ரெட்டை வடம் சங்கிலி. 8 பவுன். கடையில கொடுத்த நகைப்பெட்டியில போட்டு மேஜை மேல வச்சிருந்தா. அதை பீரோவுக்குள்ள வைக்கணும்னு நினைச்சு, அப்புறம் வேற ஏதோ ஞாபகத்தில மறந்து போய், இன்னொரு ரூமுக்குப் போயிட்டா. ரொம்ப நேரம் கழிச்சுத்தான் அவளுக்கு ஞாபகம் வந்திருக்கு. அப்ப போய்ப் பாத்தப்ப, நகைப்பெட்டி மட்டும் இருந்தது. அதுக்குள்ளே இருந்த சங்கிலியைக் காணோம். நாங்களும் உங்களை மாதிரி நடுத்தரக் குடும்பம்தான். 8 பவுன் தொலைஞ்சு போனது எங்களுக்குப் பெரிய இழப்புதான்."
உமாபதி மறுபடியும் தயங்கினார். பிறகு, "நீங்க ஏன் சார் போலீஸ்ல புகார் கொடுக்கல?" என்றார்.
"போலீஸ்ல புகார் கொடுத்திருந்தா, சங்கிலியை எடுத்தது யார்னு சுலபமாக் கண்டுபிடிச்சிருப்பாங்க!"
"எப்படி சார்?"
"எனக்கு யார்மேல சந்தேகம்னு போலீஸ்ல சொல்லி இருந்தா போதும். அவங்க அவனை விசாரிச்சு, உண்மையை வரவழைச்சிருப்பாங்க. சங்கிலி வச்சிருந்த நகைப்பெட்டி மேலேயும், அதை வச்சிருந்த மேஜையிலேயும் நகையை எடுத்தவனோட கைரேகை பதிஞ்சிருக்கும். அது ஒண்ணே போதுமே! நகையை எங்கே வித்தான் அல்லது அடகு வச்சான்னு கண்டுபிடிச்சு, நகையை மீட்டுக் கொடுத்திருப்பாங்க!"
"அப்புறம் நீங்க ஏன் சார் போலீசுக்குப் போகல?"
"அது இருக்கட்டும். நீங்க சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுங்க" என்றார் பாலன், சிரித்தபடி.
"சார்! அந்த நகையை எடுத்தது என் பையன் ரமேஷ்தான். நீங்களும் அவன் மேல சந்தேகப்படற மாதிரி பேசினீங்க. ஆனா நேரடியாக் கேக்கல. நான் என் பையன்கிட்ட கேட்டேன். அவன் இல்லைன்னுட்டான். ஆனா, எனக்கு சந்தேகமாத்தான் இருந்தது. அவனுக்குக் குடிப் பழக்கம் இருந்ததும், குடிக்கறதுக்குப் பணம் வேணும்னுட்டுத்தான் இப்படி செஞ்சிருக்கான்னும் எனக்குக் கொஞ்ச நாள் கழிச்சுத்தான் தெரிஞ்சது.
"அப்புறம் என்னெவெல்லாமோ செஞ்சு அவன் குடிப் பழக்கத்தை நிறுத்திட்டேன். ஆனா, நகை பத்தின உண்மையை உங்ககிட்ட சொல்ற தைரியம் எனக்கு இல்ல. அவன் திருடின நகைக்கு ஈடான பணத்தை உங்ககிட்ட கொடுத்து, உங்க நஷ்டத்தை ஈடு செய்யற அளவுக்கு எனக்கு வசதியும் இல்ல.
"இந்தக் குற்ற உணர்ச்சியாலதான் உங்ககிட்டேந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். நீங்க என் பையன் மேல சந்தேகப்பட்டீங்கங்கற கோபத்தினாலதான் நான் அப்படி நடந்துக்கிட்டதா நீங்க நினைச்சிருக்கலாம். இப்ப சொல்லுங்க. நீங்க ஏன் போலீசுக்குப் போகல?"
"சார்! சங்கிலியை எடுத்தது உங்க பையன்தாங்கறதில எனக்கும் என் மனைவிக்கும் எந்த சந்தேகமும் இல்ல. உங்க பையன் எங்க வீட்டிலேந்து நீங்க இரவல் வாங்கிக்கிட்டுப் போன ஸ்பானரைத் திருப்பிக் கொடுக்க வந்திருக்கான்.
"என் வீட்டு வாசற்கதவு திறந்து இருந்திருக்கு. என் மனைவி அறைக்குள்ள இருந்திருக்கா. ரமேஷ் குரல் கேட்டதும், 'ஸ்பானரை சோஃபா மேல வச்சிடு'ன்னு என் மனைவி சொல்லி இருக்கா. ஹாலுக்குள்ள வந்த ரமேஷ், இன்னொரு அறையில இருந்த மேஜை மேல இருந்த நகைப் பெட்டியைப் பாத்திருக்கான்.
"இங்கேயிருந்து பாத்தா அந்த மேஜை தெரியுது பாருங்க! அந்த அறைக்குள்ள போய், அந்த நகைப்பெட்டியைத் திறந்து பாத்துட்டு, அதில இருந்த சங்கிலியை எடுத்துக்கிட்டுப் போயிருக்கான். ஸ்பானரை ஹால்ல இருந்த சோஃபா மேல வைக்காம, நகைப்பெட்டி இருந்த மேஜை மேல வச்சுட்டுப் போயிருக்கான். என் மனைவி சொன்னபடி, ஹால்ல இருக்கற சோஃபா மேல ஸ்பானரை வச்சுட்டுப் போகாம, யாரும் இல்லாத அந்த அறைக்குள்ள போய் நகைப்பெட்டி இருந்த மேஜை மேல ஏன் ஸ்பானரை வச்சுட்டுப் போகணும்? அவன்தான் நகையை எடுத்திருக்காங்கறதுக்கு இதுவே ஆதாரம்!
"இன்னொரு அறையில இருந்த என் மனைவி இதை கவனிக்கல. நகைப்பெட்டியை மேஜைமேல் வச்சதும், வாசற்கதவைத் திறந்து வச்சுட்டு இன்னொரு அறையில இருந்ததும் என் மனைவியோட அஜாக்கிரதைதான். ஆனா, உங்க பையனைத் தவிர வேற யாரும் எங்க வீட்டுக்கு வரல.
"போலீஸ்ல புகார் செஞ்சு, எங்க சந்தேகத்தைச் சொல்லியிருந்தா, கல்லூரியில படிச்சுக்கிட்டிருந்த உங்க பையனோட எதிர்காலமே பாழாகி இருக்கும்.
"ஒருவேளை எங்க சந்தேகம் தப்பா இருந்து, அவன் நகையை எடுக்கலேன்னா கூட, அப்பவும் அவனுக்கு ஒரு கெட்ட பேர் வந்து, அவன் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும்.
"நகை போனாலும் பரவாயில்ல, ஒரு பையனோட எதிர்காலத்தைப் பாழடிக்க வேண்டாம்னுதான் நான் போலீசுக்குப் போகல."
உமாபதி சட்டென்று எழுந்து, பாலனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
"சார்! உங்களுக்கு ரொம்பப் பரந்த மனசு. உங்க வீட்டில என் பையன் திருடினதை நினைச்சா, எனக்கு அவமானமா இருக்கு. இப்ப நான் வந்த விஷயத்தை நினைச்சா, இன்னும் அவமானமா இருக்கு!"
"சொல்லுங்க. என்ன விஷயம்?" என்றார் பாலன்.
"சார்! ரமேஷ் படிப்பை முடிக்கப் போறான். அவனுக்கு ஒரு பெரிய கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு. அவங்க ஒரு நல்ல ரெஃபரன்ஸ் கேட்டிருக்காங்க. நீங்க ஒரு அரசு நிறுவனத்தில அதிகாரியா இருக்கறதால, உங்க பேரை அவன் கொடுத்திருக்கான்.
"எனக்கு அது இப்பத்தான் தெரியும். உங்களுக்கு அவன் மேல சந்தேகம் இருக்கறது அவனுக்குத் தெரியாது. எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா, நான் உங்க பேரைக் கொடுக்க வேண்டாம்னு அவன்கிட்ட சொல்லி இருப்பேன்.
"இப்ப அந்த கம்பெனியிலேந்து அவனைப் பத்தி விசாரிச்சு உங்களுக்குக் கடிதம் வரும். தயவு செஞ்சு, அவன் பண்ணின தப்பை மனசில வச்சுக்கிட்டு, நீங்க அவனைப் பத்தித் தப்பா ரிப்போர்ட் கொடுத்துடாதீங்க.
"இந்த உதவியைக் கேக்கத்தான் நான் வந்தேன். நீங்க ஏற்கெனவே அவன் விஷயத்தில ரொம்பப் பரந்த மனசோட நடந்துக்கிட்டிருக்கீங்க. இப்ப உங்க கிட்ட இன்னொரு உதவி கேக்கறது எனக்கு அவமானமாத்தான் இருக்கு. ஆனா, எனக்கு வேற வழி இல்லை."
உமாபதிக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.
"நீங்க கொஞ்சம் லேட்டா வந்திருக்கீங்க சார்! எனக்கு ஏற்கெனவே அந்த கம்பெனியிலேந்து கடிதம் வந்துடுச்சு. நேத்திக்கே நான் பதிலும் அனுப்பிட்டேன்!"
"சார்!" என்றார் உமாபதி, என்ன சொல்வதென்று தெரியாமல்.
"ரமேஷை எனக்கு நல்லாத் தெரியும், அவன் நல்ல குணம் உள்ளவன், நேர்மையானவன்னுதான் ரிப்போர்ட் கொடுத்திருக்கேன்!" என்றார் பாலன், சிரித்துக் கொண்டே.
குறள் 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
பொருள்:
நமக்கு ஒருவர் துன்பம் செய்தால், அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும்.
315. புதிய பாதை
"ஏங்க, நம்ம பையனும், பொண்ணும் பம்பாய், டில்லின்னு செட்டில் ஆயிட்டாங்க. அவங்க யாரும் இந்த கிராமத்துக்கு வரப் போறதுல்ல. நமக்கும் வயசாயிக்கிட்டே வருது. இப்ப எதுக்கு இந்தத் தோட்டத்தை வாங்கறீங்க? நமக்கு அப்புறம் யார் இந்த ஊருக்கு வந்து இந்தத் தோட்டத்தைப் பராமரிக்கப் போறாங்க?" என்றாள் அகிலா.
"ஆத்தங்கரைப் பக்கத்தில அமைஞ்சிருக்கிற அருமையான இடம் அது. பெரிய தோட்டம். வாழை மரம், தென்னை மரம், மாமரம், கொய்யா மரம்னு நிறைய மரங்கள் இருக்கு. பொன்னுசாமி உயிரோட இருக்கறப்பவே கேட்டேன். அவர் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. இப்ப அவர் போனதும், வெளியூர்ல இருக்கற அவர் பையங்க எல்லா சொத்தையும் விக்கப் போறதாகச் சொன்னதால, அந்தத் தோட்டத்தை நாம வாங்கலாம்னு நினைச்சேன்" என்றார் கணபதி .
"அதான் எதுக்குன்னு கேக்கறேன். நமக்கு இருக்கிற நிலபுலன்களை நாம பாத்துக்கிட்டா போதாதா?"
"ஒரு நல்ல முதலீடா இருக்கட்டுமேன்னுதான்!" என்றார் கணபதி.
"நீங்க இப்படியெல்லாம் முதலீடு, லாபம்னு அலையற ஆள் இல்லையே?" என்றாள் அகிலா, கொஞ்சம் வியப்புடன்.
கணபதி பதில் சொல்லவில்லை.
சில நாட்களில், கணபதி அந்தத் தோட்டத்தை வாங்கி விட்டார்.
பத்திரப் பதிவு முடிந்த சில நாட்களில், கணபதி தோட்டத்தின் மத்தியில் ஒரு பாதையை அமைத்து இரண்டு புறமும் வேலி கட்டினார். அதற்குப் பிறகு, தோட்டம் மூன்று பகுதிகளாகக் காட்சி அளித்தது - இரண்டு புறமும் வேலிக்குள் தோட்டங்கள், நடுவில், திறந்த வெளியில் ஒரு பாதை என்று.
"எதுக்கு இப்படிப் பண்றீங்க?" என்றாள் அகிலா.
"தோட்டத்துக்கு நடுவில, ரெண்டு மூணு பேர் நடந்து போற அகலத்துக்கு ஒரு பாதை அமைச்சிருக்கேன்" என்றார் கணபதி.
"அதான் எதுக்குன்னு கேக்கறேன்?"
"அகிலா! தோட்டத்துக்கு ஒரு பக்கம் ரோடு இருக்கு. இன்னொரு பக்கம் ஆத்தங்கரை. நம் ஊர்ப்பெண்கள் ஆத்துக்குத் தண்ணி எடுக்கப் போகறப்ப, கிட்டத்தட்ட ஒரு மைல் சுத்திப் போக வேண்டி இருக்கு. இப்ப நம் தோட்டத்துக்கு நடுவில இருக்கற பாதை வழியா அவங்க ஆத்துக்குப் போகலாம். ஒரு மைல் சுத்திப் போக வேண்டி இருக்காது."
"அது எப்படி? அது நம் நிலமாச்சே! அது வழியா ஊர்க்காரங்கல்லாம் எப்படிப் போக முடியும்?"
"அதுக்குத்தான் தோட்டத்தை மூணாப் பிரிச்சு, ரெண்டு பக்கம் தோட்டம், நடுவில பாதைன்னு உண்டாக்கி இருக்கேன். அந்தப் பாதையை இந்த ஊர்ப் பஞ்சாயத்து பேர்ல பதிவு பண்ணிடப் போறேன். அப்புறம், அது ஊருக்குப் பொது இடமா ஆயிடும். அதில யார் வேணா நடந்து போகலாம்!"
"ஏங்க, நம்ப நிலத்தில, இருநூறு முன்னூறு சதுர அடி பொதுவுக்குப் போயிடுமே! காசு கொடுத்து நிலத்தை வாங்கிட்டு, எதுக்கு இப்படி தானம் பண்றீங்க?" என்றாள் அகிலா, சற்று வருத்தத்துடனும், கோபத்துடனும்.
"நம் ஊர் ஜனங்க, குறிப்பா பெண்கள், குளிக்கவும், தண்ணி எடுக்கவும் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை ஆத்துக்குப் போறாங்க. ஒவ்வொரு தடவையும், ஒரு மைல் தூரம் சுத்திப் போக வேண்டி இருக்கு. வெயில், மழைன்னு பாக்காம தண்ணிக் குடத்தைத் தூக்கிக்கிட்டு சின்னவங்க, பெரியவங்க, வயசானவங்க, உடம்பு சரியில்லாதவங்கன்னு எல்லாரும் கஷ்டப்படறதைப் பாக்க எனக்கு எப்பவுமே மனசுக்குக் கஷ்டமா இருக்கும்.
"பொன்னுசாமிகிட்ட இந்தத் தோட்டம் இருந்தப்ப, தோட்டத்துக்கு நடுவில ஜனங்க ஆத்துக்குப் போக ஒரு பாதை போட்டுக் கொடுக்கச் சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அவர் ஒத்துக்கல. சரி, நாம தோட்டத்தை விலைக்கு வாங்கி, பாதை அமைச்சுக் கொடுக்கலாம்னு நினைச்சு, அவர்கிட்ட தோட்டத்தை விலைக்குக் கேட்டேன். அவர் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. இப்ப அவர் இறந்ததும், அவர் பசங்க அதை விக்கறாங்கன்னதும், அதை வாங்கி நான் நினைச்ச மாதிரி ஊர் ஜனங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்திருக்கேன்!" என்றார் கணபதி.
"நாம நம்ம வீட்டுக் கிணத்துத் தண்ணியைத்தான் பயன்படுத்தறோம். நீங்களோ, நானோ தண்ணி எடுக்கவோ, குளிக்கவோ ஆத்துக்குப் போறதில்ல. யாரோ கஷ்டப்படறாங்கங்கறதுக்காகவா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி இருக்கீங்க?" என்றாள் அகிலா வியப்புடனும், பிரமிப்புடனும்.
"கஷ்டப்படறது மத்தவங்களா இருந்தா என்ன? அவங்களோட கஷ்டத்தை நம்மால உணர முடியாதா? அதுக்கு நாம எதுவும் செய்யக் கூடாதா?" என்றார் கணபதி.
குறள் 315அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
பொருள்:பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் ஒருவன் உணர்ந்து நடந்து கொள்ளாவிட்டால், அவனுடைய அறிவினால் அவனுக்கு என்ன பயன்?
316. அன்று நடந்தது, ஆவி துடித்தது!
"போன மாசம் எப்படியோ சமாளிச்சுட்டோம். இந்த மாசம் ரொம்பக் கஷ்டம்!" என்றார் மணி.
தன் பார்ட்னரைக் கவலையுடன் பார்த்த சாரதி, "இந்த மாசம் புதுசா ஆர்டர் வரும்னு எதிர்பாக்கறோமே!" என்றார்.
"இல்ல சாரதி. நடக்கற மாதிரி தெரியல. மார்க்கெட்ல யாரைப் பாத்தாலும் புலம்பறாங்க. இப்படி ஒரு ரிஸஷன் இதுக்கு முன்னால வந்ததே இல்லைங்கறாங்க. நிறைய பேர் தொழிலையே நிறுத்திட்டாங்க. மீதி இருக்கறவங்களும் தொழிலாளர்கள்ள நிறையப் பேரை வீட்டுக்கு அனுப்பிட்டு, ஒரு சில பேரை மட்டும் வச்சிக்கிட்டு சமாளிச்சுக்கிட்டிருக்காங்க. பெரிய நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு செஞ்சிருக்காங்க. நீதான் ஒரு தொழிலாளரைக் கூட வீட்டுக்கு அனுப்பக் கூடாதுன்னு உறுதியா இருக்க!" என்றார் மணி.
சாரதி பதில் சொல்லவில்லை. மணியின் பேச்சு அவர் காதில் விழுந்ததா என்று கூடத் தெரியவில்லை. அவர் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சாரதி ஒரு நிறுவனத்தில் உதவியாளராகப் பணி செய்து கொண்டிருந்த நேரம் அது.
நன்றாக நடந்து கொண்டிருந்த அந்த நிறுவனம் சிறிது சிறிதாகத் தொய்வடைந்து, ஒரு கட்டத்தில் ஒரேயடியாக இழுத்து மூடப்படும் நிலை வந்தது.
சாரதி உட்படப் பல ஊழியர்கள் வேலை இழந்தனர்.
அதற்குப் பிறகு, வேறொரு நிலையான வேலை கிடைக்கும் வரை சாரதி பட்ட துன்பங்கள்!
குடும்பத்துக்கு அடுத்த வேளை உணவுக்கு வழி செய்ய முடியுமா என்று தவித்த நாட்கள் எத்தனை!
எத்தனையோ முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து, அப்படிச் செய்து கொண்டால் தன் குடும்பம் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாகும் என்று உணர்ந்து, ஒவ்வொரு முறையும் அந்த எண்ணத்தைக் கை விட்டிருக்கிறார்.
மூன்று வருடங்கள் கழித்து, ஒரு நிலையான வேலை கிடைத்து, அவர் வாழ்க்கை மீண்டும் துளிர்த்ததும், சில ஆண்டுகள் கழித்துத் தன் நண்பன் மணியுடன் சேர்ந்து சிறிய அளவில் ஒரு தொழில் தொடங்கி, அது ஒரு சில ஆண்டுகளில் நன்கு வளர்ச்சி பெற்றதும் வேறு கதை.
ஆயினும், வேலை இழந்த பின் தான் அனுபவித்த வேதனைகளை அவரால் எப்படி மறக்க முடியும்?.
"இல்லை! எனக்கு வந்த மாதிரி கஷ்டம் வேற யாருக்கும் வரக் கூடாது!" என்று கூவினார் சாரதி.
"சாரதி, என்ன ஆச்சு உனக்கு?" என்றார் மணி.
"இல்லை மணி! தொழிலாளர்கள்கிட்ட சீக்கிரம் வேற வேலை தேடிக்கச் சொல்லி சொல்லுவோம். வேற வேலை கிடைச்சு அவங்களாப் போற வரையிலே, நாமா யாரையும் வேலையை விட்டு அனுப்ப வேண்டாம். நாம எப்படியாவது சமாளிப்போம்!" என்றார் சாரதி.
குறள் 316இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
பொருள்:துன்பமானவை என்று தான் கண்டு உணர்ந்தவற்றை ஒருவன் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
317. "குற்றமுள்ள" நெஞ்சம்!
சுவாமி சதானந்தரிடம் தனியே பேச வாய்ப்புக் கிடைத்ததும், கிருஷ்ணன் முதலில் சற்றுத் தயங்கினார்.
"சொல்லுங்கள்!" என்று அவரை ஊக்குவித்தார் சதானந்தர்.
"கிறிஸ்துவ மதத்தில் பாவ மன்னிப்பு என்ற ஒரு விஷயம் இருக்கிறது. ஆனால் நம் மதத்தில் அப்படி இல்லையே!" என்றார் கிருஷ்ணன்.
"ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். நம் மதத்தைப் பொத்தவரை, பாவத்துக்கான பலனை இந்த ஜன்மத்திலோ அடுத்த ஜன்மத்திலோ அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆயினும், கடவுளிடம் பக்தி செலுத்தினால், நாம் செய்த பாவங்கள் அழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்றார் சுவாமி சதானந்தர்.
கிருஷ்ணன் மௌனமாக இருந்தார்.
"உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் செய்ததாக நினைக்கும் பாவத்தை என்னிடம் சொல்லுங்கள். என்னால் பாவ மன்னிப்புக் கொடுக்க முடியாது. என்னிடம் பகிர்ந்து கொள்வதால், உங்களுக்குச் சற்று ஆறுதல் கிடைக்கலாம். என்னிடம்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. உங்கள் நெருங்கிய நண்பர்கள் யாரிடமாவது சொன்னாலும் சரிதான்!" என்றார் சதானந்தர்.
"இல்லை, சுவாமி. உங்களிடமே சொல்கிறேன்" என்றார் கிருஷ்ணன்
அப்போது கிருஷ்ணன் ரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். சதீஷ் என்ற இளைஞனும் அங்கே பணியாற்றி வந்தான். கிருஷ்ணன் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என்றாலும், சதீஷ் அதிகம் படித்தவன் என்பதால், வயதில் குறைவானவனாக இருந்தாலும், பதவியில் அவருக்குச் சமமான நிலையில் இருந்தான்.
அந்தத் தொழிற்சாலையின் மேலாளராக இருந்தவர் சில மாதங்களில் ஒய்வு பெற இருந்தார். இயல்பாக, அவர் இடத்துக்குக் கிருஷ்ணன்தான் நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால், வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவனாக இருந்தாலும், அதிகம் படித்தவன் என்பதால், சதீஷ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் இருந்தது.
நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒய்வு பெறப் போகும் மேலாளர் யாரைப் பரிந்துரைப்பார் என்பதும் புரியவில்லை.
ஒருவேளை தான் புறக்கணிக்கப்பட்டு, சதீஷ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டால், அது தனக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என்று கிருஷ்ணன் நினைத்தார்.
தான் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சதீஷுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்படுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கிருஷ்ணன் யோசனை செய்து கொண்டிருந்தபோது, ஒரு எதிர்பாராத வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
ஒரு நாள், கிருஷ்ணனுக்கு இரண்டாவது ஷிஃப்ட் இருந்தது. முதல் ஷிஃப்டுக்கு சதீஷ்தான் பொறுப்பு. கிருஷ்ணன் சற்று முன்னதாகவே தொழிற்சாலைக்கு வந்து விட்டார். முதல் ஷிஃப்ட் இன்னும் முடியவில்லை.
கிருஷ்ணன் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது, அவர்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ரசாயனப் பொருட்களை ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்புவதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
லாரியில் ஏற்றப்பட்டிருந்த மூட்டைகளை யதேச்சையாகப் பார்த்த கிருஷ்ணனுக்கு ஏதோ ஒன்று தவறாக இருப்பதாகப் பட்டது. லாரிக்கு அருகில் சென்று பார்த்தபோது, முதல் நாள் நடந்த தரக்கட்டுப்பாட்டுச் சோதனையின்போது நிராகரிக்கப்பட்டு, மீண்டும் ப்ராசஸ் செய்யப்படுவதற்காகத் தனியே வைக்கப்பட்டிருந்த ஐந்து மூட்டைகளைத் தவறுதலாக லாரியில் ஏற்றி விட்டார்கள் என்பதை அவர் கவனித்தார்.
அந்த மூட்டைகள் மீது 'தரக் கட்டுப்பாடு சோதனையில் தேறவில்லை' என்ற லேபிள் ஒட்டப்பட்டிருந்தும், யாருடைய கவனக்குறைவாலோ, அந்த மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு விட்டன.
அந்தத் தவறுக்கு சதீஷ்தான் பொறுப்பு. வாடிக்கையாளருக்கு மூட்டைகள் சென்றபின், அவை தரக்கட்டுப்பாட்டு சோதனையில் நிராகரிக்கப்பட்டவை என்பது மூட்டையின் லேபிளைப் பார்த்ததுமே வாடிக்கையாளருக்குத் தெரிந்து விடும்.
வாடிக்கையாளர் இது பற்றிப் புகார் செய்ததும், அதற்குப் பொறுப்பு சதீஷ்தான் என்று தெரிந்து விடும். அதற்குப் பிறகு, அவன் வேலையில் தொடர்வதே சந்தேகம். பதவி உயர்வு அவனுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை.
தானாகவே இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பது பற்றிக் கிருஷ்ணன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.
கிருஷ்ணன் கூறிய கதையைக் கேட்ட சதானந்தர், "நீங்களாக வலுவில் சென்று அவருக்குத் தீங்கிழைக்காவிட்டாலும், ஒரு தவறு நடந்திருப்பது தெரிந்து, அதைத் தடுக்காமல் விட்டது சதீஷுக்கு மட்டும் இல்லை, உங்கள் நிறுவனத்துக்குக் கூட நீங்கள் செய்த தீங்குதான்!" என்றார்.
"நானும் அப்படித்தான் நினைத்தேன்!" என்றார் கிருஷ்ணன்.
"நீங்கள் செய்தது பாவம் என்றாலும், அதைப் பாவம் என்று உணர்ந்து வருந்துவது உங்களிடம் இருக்கும் நல்ல இயல்பைக் காட்டுகிறது!" என்றார் சதானந்தர்.
"இல்லை, சுவாமிஜி. அது ஒரு பாவம் என்று அப்போதே நான் உணர்ந்ததால்தான், அதைச் செய்யவில்லை!" என்றார் கிருஷ்ணன்.
"செய்யவில்லையா?" என்றார் சதானந்தர், வியப்புடன்.
"ஆமாம், சுவாமிஜி. அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது தவறு என்று உடனே உணர்ந்து, சதீஷிடம் விஷயத்தைச் சொன்னேன். அவன் உடனே அந்த ஐந்து மூட்டைகளை லாரியிலிருந்து இறக்கச் செய்து, நல்ல மூட்டைகளை ஏற்ற வைத்து விட்டான். நடக்க இருந்த தவறு தடுக்கப்பட்டது. சதீஷ் எனக்கு மிகவும் நன்றி சொன்னான்."
"பின்னே, பாவம் செய்து விட்டதாகவும், அதற்கு மன்னிப்பு உண்டா என்றும் கேட்டீர்களே?" என்றார் சதானந்தர், குழப்பத்துடன்.
"என்ன சுவாமிஜி இது? இப்படி ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியதே பாவம் இல்லையா? அப்போது என் மனது கொஞ்சம் வேறு மாதிரி நினைத்திருந்தால், நான் அதைச் செய்திருப்பேனே! இப்படி ஒரு எண்ணம் தோன்றியதே என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது" என்றார் கிருஷ்ணன்.
கிருஷ்ணனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சதானந்தர், "சந்நியாசிகள் மற்றவர்களை வணங்கக் கூடாது. இல்லாவிட்டால், நான் உங்கள் காலில் விழுந்து வணங்கி இருப்பேன்! மனதில் ஒரு தவறான எண்ணம் தோன்றியதற்கே, தீங்கு செய்து விட்டதாக நினைத்து வருந்தும் நீங்கள் மிகவும் உயர்ந்தவர்!" என்றார்.
குறள் 317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
பொருள்:எப்போதும், யாருக்கும், மிகச் சிறிய துன்பத்தைக் கூட மனத்தாலும் விளைவிக்காமல் இருப்பது சிறந்தது.
318. எலித்தொல்லை
அந்தக் குடியிருப்பில் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கழிவு நீர்க் குழாய்கள் அடைத்துக் கொள்வது என்பது ஒரு தொடர்கதையாக இருந்து வந்தது.
ஒவ்வொரு முறை அடைப்பைச் சரி செய்யும்போதும், அடைப்பை நீக்கிய தொழிலாளி, "சார்! எலி வளை தோண்டி, கல்லு, சிமெண்ட்டையெல்லாம் அரிச்சுப் போடறதால தண்ணி போற இடங்கள்ள அடைப்பு ஏற்படுது!" என்பார்.
சென்ற முறை அடைப்பைச் சரி செய்தபோது, சரி செய்த தொழிலாளியிடம், "ஏன் இப்படித் திரும்பத் திரும்ப நடக்குது?" என்று கேட்டார் குடியிருப்புச் சங்கச் செயலாளர் துரைசாமி.
"சார்! ஒவ்வொரு முறையும் கல்லையெல்லாம் எடுத்து சுத்தம் பண்ணிட்டு, உடைஞ்ச இடங்கள்ள சிமெண்ட் போட்டுட்டுத்தான் போறேன். ஆனா, மறுபடி எலி வந்து அரிச்சிடுது. தரையெல்லாம் பழசாப் போயிட்டதால, எலி சுலபமா தரையை உடைச்சுடுது!" என்றான் அந்த ஆள்.
"அப்படின்னா. தரையெல்லாம் புதுசாப் போட்டா, இந்த பிரச்னை வராதா?" என்றார் துரைசாமி.
"இல்ல, சார்! நீங்க புதுசாத் தரை போட்டாலும், பக்கத்துல காலி மனை இருக்கறதால, எலி சுலபமா வலை போட்டு உள்ளே வந்துடும்" என்றான் அவன்.
துரைசாமி குடியிருப்புச் சங்க உறுப்பினர்களை அழைத்துப் பிரச்னையைச் சொன்னார்.
"என்னோட சொந்தக்காரங்க இருக்கற இன்னொரு குடியிருப்பில இது மாதிரி பிரச்னை இருந்தது. அவங்க ஒரு ஆளை வச்சு சரி பண்ணிட்டாங்க. அந்த ஆளை வரச் சொல்றேன். அவன்கிட்ட பேசிப் பாக்கலாம்" என்றார் சபாபதி என்ற உறுப்பினர்.
இரண்டு நாட்கள் கழித்து, சபாபதி ஒரு ஆளை அழைத்து வந்து துரைசாமியிடம் அறிமுகப்படுத்தினார். அவன் அடைப்பு ஏற்படும் இடத்தைப் பார்த்து விட்டு, "சார்! இது மாதிரி திரும்பத் திரும்ப நடக்கத்தான் செய்யும். இதுக்கு ஒரே வழி, எலியால ஓட்டை போட முடியாம செய்யறதுதான்!" என்றான்.
"அதை எப்படிச் செய்யறது?" என்றார் துரைசாமி.
"இந்த இடத்தில சிமெண்ட்ல கண்ணாடித் தூளைக் கலந்து பூசிட்டா, எலி வாயால ஓட்டை போடறப்ப, கண்ணாடித் தூள் அது வாயில குத்தி வாயைப் புண்ணாக்கிடும். அப்புறம் எலி ஓடிடும்!" என்றான்.
"கடவுளே!" என்றார் துரைசாமி.
"என்ன சார்?" என்றார் சபாபதி.
"கண்ணாடித் தூள் எலியோட வாயில குத்தறப்ப எலிக்கு எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாத்தேன்!"
"அதைப் பத்தி நமக்கென்ன சார்? எலிக்கு வலிக்குமேன்னு நாம பாக்க முடியுமா?" என்றார் சபாபதி.
"இல்ல. இது ரொம்பக் கொடுமை. கண்ணாடித் தூளை நாம கடிச்சா எப்படி இருக்கும்! எலி அந்தக் கண்ணாடித் தூளைக் கடிச்சா, அது எப்படி வேதனையால துடிக்கும்னு நினைச்சுப் பாக்கவே பயமா இருக்கு. கண்ணாடித் தூள் எலியோட வயித்துக்குள்ள கூடப் போயிடலாம். நினைக்கவே பயங்கரமா இருக்கு!" என்றார் துரைசாமி.
"எவ்வளவோ வீட்டில இது மாதிரி நான் செஞ்சிருக்கேன், சார்! சில சமயம், எலி வாயில ரத்தம் வழிஞ்சு செத்துக் கூடக் கிடைக்கும். ஆனா, இந்தப் பிரச்னை அப்புறம் வராது!" என்றான் அந்த ஆள்.
துரைசாமி பதில் சொல்லாமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.
"சரி. அப்புறம் சொல்றோம். உன் ஃபோன் நம்பர்தான் எங்கிட்ட இருக்கே!" என்று சொல்லி, அந்த ஆளை அனுப்பி வைத்தார் சபாபதி.
அவன் சென்றதும்,"சார்! இது பொது விஷயம். உங்க தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இங்க இடம் இல்லை. நம்ப அபார்ட்மெண்ட்ஸோட நலனுக்காக நாம இதை செஞ்சுதான் ஆகணும்" என்றார் சபாபதி, சற்றுக் கடுமையான குரலில்.
"என்னால முடியாது. நான் ராஜினாமா பண்ணிடறேன். வேற யாராவது பொறுப்பு எடுத்துக்கிட்டு செஞ்சுக்கங்க. அப்பவும், ஒரு உறுப்பினர்ங்கற முறையில இந்தக் கொடுமையான காரியத்தை நான் எதிர்ப்பேன்! அவன் சொன்னதைக் கேட்டதே என் மனசை என்னவோ செய்யுது. இப்படி ஒரு கொடுமையைச் செய்ய எப்படித்தான் மனசு வருதோ!" என்றார் துரைசாமி.
குறள் 318தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
பொருள்:தனக்குத் துன்பம் விளைவிக்கக் கூடியவை இவை என்று உணர்ந்தவன் மற்ற உயிர்களுக்கு அந்தத் துன்பத்தை ஏன் செய்ய வேண்டும்?
319. பாலியல் புகார்
கங்காதரன் மீது அவனுடைய அந்தரங்க உதவியாளர் ரேணுகா கொடுத்திருந்த பாலியல் புகார் மீது முதல் கட்ட விசாரணை நிறுவனத்தின்
சி.இ.ஓவின் அறையில் நடைபெற்றது.
வழிகாட்டல் முறைப்படி, சி.இ.ஓ, நிறுவனத்தின் ஒரு பெண் அதிகாரி, இவர்களைத் தவிர, ஒரு வெளி நபராக ஒரு தன்னார்வ நிறுவனத்தின் அதிகாரி ஆகிய மூவர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.
புகார் கொடுத்த ரேணுகாவும், அவர் சார்பாக வாதாட, பெண் உரிமைச் செயல்பாட்டாளர் என்று அழைக்கப்பட்ட லதா என்ற பெண்மணியும் வந்திருந்தனர். கங்காதரன் தன் சார்பாக வாதாட யாரையும் வைத்துக் கொள்ளவில்லை.
லதா புகாரின் விவரங்களை சுருக்கமாகத் தெரிவித்தார்.
"மிஸ்டர் கங்காதரனுக்கு ஆரம்பத்திலேந்தே ரேணுகா மேல ஒரு கண் இருந்திருக்கு. அவருக்கு மானேஜரா பதவி உயர்வு கிடைச்சதும், அலுவலகத்திலிருந்த நாலு பெண் ஸ்டெனோக்கள்ள, ரேணுகாவைத் தன்னோட அந்தரங்கச் செயலாளரா நியமிச்சுக்கிட்டிருக்கார்.
"அடிக்கடி ரேணுகாகிட்ட விஷமத்தனமா பேசறது, தெரியாம மேல கை படற மாதிரி தொடுவது மாதிரி பல சில்மிஷங்கள் செஞ்சிருக்கார்.
