About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, October 29, 2018

220. நகர்ப்புற நக்ஸலைட்!

சண்முகம் ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தபோது, சாலையோரம் கிடந்த மனிதனைப் பார்த்தார். 

"கொஞ்சம் நிறுத்துப்பா!" என்றார் சண்முகம். 

"எதுக்கு சார்? எவனோ குடிச்சுட்டு விழுந்து கிடப்பான். உங்களுக்கு ஏன் சார் வம்பு?" என்று முணுமுணுத்தபடியே ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். 

சண்முகம் கீழே விழுந்திருந்தவர் அருகில் சென்று பார்த்தார். "குடிச்சிருக்கிற மாதிரி தெரியல. ஏதோ காரணத்தால மயக்கம் போட்டு விழுந்திருக்காரு" என்றவர், அவரது சட்டைப்பையில் துருத்திக் கொண்டிருந்த அடையாள அட்டையை எடுத்துப் பார்த்தார். "யாரோ காலேஜ் புரொஃபஸர். பக்கத்தில இருக்கற அரசாங்க மருத்துவமனையில சேர்த்துடலாம். ஒரு கை பிடிப்பா. தூக்கி ஆட்டோல வச்சு அழைச்சுக்கிட்டுப் போயிடலாம்" என்றார்.

அரை மனதுடன் வந்த ஆட்டோ ஓட்டுநர், "சார்! பேசினத்துக்கு மேல நூறு ரூபா கொடுத்துடுங்க" என்றார்.

சண்முகம் பதில் சொல்லவில்லை. 

ரசு மருத்துவமனையில் முதலில் அவரைப் பரிசோதிக்கத் தயங்கினார்கள். பிறகு  பொறுப்பு மருத்துவர் வந்து பார்த்து விட்டு, "அட்மிட் பண்ண மாட்டோம். லோ பி பியா இருக்கும்னு நினைக்கிறோம். ஓ பியில வச்சு டிரிப்ஸ் ஏத்தறோம். நீங்க விசாரிச்சு அவரை வீட்டில கொண்டு விட்டுடுங்க. உங்க பேரு, அட்ரஸ் ஃபோன் நம்பரை இதில எழுதுங்க" என்றார். 

சண்முகம் ஆட்டோ ஓட்டுனருக்குப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, அடையாள அட்டையில் இருந்த கல்லூரியின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்துக் கல்லூரியைத் தொலைபேசியில் அழைத்தார். அவர்கள் பேராசிரியரின் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்தனர். 

பேராசிரியர் வீட்டைத் தொலைபேசியில் அழைத்ததும், அவருடைய மகன் மருத்துவ மனைக்கு வருவதாகச் சொன்னான். சொன்னது போல் சற்று நேரத்தில் வந்து விட்டான். அதன் பிறகு சண்முகம் விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார்.

சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு ஒரு போலீஸ்காரர் வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரை ஸ்டேஷனுக்கு வரச் சொல்வதாகச் சொன்னார்.

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றதும், இன்ஸ்பெக்டர் அவரிடம், "தெருவில மயங்கிக் கிடந்த புரொஃபசர் சீனிவாசனை மருத்துவ மனையில் சேத்தது நீங்கதானே?" என்றார்.

"ஆமாம்."

"ஏன் அப்படிச் செஞ்சீங்க?"

"இது என்ன சார் கேள்வி? சாலையில ஒத்தர் மயங்கி விழுந்திருக்காரு. அவருக்கு உதவி செய்யணும்னு நினைச்சேன்."

"அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா?"

"தெரியாது. அவர்  சட்டைப் பையில இருந்த ஐடியைப் பாத்தப்பறம்தான் அவர் பேரு, வேலை செய்யற காலேஜ் பேரெல்லாம் தெரிஞ்சது. காலேஜுக்கு ஃபோன் பண்ணினேன். அவங்க அவரு வீட்டு நம்பர் கொடுத்தாங்க. அப்புறம் அவர் வீட்டுக்கு ஃபோன் பண்ணினேன்."

"சார்! அவர் ஒரு அர்பன் நக்ஸல்."

"அப்படின்னா?"

"என்ன சார் பேப்பர் படிக்கறதில்லையா? நியூஸ் சானல் கூடவா பாக்க மாட்டீங்க? பல நகரங்கள்ள இவரை மாதிரி படிச்சவங்க சில பேரு அரசாங்கத்துக்கு எதிரா சதி பண்றங்க, இவங்களைத்தான் அர்பன் நக்ஸல்ன்னு சொல்றது. புரொஃபஸர் சீனிவாசனும் அந்த மாதிரி ஆளுதான். அவரைக் கைது பண்ணக் கூடாதுன்னு நீதிமன்றத்தில தடை உத்தரவு வாங்கியிருக்காரு. இல்லேன்னா அவரு ஜாமீன் கூட அப்ளை பண்ண முடியாதபடி ஜெயில்ல இருக்க வேண்டியவரு. இப்படிப்பட்டவங்களுக்கு உதவறதே தப்பு. அப்படி உதவி செஞ்சா, அவங்களையும் ஜாமீன் பெற முடியாத செக்‌ஷன்ல கைது செஞ்சு உள்ள போடணும்னு எங்களுக்கு மேலிடத்திலேந்து உத்தரவு வந்திருக்கு. உங்களுக்கு அவரைத் தெரியாதுங்கறதால உங்களை விடறேன். இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.

'ஒத்தருக்கு உதவி  செஞ்சதுக்காக சிறைக்குப் போகணும்னா, நான் சந்தோஷமாப் போவேன் சார்' என்று சொல்ல நினைத்து அடக்கிக் கொண்டார் சண்முகம்.
றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

பொருள்:  
பிறருக்கு உதவி செய்வதனால் தனக்கு ஒரு கேடு விளையும் என்றால், தன்னையே விலையாகக் கொடுத்தாவது அந்தக் கேட்டை வாங்கிக் கொள்ளலாம்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















219. பிறந்த நாள்

"என்னங்க, வர புதன்கிழமை பாபுவுக்குப் பிறந்த நாள்" என்றாள் வனிதா.

"தெரியும்" என்றான் சீதாராமன்.

"என்ன செய்யப் போறீங்க?'

"என்ன செய்யணும்?"

"கேக் வெட்டறதுக்கு என் ஃபிரண்ட்ஸை எல்லாம் கூப்பிடட்டுமா?" என்றான் பாபு.

"பாக்கலாம். சொல்றேன்" என்றான் சீதாராமன்.

"எப்ப சொல்லப் போறீங்க? இன்னும் நாலு நாள்தானே இருக்கு?" என்றாள் வனிதா.

"பாபு சின்னப் பையன். உனக்குமா தெரியாது?" என்றான் சீதாராமன்.

வனிதா பதில் சொல்லவில்லை.

சீதாராமன் சிறிதாக ஒரு துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தான். வியாபாரம் நன்றாக நடந்து ஓரளவுக்கு வசதியாகவும் வாழ்ந்து வந்தான்.

ஆனால் ஒரு வருடம் முன்பு வந்த வெள்ளம் ஊரைப் புரட்டிப் போட்டது போல், அவன் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.

வெள்ளத்தில் அவன் கடை முழுவதும் முழுகிப் போய் விட்டது. பெரும்பாலான துணிகள் வெள்ளத்தில் போய் விட்டன. மீதி இருந்தவை நீரில் ஊறிக் குப்பையாகி விட்டன.

துணிகளைப் பெரும்பாலும் கடனுக்கு வாங்கிதான் வியாபாரம் செய்து வந்தான் சீதாராமன். வியாபாரத்தில் வந்த பணத்தில் கடனை அடைப்பது, மீண்டும் கடனில் துணி வாங்குவது என்பதுதான் பல ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறை. அவன் குறித்த காலத்தில் பணம் கொடுத்து விடுவான் என்பதால், அவனுக்குத் துணி சப்ளை செய்தவர்கள் அவனுக்கு தாராளமாகக் கடன் கொடுத்தனர்.

கடையில் எப்போதும் சுமார் ஆறு மாத விற்பனை அளவுக்கு சரக்கு இருக்கும். அதில் பெரும் பகுதி கடனில் வாங்கியதுதான்.

திடீரென்று ஒரே நாளில் அவன் நிலைமை மாறி விட்டது. ஒருபுறம் சரக்கு இல்லாமல் கடையை மீண்டும் நடத்த முடியவில்லை. மறுபுறம் துணி சப்ளை  செய்தவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி.

மனைவியின் நகைகள், வீடு என்று எல்லாவற்றையும் விற்றுத்தான் கடனை அடைக்க முடிந்தது. மீதி இருந்த பணம் மீண்டும் தொழில் துவங்கப் போதுமானதாக இல்லை.

ஒரு பெரிய துணிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்கி வாழ்ந்து கொண்டிருந்தான் சீதாராமன்.

பாபுவின் பிறந்த நாள் எளிமையாக நடந்தது. கடையில் வாங்கிய இனிப்பு, பாபுவின் வகுப்பு மாணவர்களுக்கு சாக்லேட் என்று குறைந்த செலவில் நடந்தது. கேக் வெட்டி, நண்பர்களைக் கூப்பிடுவதை அடுத்த வருடம் வைத்துக் கொள்ளலாம் என்று பாபுவிடம் எப்படியோ சொல்லி அவனைச் சமாதானப் படுத்தினர் வனிதாவும், சீதாராமனும்.

இரவு  வேலை முடிந்து சீதாராமன் வீட்டுக்கு வந்ததும், வனிதா சொன்னாள்:

"பாவம்! பாபுவுக்கு ரொம்ப ஏமாத்தம். எனக்குக் கூடத்தான். போன வருஷம் வீடு பூரா அலங்காரம் பண்ணி, பாபுவோட நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்னு ஒரு அம்பது பேரைக் கூப்பிட்டு கேக் வெட்டி, ஓட்டல்லேந்து இனிப்பு, காரம், சமோசா, தோசைன்னு நிறைய அயிட்டங்கள் வரவழைச்சு எல்லாருக்கும் வயிறு முட்ட டிஃபன் கொடுத்து, சின்னப் பையன்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்து அமர்க்களமாக் கொண்டாடின காட்சிதான் என் கண் முன்னே நிக்குது. இந்த வருஷம் அப்படிப் பண்ண முடியலைன்னு எனக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்கு வருத்தம் இல்லையா?"

"நான் இதைப் பத்தி அதிகம் வருத்தப்படல. வேறொரு விஷயத்தை நினைச்சு வருத்தப்பட்டேன்" என்றான் சீதாராமன்.

"வேற என்ன விஷயம்?'

"இதுக்கு முன்னால ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பாபுவைக் கூட்டிக்கிட்டு ஒரு அநாதை ஆசிரமத்துக்குப் போய் அங்கே இருக்கற அம்பது குழந்தைகளுக்கு உடைகள் வாங்கிக் கொடுத்து, விருந்து வச்சுக் கொண்டாடினோமே. அந்தக் குழந்தைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க! இந்தப் பிறந்த நாளுக்கு அது மாதிரி அநாதைக் குழந்தைகளை சந்தோஷப்படுத்த முடியலையேன்னுதான் நான் ரொம்ப வருத்தப்படறேன்!" என்றான் சீதாராமன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பொருள்:  
பிறருக்கு உதவும் பண்புடையவன், பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அதற்காக வருந்தும்போது ஏழையாகிறான்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Saturday, October 27, 2018

218. என்றென்றும் ராஜா

"வரச் சொன்னீங்களாமே?" என்றான் கந்தன்.

"உக்காரு. இதோ வந்துட்டேன்" என்று உள்ளே போனார் ராஜபார்ட் முருகப்பா.

முருகப்பாவின் பெயரோடு ராஜபார்ட் என்ற பட்டம் எப்போது ஒட்டிக் கொண்டது என்பது கந்தனுக்குத் தெரியாது. ஆனால் பத்து வயதுப் பையனாக அவன் அவருடைய நாடகக் குழுவில் சேர்ந்ததிலிருந்து அவருக்கு அந்தப் பெயர் இருந்து வந்திருக்கிறது. 

ஒவ்வொரு நாடகக் குழுவிலும் கதாநாயக வேஷம் போடுபவரை ராஜபார்ட் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அந்த வட்டாரத்தில் ராஜபார்ட் என்றாலே அது முருகப்பாவைத்தான் குறிக்கும்.

ஒரு காலத்தில் ராஜபார்ட் முருகப்பாவை எங்கெங்கிருந்தோ வந்து நாடகம் போட அழைப்பார்கள். ஒரு ஊருக்குப் போய் விட்டுத் திரும்புவதற்குள் இன்னொரு அழைப்பு காத்திருக்கும்.

பத்து நடிகர்கள் அவர் குழுவில் நிரந்தரமாக இருந்தார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் முருகப்பா. சம்பளத்தைத் தவிர இன்னும் பல வசதிகளும், சலுகைகளும் இருந்ததால் அவர் குழுவை விட்டு யாரும் போக விரும்பியதில்லை.

ஆனால், கடந்த பத்து வருடங்களாக நிலைமை மாறி விட்டது. நாடக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பத்து பேருக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல், முருகப்பாவே சிலரை வேறு தொழில் பார்த்துக் கொள்ளச் சொல்லி அனுப்பி விட்டார். இன்னும் சிலர் தாங்களாகவே போய் விட்டனர். 

எப்போதாவது நாடக வாய்ப்புகள் வந்தால் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் போய்த் தேடி அலைந்து நடிப்புத் தெரிந்த சிலரை அழைத்து வந்து நாடகம் நடத்தி வந்தார். 

கந்தன் மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. ஒருமுறை முருகப்பாவிடம் சென்று, "ஐயா! நான் வேற எங்கேயாவது போய் ஏதாவது செஞ்சு பொழைச்சுக்கறேன்யா. நீங்க ஏன் எனக்குக் கஷ்டப்பட்டு சம்பளம் கொடுக்கறீங்க?" என்றான்.

"என்னால உனக்குச் சம்பளம் கொடுக்க முடியலேங்கற நிலைமை வந்தா அப்ப சொல்றேன். அதுவரையிலும் இங்கியே இரு. நாடகம் இருக்கற சமயத்தில நீ என்னோட இருந்தா போதும். மீதி நாட்கள்ள, நீ என்ன வேலை வேணா செஞ்சுக்க. நான் எதுவும் கேக்க மாட்டேன்" என்று சொல்லி விட்டார் முருகப்பா. 

அதற்குப் பிறகு ஏதாவது வேலை இருந்தால் சொல்லி அனுப்புவார். அவனே கூட  இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை அவரைப் பார்த்துப் பேசி விட்டு வருவான்.

இப்போது வரச் சொல்லி இருக்கிறார். எதற்கென்று தெரியவில்லை. 'நாடக வாய்ப்பு ஏதாவது வந்திருக்கிறதா அல்லது இனிமேல் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லப் போகிறாரா?'

உள்ளிருந்து ராஜபார்ட் வந்தபோது அவர் கையில் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. இனிமேல் தன்னால் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லிக் கணக்குத் தீர்க்கப் போகிறார் போலிருக்கிறது என்று நினைத்தான் கந்தன்.

"பையனுக்கு ஸ்கூல் திறந்துடுச்சா?" என்றார் ராஜபார்ட்.

"திறந்து ஒரு மாசமாச்சே!" என்றான் கந்தன்.

"அப்புறம் ஏன்...?" என்று அவர் இழுத்தபோதுதான் கந்தனுக்கு அவர் கேட்க நினைத்தது புரிந்தது.

ஆரம்பக் காலம் முதலே தன் குழுவில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடச் செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்வது என்ற பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார் ராஜபார்ட்.

அவர் குழுவில் இருந்த கலைஞர்களின் குழந்தைகள் படித்து வந்த அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசம்தான் என்றாலும், சீருடை, புத்தகங்கள் ஆகியவற்றுக்கான பணத்தைக் கொடுத்து வந்தார் ராஜபார்ட். நாடக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து, அவர் வருமானம் குறைந்த பின்பும் அவர் இதை நிறுத்தவில்லை.

சென்ற வருடம் கூடக் கொடுத்து விட்டார்.

ஆனால் இந்த வருடம் ராஜபார்ட் இருந்த நிலைமையில் அவரால் இந்த உதவியைச் செய்ய முடியாது என்று நினைத்து கந்தன் அவரிடம் பணம் கேட்கவில்லை.

"ஏன் எங்கிட்ட பள்ளிக்கூடச் செலவுக்குப் பணம் கேட்டு வாங்கிக்கலை?" என்றார் ராஜபார்ட்.

"என்ன ஐயா இது? நீங்க இருக்கற நிலைமையில நான் எப்படி இதை உங்ககிட்ட கேக்க முடியும்? நான் வேற வேலைகளைப் பாக்கலாம்னு சொல்லிட்டீங்க. அதோட, வேலை இருந்தாலும் இல்லாட்டாலும் எனக்குச் சம்பளம் கொடுக்கறீங்க. இதை வேற நான் எப்படிக் கேக்கறது?" என்றான் கந்தன்.

"அன்னிக்கு வசதி இருந்தது. பத்து பேரு என்னோட இருந்தாங்க. பத்து பேருக்கும் எல்லாம் செஞ்சேன். இன்னிக்கு நீ ஒத்தன்தான் இருக்கே. உனக்கு நான் செய்யறதாச் சொன்னதைச் செய்ய வேண்டாமா?" என்ற ராஜபார்ட் "போன வருஷம் கொடுத்த தொகையையே கொடுக்கறேன். கொஞ்சம் கூடக் குறைச்சலா இருந்தா அட்ஜஸ்ட்  பண்ணிக்க" என்றபடியே தன் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை அவன் கையில் திணித்தார் ராஜபார்ட் முருகப்பா.

"ஐயா! ராஜபார்ட் வேஷம் போட்டாலும், போடாட்டாலும், என்னிக்குமே நீங்க ராஜாதான் ஐயா!" என்றான் கந்தன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

பொருள்:  
பிறருக்கு உதவுவது தன் கடமை என்று நினைத்துச் செயல்படுபவர், பொருள் வளம் குறைந்த காலத்திலும் பிறருக்கு உதவுவதில் தளர மாட்டார்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Friday, October 26, 2018

217. குழந்தைகள் காப்பகம்

"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க" என்றாள்  சரஸ்வதி.

"கீழே ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்றார் நல்லசிவம்.

"பரவாயில்லையே! வேலையில இருந்தப்ப சம்பளப் பணம், வாடகைப் பணம் எல்லாத்தையும் எடுத்து யார் யாருக்கோ தர்மம் பண்ணிக்கிட்டிருந்தீங்க. இப்ப ரிடயர் ஆனப்பறம் பிசினஸ் பண்ணலாம்னு எண்ணம் வந்திருக்கே! ஆச்சரியம்தான்."

நல்லசிவம் சிரித்தபடி, "இது பிசினஸ் இல்ல. பணம் கொடுத்துக் குழந்தையைக் காப்பகத்தில சேர்க்க முடியாத பெற்றோர் எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்காக இலவசமா ஒரு காப்பகம் ஆரம்பிக்கப் போறேன்."

"அதானே பாத்தேன்! திடீர்னு வேதாளம் முருங்கை மரத்திலேந்து கீழே இறங்கிடுச்சேன்னு ஆச்சரியப்பட்டேன். வேலையில இருந்தப்பவே, வந்த பணத்தையெல்லாம் வாரிக் கொடுத்துக்கிட்டு, ஊருக்கு உழைக்கிறேன்னு ஓய்வில்லாம ஓடிக்கிட்டு இருந்தவராச்சே நீங்க? ஆமாம். வீட்டு வாடகை போச்சு. காப்பகம் நடத்த ஆட்களை வேலைக்கு வைக்கணும், வேற செலவெல்லாம் இருக்கு. அதுக்கெல்லாம் வேற பணம் வேணும். என்ன செய்யப் போறீங்க?"

"இத்தனை நாளா நம்ப பையங்க பணம் அனுப்பறேன்னு சொல்லச்சே வேண்டாம்னுட்டேன். இப்ப நான் ரிடயர் ஆனப்பறம் ரெண்டு பேரும் ஆளுக்கு இருபதாயிரம் ரூபா அனுப்பறேன்னாங்க. நானும் சரின்னுட்டேன். அந்தப் பணம், என் பென்ஷன்ல நம்ப செலவு போக மீதி உள்ள பணம் இதையெல்லாம் வச்சு சமாளிக்க வேண்டியதுதான். கணக்குப் போட்டுப் பாத்தேன். சமாளிக்கலாம்னு தோணுது"

"ஏங்க, உங்களுக்கென்ன தலையெழுத்தா?" என்றாள் சரஸ்வதி, ஆற்றாமையுடன்.

நல்லசிவம் வெறுமனே சிரித்தார். "உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்" என்றார்.

"என்ன?"

"அது முக்கியமில்லை. நான் இறந்து போனப்பறம் செய்ய வேண்டிய ஏற்பாடு பத்தி..."

"ஏங்க, உங்களுக்கு வயசு இப்பதான் அறுபது ஆகியிருக்கு. இந்தக் காலத்தில நிறைய பேரு தொண்ணூறு வயசுக்கு மேல இருக்காங்க, இப்ப ஏன் இந்தப் பேச்சு?"

"இல்லை..."

"இப்படியெல்லாம் பேசி என்னை வருத்தப்பட வைக்காதீங்க. நீங்க செய்யற காரியங்கள் எதுக்கும் நான் தடை சொல்றதில்ல. அதுக்குக் கைம்மாறாகவாவது இப்படியெல்லாம் பேசாம இருங்க" என்றாள் சரஸ்வதி கோபத்துடன்.

ஒரு மாதத்தில் குழந்தைகள் காப்பகம் துவக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வந்தது.

ல்லசிவத்துக்கு அறுபத்தைந்து வயதானபோது, ஒருநாள் அவர் தூக்கத்திலேயே இறந்து விட்டார்.

ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் மூத்த மகன் சங்கர் உள்ளே அமர்ந்து அழுது கொண்டிருந்த சரஸ்வதியிடம் வந்தான். "அம்மா! ஒரு நிமிஷம் இப்படி வரியா?" என்று அவளை இன்னொரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அறையில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, "அம்மா, இவர் ஒரு ஆஸ்பத்திரியிலேந்து வராரு. அப்பா தன் உடல் உறுப்புகளை தானம் செஞ்சிருக்காராம்  ஆனா நாம சம்மதிச்சாதான் உடலை எடுத்துப் போவாங்களாம். எடுக்கக் கூடிய உடல் உறுப்புகளை எடுத்துக்கிட்டு, அப்புறம் உடலை அனுப்புவாங்க. அதுக்கு சில மணி நேரம் ஆகலாம். நீ சரின்னு சொன்னாதான். உனக்கு இஷ்டம் இல்லேன்னா அப்படியே அடக்கம் பண்ணிடலாம்" என்றான்.

சரஸ்வதி கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் யோசித்தாள். தான் இறந்த பிறகு செய்ய வேண்டிய ஏற்பாடு என்று தன் கணவர் தன்னிடம் ஒருமுறை பேச முயன்றதை நினைவு கூர்ந்தாள். 'இதைப் பத்தித்தான் சொல்ல முயற்சி செஞ்சிருப்பாரு போலருக்கு.'

"சங்கர்! உங்கப்பா மத்தவங்களுக்கு உதவி செய்யறதையே முக்கியமா நினைச்சு வாழ்ந்தாரு. உயிரோடு இருந்தப்ப, தன் பணத்தையும், உழைப்பையும் மத்தவங்களுக்காகச் செலவழிச்சாரு. இறந்தப்பறம், தன் உடல் மத்தவங்களுக்குப் பயன்படணும்னு நினைச்சிருக்காரு. அவரு விருப்பப்படி நடந்துக்கறதுதான் அவருக்கு நாம காட்டற மரியாதை. நமக்குப் பெருமையும் கூட" என்றாள் சரஸ்வதி, ஒரு நிமிடம் தன் துக்கத்தை மறந்தவளாக.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பொருள்:  
பிறருக்கு உதவும் குணம் உள்ளவரிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளும் பயன்படும் மரம் போன்றது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
























Wednesday, October 24, 2018

216. நாதனின் உயில்

Featured post on IndiBlogger, the biggest community of Indian Bloggers
"அப்பா! நீங்க கஷ்டப்பட்டு ஆரம்பிச்சு, வளர்த்த தொழில் இது. இன்னிக்கு தொழலை நல்லா நடத்தி லாபம் சம்பாதிக்கறோம்னா அதுக்குக் காரணம் உங்க உழைப்பு. அப்படி இருக்கறப்ப, சம்பாதிக்கறதில பெரும்பகுதியை இப்படி வாரி விடறீங்களே, இது எதுக்கு? 

"ஏற்கெனவே, தொழிலாளர்களுக்கு மத்த எந்த கம்பெனியிலேயும் கொடுக்கறதை விட அதிக சம்பளம், வசதிகள், அவங்க குழந்தைகள் படிப்பு, கல்யாணத்துக்கு நிதி உதவின்னு அள்ளிக் கொடுக்கறோம். 

"இது போதாதுன்னு நம்ப தொழிற்சாலை இருக்கற ஊரைத் தத்து எடுத்துக்கிட்டு, அந்த ஊர்ல சாலை அமைக்கிறது, சாக்கடை வெட்டறது, பள்ளிக்கூடம் கட்டறதுன்னு ஏகப்பட்ட பணம் செலவழிக்கறோம். இதுக்கும் மேல வெளியில பல நிறுவனங்களுக்கு நன்கொடை. இது ரொம்ப அதிகமா இல்லை?" என்றான் சதீஷ்.

"உன் தம்பி என்ன சொல்றான்னு கேக்கலாம்!" என்றார் நாதன்.

"நீங்க செய்யறது சரிதான்னு எனக்குத் தோணுதுப்பா. மத்தவங்களுக்கு மட்டும் இல்லாம, எங்களுக்கும் நீங்க ஒரு முன் உதாரணமா இருக்கீங்கன்னு நினைக்கறேன். உங்களை மாதிரி இன்னும் சில பேர் இருந்தா, இந்த உலகம் ரொம்ப நல்லா இருக்கும்" என்றான் மூர்த்தி.

"சதீஷ்! உன் தம்பிக்குப் புரியறது உனக்குப் புரியல. மத்தவங்களுக்கு உதவணும்கற எண்ணம் உனக்குக் கொஞ்சம் கூட இல்லாதது எனக்கு வருத்தமா இருக்கு" என்றார் நாதன்.

"நாதன்! நான் உங்க வக்கீல் மட்டும் இல்ல, உங்க நண்பரும் கூட. அதனால நீங்க ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றார் கேசவன்.

நாதன் ஒரு பெருமூச்சு விட்டார்.

"கேசவன்! நான் சுயமா முன்னுக்கு வந்தவன். இன்னிக்கு வெற்றிகரமா ஒரு தொழிலை நடத்திக்கிட்டு வரேன். என் பிள்ளைங்க ரெண்டு பேரும் பிஸினஸ்ல எனக்கு உதவியா இருக்காங்க.

"எனக்கு வாழ்க்கையில ஒரு கொள்கை உண்டு. என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவணும்கறதுதான் அது. இத்தனை வருஷமா அப்படித்தான் செஞ்சுக்கிட்டு வந்திருக்கேன். கடவுள் அருளாலே எனக்கு ஓரளவு வசதி இருக்கறதால என்னால ஓரளவுக்கு மத்தவங்களுக்கு சில உதவிகள் செய்ய முடியுது.

"ஆனா, எனக்கப்பறம் என்ன ஆகும்? என் ரெண்டு பையன்களும் ஒத்துமையா, திறமையா பிசினஸை நடத்துவங்கதான். ஆனா ஒரு பிரச்னை இருக்கு. சின்னவன் மூர்த்தி என் மாதிரியே மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறவன். ஆனா, பெரியவனுக்கு இதில கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது. அதனால இந்த விஷயத்தில ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு வரும். அது எதில போய் முடியும்னு தெரியாது.

"யாருக்கு மத்தவங்களுக்கு உதவற குணம் இருக்கோ, அவன்கிட்டதான் செல்வம், அதிகாரம் இதெல்லாம் இருக்கணும். நான் கடவுளா இருந்தா அப்படித்தான் பண்ணுவேன்! உலகத்தை என்னால மாத்த முடியாது. ஆனா, என்னோட சொத்துக்கள் விஷயத்தில என் விருப்பப்படி ஏற்பாடு பண்ணலாம் இல்லையா?

"என் ரெண்டு வீடுகளை என் ரெண்டு பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒண்ணா கொடுத்துடப் போறேன். பிசினஸை மட்டும் என் ரெண்டாவது மகன் மூர்த்திக்கு 75 சதவீதம், மூத்த மகன் சதீஷுக்கு 25 சதவீதம்னு பிரிக்கப் போறேன், சில நிபந்தனைகளோட."

"என்ன நிபந்தனைகள்"

"பெரிய பையன் சதீஷ் பிசினஸ்ல ஸ்லீப்பிங் பார்ட்னர்தான். நிர்வாகத்தில் அவனுக்கு எந்தப் பங்கோ, உரிமையோ கிடையாது. நிர்வாகம் முழுக்க முழுக்க சின்னவன் மூர்த்தியோட அதிகாரத்திலேயும், கட்டுப்பாட்டிலேயும்தான் இருக்கும். 

"லாபத்தில ஒரு பகுதியை மட்டும் பார்ட்னர்களுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டு மீதியைத் தொழில் வளர்ச்சிக்கும், நன்கொடைகள், சமூகப் பணிகள் மாதிரி விஷயங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள மூர்த்திக்கு அதிகாரம் உண்டு. 

"லாபத்தில் எத்தனை சதவீதத்தை பார்ட்னர்களுக்குக் கொடுக்கறதுங்கறதை மூர்த்திதான் தீர்மானிக்கணும். வேணும்னா லாபத்தில் குறைஞ்சது 25 சதவீதத்தையாவது பார்ட்னர்களுக்குக் கொடுக்கணும்னு ஒரு நிபந்தனை போட்டுக்கலாம்.

"பிரிச்சுக் கொடுக்கற லாபத்தில் 75 சதவீதம் மூர்த்திக்கு - அவன்தானே பிஸினஸைப் பாத்துக்கறான்? 25 சதவீதம் ஸ்லீப்பிங் பார்ட்னர் சதீஷுக்கு. இதைத் தவிர என்கிட்டே இருக்கற ரொக்கப் பணம், பங்குகள் மாதிரி விஷயங்கள் ரெண்டு பேருக்கும் பாதிப் பாதி."

"இது உங்க பெரிய பையனுக்குப் பண்ற அநீதி இல்லையா?"

"இல்லை. இப்ப ரெண்டு பேருக்கும் சம்பளம்தான் கொடுக்கறேன். நான் சொல்ற ஏற்பாட்டில லாபத்தில 25 சதவீத பங்கே இதை விட அதிகமா வரும். அவனுக்கு வீடு கொடுக்கப் போறேன். அதைத் தவிர அவனுக்குக் கிடைக்கிற ரொக்கப் பணம், பங்குகள் மாதிரி முதலீடுகளோட மதிப்பே பல லட்சங்கள் இருக்கும். 

"அவன் வேணும்னா இந்தப் பணத்தை வச்சு வேற தொழில் ஆரம்பிச்சுக்கட்டுமே! எங்கிட்ட இருக்கற செல்வம் மத்தவங்களுக்குத் தொடர்ந்து பயன்படணும்னா இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சுதான் ஆகணும். இது மாதிரியே உயில் எழுதிடுங்க" என்றார் நாதன்.

"சரி" என்றார் வக்கீல் கேசவன்.   
றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

பொருள்:  
பிறருக்கு உதவும் சிந்தனை உள்ளவரிடம் செல்வம் சேர்ந்தால், அது ஊரில் அனைவரும் பயன்படுத்தக் கூடிய மரத்தில் பழங்கள் நிறைந்திருப்பதுபோல் ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



Monday, October 22, 2018

215. பசுபதி வீட்டுக் கிணறு

Featured post on IndiBlogger, the biggest community of Indian Bloggers
பசுபதி திண்ணையில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

பெண்களும், ஆண்களுமாக சிலர் கையில் ஒன்று அல்லது இரண்டு குடங்களை எடுத்துக் கொண்டு சற்றுத் தொலைவில் இருந்த குளத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர். 

எதிர்ப்புறத்திலிருந்து தண்ணீர் நிரம்பிய குடங்களைத் தூக்கிக் கொண்டு சிலர் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

பசுபதி குடும்பத்துக்கு இந்த சிரமம் இல்லை. அவர்கள் வீட்டுக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருக்கும். அந்த ஊரில் ஐந்தாறு வீடுகளில் மட்டும்தான் அப்படி. பெரும்பாலான வீடுகளில் கிணறு இல்லை. இன்னும் பலர் வீட்டில் கிணறு இருந்தாலும் அந்தக் கிணறுகளில் தண்ணீர் ஊறுவதில்லை.

இத்தனை பேர் இவ்வளவு தூரம் நடந்து போய் கஷ்டப்பட்டு தண்ணீர் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்க்க பசுபதிக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

ஒருநாள் திடீரென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. உள்ளே போய் மனைவியிடம் பேசினார்.

"ஏன் பார்வதி, எல்லாரும் தண்ணி எடுக்க இவ்வளவு தூரம் குளத்துக்கு நடந்து போய்க் கஷ்டப்படறாங்களே!" என்றார்.

"ஆமாம். என்ன செய்யறது? ஏதோ, நம்ம அதிர்ஷ்டம். நமக்கு அந்தக் கஷ்டம் இல்லை" என்றாள் பார்வதி.

"நம்ம தெருவில் இருக்கறவங்களை நம்ம கிணத்திலேந்து ஒண்ணு ரெண்டு குடம் தண்ணி எடுத்துக்கலாம்னு சொன்னா என்ன? அவங்க கஷ்டம் குறையும் இல்ல?"

பார்வதி அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள். "ஏன், நம்ப வீட்டுக் கிணத்திலேயும் தண்ணி வத்திப்போய் நானும் குடத்தைத் தூக்கிக்கிட்டு குளத்துக்குப் போகணுமா?" என்றாள்.

"கொஞ்ச நாள் பாக்கலாமே! நம்ப தெருவில இருக்கற ஒரு பத்து பேருதானே எடுக்கப் போறாங்க?" என்றார் பசுபதி.

"அதுவும் இப்ப கோடைக்காலம்."

"கோடைக்காலத்திலதானே எல்லாருக்குமே தண்ணிக் கஷ்டம் அதிகமா இருக்கும்?"

"என்னவோ செய்யுங்க. ஆனா ஒண்ணு! கிணத்துல தண்ணி கீழ போயிடுச்சுன்னா இதை நிறுத்திடணும். அப்புறம் தண்ணி ஊறி வந்து நமக்கு மட்டும் தண்ணி கிடைக்கறதே பெரும் பாடாயிடும்" என்றாள் பார்வதி அரை மனதுடன்.
ந்தத் தெருவிலிருந்து பத்துப் பேர் பசுபதி வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துப் போகத் தொடங்கி ஒரு மாதம் ஆகி விட்டது.

பார்வதி தினம் ஐந்தாறு முறை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிணற்றின் நீர்மட்டம் இறங்கவில்லை.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பொருள்:  
உலக நலனை விரும்பிச் செயல்படும் அறிவு படைத்தவனிடம் செல்வம் இருந்தால், அது ஊரில் அனைவரும் பயன்படுத்தும் குளம் தண்ணீரால் நிறைந்தது போலாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Sunday, October 21, 2018

214. மரணச் செய்தி

"நம்ப ஏரியாவில ஒத்தரு புதுசா வீடு கட்டிக் குடி வந்திருக்காரு. அவரைப் போய்ப் பாத்துட்டு வரலாமா?" என்றான் முரளி 

"சரி" என்றான் சபேஷ்.

இருவரும் சிவராமனின் வீட்டுக்குச் சென்றனர். அவரைப் பார்த்ததும், "சார்! எங்க காலனிக்கு உங்களை வரவேற்கிறோம்!" என்றனர்.

"நீங்க யாரு என்னை வரவேற்கறதுக்கு? இந்த காலனி உங்களுக்குச் சொந்தமா என்ன? நான் இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி அதில வீடு கட்டியிருக்கேன்" என்றார் சிவராமன்.

முரளிக்கும், சபேஷுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. "இல்லை சார். நாங்க இந்தக் காலணிக்குள்ள நலவாழ்வு சங்கம்னு ஒண்ணு வச்சிருக்கோம். அதனாலதான் புதுசா வந்திருக்கிற உங்களை வரவேற்று எங்க சங்கத்தைப் பத்தி சொல்லலாம்னு..." என்றான் சபேஷ்.

"சங்கத்தில சேரும்பீங்க. அப்புறம் சந்தா, நன்கொடைன்னு வசூல் பண்ணுவீங்க. நான் இதையெல்லாம் ஊக்குவிக்கறதல்ல!" என்றார் சிவராமன்.

"நாங்க சந்தா எதுவும் வாங்கறதில்ல சார். இங்க இருக்கறவங்களுக்குத் தேவையான சில நல்ல காரியங்களைச் செய்யறதுக்கும், பிரச்னைகளைத் தீக்கறதுக்கும் உதவறதுதான் எங்க நோக்கம். அவங்க அவங்க தங்களால் முடிஞ்ச அளவுக்குத் தங்களை ஈடுபடுத்திக்கலாம். நன்கொடை கூட சில சமயம் சில காரியங்களுக்காக அவங்களா விருப்பப்பட்டுக் கொடுக்கறதுதான்" என்றான் முரளி. 

"என்ன உதவி செய்வீங்க? எங்க வீட்டு சாக்கடை அடைச்சுக்கிடுச்சுன்னு சொன்னா வந்து சரி பண்ணுவீங்களா?"

"அந்த மாதிரி காரியங்களைக் கூட நாங்க செஞ்சிருக்கோம் சார்!" என்றான் சபேஷ்.

"சரி. எனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா உங்க கிட்ட கேக்கறேன்" என்றார் சிவராமன் கேலியான குரலில்.

முரளியும், சபேஷும் எழுந்து சென்று விட்டனர். 

அதற்குப் பிறகு சிலமுறை சங்கத்தின் கூட்டங்களுக்கு சிவராமனை அழைத்தார்கள். அவர் வரவில்லை. சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற சில கொண்டாட்டங்களுக்கு அவரை அழைத்தார்கள். அவர் வரவில்லை.

அவர் அவர்களை அலட்சியம் செய்தாலும், இருவரும் தேவைப்பட்டபோதெல்லாம் அவரை அணுகத் தயங்கியதில்லை.

ஒருமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பணம், உணவுப் பொருட்கள், உடைகள் போன்றவற்றைக் கொடுத்து உதவும்படி அவரிடம் கேட்டார்கள். அவர் மறுத்து விட்டார். "இதெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை. நான் ஏன் கொடுக்கணும்?" என்று சொல்லி விட்டார்.

இரண்டு மூன்று வருடங்கள் அவமானத்தைப் பொருட்படுத்தாமல், சந்தர்ப்பம் ஏற்பட்டபோதெல்லாம் அவரை அணுகினார்கள். அதற்குப் பிறகு அவரைச் சென்று பார்ப்பதை விட்டு விட்டார்கள். 

ல வருடங்கள் ஒடி விட்டன.

ஒரு நாள் முரளியின் நண்பன் கண்ணன் அவனிடம் வந்து "டேய், முரளி! சிவராமன் போயிட்டாராம்டா!" என்றான்.

"யார் சிவராமன்?" என்றான் முரளி.

"என்னடா இப்படிக் கேக்கற?  நீயும் சபேஷும் எத்தனை தடவை அவர் வீட்டுக்குப் போயிருப்பீங்க?"

"ஓ, அவரா? சாரி. அவரு எதிலேயும் பட்டுக்காம ஒதுங்கி இருந்ததால, அவர் இருக்கறதையே மறந்துட்டேன். இத்தனை நாள் அவர் இருந்தும் இல்லாத மாதிரிதானே இருந்தாரு? இருந்தாலும், அவர் இறந்ததைக் கேட்க வருத்தமாத்தான் இருக்கு. நாம அவர் வீட்டுக்குப் போய் அவர் உடலுக்கு மரியாதை செலுத்திட்டு, அவங்க குடும்பத்தினர் கிட்ட நம்ம துக்கத்தைத் தெரிவிச்சுட்டுத்தான் வரணும். வா போகலாம்" என்றான் முரளி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

பொருள்:  
பிறருக்கு உதவி செய்வது என்னும் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களே உயிர் வாழ்பவர்கள். மற்றவர்கள் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Friday, October 19, 2018

213. 'ஊருக்கு உழைப்பவர்'

அழைப்பு மணி அடித்ததும் ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள்.

"வணக்கம். நான் 'சமூக சாளரம்' பத்திரிகையிலேந்து வரேன். ராமலிங்கம் இருக்காரா?" என்றான் சுரேஷ்.

"அவர் ஊர்ல இல்லையே. உள்ள வாங்க" என்றவள், சுரேஷும் அவனுடன் வந்த நம்பியும் உள்ளே வந்து அமர்ந்ததும், "நான் அவர் மனைவி கல்யாணி. என்ன விஷயம்?" என்றாள்.

"அவரை ஒரு பேட்டி எடுக்கணும்."

"அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டாரே!"

"எங்க பத்திரிகையில் 'ஊருக்கு உழைப்பவர்'ங்கற தலைப்பில ஒவ்வொரு இதழிலும் சமூக சேவை செய்யற ஒத்தரைப் பத்தி எழுதறோம். உங்க கணவரைப் பத்திக் கேள்விப்பட்டோம்."

"என்ன கேள்விப்பட்டீங்க? அதைச் சொல்லுங்க!" என்றாள் கல்யாணி.

சுரேஷ் நம்பியிடம் திரும்ப, அவன் தன் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து சுரேஷிடம் கொடுத்தான்.

சுரேஷ் அதை ஒரு முறை வேகமாகப் பார்த்து விட்டு, "ராமலிங்கத்தைப் பத்தி அவருக்குத் தெரிஞ்ச ஒத்தர் எங்களுக்கு எழுதியிருக்கார். அதில இருக்கறதை சொல்றேன். ஏதாவது சரியில்லேன்னா சொல்லுங்க.

"ராமலிங்கம் ஒரு தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்பவே தன் சக தொழிலாளிகளுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு. யார் வீட்டிலேயாவது கல்யாணம் போன்ற மங்கள காரியமா இருந்தாலும், யாருக்காவது உடம்பு சரியில்லை, மரணம் மாதிரி சோக நிகழ்வுகளா இருந்தாலும் ராமலிங்கம் உதவிக்கு அங்கே போயிடுவார். அதிகம் பழக்கம் இல்லாத சகதொழிலாளிகளுக்குக் கூட உதவுவார். பண உதவி செய்யற அளவுக்கு அப்ப அவருக்கு வசதி இல்லாட்டாலும், ஓடியாடி உதவி செய்வார்.

"அவரோட வேலை செஞ்சவங்க, அவரோட மேலதிகாரிகள் இவர்களுக்கெல்லாம் அவர் மேல ரொம்ப மதிப்பும் அன்பும் உண்டு. அதிகம் படிக்காததால தொழிலாளியாகவே ரிடயர் ஆயிட்டார். ரிடயர் ஆனப்பறமும் காலையிலிருந்து இரவு வரை யாருக்காவது உதவி செஞ்சுக்கிட்டேதான் இருப்பார். ஏதாவது வெளியூர்ல வெள்ளம், விபத்து மாதிரி ஏதாவது நடந்தா கூட உடனே உதவி செய்ய அங்கே ஓடிடுவார். ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரிக்கெல்லாம் ஃபோன் வர மாதிரி, சில சமயம் இவருக்கும் ஃபோன் வரும். இதெல்லாம் சரிதானா?"

"கதை மாதிரி இருக்கு!" என்று சிரித்தாள் கல்யாணி.

"அப்ப இதெல்லாம் உண்மை இல்லையா?" என்றான் சுரேஷ் அதிர்ச்சியுடன்.

"உண்மைதான். ஆனா நீங்க கோர்வையா, கதை மாதிரி சொன்னப்ப, எனக்கு கேக்கறதுக்கு சுவாரசியமா இருந்தது. அதான் கதை மாதிரின்னு சொன்னேன். அவரு ரொம்ப அடக்கமானவரு. தான் செஞ்சதையெல்லாம் பத்திப் பேசவே மாட்டாரு. அதுக்கு அவருக்கு நேரமும் கிடையாது. ஏதோ அவசர வேலை மாதிரி எப்பவும் ஓடிக்கிட்டிருப்பாரு. ஆனா எனக்கு அவரோட நல்ல காரியங்களைப் பத்தி யாராவது சொன்னா, கேக்கப் பெருமையா இருக்கும். நீங்க சொல்றதைக் கேக்கறப்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு. நீங்க கதை மாதிரி சொன்னது சுவாரஸ்யமாவும் இருக்கு. அதான் அப்படிச் சொன்னேன்!"

"உங்க குடும்ப வாழ்க்கையைப் பத்தி சொல்லுங்க."

'எங்களுக்கு ஒரே பையன். கல்யாணம் ஆகி மனைவியோட ஜெர்மனியில் இருக்கான். எங்களுக்கு அங்கே போக விருப்பமில்லை. அதனால இங்க இருக்கோம்."

"தப்பா நினைக்காதீங்க. உங்க பையன் உங்களுக்குப் பணம் அனுப்பறாரா?"

"அவன் அனுப்பறதா சொன்ன பணத்தை ரெண்டு அனாதை இல்லத்துக்கு மாசாமாசம் அனுப்பச் சொல்லி அவர் சொல்லிட்டாரு. அவன் அது மாதிரி அனுப்பிக்கிட்டிருக்கான்."

ஓ! ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு. இப்ப அவர் எங்கே போயிருக்காருன்னு சொல்ல முடியுமா?"

"பொதுவா அவருக்கு அவர் செய்யற உதவிகளை பத்திப் பேசறது பிடிக்காது. இப்ப கூட நான் இதையெல்லாம் உங்க கிட்ட சொல்றது அவருக்குப் பிடிக்காது. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில ஒரு முதியோர் இல்லம் இருக்கு. அங்கே இருக்கிற ஒரு பெரியவருக்கு டிப்ரஷன். அவர் தனிமையா இருக்கறதாலதான் இப்படி, கூட யாராவது இருந்தா சரியாயிடும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதனால மாசத்துக்கு மூணு நாள் இவர் அங்கே போய் அவரோட இருந்துட்டு வருவாரு. மத்த நாட்கள்ள வேற சில பேர் இப்படி வராங்க போலருக்கு."

"தப்பா நினைச்சுக்காதீங்க. இதுக்கு ஏதாவது பணம் கொடுப்பாங்களா?" என்றான் நம்பி அவசரமாக. சுரேஷ் அவனை முறைத்தான்.

கல்யாணி சிரித்தபடியே, "இவர் போய் இருக்கற நாட்களுக்கு சாப்பாட்டுச் செலவு போன்ற விஷயங்களுக்கு கெஸ்ட் சார்ஜுன்னு கொடுக்கணும். அந்தப் பெரியவருக்கு அவ்வளவு வசதி இல்லைன்னு, தான் இருக்கற நாட்களுக்கான கெஸ்ட் சார்ஜை இவரே கொடுக்கறாரு!" என்றாள்.

"சாரி!" என்றான் நம்பி.

பேட்டி முடிந்து வெளியே வந்ததும், "ஊருக்கு உழைப்பவர்ங்கற நம்ம தலைப்புக்கு இவரை விடப் பொருத்தமா வேற யாரும் இருக்க மாட்டாங்க!" என்றான் சுரேஷ்.

"இவரை மாதிரி இன்னொருத்தரை இந்த உலகத்தில பாக்க முடியுமான்னு சந்தேகம்தான்!" என்றான் நம்பி.

"இந்த உலகத்தில மட்டும் இல்ல, தேவலோகம்னு சொல்றாங்களே, அங்கே போனா கூடப் பாக்க முடியாது!" என்றான் சுரேஷ் .

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

பொருள்:  
தேவர் உலகத்திலும், இந்த உலகத்திலும் பிறருக்கு உதவுவதை விடச் சிறந்த ஒன்றைக் காண முடியாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Tuesday, October 16, 2018

212. லாபத்தில் பங்கு!

"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன்.

நிறுவனத்தின் புரொப்ரைட்டர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.

"என்ன சார், நீங்க எதிர்பார்த்ததை விடக் குறைச்சலா இருக்கா?"

"இல்ல, வேற ஒரு கணக்கு போட்டுக்கிட்டிருக்கேன். சரி. இந்தக் காலத்தில ஒத்தர் சொந்தமாத் தொழில் ஆரம்பிக்கணும்னா எவ்வளவு முதலீடு தேவைப்படும்?"

"என்னால சரியா சொல்ல முடியாது சார். தொழிலைப் பொருத்துன்னு நினைக்கிறேன். எதுக்குக் கேக்கறீங்க?"

"பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பிக்க முடியுமா?"

"தெரியல சார். ரொம்பக் குறைச்சலா இருக்கும்னு நினைக்கிறேன்."

"ஐம்பதாயிரம் ரூபாயில?"

"ஒரு அளவுக்கு முடியும்னு நினைக்கிறேன்."

"ஆங். அப்ப சரி. ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் சின்னதா ஒரு தொழில் ஆரம்பிக்க முடியும்னு வச்சுக்கலாமா?"

"எதுக்கு சார் கேக்கறீங்க? யார் ஆரம்பிக்கப் போறாங்க?"

"யாரா வேணும்னா இருக்கலாம். நீங்க கூட ஆரம்பிக்கலாம். என் தொந்தரவு இல்லாம சுதந்திரமா இருக்கலாம்!"

"என்ன சார், என்னை வேலையை விட்டு அனுப்பப் போறீங்களா?" என்றார் கணேசன், சிரித்தபடி. மோகனுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தின் பின்னணியில் அப்படி நடக்காது என்று அவருக்குத் தெரியும்.

"ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு, அதன் மூலமா, வருஷா வருஷம் நமக்கு வர லாபத்தில் பத்து சதவீதத்தை புதுசாத் தொழில் ஆரம்பிக்க நினைக்கற ரெண்டு மூணு பேருக்கு முதலீடா கொடுத்து உதவலாம்னு நினைக்கிறேன். இந்த வருஷம் நமக்கு லாபம் பத்து லட்சங்கறதால, ஒரு லட்சம் ரூபா நாம கொடுக்க முடியும். அதிக பட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்ன்னு வச்சுக்கிட்டா குறைஞ்சது ரெண்டு பேருக்காவது உதவலாம். என்ன சொல்றீங்க?'

"ரொம்பப் பரந்த சிந்தனை சார் இது? ஆனா யாருக்குக் கொடுக்கப் போறோம், வட்டி எவ்வளவு, கடன் திரும்ப வரட்டா என்ன செய்யறதுன்னுல்லாம் யோசிக்கணுமே!"

"இது முதலீட்டுக்காக நாம கொடுத்து உதவற தொகை. வட்டியெல்லாம் கிடையாது. தொழில் நல்லா வந்தப்பறம், கடன்தொகையை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தா போதும்."

"ரொம்ப அற்புதமா இருக்கு சார். எனக்குக் கூட அப்ளை பண்ணலாமான்னு சபலம் வருது!"

"குறைஞ்ச முதலீட்டில தொழில் ஆரம்பிக்கறவங்களுக்கு நிதி உதவி கிடைக்கறது கஷ்டம். அவங்களை யாரும் நம்ப மாட்டாங்க. அவங்க கிட்ட அடமானமா கொடுக்க சொத்து இருக்காது. நான் இந்த சிரமத்தையெல்லாம் அனுபவிச்சிருக்கேன். சின்னதா ஆரம்பிச்சு, இந்தப் பத்து வருஷத்தில, பத்து லட்சம் ரூபா லாபம் சம்பாதிக்கிற அளவுக்கு வளந்திருக்கேன்.

"நான் சம்பாதிக்கறதில ஒரு பகுதியை மத்தவங்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தலாம்னு நினைச்சேன். ரொம்ப நாளாவே எனக்கு இந்த எண்ணம் உண்டு. இப்ப தொழில் ஸ்டெடி ஆகி பத்து லட்ச ரூபா லாபம் வந்திருக்கறதால இப்ப இதை செய்யலாம்னு தோணிச்சு."

"நல்லதுதான் சார். ஆனா பல பேர் கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டாங்களே."

"டிரஸ்ட்ல ரெண்டு மூணு நிபுணர்களை உறுப்பினர்களாப் போட்டு, வர விண்ணப்பங்களைப் பரிசீலனை செஞ்சு, ரெண்டு மூணு பேரைத் தேர்ந்தெடுக்கப் போறோம். அதனால நம்ப கிட்ட உதவி பெறுகிறவங்க தொழிலை வெற்றிகரமாப் பண்ணி கடனைத் திருப்பிக் கொடுப்பாங்கன்னு நம்புவோம். திரும்பி வர பணத்தை மறுபடி வேற யாருக்காவதுதானே கொடுக்கப் போறோம்?"

"ரொம்ப நல்ல எண்ணம் சார் உங்களுக்கு. ஒவ்வொரு வருஷமும்  நம்ம கம்பெனிக்கு நிறைய லாபம் வந்து இன்னும் நிறைய பேருக்கு நீங்க உதவி செய்யணும்னு கடவுளை வேண்டிக்கறேன்."

"அது சரி. நீங்க அப்ளை பண்ணப் போறீங்களா?" என்றார் மோகன் சிரித்தபடி.

"இல்ல சார். என் முதலாளி என்னை வேலையை விட்டுப் போக விட மாட்டாரு?"? என்றார் கணேசன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்:  
ஒருவன் முயற்சி செய்து சேர்க்கும் பொருள் எல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Monday, October 15, 2018

211. உதவிக்கு வரலாமா?

தன் சொந்த ஊரில் இருந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்று என் மனைவி விரும்பியதால் அந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டோம்.

"கோவிலுக்குப் போறதைத் தவிர சுந்தரம் மாமாவையும் பாக்கணும்!" என்றாள் மனைவி.

"97"

"அப்படின்னா?"

"97ஆவது தடவையா இதை நீ சொல்ற!"

"நீங்க அவரைப் பாத்தீங்கன்னா நீங்களும் அவரைப் பத்திப் பேசிக்கிட்டே இருப்பீங்க."

"உலகத்தில மத்தவங்களுக்கு உதவி செய்யறவங்க எத்தனையோ பேரு இருக்காங்க."

"இருக்காங்க. ஆனா தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு வித்தியாசம் பாக்காம, பதில் உதவி எதிர்பாக்காம உதவி செய்யறவங்க எத்தனை பேரு இருக்காங்க?" என்றாள் மனைவி.

சுந்தரம் என்ற அவள் ஊர்க்காரர் அவள் குடும்பத்துக்கும் மற்ற பலருக்கும் செய்த உதவிகளைப் பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறாள் என் மனைவி.

"அவரைப் பற்றி நீ 'சுந்தர காண்டம்' னு ஒரு காவியம் எழுதலாம்!" என்று நான் அவளைக் கிண்டல் செய்வதுண்டு. என் மனைவிக்குக் கதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. அதனால் அவள் எதையும் மிகைப்படுத்துவாள் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு.

என் நல்ல குணங்களைப்(!) பற்றியும் மிகைப்படுத்தி அவள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ! அப்படி இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

நேரே கோவிலுக்குத்தான் போனோம். கோவில் பூட்டி இருந்தது. குருக்கள் வீடு அருகில்தான் இருந்தது. போய் விசாரித்தோம். குருக்கள் அப்போதுதான் கோவிலைப் பூட்டி விட்டுப் பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் போயிருப்பதாகவும் மாலைதான் வருவார் என்றும் சொன்னார்கள்.

மாலை இன்னொரு இடத்துக்குப் போகலாம் என்று திட்டமிட்டிருந்ததால் என்ன செய்வதென்று யோசித்தோம். முதலில் சுந்தரத்தைப் பார்த்து விட்டு அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து அவர் வீட்டுக்குப் போனோம்.

"தோப்புக்குப் போயிருக்காரு, இப்ப வந்துடுவாரு. இப்படி உட்காருங்க" என்று பாயை விரித்தாள் அவர் மனைவி. என் மனைவிக்கு அவளை அவ்வளவு பரிச்சயமில்லை போல் தோன்றியது.

"பரவாயில்லை. திண்ணையிலேயே உக்காந்துக்கறோம்" என்று திண்ணையில் உட்கார்ந்தோம். ஐந்து நிமிடத்தில் சுந்தரம் வந்து விட்டார்.

"அடாடா! கலாவா? இதுதாம்மா நீ பொறந்த ஊர்! ஞாபகம் இருக்கா?" என்றார்.

"என்ன மாமா நீங்க!" என்றாள் என் மனைவி.

"உன் அப்பா அம்மா இங்கே இல்லேன்னா நீ ஊருக்கே வரக்கூடாதா? நாங்கள்ளாம் இல்லை?" என்று உரிமையோடு கோபித்துக் கொண்டவர், "நீங்க நம்ம வீட்டுலதான் சாப்பிடணும். கௌரி கிட்ட சொல்லிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு உள்ளே போக யத்தனித்தவரைத் தடுத்து, "வேண்டாம் சார். நாங்க டவுன்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சுட்டோம். அவங்க ரெடி பண்ணி இருப்பாங்க" என்றேன் நான்.

"ஏன் அவ்வளவு அவசரம்?" என்று அவர் சொன்னபோதே ஒரு ஆள் இளநீர்க் குலைகளுடன் வந்தான். அவற்றை வெட்ட ஆரம்பித்தான்.

"உங்களுக்குத்தான். தெரு முனையிலேயே உங்களைப் பாத்துட்டேன். அதான் மறுபடி தோப்புக்குப் போய் இளநீர் வெட்டி எடுத்துக்கிட்டு வரச் சொன்னேன்" என்றார்.

நாங்கள் ஒரு இளநீர் குடித்து முடித்ததும், அந்த ஆள் இன்னொரு இளநீரை வெட்ட ஆரம்பித்தான்.

"போதும்! போதும்!" என்றேன்.

"பரவாயில்ல, குடிங்க! இந்த வெயிலுக்கு அஞ்சாறு இளநீர் குடிச்சா கூட தாகம் அடங்காது. இன்னும் ஒரு இளநீராவது குடிங்க!" என்றவர்,"கோயிலுக்குப் போயிட்டு வந்துட்டீங்க இல்ல?" என்றார்.

"கோவில் பூட்டியிருக்கு. குருக்கள் வெளியே போயிட்டாராம்" என்றாள் என் மனைவி.

"அப்படியா?" என்றவர், "சரி. இங்கேயே இருங்க. இதோ வந்துடறேன்" என்று குருக்கள் வீட்டை நோக்கி நடந்தார். 

ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தவர், "குருக்கள் பையன் இருக்கான். சின்னப் பையன். குருக்கள் இல்லாதப்ப கோயிலைத் திறந்து விளக்கேத்தி நைவேத்தியம் எல்லாம் பண்ணுவான். அர்ச்சனை எல்லாம் பண்ணத் தெரியாது. ஆனா மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டுவான். நீங்க அவசரமாப் போகணுங்கறதால அவன்கிட்ட சொல்லி சாமிக்கு பூ சாத்தி பழம் நைவேத்தியம் பண்ணி தீபாராதனை காட்டச் சொல்லி இருக்கேன். அர்ச்சனை பண்ணனும்னா நீங்க சாயந்திரம் வரை இருந்து குருக்கள் வந்தப்பறம் அர்ச்சனை பண்ணிக்கிட்டுப் போகலாம்" என்றார்.

கோவிலுக்குப் போகும்போது "பாத்தீங்களா? நமக்கு என்ன வந்ததுன்னு போகாம எப்படி ஓடியாடி உதவி செய்யறார் பாருங்க!" என்றாள் மனைவி.

"உதவி செய்யற குணம் இருக்குதான். ஆனா நீ அவருக்குத் தெரிஞ்சவ. வேற யாராவதுன்னா இந்த அளவுக்கு உதவுவார்னு சொல்ல முடியுமா?" என்றேன் நான்.

மனைவி பதில் சொல்லவில்லை.

கோவிலுக்குப் போனபோது கோவில் திறந்திருந்தது, குருக்களின் பையன் இருந்தான். இன்னொரு வெளியூர்க்காரரும் அப்போது கோவிலுக்கு வந்திருந்தார்.

கோவிலில் தரிசனம் முடிந்து சுந்தரத்தின் வீட்டுக்கு வந்தபோது சுந்தரத்தின் ஆள் என் காரைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு ஏம்ப்பா இந்த வேலையெல்லாம்? ஐயா துடைக்கச் சொன்னாரா?" என்றேன்.

"இல்லீங்க. ஐயா எப்பவும் யாருக்காவது ஏதாவது உதவி செஞ்சுக்கிட்டே இருப்பாரு. அவரைப் பாத்துப் பாத்து எனக்கும் நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யலாம்னு தோணும். தோப்பில வேலை முடிஞ்சுடுச்சு. சும்மாதான் இருந்தேன். இந்த மண் ரோட்ல வந்ததில கார்ல தூசி படிஞ்சிருந்தது. அதான் துடைச்சேன். எனக்கு காரெல்லாம் துடைச்சுப் பழக்கமில்லை. நைஸ் துணியால மேலாகத்தான் துடைச்சேன்" என்றான் அந்த ஆள்.

"உன் முதலாளிக்கு ஏத்த ஆளா இருக்கியே!" என்றபடி அவனிடம் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன்.

"வேண்டாங்க. காசுக்காக செய்யல. சும்மா நின்னுக்கிட்டிருந்த நேரத்தில கொஞ்சம் துடைச்சேன். அவ்வளவுதான்" என்றான் அவன்.

இதற்குள் சுந்தரம் உள்ளிருந்து வந்தார். "என்ன, தரிசனம் கிடைச்சுதா? வீட்டில உப்புமா பண்ணியிருக்கா. கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போங்க. டவுன் போற வரையில தாங்கணுமே!" என்றார்.

"வேண்டாம் சார்!" என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எங்களுடன் கோவிலுக்கு வந்தவர் தெருவில் வந்து கொண்டிருந்தார்.

"வெளியூரா?" என்றார் சுந்தரம் அவரைப் பார்த்து."கோவிலுக்கு வந்தீங்களா?" என்றார் தொடர்ந்து.

"ஆமாம்" என்றார் அவர்.

"நல்ல வெய்யில். நம்ம வீட்டில சாப்பிட்டுட்டு ஓய்வெடுத்துட்டு அப்புறம் போகலாமே!" என்றார் சுந்தரம்.

"இல்ல, நான் போகணும்" என்றார் அவர் நெளிந்தபடி.

"ஒரு இளநீராவது குடிச்சுட்டுப் போங்க" என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, திண்ணையில் இருந்த இளநீர்களில் ஒன்றை எடுத்து வெட்ட ஆரம்பித்தான் அவருடைய ஆள்.

"என்னங்க இது? நான் முன்ன பின்ன தெரியாதவன்!" என்றார் அவர்.

அவர் இளநீர் குடித்து முடித்ததும், "பஸ்லயா போகப் போறீங்க?" என்றார் சுந்தரம்.

"ஆமாம்."

"பஸ் ஸ்டாப் கொஞ்ச தூரம். அதுக்கு முன்னால இங்க ஒரு ஸ்டாப்பிங் இருக்கு. ஆனா அங்கே தெரிஞ்ச ஆளுங்க நின்னாதான் பஸ்ஸை நிறுத்துவாங்க. நான் அங்கே வந்து உங்களை ஏத்தி விடறேன்" என்றார் சுந்தரம்.

"நான் போய் ஏத்தி விடறேங்க" என்றான் அவர் ஆள்.

"உன்னைப் பாத்தா நிறுத்துவாங்களோ என்னவோ? என்னை இந்த ரூட்ல போற எல்லா பஸ் டிரைவர்களுக்கும் தெரியும்" என்றவர் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு செருப்பை மாட்டிக் கொள்ளப் போனார்.

"உங்களுக்கு ஏங்க சிரமம்?  நான் பஸ் ஸ்டாப்புக்கே போய்க்கறேன்" என்றார் வெளியூர்க்காரர்.

"நானே என் கார்ல அவரை அழைச்சுக்கிட்டு போயிடறன்" என்றேன் நான் சுந்தரத்திடம். 

வெளியூர்க்காரரிடம் திரும்பி "டவுனுக்குத்தானே போகணும்? நாங்களும் அங்கதான் போறோம்" என்றேன்.

அவர் மௌனமாகத் தலையாட்டினார்.

என் மனைவி என்னைப் பார்த்துப் பெருமையுடன் சிரித்தாள்.

சுந்தரத்தின் உதவும் குணம் எனக்கும் கொஞ்சம் வந்து விட்டதாக நினைத்தாளோ என்னவோ!

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

பொருள்:  
மழை கைம்மாற்றை எதிர்பார்த்துப் பெய்வதில்லை. அந்த மழை போன்ற இயல்புடையவர்களும் பதில் உதவி எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















Sunday, October 14, 2018

210. அனுபவம் பலவிதம்

அந்தப் பொழுதுபோக்கு சங்கத் கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக சில உறுப்பினர்கள் தாங்கள் சந்தித்த பிரச்னைகளையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர்.

சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் தங்கள் போட்டியாளர்களை ஒழிக்கத் தாங்கள் செய்த சதிகள், குறுக்கு வழிகள், சட்ட விரோதச் செயல்கள் இவற்றையெல்லாம் கூடப் பகிர்ந்து கொண்டனர். 

மற்றவர்கள் தங்கள் அலுவலகங்கள், குடியிருக்கும் பகுதி இங்கெல்லாம் தங்களுக்கு எழுந்த பிரச்னைகளைத் தாங்கள் சமாளித்த விதம் பற்றிப் பேசினர்.

அது நெருக்கமான உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் என்பதால், தாங்கள் சொல்வது வெளியே செல்லாது என்ற நம்பிக்கையில் அனைவரும் மிகவும் வெளிப்படையாகவும், உற்சாகமாகவும் பேசினர். 

அங்கே ஒரு போலீஸ்காரர் இருந்திருந்தால், சிலரின் பேச்சை ஒப்புதல் வாக்குமூலமாகக் கொண்டு அவர்கள் மேல் வழக்குப் போடும் அளவுக்குக் கடுமையான குற்றங்களைப் பற்றிக் கூட பயமில்லாமல் பேசினர்.

ராஜவேலுவின் முறை வந்தது. ராஜவேலு ஒரு பெரிய வியாபாரி. சிறிய ஜவுளிக்கடை வைத்துத் தன் வியாபார வாழ்க்கையைத் தொடங்கியவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பல்வகைப் பொருட்களையும் விற்கும் பெரிய சூப்பர் மார்க்கெட்டை உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தார்.

