About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, March 27, 2019

247. துறவியுடன் ஒரு சந்திப்பு

"வாங்க. உட்காருங்க. என்னைப் பாக்கணும்னு சொன்னீங்களாமே!" என்றார் மடத்தலைவர் ராமானந்தர்.

'நான் உங்க மடத்தோட ரொம்ப நாளா தொடர்புள்ளவன்" என்றார் ராமசுந்தரம்.

"அப்படியா? நான் உங்களை இதுக்கு முன்னால பாத்ததில்லையே!"

"நான் உங்களைப் பார்க்கணும்னு முயற்சி செஞ்சதில்லை. உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பல. உங்களை நான் பலமுறை பாத்திருக்கேன். கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சதில்லை."

"உங்க மனப்பான்மை ரொம்ப உயர்ந்தது. பாராட்டறேன்."

"ஆனா உங்க மானேஜருக்கு என்னை நல்லாத் தெரியும்" என்ற ராமசுந்தரம், சற்றுத் தயங்கி விட்டு, "ஏன்னா, நான் உங்க மடத்துக்கு நிறைய நன்கொடை கொடுத்திருக்கேன்" என்றார்.

"அப்படியா? ரொம்ப நன்றி. உங்களை மாதிரி தாராள மனசு உள்ளவங்க செய்யற உதவியாலதான் எங்களால நிறையப் பணிகளைச் செய்ய முடிகிறது" என்றார் ராமானந்தர்.

"என்னைப் பத்தி உங்க மானேஜர் உங்க கிட்ட சொல்லியிருப்பாரே?"

"பண விவகாரங்களைப் பத்தி யாரும் எங்கிட்ட பேசறதில்ல. யார் எவ்வளவு கொடுத்தாங்க, எவ்வளவு செலவாகுதுன்னெல்லாம் எனக்குத் தெரியாது. அதுக்கு ஒரு டிரஸ்ட் இருக்கு. அவங்கதான் பாத்துக்கறாங்க. இவ்வளவு பணம் இருக்கு, அதை இப்படி செலவு செய்யலாமான்னு அப்பப்ப யோசனை கேட்பாங்க. அவ்வளவுதான்."

"ஓ  அதனாலதான் இப்படி நடந்திருக்கு!" என்றார் ராமசுந்தரம்.

"என்ன நடந்தது?" என்றார் ராமானந்தர். ராமசுந்தரம் மடத்தலைவரிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், அருகில் வேறு யாரும் இல்லை.

"போன வாரம் உங்க மடத்தில ஒரு விழா நடந்ததே!"

"அது விழா இல்லை. சேவா சமர்ப்பணம். நாங்க செய்யற சேவைகளைப் பத்திப்  பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொதுமக்களை இது மாதிரி சேவைகளில் ஈடுபடச் செய்யறதுக்காகவும், சேவையில் ஈடுபட்டவங்களை எல்லார் முன்னேயும் பெருமைப்படுத்தறதுக்காகவும், வருஷா வருஷம் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தறோம்."

"சரி. அதைத்தான் நான் விழான்னு சொன்னேன். அந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன். வெளிப்படையா சொல்றேனே! நிறைய நன்கொடை கொடுத்தவங்கறதுக்காக முன்வரிசையில் உக்கார வைப்பாங்கன்னு பாத்தேன். ஆனா முதல் பத்து வரிசைகள் ரிசர்வ் செய்யப்பட்டவைன்னு சொல்லி, என்னைப் பின்னால போய் உக்காரச் சொன்னாங்க. நான் கோவிச்சுக்கிட்டு அந்த நிகழ்ச்சியில கலந்துக்காமயே போயிட்டேன்."

ராமானந்தர் சற்று நேரம் மௌனமாக இருந்தார். பிறகு சொன்னார். "நீங்க சொன்னபடி அது ஒரு விழாவா இருந்தா உங்களை முன்வரிசையில் உக்காத்தி வச்சிருக்கலாம். இது சேவையில் ஈடுபட்டவர்களைப் பெருமைப்படுத்தறதுக்கான நிகழ்ச்சிங்கறதால சேவையில் ஈடுபட்டவர்களும், சேவையினால பலன் அடைஞ்ச சில பேரும்தான் முன் வரிசையில உக்காந்திருந்தாங்க. இது அவங்க மேடைக்கு வந்து தங்க அனுபவங்களைப் பகிர்ந்துக்க உதவியா இருக்குணுங்கறதுக்காக நான் செஞ்ச ஏற்பாடுதான். உங்களுக்கு மன வருத்தம் இருந்தா, அதுக்கு நான்தான் பொறுப்பு."

ராமசுந்தரத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "அப்படின்னா, நன்கொடை கொடுக்கறதுக்கெல்லாம் மதிப்பே கிடையாதா?" என்றார்.

"நிச்சயம் உண்டு. நீங்க சொன்னப்பறம்தான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வருது. நிதி உதவி செஞ்சவங்களைப் பெருமைப்படுத்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யச் சொல்றேன். இதை நாங்க செய்யாதது எங்க தப்புதான். இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்."

ராமசுந்தரம் டக்கென்று நெகிழ்ந்து, "சாமி! நீங்க பெரியவர். நன்றி மாதிரி பெரிய வார்த்தையெல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க" என்றார்.

"உங்களைப் பத்தி சொல்லுங்களேன்" என்றார் ராமானந்தர்.

"சாமி. நான் ஒரு சாதாரணக் குடும்பத்தில கடைசிப் பையனாப் பொறந்தேன். எனக்கு நாலு அண்ணன், ஒரு அக்கா இருக்காங்க. சின்ன வயசில வறுமையில் கஷ்டப்பட்டதால, இந்த உலகத்தில பணம் இருந்தாதான் வாழ்க்கைன்னு அப்பவே புரிஞ்சுக்கிட்டு, எப்படியாவது பணம் சம்பாதிக்கணும்னு ஒரு வெறியோட இருந்தேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு, முப்பது வயசுக்குள்ள ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன். அப்புறம் இந்த 10 வருஷத்திலே இன்னும் பெரிசா முன்னுக்கு வந்து நல்ல வசதியோடு இருக்கேன். நான் சுயமா முன்னுக்கு வந்ததில எனக்குப் பெருமை உண்டு. தப்பா சாமி?"

"தப்பே இல்ல. நீங்க நிச்சயமா உங்களைப் பத்திப் பெருமைப்பட்டுக்கலாம். ஆமாம், உங்க அண்ணன்கள், அக்கால்லாம் எப்படி இருக்காங்க?" என்றார் ராமானந்தர்.

"அவங்க கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. என்னை மாதிரி அவங்க முயற்சி எடுத்து முன்னுக்கு வரலியே!"

"அவங்களுக்கு நீங்க ஏதாவது உதவி செய்யறீங்களா?"

"நான் எதுக்கு உதவி செய்யணும்? எனக்கு யார் உதவி செஞ்சாங்க? நான் பணக்காரன் ஆனதும் அவங்க எங்கிட்ட நெருங்கி வந்தாங்க. உதவி கேப்பாங்கன்னு நினைச்சு அவங்களை வெட்டி விட்டுட்டேன்."

"நீங்க செஞ்சது சரிதானா?"

"என்ன தப்பு இதில?"

"தப்புன்னு எதுவும் இல்ல. பொதுவாவே கஷ்டப்படறவங்க கிட்ட இரக்கம் காட்டறதும், அவங்களுக்கு உதவறதும் எல்லா மனுஷங்களும் செய்ய வேண்டியது. நாங்க செய்யற சேவை கூட இந்த வகைதான். மத்தவங்களுக்கு உதவறது இருக்கட்டும். நம் கூடப் பிறந்தவங்க கிட்ட இரக்கம் காட்டி நம்மால முடிஞ்ச உதவியை அவங்களுக்கு செய்ய வேண்டாமா?"

ராமசுந்தரம் பதில் சொல்லாமல் இருந்தார்.

"இப்ப நீங்களே பாத்தீங்க. எங்க சேவா சமர்ப்பணத்தில உங்களுக்கு முன் வரிசையில இடம் கிடைக்கல, சேவை செஞ்சவங்களுக்குத்தான் இடம் கிடைச்சதுன்னு. இந்த உலகத்தில வாழப் பணம் வேணும். ஆனா இந்த உலகத்தில ஒரு பகுதியா இருக்கற எங்க மடத்திலேயே மத்தவங்க கிட்ட கருணையோட செயல்படறவங்களுக்குத்தானே இடம் கொடுக்கறோம்? அப்ப, சொர்க்கம், விண்ணுலகம் இதிலெல்லாம் இடம் கிடைக்க அன்பு, கருணை, சேவை மனப்பான்மை இதெல்லாம் வேணும்  இல்லையா?"

ராமானந்தர் சொல்வதை யோசித்துப் பார்ப்பது போல் ராமசுந்தரம் மௌனமாக இருந்தார்.

"யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கே ஒரு தெளிவு வரும். நீங்க எப்ப வேணும்னாலும் என்னை வந்து பாக்கலாம்" என்று ராமசுந்தரத்துக்கு விடை கொடுத்தார் ராமானந்தர்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள்:  
பொருள்  இல்லாதவர்களால் இந்தப் பூவுலகில் நல்ல வாழ்க்கை வாழ முடியாது. அது போல் அருள் இல்லாதவர்களுக்கு விண்ணுலகம் கிட்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்







Monday, March 25, 2019

246. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு...

நான் கிளை மேலாளராக இருந்த வங்கிக்கு 
10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. இப்போது நான் வங்கியின் மண்டல மேலாளர்.

கிளை மேலாளரிடம் சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், "இந்த ஊர்ல 'அருள் தேநீர் விடுதி'ன்'னு ஒரு டீக்கடை இருந்ததே, அது  இருக்கா?" என்றேன்.

"இருக்கு. அது இப்ப 'அருள் ஹோட்டல்'னு பெரிய ஹோட்டல் ஆயிடுச்சு."

"ஓ! அப்படியா?" என்றேன் மகிழ்ச்சியுடன்.

"உங்களுக்கு எப்படி சார் தெரியும்? நீங்க இங்க மானேஜரா இருந்தப்பவே அந்த ஹோட்டல் இருந்ததா என்ன?" என்றார் கிளை மேலாளர்.

"அந்தப் பையன் - அவன் பேரு என்ன - மருது, அவனுக்கு நான்தான் டீக்கடை ஆரம்பிக்க யோசனை சொல்லி பாங்க்ல கடன் கொடுத்தேன்" என்றேன்.

"அப்படியா?" என்றார் கிளை மேலாளர்.

"நாம சில வாடிக்கையாளர்களைப் பாக்கப் போகறப்ப அங்கேயும் போயிட்டு வரலாம்" என்றேன் நான்.

"சரி சார்."

நாங்கள் அருள் ஹோட்டலுக்குப் போனபோது கல்லாவில் அமர்ந்திருந்த பருமனான நபரை எனக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்த பிறகுதான் அவன் மருது என்று தெரிந்து கொண்டேன். 10 வருடம் முன்பு நோஞ்சானாக இருந்த பையன் எப்படி மாறி விட்டான்!

கிளை மேலாளரைப் பார்த்ததும் மருது இலேசாகச் சிரித்தான். என்னை அடையாளம் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

"என்ன மருது? எப்படி இருக்கீங்க?" என்று கேட்ட கிளை மேலாளர் என்னைக் காட்டி, "சார் யாருன்னு தெரியுதா?" என்றார்.

"தெரியலியே!" என்றான் மருது என்னைப்  பார்த்து விட்டு. "ஹோட்டலுக்கு தினம் நூறு பேரு வராங்க. எல்லாரையும் எப்படி ஞாபகம் வச்சுக்கறது?"

எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.

"இவர் உங்க ஹோட்டலுக்கு வந்துட்டுப் போன கஸ்டமர் இல்ல. இங்க மானேஜரா இருந்தவரு. உங்களுக்கு லோன் கொடுத்து இந்த ஹோட்டலை ஆரம்பிக்க உதவினவரே இவருதான்!" என்றார் கிளை மேலாளர்.

"ஓ! இப்ப ஞாபகம் வருது. நிறைய வருஷம் ஆச்சுல்ல. அதான் மூஞ்சி மறந்துடுச்சு" என்றான் மருது சாதாரணமாக. "அதான் கடனைத் திருப்பிக் கட்டிட்டேனே!" என்றான் உடனேயே

"நாங்க இங்க கடனைத் திருப்பிக் கேக்க வரல" என்றார் கிளை மேலாளர் சற்று எரிச்சலுடன். ஆனால் மருது அவர் பேசியதைக் கேட்கவில்லை. அவனிடம் வந்து ஏதோ சொல்ல முயன்ற ஹோட்டல் ஊழியர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தான். அந்த வயதான ஊழியர் அவனிடம் பயந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த ஊழியர் பேசிக் கொண்டிருந்தபோதே, சற்றும் எதிர்பாராமல் மருது அவர் கன்னத்தில் அறைந்தான். "ஏண்டா, எண்ணெய் தீந்து போச்சுன்னு இப்ப வந்து சொல்ற? இதுக்குத்தான் உனக்கெல்லாம் தண்டச் சம்பளம் கொடுத்து வச்சிருக்கேனா? போடா. இப்பவே போய் வாங்கிட்டு வா. பத்து நிமிஷத்துல எண்ணெயோடு வரணும். இல்லேன்னா உன்னையே வடையாத் தட்டிடுவேன். ஓடு!" என்று அவர் கையில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் திணித்தான்.

கிளை மேலாளருக்கு நான் சைகை காட்ட, நாங்கள் இருவரும் வெளியே வந்தோம்.

