"சுவாமிகள் உங்களைக் கூப்பிடறாரு."
சாமிநாதனுக்கு வியப்பு, மகிழ்ச்சி, பயம் எல்லாம் கலந்த உணர்வு ஏற்பட்டது.
அந்த மடத்தில் சேர்ந்த ஒரு மாதத்தில், மடத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களில் (அல்லது சீடர்களில்) ஒருவனாக அவன் இருந்து வந்திருக்கிறான்.
சுவாமிகள் அவனை ஒருமுறை கூட நேருக்கு நேராகப் பார்த்தது போல் தெரியவில்லை. எதற்குக் கூப்பிடுகிறார்?
"உக்காரு" என்றார் சுவாமிகள்.
"பரவாயில்லை. நிக்கறேன்" என்றான் சாமிநாதன்.
"பள்ளிக்கூடத்துல பையங்க உக்காந்திருப்பாங்க. ஆசிரியர் நின்னுக்கிட்டிருப்பார். அதனால, பையன்களுக்கு ஆசிரியர் மேல மரியாதை இல்லைன்னு அர்த்தமில்லை."
சாமிநாதன் சட்டென்று உட்கார்ந்தான். சுவாமிகளின் இது போன்ற கூர்மையான, யதேச்சையான பேச்சு அவனை எப்போதுமே பிரமிக்க வைத்திருக்கிறது.
"உன் பேர் சாமிநாதன்னு சொன்னாங்க."
"ஆமாம், சுவாமி."
"என்னை எல்லாரும் சாமிங்கறாங்க. நீ சாமிநாதன், எனக்கே நாதன்!" சுவாமிகள் சிரித்தார்.
சாமிநாதன் மௌனமாக இருந்தான்.
"இத்தனை நாளா இந்த மடத்திலே இருக்கே. என் பேச்சையெல்லாம் கேட்டிருக்கே. நான் செய்யற விஷயங்கள், இங்கே வரவங்க எங்கிட்ட சொல்றது, கேக்கறது, நான் அவங்ககிட்ட சொல்றது இதையெல்லாம் பாத்திருக்கே, கேட்டிருக்கே. இங்க வந்து என்ன கத்துக்கிட்டிருக்க?"
"சுவாமி! நான் இங்கே வந்து ஒரு மாசம்தான் ஆச்சு."
"ஓ, இஞ்சினியரிங், மெடிகல் படிப்பு மாதிரி, நாலஞ்சு வருஷம் ஆகணுமா, கத்துக்க? அங்கே கூட வீக்லி டெஸ்ட், மன்த்லி டெஸ்ட், செமஸ்டர் பரீட்சை எல்லாம் வைக்கறாங்களே!"
சாமிநாதன் மௌனமாக இருந்தான்.
"சரி. இதுக்கு முன்னே எங்கே இருந்தே?"
"ரெண்டு மூணு மடத்தில இருந்தேன்."
"எந்த மடங்கள்?"
சாமிநாதன் தான் இருந்த மடங்களின் பெயர்களைச் சொன்னான்.
சுவாமிகள் சற்று வியப்புடன், "அவங்கள்ளாம் வேற வழிகளைக் கடைப்பிடிக்கறவங்களாச்சே!" என்றார்.
"ஆமாம், சுவாமி. ஒவ்வொரு வழியும் எப்படின்னு பாக்கத்தான் அங்கல்லாம் இருந்தேன். ஆனா, எனக்குத் திருப்தி இல்ல. அப்புறம் உங்க பேச்சை ஒரு தடவை கேட்டுட்டு இங்க வந்தேன்."
"இங்கே எவ்வளவு நாள் இருப்ப?" என்றார் சுவாமிகள், சிரித்தபடி.
சாமிநாதன் பேசாமல் இருந்தான்.
"வீட்டை விட்டு ஓடி வந்து எவ்வளவு நாளாச்சு?"
சாமிநாதன் திடுக்கிட்டு,"சுவாமி! நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான்.
