

"ஏற்கெனவே, தொழிலாளர்களுக்கு மத்த எந்த கம்பெனியிலேயும் கொடுக்கறதை விட அதிக சம்பளம், வசதிகள், அவங்க குழந்தைகள் படிப்பு, கல்யாணத்துக்கு நிதி உதவின்னு அள்ளிக் கொடுக்கறோம்.
"இது போதாதுன்னு, நம்ப தொழிற்சாலை இருக்கற ஊரைத் தத்து எடுத்துக்கிட்டு, அந்த ஊர்ல சாலை அமைக்கிறது, சாக்கடை வெட்டறது, பள்ளிக்கூடம் கட்டறதுன்னு ஏகப்பட்ட பணம் செலவழிக்கறோம். இதுக்கும் மேல, வெளியில பல நிறுவனங்களுக்கு நன்கொடை. இது ரொம்ப அதிகமா இல்லை?" என்றான் சதீஷ்.
"உன் தம்பி என்ன சொல்றான்னு கேக்கலாம்!" என்றார் நாதன்.
"நீங்க செய்யறது சரிதான்னு எனக்குத் தோணுதுப்பா. மத்தவங்களுக்கு மட்டும் இல்லாம, எங்களுக்கும் நீங்க ஒரு முன் உதாரணமா இருக்கீங்கன்னு நினைக்கறேன். உங்களை மாதிரி இன்னும் சில பேர் இருந்தா, இந்த உலகம் ரொம்ப நல்லா இருக்கும்" என்றான் மூர்த்தி.
"சதீஷ்! உன் தம்பிக்குப் புரியறது உனக்குப் புரியல. மத்தவங்களுக்கு உதவணும்கற எண்ணம் உனக்குக் கொஞ்சம் கூட இல்லாதது எனக்கு வருத்தமா இருக்கு" என்றார் நாதன்.
"நாதன்! நான் உங்க வக்கீல் மட்டும் இல்ல, உங்க நண்பரும் கூட. அதனால, நீங்க ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றார் கேசவன்.
நாதன் ஒரு பெருமூச்சு விட்டார்.
"கேசவன்! நான் சுயமா முன்னுக்கு வந்தவன். இன்னிக்கு, வெற்றிகரமா ஒரு தொழிலை நடத்திக்கிட்டு வரேன். என் பிள்ளைங்க ரெண்டு பேரும் பிஸினஸ்ல எனக்கு உதவியா இருக்காங்க.
"எனக்கு வாழ்க்கையில ஒரு கொள்கை உண்டு. என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவணும்கறதுதான் அது. இத்தனை வருஷமா அப்படித்தான் செஞ்சுக்கிட்டு வந்திருக்கேன். கடவுள் அருளாலே எனக்கு ஓரளவு வசதி இருக்கறதால, என்னால ஓரளவுக்கு மத்தவங்களுக்கு சில உதவிகள் செய்ய முடியுது.
"ஆனா, எனக்கப்புறம் என்ன ஆகும்? என் ரெண்டு பையன்களும் ஒற்றுமையா, திறமையா பிசினஸை நடத்துவங்கதான். ஆனா, ஒரு பிரச்னை இருக்கு. சின்னவன் மூர்த்தி என் மாதிரியே மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறவன். ஆனா, பெரியவனுக்கு இதில கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது. அதனால, இந்த விஷயத்தில ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு வரும். அது எதில போய் முடியும்னு தெரியாது.
"யாருக்கு மத்தவங்களுக்கு உதவற குணம் இருக்கோ, அவன்கிட்டதான் செல்வம், அதிகாரம் இதெல்லாம் இருக்கணும். நான் கடவுளா இருந்தா அப்படித்தான் பண்ணுவேன்! உலகத்தை என்னால மாத்த முடியாது. ஆனா, என்னோட சொத்துக்கள் விஷயத்தில என் விருப்பப்படி ஏற்பாடு பண்ணலாம் இல்லையா?
"என் ரெண்டு வீடுகளை என் ரெண்டு பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒண்ணா கொடுத்துடப் போறேன். பிசினஸை மட்டும் என் ரெண்டாவது மகன் மூர்த்திக்கு 75 சதவீதம், மூத்த மகன் சதீஷுக்கு 25 சதவீதம்னு பிரிக்கப் போறேன், சில நிபந்தனைகளோட."
"என்ன நிபந்தனைகள்"
"பெரிய பையன் சதீஷ் பிசினஸ்ல ஸ்லீப்பிங் பார்ட்னர்தான். நிர்வாகத்தில் அவனுக்கு எந்தப் பங்கோ, உரிமையோ கிடையாது. நிர்வாகம் முழுக்க முழுக்க சின்னவன் மூர்த்தியோட அதிகாரத்திலேயும், கட்டுப்பாட்டிலேயும்தான் இருக்கும்.
"லாபத்தில ஒரு பகுதியை மட்டும் பார்ட்னர்களுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டு, மீதியைத் தொழில் வளர்ச்சிக்கும், நன்கொடைகள், சமூகப் பணிகள் மாதிரி விஷயங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள, மூர்த்திக்கு அதிகாரம் உண்டு.
"லாபத்தில் எத்தனை சதவீதத்தை பார்ட்னர்களுக்குக் கொடுக்கறதுங்கறதை மூர்த்திதான் தீர்மானிக்கணும். வேணும்னா, லாபத்தில் குறைஞ்சது 25 சதவீதத்தையாவது பார்ட்னர்களுக்குக் கொடுக்கணும்னு ஒரு நிபந்தனை போட்டுக்கலாம்.
"பிரிச்சுக் கொடுக்கற லாபத்தில 75 சதவீதம் மூர்த்திக்கு - அவன்தானே பிஸினஸைப் பாத்துக்கறான்? 25 சதவீதம் ஸ்லீப்பிங் பார்ட்னர் சதீஷுக்கு. இதைத் தவிர, என்கிட்டே இருக்கற ரொக்கப் பணம், பங்குகள் மாதிரி விஷயங்கள் ரெண்டு பேருக்கும் பாதிப் பாதி."
"இது உங்க பெரிய பையனுக்குப் பண்ற அநீதி இல்லையா?"
"இல்லை. இப்ப ரெண்டு பேருக்கும் சம்பளம்தான் கொடுக்கறேன். நான் சொல்ற ஏற்பாட்டின்படி, லாபத்தில 25 சதவீத பங்கே இதை விட அதிகமா வரும். அவனுக்கு வீடு கொடுக்கப் போறேன். அதைத் தவிர, அவனுக்குக் கிடைக்கிற ரொக்கப் பணம், பங்குகள் மாதிரி முதலீடுகளோட மதிப்பே பல லட்சங்கள் இருக்கும்.
"அவன் வேணும்னா இந்தப் பணத்தை வச்சு வேற தொழில் ஆரம்பிச்சுக்கட்டுமே! எங்கிட்ட இருக்கற செல்வம் மத்தவங்களுக்குத் தொடர்ந்து பயன்படணும்னா, இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சுதான் ஆகணும். இது மாதிரியே உயில் எழுதிடுங்க" என்றார் நாதன்.
"சரி" என்றார் வக்கீல் கேசவன்.
அறத்துப்பால் "சரி" என்றார் வக்கீல் கேசவன்.
இல்லறவியல்
அதிகாரம் 22
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 216பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
பொருள்:
பிறருக்கு உதவும் சிந்தனை உள்ளவரிடம் செல்வம் சேர்ந்தால், அது ஊரில் அனைவரும் பயன்படுத்தக் கூடிய மரத்தில் பழங்கள் நிறைந்திருப்பதுபோல் ஆகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment