About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, March 4, 2019

243. புதிய நிர்வாகி

இளம் வயதிலேயே ஒரு நிறுவனத்தின் நிர்வாகி என்ற பதவி கிடைத்தது முகுந்தனுக்குப் பெருமையாக இருந்தது. 

அது ஒரு சிறிய நிறுவனம்தான். மொத்த ஊழியர்கள் முப்பது பேர்தான்.

முகுந்தனை வேலையில் நியமிக்கும்போது அந்த நிறுவனத்தின்  முதலாளி அவனிடம் சொன்னார்;

 "இங்க பாரு, முகுந்தன்! உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அதனாலதான் உனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கேன். 

"இந்த சுண்டைக்காய் கம்பெனியை என்னாலேயே பாத்துக்க முடியும். இத்தனை நாளா நான்தானே பாத்துக்கிட்டு வந்திருக்கேன்? 

"ஆனா எனக்கு ரொம்பக் கோபம் வரும். இங்கே வேலை செய்யறவங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது. இவங்களோட போராடி எனக்கு பிளட் பிரஷர் வந்துடுச்சு. அதுக்குத்தான் உன்னைப் போட்டிருக்கேன். 

"மூணு மாசம் நான் ஆஃபீசுக்கே வர மாட்டேன். நீதான் பாத்துக்கணும். நீ சரியா மானேஜ் பண்ணலேன்னா உன்னைத் தூக்கிடுவேன். 

"எனக்கு ஒழுங்கு, கட்டுப்பாடெல்லாம் முக்கியம். அதைப் பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா சங்கர் கிட்ட கேட்டுக்க. ரொம்ப முக்கியம்னாலே ஒழிய எங்கிட்ட வராதே!" 

முதலாளியின் அறிவுரை முகுந்தனைச் சற்றுக் கவலை கொள்ளச் செய்தாலும், 'பார்க்கலாம்' என்று நினைத்துப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். 

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அந்த நிறுவனத்தில் என்ன பிரச்னை என்று அவனுக்குப் புரிந்தது. முதலாளியின் கடுமையான அணுகுமுறையினால் ஊழியர்கள் பயத்திலும், குழப்பத்திலும் விரக்தியிலும் இருந்தனர்.

சிறு விஷயங்களில் கூட முடிவெடுக்க முடியாமலும், முதலாளியிடம் கேட்க பயந்து கொண்டும் தத்தளித்தார்கள். ஒருவேளை இதைப் புரிந்து கொண்டுதான் முதலாளி தன்னை நியமித்திருக்கிறாரோ?

சங்கர் முதலாளியின் உறவினன் (அவன் அவரை 'மாமா' என்றுதான் அழைப்பான்) என்பதையும், அலுவலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் தன் மாமாவிடம் கண் காது வைத்துச் சொல்லிப் பிரச்னைகளை உண்டாக்கி வந்திருக்கிறான் என்பதையும் முகுந்தன் விரைவிலேயே புரிந்து கொண்டான்.

முகுந்தனின் அணுகுமுறை முதலாளியின் அணுகுமுறைக்கு நேர்மாறாக இருந்தது. ஊழியர்களிடம் கடுமை காட்டாமல், கனிவாகப் பேசினான். அவர்கள் தவறுகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களைச் சரியாகச் செயல்பட வைத்தான். அவர்கள் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு ஆலோசனைகள் கூறினான்.

சிலர் அவனிடம் தங்கள் தனிப்பட்ட பிரச்னைகளைக் கூடக் கூற ஆரம்பித்தனர். அவனால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்கள் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு ஆறுதல் அளிக்கும் விதத்தில் பேசியது அவர்களுக்கு இதமளிப்பதாக இருந்தது.

சங்கர் அவ்வப்போது முகுந்தனிடம், "சார்! மாமா இப்படியெல்லாம் செய்ய மாட்டார்" என்று அவன் செய்கைகளுக்கு முட்டுக்கட்டை போட முயன்றான். முகுந்தன் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தான்.

ஒருமுறை, "நீங்க எல்லாருக்கும் லீவு கொடுக்கறீங்க. மாமா இருக்கறப்ப லீவு கேக்கவே எல்லாரும் பயப்படுவாங்க" என்றான் சங்கர்.

"பெரியவர்கிட்ட லீவு கேக்க பயந்துகிட்டு சொல்லாம லீவு போட்டுட்டு அப்புறம் வந்து உடம்பு சரியில்லேன்னு சொல்லுவாங்க. இப்ப எங்கிட்ட காரணத்தைச் சொல்லி லீவு கேக்கறாங்க. நியாயமான காரணமா இருந்தா லீவு கொடுக்கறேன். முன்னாலேயே சொல்லிட்டு லீவு போடறதால அவங்க செய்ய வேண்டிய வேலையை  வேற ஒத்தரை செய்யச் சொல்லறது சுலபமா இருக்கு. சொல்லாம லீவு போட்டா, அப்புறமா ஏற்பாடு பண்றது கஷ்டம் இல்லையா?" என்றான் முகுந்தன் .  

முகுந்தன் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதம் கழித்து முதலாளி அவனைத் தன் வீட்டுக்கு வரச் சொன்னார். 

"எப்படிப் போயிட்டிருக்கு?" என்றார் முதலாளி, அவனிடம்.

"நல்லாப் போகுது சார். நீங்க வேலைக்கு வச்சிருக்கற ஆளுங்கள்ளாம் ரொம்பத் தங்கமானவங்க. நல்லா வேலை செய்யறாங்க. போன மாசம் சேல்ஸ், கலெக்‌ஷன் ரெண்டுமே அதிகமாயிருக்கு. இந்த மாசம் இன்னும் இம்ப்ரூவ் ஆகும்னு எதிர்பாக்கறேன். ரிப்போர்ட் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். பாருங்க" என்று அவரிடம் சில தாள்களை நீட்டினான் முகுந்தன்.

முதலாளி சற்று வியப்புடன் அவனைப் பார்த்தார். "ஆட்கள்ளாம் ரொம்ப சோம்பேறித்தனமா இருக்காங்க. வேலையே நடக்கறதில்லேன்னு இல்ல நான் கேள்விப்பட்டேன்?" என்றார்.

"நீங்க ரிப்போர்ட்களைப் பாருங்க சார். ஆஃபீசுக்கு வந்து ரிகார்டுகளை வேணும்னாலும் பாருங்க" என்றான் முகுந்தன்.

"அது சரி. எல்லாருக்கும் நிறைய லீவு கொடுக்கறியாமே?"

"இல்ல சார். தேவையானாத்தான் கொடுக்கறேன். ஆப்சென்ட்டியிஸம் இப்ப குறைஞ்சிருக்கு" என்றான் முகுந்தன்..

"சரி. ரெண்டு மாசம் ஆச்சு. அடுத்த மாசமும் இதையே மெயின்ட்டெய்ன் பண்ணினா, நான் ஆஃபீஸ் பக்கமே வர மாட்டேன். நீதான் பாத்துக்கணும் எல்லாத்தையும்!" என்று சிரித்தார் முதலாளி.

அவன் கிளம்பியபோது, "ஆஃபீசுக்குத்தானே போறே? கார்ல கொண்டு விடச் சொல்றேன்" என்றார் அவர்.

"வேண்டாம் சார்" என்று முகுந்தன் சொல்ல முயன்றபோதே, "டிரைவர்!" என்றார் அவர்.

காரில் போகும்போது டிரைவர் சொன்னார். "நான் சார் கிட்ட பத்து வருஷமா வேலை செய்யறேன். சார் ரொம்ப நல்லவரு ஆனா கோவக்காரரு. கடுமையாப் பேசுவாரு. அவர் கோபமாப் பேசறப்ப செத்துடலாம் போல இருக்கும். அவ்வளவு கடுமையாப் பேசுவாரு. ஆஃபீஸ்ல எல்லாரும் ரொம்ப மனசு நொந்து போயிருந்தாங்க. நீங்க வந்ததும் எல்லாம் மாறிப் போச்சு. எல்லாரும் உங்களை தெய்வமா நினைக்கறாங்க."

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொஞ்சம் கனிவாப் பேசுவேன். அவ்வளவுதான்!" என்றான் முகுந்தன் சங்கடத்துடன்.

"அதான் சார் வேணும். உங்க அன்பு ஆஃபீஸ் சூழ்நிலையையே மாத்திடுச்சு. ஐயா கூட உங்களைப் புரிஞ்சுக்கிட்டாரு. 'நான் ரொம்பக் கடுமையா இருந்திருக்கக் கூடாது'ன்னு என்கிட்டயே சொன்னாருன்னா பாத்துக்கங்களேன்!"

"அப்படியா?"

"ஆமாம். நான் உங்ககிட்ட வேலை செய்யலேன்னேன்னாலும் நான் பாத்ததையும் கேட்டதையும் வச்சு சொல்றேன். எல்லார்கிட்டயும் அன்பு காட்டற உங்களுக்கு வாழ்க்கையில ஒரு கஷ்டமும் வராது" என்றார் டிரைவர்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

பொருள்:  
இருள் நிறைந்த துன்ப உலகில் வாழும் நிலை அருள் நிறைந்த உள்ளம் உள்ளோர்க்கு ஏற்படாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












No comments:

Post a Comment