"நன்றி கெட்ட பய! கடன் கொடுத்து அவன் தொழில் தொடங்க உதவினவர்னு உங்ககிட்ட கொஞ்சம் கூட நன்றி இல்ல. ஹோட்டல் நடத்தறான். ஒப்புக்கு 'காப்பி சாப்பிடறீங்களா?'ன்னு கூடக் கேக்கல. அது ஏன்? நாம ரெண்டு பேரும் நின்னுக்கிட்டிருக்கோம். நம்மளை உக்காரக் கூடச் சொல்லல. அவன் உக்காந்தே பேசிக்கிட்டிருக்கான். சீட்டை விட்டு எழுந்திருக்கல. வணக்கம் கூடச் சொல்லல. நாகரிகம் இல்லாதவன்!" என்று பொரிந்து தள்ளினார் கிளை மேலாளர்.

"அவன் நம்மை மதிக்காதது, நாகரிகம் இல்லாம நடந்துக்கிட்டது இதெல்லாம் எனக்குப் பெரிய விஷயம் இல்ல. அவன்கிட்ட வேலை செய்யற அந்த வயசானவரை மரியாதை இல்லாம பேசி, கன்னத்தில அறைஞ்சு... சே!"

"விடுங்க சார். இவங்கல்லாம் இப்படித்தான் இருப்பாங்க. இவனைப் பாக்க வந்தது நமக்கு டைம் வேஸ்ட்."

"நான் அவனைப் பாக்க வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு" என்றேன் நான்.

"என்ன காரணம் சார்?"

"இந்தப் பையன் மருது இந்த ஊர்ல ஒரு டீக்கடையில் வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். அப்ப இந்த ஊர்ல அந்த ஒரு டீக்கடைதான். வேற ஹோட்டலோ, டீக்கடையோ கிடையாது. அந்த முதலாளி இவனை ரொம்பக் கொடுமைப் படுத்துவான். கண்டபடி திட்டுவான், அடிப்பான். ஒரு தடவை இவன் கையில பாய்லரிலேந்து வெந்நீரை எடுத்து ஊத்திட்டான். இதையெல்லாம் பாத்து, இவன் மேல பரிதாபப்பட்டுத்தான் இவனை டீக்கடை ஆரம்பிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தி, கடன் கொடுத்தேன். ஆரம்பத்தில அவனுக்கு நம்பிக்கை இல்ல. பயந்தான். இந்த ஊர்ப் பெரிய மனுஷங்க ரெண்டு பேர் கிட்ட சொல்லி, அவங்களை விட்டு அவனுக்கு தைரியம் சொல்லச் சொன்னேன். நம்ப கஸ்டமர் ஒத்தர்கிட்ட சொல்லி, டீக்கடை ஆரம்பிக்க சின்னதா ஒரு இடத்தில் ஷெட் கட்டி அவனுக்குக் குறைஞ்ச வாடகைக்குக் கொடுக்க ஏற்பாடு செஞ்சேன்."

"அப்படியா?" என்றார் கிளை மேலாளர் வியப்புடன்.

"ஆமாம். 'அருள் தேநீர் விடுதின்னு பேர் வச்சது நான்தான். அவன் முதலாளிகிட்ட இல்லாத  அருள், கருணை மாதிரி குணங்கள் இவன்கிட்ட இருக்கணும்னு நெனைச்சுத்தான் அப்படிச் செஞ்சேன். ஆனா இன்னிக்கு அவன் அந்த ஊழியர்கிட்ட நடந்துக்கிட்டதைப் பாத்தப்ப இவன் தப்பான வழியில போறானேன்னு நினைச்சு ரொம்ப வருத்தப்படறேன். எனக்கு என்ன ஆச்சரியம்னா, இவன் தான் பட்ட கஷ்டங்களோட வலி எப்படி இருக்குங்கறதையே மறந்துட்டு மத்தவங்களுக்கு அதே மாதிரி கஷ்டத்தைக் கொடுக்கறதுதான்!" என்றேன் நான் ஏமாற்றத்துடன்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

பொருள்:  
அருள் இல்லாமல், தவறான செயல்களைச் செய்து வருபவர்கள், உறுதிப் பொருளாகிய அறத்திலிருந்து விலகி, தாங்கள் பட்ட துன்பங்களையும் மறந்தவர்களாக இருப்பார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















245. சிகாமணியின் சந்தேகம்

"உங்களுக்கு அறுபது வயசு முடிஞ்சிருக்கு. ஆனா நீங்க மத்தவங்க மாதிரி சஷ்டி அப்த பூர்த்தி மாதிரி எதுவும் செஞ்சுக்கல. நான் கூட செஞ்சுக்கிட்டேன்" என்றார் செல்வநாயகம்.

"நீங்க வாழ்க்கையில நிறைய சாதிச்சிருக்கீங்க. நான் எதுவுமே செய்யலியே! எனக்குப் படிப்பு இல்ல. நான் நல்ல வேலையில இல்ல. அதிகமா சம்பாதிக்கல. உலக அறிவு அதிகம் கிடையாது. நான் அறுபது வருஷத்தை ஓட்டினதை வேணும்னா ஒரு சாதனைன்னு சொல்லிக்கலாம்!" என்றார் சிகாமணி.

"என்னங்க இப்படிச் சொல்றீங்க? உங்களைச் சுத்தி இருக்கறவங்க உங்க மேல எவ்வளவு மதிப்பு வச்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?"

"அப்படியா சொல்றீங்க?" என்றார் சிகாமணி. ஆனால் தன் நண்பர் செல்வநாயகம் சொன்னது உண்மைதான் என்று அவருக்குத் தெரியும்.

படிப்பு, பணம், அந்தஸ்து எதுவும் இல்லாத தன்னைப் பலரும் மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்துவதைப் பல வருடங்களாகப் பார்த்து வந்திருக்கிறார் சிகாமணி.  

ஏன், இந்த செல்வநாயகம் கூட ஒரு உயர் அரசு அதிகாரியாக இருந்தவர். அவர் கூட ஒரு சிறிய நிறுவனத்தில் சாதாரண வேலை பார்த்து வரும் தன்னைச் சமமாக மதித்து நடத்தி வந்திருக்கிறார்!

இதற்கு என்ன காரணம் என்று சிகாமணியால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஆனால் அதுதான் காரணமா என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

வீட்டுக்குச் சென்ற பிறகும் இதே யோசனையாக இருந்தது. தன்னை மற்றவர்கள் மதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தான் செல்வநாயகத்திடம் சொன்னது போல் தான் 60 வருடங்கள் வாழ்க்கையை ஓட்டியதே ஒரு அதிசயமாகத்தான் தோன்றியது. 

படிப்பு, நல்ல வேலை, பொருளாதார வசதி எதுவும் இல்லாமல் இத்தனை வருடங்கள் குடித்தனம் நடத்திப் பிள்ளைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து ஒரு நிறைவான வாழ்க்கையைத் தாம் வாழ்ந்திருக்கிறோம் என்ற உண்மையே அவருக்கு வியப்பாக இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று?

சாப்பிட்டு விட்டு மனைவி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது மனைவியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார் சிகாமணி. அவர் மனைவி செண்பகம் வெளிப்படையாகப் பேசுபவள். அவள் பேச்சு  சில சமயம் கடுமையாக இருந்தாலும், அதில் உண்மை இருக்குமென்பது சிகாமணிக்குத் தெரியும். 

"என்ன கேள்வி இது? நீங்க செய்ய வேண்டியதையெல்லாம் நல்லபடியா செஞ்சு முடிச்சு, அறுவது வயசில ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கீங்கன்னு என்கிட்டயே சில பேரு சொல்லி இருக்காங்க. நானே பல சமயம் உங்களைக் குறை சொல்லியிருந்தாலும், மத்தவங்க இப்படிச் சொல்றப்ப எனக்குப் பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு" என்றாள் செண்பகம்.

"அது சரி. என்னால எப்படி இது முடிஞ்சுதுன்னு எனக்கே புரியல. அதைத்தான் உன்கிட்ட கேக்கறேன்."

"ம்....எப்படின்னா, நமக்கு அப்பப்ப பல பேர் கிட்டேந்து உதவியும், ஆதரவும் கிடைச்சது. அதனாலதான் இது முடிஞ்சுது" என்றாள் செண்பகம்.

சிகாமணி சற்று அதிர்ந்தவராக 'அப்படியானால், எல்லாமே மற்றவர்கள் செய்த உதவியால்தானா, என்னுடைய முயற்சியால் இல்லையா?' என்று நினைத்தார். மனைவியிடம் இதை ஏன் கேட்டோம் என்று ஆகி விட்டது.

"உதவின்னா, பண உதவி செஞ்சாங்கன்னு சொல்லல. நாம யார்கிட்டயும் உதவி கேக்கல. நம்பகிட்ட பல பேர் அன்பாவும் ஆதரவாகவும் இருந்தாங்கன்னுதான் சொன்னேன். அதனால நம்ப பிரச்னைகளைச் சமாளிக்கறது நமக்குக் கொஞ்சம் சுலபமா இருந்தது, அவ்வளவுதான். மத்தபடி எல்லாத்தையும் சமாளிச்சு மேல வந்தது நீங்கதான்!" என்றாள்  செண்பகம்.

"ஏன் நம்பகிட்ட எல்லாரும் இவ்வளவு அன்பாவும் ஆதரவாகவும் இருந்தாங்க, இப்பவும் இருக்காங்க?"

"நம்பகிட்டன்னு சொல்றது தப்பு, உங்ககிட்டன்னுதான் சொல்லணும்!"

"அதுதான் ஏன்?"

"இது என்னங்க கேள்வி? தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு உங்களைச் சுத்தி இருக்கிற எல்லார்கிட்டயும் நீங்க அன்போடும், கருணையோடும் நடந்துக்கறப்ப, அவங்க அதில கொஞ்ச அளவுக்காவது உங்க கிட்ட திருப்பிக் காட்ட மாட்டாங்களா?" என்றாள் செண்பகம் சிரித்தபடி.

"ஓ! அப்படியா சொல்ற? சரி. கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன்" என்று கிளம்பினார் சிகாமணி.

"இந்த வெய்யில்ல எங்க கிளம்பிட்டீங்க?"

"அநாதை இல்லக் குழந்தைகளுக்காக கொஞ்ச பேர் கிட்டேந்து பழைய துணியெல்லாம் வாங்கி வச்சிருக்கேன். அதில சிலதெல்லாம் தையல் விட்டுப் போயிருக்கு. அதையெல்லாம் தையக்காரர்கிட்ட கொடுத்து அடிக்கச் சொல்லிட்டு அப்புறம் அதையெல்லாம் அநாதை இல்லத்தில கொடுக்கணும்."

"அதுக்கு இந்த வெய்யில்லியா போகணும்?'  

"வெய்யில் இருந்தா என்ன? வெளியில காத்தும் இருக்குல்ல? காத்து நம்ம மேல அடிக்கறதை கவனிச்சுக்கிட்டே போனா, வெய்யிலோட கடுமை அவ்வளவாத் தெரியாது!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் சிகாமணி.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி..

பொருள்:  
அருள் உடையவர்களாக வாழ்பவர்களுக்குத் துன்பம் இல்லை. காற்றின் இயக்கத்தால் வலிமையுடன் விளங்கும் இந்த உலகமே அதற்குச் சான்று.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












Wednesday, March 20, 2019

244. அஞ்சுகத்தின் கவலை

கதவு படபடவென்று, ஆனால் அதிக சத்தம் இன்றித் தட்டப்பட்டது.

அஞ்சுகம் கதவைத் திறந்தாள்.

மணி பதட்டதுடன் நின்று கொண்டிருந்தான்.

"என்னடா ஆச்சு? உள்ள வா" என்றாள் அஞ்சுகம்.

"அத்தை! ஊர்ல ஒரே கலவரமா இருக்கு. யாரும் வெளியில போகாதீங்க. அதைச் சொல்லத்தான் வந்தேன்"

"நாங்க எங்கேயும் போகல."

"ஜாக்கிரதை அத்தை!" என்று சொல்லி விட்டுக் கிளம்ப யத்தனித்த மணி, திரும்பி உள்ளே பார்த்து விட்டு,"மாமா எங்கே?" என்றான்.

"அவரு எப்ப வீட்டில இருந்திருக்காரு? யாருக்கோ உடம்பு சரியில்லைன்னு பாத்துட்டு வரேன்னுட்டுப் போனாரு. வர நேரம்தான்."

"கலவர சமயத்தில வெளியே போயிருக்காரே! வந்தப்புறம் எங்கேயும் போகாம பாத்துக்கங்க" என்றான் மணி.
ணி மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது மாலை மணி நான்கு ஆகியிருந்தது.

கதவைத் திறந்த அஞ்சுகம், "காலையில போனவர் இன்னும் வரவே இல்லியேடா. மதியம் சாப்பாட்டுக்கே வர வேண்டியவரு. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு" என்றாள் கவலையுடன்.

"அப்படியா?" என்ற மணி, "நான் போய்ப் பாத்துட்டு வரேன். இப்ப வெளியில கொஞ்சம் அமைதியாயிருக்கு. தைரியமா இருங்க" என்று சொல்லி விட்டுப் போனான்.

மாலை ஆறு மணிக்கு மணி வந்து பார்த்தபோதும் அஞ்சுகத்தின் கணவர் சுந்தரமூர்த்தி வீட்டுக்கு வந்திருக்கவில்லை.

அஞ்சுகம் கவலை அதிகமாகி அழுது விடுவாள் போலிருந்தாள். "யாருக்காவது ஏதாவது உதவி செய்யறேன்னு அடிக்கடி வெளியே போயிட்டு லேட்டா வரது வழக்கம்தான். ஆனா ஊர்ல கலவரமா இருக்கறப்ப அவர் இவ்வளவு நேரமா வராததுதான் கவலையா இருக்கு" என்றாள்.

"அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?" என்றாள் தொடர்ந்து.

"அப்படியெல்லாம் இருக்காது அத்தை" என்று மணி சொன்னபோது அவன் குரல் நம்பிக்கையாக ஒலிக்கவில்லை. சற்றுத் தயங்கி விட்டு, "கலவரத்தில் அடிபட்டவங்களைப் பக்கத்து ஊர் ஆஸ்பத்திரியில சேத்திருக்கங்களாம். நான் போய்ப் பாத்துட்டு வரேன்" என்றான் மணி.

அஞ்சுகத்திடமிருந்து வெடித்து வந்த விம்மல்தான் அவனுக்கு பதிலாக இருந்தது.

ணி மருத்துவமனைக்ககுச் சென்று பார்த்தபோது, மருத்துவமனையின் வாசலிலும், படிக்கட்டுகளிலும், வராந்தாவிலும் நீல நிற மருந்திடப்பட்ட திறந்த காயங்கள், கட்டுக்கள் இவற்றுடன் பலர் அமர்ந்த நிலையிலும், படுத்துக் கொண்டும் இருந்ததைப் பார்த்தான்.

அதிகமாக அடிபட்டவர்கள் உள்ளே கட்டில்களில் படுக்க வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
 
அதிகம் அடிபடாமல் வெளியில் இருந்தவர்களிடையே சுந்தரமூர்த்தி இல்லாததால், மணி கலக்கத்துடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக் கொண்டு வந்தான்.

ஒரு கட்டிலில் சுந்தரமூர்த்தி படுத்திருப்பது சற்றுத் தொலைவிலிருந்தே தெரிந்தது. அருகில் ஓடிச் சென்று பார்த்தபோது அவர்தான் என்று உறுதியாயிற்று.

எங்கே அடிபட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மேலே போர்வை போர்த்தப்பட்டிருக்க, கண் மூடிப் படுத்திருந்தார். நினைவில்லாமலோ, உறங்கிக் கொண்டோ இருந்தார். மேலே தொங்கிய பாட்டிலிலிருந்து குழாய் மூலம் மணிக்கட்டில் மருந்து இறங்கிக் கொண்டிருந்தது.

யாரைக் கேட்பது என்று மணி யோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த ஒருவர் கட்டிலில் படுத்திருந்த சுந்தரமூர்த்தியைப் பார்த்து விட்டு, "எல்லாரும் கலவரத்துக்கு பயந்து ஓடிக்கிட்டிருக்கச்சே, இவர் மட்டும் உயிரைப் பத்திக் கவலைப்படாம தெருத்தெருவா நடந்து போய், அடிபட்டவங்களையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செஞ்சுக்கிட்டிருந்தாரு. கடைசியில இவருக்கே கலவரத்தில் காயம் பட்டுடுச்சு போலருக்கு. பாவம்!" என்று சொல்லி விட்டுப் போனார்.

சில நிமிடங்கள் கழித்து அங்கே வந்த ஒரு நர்ஸிடம் "என்னங்க! இவருக்கு பலமா அடிபட்டிருக்கா?" என்றான் மணி.

"அடிபடறதா? இவரு காலையிலேந்து அடிபட்டவங்களையெல்லாம் தேடிப் பிடிச்சு ஆட்டோவிலேயும், வண்டியிலேயும் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக்கிட்டிருந்திருக்காரு. எப்ப சாப்பிட்டாரோ தெரியல. களைப்பு அதிகமாகி மயங்கி விழுந்துட்டாரு. இவரை யாரோ இங்கே கொண்டு வந்து சேத்தாங்க. குளூகோஸ் ஏத்திக்கிட்டிருக்கோம். இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு இவரை நீங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம்" என்றாள் நர்ஸ்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

பொருள்:  
உலகில் உள்ள உயிர்களிடம் அன்பு கொண்டு அவற்றைப் பேணி வளர்ப்பவருக்குத் தன் உயிர் பற்றி அஞ்சும் நிலை ஏற்படாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

Monday, March 4, 2019

243. புதிய நிர்வாகி

இளம் வயதிலேயே ஒரு நிறுவனத்தின் நிர்வாகி என்ற பதவி கிடைத்தது முகுந்தனுக்குப் பெருமையாக இருந்தது. 

அது ஒரு சிறிய நிறுவனம்தான். மொத்த ஊழியர்கள் முப்பது பேர்தான்.

முகுந்தனை வேலையில் நியமிக்கும்போது அந்த நிறுவனத்தின்  முதலாளி அவனிடம் சொன்னார்;

 "இங்க பாரு, முகுந்தன்! உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அதனாலதான் உனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கேன். 

"இந்த சுண்டைக்காய் கம்பெனியை என்னாலேயே பாத்துக்க முடியும். இத்தனை நாளா நான்தானே பாத்துக்கிட்டு வந்திருக்கேன்? 

"ஆனா எனக்கு ரொம்பக் கோபம் வரும். இங்கே வேலை செய்யறவங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது. இவங்களோட போராடி எனக்கு பிளட் பிரஷர் வந்துடுச்சு. அதுக்குத்தான் உன்னைப் போட்டிருக்கேன். 

"மூணு மாசம் நான் ஆஃபீசுக்கே வர மாட்டேன். நீதான் பாத்துக்கணும். நீ சரியா மானேஜ் பண்ணலேன்னா உன்னைத் தூக்கிடுவேன். 

"எனக்கு ஒழுங்கு, கட்டுப்பாடெல்லாம் முக்கியம். அதைப் பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா சங்கர் கிட்ட கேட்டுக்க. ரொம்ப முக்கியம்னாலே ஒழிய எங்கிட்ட வராதே!" 

முதலாளியின் அறிவுரை முகுந்தனைச் சற்றுக் கவலை கொள்ளச் செய்தாலும், 'பார்க்கலாம்' என்று நினைத்துப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். 

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அந்த நிறுவனத்தில் என்ன பிரச்னை என்று அவனுக்குப் புரிந்தது. முதலாளியின் கடுமையான அணுகுமுறையினால் ஊழியர்கள் பயத்திலும், குழப்பத்திலும் விரக்தியிலும் இருந்தனர்.

சிறு விஷயங்களில் கூட முடிவெடுக்க முடியாமலும், முதலாளியிடம் கேட்க பயந்து கொண்டும் தத்தளித்தார்கள். ஒருவேளை இதைப் புரிந்து கொண்டுதான் முதலாளி தன்னை நியமித்திருக்கிறாரோ?

சங்கர் முதலாளியின் உறவினன் (அவன் அவரை 'மாமா' என்றுதான் அழைப்பான்) என்பதையும், அலுவலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் தன் மாமாவிடம் கண் காது வைத்துச் சொல்லிப் பிரச்னைகளை உண்டாக்கி வந்திருக்கிறான் என்பதையும் முகுந்தன் விரைவிலேயே புரிந்து கொண்டான்.

முகுந்தனின் அணுகுமுறை முதலாளியின் அணுகுமுறைக்கு நேர்மாறாக இருந்தது. ஊழியர்களிடம் கடுமை காட்டாமல், கனிவாகப் பேசினான். அவர்கள் தவறுகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களைச் சரியாகச் செயல்பட வைத்தான். அவர்கள் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு ஆலோசனைகள் கூறினான்.

சிலர் அவனிடம் தங்கள் தனிப்பட்ட பிரச்னைகளைக் கூடக் கூற ஆரம்பித்தனர். அவனால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்கள் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு ஆறுதல் அளிக்கும் விதத்தில் பேசியது அவர்களுக்கு இதமளிப்பதாக இருந்தது.

சங்கர் அவ்வப்போது முகுந்தனிடம், "சார்! மாமா இப்படியெல்லாம் செய்ய மாட்டார்" என்று அவன் செய்கைகளுக்கு முட்டுக்கட்டை போட முயன்றான். முகுந்தன் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தான்.

ஒருமுறை, "நீங்க எல்லாருக்கும் லீவு கொடுக்கறீங்க. மாமா இருக்கறப்ப லீவு கேக்கவே எல்லாரும் பயப்படுவாங்க" என்றான் சங்கர்.

"பெரியவர்கிட்ட லீவு கேக்க பயந்துகிட்டு சொல்லாம லீவு போட்டுட்டு அப்புறம் வந்து உடம்பு சரியில்லேன்னு சொல்லுவாங்க. இப்ப எங்கிட்ட காரணத்தைச் சொல்லி லீவு கேக்கறாங்க. நியாயமான காரணமா இருந்தா லீவு கொடுக்கறேன். முன்னாலேயே சொல்லிட்டு லீவு போடறதால அவங்க செய்ய வேண்டிய வேலையை  வேற ஒத்தரை செய்யச் சொல்லறது சுலபமா இருக்கு. சொல்லாம லீவு போட்டா, அப்புறமா ஏற்பாடு பண்றது கஷ்டம் இல்லையா?" என்றான் முகுந்தன் .  

முகுந்தன் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதம் கழித்து முதலாளி அவனைத் தன் வீட்டுக்கு வரச் சொன்னார். 

"எப்படிப் போயிட்டிருக்கு?" என்றார் முதலாளி, அவனிடம்.

"நல்லாப் போகுது சார். நீங்க வேலைக்கு வச்சிருக்கற ஆளுங்கள்ளாம் ரொம்பத் தங்கமானவங்க. நல்லா வேலை செய்யறாங்க. போன மாசம் சேல்ஸ், கலெக்‌ஷன் ரெண்டுமே அதிகமாயிருக்கு. இந்த மாசம் இன்னும் இம்ப்ரூவ் ஆகும்னு எதிர்பாக்கறேன். ரிப்போர்ட் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். பாருங்க" என்று அவரிடம் சில தாள்களை நீட்டினான் முகுந்தன்.

முதலாளி சற்று வியப்புடன் அவனைப் பார்த்தார். "ஆட்கள்ளாம் ரொம்ப சோம்பேறித்தனமா இருக்காங்க. வேலையே நடக்கறதில்லேன்னு இல்ல நான் கேள்விப்பட்டேன்?" என்றார்.

"நீங்க ரிப்போர்ட்களைப் பாருங்க சார். ஆஃபீசுக்கு வந்து ரிகார்டுகளை வேணும்னாலும் பாருங்க" என்றான் முகுந்தன்.

"அது சரி. எல்லாருக்கும் நிறைய லீவு கொடுக்கறியாமே?"

"இல்ல சார். தேவையானாத்தான் கொடுக்கறேன். ஆப்சென்ட்டியிஸம் இப்ப குறைஞ்சிருக்கு" என்றான் முகுந்தன்..

"சரி. ரெண்டு மாசம் ஆச்சு. அடுத்த மாசமும் இதையே மெயின்ட்டெய்ன் பண்ணினா, நான் ஆஃபீஸ் பக்கமே வர மாட்டேன். நீதான் பாத்துக்கணும் எல்லாத்தையும்!" என்று சிரித்தார் முதலாளி.

அவன் கிளம்பியபோது, "ஆஃபீசுக்குத்தானே போறே? கார்ல கொண்டு விடச் சொல்றேன்" என்றார் அவர்.

"வேண்டாம் சார்" என்று முகுந்தன் சொல்ல முயன்றபோதே, "டிரைவர்!" என்றார் அவர்.

காரில் போகும்போது டிரைவர் சொன்னார். "நான் சார் கிட்ட பத்து வருஷமா வேலை செய்யறேன். சார் ரொம்ப நல்லவரு ஆனா கோவக்காரரு. கடுமையாப் பேசுவாரு. அவர் கோபமாப் பேசறப்ப செத்துடலாம் போல இருக்கும். அவ்வளவு கடுமையாப் பேசுவாரு. ஆஃபீஸ்ல எல்லாரும் ரொம்ப மனசு நொந்து போயிருந்தாங்க. நீங்க வந்ததும் எல்லாம் மாறிப் போச்சு. எல்லாரும் உங்களை தெய்வமா நினைக்கறாங்க."

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொஞ்சம் கனிவாப் பேசுவேன். அவ்வளவுதான்!" என்றான் முகுந்தன் சங்கடத்துடன்.

"அதான் சார் வேணும். உங்க அன்பு ஆஃபீஸ் சூழ்நிலையையே மாத்திடுச்சு. ஐயா கூட உங்களைப் புரிஞ்சுக்கிட்டாரு. 'நான் ரொம்பக் கடுமையா இருந்திருக்கக் கூடாது'ன்னு என்கிட்டயே சொன்னாருன்னா பாத்துக்கங்களேன்!"

"அப்படியா?"

"ஆமாம். நான் உங்ககிட்ட வேலை செய்யலேன்னேன்னாலும் நான் பாத்ததையும் கேட்டதையும் வச்சு சொல்றேன். எல்லார்கிட்டயும் அன்பு காட்டற உங்களுக்கு வாழ்க்கையில ஒரு கஷ்டமும் வராது" என்றார் டிரைவர்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

பொருள்:  
இருள் நிறைந்த துன்ப உலகில் வாழும் நிலை அருள் நிறைந்த உள்ளம் உள்ளோர்க்கு ஏற்படாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












Sunday, March 3, 2019

242. ஆன்மீகத் தேடல்

"சுவாமிகள் உங்களைக் கூப்பிடறார்."   

சாமிநாதனுக்கு வியப்பு, மகிழ்ச்சி, பயம் எல்லாம் கலந்த உணர்வு ஏற்பட்டது. 

அந்த மடத்தில் சேர்ந்த ஒரு மாதத்தில் மடத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களில் (அல்லது சீடர்களில்) ஒருவனாக அவன் இருந்து வந்திருக்கிறான். 

சுவாமிகள் அவனை ஒருமுறை கூட நேருக்கு நேராகப் பார்த்தது போல் தெரியவில்லை. எதற்குக் கூப்பிடுகிறார்?

"உக்காரு" என்றார் சுவாமிகள்.

"பரவாயில்லை. நிக்கறேன்" என்றான் சாமிநாதன்.

"பள்ளிக்கூடத்துல பையங்க உக்காந்திருப்பாங்க. ஆசிரியர் நின்னுக்கிட்டிருப்பார். அதனால பையன்களுக்கு ஆசிரியர் மேல மரியாதை இல்லைன்னு அர்த்தமில்லை."

சாமிநாதன் சட்டென்று உட்கார்ந்தான். சுவாமிகளின் இது போன்ற கூர்மையான, யதேச்சையான பேச்சு அவனை எப்போதுமே பிரமிக்க வைத்திருக்கிறது. 

"உன் பேர் சாமிநாதன்னு சொன்னாங்க."

"ஆமாம், சுவாமி."

"என்னை எல்லாரும் சாமிங்கறாங்க. நீ சாமிநாதன், எனக்கே நாதன்!" சுவாமிகள் சிரித்தார்.

சாமிநாதன் மௌனமாக இருந்தான்.

"இத்தனை நாளா இந்த மடத்திலே இருக்கே. என் பேச்சையெல்லாம் கேட்டிருக்கே. நான் செய்யற விஷயங்கள், இங்கே வரவங்க எங்கிட்ட சொல்றது, கேக்கறது, நான் அவங்ககிட்ட சொல்றது இதையெல்லாம் பாத்திருக்கே, கேட்டிருக்கே. இங்க வந்து என்ன கத்துக்கிட்டிருக்க?"

"சுவாமி! நான் இங்கே வந்து ஒரு மாசம்தான் ஆச்சு."

"ஓ, இஞ்சினியரிங், மெடிகல் படிப்பு மாதிரி, நாலஞ்சு வருஷம் ஆகணுமா கத்துக்க? அங்கே கூட வீக்லி டெஸ்ட், மன்த்லி டெஸ்ட், செமஸ்டர் பரீட்சை எல்லாம் வைக்கறாங்களே!"

சாமிநாதன் மௌனமாக இருந்தான்.

"சரி. இதுக்கு முன்னே எங்கே இருந்தே?"

"ரெண்டு மூணு மடத்தில இருந்தேன்."

"எந்த மடங்கள்?"

சாமிநாதன் தான் இருந்த மடங்களின் பெயர்களைச் சொன்னான்.

சுவாமிகள் சற்று வியப்புடன், "அவங்கள்ளாம் வேற வழிகளைக் கடைப்பிடிக்கறவங்களாச்சே!" என்றார்.

"ஆமாம், சுவாமி. ஒவ்வொரு வழியும் எப்படின்னு பாக்கத்தான் அங்கல்லாம் இருந்தேன். ஆனா எனக்குத் திருப்தி இல்ல. அப்புறம் உங்க பேச்சை ஒரு தடவை கேட்டுட்டு இங்க வந்தேன்."

"இங்கே எவ்வளவு நாள் இருப்ப?" என்றார் சுவாமிகள் சிரித்தபடி.

சாமிநாதன் பேசாமல் இருந்தான்.

"வீட்டை விட்டு ஓடி வந்து எவ்வளவு நாளாச்சு?"

சாமிநாதன் திடுக்கிட்டு,"சுவாமி! நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான்.

"நீ சின்ன வயசுப் பையன். கல்யாணம் ஆகியிருக்காதுன்னு நினைக்கறேன். ஏதோ ஒரு வேகத்தில வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்னு ஊகிச்சேன். அவ்வளவுதான். நான் எல்லாம் தெரிஞ்ச ஞானியெல்லாம் இல்லை!"

சாமிநாதனுக்குச் சட்டென்று அழுகை வெடித்தது. பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டு, "ஆமாம் சுவாமி. சின்ன வயசிலேந்தே எனக்கு ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உண்டு. ஆன்மிகம் பத்தி புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் படிப்பேன். வீட்டில எனக்குக் கல்யாணம் பண்ணப் பாத்துக்கிட்டிருந்தாங்க. எனக்கு அதில ஈடுபாடு இல்ல. சந்நியாசி ஆகணும்னு நினைச்சு வீட்டிலேந்து ஓடி வந்துட்டேன்."

"சாமிநாதா! நீ படிச்சதெல்லாம் ஆன்மீகம் இல்ல. அரை வேக்காடு விஷயங்கள். நீ படிச்சது ஆன்மீக விஷயங்களா இருந்தா, அவை உன் அப்பா அம்மா மேல உனக்கு இருக்கற அன்பை இன்னும் வலுவாக்கி இருக்கும். வீட்டை விட்டு ஓடி வந்திருக்க மாட்டே."

"எனக்குப் புரியல சாமி."

"புரியறதுக்கு ஒண்ணுமில்ல சாமிநாதா. நீ ரெண்டு மூணு மடங்கள்ள இருந்திருக்கே. அங்கே எல்லாம் நீ என்ன கத்துக்கிட்ட?"

"ஒண்ணும் கத்துக்கல சாமி. எல்லா இடத்திலேயும் சேவை செய்யறது, உதவி செய்யறதுன்னு பேசினாங்களே தவிர, ஆன்மிகம் பத்தி ஒண்ணும் இல்ல!" என்றான் சாமிநாதன்.

"அதான் விஷயம், மத்த உயிர்கள் கிட்ட அன்பு காட்டி, நம்மால முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் உதவி செஞ்சுக்கிட்டிருந்தா, அதான் ஆன்மிகம். அதான் வாழ்க்கை. இதை நீ புரிஞ்சுக்கிட்டிருந்தா முதல்ல உன் அப்பா அம்மாகிட்ட அன்பு காட்டி இருப்ப. அவங்களை விட்டுட்டு ஓடி வந்திருக்க மாட்டே. 

"உனக்குக் கல்யாணத்தில விருப்பம் இல்லேன்னா இப்ப வேண்டாம்னு சொல்லிடு. ஆனா பிற உயிர்கள் கிட்ட நீ அன்பு காட்ட ஆரம்பிச்சா, கொஞ்ச நாள்ள உனக்குக் கல்யாணத்தில நாட்டம் வரும். 

"அப்படி வராட்டாலும் பரவாயில்ல. ஆனா இது மாதிரி எத்தனை மடங்களுக்குப் போனாலும், மற்ற உயிர்கள்கிட்ட அன்பு காட்டறதுதான் வாழ்க்கைங்கற ஒரு விஷயம்தான் திரும்பத் திரும்ப வரும். 

"நான் உன்னைப் போகச் சொல்லிச் சொல்லல. நீ இங்கேயே இருக்கலாம். உனக்கு வீட்டுக்குப் போகணும்னு தோணிச்சுன்னா, போ. ஆனா எங்கிட்ட சொல்லிக்காம போயிடாதே!" என்றார் சுவாமிகள் சிரித்துக் கொண்டே.

"நான் போயிட்டு வரேன் சுவாமி" என்றான் சாமிநாதன்.   

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

பொருள்:  
நல்ல வழியில் ஆராய்ந்து, அருள் உடையவர்களாக விளங்க வேண்டும். அற வழிகள் பலவற்றை ஆராய்ந்தாலும், அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும் என்று உணரலாம்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












241. செல்வந்தர்கள்!

செல்வராஜிடம் டிரைவராக இருப்பதில் முரளிக்கு ஒரு பிரச்னைதான். காரில் வரும்போதெல்லாம் செல்வராஜ் தன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பான் - அவனுடன் காரில் வருபவர்களிடம், அல்லது காரில் அவன் மட்டும் வந்தால், யாரிடமாவது செல்ஃபோனில்!

சில சமயம் செல்வராஜ் காரில் மனைவியுடன் போகும்போது, அவளிடமும் தன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பான். அவள் இதைப் பலமுறை கேட்டிருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பாள்.

செல்வராஜ் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசியதைக் கேட்டபோது ஆரம்பத்தில் முரளிக்கு அவன் மேல் சற்று மதிப்பு ஏற்பட்டது - செல்வராஜ் சாதாரண நிலையில் இருந்து சொந்த முயற்சியில் நல்ல நிலைக்கு வந்திருக்கிறான் என்பதை நினைத்து.

ஆனால் திரும்பத் திரும்ப அவன் தன் பெருமையைப் பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் முரளிக்குத் தன் முதலாளியிடம் சலிப்பும், வெறுப்பும் கூட ஏற்பட ஆரம்பித்தது. ஒருமுறை கார் ரேடியோவில் ஒலித்த ஒரு பாடலின் 

"முட்டாப் பசங்களையெல்லாம் தாண்டவக்கோனே,
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே!"

என்ற வரிகளைக் கேட்டபோது, இந்த வரிகள் தன் முதலாளிக்காகவே எழுதப்பட்டவையோ என்று அவனுக்குத் தோன்றியது. 

"அதான் சொன்னேனே! என்னை மாதிரி சொந்தமா உழைச்சு, புத்திசாலித்தனமாத் தொழில் செஞ்சு பணம் சம்பாதிச்சவனுக்குத்தான் பணத்தோட அருமை தெரியும்!...."

கார் கிரீச்சென்று பிரேக் போடப்பட்டு நின்றதும், செல்வராஜ் செல்ஃபோனில் பேசுவதை நிறுத்தி விட்டு, "என்னப்பா ஆச்சு?" என்றான் முரளியிடம்.

இதற்குள் காரின் பின் ஜன்னல் கண்ணாடியை யாரோ தட்ட, செல்வராஜ் கண்ணாடியை உயர்த்தினான்.

"சார்! இங்க ஒத்தருக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கு. அவசரமா ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகணும். டாக்சி எதுவும் பக்கத்தில இல்ல. ஆம்புலன்ஸ் வர நேரம் ஆகும் போலருக்கு. உங்க கார்ல ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியுமா?" என்றார் ஒருவர்.

"இதுக்குத்தான் காரை வழிமறிச்சு நிறுத்தினீங்களா? எனக்கு அவசரமாப் போகணும்" என்று எரிந்து விழுந்தபடியே, ஜன்னலை மூடிய செல்வராஜ் முரளியிடம், "நீ ஏம்ப்பா காரை நிறுத்தின? போ!" என்றான்.

"இல்லை சார். ரொம்ப அடிபட்டிருக்கு போலருக்கு. நான் வேணும்னா முன் சீட்டில் உக்கார வச்சுக்கறேன்" என்றான் முரளி.

"ஏன், கார்ல முன் சீட் உனக்குச் சொந்தமா என்ன? போகச் சொன்னா போகாம, பேசிக்கிட்டிருக்க? கிளம்பு!" என்று கத்தினான் செல்வராஜ். 

முரளி பேசாமல் காரைக் கிளப்பினான். 

அவன் காரைக் கிளப்பிய சமயத்தில் அங்கே ஒரு ஆட்டோ வந்து நின்றதையும் ஆட்டோ டிரைவர் கீழே இறங்கி அடிபட்டவரை நோக்கி வேகமாகப் போனதையும் கண்ணாடி வழியே பார்த்தபோது முரளிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அந்த ஆட்டோ டிரைவர் அவனுக்குத் தெரிந்தவன்தான்!

"காலையில அடிபட்டவர் ஒத்தரை ஆட்டோவில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனியே? என்ன ஆச்சு?" என்றான் முரளி.

"நேரத்துக்கு ஆஸ்பத்திரியில கொண்டு சேத்ததால பொழைச்சுட்டாரு. உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் சேகர்.

"நான் பாத்தேன்" என்ற முரளி, "ஆட்டோவில சவாரி இல்லியா? காலியாவா வந்துக்கிட்டிருந்தே?" என்றான்.

"இல்ல வயசானவாங்க ரெண்டு பேரு வந்துக்கிட்டிருந்தாங்க. அந்தப் பெரியவர்தான் என்னை வண்டியை நிறுத்தச் சொன்னாரு. அடிபட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போகச் சொல்லி எங்கிட்ட சொல்லிட்டு, அவரும் அவர் மனைவியும் அங்கேயே இறங்கிட்டாங்க."

"அவங்க வேற ஆட்டோ பிடிச்சுப் போனாங்களா?"

"வேற ஆட்டோ பிடிச்சுப் போய்க்கிறோம்னுதான் அவங்க எங்கிட்ட சொன்னாங்க. நான்தான் அவங்களை அங்கேயே பக்கத்தில உக்காந்திருக்கச் சொல்லிட்டு அடிபட்டவரை ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டுட்டுத் திரும்ப வந்து அவங்களை அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொன்னேன். அது மாதிரியே திரும்ப வந்து, அவங்களைக் கொண்டு விட்டுட்டு, மறுபடி ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பாத்தேன். அடிபட்டவரு பொழைச்சுக்கிட்டாரு, அவர் சொந்தக்காரங்க வந்துட்டாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம்தான் மறுபடி சவாரிக்குப் போனேன்."  

"எத்தனை தடவை போயிட்டுப் போயிட்டு வந்திருக்க! எவ்வளவு நல்ல மனசுப்பா உனக்கு!" என்றான் முரளி.

"என்னைச் சொல்றியே, அந்த வயசானவங்க வழியில வெய்யில்ல இறங்கிக்கிட்டு அடிபட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போகச் சொல்லி எங்கிட்ட சொன்னாங்களே, அவங்களுக்கு எவ்வளவு நல்ல மனசுன்னு பாரு. அதோட இல்ல. ஆஸ்பத்திரிக்குப் போயிட்டுத் திரும்ப வந்து அவங்களை அழைச்சுக்கிட்டுப் போனதுக்கு எக்ஸ்ட்ரா பணம் வேற கொடுக்கறேன்னாங்க! நான் வேண்டாம்னுட்டேன்" என்றான் சேகர்.  

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்:  
பொருட்செல்வம் இழிந்தவர்களிடம் கூட இருக்கும். ஆனால் செல்வங்களுக்குள் சிறந்தது அருட்செல்வம்தான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்