About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 18 - வெஃகாமை (பிறர் பொருளை விரும்பாமை)

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 18
வெஃகாமை

171. தப்புக்கணக்கு!

புழுதியை வாரி இறைத்து விட்டு நின்ற பஸ்ஸிலிருந்து கோபி மட்டும் இறங்கினான்.

விலாசம் விசாரித்துக் கொண்டு சக்திவேலின் வீட்டை அடைந்தான்.

வாசற்கதவு திறந்திருந்தது. ரேழி, முற்றம், பின்கட்டு என்று கொல்லைப்புறக் கதவு வரை தெரிந்தது. ஆனால் மனிதர்கள் யாரும் தென்படவில்லை.

 "சார்!" என்றான் கோபி. 

பலவீனமாக எழுந்த அவன் குரல் உள்ளே இருந்தவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, உள்ளிருந்து ஒரு பெண்மணியின் முகம் வெளிப்பட்டது.

"யாரு வேணும்?"

கோபி பதில் சொல்வதற்குள், உள்ளிருந்து ஒரு நபர் வேகமாக வெளியே வந்தார். அவர்தான் சக்திவேலாக இருக்க வேண்டும். 

"வாங்க, வாங்க! கோபி சார்தானே? உள்ளே வாங்க. ஏன் அங்கேயே நிக்கறீங்க?" என்றபடியே வெளியே வந்து, அவனை உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.

"கல்யாண விஷயமா வந்திருக்காரு, நான் சொல்லியிருந்தேனே?" என்றார் சக்திவேல், தன் மனைவியிடம்.

"வாங்க. உக்காருங்க. எனக்கு முதல்ல நீங்க யாருன்னு தெரியல!" என்றாள் அந்தப் பெண்மணி, மன்னிப்புக் கேட்கும் தொனியில்.

கோபி உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும், சம்பிரதாயமாகச் சில வார்த்தைகளைப் பேசி விட்டு, "கல்யாண விஷயமாப் பேச நீங்க இவ்வளவு தூரம் வந்தது பெரிய விஷயம்!" என்றார் சக்திவேல்.

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை நேர்ல பாத்துப் பேசறதுதானே மரியாதை?" என்றான் கோபி. தொடர்ந்து, "நீங்க இந்த ஊர்க்காரர் இல்லேன்னு நினைக்கறேன்?" என்றான்.

"ஆமாம். நான் தஞ்சாவூர். இந்த வி ஏ ஓ வேலை கிடைச்சதனால இந்த கிராமத்துக்கு வந்திருக்கேன்."

"ஓ! முன்னெல்லாம் கணக்குப்பிள்ளை, பட்டாமணியம்னு இருப்பாங்க."

"ஆமாம். அதெல்லாம்தான் எம் ஜி ஆர் காலத்திலேயே போயிடுச்சே. இப்பல்லாம் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீஸர்தான்!"

"இந்த ஊர்ல கடைசியா கணக்குப்பிள்ளையா இருந்தவரை உங்களுக்குத் தெரியுமா?"

"எனக்குத் தெரியாது. எனக்கு முன்னால இருந்த வி ஏ ஓ அவரைப் பத்தி சொல்லியிருக்காரு. ஏன் கேக்கறீங்க?"

"இல்லை. பஸ்லேருந்து இறங்கினதும் உங்க வீட்டைப் பத்தி விசாரிச்சேன். பழைய கணக்குப்பிள்ளை வீட்டுலதான் நீங்க குடியிருக்கிறதாச் சொன்னாங்க. அதுதான் கேட்டேன்!"

"ஓ! இது அவரோட வீடுதான். ஆனா அவர் போனப்பறம் அவங்க மனைவி அதை வித்துட்டாங்களே! வேற ஒத்தரு வாங்கிட்டாரு."

"அந்தக் கணக்குப்பிள்ளைக்கு ஊர்ல அவ்வளவு நல்ல பேரு இல்லேன்னு கேள்விப்பட்டேனே!" என்றான் கோபி. 

"ஏது, இந்த ஊருக்கு வரத்துக்கு முன்னாடியே, ஊரைப் பத்தி நிறைய தகவல் திரட்டிக்கிட்டு வந்திருக்கீங்க போல இருக்கே! அது ஒரு பெரிய கதை. நீங்க பாம்பே, டெல்லியில எல்லாம் இருந்திருக்கீங்க. உங்களுக்கு கிராமத்து விஷயங்கள்ளாம் புரியுமோ என்னவோ! 

"முன்னெல்லாம் கிராமங்கள்ள இருக்கிற நிலங்களுக்கெல்லாம் ரிக்கார்டு கணக்குப்பிள்ளை கிட்டத்தான் இருக்கும். படிக்காத கிராமத்து ஜனங்க பல பேர்கிட்ட அவங்க சொத்துக்கான பத்திரமெல்லாம் சரியா இருக்காது. இதைப் பயன்படுத்திக்கிட்டு அந்தக் கணக்குப்பிள்ளை நிறைய பேரை ஏமாத்தியிருக்காரு. 

"சிலரோட நிலத்தையெல்லாம் புறம்போக்கு நிலம்னு சொல்லி அவங்க பேர்ல இருந்த பட்டாக்களை மாத்தறது, சில பட்டாக்களைத் தன் பேர்ல மாத்தி எழுதிக்கறதுன்னு நிறைய ஏமாத்து வேலையெல்லாம் பண்ணியிருக்காரு."

"அப்படியெல்லாம் பண்ண முடியுமா என்ன?"

"நான் சொல்றது நாப்பது அம்பது.வருஷத்துக்கு முந்தின நடப்பு. நீங்களும் நானும் அப்ப பள்ளிக்கூடத்தில் படிச்சுக்கிட்டிருந்திருப்போம். பாதிக்கப்பட்டவங்களைக் கேட்டா கதை கதையாச் சொல்லுவாங்க. தாலுக்கா ஆஃபீஸ்லியே அவருக்கு வேண்டியவங்க இருப்பாங்க. அவங்க மூலமா தாலுக்கா ஆஃபீஸ்லேயே ரிகார்டையெல்லாம் மாத்திடுவாரு. 

"தனியார் நிலத்தைப் புறம்போக்கு நிலம்னு சொல்லுவாரு. அதை அவங்ககிட்டேருந்து பிடுங்கிக்கிட்டு, முதல்ல புறம்போக்கு நிலம்னு மாத்திட்டு, அப்புறமா புறம்போக்கு நிலத்தை அவர் மேல பட்டா போட்டுப்பாரு!"

"ம்!"

"திடீர்னு ஒருநாள் கணக்குப்பிள்ளைகளை ஒழிச்சுட்டு வி ஏ ஓக்களைக் கொண்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் அந்தக் கணக்குப்பிள்ளை மேல நிறைய புகார் வந்து, அதையெல்லாம் விசாரிச்சதில, ரெண்டு மூணு கேசில வசமா மாட்டிக்கிட்டாரு."

"கைது பண்ணிட்டாங்களா?"

"இல்ல. போலீஸ் வந்து விசாரிச்சாங்க. கைது பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சதும், அன்னிக்கு ராத்திரியே விஷத்தைக் குடிச்சுட்டாரு."

"ஐயையோ!"

"நீங்க ஏன் பரிதாபப்படறீங்க? மத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட்டு அவங்களை ஏமாத்தினவருக்கு வேற என்ன நடக்கும்?"

"அவரோட குடும்பம்?"

"அவங்கதான் பாவம். அவருக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. பையன் சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடிட்டான். அப்பா பண்ணின அக்கிரமங்களைப் பத்தி மத்தவங்க பேசறதைக் கேட்டுட்டு, அதையெல்லாம் பொறுக்க முடியாமத்தான் ஓடிட்டான்னு பேசிக்கிட்டாங்க."

"அது எப்படி மத்தவங்களுக்குத் தெரியும்?"

"அவனோட அம்மாவே சொன்னாங்களாம்! வீட்டை விட்டுப் போறதுக்கு முன்னாடியே, நிறைய தடவை தன் அம்மாகிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான் அவன். அவங்க அதைச் சொல்லிப் புலம்பிக்கிட்டே இருந்திருக்காங்க."

"அந்த அம்மா என்ன ஆனாங்க?"

"அவங்க பாவம்! அவங்களுக்கு இருந்த சொத்தை வச்சுக்கிட்டு, அவங்க இந்த ஊரிலயே இருந்திருக்கலாம். ஆனா கணக்குப் பிள்ளை செத்தப்பறம் கூட., ஊர் ஜனங்க அவரைப் பத்திப் பேசின பேச்சைக் கேட்டுக்கிட்டு, அவங்களால இந்த ஊர்ல இருக்க முடியல. வீடு, நிலம் எல்லாத்தையும் வித்துட்டு, அவங்க அம்மா ஊருக்குப் போயிட்டாங்க. அதை விடுங்க. சம்பந்தம் பேச வந்தவர்கிட்ட ஏதோ பழங்கதையெல்லாம் பேசிக்கிட்டிருக்கேனே!"

அதற்குப் பிறகு, தன் குடும்பம் பற்றியும், சென்னையில் வேலை பார்க்கும் தன் மகன் பற்றியும் சக்திவேல் பேசி விட்டு, "உங்களைப் பத்தி சொல்லுங்க!" என்றார்.

"அதான் லெட்டரிலே சொல்லியிருந்தேனே. நான் பம்பாய், டெல்லின்னு இருந்துட்டு இப்பதான் சென்னைக்கு வந்திருக்கேன். நான் தஞ்சாவூருக்கு ஒரு வேலையா வந்ததால, உங்களைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். என்  மனைவியையும் அழைச்சுக்கிட்டு இன்னொரு தடவை வரேன். இப்ப நான் உடனே கிளம்பணும்" என்று எழுந்தான் கோபி.

"பலகாரம் பண்ணிட்டுப் போகலாமே!" என்றாள் உள்ளிருந்து வந்த சக்திவேலின் மனைவி.

"இல்ல. அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா சாப்பிடறேன். வரேன்" என்று கிளம்பினான் கோபி.

'அப்பா மீதிருந்த கோபத்தில் நாற்பது வருஷமாகக் குடும்பத்திலிருந்து ஒதுங்கி இருந்தது பெரிய தவறு! பாட்டியின் ஊரான பந்தநல்லூருக்குப் போய் அம்மாவைப் பார்க்க வேண்டும்! தங்கைகள் கல்யாணமாகி எந்த ஊரில் இருக்கிறார்களோ?'

கோபி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.   
   
குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும்.

பொருள்:  
நியாய உணர்வு இன்றிப் பிறர் பொருளை விரும்புபவர்களின் குடி கெடும். அவர்களுக்குப் பெரும் பழியும் வந்து சேரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


172. செலவு ஐநூறு - வரவு இரண்டு லட்சம்!

வெங்கடாசலம் தன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும்  அவன் செயல்படுத்தியதில்லை. 


"எங்கிட்ட மட்டும் ஒரு லட்ச ரூபாய் இருந்தாப் போதும். மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிச்சுக் காட்டுவேன்!" என்று அடிக்கடி பாலுவிடம் சொல்லிக் கொண்டிருப்பான். 

சில சமயம் பாலுவைக் கூட முதலீடு செய்யும்படி கேட்டிருக்கிறான். ஆனால் பாலுவிடம் பணமும் இருந்ததில்லை, பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்ததில்லை.

ஆனால் இந்த முறை வெங்கடாசலம் சொன்ன யோசனை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததாகத் தோன்றியது.

"ஐநூறு ரூபாய் இருந்தால் போதும். வீட்டிலிருந்தபடியே மாசம் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்"  என்றான் வெங்கடாசலம்.

"எப்படி?" என்றான் பாலு. வெங்கடாசலத்தின் வியாபார யோசனைகளில் பொதுவாக அவனுக்கு அதிகம் ஆர்வம் இருந்ததில்லை என்றாலும், ஐநூறு ரூபாய்தான் முதலீடு என்றதும் அவனுக்குக் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது.

"உங்கிட்ட ஐநூறு ரூபாய் இருக்கா?" என்றான் வெங்கடாசலம்.

"இல்லை. ஆனா புரட்டலாம்!" என்றான் பாலு.

"அது போதும். நீ என்ன செய்யற - ஐநூறு ரூபா கொடுத்து எங்கிட்ட ஒரு புத்தகம் வாங்கற!"

"என்ன புத்தகம் அது?"

"'ஐநூறு ரூபாய் முதலீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?' ங்கற புத்தகம்."

"அவ்வளவுதானா?" என்றான் பாலு, ஆர்வம் குறைந்தவனாக.

"என்ன அப்படிச் சொல்லிட்ட? நீ வாங்கப் போறது புத்தகம் இல்ல. நோட்டு அடிக்கற மெஷின்!"

"எப்படி?"

"சொல்றேன் கேட்டுக்க. இந்த ஃபாரத்தைப்  பாத்தியா?" என்று ஒரு படிவத்தைக் காட்டினான் வெங்கடாசலம்.

அதில் நான்கு பெயர்களும், அவர்களுடைய முகவரிகளும் இருந்தன. மூன்றாவது இடத்தில்  வெங்கடாசலத்தின் பெயர் இருந்தது. நான்காவதாக ஒரு நிறுவனத்தின் பெயர் இருந்தது. 

"ஐநூறு ரூபா கொடுத்து ஒரு புத்தகம் வாங்கணும்னு சொன்னேன் இல்ல? அந்த ஐநூறு ரூபாயை நீ நாலு பேருக்குப் பிரிச்சு அனுப்பணும். முதல்ல பேர் இருக்கறவருக்கு 200 ரூபா, ரெண்டாவது நபருக்கு 120 ரூபா, மூணாவது நபருக்கு 100 ரூபா, கம்பெனிக்கு 80 ரூபான்னு, கம்பெனியிலிருந்து உனக்கு ஒரு புத்தகமும், இது மாதிரி ஒரு ஃபாரமும் வரும். அந்த ஃபாரத்தில மூணாவது இடத்தில உன் பேர் இருக்கும்! என் பேர் இரண்டாவது இடத்துக்குப் போயிடும்! ரெண்டாவதா இருக்கறவரு முதல் இடத்துக்குப் போயிடுவாரு. முதல் இடத்தில இருக்கறவரு பேரை எடுத்துடுவாங்க. (அவருதான் அதுக்குள்ளே நிறைய சம்பாதிச்சிருப்பாரே!) நீ இந்த ஃபாரத்தை ஜிராக்ஸ் எடுத்து உனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட காட்டி அவங்களை இதில சேத்து விட்டா போதும். உனக்குப் பணம் வந்துக்கிட்டே இருக்கும்!"

"ரெண்டு லட்ச ரூபா எப்படி வரும்?"  

"அதுக்கு மேலயே கூட வரலாம். நீ எத்தனை பேரை சேத்து விடறேங்கறதைப்  பொருத்தது அது. நீ 10 பேரை சேக்கற. அவங்க ஒவ்வொத்தரும் 10 பேரை சேக்கறாங்க, அப்புறம் அவங்களும் பத்து பத்து பேரை சேக்கறாங்கன்னு வச்சுக்க! உன் பேர் ஆயிரம் ஃபார்ம்ல முதல் இடத்தில வரும். அப்ப உனக்கு ஆயிரம் இன்டு இருநூறுன்னு ரெண்டு லட்ச ரூபா வருமே! அப்புறம் ரெண்டாவது மூணாவது இடத்து வருமானத்தை எல்லாம் சேத்தா இன்னும் அதிகமாகவே வரும்!"

"இது மணி சர்க்குலேஷன் மாதிரி இருக்கே! இது சட்ட விரோதம்னு சொல்லுவாங்களே?" என்றான் பாலு.

"சட்ட விரோதமா இருந்தா, இதை நடத்த முடியுமா? இது மணி சர்க்குலேஷன் இல்ல. புத்தக விற்பனையில வர பணத்தில ஒரு பகுதியை கமிஷனா மூணு பேருக்குப் பிரிச்சுக் கொடுக்கறாங்க. அவ்வளவுதான்!"

"எனக்கு இது ஒத்து வராதுப்பா. என்னால யாரையும் சேக்க முடியாது!"

"நீ யாரையும் சேக்க வேண்டாம். நான் உங்கிட்ட இதைப்பத்தி விளக்கிச் சொன்ன மாதிரி, நீ நாலு பேருகிட்ட சொல்லு. நிச்சயமா சில பேராவது சேந்துப்பாங்க. இந்த ஃபார்ம்லேயே, பின்பக்கத்தில இந்தத் திட்டத்தை விளக்கியிருக்காங்க. நீ இதை போஸ்ட்ல அனுப்பிச்சா கூடப் போதும். அதிலேயே கொஞ்சம் பேரு சேந்துப்பாங்க. நாலு பேரு சேர்ந்தாலே உனக்கு நானூறு ரூபா வந்துடும். அந்த நாலு பேர்ல ஒத்தர் இன்னொருத்தரை சேத்து விட்டாக் கூடப் போதும். அதுல உனக்கு நூத்தி இருவது ரூபா வரும். அவ்வளவுதான். நீ போட்ட பணம் வந்தாச்சு. அப்புறம் வரதெல்லாம் லாபம்தானே?" என்றான் வெங்கடாசலம்.

'ஐநூறு ரூபாய்தானே, சேர்ந்துதான் பாக்கலாமே!' என்று நினைத்து, பாலு அந்தத் திட்டத்தில் சேர்ந்தான்.

ரண்டு நாட்களில் பாலுவுக்கு 'ஐநூறு ரூபாய் முதலீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?' என்ற புத்தகமும், அவன் பெயர் சேர்க்கப்பட்ட படிவமும் தபாலில் வந்தது. படிவத்தில் தன் பெயரைப் பார்த்ததுமே, பலரிடமிருந்து பணம் வந்து விட்டது போல் ஒரு உற்சாகம் அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் புத்தகத்தைப் பார்த்ததும்தான் ஏமாற்றம் ஏற்பட்டது.

அந்தத் திட்டத்தைப் பற்றிய விளக்கமும், எப்படியெல்லாம் மற்றவர்களை இதில் சேர்க்கலாம் என்ற யோசனைகளுமாக மொத்தம் இருபதே புக்கங்கள் கொண்ட புத்தகம் அது! விலை ரூ 500 என்று அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது.

வெங்கடாசலம் சொல்லியிருந்தான், 'உன் கல்யாணத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவதற்கு எப்படி லிஸ்ட் போடுவாயோ அது மாதிரி போடு' என்று.

பாலு பட்டியல் போட ஆரம்பித்தான். முதலில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பிறகு தூரத்து உறவினர்கள், ஓரளவுக்கே பரிச்சயமானவர்கள் என்று ஐம்பது பெயர்களை எழுதினான்.

முதலில் இந்த 50 பேரிடம் முயற்சி செய்வோம். இவர்களில் 5 பேர் சேர்ந்தால் கூட வெங்கடாசலம் சொன்ன கணக்கின்படி தன் முதலீட்டை எடுத்து விடலாம்!

ஒவ்வொருவரிடமும் எப்படி அணுகி, எப்படிப் பேசுவது என்று நினைத்துப் பார்த்தான். 

மனதில் ஏதோ ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருந்தது. மற்றவர்களைப் போய்க் கேட்க வேண்டுமே என்ற தயக்கம் என்று முதலில் நினைத்தான். அதற்கும் மேலே ஏதோ என்று தோன்றியது.

வெங்கடாசலம் சொல்லியிருந்தான்- யாரிடமும் போய் உதவி கேட்பது போல் கேட்கக் கூடாதாம். அவர்களுக்கு நன்மை செய்வது போல் பேச வேண்டுமாம்!

'ஐநூறு ரூபாய் முதலீட்டில் நீங்கள் நிறையப் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு. இதைத் தவற விட்டால் உங்களுக்குத்தான் நஷ்டம்!' என்ற ரீதியில் பேச வேண்டுமாம்!

'உண்மையிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் என் நோக்கமா?' என்று தன்னையே கேட்டுக் கொண்டான் பாலு. 'இல்லவே இல்லை' என்ற பதில் உள்ளிருந்து வந்தது. மனதில் இருந்த தயக்கத்துக்குக் காரணமும் புரிந்தது!

'நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் என்று பலரிடமும் பணத்தைப் பிடுங்கி என்னை வளப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்! நான் சொல்வதை ஏற்று இந்த பிஸினஸில் சேருபவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் என்னைப் போல் மற்றவர்களின் பணத்தைப் பிடுங்க முயற்சி செய்வார்கள். அதிலும் ஒரு பகுதி எனக்கு வரும்! எத்தகைய தகாத செயல் இது! இந்த வகையான வருமானம் எனக்கு வேண்டாம்.'

'வெங்கடாசலத்தின் பேச்சில் மயங்கி சபலப்பட்டு நான் ஐநூறு ரூபாயை இழந்தது என்னோடு போகட்டும். மற்றவர்களுக்கும் இது போன்ற இழப்பை ஏற்படுத்தி அவர்கள் பணத்தைப் பறித்து நான் பயன் பெற வேண்டாம்.'

படிவத்தையும் புத்தகத்தையும் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தான் பாலு. பணத்தை இழந்த நிலையிலும், அவன் மனதில் ஒரு நிம்மதி தோன்றியது.   

குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவன்மை நாணு பவர்.

பொருள்:  
நியாயமில்லாத செயல்களைச் செய்வது குறித்து வெட்கப்படுபவர்கள் தமக்குப் பயன் கிடைக்கும் என்பதற்காகத் தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

173. காஞ்சிப் பட்டுடுத்தி...

கூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கைத் துறையில் உதவியாளனாகச் சேர்ந்த பிறகு, தணிக்கை அதிகாரியுடன் ஒரு கூட்டுறவுச் சங்கத்துக்குப் போகும் வாய்ப்பு ரமேஷுக்கு முதல் முறையாகக் கிடைத்தது.

தணிக்கை அதிகாரி சீதாராமன் ரமேஷுக்கு மேலதிகாரி போல் நடந்து கொள்ளாமல், ஒரு மூத்த நண்பன் போலவே நடந்து கொண்டார்.

அவர்கள் தணிக்கைக்குச் சென்ற இடம் காஞ்சிபுரத்தில் இருந்த ஒரு கூட்டுறவுப் பட்டு உற்பத்தி நிறுவனம்.

தணிக்கையின்போது, கணக்குகள், பில்கள் போன்றவற்றை அவர்களுக்குக் கொடுத்து உதவ, அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் அவர்களுடனேயே இருந்தார்.

மாலையில் அவர்களைக் காஞ்சியில் உள்ள கோவில்களுக்கு அவர் அழைத்துச் சென்றார்.

"இந்த ஊர்ல நூற்றுத்துக்கணக்கான கோவில்கள் இருக்கு. 108 சிவன் கோவில், 18 விஷ்ணு கோவில், அதைத் தவிர சூரியன், யமன் மாதிரி எல்லா தேவதைகளுக்கும் இங்கே கோவில் உண்டு. ஆழ்வார்கள் பாடின 15 விஷ்ணு கோவில்களும், நாயன்மார்கள் பாடின 11 சிவாலயங்களும் இந்த ஊர்ல இருக்கு. முக்தி அளிக்கிற 7 ஸ்தலங்களில் இதுவும் ஒண்ணு. நகரங்களில் சிறந்தது காஞ்சின்னு காளிதாசன் பாடியிருக்கான். 'நகரேஷு காஞ்சி!' இந்த ரெண்டு மூணு நாள்ள எத்தனை கோயில் காட்ட முடியுமோ அத்தனையையும் நான் உங்களுக்குக் காட்டிடறேன்!" என்றார் அவர்.

இரவு உணவுக்குப் பின் அறைக்குத் திரும்பியதும் ரமேஷ் சீதாராமனிடம் கேட்டான். "சார்! நாம ஆடிட்டுக்கு வந்திருக்கோம். லஞ்ச், டின்னர், காஃபி, டிஃபன்னு நமக்காக ஏகமா செலவு பண்றாங்க. அதைத் தவிர, கார்ல கோவில் கோவிலா அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டறாங்க. இதையெல்லாம் நாம ஏத்துக்கறது தப்பு இல்லியா?"

சீதாராமன் ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்து விட்டு, "நீ சொல்றது சரிதான். ஆனா இது ரொம்ப நல்ல சொசைட்டி. இங்க தில்லுமுல்லு எதுவும் கிடையாது. கணக்கெல்லாம் ரொம்ப கரெக்டா இருக்கும். பிரச்னைகள் இருக்கற இடமா இருந்தா, நான் இதையெல்லாம் என்கரேஜ் பண்ண மாட்டேன். ஆனா, பொதுவா ஒண்ணு ஞாபகம் வச்சுக்க. நாம ஆடிட்டுக்கு வர இடத்தில, இது மாதிரி சாப்பாடு, ஊர் சுத்திக் காட்டறதுல்லாம் நடக்கத்தான் நடக்கும். இதையெல்லாம் நாம மறுத்தா, நமக்குப் பண்பாடு இல்லைன்னு நெனச்சுப்பாங்க. அதுக்காக, அவங்களுக்கு சாதகமா ரிப்போர்ட் எழுதணும்னு அவசியம் இல்ல. தப்பு இருந்தா, அதை ரிப்போர்ட்ல எழுதலாம். இங்கே, செஞ்சோற்றுக் கடனெல்லாம் கிடையாது!" என்றார்.

நான்கு நாட்களில் தணிக்கை முடிந்து விட்டது. சீதாராமன் சொன்னது போல், அங்கே முறைகேடுகள் எதுவும் இல்லை. ஒரு சில சிறிய தவறுகள்தான் இருந்தன. கடைசி நாளில் நிர்வாக இயக்குநரைச் சந்தித்தபோது, அந்தத் தவறுகளை அவரிடம் குறிப்பிட்ட சீதாராமன், அவற்றைத் தன் அறிக்கையில் எழுதப் போவதாகவும், அவற்றை அவர்கள் சரி செய்து விட்டால், பிரச்னை எதுவும் இருக்காது என்றும் அவரிடம் தெரிவித்தார்.

அவர்கள் கிளம்பும்போது, நிர்வாக இயக்குனர் சீதாராமனிடம்  இரண்டு பார்சல்களைக் கொடுத்தார். "தாங்க்ஸ்" என்றபடியே அவற்றைப் பெற்றுக்  கொண்டார் சீதாராமன்.

அறைக்கு வந்ததும், சீதாராமன் ரமேஷிடம் ஒரு பார்சலைக் கொடுத்தார்.

"என்ன சார் இது?" என்றான் ரமேஷ்.

"கிஃப்ட்!" என்றார் சீதாராமன்.

"என்ன கிஃப்ட்? எதுக்கு சார் இது?"

"பட்டுப் புடவை தயாரிக்கிற கம்பெனியில, என்ன கிஃப்ட் கொடுக்கப் போறாங்க? பட்டுப் புடவையாத்தான் இருக்கும்! பிரிச்சுப் பாத்துடலாமே!"

தன் கையிலிருந்த பார்சலைப் பிரிக்கத் தொடங்கினார் சீதாராமன். "தனித்தனியாப் பேர் எழுதித்தான் கொடுத்திருக்காங்க. உன்னோடது வேற, என்னோடது வேற போலருக்கு!"

பிரித்துப் பார்த்தார். விலை உயர்ந்த பட்டுப்புடவை! விலை ரூ 21,375 என்று எழுதப்பட்ட காகிதத் துண்டு ஒட்டப்பட்டிருந்தது.

"கிஃப்டோட மதிப்பு நமக்குத் தெரியணும்கறதுக்காக விலைச்சீட்டைக் கிழிக்காமயே கொடுத்திருக்காங்க! உன்னோடதைப் பிரிச்சுப் பாக்கலாமா, இல்ல வீட்டில போய்ப் பிரிச்சுக்கிறியா?" என்றார் சீதாராமன்.

"எனக்கு இது வேண்டாம் சார்!"

"முதல்ல பிரிச்சுப் பாக்கலாம்!" என்றபடியே, ரமேஷ் என்று பெயர் எழுதப்பட்டிருந்த பார்சலைப் பிரித்தார் சீதாராமன். அதிலும் ஒரு விலை உயர்ந்த பட்டுப்புடவை இருந்தது. விலைச்சீட்டில் ரூ 10,725 என்று எழுதப்பட்டிருந்தது.

"என்ன சார், இவ்வளவு விலை உயர்ந்த புடவையைக் கொடுத்திருக்காங்க!" என்றான் ரமேஷ்.

"ஏம்ப்பா! எனக்குக் கொடுத்த கிஃப்டை விட உனக்குக் கொடுத்த கிஃப்ட் விலை குறைச்சலா இருக்கேன்னு நினைப்பியோன்னு பாத்தா, இப்படிச் சொல்றியே!"

ரமேஷின் மனைவி கீதாவுக்குப் புடவைகள் மீது ஆசை உண்டு. கடைக்குப் போனால் விலையுயர்ந்த புடவைகளை எடுத்துப் பார்ப்பாள். ஆனால் அவற்றை வாங்க மாட்டாள். விலை குறைவாக இருக்கும் புடவையைத்தான் வாங்குவாள். 

"புடவைக்கு ஏன் இவ்வளவு செலவழிக்கணும்? அந்தப் பணத்தை மிச்சம் பிடிச்சா, நாளைக்கு நம்ப குழந்தைகளுக்குச் செலவழிக்கலாமே!" என்று பிறக்கப் போகிற குழந்தைகளுக்காகச் சேமிக்க நினைப்பாள்.

அவளிடம் கல்யாணத்துக்கு வாங்கிய பட்டுப்புடவையைத் தவிர வேறு பட்டுப்புடவை இல்லை. "லட்ச ரூபாய்க்கெல்லாம் பட்டுப்புடவை இருக்காமே! அவ்வளவு விலை இல்லேன்னாலும் ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கணும்" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள் அவள்.

ஆனால் தங்கள் பொருளாதார நிலைக்கு அத்தகைய செலவுகள் சற்று அதிகப்படி என்று நினைத்துத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமல் இருந்தாள் கீதா. துணிக்கடைக்குப் போகும்போதெல்லாம் விலையுயர்ந்த புடவைகளை எடுத்துப் போடச் சொல்லி அவற்றைக் கைகளினால் தொட்டுப் பார்த்து மகிழ்வதோடு தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டாள்.

இந்தப் பட்டுப்புடவையைக் கொண்டு கொடுத்தால் கீதா மிகவும் மகிழ்ச்சி அடைவாள். பரிசாக வந்ததால் கணவனுக்குச் செலவு வைக்காமலேயே தன் ஆசை நிறைவேறி விட்டது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவாள்.

ஆனாலும்...

"தப்பா நெனச்சுக்காதீங்க சார்! இதைத் திருப்பிக் கொடுத்துட முடியுமா?"

"ஏம்ப்பா! இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம். நாம ஒண்ணும் அவங்களுக்கு சாதகமா ரிப்போர்ட் எழுதிட்டு, அதுக்காக லஞ்சம் வாங்கல. இதை வீட்டில கொண்டு போய்க் கொடுத்தா, உன் மனைவி சந்தோஷப்பட மாட்டாங்க?"

"நிச்சயமா சந்தோஷப்படுவா சார்! சொல்லப் போனா, பட்டுப்புடவை மேல அவளுக்கு ஆசை உண்டு. அவளோட சின்ன ஆசையை நிறைவேத்தினதுக்காக, நானும் சந்தோஷப்படுவேன். ஆனா இந்தச் சின்ன சந்தோஷத்துக்காக, என்னோட பெரிய சந்தோஷத்தை நான் இழக்க விரும்பல சார்!"

"அது என்னப்பா பெரிய சந்தோஷம்?"

"மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாம, நேர்மையா நடந்துக்கிட்டு, நமக்கு நியாயமாக் கிடைக்கறதை வச்சுக்கிட்டு வாழறதுதான் சார் பெரிய சந்தோஷம். நீங்க தப்பா நினைக்காதீங்க. என்னோட விருப்பம் அப்படி!" என்றான் ரமேஷ்.

"நான் தப்பா நினக்கலைப்பா. நானும் என்னை நேர்மையானவன்னுதான் நினச்சுக்கிட்டிருக்கேன்! ஆனா உன்னோட ஸ்டாண்டர்ட் ரொம்ப மேல இருக்கு. கீப் இட் அப்! இந்தப் புடவையையும் நானே எடுத்துக்கலாம். ஆனா நீ இந்த கிஃப்டை வாங்கிக்கலைங்கறது கம்பெனிக்குத் தெரியணும். அவங்களுக்கு ஃபோன் பண்ணி இங்க வந்து இதை எடுத்துக்கிட்டுப் போகச் சொல்றேன்" என்றார் சீதாராமன்.

"என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்!" என்றான் ரமேஷ்.

குறள் 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்.

பொருள்:  
அறவழியில் நடப்பதால் கிடைக்கும் பேரின்பத்தை விரும்புபவர் சிறிய இன்பத்தில் ஆசை கொண்டு அறத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


174. தானாக வந்த பணம்

வெளியே சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பிய மருதமுத்து, வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே, அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி, "என்ன ஆச்சு? மாடு இருந்ததா?" என்றாள்.

பதில் பேசாமல் உள்ளே வந்த மருதமுத்து, சோர்வான முகத்துடன் ஊஞ்சலில் அமர்ந்ததே மங்கைக்கான பதிலாக இருந்தது.

"கொஞ்சம் தண்ணி கொடேன்!" என்றான் மருதமுத்து. மங்கை நகராமல் நின்றதைப் பார்த்து, "நான் போறதுக்குள்ள மாடு வித்துப் போச்சாம்!" என்றான்.