"நீ சின்ன வயசுப் பையன். கல்யாணம் ஆகியிருக்காதுன்னு நினைக்கறேன். ஏதோ ஒரு வேகத்தில வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்னு ஊகிச்சேன். அவ்வளவுதான். நான் எல்லாம் தெரிஞ்ச ஞானியெல்லாம் இல்லை!"
சாமிநாதனுக்குச் சட்டென்று அழுகை வெடித்தது. பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டு, "ஆமாம், சுவாமி. சின்ன வயசிலேந்தே எனக்கு ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உண்டு. ஆன்மிகம் பத்தி புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் படிப்பேன். வீட்டில எனக்குக் கல்யாணம் பண்ணப் பாத்துக்கிட்டிருந்தாங்க. எனக்கு அதில ஈடுபாடு இல்ல. சந்நியாசி ஆகணும்னு நினைச்சு, வீட்டிலேந்து ஓடி வந்துட்டேன்."
"சாமிநாதா! நீ படிச்சதெல்லாம் ஆன்மீகம் இல்ல. அரை வேக்காடு விஷயங்கள். நீ படிச்சது ஆன்மீக விஷயங்களா இருந்தா, அவை உன் அப்பா அம்மா மேல உனக்கு இருக்கற அன்பை இன்னும் வலுவாக்கி இருக்கும். வீட்டை விட்டு ஓடி வந்திருக்க மாட்டே."
"எனக்குப் புரியல சாமி."
"புரியறதுக்கு ஒண்ணுமில்ல, சாமிநாதா. நீ ரெண்டு மூணு மடங்கள்ள இருந்திருக்கே. அங்கே எல்லாம் நீ என்ன கத்துக்கிட்ட?"
"ஒண்ணும் கத்துக்கல, சாமி. எல்லா இடத்திலேயும், சேவை செய்யறது, உதவி செய்யறதுன்னு பேசினாங்களே தவிர, ஆன்மிகம் பத்தி ஒண்ணும் இல்ல!" என்றான் சாமிநாதன்.
"அதுதான் விஷயம், மத்த உயிர்கள் கிட்ட அன்பு காட்டி, நம்மால முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் உதவி செஞ்சுக்கிட்டிருந்தா, அதுதான் ஆன்மிகம், அதுதான் வாழ்க்கை. இதை நீ புரிஞ்சுக்கிட்டிருந்தா, முதல்ல உன் அப்பா அம்மாகிட்ட அன்பு காட்டி இருப்ப. அவங்களை விட்டுட்டு ஓடி வந்திருக்க மாட்டே.
"உனக்குக் கல்யாணத்தில விருப்பம் இல்லேன்னா, இப்ப வேண்டாம்னு சொல்லிடு. ஆனா பிற உயிர்கள் கிட்ட நீ அன்பு காட்ட ஆரம்பிச்சா, கொஞ்ச நாள்ள உனக்குக் கல்யாணத்தில நாட்டம் வரும்.
"அப்படி வராட்டாலும் பரவாயில்ல. ஆனா, இது மாதிரி எத்தனை மடங்களுக்குப் போனாலும், மற்ற உயிர்கள்கிட்ட அன்பு காட்டறதுதான் வாழ்க்கைங்கற ஒரு விஷயம்தான் திரும்பத் திரும்ப வரும்.
"நான் உன்னைப் போகச் சொல்லிச் சொல்லல. நீ இங்கேயே இருக்கலாம். உனக்கு வீட்டுக்குப் போகணும்னு தோணிச்சுன்னா, போ. ஆனா எங்கிட்ட சொல்லிக்காம போயிடாதே!" என்றார் சுவாமிகள், சிரித்துக் கொண்டே.
"நான் போயிட்டு வரேன், சுவாமி" என்றான் சாமிநாதன்.
அதிகாரம் 25
அருளுடைமை
குறள் 242நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
நல்ல வழியில் ஆராய்ந்து, அருள் உடையவர்களாக விளங்க வேண்டும். அற வழிகள் பலவற்றை ஆராய்ந்தாலும், அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும் என்று உணரலாம்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment