About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, October 29, 2018

219. பிறந்த நாள்

"என்னங்க, வர புதன்கிழமை பாபுவுக்குப் பிறந்த நாள்" என்றாள் வனிதா.

"தெரியும்" என்றான் சீதாராமன்.

"என்ன செய்யப் போறீங்க?'

"என்ன செய்யணும்?"

"கேக் வெட்டறதுக்கு என் ஃபிரண்ட்ஸை எல்லாம் கூப்பிடட்டுமா?" என்றான் பாபு.

"பாக்கலாம். சொல்றேன்" என்றான் சீதாராமன்.

"எப்ப சொல்லப் போறீங்க? இன்னும் நாலு நாள்தானே இருக்கு?" என்றாள் வனிதா.

"பாபு சின்னப் பையன். உனக்குமா தெரியாது?" என்றான் சீதாராமன்.

வனிதா பதில் சொல்லவில்லை.

சீதாராமன் சிறிதாக ஒரு துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தான். வியாபாரம் நன்றாக நடந்து ஓரளவுக்கு வசதியாகவும் வாழ்ந்து வந்தான்.

ஆனால் ஒரு வருடம் முன்பு வந்த வெள்ளம் ஊரைப் புரட்டிப் போட்டது போல், அவன் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.

வெள்ளத்தில் அவன் கடை முழுவதும் முழுகிப் போய் விட்டது. பெரும்பாலான துணிகள் வெள்ளத்தில் போய் விட்டன. மீதி இருந்தவை நீரில் ஊறிக் குப்பையாகி விட்டன.

துணிகளைப் பெரும்பாலும் கடனுக்கு வாங்கிதான் வியாபாரம் செய்து வந்தான் சீதாராமன். வியாபாரத்தில் வந்த பணத்தில் கடனை அடைப்பது, மீண்டும் கடனில் துணி வாங்குவது என்பதுதான் பல ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறை. அவன் குறித்த காலத்தில் பணம் கொடுத்து விடுவான் என்பதால், அவனுக்குத் துணி சப்ளை செய்தவர்கள் அவனுக்கு தாராளமாகக் கடன் கொடுத்தனர்.

கடையில் எப்போதும் சுமார் ஆறு மாத விற்பனை அளவுக்கு சரக்கு இருக்கும். அதில் பெரும் பகுதி கடனில் வாங்கியதுதான்.

திடீரென்று ஒரே நாளில் அவன் நிலைமை மாறி விட்டது. ஒருபுறம் சரக்கு இல்லாமல் கடையை மீண்டும் நடத்த முடியவில்லை. மறுபுறம் துணி சப்ளை  செய்தவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி.

மனைவியின் நகைகள், வீடு என்று எல்லாவற்றையும் விற்றுத்தான் கடனை அடைக்க முடிந்தது. மீதி இருந்த பணம் மீண்டும் தொழில் துவங்கப் போதுமானதாக இல்லை.

ஒரு பெரிய துணிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்கி வாழ்ந்து கொண்டிருந்தான் சீதாராமன்.

பாபுவின் பிறந்த நாள் எளிமையாக நடந்தது. கடையில் வாங்கிய இனிப்பு, பாபுவின் வகுப்பு மாணவர்களுக்கு சாக்லேட் என்று குறைந்த செலவில் நடந்தது. கேக் வெட்டி, நண்பர்களைக் கூப்பிடுவதை அடுத்த வருடம் வைத்துக் கொள்ளலாம் என்று பாபுவிடம் எப்படியோ சொல்லி அவனைச் சமாதானப் படுத்தினர் வனிதாவும், சீதாராமனும்.

இரவு  வேலை முடிந்து சீதாராமன் வீட்டுக்கு வந்ததும், வனிதா சொன்னாள்:

"பாவம்! பாபுவுக்கு ரொம்ப ஏமாத்தம். எனக்குக் கூடத்தான். போன வருஷம் வீடு பூரா அலங்காரம் பண்ணி, பாபுவோட நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்னு ஒரு அம்பது பேரைக் கூப்பிட்டு கேக் வெட்டி, ஓட்டல்லேந்து இனிப்பு, காரம், சமோசா, தோசைன்னு நிறைய அயிட்டங்கள் வரவழைச்சு எல்லாருக்கும் வயிறு முட்ட டிஃபன் கொடுத்து, சின்னப் பையன்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்து அமர்க்களமாக் கொண்டாடின காட்சிதான் என் கண் முன்னே நிக்குது. இந்த வருஷம் அப்படிப் பண்ண முடியலைன்னு எனக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்கு வருத்தம் இல்லையா?"

"நான் இதைப் பத்தி அதிகம் வருத்தப்படல. வேறொரு விஷயத்தை நினைச்சு வருத்தப்பட்டேன்" என்றான் சீதாராமன்.

"வேற என்ன விஷயம்?'

"இதுக்கு முன்னால ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பாபுவைக் கூட்டிக்கிட்டு ஒரு அநாதை ஆசிரமத்துக்குப் போய் அங்கே இருக்கற அம்பது குழந்தைகளுக்கு உடைகள் வாங்கிக் கொடுத்து, விருந்து வச்சுக் கொண்டாடினோமே. அந்தக் குழந்தைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க! இந்தப் பிறந்த நாளுக்கு அது மாதிரி அநாதைக் குழந்தைகளை சந்தோஷப்படுத்த முடியலையேன்னுதான் நான் ரொம்ப வருத்தப்படறேன்!" என்றான் சீதாராமன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பொருள்:  
பிறருக்கு உதவும் பண்புடையவன், பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அதற்காக வருந்தும்போது ஏழையாகிறான்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment