சுமதி அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது நேரமாகி விட்டது. பஸ் பிடித்து வீட்டுக்குச் செல்வதற்குள், அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் வீட்டுக்குக் கிளம்ப வேண்டிய நேரம் தாண்டி இருக்கும். நேரமாகி விட்டது என்று அவள் வேறு சிடுசிடுக்கப் போகிறாள்!
சுமதி நினைத்தபடியே, நர்ஸ் கிளம்பத் தயாராயிருந்தாள். ஆனால் சுமதி பயந்தது போல், அவள் சிடுசிடுக்கவில்லை. "சாரி, கொஞ்சம் லேட்டாயிடுச்சு" என்று சுமதி சொன்னபோது, "பரவாயில்லை" என்று அவள் சிரித்துக் கொண்டே கூறியது சுமதிக்கு ஆறுதலாக இருந்தது.
அறைக்குள் போய் அம்மாவைப் பார்த்துப் பேசி விட்டு, சமையலறைக்குச் சென்று இரவுச் சமையலுக்கான வேலையைத் துவக்கினாள் சுமதி. டியூஷனுக்குப் போய் விட்டு வந்ததும், ரவியும், கலாவும் பசியுடன் இருப்பார்கள் என்பதால், அவர்களுக்காக விரைவில் சாலட்களைச் செய்து வைத்தாள்.
சுமதி அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண். இரண்டு வருடங்களுக்கு முன் சுமதியின் தந்தை இறந்தவுடன், அவள் அம்மா தங்களுடன் வந்து இருக்க வேண்டும் என்று அவள் கணவன் பரத் கூறினான். அவள் அம்மா முதலில் சற்றுத் தயங்கினாலும், பரத் வற்புறுத்தி அழைத்ததால் ஒப்புக் கொண்டார்.
அம்மா வந்ததிலிருந்து சுமதிக்கு வாழ்க்கை எளிதானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆகி விட்டது. சமையல் வேலையில் பெரும் பகுதி, சுமதியும், பரத்தும் வீட்டில் இல்லாத சமயங்களில் ரவியையும், கலாவையும் பார்த்துக் கொள்வது ஆகிய பொறுப்புக்களைத் தன் அம்மா எடுத்துக் கொண்டது சுமதிக்குத் தன் சுமை அனைத்துமே இறக்கி வைக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்தியது.
மூன்று மாதங்களுக்கு முன், சுமதியின் அம்மாவுக்கு இதய நோய் ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பின், அவர் மூன்று மாதங்கள் முழு ஒய்வில் இருக்க வேண்டுமென்றும், அதற்குப் பிறகும், அவர் தன் உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாதென்றும் மருத்துவர்கள் கூறி விட்டனர்.
அதற்குப் பிறகு, சுமதியின் வேலைச் சுமை மிகக் கடுமையாகி விட்டது. வீட்டு வேலைகளைத் தவிர, அம்மாவை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பும் சேர்ந்து கொண்டு விட்டது.
சுமதி, பரத் இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால், பகல் வேளையில் மட்டும் அவள் அம்மாவை கவனித்துக் கொள்ள ஒரு நர்ஸை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
8 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தபோதே, "சுமதி, கொஞ்சம் காப்பி கிடைக்குமா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் பரத். இது தினசரி வழக்கம் என்றாலும், ஏதோ அன்று மட்டும் கேட்பது போல்தான் அவன் தினமும் கேட்பான்.
'இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிடணும், 8 மணிக்கு காப்பி என்ன வேண்டிக் கிடக்கிறது!' என்று அலுத்துக் கொண்டே காப்பி கலக்க ஆரம்பித்தாள் சுமதி.
சுமதி தன் வேலைகளை முடித்து விட்டு, அம்மாவுக்கு வேண்டியவற்றைச் செய்து விட்டு, இரவு படுத்துக் கொள்ளச் செல்லும்போது மணி பத்தரை ஆகி விட்டது.
"உன் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டதில் உனக்குத்தான் ரொம்பவும் கஷ்டம்" என்றான் பரத், உண்மையான அக்கறையுடன்.
"ஆமாங்க! என்ன செய்யறது! அவங்க பாட்டுக்கு நல்லா ஆரோக்கியமா இருந்தாங்க. என்னை ஒரு வேலையும் செய்ய விடாம, எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சுக்கிட்டிருந்தாங்க. அவங்களை இப்படிப் படுக்கையில தள்ளிடுச்சு. ரெண்டு வருஷம் நான் ரொம்ப ஜாலியா, சந்தோஷமா, கவலை இல்லாம இருந்தேன். இப்ப பாருங்க, நிலைமை தலைகீழா மாறிடுச்சு. எல்லாம் நம்ம நேரம்!" என்றாள் சுமதி, சலிப்புடன்.
"நீயே சொன்னியே இப்ப, ரெண்டு வருஷம் ஒரு கவலையும் இல்லாம இருந்தேன்னு. அதுவும் நம்ம நேரம்தான் - நல்ல நேரம்! உன் அம்மாவும் ஆரோக்கியமா, சந்தோஷமா இருந்தாங்க. எல்லாம் நல்லா நடக்கறப்ப, நம்ம நேரம் நல்லா இருக்கேன்னு நாம நினைக்கறதில்ல. கஷ்டம் வரப்பதான் நேரத்தைக் குறை சொல்றோம்!" என்ற பரத், மனைவி தன்னை முறைப்பதைப் பார்த்து விட்டு, "எல்லாரும் அப்படித்தான். நானும் அப்படித்தான்!" என்றான், எச்சரிக்கை உணர்வுடன்.
குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
No comments:
Post a Comment