
செல்வராஜிடம் டிரைவராக இருப்பதில் முரளிக்கு ஒரு பிரச்னைதான். காரில் வரும்போதெல்லாம், செல்வராஜ் தன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பான் - அவனுடன் காரில் வருபவர்களிடம், அல்லது காரில் அவன் மட்டும் வந்தால், யாரிடமாவது செல்ஃபோனில்!
சில சமயம் செல்வராஜ் காரில் மனைவியுடன் போகும்போது, அவளிடமும் தன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பான். அவள் இதைப் பலமுறை கேட்டிருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பாள்.
செல்வராஜ் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசியதைக் கேட்டபோது, ஆரம்பத்தில் முரளிக்கு அவன் மேல் சற்று மதிப்பு ஏற்பட்டது - செல்வராஜ் சாதாரண நிலையில் இருந்து, சொந்த முயற்சியில் நல்ல நிலைக்கு வந்திருக்கிறான் என்பதை நினைத்து.
ஆனால், திரும்பத் திரும்ப அவன் தன் பெருமையைப் பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டதும், முரளிக்குத் தன் முதலாளியிடம் சலிப்பும், வெறுப்பும் கூட ஏற்பட ஆரம்பித்தது. ஒருமுறை கார் ரேடியோவில் ஒலித்த ஒரு பாடலின்
"முட்டாப் பசங்களையெல்லாம் தாண்டவக்கோனே,
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே!"
என்ற வரிகளைக் கேட்டபோது, இந்த வரிகள் தன் முதலாளிக்காகவே எழுதப்பட்டவையோ என்று அவனுக்குத் தோன்றியது.
"அதான் சொன்னேனே! என்னை மாதிரி சொந்தமா உழைச்சு, புத்திசாலித்தனமாத் தொழில் செஞ்சு பணம் சம்பாதிச்சவனுக்குத்தான் பணத்தோட அருமை தெரியும்!...."
கார் கிரீச்சென்று பிரேக் போடப்பட்டு நின்றதும், செல்வராஜ் செல்ஃபோனில் பேசுவதை நிறுத்தி விட்டு, "என்னப்பா ஆச்சு?" என்றான், முரளியிடம்.
இதற்குள் காரின் பின் ஜன்னல் கண்ணாடியை யாரோ தட்ட, செல்வராஜ் கண்ணாடியை உயர்த்தினான்.
"சார்! இங்க ஒத்தருக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கு. அவசரமா ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகணும். டாக்சி எதுவும் பக்கத்தில இல்ல. ஆம்புலன்ஸ் வர நேரம் ஆகும் போலருக்கு. உங்க கார்ல ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியுமா?" என்றார் ஒருவர்.
"இதுக்குத்தான் காரை வழிமறிச்சு நிறுத்தினீங்களா? எனக்கு அவசரமாப் போகணும்" என்று எரிந்து விழுந்தபடியே ஜன்னலை மூடிய செல்வராஜ், முரளியிடம், "நீ ஏம்ப்பா காரை நிறுத்தின? போ!" என்றான்.
"இல்லை சார். ரொம்ப அடிபட்டிருக்கு போலருக்கு. நான் வேணும்னா முன் சீட்டில் உக்கார வச்சுக்கறேன்" என்றான் முரளி.
"ஏன், கார்ல முன் சீட் உனக்குச் சொந்தமா என்ன? போகச் சொன்னா போகாம, பேசிக்கிட்டிருக்க? கிளம்பு!" என்று கத்தினான் செல்வராஜ்.
முரளி பேசாமல் காரைக் கிளப்பினான்.
அவன் காரைக் கிளப்பிய சமயத்தில், அங்கே ஒரு ஆட்டோ வந்து நின்றதையும், ஆட்டோ டிரைவர் கீழே இறங்கி அடிபட்டவரை நோக்கி வேகமாகப் போனதையும் கண்ணாடி வழியே பார்த்தபோது, முரளிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அந்த ஆட்டோ டிரைவர் அவனுக்குத் தெரிந்தவன்தான்!
"காலையில, அடிபட்டவர் ஒத்தரை ஆட்டோவில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனியே, என்ன ஆச்சு?" என்றான் முரளி.
"நேரத்துக்கு ஆஸ்பத்திரியில கொண்டு சேத்ததால, பொழைச்சுட்டாரு. உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் சேகர்.
"நான் பாத்தேன்" என்ற முரளி, "ஆட்டோவில சவாரி இல்லியா? காலியாவா வந்துக்கிட்டிருந்தே?" என்றான்.
"இல்ல. வயசானவங்க ரெண்டு பேரு வந்துக்கிட்டிருந்தாங்க. அந்தப் பெரியவர்தான் என்னை வண்டியை நிறுத்தச் சொன்னாரு. அடிபட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போகச் சொல்லி எங்கிட்ட சொல்லிட்டு, அவரும் அவர் மனைவியும் அங்கேயே இறங்கிட்டாங்க."
"அவங்க வேற ஆட்டோ பிடிச்சுப் போனாங்களா?"
"வேற ஆட்டோ பிடிச்சுப் போய்க்கிறோம்னுதான் அவங்க எங்கிட்ட சொன்னாங்க. நான்தான் அவங்களை அங்கேயே பக்கத்தில உக்காந்திருக்கச் சொல்லிட்டு, அடிபட்டவரை ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டுட்டுத் திரும்ப வந்து அவங்களை அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொன்னேன். அது மாதிரியே திரும்ப வந்து, அவங்களைக் கொண்டு விட்டுட்டு, மறுபடி ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பாத்தேன். அடிபட்டவரு பொழைச்சுக்கிட்டாரு, அவர் சொந்தக்காரங்க வந்துட்டாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம்தான் மறுபடி சவாரிக்குப் போனேன்."
"எத்தனை தடவை போயிட்டுப் போயிட்டு வந்திருக்க! எவ்வளவு நல்ல மனசுப்பா உனக்கு!" என்றான் முரளி.
"என்னைச் சொல்றியே, அந்த வயசானவங்க வழியில வெய்யில்ல இறங்கிக்கிட்டு, அடிபட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போகச் சொல்லி எங்கிட்ட சொன்னாங்களே, அவங்களுக்கு எவ்வளவு நல்ல மனசுன்னு பாரு. அதோட இல்ல. ஆஸ்பத்திரிக்குப் போயிட்டுத் திரும்ப வந்து அவங்களை அழைச்சுக்கிட்டுப் போனதுக்கு எக்ஸ்ட்ரா பணம் வேற கொடுக்கறேன்னாங்க! நான் வேண்டாம்னுட்டேன்" என்றான் சேகர்.
அதிகாரம் 25
அருளுடைமை
குறள் 241அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
பொருட்செல்வம் இழிந்தவர்களிடம் கூட இருக்கும். ஆனால், செல்வங்களுக்குள் சிறந்தது அருட்செல்வம்தான்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment