
"நீங்க வாழ்க்கையில நிறைய சாதிச்சிருக்கீங்க. நான் எதுவுமே செய்யலியே! எனக்குப் படிப்பு இல்ல. நான் நல்ல வேலையில இல்ல. அதிகமா சம்பாதிக்கல. உலக அறிவு அதிகம் கிடையாது. நான் அறுபது வருஷத்தை ஓட்டினதை வேணும்னா ஒரு சாதனைன்னு சொல்லிக்கலாம்!" என்றார் சிகாமணி.
"என்னங்க இப்படிச் சொல்றீங்க? உங்களைச் சுத்தி இருக்கறவங்க உங்க மேல எவ்வளவு மதிப்பு வச்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?"
"அப்படியா சொல்றீங்க?" என்றார் சிகாமணி. ஆனால், தன் நண்பர் செல்வநாயகம் சொன்னது உண்மைதான் என்று அவருக்குத் தெரியும்.
படிப்பு, பணம், அந்தஸ்து எதுவும் இல்லாத தன்னைப் பலரும் மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்துவதைப் பல வருடங்களாகப் பார்த்து வந்திருக்கிறார் சிகாமணி.
ஏன், ஒரு உயர் அரசு அதிகாரியாக இருந்த இந்த செல்வநாயகம் கூட, ஒரு சிறிய நிறுவனத்தில் சாதாரண வேலை பார்த்து வரும் தன்னைச் சமமாக மதித்து நடத்தி வந்திருக்கிறார்!
இதற்கு என்ன காரணம் என்று சிகாமணியால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஆனால், அதுதான் காரணமா என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
வீட்டுக்குச் சென்ற பிறகும், இதே யோசனையாக இருந்தது. தன்னை மற்றவர்கள் மதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தான் செல்வநாயகத்திடம் சொன்னது போல், தான் 60 வருடங்கள் வாழ்க்கையை ஓட்டியதே ஒரு அதிசயமாகத்தான் தோன்றியது.
படிப்பு, நல்ல வேலை, பொருளாதார வசதி எதுவும் இல்லாமல், இத்தனை வருடங்கள் குடித்தனம் நடத்திப் பிள்ளைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து, ஒரு நிறைவான வாழ்க்கையைத் தாம் வாழ்ந்திருக்கிறோம் என்ற உண்மையே அவருக்கு வியப்பாக இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று?
சாப்பிட்டு விட்டு மனைவி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, மனைவியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார் சிகாமணி. அவர் மனைவி செண்பகம் வெளிப்படையாகப் பேசுபவள். அவள் பேச்சு சில சமயம் கடுமையாக இருந்தாலும், அதில் உண்மை இருக்கும் என்பது சிகாமணிக்குத் தெரியும்.
"என்ன கேள்வி இது? நீங்க செய்ய வேண்டியதையெல்லாம் நல்லபடியா செஞ்சு முடிச்சு, அறுபது வயசில ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கீங்கன்னு என்கிட்டயே சில பேர் சொல்லி இருக்காங்க. நானே பல சமயம் உங்களைக் குறை சொல்லியிருந்தாலும், மத்தவங்க இப்படிச் சொல்றப்ப, எனக்குப் பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு" என்றாள் செண்பகம்.
"அது சரி. என்னால எப்படி இது முடிஞ்சுதுன்னு எனக்கே புரியல. அதைத்தான் உன்கிட்ட கேக்கறேன்."
"ம்....எப்படின்னா, நமக்கு அப்பப்ப பல பேர் கிட்டேந்து உதவியும், ஆதரவும் கிடைச்சது. அதனாலதான் இது முடிஞ்சுது" என்றாள் செண்பகம்.
சிகாமணி சற்று அதிர்ந்தவராக, 'அப்படியானால், எல்லாமே மற்றவர்கள் செய்த உதவியால்தானா, என்னுடைய முயற்சியால் இல்லையா?' என்று நினைத்தார். மனைவியிடம் இதை ஏன் கேட்டோம் என்று ஆகி விட்டது.
"உதவின்னா, பண உதவி செஞ்சாங்கன்னு சொல்லல. நாம யார்கிட்டயும் உதவி கேக்கல. நம்பகிட்ட பல பேர் அன்பாவும் ஆதரவாகவும் இருந்தாங்கன்னுதான் சொன்னேன். அதனால, நம்ப பிரச்னைகளைச் சமாளிக்கறது நமக்குக் கொஞ்சம் சுலபமா இருந்தது, அவ்வளவுதான். மத்தபடி, எல்லாத்தையும் சமாளிச்சு மேல வந்தது நீங்கதான்!" என்றாள் செண்பகம், அவர் மனதில் எழுந்த கேள்விக்கு விடையளிப்பது போல்..
"ஏன் எல்லாரும் நம்பகிட்ட இவ்வளவு அன்பாவும் ஆதரவாகவும் இருந்தாங்க, இப்பவும் இருக்காங்க?"
"நம்பகிட்டன்னு சொல்றது தப்பு, உங்ககிட்டன்னுதான் சொல்லணும்!"
"அதுதான் ஏன்?"
"இது என்னங்க கேள்வி? தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு உங்களைச் சுத்தி இருக்கிற எல்லார்கிட்டயும் நீங்க அன்போடும், கருணையோடும் நடந்துக்கறப்ப, அவங்க அதில கொஞ்ச அளவுக்காவது உங்ககிட்ட திருப்பிக் காட்ட மாட்டாங்களா?" என்றாள் செண்பகம், சிரித்தபடி.
"ஓ! அப்படியா சொல்ற? சரி. கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன்" என்று கிளம்பினார் சிகாமணி.
"இந்த வெய்யில்ல எங்க கிளம்பிட்டீங்க?"
"அநாதை இல்லக் குழந்தைகளுக்காக, கொஞ்ச பேர் கிட்டேந்து பழைய துணியெல்லாம் வாங்கி வச்சிருக்கேன். அதில சிலதெல்லாம் தையல் விட்டுப் போயிருக்கு. அதையெல்லாம் தையக்காரர்கிட்ட கொடுத்து அடிக்கச் சொல்லிட்டு, அப்புறம் அதையெல்லாம் அநாதை இல்லத்தில கொடுக்கணும்."
"அதுக்கு இந்த வெய்யில்லியா போகணும்?'
"வெய்யில் இருந்தா என்ன? வெளியில காத்தும் இருக்குல்ல? காத்து நம்ம மேல அடிக்கறதை கவனிச்சுக்கிட்டே போனா, வெய்யிலோட கடுமை அவ்வளவாத் தெரியாது!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் சிகாமணி.
துறவறவியல்
அதிகாரம் 25
அருளுடைமை
குறள் 245அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி..
அருள் உடையவர்களாக வாழ்பவர்களுக்குத் துன்பம் இல்லை. காற்றின் இயக்கத்தால் வலிமையுடன் விளங்கும் இந்த உலகமே அதற்குச் சான்று.
No comments:
Post a Comment