"ஒருநாள், முக்கியமான கடிதம் டிக்டேட் செய்யறதாச் சொல்லி, ரேணுகாவை அறைக் கதவைச் சாத்தித் தாளிடச் சொல்லி இருக்காரு. அவங்களும் அப்பாவித்தனமா கதவைச் சாத்தி இருக்காங்க.
"அப்ப, அவர் ரேணுகாவைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செஞ்சிருக்காரு. ரேணுகா தன்னை விடுவிச்சுக்கிட்டு, கதவைத் திறந்துக்கிட்டு அழுதுகிட்டே வெளியே ஓடியிருக்காங்க. இதை அலுவலகத்தில எல்லாரும் பாத்திருக்காங்க."
"நீங்க என்ன சொல்றீங்க, கங்காதரன்?" என்றார் சி.ஈ.ஓ.
"சார்! ரேணுகாகிட்ட நான் எப்பவும் தப்பாப் பேசினது இல்ல. அவளைத் தொட்டதும் இல்லை..." என்று ஆரம்பித்தான் கங்காதரன்.
"சார்! ஒரு பெண் ஊழியரை அவள் இவள்ன்னு பேசறதே தப்பு. இதுவே ஒருவித வன்முறைதான்!" என்றார் லதா.
"ஐ ஆம் சாரி! என்னை விட வயசில சின்னவங்கறதால, அவளை - சாரி அவங்களை - நான் வா, போன்னுதான் பேசுவேன். அதனால்தான், அவன்னு சொல்லிட்டேன். மறுபடியும் சாரி!" என்றான் கங்காதரன்.
தானும் தனக்காக வாதாட ஒருவரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது என்று அப்போது அவனுக்குத் தோன்றியது.
"நாலு ஸ்டெனோக்கள்ள ரேணுகாவை நான் தேர்ந்தெடுத்தது ரேண்டமாத்தான். நாலு பேர்ல யாரைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், ஏன் குறிப்பிட்ட ஒத்தரைத் தேர்ந்தெடுத்தேன்னு கேட்க முடியும்! இதுக்கு என்கிட்ட பதில் இல்ல.
"ரேணுகா அடிக்கடி ஃபோன்ல யார்கிட்டயாவது பேசிக்கிட்டிருப்பாங்க. அதை நான் கண்டிச்சிருக்கேன். அவங்களோட டைப்பிங்கில் நிறையத் தப்பு இருக்கும். நிறைய தடவை, கடிதங்களை ரீடைப் பண்ணச் சொல்லி இருக்கேன்.
"இதனால எல்லாம் அவங்களுக்கு என் மேல கோபமா இருக்கலாம். ஒரு தடவை அவங்களை வேற செக்ஷனுக்கு அனுப்பிட்டு, நான் வேற ஒரு ஸ்டெனோவை என் உதவியாளரா வச்சுக்கப் போறதா சொன்னேன்.
"அவங்க தன்னை இப்ரூவ் பண்ணிக்கணுங்கறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். அதில அவங்க அப்செட் ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம்தான் என் மேல ஒரு பொய்யான புகாரைக் கொடுத்திருக்காங்க."
"நீங்க அவங்களை அறைக்கதவை உள்பக்கமா பூட்டச் சொன்னது?" என்றார் தன்னார்வ நிறுவனத்தின் அதிகாரி.
"சார்! நான் அப்படிச் சொல்லல. அவங்களே பூட்டி இருக்காங்க. அது எனக்குத் தெரியாது. திடீர்னு, தலை, உடையை எல்லாம் கலைச்சுக்கிட்டு கதவைத் திறந்துக்கிட்டு வெளியே போனாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. வெளியில போய் அழுதுகிட்டே, என்னைக் கை காட்டி மத்தவங்ககிட்ட ஏதோ சொன்னாங்க. அப்புறம்தான் அவங்க இப்படி ஒரு டிராமா போடறதே எனக்குப் புரிஞ்சுது!" என்றான் கங்காதரன்.
"பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணோட பதட்டத்தை டிராமான்னு கொச்சைப் படுத்தாதீங்க, மிஸ்டர் கங்காதரன்!" என்றார் லதா.
கங்காதரன் வெளியே வந்ததும், அங்கே நின்றிருந்த அவன் சக ஊழியன் சேது அவனிடம் வந்தான்.
"என்ன ஆச்சு, கங்காதரா?" என்றான், பரிவுடன்.
"ஷோ இன்னும் நடந்துக்கிட்டிருக்கு. இப்ப ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக்!" என்றான் கங்காதரன், வெறுப்புடன். "இப்படியா ஒருத்தி போய் சொல்லுவா?"
"கவலைப்படாதே, கங்காதரா! உனக்கு ஒண்ணும் ஆகாது!" என்றான் சேது, ஆறுதலாக.
கங்காதரன் சேதுவின் முகத்தைப் பார்த்தான்.
அந்த நிறுவனத்தில் கங்காதரனுக்கு முன்பே வேலையில் சேர்ந்தவன் சேது. வேலையில் மிகவும் திறமையானவன். ஆனால், நேர்மையும், பிடிவாத குணமும் உடையவன். தன் மூத்த அதிகாரிகள் சொன்னதெற்கெல்லாம் தலையாட்டாமல், முறைப்படியும், விதிகளின்படியும் எது சரியோ அதையே செய்ய வேண்டும் என்று உறுதியாக இருப்பவன். அதனாலேயே, மேலதிகாரிகளுக்கு அவன் மீது கொஞ்சம் அதிருப்தி உண்டு.
வேலையில் சேர்ந்ததுமே இதைப் புரிந்து கொண்ட கங்காதரன், இதை நன்கு பயன்படுத்திக் கொண்டான். மேலதிகாரிகளிடம் சேதுவைப் பற்றிப் பல தவறான செய்திகளைச் சொல்லி, சேதுவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் தந்திரமாக ஈடுபட ஆரம்பித்தான்.
தன் மேலதிகாரிகளைப் பற்றி சேது தன் சக ஊழியர்களிடம் அவதூறான கருத்துக்களைப் பரப்புவதாக கங்காதரன் ஜோடித்த கதைகள், சேதுவின் மீது ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த அவன் மேலதிகாரிகளிடம் அவன் மீது தவறான கருத்து உருவாக வழி செய்தன.
இதனால் சேதுவை முந்திக் கொண்டு பதவி உயர்வு பெற்று, கங்காதரன் நிறுவனத்தின் பதவிப் படிக்கட்டில் மேலே வந்து விட்டான். இதை அறியாத சேது, இன்னும் கங்காதரனிடன் நட்புடன் இருந்து வந்தான்.
"நீ நிச்சயம் இதிலேந்து குற்றமில்லாதவனாக வெளியே வருவே. பொய்யான விஷயங்களைச் சொல்லி ஒத்தரைத் தப்பானவரா ஆக்கி விட முடியுமா என்ன?" என்றான் சேது.
'உன்னை நான் ஆக்கி இருக்கேனே! அதனாலதான், எனக்கு இப்படி நடக்குதோ என்னவோ!' என்று நினைத்துக் கொண்டான் கங்காதரன்.
குறள் 319பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
பொருள்:முதலில் ஒரு சமயம் பிறருக்கு நாம் துன்பம் விளைவித்தால், பிற்காலத்தில் நமக்குத் துன்பம் வந்து சேரும்.
320. வாடகை பாக்கி
"அஞ்சு மாசமா வாடகை கொடுக்கல சார். காலி பண்ணவும் மாட்டேங்கறாரு. மூணு மாச அட்வான்ஸ் போனா கூட, இன்னும் ரெண்டு மாச வாடகை பாக்கி. அவர் கொடுப்பாருன்னு தோணல. ரொம்ப அடாவடியாப் பேசறாரு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!" என்று புலம்பினார் நாகராஜன்.
"அப்படியா? சங்கர் எனக்குத் தெரிஞ்சவன்தான்னாலும், என்கிட்டயும் திமிராத்தான் பேசுவான். எதுக்கும் நான் சொல்லிப் பாக்கறேன்" என்றார் பசுபதி.
இரண்டு நாட்கள் கழித்து நாகராஜனைச் சந்தித்த பசுபதி, "சங்கர் கிட்டப் பேசினேன். ஏதோ சாக்கு சொன்னான். ஒரு வாரத்தில அவன் வேற வேலைக்குப் போகப் போறானாம். அவன் வேலைக்குப் போகப் போற கம்பெனி பூந்தமல்லியில் இருக்கறதால, பூந்தமல்லியில வீடு பாத்துக்கிட்டிருக்கானாம். ஒரு மாசத்தில போயிடுவான். ஆனா, உங்க வாடகை பாக்கியைக் கொடுப்பானான்னு தெரியல. அவன் இதுக்கு முன்னால குடியிருந்த வீடுகள்ளேயும் இப்படித்தான் வாடகையை ஒழுங்கா கொடுக்காம தாமதப்படுத்தறது, அஞ்சாறு மாச வாடகையை பாக்கி வச்சுட்டுக் காலி பண்றது இந்த மாதிரியெல்லாம் செஞ்சிருக்கானாம். அவனைப் பத்தி விசாரிச்சதில, இப்பதான் எனக்குத் தெரிஞ்சுது" என்றார் பசுபதி.
"காலி பண்ணினா போதும் சார்!" என்றார் நாகராஜன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டைக் காலி செய்தான் சங்கர். இரண்டரை மாத வாடகை பாக்கியை அப்புறம் கொடுப்பதாகச் சொல்லி விட்டுப் போனான். ஆயினும், நாகராஜனுக்கு அந்தப் பணம் வரும் என்ற நம்பிக்கையில்லை. 'ஏதோ, இந்த மட்டும் காலி செய்தானே!' என்று நினைத்துக் கொண்டார்.
பசுபதியின் வீட்டுக்குச் சென்று, சங்கர் காலி செய்ததைச் சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்த நாகராஜன், "சார்! நான் கூட வாடகை வீட்டில குடியிருந்திருக்கேன். அப்பல்லாம் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வாடகையை ஓழுங்காக் கொடுத்துடுவேன். எப்பவாவது, ஒரு நாள் தாமதமானாக் கூட, வீட்டுக்காரர் ஏதாவது நினைச்சுப்பாரோன்னு பயமா இருக்கும். ஆனா, இப்ப எனக்கு வர வேண்டிய வாடகை முழுசா வரல. குடியிருந்தவர் ரெண்டு மூணு மாச வாடகை கொடுக்காம ஏமாத்திட்டுப் போயிட்டாரு. இதை நினைச்சாதான் எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு!" என்றார், வருத்தத்துடன்.
"வருத்தப்படாதீங்க, நாகராஜன். இந்த மூணு மாச வாடகை இழப்பு உங்களுக்குப்பெரிய விஷயம் இல்ல. புதுசா ஒத்தருக்கு வாடகைக்கு விடறப்ப, வாடகை அதிகமாக் கூடக் கிடைக்கும். ஆனா, உங்களுக்குக் கஷ்டம் கொடுத்த சங்கர்தான் இப்ப கஷ்டப்படப் போறான்!'" என்றார் பசுபதி.
"எப்படிச் சொல்றீங்க?'
"இப்ப அவன் வாடகைக்குப் போயிருக்கிற வீடு ஒரு அரசியல்வாதியோடது. வீட்டுச் சொந்தக்காரர் ஒரு பினாமிதான். அந்த அரசியல்வாதி பண்ற கெடுபிடியில எத்தனையோ பேர் அந்த வீட்டில ரொம்ப நாள் குடியிருக்க முடியாம ஓடி இருக்காங்க. ஒழுங்கா வாடகை கொடுத்தவங்களுக்கே இந்த கதின்னா, இவனை மாதிரி ஒழுங்கா வாடகை கொடுக்காதவங்களை வறுத்து எடுத்துட மாட்டாரா அந்த அரசியல்வாதி?" என்றார் பசுபதி.
குறள் 320நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
பொருள்:துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சாரும். எனவே, துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர்கள் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும்.
அதிகாரம் 33 - கொல்லாமை
அதிகாரம் 31 - வெகுளாமை
பொருட்பால் காமத்துப்பால்
No comments:
Post a Comment