"உங்க பேச்சையெல்லாம் கேக்க பிரமிப்பா இருந்தது. எல்லாரும் எத்தனையோ சவால்களை அருமையா சமாளிச்சு முன்னேறி இருக்கீங்க. ஆனா நான் ஒரு எளிமையான மனுஷன். எனக்கு பிரச்னைன்னு பெரிசா எதுவும் வந்ததில்லை.

"சின்னச் சின்ன பிரச்னைகள் நிறைய வந்திருக்கு. ஆனா அவை வாழ்க்கையில இயல்பா நடக்கற விஷயங்கள்தான். வெற்றிகள், தோல்விகள் ரெண்டையும் நிறைய சந்திச்சிருக்கேன். எது வருதோ அதை ஏத்துக்கிட்டு அடுத்தாப்பல என்ன செய்யறதுன்னு யோசிச்சு செயல்படறதுதான் என் வழக்கம். 

"தொழில்ல போட்டி இருக்கும். ஆனா நான் அதைப் பெரிசா நினைக்கல. நான் முயற்சி செய்யற மாதிரி மத்தவங்களும் முயற்சி செய்யறாங்கன்னு எடுத்துப்பேன். சில சமயம் நான் ஜெயிப்பேன். சில சமயம் வேற யாராவது ஜெயிப்பாங்க. அதனால எனக்கு முன்னால பேசினவங்கள்லாம் சொன்ன மாதிரி பெரிசா சொல்லிக்க எங்கிட்ட எதுவும் இல்லை!" என்றார் அவர்.

"நீங்க ஒண்ணும் செய்யாட்டாலும் உங்க போட்டியாளர்கள் உங்களைக் கவிழ்க்க நிறைய சதி பண்ணியிருப்பாங்களே அதையெல்லாம் எப்படி முறியடிச்சீங்க?" என்று கேட்டார் ஒரு உறுப்பினர்.

"அப்படி யாரும் சதி செஞ்ச மாதிரி எனக்குத் தெரியல. வியாபாரத்தைப் பெருக்க நான் சிலதைச் செய்யற மாதிரி மத்தவங்க சிலது செய்யறாங்க. அப்படித்தான் நான் அதைப் பாக்கறேன்" என்றார் ராஜவேலு.

கூட்டம் முடிந்ததும், அவர் நண்பர் சிகாமணியின் கார் பழுதடைந்திருந்ததால் அவரை வீட்டில் விட்டு விடுவதாகச் சொல்லித் தன் காரில் அழைத்துச் சென்றார் ராஜவேலு.

"என்ன ராஜவேலு, ஏதாவது சுவாரசியமா சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தா, சப்புன்னு ஆயிடுச்சே!" என்றார் சிகாமணி, காரில் போகும்போது.

"சிகாமணி! நீங்க வியாபாரி இல்ல, வக்கீல். அதனால உங்ககிட்ட இதைச் சொல்றேன். இன்னிக்குப் பேசினவங்கள்ள நிறைய பேரு தாங்க ஜெயிக்கணும்கறதுக்காக அடுத்தவங்களுக்குக் கெடுதல் செஞ்சதா ஒத்துக்கிட்டாங்க. மத்தவங்க இவங்களோட போட்டிக்கு வந்ததால இவங்க அவங்களுக்கு எதிரா சில வேலைகளைச் செஞ்சதாச் சொன்னாலும், போட்டியாளர்களை விரோதிகளா நினைச்சு அவங்களை அழிக்கப் பல வேலைகளை செஞ்சிருக்காங்க. அதனால இவர்களுக்கும் பிரச்னைகள் வந்திருக்கு.

"என்னைப் பொருத்தவரையிலும் நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. நான் வியாபாரம் பண்ற மாதிரி இன்னொத்தரும் பண்றாரு. அவரை ஏன் நான் என் எதிரியா நினைக்கணும்? அவரு என்னை முந்திப் போனாலும் நான் என்ன முயற்சி செய்யலாம்னு பாப்பேனே தவிர, அவங்களைக் கவுக்கறது எப்படின்னு பாக்க மாட்டேன். என்னை வியாபாரத்துக்கு லாயக்கு இல்லாதவன்னு கூட சில பேர் சொல்லி இருக்காங்க.

"நான் என்ன நினைக்கிறேன்னா, நான் யாருக்கும் கெடுதல் செய்யாததால, எனக்கும் கெடுதல் எதுவும் நடக்கலை. இன்னிக்கு மத்தவங்க பேசினதைக் கேட்டப்ப எனக்கு இது உறுதியாயிடுச்சு. ஏன்னா, அவங்க மத்தவங்களுக்குக் கெடுதல் செஞ்சதை ஒப்புக்கறாங்க. ஆனா, அதனால அவங்களுக்கு இன்னும் அதிகக் கெடுதல் வந்ததே தவிர அவங்க பிரச்னைகள் தீரல்ல. இது என் பார்வை.  நீங்க என்ன நினைக்கறீங்க?" என்றார் ராஜவேலு

"நீங்க வக்கீல் இல்ல. ஆனா உங்க பேச்சைக் கேக்கறப்ப, நீங்க வக்கீல் தொழிலுக்கு வந்திருந்தா என்னைத் தொழில்லேந்து விரட்டி இருப்பீங்கன்னு தோணுது!" என்றார் சிகாமணி சிரித்தபடி.

   அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்..

பொருள்:  
ஒருவன் தவறான வழியில் சென்று பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருந்தால் அவனுக்குக் கேடு வராது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Saturday, October 13, 2018

209. இனிப்பும் கசப்பும்

"உனக்கு இனிப்பு பிடிக்குமே அம்மா, அப்புறம் ஏன் வேண்டாம்னுட்டே?" என்று கேட்டாள் சுமதி.

"எனக்கு இனிப்பு பிடிக்கும்தான். ஆனா, அதைவிட எனக்கு என்னை அதிகம் பிடிக்குமே, அதான் சாப்பிடல!" என்றாள் சாரதா.

"அப்படின்னா?"

"உன்னை மாதிரி சின்னப் பொண்ணா இருந்தப்ப நான் நிறைய இனிப்பு சாப்பிடுவேன். இப்ப எனக்கு வயசாயிடுச்சு. அதிகமா இனிப்பு சாப்பிட்டா என் உடம்புக்கு ஒத்துக்காது. அதனாலதான் இனிப்பு சாப்பிடறதைக் குறைச்சுக்கறேன். இனிப்பு சாப்பிட்டா நல்லா இருக்கும்தான். ஆனா என் உடம்பு நல்லா இருக்கறது எனக்கு முக்கியம் இல்லையா, அதான் அப்படிச் சொன்னேன். புரிஞ்சுதா?"

"புரியற மாதிரி இருக்கு!" என்றாள் சுமதி.

தொலைக்காட்சியில் சாரதா சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது சுமதி வந்தாள்.

தொலைக்காட்சியை சில வினாடிகள் பார்த்து விட்டு, "அந்த ஆன்ட்டி ஏம்மா அழறாங்க?" என்றாள்.

"அது பெரிய கதைடி. உனக்குப் புரியாது. பெரியவங்களுக்குத்தான் புரியும். நீ போய்ப் படி!" என்றாள் சாரதா.

"இல்லம்மா. இதை மட்டும் சொல்லேன்."

"அந்தப் பொண்ணு மத்தவங்களுக்கு நிறையக் கெடுதல் பண்ணினா. இப்ப எல்லாரும் அவளை விட்டுப் போயிட்டாங்க. அவ குழந்தை கூட 'நீ கெட்ட அம்மா. நான் உன்கிட்ட இருக்க மாட்டேன்'னு சொல்லிட்டுப் போயிடுச்சு. அதான் அவ அழறா"

"அந்த ஆன்ட்டிக்குத் தன்னையே பிடிக்காதா?" என்றாள் சுமதி.

"என்னடி சொல்ற?" என்றாள் சாரதா, மகள் சொல்வது புரியாமல்.

"அன்னிக்கு நீ சொன்ன இல்ல. உனக்கு உன்னைப் பிடிக்கும், அதனாலதான்  இனிப்பு சாப்பிட்டா உடம்புக்குக் கெடுதல் வரும்னுட்டு சாப்பிடாம இருக்கேன்னு?"

"ஆமாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"அந்த ஆன்ட்டிக்கு தன்னைப் பிடிச்சிருந்தா தனக்குக் கஷ்டம் வரக் கூடாதுன்னு நினைச்சிருப்பாங்க இல்ல? அதனால மத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணாம இருந்திருப்பாங்களே! அப்புறம் அவங்க இப்படி கஷ்டப்பட வேண்டி இருந்திருக்காது இல்ல?" என்றாள் சுமதி.

தான் சாதாரணமாகச் சொன்ன ஒரு விஷயத்தை வேறொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தித் தன் பெண் எத்தனை அருமையாகச் சிந்தித்திருக்கிறாள் என்று பெருமையாக இருந்தது சாரதாவுக்கு.

"இங்க வாடி!" என்று மகளை அருகில் அழைத்து அவளைத் தழுவிக் கொண்டாள் சாரதா.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்.

பொருள்:  
ஒருவன் தன்னை நேசிப்பவனாக இருந்தால், சிறிதளவு கூட மற்றவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

208. சாமிக்கண்ணுவின் வருத்தம்

"ஏங்க, நியாயமாத் தொழில் பண்றீங்க. ஆனா, வருமானம் வர மாட்டேங்குதே!" என்றாள் சொர்ணம்.

"என்ன செய்யறது? பாக்கலாம்" என்றான் சாமிக்கண்ணு.

மளிகைக்கடை வியாபாரம் சரியாக வராததால், சிறிது காலத்துக்குப் பிறகு, கடையை மூடி  விட்டு, கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான் சாமிக்கண்ணு.

கூலி வேலையில் வந்த வருமானம் போதவில்லை. வியாபாரத்துக்காக வாங்கிய கடன்கள் கொஞ்சம் இருந்தன. அவற்றுக்கு வட்டியும், அசலும் கட்ட வேண்டி இருந்தது.

சில நாட்கள் வேலை இருக்காது. வேலை இருந்த நாட்களிலும் கூலி என்று பெரிதாகக் கிடைக்கவில்லை.

"நானும் வேலைக்குப் போகலாம். ஆனா எனக்கு உடம்பில பலம் இல்லையே!" என்றாள் சொர்ணம்.

"ஒண்ணும் வேண்டாம். நீ வீட்டு வேலை பாக்கறதே பெரிய விஷயம். நான் பாத்துக்கறேன். கொஞ்ச நாள்ள எல்லாம்  சரியாயிடும்" என்றான் சாமிக்கண்ணு.

"எங்கே? கொஞ்ச நாள் கொஞ்ச நாள்னு பத்து வருஷமா இப்படியேதான் சொல்லிக்கிட்டிருக்கோம்!"

"பரவாயில்லை. நாம ரெண்டு பேர்தானே? சமாளிச்சுக்கலாம்" என்றான் சாமிக்கண்ணு.

"அதாங்க எனக்கு இன்னும் வருத்தமா இருக்கு. என் உடம்பு பலவீனமா இருக்கறதால நமக்குக் குழந்தை பிறக்காதுன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. கடைசி காலத்தில நம்மளைக் காப்பாத்தக் கூடப் பிள்ளைங்க இருக்க மாட்டாங்களே!" என்றாள் சொர்ணம். சொல்லும்போதே, துக்கத்தில் தொண்டை அடைத்தது.