பதிலை வாங்காமல் நகர மாட்டேன் என்று நின்று கொண்டிருந்தது போல், மங்கை உள்ளே போய்த் தண்ணீர்க் குவளையுடன் வந்தாள்.

"என்ன பொழப்பு இது? மாட்டுத் தரகு பண்றேன்னுட்டு, யாரோ எங்கேயோ மாடு இருக்குன்னு சொன்னதைக் கேட்டுட்டு, அஞ்சாறு மைல் நடந்து போய்ப் பார்த்தா, அங்க மாடு இருக்காது, இல்ல, வித்துப் போயிருக்கும். அப்படியே இருந்தாலும், அதை வாங்கறதுக்கு யார் இருப்பாங்கன்னு ஊர் ஊராத் தேடி அலையணும். அப்படியே வித்துக் கொடுத்தாலும், ஆயிரமோ ரெண்டாயிரமோ கமிஷன் வரும். அதிலேயும், சில பேரு கமிஷன் கொடுக்காம ஏமாத்திடுவாங்க!" என்று அலுத்துக் கொண்டாள் மங்கை.

அதற்குள் தண்ணீர் குடித்து முடித்திருந்த மருதமுத்து, "இந்தத் தொழில்தானே நமக்குச் சோறு போடுது?" என்றான்.

"ஆமாம் சோறு போடுது! தினம் விருந்துச் சாப்பாடுதானே சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்! நாம ரெண்டு பேருதாங்கறதனால, கடனை உடனை வாங்கி ஏதோ காலத்தை ஒட்டிக்கிட்டிருக்கோம். நாளைக்கே நமக்குப் பிள்ளை குட்டின்னு ஏற்பட்டா, என்ன பண்ணப் போறமோ! இந்த வீட்டுக்கு பதிலா நிலத்தை வாங்கிக்கிட்டிருந்திருக்கலாம். வாடகை வீட்டில இருந்தாலும், நிலத்திலேருந்து கொஞ்சம் வருமானமாவது வந்துக்கிட்டிருக்கும்!" என்றாள் மங்கை.

ரண்டு வருடங்கள் முன்பு, மருதமுத்துவின் தந்தை தாய் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்த பிறகு, அவன் தம்பி சரவணன் பாகம் பிரித்துக் கொள்ள விரும்பினான். அவர்களுக்கு இருந்தது சிறிதளவு நிலமும், ஒரு வீடும்தான். இரண்டு சகோதரர்களில் ஒருவர் நிலத்தையும், ஒருவர் வீட்டையும் எடுத்துக் கொள்வது என்று முடிவாகியது.

சரவணன் தன் பங்குக்கு நிலத்தைக் கேட்டான். நிலத்தை விற்று, அந்தப் பணத்தில் வெளியூர் சென்று ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வதாகச் சொன்னான். நிலத்திலிருந்து வரும் வருமானம் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், மருதமுத்துவும் தன் பங்குக்கு வீட்டை வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டான்.

அவர்கள் தந்தை மாட்டுத் தரகராக இருந்து ஓரளவு நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தவர். தந்தை இறந்த பிறகு, மருதமுத்துவும் மாட்டுத் தரகுத் தொழில் செய்யத் தொடங்கினான். ஆனால் இதுவரை அந்தத் தொழில் அவனுக்குக் கை கொடுக்கவில்லை. தெடர்ந்து முயற்சி செய்து வந்தால் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மருதமுத்து மனம் தளராமல் தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தான். ஆனால் மங்கை அவன் தொழிலைப் பற்றி அலுத்துக் கொள்ளாத நாளே இல்லை.

தன் பங்கு நிலத்தை விற்று விட்டுப் பணத்துடன் ஊரை விட்டுச் சென்ற சரவணனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. அவன் திருச்சியில் ஏதோ தொழில் செய்து கொண்டு இருப்பதாகச் செய்தி வந்தது. ஆனால் வேறு விவரம் எதுவும் தெரியவில்லை.

"மருதமுத்து அண்ணே!"

அழைப்புக் குரல் கேட்டு மருதமுத்து வெளியே வந்தான்.

"வாப்பா பொன்னா! எங்கே இவ்வளவு தூரம்? ரெண்டு மூணு வருஷமா எங்கேயோ வெளியூர் போயிட்டு இப்பத்தான் ஊருக்குத் திரும்பி வந்திருக்கே போலிருக்கு! உள்ள வந்து உக்காரு!" என்றான் மருதமுத்து.

உள்ளே வந்த பொன்னன், தன் கையிலிருந்த பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்து அதை மருதமுத்துவிடம் கொடுத்தான்.

"என்னப்பா இது?" என்றான் மருதமுத்து.

"மூணு வருஷம் முன்னால சரவணன்கிட்ட பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தேன். ரெண்டு வட்டின்னு பேச்சு. ஒரு வருஷம் ஒழுங்கா வட்டி கொடுத்துக்கிட்டிருந்தேன். அப்புறம் ஒரு பிரச்னையில ஊரை விட்டே போயிட்டேன். ரெண்டு வாரம் முன்னாலதான் வந்தேன்னு உங்களுக்கே தெரியும். நான் ஊர்ல இல்லாதபோது, சரவணனும் ஊரை விட்டுப் போயிட்டான்னு கேள்விப்பட்டேன். இந்தக் கடன் திரும்பி வராதுன்னு நெனச்சிக்கிட்டிருப்பான்! ரெண்டு வருஷம் வட்டியோடு சேர்த்து 14800 ரூபா வருது. இதில பதினஞ்சாயிரம் ரூபா இருக்கு. வட்டிக்கு வட்டின்னு போட்டா இன்னும் அதிகம் வரும். ஆனா நீங்க அப்படிக் கேக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்" என்றான் பொன்னன்.

"ஏம்ப்பா, சரவணன்கிட்ட வாங்கின பணத்தை எங்கிட்ட ஏன் கொடுக்கறே? அவன் எங்கே இருக்கான்னே எனக்குத் தெரியாதே!" என்றான் மருதமுத்து.

"எனக்கும் அது தெரியாததாலதான் உங்ககிட்ட பணத்தைக் கொடுக்கறேன். நீங்க அவனைப் பாக்கறப்ப அவன்கிட்ட கொடுத்துடுங்க. எனக்கு இந்த ஊர்ல கொஞ்சம் பிரச்னை இருந்ததாலதான் வெளியூர் போனேன். நான் போன இடத்தில எனக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைச்சு, ஓரளவுக்கு பணம் சம்பாதிச்சுட்டேன். ஊர்ல சில பேர்கிட்ட கடன் வாங்கி இருந்தேன். அதைத் திருப்பிக் கொடுத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நான் இனிமே இந்த ஊர்ப்பக்கம் வர மாட்டேன். நான் எங்கே போறேன்னு யார்கிட்டயும் சொல்லப் போறதில்ல. ஆனா வாங்கின கடனையெல்லாம் அடைச்சுட்டுத்தான் போறேன்."

"சரிப்பா. ஆனா இந்தப் பணத்தை நான் வாங்கக் கூடாது."

"இல்லீங்க. சரவணன் இல்லாதபோது, நீங்கதான் வாங்கிக்கணும். நான் வரேன்" என்று சொல்லி விட்டு வெளியேறினான் பொன்னன்.

"என்ன பண்ணப் போறீங்க?" என்றாள் மங்கை.

"அதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றான் மருதமுத்து.

"இதில யோசிக்க என்ன இருக்கு? உங்க தம்பி எங்க இருக்கார்னே தெரியாது. அவர் இனிமே வரவும் மாட்டாரு. அவரு நல்லா சம்பாதிச்சுக்கிட்டு இருக்கார்னுதானே சொல்றாங்க? இந்தப் பணத்தை நாமே வச்சுக்க வேண்டியதுதான். அப்படி ஒருவேளை உங்க தம்பி திரும்பி வந்து கேட்டா, அப்ப பாத்துக்கலாம். இது பாகம் பிரிக்கறதுக்கு முன்னால அவர் கடன் கொடுத்த பணம். பாகம் பிரிக்கறதுக்கு முன்னால, அவர் பணம்னு தனியா ஏது? எல்லாப் பணமும் பொதுப்பணம்தானே! நாம கஷ்டப்படற காலத்தில இது நமக்கு உதவட்டுமே!"

"இல்லை மங்கை. இது சரவணனோட பணம். நாம பட்டினி கிடந்தாலும் இதை நாம எடுத்துக்கக் கூடாது. நம்ப ஊர்க்காரர் ஒருத்தர் திருச்சியில இருக்காரு. அவர்கிட்ட சொல்லி சரவணனைப் பத்தி விசாரிக்கச் சொல்றேன். அவன் விலாசம் தெரிஞ்சதும், அவனுக்குக் கடிதாசி போட்டு பணத்தை வாங்கிக்கிட்டுப் போகச் சொல்லணும். அதுவரையிலும் இது பத்திரமா இருக்கட்டும். இந்தா! இதை பீரோவுக்குள்ள வை!" என்று பணத்தை மனைவியிடம் கொடுத்தான் மருதமுத்து.

குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 
புன்மையில் காட்சி யவர்.

பொருள்:  
ஐம்புலன்களையும் வென்று குற்றமற்ற சிந்தனையுடன் இருப்பவர் வறுமை நிலையிலும் பிறர் பொருள் மீது ஆசைப்பட மாட்டார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


175. ஆராய்ச்சிக் கட்டுரை

"கைலாசம் உனக்கு கைடாகக் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!"

கைலாசத்தை வழிகாட்டியாகக் கொண்டு ராகவன் பி.எச்.டிக்குப் பதிவு செய்து கொண்டபோது பலரும் அவனிடம் சொன்னது இது.

கைலாசம் ஒரு புகழ் பெற்ற பேராசிரியர். அவருடைய அறிவு, விஷய ஞானம், புதிய சிந்தனைகள் போன்றவை அடிக்கடி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பேசப்பட்டு வந்த விஷயங்கள்.

அவர் ஒரு செமினாரிலோ, கல்வி அரங்கிலோ பேசினால், அரங்கு நிரம்பி வழியும். அவர் பேசுகிற விஷயம் பற்றி அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட அவர் பேச்சைக் கேட்க வருவார்கள். அவர் பேச்சு அவ்வளவு எளிமையாகவும், பொருள் பொதிந்ததாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.

பல்கலைக் கழகங்களில் மட்டும் அவர் நூற்றுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார் என்று சொல்வார்கள். இவை தவிர, பல்வேறு பத்திரிகைகள், ஆராய்ச்சி அரங்குகள் ஆகியவற்றில் அவர் பகிர்ந்து கொண்ட ஆராய்ச்சிகள் பல.

ராகவன் அவ்வப்போது கைலாசத்தைச் சந்தித்துத் தனது ஆராய்ச்சியில் தான் அடைந்த முன்னேற்றங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டான். அவர் அவனைப் பாராட்டியும், ஊக்குவித்தும், யோசனைகள் சொல்லியும் அவனுடைய முயற்சிக்குத் துணை புரிந்தார்.

ராகவனின் பி.எச்.டி படிப்பு முடியும் சமயம் வந்து விட்டது. அவன் தனது ஆராய்ச்சியை முடித்து விட்டான். அவனுடைய ஆராய்ச்சிக் கட்டுரையைக் கைலாசம் படித்து ஒப்புதல் அளித்து விட்டால், அவன் அதற்கு இறுதி வடிவம் கொடுத்துப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து விடுவான்.

ராகவனின் ஆராய்ச்சிக் கட்டுரையை வாங்கிக் கொண்ட கைலாசம், அதைப் படித்துப் பார்ப்பதாகச் சொல்லி, அவனை ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார்.

ஒரு வாரம் கழித்து ராகவன் கைலாசத்தைப் பார்க்கச் சென்றான்.

ராகவன் தன் அறைக்குள் நுழைந்ததுமே, தன் கையை நீட்டி அவனுடன் கை குலுக்கிய கைலாசம், "கங்கிராசுலேஷன்ஸ் ராகவன். எக்ஸலண்ட் ஜாப். பேப்பர் ரொம்ப நல்லா வந்திருக்கு!" என்றார்.

"ரொம்ப நன்றி சார்!" என்றான் ராகவன், பெருமிதத்துடன்.

"உட்காரு. ஐ ஹேவ் எ ஸஜஷன் ஃபார் யூ!"

"சொல்லுங்க சார்!"

"உன்னோட பேப்பர் ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கு. இன் ஃபேக்ட், இதை ரெண்டு பேப்பராப் பிரிக்கலாம்."

"ஆமாம் சார். இந்த ஆராய்ச்சியை ஒரு ஸ்டேஜில நிறுத்தியிருக்கலாம். ஆனா நான் கொஞ்சம் அதிக ஆர்வம் எடுத்துக்கிட்டு, அதை அடுத்த ஸ்டேஜுக்கு எடுத்துக்கிட்டுப் போனேன். நீங்க சொல்ற மாதிரி, நான் இதை ரெண்டு பேப்பராப் பண்ணி, ரெண்டு பி எச் டி கூட வாங்கி இருக்கலாம்!" என்றான் ராகவன் சிரித்துக் கொண்டே.

"நான் சொல்ல வந்தது அதுதான். இதோட முதல் பகுதியை மட்டும் இப்ப சப்மிட் பண்ணு. ரெண்டாவது பகுதியை ஆறு மாசம் கழிச்சு சப்மிட் பண்ணி இன்னொரு பி எச் டி வாங்கிக்க!" என்றார் கைலாசம்.

"அப்படிப் பண்ண முடியுமா சார்?"

"பண்ணலாம். நான் பாத்துக்கறேன் அதை."

"ரொம்ப நன்றி சார்!" என்றான் ராகவன்.

அடுத்த மாதம் வந்த பல்கலைக்கழக கெஜட்டில் புதிய ஆராய்ச்சி பேப்பர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ராகவனின் ஆராய்ச்சிக் கட்டுரை பற்றிய விவரங்கள் இருந்தன. அத்துடன் அவன் கட்டுரையின் இரண்டாம் பகுதியின் விவரங்களும் வெளியிடப்பட்டு, அது கைலாசத்தின் புதிய ஆராய்ச்சி பேப்பர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது!

குறள் 175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
வெஃகி வெறிய செயின்.

பொருள்:  
மற்றவரின் பொருளைக் கவர விரும்பி ஒருவர் தவறான செயல்களில் ஈடுபடுவாரானால், அவருக்குப் பரந்த அறிவு இருந்து என்ன பயன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



176. கேள்வி பிறந்தது அன்று, 
பதில் கிடைத்தது இன்று!

கோவிலில் பூஜைக்காக அனைவரும் கூடியிருந்தனர். ஆனால் குருக்கள் பூஜையை ஆரம்பிக்கவில்லை.

"குருக்கள் ஐயா! நாங்க வெளியூரிலிருந்து வந்திருக்கோம். சீக்கிரம் பூஜையை ஆரம்பிச்சீங்கன்னா, நாங்க ஊருக்குப் போறதுக்கு வசதியா இருக்கும்" என்றார் ஒரு பக்தர்.

"கொஞ்சம் இருங்க. சக்திவேல் ஐயா வந்துடட்டும்" என்றார் குருக்கள்.

அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, சக்திவேல் வந்து விட்டான்.

"குருக்கள் ஐயா! என்ன இது? எனக்காக ஏன் மத்தவங்களைக் காக்க வைக்கிறீங்க? பூஜையை ஆரம்பிங்க!" என்றான் சக்திவேல்.

பூஜை முடிந்ததும், சக்திவேல் அனைவரையும் பார்த்துக் கைகூப்பி, "கோவில் மண்டபத்தில அன்னதானம் ஏற்பாடு பண்ணியிருக்கேன். அன்னதானம்னு சொல்லக் கூடாது. அதிதிகளை உபசரிக்கிறதுன்னு சொல்லுவாங்க. எனக்குப் படிப்பறிவு அதிகம் கிடையாது. அதனால யோசிக்காம அன்னதானம்னு சொல்லிட்டேன். எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டுப் போகணும். இது என்னோட வேண்டுகோள்" என்றான்.

சந்நிதியில் நின்றிருந்தவர்கள் அன்னதானம் நடக்கும் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

"யார் இந்த சக்திவேல்?" என்றார் ஒரு வெளியூர்க்காரர், தன் பக்கத்தில் நடந்து வந்தவரிடம்.

"இந்த ஊர்ல ஒரு பெரிய மனுஷன். எல்லாப் பெரிய மனுஷங்களும் பெரிய மனுஷங்களாவா நடந்துக்கறாங்க? ஆனா, இவரு அப்படியில்ல. நிலம், நீச்சு, பணம், காசுன்னு நிறைய இருந்தாலும், ரொம்ப அடக்கமானவரு. தர்மசிந்தனை உள்ளவரு. கோவிலுக்கு நிறையச் செய்வாரு. தன்கிட்ட உதவி கேட்டு வரவங்க யாராயிருந்தாலும், தன்னால முடிஞ்ச உதவியைச் செய்வாரு" என்றார் உள்ளூர்க்காரரான அவர்.

"பரவாயில்லையே! இப்படியெல்லாம் கூட மனுஷங்க இருக்காங்களே!" என்றார் வெளியூர்க்காரர்.

க்திவேல் வீட்டுக்குச் சென்றதும், அவன் மனைவி வடிவு "உங்க அண்ணிகிட்டேருந்து கடிதம் வந்திருக்கு" என்றாள்.

"என்ன எழுதியிருக்காங்க?" என்றான் சக்திவேல்.

"நீங்க அனுப்பற பணம் அவங்களுக்குப் பத்தலியாம். இன்னும் கொஞ்சம் அனுப்ப முடியுமான்னு கேட்டுருக்காங்க."

"பாக்கலாம்!"

"ஏங்க, எல்லாருக்கும் உதவி பண்றீங்க. உங்க அண்ணிக்குக் கொஞ்சம் அதிகமா பணம் அனுப்பலாமே!" என்றாள் வடிவு.

"அண்ணன் சின்ன வயசிலேயே வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டாரு. அவருக்கு நிலத்தைப் பத்தி எதுவும் தெரியாது. நான் கொடுத்ததை வாங்கிக்கிட்டிருந்தாரு. இப்ப அண்ணன் போனப்பறம், அண்ணிக்கு அதிகமா பணம் அனுப்பினா, இத்தனை வருஷமா அண்ணனை ஏமாத்தினேன்னு அவங்க நினைக்க மாட்டாங்களா? என்னோட கணக்கு வேற! எப்படியும் கொஞ்ச நாள்ள, அண்ணி 'நிலத்தை வித்துப் பணத்தைக் கொடுத்துடுங்க, அதை நான் பாங்க்கில போட்டு, எப்படியோ குடித்தனம் நடத்திக்கறேன்'னு சொல்லிடுவாங்கன்னு எதிர்பாக்கறேன். அந்த சமயத்தில, அவங்க நிலத்தை நாமே குறைஞ்ச விலைக்கு வாங்கிக்க வேண்டியதுதான்!" என்றான் சக்திவேல்.

"நீங்க இவ்வளவு தர்ம காரியம் பண்றீங்க. ஆனா கடவுள் ஏன் நமக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கலைன்னு எத்தனையோ நாள் யோசிச்சிருக்கேன். இப்பதான் அதுக்கான காரணம் எனக்குப் புரியுது!" என்றாள் வடிவு.

குறள் 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் 
பொல்லாத சூழக் கெடும்.

பொருள்:  
அருளை வேண்டி அறவழியில் நடப்பவன் பிறர் பொருளை விரும்பித் தகாத செயல்களில் ஈடுபட்டால், அவன் கெடுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...

ராம்குமாருக்கு நினைவு வந்தபோது, அவன் மருத்துவமனையில் படுத்திருப்பது தெரிந்தது. உடலில் ஒரு கனமான   உணர்வு, அத்துடன் ஒரு ஆழமான வலி.

சற்று நேரம் கழித்து மருத்துவர் வந்து உடலைப் பரிசோதனை செய்து விட்டு, "எப்படி இருக்கீங்க?" என்றார்.

'நான் எப்படி இருக்கிறேன் என்பதை நீங்கள்தானே சொல்ல வேண்டும்!' என்று நினைத்துக் கொண்ட ராம்குமார், "என்ன ஆச்சு எனக்கு?" என்றான்.

"திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க. நௌ யூ ஆர் ஆல்ரைட். நான் மறுபடியும் வந்து பாக்கறேன்" என்று சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.

பிறகு அவன் மனைவி கிரிஜாவும், வேறு சில உறவினர்களும், நண்பர்களும் வந்து பார்த்தார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில், அவன் மனைவியும் மற்றவர்களும் சொன்னதிலிருந்தும், சொல்லாமல் விட்டதிலிருந்தும், தன்னுடைய உடல் உணர்வுகளிலிருந்தும் அவன் புரிந்து கொண்டது இது.

மூன்று நாட்களுக்கு முன்பு அவன் திடீரென்று மயங்கி விழுந்து விட்டான். அவனுக்கு வந்திருப்பது ஸ்ட்ரோக். உடலின் வலது பக்கம் முழுவதும் உணர்வு மரத்து விட்டது. இடது பக்கம் முழுவதும் வலி.

"இன்னிக்கு என்ன தேதி?" என்றான் ராம்குமார்.

"ஏப்ரல் இருபது" என்றாள் கிரிஜா.

"மை காட்! 22ஆம் தேதிதானே நாம் ஸ்விட்ஸர்லாந்துக்குக் கிளம்பறதா இருந்தோம்!" என்றான் ராம்குமார்.

கிரிஜாவிடமிருந்து ஒரு விசும்பல் கேட்டது. அதற்குக் காரணம் தன்னுடைய உடல்நிலையா, அல்லது ஸ்விட்ஸர்லாந்துப் பயணம் தடைபட்டு விட்டதே என்ற வருத்தமா என்று அவனுக்குப் புரியவில்லை!

ராம்குமார் பொறியியல் படிப்பை முடித்த நேரத்தில், அவனுக்கு ஒரு லட்சியம் இருந்தது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பதுதான் அது.

அவனுடைய அன்றையப் பொருளாதார நிலைக்கு ஏற்ப, குறைந்த முதலீட்டில் ஒரு சிறிய என்ஜினியரிங் தொழிற்சாலையைத் தொடங்கினான் ராம்குமார். கடினமாக உழைத்து, வாடிக்கையாளர்களைப் பிடித்து, சில ஆண்டுகளிலேயே தன் நிறுவனத்தைப் பெருமளவுக்கு உயர்த்தி விட்டான்.

அப்போது ஒரு தொழில் ஆலோசகரின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது. தன் நிறுவனத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ச்சி அடையச் செய்ய முடியுமா என்பது குறித்து அவரிடம் ஆலோசனை கேட்டான் அவன்.

"ஏன் முடியாது? ஒண்ணுமில்லாதவங்கள்ளாம் வெறும் பேப்பர்களைக் காமிச்சு கம்பெனிகளை புரோமோட் பண்றாங்க. உங்ககிட்ட சாலிடா ஒரு தொழில் இருக்கு. கட்டிடம், இயந்திரங்கள் எல்லாம் இருக்கு. பத்து வருஷத்திலே உங்க தொழில் வேகமா வளர்ந்திருக்கு. விற்பனை, லாபம் எல்லாமே பல மடங்காயிருக்கு. உங்க கம்பெனியை விரிவாக்க ஒரு திட்டம் தயார் பண்ணுங்க. பப்ளிக் இஷ்யூல பங்குகளைப் பொது மக்களுக்கு விற்று, உங்க கம்பெனியை ஒரு கார்ப்பரேட் நிறுவனமா மாத்திடலாம்" என்றார் அவர்.

ராம்குமார் உற்சாகத்துடன்,"அப்படியா சொல்றீங்க? எங்கிட்ட பிளான் எல்லாம் இருக்கு. இதுக்கு எவ்வளவு டைம் ஆகும்?" என்றான்.

"ரெண்டு வருஷம்!"

"அவ்வளவு டைம் ஆகுமா?"

"பப்ளிக் இஷ்யூவுக்கு உடனே ஏற்பாடு பண்ணிடலாம். ரெண்டு வருஷம்னு நான் சொன்னது சில அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் எல்லாம் பண்றதுக்கு!"

"என்ன அட்ஜஸ்ட்மெண்ட்ஸ்?"

"நீங்க பத்து லட்ச ரூபாய் முதலீடு செஞ்சிருக்கீங்க. இப்ப உங்க நிறுவனத்தோட மதிப்பு ஒரு கோடி ரூபா இல்லியா?"

"ஆமாம்."

"முதல்ல, இந்த மதிப்பை மூணு கோடி ரூபாய்னு ஆக்கணும்."

"ரெண்டு வருஷத்தில அப்படிச் செய்ய முடியாதே!"

"நான் சொல்றது புக் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ்! ரெண்டு வருஷத்திலே நீங்க புதுசா கட்டிடங்கள், இயந்திரங்கள் இதிலெல்லாம் முதலீடு பண்ணின மாதிரி காட்டி, உங்க நிறுவனத்தோட மதிப்பை அதிகரிக்கணும்."

"அது எப்படி முடியும்? முதலீடு பண்ணப் பணம் எப்படி வந்ததுன்னு காட்ட வேண்டாமா?"

"அதைப் பத்தியெல்லாம் நீங்க ஏன் கவலைப்படறீங்க? அதுக்கெல்லாம் நிறைய வழி இருக்கு! இப்ப உங்களுக்குக் கடன் எதுவும் இல்லை. அதனால, கொஞ்சம் கடன் வாங்கின மாதிரியும், கொஞ்சம் முதலீடு உங்ககிட்டேருந்து வந்த மாதிரியும் காமிக்கலாம். 

"தேவைப்பட்டா, உங்க சொத்துக்கள் மேல பாங்க்கிலே கடன் வாங்கிட்டு, அதைத் தொழில்ல முதலீடு செஞ்ச மாதிரியும் காட்டிக்கலாம். அப்புறம், அடுத்த ரெண்டு வருஷம் உங்க லாபத்தை அதிகரிச்சுக் காட்டி, அதை நீங்க முதலீடு பண்ணின மாதிரி காமிக்கலாம். 

"கம்பெனியில 'புதுசா சேர்ந்த' சொத்துக்கள் மேல டிப்ரீஸியேஷன் நிறைய வரும். அதனால அதிக வருமானம் காட்டினாலும், கூடுதல் வரி கட்ட வேண்டி இருக்காது. இதையெல்லாம் எப்படிப் பண்றதுங்கறதை நான் பாத்துக்கறேன். எனக்குக் கொடுக்கற கன்சல்டேஷன் ஃபீஸ் மட்டும்தான் உங்களுக்குக் கூடுதல் செலவு!" என்று சிரித்தார் ஆலோசகர்.

ஆலோசகர் சொன்னபடியே, இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தின் சொத்து மதிப்பை 3 கோடியாக 'உயர்த்திய' பிறகு, பங்கு விநியோகத்துக்குப் போனார்கள். 

ராம்குமாரின் விரிவாக்கத் திட்ட மதிப்பை 20 கோடியிலிருந்து 25 கோடி என்று உயர்த்தினார் ஆலோசகர். உயர்த்திக் காட்டப்படும் ஐந்து கோடியில் மற்றவர்களுக்கு கமிஷன் எல்லாம் கொடுத்தது போக 4 கோடி ரூபாய் ராம்குமாருக்குப் பல்வேறு வடிவங்களில் வந்து சேரும் என்று உறுதி கூறினார்.

"இதெல்லாம் தப்பு இல்லையா? ஷேர் வாங்கறவங்களை ஏமாத்தறது இல்லியா?" என்றான் ராம்குமார்.

"ஷேர்களில் முதலீடு பண்றவங்கள்லாம் பெரிய லாபம் சம்பாதிக்கணும்கற நோக்கத்திலதான் முதலீடு பண்றாங்க. ஷேர்கள்ள முதலீடு செய்யும்போது லாபமும் வரலாம், நஷ்டமும் வரலாம்னு தெரிஞ்சுதானே முதலீடு பண்றாங்க? அதனால இப்படியெல்லாம் பண்றதுல ஒண்ணும் தப்பு இல்ல. சொல்லப் போனா, முதலீடு பண்றவங்கள்ள ரொம்பப் பேருக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியும். தெரிஞ்சுதான், எப்படியும் தங்களுக்கு லாபம் வரும்னு எதிர்பார்த்து முதலீடு பண்றங்க!" என்றார் ஆலோசகர்.

ராம்குமாருக்கு மனம் சமாதானமாகவில்லை. ஏற்கெனவே சொத்து மதிப்பை இரண்டு கோடி ரூபாய் அதிகமாகக் காட்டியாகி விட்டது. மறுபடியும் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை உயர்த்துகிறோமே என்ற உறுத்தல் இருந்தது. ஆயினும் முயற்சியில் இறங்கிய பின், இது போன்ற தயக்கங்கள் கூடாது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

பப்ளிக் இஷ்யூ பெரும் வெற்றி அடைந்து, பங்குகள் விநியோகிக்கப்பட்டு, ராம்குமாரின் நிறுவனம் லட்சக்கணக்கான பங்குதாரர்களைக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனமாகியது.

நிறுவனம் பெரிதாகி விட்டதால், ஆலோசகரின் யோசனைப்படி, நிறுவனத்தை நிர்வகிக்க நிர்வாக இயக்குனர் ஒருவரை நியமித்து விட்டு, தலைவர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டு அன்றாடப் பணிகளிலிருந்து ஒய்வு பெற்று விட்டான் ராம்குமார்.

முதல் முறையாக, பணம், நேரம் இரண்டையுமே எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்ற வசதி ராம்குமாருக்கு ஏற்பட்டது. மனைவி, மகன், மகள் அனைவருடனும் ஒரு மாதம் ஸ்விட்ஸர்லாந்து சென்று வரத் திட்டமிட்டு, பயணம் போக வேண்டிய சில நாட்களுக்கு முன்தான் அவனுக்கு இந்த ஸ்ட்ரோக் வந்து விட்டது.

றைக்கு வெளியே, அவன் மனைவி கிரிஜா டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தது ராம்குமாரின் காதில் விழுந்தது.

"எப்ப டாக்டர் அவருக்கு முழுசா குணமாகும்?"

"சொல்ல முடியாது மேடம். அவரோட உடம்பில ஒரு பக்கம் செயலிழந்து போயிருக்கு. அது சரியாக எவ்வளவு நாள் ஆகும்னு சொல்ல முடியாது. மாசக்கணக்கில ஆகலாம். வருஷக்கணக்கிலயும் ஆகலாம். அதை விட சீரியஸான விஷயம் அவர் உடம்பில இன்னொரு பக்கத்தில இருக்கற வலி. அந்த வலியோடதான் அவர் வாழ்ந்தாகணும். அவரோட வலி கொஞ்சம் குறைஞ்சாலே நீங்க சந்தோஷப்படணும்" என்றார் டாக்டர்.

 ராம்குமாருக்குத் தன் உடல் வலி பன்மடங்காக அதிகரித்து விட்டது போல் இருந்தது.

குறள் 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
மாண்டற் கரிதாம் பயன்.

பொருள்:  
பிறர் பொருளை அபகரிப்பதனால் கிடைக்கும் செல்வம் தனக்கு வேண்டாம் என்று கருத வேண்டும். அப்படிப் பெற்ற செல்வத்தின் பயனை அனுபவிக்கும் நேரத்தில், அது நன்மை பயப்பதாக இருக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


178. அடகுக்கடை

வஜ்ரவேலு தன் இருக்கையிலிருந்து தலையைத் திருப்பி, பின்புறம் இருந்த கண்ணாடி அலமாரியைப் பார்த்தான்.  

"அலமாரி நிரம்பி இருக்கே! புதுசா எதுவும் வைக்க முடியாது போலருக்கே!" என்றான்.

"எப்படிங்க இடம் இருக்கும்? ஒண்ணு, அடகு வச்சவங்க கடனை அடைச்சுட்டுப் பொருட்களை மீட்டுக்கிட்டுப் போகணும், இல்லை, நாமாவது மீட்டுக்கிட்டுப் போகாத பொருட்களை ஏலம் போடணும். இங்கதான் ரெண்டுமே நடக்கறதில்லியே!" என்றான் கணக்காளன் குமரவேல்.

வஜ்ரவேலு சிரித்தான். "யாரும் கடனை அடைக்காமலா பத்து வருஷமா கடையை நடத்திக்கிட்டிருக்கோம்? எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து, என் குடும்பச் செலவுக்கும் காணற அளவுக்கு வருமானம் வந்துக்கிட்டுத்தானே இருக்கு?"

"என்னங்க நீங்க, ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறீங்க? இந்த அடகுத் தொழிலை நடத்தறவங்க யாருமே உங்களை மாதிரி அடகு வச்ச பொருட்களை ஏலம் போடாம வச்சுக்கிட்டிருக்க மாட்டாங்க!" என்றான் குமரவேல்.

அப்போது ஒரு வாடிக்கையாளர் வரவே, அவரிடம் கவனத்தைச் செலுத்தினான் குமரவேல். பேரேட்டை எடுத்துப் பார்த்து விட்டு, கால்குலேட்டரில் ஏதோ கணக்குப் போட்டு விட்டு, அவர் செலுத்த வேண்டிய தொகையை அவரிடம் சொன்னான். அவர் பணத்தைக் கொடுத்ததும், அதை எண்ணிப் பெட்டியில் வைத்து விட்டு, அலமாரியில் இருந்த ஒரு வெள்ளிக் குத்துவிளக்கை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான்.

அவர் வஜ்ரவேலுவைப் பார்த்துக் கைகூப்பி விட்டுச் சென்றார்.  

"புரோநோட்டு காலாவதி ஆகி ஆறு மாசம் ஆச்சு. புதுசா புரோநோட்டு எழுதி வாங்கறதுக்காக, நம்ம ஆறுமுகம் ஆறு மாசமா அவரு பின்னால அலைஞ்சுக்கிட்டிருக்காரு. ஆளையே பிடிக்க முடியல. இப்ப வந்து பணத்தைக் கட்டிட்டு, அடகு வச்ச வெள்ளிக் குத்து விளக்கை வாங்கிக்கிட்டுப் போறாரு. நாம பொருளை ஏலம் போட்டுடுவோமோங்கற பயம் கொஞ்சம் கூட இல்லாம இருந்திருக்காரு!" என்றான் குமரவேல்.

வஜ்ரவேலு சிரித்தான்.

"நீங்க எப்படி இவ்வளவு நம்பிக்கையா இருக்கீங்கன்னு எனக்குப் புரியலீங்க!" என்றான் குமரவேல்.

"புரியறதுக்கு என்ன இருக்கு? நாம வட்டிக்குக் கடன் கொடுக்கற தொழிலை நடத்திக்கிட்டிருக்கோம். நம்மகிட்ட கடன் வாங்கிட்டுப் போறவங்க குறிப்பட்ட காலத்துக்குள்ள கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா, அவங்க அடகு வச்ச பொருளை நாம ஏலம் விட்டு, நமக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக்கலாம். அதுக்கு சட்டப்படி நமக்கு உரிமை இருக்கு. ஆனா நான் அப்படிச் செய்ய விரும்பல. நம்மகிட்ட அடகு வச்சிருந்தாலும், அது அவங்களோட பொருள்தான். அதை நாம எடுத்து வித்து, நம்ம கடனை வசூலிக்க எனக்கு இஷ்டமில்லை. எப்படியும் பொருளை அடகு வச்சவங்க அதை மீட்கணும்னுதானே நினைப்பாங்க? அதனால கொஞ்ச நாள் ஆனாலும், பணத்தைக் கட்டிப் பொருளை மீட்டுப்பாங்கன்னு நினைச்சு நாம பொருளை ஏலம் போடாம வச்சிருக்கோம்."

"சில பேரால கடனைத் திருப்பிக் கட்ட முடியாமயே போயிடுமே!"

"அது மாதிரி நடந்திருக்கு. நீங்க வேலைக்கு வந்தப்பறம் அப்படி நடக்காததால, உங்களுக்குத் தெரியல. ரொம்ப நாள் ஆச்சுன்னா, நானே அவங்களைக் கூப்பிட்டு, அவங்க அடகு வச்ச பொருளை அவங்க கிட்ட கொடுத்து, அதை வித்துப் பணத்தைக் கட்டச் சொல்லுவேன். அது மாதிரி சில சமயம் நடந்திருக்கு."

"அப்ப எதுக்கு அடகுப் பொருளை  வாங்கணும்? அடகுப்  பொருள் இல்லாமயே கடன்  கொடுக்கலாமே!"

"கடன் வாங்கறவங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கணுமே, அதுக்குத்தான் அடகுப் பொருள் வாங்கறது."

"அப்ப, ஏலம் போடறதில என்ன தப்பு?"

"சட்டப்படி தப்பு இல்லதான். மத்தவங்க பொருளை நாம ஏலம் போடறதை விட, அவங்களையே வித்துக் கொடுக்கச் சொல்றது நியாயமா இருக்கற மாதிரி எனக்குத் தோணுது."

"ஐயா! உங்களுக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி நான் இந்த ஊர்ல இருக்கற இன்னொரு அடகுக் கடையில வேலை செஞ்சேன். குறிப்பிட்ட காலத்துக்குள்ள கடனைக் கட்டலேன்னா, அவரு நோட்டீஸ் கொடுத்துட்டுப் பொருளை ஏலம் போட்டுடுவாரு. அவருக்கு நிறைய லாபம் வரதை நான் பாத்திருக்கேன். நாமும் லாபத்துக்காகத்தானே தொழில் நடத்தறோம்?"

"அந்தக் கடையை விட்டு ஏன் வந்தீங்க?"

"அதான் சேரும்போதே சொன்னேனே சார்! அங்கே சம்பளம் கொடுக்க ரொம்ப லேட் பண்ணினாங்க. மூணு மாச சம்பளம் பாக்கி. அதனாலதான் அந்த வேலையை விட்டுட்டேன்."

"ஏன் அவங்களால சம்பளம் சரியாக் கொடுக்க முடியல?"

"என்னவோ தெரியலீங்க. லாபம் நிறைய வந்தா கூட, அங்கே எப்பவுமே பணத் தட்டுப்பாடுதான். புதுசாக் கடன் கேக்கறவங்களுக்குக் கொடுக்கக் கூடப் பல சமயம் பணம் இருக்காது. அடகு வச்ச பொருளை ஏலம் போட்டதை எதிர்த்து சில பேரு கோர்ட்ல கேஸ் போட்டிருக்காங்க. அந்தக் கேஸ்களை வாதாட வக்கீல்களுக்கு வேற அப்பப்ப பணம் கொடுக்கணும்."

"அவங்க நிறைய லாபம் சம்பாதிக்கறதா சொல்றீங்க. ஆனா, அங்கே பணத் தட்டுப்பாடு இருக்கு. நான் அதிகம் லாபம் சம்பாதிக்காம இருக்கலாம். ஆனா, நான் போட்ட முதல் அழியாம அப்படியேதான் இருக்கு. எப்பவுமே கடன் கேட்டு வரவங்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லாம போனதில்லை. ஓரளவுக்கு வசதியா வாழற அளவுக்கு எனக்கு இந்தத் தொழில்லேருந்து வருமானம் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. மத்தவங்களுக்குக் கடன் கொடுத்து, அவங்ககிட்டேருந்து வர வட்டிதான் என் வருமானம். ஆனா, அவங்க அடகு வச்ச பொருளை என் பொருளா நினைக்காம, அவங்களோட பொருளாகவே நினைச்சுக்கிட்டுத்தான் இந்தத் தொழிலை நடத்திக்கிட்டு வரேன்."

அப்போது இன்னொரு வாடிக்கையாளர் அங்கே வந்தார். "ரெண்டு மாசம் முன்னால என் பெண்டாட்டியோட சங்கிலியை அடகு வச்சுப் பணம் வாங்கிக்கிட்டுப் போனேன்" என்றார்.

"பணத்தைக் கட்டி அதை மீட்கப் போறீங்களா?" என்றான் குமரவேல்.

"இல்லை" என்று சற்றுத் தயங்கியவர், வஜ்ரவேலுவைப் பார்த்து, "தப்பா நினைச்சுக்காதீங்க. நாளைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போகணும். என் பெண்டாட்டிக்குக் கழுத்துல போட்டுக்க வேற நகை இல்ல. அந்த சங்கிலியைக் கொடுத்தீங்கன்னா, நாளன்னைக்குத் திரும்பக் கொண்டு வந்து வச்சுடறேன்" என்றார்.

"ஏங்க, இது என்ன அடகுக்கடையா, பாங்க் லாக்கரா?" என்றான் குமரவேல்.

"சங்கிலியைக் கொடுத்தா, அதுக்கு பதிலா வேற பொருளை அடகு வைக்க முடியுமா?" என்றான் வஜ்ரவேலு.

"வேற எதுவும் இல்லியே! டிவி பொட்டியை வேணும்னா வச்சுட்டுப் போறேன்."

"பரவாயில்ல. உங்களை நம்பறேன். நகையை வாங்கிக்கிட்டுப் போங்க. சொன்னபடி நாளன்னைக்குத் திரும்பக் கொண்டு வந்து வச்சுடணும்" என்ற வஜ்ரவேலு, குமரவேலிடம் திரும்பி "கையெழுத்து வாங்கிக்கிட்டு அவரோட நகையைக் கொடுங்க!" என்றான்.

"சந்தேகமே இல்ல. பாங்க் லாக்கர்தான் இது!" என்று முணுமுணுத்தான் குமரவேல்.   
     
குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள்.

பொருள்:  
செல்வம் குறையாமல் இருப்பதற்கான வழி மற்றவர்களின் பொருளை விரும்பாமல் இருப்பதேயாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


179. தவற விட்ட பணம்!

"என்னய்யா இது, சுவாரசியமான நியூஸ் எதுவுமே இல்லியே! நாளைக்கு பேப்பர் டல்லடிக்கும் போல இருக்கே!" என்றான்  'செய்தி அலைகள்' பத்திரிகையின் ஆசிரியர் விஸ்வநாதன்

"சார்! நேத்திக்கு பஸ்ல ஒத்தர் ஒரு பையை விட்டுட்டுப் போயிட்டார். அதில ரெண்டு லட்ச ரூபா பணம் இருந்திருக்கு. அதை ஒரு பயணி கண்டெடுத்து போலீஸ்ல ஒப்படைச்சிருக்கார். இந்த நியூஸை ஃபாலோ பண்ணலாமே!" என்றான் நிருபர் ஆனந்தன்.

"இது மாதிரி அடிக்கடி நடக்குதே! நேர்மையான ஆட்டோ டிரைவர்னு நிறைய நியூஸ் போட்டாச்சே!" என்றான் விஸ்வநாதன், அலுப்புடன்.

"இல்லை சார். ஆட்டோ விஷயம் வேற. பணத்தைத் தொலைச்சவர் புகார் கொடுத்தா, ஆட்டோவை டிரேஸ் பண்ண வாய்ப்பிருக்கு. அதனால பணத்தை எடுத்துக்கிட்டா மாட்டிப்போம்ங்கற பயம் ஆட்டோ டிரைவர்களுக்குக் கொஞ்சமாவது இருக்கும். ஆனா, பஸ்ல போனவங்களை டிரேஸ் பண்ணவே முடியாது. அவர் பணத்தை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயிருக்கலாம். போலீசால அவரைக் கண்டு பிடிச்சிருக்கவே முடியாது. அதனால, பஸ் பயணி பணத்தைத் திருப்பிக் கொடுத்தது பெரிய விஷயம் இல்லையா? நான் போய் அவரை ஒரு பேட்டி எடுத்துட்டு வரேனே! மக்கள் இதையெல்லாம் ஆர்வமாப் படிப்பாங்க சார்!" என்றான் ஆனந்தன்.

"சரி. செய்யுங்க!" என்றான் விஸ்வநாதன், ஆர்வமில்லாமல்.

காவல் நிலையத்துக்குச் சென்று பணத்தைத் திருப்பிக் கொடுத்த பஸ் பயணியின் விலாசத்தைப் பெற்று, அவர் வீட்டுக்குச் சென்று அவரைப் பேட்டி கண்டு விவரங்களை ஆசிரியரிடம் காட்டினான் ஆனந்தன். 

அவர் பெயர் தண்டபாணி. ஒரு சிறிய தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து ஒய்வு பெற்றவர். ஒய்வு பெற்ற பின், ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வாட்ச்மேனாக இருக்கிறார். 

மகன் பி.ஏ படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறான். பள்ளிப்படிப்பு  மட்டுமே முடித்த மகள் ஒரு தொழிற்சாலையில் உதவித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். தண்டபாணியின் மனைவியும் வீட்டு வேலை செய்து சம்பாதிக்கிறாள். 

மூன்று பேர் சம்பாதித்தும் பற்றாக்குறைதான். பையனுக்கு வேலை கிடைத்தால் கொஞ்சம் விடிவு பிறக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் தண்டபாணி.   

அன்று தண்டபாணி இரவுப் பணிக்காக பஸ்ஸில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார். அவர் இறங்க வேண்டிய இடம் கடைசி நிறுத்தம் என்பதால் பஸ்ஸில் போகும்போது தூங்கிக் கொண்டே போயிருக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்திருந்தது யார் என்று கூட கவனிக்கவில்லை. 

கடைசி நிறுத்தம் வந்ததும் விழித்துக்கொண்டு இறங்க முற்பட்டபோது, பக்கத்தில் ஒரு சிறிய தோல் பை இருந்ததை கவனித்து, அதைத் திறந்து பார்த்திருக்கிறார். உள்ளே நோட்டுக்கற்றைகள்!

கண்டக்டர் டிரைவர் எல்லோரும் இறங்கிப் போய் விட்டதால், பையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்தில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, அப்புறம் வேலைக்குப் போயிருக்கிறார். அதனால் வேலைக்குப் போவதில் தாமதம் ஏற்பட்டு, திட்டு வாங்கியிருக்கிறார்.

விஸ்வநாதன் இந்த விவரங்களைப் படித்து விட்டு "உப்புச் சப்பில்லாத நியூஸ்" என்று சொல்லி விட்டு அரைமனத்தோடுதான் அதை வெளியிட்டான். 

செய்தி வெளியான இரண்டு நாட்களில் பல வாசகர்களிடமிருந்து தண்டபாணியைப் பாராட்டிப் பல கடிதங்கள் வந்தன. பலர் தண்டபாணிக்கு உதவும் வகையில் பணம் வேறு அனுப்பியிருந்தார்கள். 

'தின அலைகளி'ல் செய்தி வந்ததைத் தொடர்ந்து, மற்ற பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தண்டபாணியைப் பேட்டி கண்டு வெளியிட்டன.

ஒரு சில நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி சேர்ந்திருந்தது.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையுடன் ஆனந்தன் தண்டபாணியைப் பார்க்கச் சென்றான். 

'தின அலைகளு'க்கும், மற்ற ஊடகங்களுக்கும், தனக்கு உதவ முன்வந்தவர்களுக்கும், தன்னைப் பாராட்டியவர்களுக்கும் நன்றி தெரிவித்த தண்டபாணி, நிதி உதவி எதையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

"என்னங்க இது? அந்தப் பணத்தை நான் எடுத்துக்கிட்டிருந்தா அது திருட்டு. திருடாம இருந்ததுக்காக இந்தப் பணத்தை நான் வாங்கிக்கணுமா?" என்றார் தண்டபாணி.

தண்டபாணி நிதி உதவி பெற மறுத்ததை 'தின அலைகள்' முதல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் தண்டபாணிக்கு மேலும் பாராட்டுகள் குவிந்தன.

ஒரு வாரம் கழித்து ஒரு தொழில் அதிபர் தண்டபாணியின் மகனுக்குத் தன் நிறுவனத்தில் வேலை கொடுக்க முன் வந்தார். 

தண்டபாணி அவருக்கும், 'தின அலைகள்' பத்திரிகைக்கும் நன்றி தெரிவித்து விட்டு, அந்த உதவியை ஏற்றுக்கொண்டார்.


குறள் 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
திறன்அறிந் தாங்கே திரு

பொருள்:  
அறம் எது என்பதை அறிந்து பிறர் பொருளை நாடாமல் இருக்கும் அறிவுடையவர்களின் தகுதியை அறிந்து திருமகள் அவர்களிடம் சேர்வாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


180. மாறியது கணக்கு!

"நாம இவ்வளவு வருஷமா மார்க்கெட்ல இருக்கோம். அஞ்சு வருஷம் முன்னால தொழில் ஆரம்பிச்சவங்க இவ்வளவு வேகமா வளர்ந்துட்டாங்களே!" என்றான் ஆனந்த் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் மதன்.

"லட்சுமி என்டர்ப்ரைசஸைத்தானே சொல்றீங்க? அவங்க ஏதோ சின்ன லெவல்ல பண்ணிக்கிட்டிருக்காங்க. நமக்கு அவங்க போட்டியே இல்லியே!" என்றான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர்.

"இல்ல சுந்தர். அவங்களைப் பத்தி மார்க்கெட்ல பேச ஆரம்பிச்சுட்டாங்க. இது நல்லது இல்ல. அவங்களை ஒழிச்சுடணும்."

"என்ன சார் பண்ணலாம்?"

"அவங்களைப் பத்தின விவரங்களை சேகரிப்போம். மெயின் ரோட்ல அவங்க தொழிற்சாலை இருக்கறதே எனக்குக் கண்ணை உறுத்துது. அது வாடகை இடம்தான்னு நினைக்கிறேன். அவங்களை அங்கிருந்து முதல்ல வெளியேற்றணும்."

ரண்டு நாட்கள் கழித்து, சுந்தர் நல்ல செய்தியுடன் மதனைச் சந்தித்தான்.

"லட்சுமி என்டர்ப்ரைசஸோட ஃபாக்டரியை அஞ்சு வருஷம் லீஸ்ல எடுத்திருக்காங்க. லீஸ் இன்னும் ரெண்டு மாசத்துல முடியப் போகுது. ரெனியூ பண்றத்துக்கான ஏற்பாடுகளைப் பண்ணிக்கிட்டிருக்காங்க."

"அந்த லீஸ் ரெனியூ ஆகக் கூடாது. அந்த இடத்து சொந்தக்காரர் கிட்ட பேசுங்க. தேவைப்பட்டா அந்த இடத்தை நாம வாங்கிடலாம்."

"சார்! நம்பகிட்ட ஏற்கெனவே இருக்கிற இடத்தையே நாம முழுசாப் பயன்படுத்தலியே!"

"பரவாயில்ல. வேற யாருக்காவது வாடகைக்கு விடலாம். இல்ல, சும்மா பூட்டி வச்சிருந்தாலும் பரவாயில்ல. இன்னும் ஆறு மாசத்துல அவங்களை மார்க்கெட்டை விட்டு விரட்டிட்டு அவங்க பிசினஸ் நமக்கு வர மாதிரி பண்ணணும்" என்றான் மதன்.

"அந்த இடத்துக்கு சொந்தக்காரர் அதை விக்க இஷ்டப்படலேன்னா..."

"மார்க்கெட் ரேட்டுக்கு மேல கொடுக்கறதா சொல்லுங்க. கடன் வாங்கியோ அல்லது வேற எப்படியோ தேவைப்படற பணத்தைத் திரட்டிடலாம்."

"என்ன சார் இது? லீஸ் ரெனியூ பண்ற சமயத்தில முடியாதுன்னு சொல்றாங்களே!" என்றான் லட்சுமி என்டர்பிரைசஸின் பொது மேலாளர் சண்முகம்.

"சரி. என்ன செய்ய முடியும்? நம்ப இடத்தில கட்டிக்கிட்டிருக்கிற ஃபேக்டரி கட்டி முடிய ரெண்டு வருஷம் ஆகும். அதுவரையிலும் வாடகைக்கு வேற இடம் பாக்கணும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ல எனக்குத் தெரிஞ்சவர் ஒத்தரோட ஃபேக்டரி ஆறு மாசமா பூட்டிக் கிடக்கு. அதை வாடகைக்கு விடணும்னு சொல்லிக்கிட்டிருந்தார். நாம அங்க போயிடலாம். இடம் கொஞ்சம் சின்னதுதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என்றான் நிர்வாக இயக்குனர் லட்சுமிநாராயணன்.

"சார்! ஆனந்த் இன்டஸ்ட்ரீஸ்தான் பிரஷர் கொடுத்து இப்படிப் பண்ண வச்சிருக்காங்க. அந்த இடத்தை அவங்களே வாங்கப் போறாங்களாம்."

"அப்படியா? சரி. யார் வாங்கினா என்ன? நமக்கு வேற இடம் கிடைச்சாச்சு. அவ்வளவுதானே!"

"சார்! அவங்களை சும்மா விடக் கூடாது. அவங்களோட டாப் டெக்னிகல் பீப்பிள் ரெண்டு மூணு பேரை இழுத்துடலாம். அவங்க அங்கே சந்தோஷமா இல்லேன்னு கேள்விப்பட்டேன். அதனால, அதே சம்பளம் கொடுத்தா கூட நம்மகிட்ட வந்துடுவாங்க. இன்னும் ரெண்டு வருஷத்திலே நாம எக்ஸ்பாண்ட் பண்ணும்போது நமக்கு ஆளுங்க வேண்டி இருக்கும். இது மாதிரி பதிலடி கொடுத்தாத்தான் சார் மதனுக்கு உறைக்கும்."

"அவங்க பிசினஸ் ரொம்பப் பெரிசு. ஆனா நம்பளோட சின்ன பிசினஸை அபகரிக்கணும்னு பாக்கறாங்க. நாமளும் அவங்களோட சீனியர் ஃஸ்டாபை அபகரிக்க நெனைக்கணுமா என்ன? வேண்டாம். நாம நம்ம பிஸினஸ்ல கவனத்தைச் செலுத்தலாம்" என்றான் லட்சுமிநாராயணன்.

"என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறீங்க?" என்றான் மதன்.

"ஆமாம் சார். இன்னிக்கு கவர்ன்மென்ட் ஜி ஓ வருதாம். நாம வாங்கின இடத்தை சாலை விரிவாக்கத்துக்காக எடுத்துக்கப் போறாங்க."

"அது அவ்வளவு சீக்கிரம் நடக்காதே. யாராவது கேஸ் போடுவாங்களே!"

"இல்லை சார். இது அஞ்சு வருஷம் முன்னாடியே வந்த திட்டம். சில பேர் கேஸ் போட்டதாலதான் இத்தனை நாள் பெண்டிங்கில இருந்ததாம். இதை எல்லாரும் மறந்தே போயிட்டாங்க. அதனாலதான் ஆறு மாசம் முன்னால நாம அந்த இடத்தை வாங்கினபோது இந்த விஷயம் நம்ப கவனத்துக்கு வரல. நேத்திக்குத்தான் கோர்ட்ல அரசாங்கத்துக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு. அதனால உடனே வேலையை ஆரம்பிச்சுடுவாங்க."

"காம்பென்சேஷன் கொடுப்பாங்க இல்ல?"

"சார்! கவர்ன்மென்ட் ரேட் எல்லாம் ரொம்பக் கம்மியா இருக்கும். அதுவும் பணம் வரத்துக்குப் பல வருஷங்கள் ஆகும். நாம வேற மார்க்கெட் ரேட்டுக்கு மேல கொடுத்து இடத்தை வாங்கி இருக்கோம். நமக்கு நஷ்டம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்" என்றான் சுந்தர் தயங்கியபடி.

நஷ்டம் எவ்வளவு இருக்கும், அது எந்த அளவுக்குத் தன் தொழிலை பாதிக்கும் என்று கணக்குப் போடத் தொடங்கினான் மதன்.

குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

பொருள்:  
விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் பிறர் பொருளை விரும்பினால், அது அழிவைத் தரும். பிறர் பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


No comments:

Post a Comment