"ஏங்க நமக்கு மட்டும் இப்படி எல்லாம் கஷ்டமாவே நடந்துக்கிட்டிருக்கு?" என்றாள் சொர்ணம்.

சாமிக்கண்ணுக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியும், ஆனால் அவளிடம் சொல்லவில்லை. பத்து ஆண்டுகள் முன்பு வரை ஒரு பணக்காரனுக்கு அடியாளாக இருந்து, எத்தனையோ பேரை மிரட்டி, அடித்து, கை கால்களை ஒடித்து, எத்தனையோ தீங்குகளைச் செய்து விட்டு, சொர்ணத்தைக் கல்யாணம் செய்து கொண்டதும், அவள் பேச்சைக் கேட்டு அடியாள் வேலையை விட்டு விட்டு நல்லவனாக வாழ்ந்தாலும், முன்பு பலருக்கும் தான் செய்த கெடுதல்களின் பலனைத் தான் அனுபவிக்கத்தானே வேண்டும்?

ஆனாலும் ஒரு தவறும் செய்யாத சொர்ணமும் தன்னுடன் சேர்ந்து கஷ்டப்படுவதுதான் அவனுக்கு வருத்தமாயிருந்தது.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அடி உறைந் தற்று.

பொருள்:  
ஒருவருடைய நிழல் அவரை விடாது அவர் காலடியிலேயே இருப்பது போல், ஒருவர் செய்த தீவினையால் அவருக்கு நேரும் கெடுதல்களும் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Thursday, October 11, 2018

207. கை நழுவிய வெற்றிக்கனி

கட்சித் தலைவர் கரிகாலன் வயது காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாக சில வாரங்கள் முன்பு அறிவித்திருந்தார். 

கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் பரந்தாமனுக்கும், குணசீலனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கரிகாலன் இருவரில் ஒருவரையும் ஆதரிக்காமல் நடுநிலையாக இருந்து தேர்தல் சுமுகமாக நடைபெற வகை செய்தார்.

ஆயினும் பரந்தாமன் சுலபமாக வெற்றி பெற்று விட்டான்.

பரந்தாமனுக்கு தலைவர் பதவி வாழ்க்கையில் ஒரு லட்சியமாகவே இருந்தது. அதனால் இந்த வெற்றி அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.

பரந்தாமன் தலைவர் பதவி ஏற்க ஒரு வாரம் கழித்து ஒரு நாள் முடிவு செய்யப்பட்டது.

ரந்தாமன் பதவி ஏற்க வேண்டிய நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஆறு மாதங்களுக்கு முன் பரந்தாமன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கனகா கட்சித் தலைவரிடம் ஒரு புகார் மனு அளித்தாள். அதை விசாரிப்பதாகவும், அது பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கரிகாலன் அவளிடம் சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.

ஆனால் சில மணி நேரங்களில் அவள் கொடுத்த கடிதத்தின் புகைப்பட நகல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி விட்டது.

"என்ன செய்யலாம். சொல்லுங்க" என்றார் கரிகாலன்.

"இது பொய் ஐயா!" என்றான் பரந்தாமன்.

"இது உண்மையா இருந்தாலும் எனக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்ல. ஆனா இந்தப் புகார் விஷயம் இப்ப நாடு முழுக்கப் பரவிட்டுதே!" என்றார் கரிகாலன்.

"தலைவர் தேர்தல்ல தோற்ற ஆத்திரத்தில குணசீலன்தான் இப்படிப் பண்ணி இருப்பாரு."

"இருக்கலாம். இதையெல்லாம் நிரூபிக்க முடியாது. உங்க மேல கொடுக்கப்பட்ட புகாரைக் கூட நிரூபிக்க முடியாது. ஆனா ஜனங்க இது உண்மைதான்னு நினைப்பாங்க. அதோட சம்பவம் நடந்ததா அந்தப் பொண்ணு சொல்ற தேதியில் நீங்க கோயமுத்தூர்ல இருந்திருக்கீங்க. உங்களை வரவேற்றவங்கள்ள அந்தப் பொண்ணும் இருக்கா. ஃபோட்டோ, வீடியோ எல்லாம் இருக்கு. கூட்டத்தில நீங்க அந்தப் பொண்ணை மட்டும் தனியா ஒரு பார்வை பாத்தீங்கன்னு கூட சில பேரு கற்பனை செஞ்சு எழுதுவாங்க! உங்க கிட்ட அப்ப கொடுக்கப்பட்ட நிர்வாகிங்க பட்டியல்ல அவ பேரும் இருக்கு. அந்த லிஸ்ட்லேந்து நீங்க அவ ஃபோன் நம்பரைப் பாத்து அவளுக்கு ஃபோன் பண்ணி அவளை உங்க அறைக்குத் தனியா வரச் சொன்னீங்கன்னு அவ சொல்றா."

"அப்படி எதுவும் நடக்கவே இல்லை ஐயா! இதுவரையில் பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா என் மேல ஒரு புகார் கூட இல்லை, ஏன், வதந்தி கூட இல்ல. நான் தலைவரா வரக்கூடாதுங்கறதுக்காக கட்சியில என் எதிரிகள் செய்யற சதி இது..."

"உண்மைதான். ஆனா அதுதான் நடக்கப் போகுது!"

"என்ன ஐயா சொல்றீங்க?"

"இந்த நிலையில நீங்க எப்படித் தலைவராப் பொறுப்பேற்க முடியும்? கொஞ்ச நாள் எதிலும் கலந்துக்காம ஒதுங்கி இருங்க. மறுபடி உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும். காத்திருங்க."

"அப்ப, தலைவர் யாருங்கய்யா?"

"கொஞ்ச நாளைக்கு நானே தொடர வேண்டியதுதான். இப்ப இருக்கற நிலையில, அதைத் தவிர வேறு வழி இல்லை" என்றார் கரிகாலன்.

"என்னண்ணே, இப்படி ஆயிடுச்சு?" என்றான் பரந்தாமனின் ஆதரவாளன் சண்முகம்.

பரந்தாமன் பதில் சொல்லவில்லை.

"குணசீலன் பண்ணின சதி அண்ணே!"

பரந்தாமன் இல்லையென்று மௌனமாகத் தலையாட்டினான். 

அவனே கரிகாலனிடம் இரண்டு நாட்கள் முன்பு அப்படித்தான் சொன்னான். ஆனால் இந்த இரண்டு நாட்களாக யோசித்ததில் அவனுக்குப் பல்வேறு சிந்தனைகள் தோன்றின. கடைசியில் ஒரு தெளிவு பிறந்தது.

ப்போது பரந்தாமன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு முன்னோட்டம் போல் பள்ளி நாட்களிலேயே ஐந்தாறு மாணவர்களைக் கூட சேர்த்துக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் நடந்து வந்தான். 

அதனால் அவன் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

ஒரு முறை கிருஷ்ணன் அவனைப் பற்றித் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விட்டார். 

தலைமை ஆசிரியர் பரந்தாமனை அழைத்துக் கடுமையாகக் கண்டித்து, பள்ளியை விட்டே வெளியேற்றி விடுவேன் என்று எச்சரித்து அனுப்பினார்.

இதனால் பரந்தாமன் கொஞ்சம் நிலை குலைந்து போய் விட்டான். வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ததால்தானே இப்படி நேர்ந்தது என்று அவர் மீது கோபம் வந்தது. அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தான்.

அவன் வகுப்பில் ராதா என்று ஒரு மாணவி இருந்தாள். அவள் படிப்பில் அதிக ஆர்வம் உள்ளவள், வகுப்பிலேயே அதிக மதிப்பெண்கள் வாங்குபவள் என்பதால் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணனுக்கு அவள் மீது கொஞ்சம் அதிக அன்பும் அக்கறையும் உண்டு.  அதை அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்.

ஒரு நாள் இரவு பரந்தாமனும், அவன் நண்பர்கள் சிலரும் சுவரேறிக் குதித்து பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து பள்ளிச் சுவர்களில் நான்கைந்து இடங்களில் கிருஷ்ணனையும் ராதாவையும் தொடர்பு படுத்தி அநாகரிகமாக சில வாசகங்களைக் கரிக்கட்டையால் எழுதி விட்டு வந்தார்கள். கிருஷ்ணன், ராதா என்ற பெயர்ப் பொருத்தம் வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

அடுத்த நாள் பள்ளிக்கு வந்த ராதா சுவற்றில் எழுதப்பட்டவற்றைப் பார்த்து விட்டு அழுது கொண்டே வீட்டுக்கு ஓடியவள்தான். அதன் பிறகு அவள் பள்ளிக்கே வரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு அவள் பெற்றோர் அவளுக்கு வெளியூரில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது.

பரந்தாமன் மீது சந்தேகம் இருந்தாலும், ஆதாரம் இல்லாததால் பள்ளி நிர்வாகம் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமை ஆசிரியர் பரந்தாமனை அழைத்து விசாரித்தார். தான் எழுதவில்லை என்று சாதித்து விட்டான். தலைமை ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் எச்சரிக்கை செய்து விவகாரத்தை முடித்தார்.

கிருஷ்ணனைப் பழி வாங்க நினைத்து ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு, தன்னை அறியாமல் கெடுதல் செய்து விட்டோமே என்று பரந்தாமனுக்கு அவ்வப்போது தோன்றும். 

பாவம்! நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண். நிறையப் படித்து, நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் உயர்ந்திருக்கலாம்.

அது கிராமம் என்பதால், அவதூறுக்கு பயந்து, அவள் பெற்றோர்கள் அவள் படிப்பை நிறுத்தியதுடன், அவளுக்கு அவசரமாகக் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள். 

அவள் திருமண வாழ்க்கை நன்றாக அமைந்ததா என்பது கூட பரந்தாமனுக்குத் தெரியாது.

ப்போது 30 வருடங்களுக்குப் பிறகு அந்தச் சம்பவம் பரந்தாமன் மனத்தில் திரைப்படம் போல் ஓடியது. 

பரந்தாமனுக்கு எதிராக குணசீலனோ யாரோ சதி செய்திருக்கலாம். கடந்த காலத்தில், கட்சிக்குள்ளும் வெளியிலும் அவனுடைய அரசியல் எதிரிகள் செய்த எத்தனையோ சதிகளிலிருந்து அவன் மீண்டு வந்திருக்கிறான்.

ஒரு பறவையின் இறக்கை பட்டதால் ஒரு விமானம் கீழே விழுந்தது போல் அவனுடைய வலுவான அரசியல் தளம் ஒரு பொய்யான குற்றச்சாட்டால் சரிந்து விட்டதற்குக் காரணம் தான் ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு இழைத்த அநீதிதான் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை.

"என்னங்க இப்படி வேகமாத் தலையை ஆட்டறீங்க? அப்ப இது குணசீலன் செஞ்ச சதி இல்லைங்கறீங்களா?" என்றான் சண்முகம்.

பரந்தாமன் நிறுத்தாமல் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக் கொண்டே இருந்தான்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்.

பொருள்:  
ஒருவர் எந்தப் பகையிலிருந்தும் தப்பி வாழ முடியும். ஆனால் அவர் செய்த தீவினை அவரை விடாது பின் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

        பொருட்பால்                                                                               காமத்துப்பால்